ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சுவேதாஸ்வர உபநிடதத்தில் அடையாளங் காணப்படுகின்ற சைவசித்தாந்தக் கருத்தியல் ஊற்றுக்கள்

Dr.S.Muhunthan,Senior Lecturer,Head,Dept.of.Hindu Civilization,University of Jaffna 09 Nov 2021 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்

இந்தியச் சிந்தனை மரபில் மெய்ஞ்ஞான ஆராய்ச்சிக்கான திறவுகோலாக அமைந்தவை உபநிடதங்களாகும். சடங்கு வழிப்பட்ட வேதகால சமயநிலையின் மடைமாற்றத்திற்கான குறிகாட்டிகளாக உபநிடத உரையாடல்களும், மகா வாக்கியங்களும் திகழ்கின்றன. ஆதிசங்கரர் முதலிய பிற்காலத் தத்துவஞானிகளுக்கான சிந்தனாமூலங்களாகவும், இவை அமைந்தன. நூற்றியெட்டு உபநிடதங்கள் எனப் பொதுவாக அறியப்படினும் அவற்றின் எண்ணிக்கை இதைவிடவும் அதிகம் என்பர்.இவற்றுள் கிரு~;ணயசுர் வேதத்துக்குரிய முக்கிய உபநிடதங்களுள் ஒன்றாகச் சுவேதாசுவர உபநிடதம் திகழ்கிறது. ஏனைய உபநிடதங்களைக் காட்டிலும் மிகத் துலாம்பாரமான முக்கியத்துவம் சுவேதாசுவர உபநிடதத்துக்கு உண்டு. ஏனைய உபநிடதங்கள் பரம்பொருளைச் சுட்டியொரு பெயர் கூறாமல் “பிரம்மம்” என்று குறிப்பிட்டன. ஆனால் சுவேதாஸ்வரமோ  பிரம்மத்தை உருத்திர சிவனாகச் சுட்டியது.மேலும் பிரம்மம் பற்றிய இவ்வுபநிடதத்தின் விவரணங்கள் யாவும் சைவசித்தாந்த மெய்யியலின் பதி பற்றிய எண்ணக்கருக்களோடு நெருங்கிய தொடர்புடையனவாய் அடையாளங்காணப்படுகின்றன. பிரம்மத்தின் சர்வவல்லமை,சர்வவியாபகம்,இருவகை நிலைகள் பஞ்சகிருத்தியம் என இக்கருத்தோட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.உயிர் / ஜீவான்மா பற்றிய சிந்தனையிலும் இவ்வுபநிடதம் சைவசித்தாந்த சிந்தனைகள் பலவற்றுடன் ஒத்தநிலையுடையதாக இனங்காணப்பட்டுள்ளது. ஏனைய உபநிடதங்கள் பொதுவில் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்ற நிலைப்பாட்டைப் பின்பற்றுவனவாகக் காணப்பட சுவேதாஸ்வரமோ இந்நிலைப்பாட்டிற்கு மாறாகச் சைவசித்தாந்தத்தளத்தில் ஜீவான்மா பரமான்மா வேறுபாட்டைத் தெளிவாகச் சாதிக்கிறது.உலக உற்பத்திக் கொள்கை தொடர்பிலும் மாயை பற்றிய விபரிப்பிலும் சுவேதாஸ்வர உபநிடதம் சைவசித்தாந்தக் கருத்தியல்களையே பிரதிபலித்துள்ளது. மாயையாகிய சடப்பொருளில் சூக்குமமாயுள்ள பிரபஞ்சத்தை தூலரூபத்தில் வெளிக்கொணர்வது முதல்வனின் ஆற்றலே (கிரியாசக்தியே) என்ற சித்தாந்த முடிபை இவ்வுபநிடதம் முன்மொழிந்துள்ளது.

இவ்வுபநிடதத்தின் சிருட்டிக்கொள்கையினை சாங்கியத்துவத்தின் பிரதிபலிப்பாகச் சில ஆய்வாளர்கள் சுட்டமுனைவர்.இது தவறான முற்கோளாகும்.

திறவுச்சொற்கள்:

சைவசித்தாந்தம், சுவேதாஸ்வரஉபநிடதம், பிரம்மம், ஆன்மா, மாயை

அறிமுகம்:

மெய்பொருளை அறிவதற்கான நாட்டத்துடன் சீடர்கள் ஞானகுருவை அண்மித்து இருக்கிறார்கள் என்பதே உபநிடதம் என்ற பதத்துக்கான சொல்லிலக்கணரீதியான விளக்கமாகும். (உப – அருகில், நி : விருப்பத்துடன், ஸத் : இருத்தல்). மேலும் உபநி~த் என்ற சொல்லுக்கு பிரம்மஞானம் அல்லது இரகசியக்கட்டுப்பாடு முதலிய பொருளமைதிகளும் உண்டு.ஆசிரியனுக்கு உளத்தாலும் இடத்தாலும் நெருங்கியுள்ள ஞானநாட்டமுடைய மாணவனுக்கு ஆசிரியனால் பிரத்தியகமாக வழங்கப்படும்  ரகசிய உபதேசம் என்பதும், இதனை பக்குவமற்றவர்க்கு உபதேசிக்கக் கூடாது என்பதும், அவ்வுபதேசம் சாதாரண அபபரஞானம் அன்று பரஞானமாகிய பிரம்மவித்தையே என்பதும் இப்பொருளமைதிகளின் வழியே புலப்படும் விளக்கங்களாகும்.

வேதத்தைப் புரு~னாகக் கொண்டால் அதற்கு சிரசாக இருப்பது உபநிடதங்களே. ஆதலின் இத்தகு சிறப்புக்கருதி இவற்றை வேதசிரஸ், சுருதிசிரஸ், மறைமுடி என்றும் அழைப்பர்.உபநிடதங்கள் பிற்கால இந்தியச் சிந்தனை மரபிற் மேற்கிளம்பிய அனேக தரிசனங்களுக்கு ஆதார மூலங்களாகத் திகழ்கின்றன. இந்தியத் தத்துவமரபில் சைவ மெய்ப்பொருளியல் தொடர்பான சிந்தனைப் பள்ளிகளும் காலாதி காலமாகச் சிறந்து வந்துள்ளன.

கட்டுரையின் நோக்கமும் நியாயப்பாடும்:

சைவ மெய்ப்பொருளியலின் முடிந்த முடிபான தத்துவக் கொள்கையாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட பெருமை சைவ சித்தாந்தத்திற்குரியதாகும். எனினும் மெய்கண்ட சாத்திரங்கள், ஞானாமிர்தம், சைவத்  திருமுறைகள், அட்டப் பிரகரண நூல்கள், சிவாகமங்கள் இவற்றுக்கப்பால் சைவசித்தாந்த மெய்யியலின் நீட்சியை அடையாளங் காண்பதில் சிரத்தையற்ற போக்கை ஆய்வாளர்களிடையே அவதானிக்க முடிகின்றது.சைவசித்தாந்திகள் வேதங்களை ஆப்தப் பிரமாணமாக ஏற்றுக்கொண்டனர். எனவே வேதப்பகுதிகளில் தத்துவச் சுரங்களாகத் திகழ்கின்ற உபநிடதங்களில் சைவசித்தாந்த சிந்தனைகளின் ஊற்றுக்கள் அமையப் பெற்றிருக்க வேண்டியது இன்றியமையாததாகும்.அந்த வகையில் தசஉபநிடதங்களுள் ஒன்றாகத் திகழ்கின்ற சுவேதாஸ்வர உபநிடதங்களை முதன்மைப்படுத்தி அவ்வுபநிடதத்தில் இழையோடியுள்ள தத்துவார்த்த சிந்தனைகள் சைவ மெய்யியற் பள்ளிகளுள் தலையாயதான சைவ சித்தாந்தத்துடன் கொண்டுள்ள நெருங்கிய தொடர்புகளை வெளிக்கொணர முயல்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சுவேதாஸ்வர உபநிடதம் கிரு~;ணயசுர் வேதத்திற்குரிய உபநிடதமாகும். இது ஆறு அத்தியாயங்களில் 113 மந்திரங்களைக் கொண்டுள்ளது.

சுவேதம் - வெண்மை ஃ தூய்மை

அச்வதர - இந்திரியக் கூட்டம் ஃ புலன்கள்

தனது புலன்களைத் தூய்மைப்படுத்தியவரின் மேலான ஞானஉரை என்று இதற்குப் பொருள் விளக்கம் கொடுக்கப்படுகின்றது. சங்கராச்சாரியாரினால் பாடியம் செய்யப்பட்ட பத்து உபநிடதங்களில் ஒன்று என்ற வகையில் இதன் மெய்ப்பொருளியல் சார்ந்த முக்கியத்துவம் நன்கு புலனாகின்றது.

பிரம்மம் /பதி

உபநிடதங்கள் யாவுமே மேலான. ஒரு உள்பொருள் (பிரம்மம்) பற்றி ஆராயத் தவறுவதில்லை. எனினும் அந்த. மேலான உள்பொருளைச் சுட்டியொரு பெயர் கூறிச் சிவன், உருத்திரன், மகேஸ்வரன், ஈசானன், ஹர என்றவாறு விழித்துரைப்பதன் மூலமாகச் சுவேதாஸ்வர உபநிடதம் மிகவும் வெளிப்படையாகவே தன்னைச் சைவச் சார்புடையதாக. சிவசம்பந்தமுடையதாக அடையாளங் காட்டி கொண்டுள்ளது.

                                       “சைவம் சிவனுடன் சம்பந்தமாகுதல்”

                                         சைவம் தனையறிந்து சிவம் சாருதல்”

(திருமந்திரம் பா. 1521)

எனத் திருமூலர் சைவசித்தாந்த தத்துவத்திற்குப் பொருளமைதி சொல்வது இவ்விடத்தில் மனங்கொள்ளத்தக்கதாகும்.

சுவேதாஸ்வரம் கூறுகின்ற பிரம்மம் பற்றிய கொள்கையின் சாரத்தைப் பின்வருமாறு பகுத்து நோக்கலாம்.

1)         மேலான பரம்பொருள் உருத்திரன் அவன் மங்கள வடிவானவன் (சிவன்).

2)         தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன்.

3)         காரணாகாரிய ஆராய்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவன்.

4)         காலதேச வர்த்தமானங்களைக் கடந்தவன்.

5)         பிரபஞ்சத்தைக் கடந்தவன், அதேவேளை பிரபஞ்சத்தில் சர்வவியாபகமாய் உள்ளவன்.

6)         குணங்களைக் கடந்தவன் நாமரூப பேதங்களுக்கு அப்பாற்பட்டவன்.

7)         ஆயினும் உயிர்களின் பொருட்டு ஐந்தொழில்களை நிகழ்த்துபவன்.

8)         தனது கிரியா சக்தியாற் பிரபஞ்சத்தைத் தோற்றுவிப்பவன்.

9)         உயிர்களின் தலைவன்.

10)       கைலையங்கிரியில் உறைபவன்.

மேற்கூறிய அனைத்துக் கருத்தமைவுகளும் சைவசித்தாந்திகள் விவரிக்கின்ற பதிக்;கொள்கையின் பரிமாணங்களுடன் கெழுதகமை பூண்டிருப்பதனை யாவருமறிவர். அந்தவகையில் குறிப்பிட்ட பத்து அம்சங்களில் முதல் ஆறும் பதியின் சொரூப இயல்பையும் இறுதி நான்கும் பதிப்பொருளின் தடத்த நிலையினையும் புலப்படுத்துவதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகின்றது. மேற்கூறிய கருத்தமைவுகளை உறுதிப்படுத்தும் வகையில் சுவேதாஸ்வர உபநிடதத்தில் இருந்து பொருத்தமான எடுத்துக்காட்டுக்களை நோக்கலாம்.

         “எவன் இவ்வுலகங்களைத் தனது ஆளும் சக்திகளால்

            ஆள்பவனோ அந்த உருத்திரன் ஒருவனே: அவனைத்தவிர 

            இரண்டாவதாக வேறொருவனும் இல்லை”                                                       

                                                                                   (சுவேதாஸ்வர உபநிடதம் 3.2)

இதனையே

                          “சிவனோடோக்கும் தெய்வம் தேடினுமில்லை

                              அவனோடொப்பார் இங்கு யாவருமில்லை”எனத்திருமூலர்                   சுட்டிஉள்ளமை நோக்கத்தக்கது. (திருமந்திரம்இபா.5)

சுவேதாஸ்வர உபநிடதம் தான் பிரம்மமாகக் கொண்ட உருத்திர சிவத்தின் அசிந்தித நிலையைப் பின்வருமாறு விவரித்துச் செல்கிறது.

“அவனுக்கு காரியமுமில்லை காரணங்களுமில்லை அவனுக்குச்  

    சமமானவனோ   மேலானவனோ காணப்படவில்லை”

                                                                                       (சுவேதாஸ்வர உபநிடதம் 6.8)

        “அவனுக்குத் தலைவனாக உலகில் எவனும் இல்லை. அவனை

   ஆள்பவனும்இல்லை. அவனுக்கு குறியில்லை. அவனே அனைத்துக்கும் 

    காரணம்காரணங்களுக்குத் தலைவனான ஜீவனுக்கும் அவனே தலைவன் 

       (உயிர்களின் தலைவன் - பசுபதி) அவனுக்குத் தந்தையுமில்லை,

         தலைவனுமில்லை.  (சுவேதாஸ்வர உபநிடதம் 6.9)  

இவ்வாறு சுவேதாஸ்வரம் விவரித்துச் செல்லும் பிரம்மம் பற்றிய பகுதிகளை நோக்கும்போது பதியின் சிறப்பிலக்கணமாகிய சொரூபநிலை பற்றிச் சைவசித்தாந்திகள் குறிப்பிடுவதனை எடுத்துக் காட்டுவது பொருத்தப்பாடுடையதாகும்.

சொரூபநிலையிற் பதியானது. குணங்குறிகளுக்கு அப்பாற்பட்டதாய், சலனமற்றதாய், காரணகாரிய ஆராய்ச்சிகளுக்கு அப்பாற்பட்டதாய், அளவைகளால் அளந்தறியப்பட முடியாததாய், திருமேனிகளைக் கடந்ததாய் விளங்கும். இதனையே,

“பதி பரமேயதுதான்..... நிலவும் அருஉருவின்றிக் குணங்குறிகளின்றி

 நின்மலமாய் ஏகமாய் நித்தமாகி  அலகிலுயிர்க் குணர்வாகி அசலமாகி

 அகண்டிதமாய் ஆனந்த உருவாய் அன்றி

 செலவரிதாய் செல்கதியாய் சிறிதாய் பெரிதாய்

 திகழ்வது தற்சிவம்”எனச் சிவப்பிரகாசம் விவரிக்கின்றது.

                                                       (சிவப்பிரகாசம், பதி இலக்கணம்,பாடல் 01) 

                 “பெருமைக்கும் நுண்மைக்கும் பேரருட்கும் பேற்றின்

                  அருமைக்கும் ஒப்பின்மையான்” (திருவருட்பயன். 03)

எனத் திருவருட்பயனும் இதனையே குறித்துக் காட்ட முயல்கின்றது.

ஆன்மாக்களின் திரிகரண உணர்வு நிலைக்கு அப்பாற்பட்ட பதியின் சொரூப இலக்கணத்தை விளக்க முற்பட்ட சைவசித்தாந்திகள் அதன்பொருட்டு எதிர்மறை உத்தியினை கையாண்டுள்ளமையை மேற்படி பாடல்களிலிருந்து அவதானிக்க முடிகின்றது.

சுவேதாஸ்வர உபநிடதமும் பிரமத்தின் அசிந்தித நிலையைச் சித்திரிப்பதற்கு இதே வகையில் எதிர்மறை உத்தியைப் பயன்படுத்தியுள்ளமையை முற்கூறிய உபநிடதச் சுலோகங்களில் (சு.வ உப.6.8,6.9) அவதானிக்கக் கூடியதாயுள்ளமையை இங்கே சுட்டிக் காட்டுவது பொருத்தமானதாகும்.

ஆயினும் ;பிரம்மத்தைக் குணங்குறிகளைக் கடந்த அசிந்திதனாக மட்டும் சுவேதாஸ்வரம் விவரிக்கவில்லை. அதே பிரம்மம் அருளினால் உருவுகொண்டு மங்கள வடிவங்களைத் தாங்குவதாகவும் உருத்திரனாகவும் அவ்வுபநிடதம் காட்சிப்படுத்தி உள்ளது.

      உருத்திரனே உள்ளமாகிய கைலையங்கிரியில் இருந்து கொண்டு 

  உலகிற்குஇன்பத்தை ஊட்டுபவன்,சாந்தமானதும், மங்களமானதும்,  

      பாவம்   நீங்கிய மோட்சநிலையைப் பிரகாசப்படுத்வதுமாகிய அந்த

  உயிர்நலமளிக்கும்  வடிவால் எங்களுக்கு அருள்வீராக”

                                                                                    (சுவேதாஸ்வர உபநிடதம் 3.5)

என்றவகையில் அமைந்த சுவேதாஸ்வர உபநிடதப்பகுதி இவ்வகையில் கருத்திற் கொள்ளத்தக்கது.

பதிப்பொருளின் அரூபமான அதேவேளை சர்வவியாபகத் தன்மையை விளக்கும் வகையில் சைவசித்தாந்திகள் சுடுநீரிலே சூடு,அட்சரங்களில் “அ” கரம் என்பது போன்ற எடுத்துக்காட்டுக்களை கையாண்டுள்ளனர்.மெய்கண்ட சாஸ்திரங்களிற்குக் காலத்தால் மிகவும் மூத்த சுவேதாஸ்வரமும் பிரம்மத்தின் அரூபமான அதேவேளை சர்வவியாபகத் தன்மையை விளக்குவதற்குப் பாலில் நெய், எள்ளில் எண்ணெய், அரணிக்கட்டையில் நெருப்பு என்பது போன்ற எடுத்துக்காட்டுக்களை கையாண்டிருப்பது நயக்கத்தக்கது.

சைவசித்தாந்திகள் தடத்த நிலையில் முதல்வன் பஞ்சகிருத்தியங்களை உயிர்களின் பொருட்டு நிகழ்த்துவதாகக் கருதுவர். சுவேதாஸ்வர உபநிடதமும் பஞ்சகிருத்தியங்களை உருத்திரனோடு தொடர்புபடுத்தி விவரித்துள்ளது.

1)         “படைப்பவன் - “விஸ்வய சிரஸ்டிராம” (சுவேதாஸ்வர உபநிடதம் 4.9)

2)         காப்பவன் - “புவனஸ்ய கோப்தா” (சுவேதாஸ்வர உபநிடதம் 6.17)

3)         அழிப்பவன் - “ஸ்ம்கரித் யேஸ் தேவ” (சுவேதாஸ்வர உபநிடதம் 6.18)

4)         மறைப்பவன் - ஸ்ர்வ பூ தே~; கூட“ (சுவேதாஸ்வர உபநிடதம் 6.11)

5)         அருள்பவன் .- “தேவப்பிரசாத்” (சுவேதாஸ்வர உபநிடதம் 6.21)

ஆன்மா

சுவேதாஸ்வர உபநிடதம் விவரிக்கின்ற ஆன்மக் கொள்கையின் சாரத்தைப் பின்வருமாறு பகுத்து நோக்கலாம்.

1)         ஆன்ம இருப்பை ஏற்றுக்கொள்ளல்.

2)         ஆன்மா பிரம்மத்தைப் போலவே நித்தியமானது, அநாதியானது என்பதனைத் தெளிவாக எடுத்துரைத்தல்.

3)         ஆன்மா வேறு, பரம்பொருள் வேறு என்பதைத் தெளிவாக எடுத்து உரைத்தல்.

4)         ஆன்மா என்பது உடலோ, அந்தக்கரணங்களோ அல்ல என்பதையும் அது      கட்புலனாகாத சூட்சுமவஸ்து என்பதயும் உறுதி செய்தல்.

5)         ஆன்மா ஒன்பது வாயில்களுள்ள தேகத்தில் அந்தக்கரணங்களுடன் கூடி வசிக்கிறது என எடுத்துரைத்தல்.

6)         ஆன்மா அநாதியாகவே அகங்காரத்துடன் கூடியது என்பதைக் குறிப்பிடுதல்.

7)         ஆன்மாக்கள் தாம் செய்கின்ற வினைகளுக்கு ஏற்றப்படி பிறவிகளை எடுக்கின்றன என நம்புதல்.

மேற்கூறிய அனைத்துக் கருத்தமைவுகளும் சைவசித்தாந்தம் வரையறை செய்த ஆன்மக்கோட்பாட்டுடன் எந்த வேற்றுமையையும் இன்றிப் பொருந்திவருவன என்பதனை யாவருமறிவர். இக்கருத்தமைவுகளிற்கான சுவேதஸ்வர உபநிடதச் சான்றுகளை நோக்கலாம்.

“ஆரத்தின் முனைபோல் சூட்சுமமாயிருப்பவனும் வேறானவனாகவும் தோன்றும்  ஜீவன்.கட்டைவிரல் அளவினனாயும் சூரியனைப் போல் பிரகாசிப்பவனாயும், அகங்காரத்துடன் கூடியவனாயும், புத்தியின் குணத்துடன் கூடியவனாயும்    உள்ளான்.”(சுவேதாஸ்வர உபநிடதம் 5.8)

இக்கருத்தையே

                         “நசித்திடா ஞானச்செய்தி அநாதியே மறைத்து நிற்கும்

                              பசுத்துவமுடையாதாகிப் பசுவென நிற்கும் ஆன்மா.

                                                                     (சிவஞானசித்தியார் சுபக்கம் பா.210)

எனச் சிவஞானசித்தியாரும் ஆன்மாவின் அருவத்தன்மை, நித்தியத்தன்மை, அநாதியாகவே ஆணவத்தால் பீடிக்கப்பட்ட தன்மை ஆகிய பண்புகளை எடுத்துரைப்பது கவனிக்கத்தக்கது.

பிரம்மம், ஜீவன் என்ற இரண்டு நித்திய வஸ்த்துக்களையும் வேறுப்படுத்திச் சுட்டும் வகையில் சுவேதாஸ்வர உபநிடதம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

“அறிபவனும் அறியப்படுவதும் ஆள்பவனும்

  ஆளப்படுவதும் ஆகிய இரண்டும் பிறப்பற்றவை”(சுவேதாஸ்வர உபநிடதம் 1.9)

பதியை எல்லாம் அறிந்தவனாயும், (அறிவன்) ஆன்மாவால் அறியப்படவேண்டிய

ஒன்றாகவும் குறிப்பிடும் சைவசித்தாந்தம் ஆன்மாவை அறிவிக்க அறிபவனாகச் சுட்டுகின்றது. பதி என்ற பெயரும்இ பசுபதி என்ற பெயரும் ஆள்பவன், உயிர்களை ஆளுகின்ற தலைவன் என்ற பொருளமைதிகளை கொண்டவை என்பதும் இங்கே சுட்டிக் காட்டத்தக்கது. இதனையே அருணந்தி சிவாச்சாரியார் பின்வருமாறு குறிப்பிடுவார்.

                              “அறிந்திடும் ஆன்மா ஒன்றை ஒன்றினாலறிதலானும்

                                 அறிந்திடும் அறிவன் அன்றாம் அறிவிக்க அறிவனன்றே”

                                                                 (சிவஞானசித்தியார் சுபக்கம் பா.232) 

   மேலும் பதியினைப் போல் பசு, பாசம், அநாதி என்கின்ற சைவசித்தாந்த உண்மையினைப் பறைச்சாற்றும் விதத்தில் பிரம்மமும், ஆன்மாவும் நித்திய வஸ்துக்களே ஆயினும் அவை இரண்டும் ஒன்றல்ல என்பதனைச் சுவேதாஸ்வரம் பின்வருமாறு உதாரணங் காட்டி விவரித்துள்ளது.

     “அழகிய சிறகுபடைந்த இரண்டு பட்சிகள் ஒரே மரத்தில் இருக்கின்றன.

   ஒன்று இனிப்பும் புளிப்புமான பழங்களை உண்டு மதிமயங்கி நிற்க, மற்றைய 

   பறவை உண்ணாமல் பார்த்தபடி உள்ளது (சுவேதாஸ்வர உபநிடதம் 4.6)

இங்கே இனிப்பு, புளிப்பு ஆகிய பழங்களை இன்பம், துன்பம் எனக்கொண்டு நோக்கில் அப்பழங்களை உண்டு சம்சாரபந்தத்தில் உழலும் ஒரு பறவையை ஆத்மா எனக்கருதமுடியும்.பதி ஆகிய மற்றப் பறவையாய் ஆன்மா பதியினைப் போலஃபிரமத்தைப் போல அநாதியானதாயிருப்பினும் நல்வினை தீவினைகளைப் புரிந்து வினைப்போகத்தில் உழலும் சிற்றறிவுடைய தன்மையை சுவேதாஸ்வரம் இவ்வாறான தகுந்த எடுத்துக்காட்டொன்றின் மூலம் காட்சிப்படுத்த முனைந்துள்ளது எனலாம்.

ஆன்ம விடுதலை

ஆன்ம விடுதலை பற்றி சுவேதாஸ்வரம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

     “மண்ணால் மூடப்பெற்றிருந்த ஒரு விக்கிரகம் தேய்த்துச் சுத்தமாக்கப்பட்ட

    பின்னர் எங்ஙனம் ஒளிவிட்டுப் பிரகாசிக்குமோ அங்ஙனமே 

    ஆத்மத்துவத்தைக் கண்டு கொண்டதும் உடலில் உறையும் ஜீவன்

        (பரமாத்மாவுடன்) ஒன்றுபட்டவனாய், சித்தியெய்தியவனாய், துன்பம்

   நீங்கியவனாய் ஆகின்றான்” (சுவேதாஸ்வர உபநிடதம் 2.14)

இங்கே மண்ணால் மூடப்பெற்றிருந்த விக்கிரகம் எந்த உலோகத்தால் செய்யப்பட்டது. என்பது பற்றி விளக்கப்படவில்லை பொதுவாக செம்பால் செய்யப்பட்டிருக்கலாம். செப்பு விக்கிரகமே தேய்த்துச் சுத்தப்படுத்திய பின்னர் களிம்பு நீங்கிப் பிரகாசிக்கும் எப்படியாயினும் “செம்பிற்களிம்பு” போல அநாதியாகவே  ஆணவத்தின் பிடியில் சிக்கி ஆத்மபோதம் மழுங்கிக் கிடந்த ஆன்மா.ஆத்ம ஞானம் கைவரப்பெறும் போதுதான் விடுதலை சாத்தியப்படும். இது சித்தாந்த சிந்தனையேயாகும். மேலும் “ஒன்றுபட்டவனாய்” என்ற சொல்லாடலும் இங்கே கருத்தூன்றிக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

தானே அது என்பதல்ல ஒன்றுபடுதல். அது வேறு, தான் வேறு ஆனாலும் உலைக் களத்தியிலே செந்தணல் வேறு: இரும்பு வேறு என்ற விகற்பந் தெரியாதவாறு இரும்பு செந்தணலாய் கிடத்தல் போல அத்துவிதமாகின்ற சித்தாந்த விடுதலையை இங்கே அடையாளங் காணக் கூடியதாக உள்ளது.

மாயை - உலக உற்பத்தி:

சுவேதாஸ்வர உபநிடதம் குறிப்பிடுகின்ற மாயை - பிரபஞ்சசிரு~;டி பற்றிய சிந்தனைகளின் சாரத்தைப் பின்வருமாறு பகுத்து நோக்கலாம்.

1)         மாயை ஒரு சடப்பொருள் மட்டுமன்று.

2)         மாயை ஒரு சக்தியாகவும் உள்ளது.

3)         ஆயினும் மாயை சுயமாக இயங்குவதாக அன்றி மகேஸ்வரனின் கிரியாசக்தியாகவே தொழிற்படுகின்றது.

4)         பிரபஞ்சத்தின் விரிவும் நிலைபேறும் ஒடுக்கமும் மாயையை முதற்காரணமாகக் கொண்டே நடைபெறுகின்றன.

5)         மாயைக்கும் பிரமத்திற்கும் இடையிலான உறவு தலைவனுக்கும் அவன் துணைவிக்கும்: இடையிலான உறவைப் போன்றது.

6)         ஜீவன்களின் வினைப்போக்த்திற்கான ஊக்கசக்தியை இந்த மாயை வழங்குகின்றது.

7)         மாயை முக்குணங்களை உடையது (சாத்வீகம், ராஜசம், தாமசம்).

இவையனைத்தும் சைவசித்தாந்தம் கூறும் மாயைக்கொள்கையின் அம்சம் வேறல்ல.

சுவேதாஸ்வர உபநிடத எடுத்துக்காட்டுக்கள் :

  “அறிபவனும் அறியப்படுபவனும் ஆள்பவனும் ஆளப்படுபவனுமாகிய

  இரண்டும் பிறப்பற்றவை. அனுபவிப்பதற்கும், அனுபவிக்கப்படுவதற்கும்

  உறவைக் கற்பிக்கும் ஒருத்தியாகிய மாயை எனும் அவளும்

  பிறப்பற்றவளே” (சுவேதாஸ்வர உபநிடதம் 1.9)

இங்கே அனுபவிப்பதற்கும் அனுபவிக்கப்படுவதற்கும் உறவைக் கற்பிப்பவள் அதாவது உறவை ஏற்படுத்துபவளாகிய மாயை என்ற வரிகள் உன்னிப்பாக நோக்கப்பட வேண்டியன. சைவசித்தாந்திகள் மாயையை மேலும் மாயேயம் திரோதாயி என்றும் இயம்புவர்.இவ்வாறு தொழிற்படுவதற்கு காரணம் ஆன்மா தனது சஞ்சித வினைப்பொதியை முழுமையாக முறைப்படி அனுபவித்தொழிக்க வேண்டும். என்பதன் பொருட்டேயாகும். சித்தாந்த நோக்கில் ஆணவம் என்னும் நோயால் பீடிக்கப்பட்ட ஆன்மா என்ற நோயாளிக்கு வைத்தியன் சிவன், கன்மமே மருந்தாகும். அந்த மருந்தை முறைப்படி ஊட்டுகின்ற தாதியே திரோதான சக்தி எனக்கூறுவர். இதனையே

“பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை”  எனவும்

                                                                                     (திருவெம்பாவை பா.14)

“தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்து” எனவும் மணிவாசகர் குறிப்பிடுவார்.                                                                                                       

                                                                                   (திருவெம்பாவை பாடல் 09)

அடுத்தாக மாயைக்கும் ஈஸ்வரனிற்கும் இடையிலான உறவுஃதொடர்பு பற்றிச் சுவேதாஸ்வரம் குறிப்பிடும் போது

“பிரகிருதியை மாயையாகவும் மகேஸ்வரனை மாயையின் தலைவனாகவும் அதனை ஆட்டி வைப்பவனாகவும் அறிய வேண்டும்”                                                                                                     என்கிறது சுவேதாஸ்வர உபநிடதம் 4.10

இதனையே

“நங்கையினால் நாமனைத்தும்  செய்தாற்போல

 நாடனைத்தும் நங்கையினால்  செய்தளிக்கும் நாயகனும்

                                                                               (திருக்களிற்றுப்படியார் பா.78)

  எனப் பதியின் துணைவியாகச் செயற்படுகரமாக மாயாசக்தியைச் சைவசித்தாந்திகள் குறிப்பிடுவர்;. இதனையே

“எத்திறம் நின்றான் ஈசன்  அத்திறம் அவளும் நிற்பாள்”என அருணந்தி   

   சிவாசாரியாரும் இதனை எடுத்துரைக்கின்றார்.    

                                                                        (சிவஞானசித்தியார்.சுபக்கம்.பா.165)

பிரகிருதியிலிருந்தே பிரபஞ்சம் தோற்றுவிக்கப்படுவதாகச் சுவேதாஸ்வரம் குறிப்பிடுகிறது. ஆனால் பிரகிருதி தானாகவே பரிணாமமடைவதாகவோ அன்றிப் புருசசந்நிதியில் பரிணாமப்படுவதாகவோ இந்த உபநிடத்தின் எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. மாறாகத் தலைவனால்/ பரம்பொருளால் ஏவப்பெற்N;ற பிரபஞ்சசிரு~;;டி நடைபெறுகின்றது என்ற விளக்கத்தை அடையாளங் காணக்கூடியதாக உள்ளது. அந்தவகையில்

“எதனால் இந்தப் பாரிய சக்கரம் சுழற்றப்படுகிறதோ அது இயற்கை”

  எனச் சில அறிஞரும் காலம் எனப் பிறரும் மதிமயங்கியவர்களாய்

  கூறுகின்றனர்.எவன் அறிவுமயமானவனோ, காலத்தையும்  

    சிரு~;டிப்பவனோ, குணங்களின் தலைவனோ அவனால் ஏவப்பெற்ற.

    கிரியா சக்தியானது பஞ்ச பூதங்களாக விரிகின்றது என்பதைச்  

     சிந்தித்துணர வேண்டும்” (சுவேதாஸ்வர உபநிடதம் 6.2)

பிரபஞ்சமாகிய இயற்கை பிறருடைய தயவின்றித் தானே என்றும் உள்ளது. (சுபாவமாக இயங்குவது) பிரபஞ்சத்தில் ஏற்படும் தோற்றங்களிற்கும், மாற்றங்களிற்கும் அதுவே முதற்காரணமாயும், நிமித்த காரணமாயும் விளங்குகிறது எனவும் அறுதியாட்டுரைக்கின்ற N~~;வரசாங்கியதின்; கருத்தியல்கள் இங்கே நிராகரிக்கப்படுகின்றன.மாறாகச் சைவசித்தாந்தம் சித்தரிக்கின்ற உலக உற்பத்திக் கோட்பாடானது சுவேதாஸ்வரம் குறிப்பிட்டுள்ள முற்கூறிய (6.2) சுலோகத்தின் விளக்கமாகவே அமையப் பெற்றிருப்பதை அவதானிக்க முடியும். அந்த வகையில் அசேதனமாகிய அறிவற்ற உலகம் தன்னைத்தானே தோற்றுவித்து இயக்கும் தன்மையற்றது என்றும் அதனைக் காரியப்படுத்த ஒரு கருத்தா அவசியம் எனவும், உரைக்கின்ற சைவசித்தாந்திகள் முதல்வன் இன்றி அசேதனமாகிய மாயை காரியப்படாது என்கின்றனர்.ஆகையால் மாயையாகிய சடப்பொருளில் சூக்குமமாயுள்ள பிரபஞ்சத்தை தூலரூபத்தில் வெளிக்கொணர்வது முதல்வனின் ஆற்றலே (கிரியாசக்தியே) என்பது சித்தாந்த முடிபு .

சாங்கியச்சாயல்:

ஆயினும் இந்த உபநிடதத்தில் சாங்கியத்தின் மிகப்பழமையான வடிவத்தைக் காண்பதாக E.H. ஜான்ஸ்டன் குறிப்பிடுகிறார்.இவரைப் போலவே R.E. Hume என்ற அறிஞரும் சுவேதாஸ்வதர உபநிடதத்தின் மாயை பற்றிய சிந்தனைகளை  சாங்கியத்துடனும், வேதாந்தத்துடனும் தொடர்புபடுத்தி அடையாளங் காண்கிறார். அதுமட்டுமன்றி தனது கருத்து நிலைக்கு ஆதாரமாய் Professor Cowell அவர்களின் கருத்தையும் எடுத்தாள்கின்றார்.

“The Passage 4.5 where the explanation of experience is sensually analogized is thoroughly samkhyan perhaps as professor Cowell mentioned the Sevthasvatara Upanishad is the most direct attempt to reconcile the samkhya and the Vedanta.”    (Hume .R.E:1921: 08)   

  உண்மையில் சுவேதாஸ்வர உபநிடதம் கூறும் உலக உற்பத்தி / மாயை பற்றிய சிந்தனைகளை முற்றுமுழுதாகச் சாங்கியத்துடன் பொருத்தி நோக்குவது தவறான அணுகுமுறையாகும்.இதற்குத் தக்க சான்றாக

“பிரகிருதி” (ஹரம்) அழிவுடையது, ஈஸ்வரன்” (அ~ரம்)

அழிவில்லாதவன், அமர்தஸ்வரூபி ஒரே தேவதேவனான அவன்

பிரகிருதியையும் ஜீவாத்மாக்களையும் ஆள்கிறான். அவனைத்

தியானிப்பதாலும் அவனை நாடியடைவதாலும்

முடிவில் மாயை அனைத்திலிருந்தும் விடுதலை ஏற்படுகின்றது”.

                                                          (சுவேதாஸ்வர உபநிடதம் 1.10)  என்ற உபநிடதப்பகுதியினைச்சுட்டமுடியும்.  சாங்கியதத்துவமரபின்வழி பிரகிருதி, புருடன் ஆகிய இரண்டும் நித்தியவஸ்த்துக்கள், அழிவற்றவை.இதுமட்டுமன்றி ஈஸ்வர சந்நிதி பிரகிருதியை பரிணாமமுறுத்துவதற்கு உதவுமேயன்றி பிரகிருதியை ஆளவோ, அடக்கவோ வல்லமையுடையதன்று.

எனவே சில உபநிடத ஆராய்ச்சியாளர்கள் கருதுவது போல சுவேதாஸ்வரம் கூறுகின்ற மாயை, பிரகிருதி பற்றிய கருத்தாடல்களை முற்று முழுதாகச் சாங்கிய தரிசனத்துடன் மட்டுமே பொருத்திப்பார்ப்பது எந்தளவிற்கு பொருத்தமுடையது என்பதும் சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றேயாகும்.

எனவே தொகுத்து நோக்குகையில் சைவமெய்ப்பொருளியலின் முடிந்தமுடிபான சைவசித்தாந்தத்தின் அனேக கருத்தியல்களை சுவேதாஸ்வர உபநிடதம் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதனை உறுதிபடக் கூறமுடிகின்றது.

உசாத்துணை

அண்ணா(உரை),(1989), நூற்றெட்டு உபநி~த்சாரம்.சுவேதாச்வதர - ஹம்ச - ஆருணி - கர்ப்ப -நாராயண உபநிljங்கள்,ஸ்ரீ இராமகிரு~;ண மடம்,சென்னை.

இராமநாதபிள்ளை,ப.,(உரை),(2009),திருமூலர்திருமந்திரம்,

சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம்,சென்னை.

 செல்லத்துரை,சு.(பதிப்),மெய்கண்டசாத்திரம்,

திருவாவடுதுறை ஆதீன சைவசித்தாந்த நேர்முகப்பயிற்சி மையம் கொழும்பு.

நலங்கிள்ளி,(விளக்.உரை)சிவஞானசித்தியார் சுபக்கம்,சுவாதிபதிப்பகம்,சென்னை.

நவநீதகிருஷ்ணபாரதியார்,க.சு.(1951),திருவாசகஆராய்ச்சிப்பேருரை,

பத்மாபதிப்பகம்,சென்னை.

Hume,R.E.(1921),The Thirteen principal upanishads translated from the Sanskrit,

Oxford University Press, Delhi.