ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

புறநானூற்றில் இறப்புச் சடங்குகள்

முனைவர் இரா. பிரித்தா, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அக்சிலியம் கல்லூரி, வேலூர் – 6. 09 Nov 2021 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்:

       சங்க இலக்கியங்களில் புறநூல்களுள் ஒன்றான புறநானூற்றில் பல சடங்குகள் காணப்படுகின்றன. அவற்றில் இறப்புச் சடங்குகள் குறித்து இக்கட்டுரை வடவமைக்க படுகின்றது. அதில் சடங்குகள் குறித்தும், இறப்பு சடங்குகளில் அழுதல், தென்புலம் வாழ்நர் கடன், கையறு நிலை, சாக்காட்டுப் பறை இசைத்தல், இறந்தவரை தாழியில் அடக்கம் செய்தல், பிணத்தை எரித்தல், நடுகல் அமைப்பது, பிண்டம் வைத்தல், கைம்மை நோன்பு, தலையை மொட்டையடித்தல், கூந்தல் களைதல், கைவளையல் நீக்கல் போன்றவைகளைப் பற்றியும் இக்கட்டுரையானது ஆராய்கிறது.

திறவுச் சொற்கள்:

புறநானூறு, சடங்குகள், கையறு நிலை, சாக்காட்டுப் பறை, நடுகல், இறப்பு, பிண்டம், தாழிகள், பித்ரு வழிபாடு, தென்புலத்தார் கடன்

முன்னுரை:

சங்க கால மக்களின் வாழ்க்கையை அகம், புறம் என இரு வகையாக பிரிக்கலாம். அவற்றில் புறவாழ்க்கையை முழுமையாகக் கொண்டு எழுந்துள்ள நூல்களுள் ஒன்று புறநானூறு. இவற்றில் மக்களின் வாழ்க்கையோடு ஒன்றர கலந்துவிட்ட சடங்குகள் குறித்த பதிவுகள் ஏராளமாக காணப்படுகின்றன. ஆய்வுத் தலைப்பைக் கருத்தில் கொண்டு இறப்புச் சடங்குகள் மட்டுமே கொண்டு இக்கட்டுரை அமைகிறது.

சடங்குகள்:

       மனிதன் தோன்றிய அன்றே சடங்குகளும் தோன்றிவிட்டன. மனித வாழ்க்கையில் சடங்குகள் என்பது நீங்கா இடம்பிடித்து விட்ட ஒன்று. சடங்குகள் மனித மனத்தின் வெளிப்பாடாகும். அவை நம்பிக்கைகளின் அடிப்படையில் உணர்வுப் பூர்வமாக வெளிப்படுகின்றன. வாழ்வுச் சடங்குகள், இறப்புச் சடங்குகள் என சடங்குகள் இருவகைப்படும். வாழ்வுச் சடங்குகளில் இறுதியாக நடைபெறுவது இறப்புச் சடங்குகள். இச்சடங்குகளை ஈமச் சடங்குகள், ஈமக் கிரியைகள் என்றும் அழைக்கப் படுகின்றன.

இச்சடங்குகள் நிகழ்த்துவதின் நோக்கம் தாங்க முடியாத துக்கத்தை வெளிப்படுத்த, இறந்தவர்கள் கடவுளாக இருந்து அவர்கள் குடும்பத்தை வழிநடத்தவும், அக்குடும்பத்துக்கும் அவருக்கும் உள்ள உறவை முறித்து கடவுளின் பாதத்தை சென்றடையவும் பல நெறிமுறைகள் செய்யப்படுகின்றன. அவ்வாறு செய்யப்படும் நெறிமுறைகள் சடங்குகள் எனப்படும்.

       ஒருவர் செய்த செயல்களை காரண காரியம் இல்லாமல் அனைவரும் அதை பின்பற்றி செய்து வருவது சடங்குகள் ஆகும். அவை புனிதத் தன்மையைப் பாதுகாக்கவும் அத்தன்மையோடு தொடர்பு கொண்டு அதன் ஆற்றலைப் பெற்றுப் பயனுடையவும் அதற்கு களங்கம் ஏற்படாமலிருக்கவும், தீயவற்றிலிருந்து தனிமைப்படுத்தி தூய்மையாக வைக்கவும், சடங்குகள் செய்யப்படுகின்றன. இச்சடங்குகள் பல வகைப்படும்.

சடங்குகள் வகைகள் :

சடங்குகள் இரு வகைப்படும். வாழ்வுச் சடங்குகள், இறப்புச் சடங்குகள். அவை மங்கலச் சடங்குகள், அமங்கல சடங்குகள் என அழைக்கப்படும். மனிதர்களின், வாழ்வின் தொடக்கம் பிறப்பு என்றால் முடிவு இறப்பு ஆகும். பிறப்பை எவ்வளவு மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிறோமோ அந்த அளவிற்கு இறப்பையும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அத்தகைய இறப்பு நிகழ்ந்த பிறகு பல சடங்குகள் செய்யப்படுகின்றன. அவற்றில் இறப்பு செய்தி கேட்டவுடன் துக்கம் தாளாமல் அழுவர். இவற்றைக் குறித்த பதிவுகளும் காணப்படுகின்றன.

அழுதல் :

இறந்தவர்கள் வீடுகளில் செய்தி அறிந்ததும் அனைவரும் துக்கம் தாளாமல் அழுது கொண்டேயிருப்பர். அக்காலத்தில் போரில் இறந்த மகன்களை எண்ணி அழுத செய்திகளும்  பதிவாகியுள்ளன. அவை,

மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தென,

................................................................................

எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்பு  எனக் (புறம்: பா. 75: 1-3)

குடியில் மூத்தோர் பலரையும் கூற்றுவன் கொண்டு செல்ல, அவர் வழி வந்தோரில் விதியால் தரப்பட்டு, நம்மால் அடையப் பெறுவதும் பழமையான வெற்றியால் உண்டான அரசுரிமையைப் பெற்றனர். மேலும்

அம்பு சென்று இறுத்த அரும் புண் யானைத்

.........................................................................................

மூதிற் பெண்டிர் கசிந்து அழ, நாணி (புறம்: பா: 19 : 9-15)

அச்சத்தால் கலங்கி மலையில் தங்கிய குருவிக் கூட்டம் போல் யானையின் மீது அம்புகள் சென்று தாக்கின. அம்புபட்ட புண்ணினால் வருந்தும் யானையின் துளையமைந்த பெரிய துதிக்கை, அதன் வாயுடன் வெட்டுப்பட்டு வீழ்ந்தது. துதிக்கை ஏர்கலப்பையைப் போல நிலம் மீது புரளுமாறு வீழ்ந்து உயர்த்திய வாளினால் வெற்றியையுடைய வீரர்கள் அவர்கள் எம் தலைவனுடன் போர்க்களத்தில் கிடந்தவரும் மெல்லிய தலைகளை உடையவருமான எம் புதல்வர்கள் ஆவர். அவர்களை கண்ட தொன்மையான மறக்குடி மகளிர் நமக்கு இத்தகைய வெற்றியும் உண்டோ என்று மகிழ்ச்சியால் நெகிழ்ந்து அழுதனர். மூதிற் பெண்டிர் ஆடவர் இறந்தமைக்கு கசிந்தழுததால் கண்னோடியவனாய்க் கூற்றுவன் சென்றான்.

       இறந்தவர்கள் வீடுகளில் இறந்தவர் வாழ்ந்த வாழ்க்கை, பற்று, பாசம், அவர் செய்த நன்மை, இனி அவர் இல்லாத வாழ்க்கையின் நிலைமை, போன்றவைகளை எண்ணி எண்ணி புலம்பி அழுவார்கள்.

பறை இசைத்தல்:

       தொடக்கக் காலத்திலிருந்து அறிவியல் வளர்ந்துள்ள இன்றைய காலம் வரை இறந்தவர் வீடுகளில் பந்தலிட்டு பறையை இசைக்கச் செய்வர். அவ்வோசையை கேட்டு யார் வீட்டிலோ இறப்பு நிகழ்ந்து விட்டது என்று தெரிந்துக் கொள்வர். அக்காலத்தில் பறையைத் தகவல்கள்  பரப்பும் ஒரு கருவியாகவும், பறையை இசைப்பவர் தகவல் பரப்புபவர்களாகவும்  இருந்துள்ளனர். இன்றும் இவை நடைமுறையில் இருந்து வருகின்றது. பறை ஒலியை கேட்டு அனைவரும் வந்து துக்கம் விசாரிப்பர். இதை,

       ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்

       ............................................................................

       பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப (புறம்: 194: 1-4)

ஊரில் ஒரே நாளில் ஒரு இல்லத்தில் நெய்தல் பறையும் (இரங்கல் பண்), இன்னொரு இல்லத்தில் திருமண முழவின் ஒலி கேட்கிறது. ஒரே ஊரில் ஒரே நாளில் இந்த நிகழ்வுகள் நடக்கின்றன. திருமண இல்லத்தில் பூமாலை சூடி மகிழ்கின்றனர். நெய்தல் பண் ஒலிக்கும் இல்லத்தில் ஒருவன் இறந்துவிட்டதால் அவனை இழந்தவர் கண்ணீர் மல்கக் கலங்குகின்றதாக கூறப்பட்டுள்ளது.

கணவனை பிரிந்த மகளிர் வருத்தத்துடன் கண்களினின்றும் கண்ணீர் சொரியக் கலங்குகின்றனர். கணவர் பிரிந்திருக்கும் காலங்களில் ஆடை, அணிகலன், பூக்கள் ஆகியவற்றால் ஒப்பனை செய்து கொள்ளாமல் வருத்தமுடன் கண்களில் நீர்வழிய நிற்பர். இவ்வழக்கத்தை பிரிந்தோர் ‘பைதல் உண்கண் பனி வார்பு உரைப்ப’ என்பர்.

கையறு நிலை:

       இழப்பைக் குறித்து மனம் தளர்ந்து இரங்கலாகப் பாடுவது கையறுநிலை. தந்தை இழந்த ஒருவன் கையறு பாடியதாக பின்வரும் பாடல் அமைந்துள்ளது. அவை

அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவின்

...................................................................................

குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!(புறம்: பா: 112: 1-5)

அரசன் இறப்ப அவனைச் சார்ந்தோர் அவ்விறந்து பாட்டை உரைத்துத் தளர்தல் கையறு நிலையாகும். ‘செய்கழல் மன்னன் மாய்ந்தெனச் சேர்ந்தோர், கையற உரைத்துக் சேர்ந்தன்று’ என்றுப் புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடும். கழிந்து போன பொருளைக் குறித்து இறங்குவது ஆகும். தந்தை இருந்தபோது வாழ்ந்த இன்ப நிலையையும், தந்தையையும் இழந்து நின்ற போது ஏற்பட்ட துன்ப நிலையையும் ஒப்புநோக்கி எண்ணும் நிலையில் கையறு பாடியுள்ளனர்.

தாழியில் வைத்து அடக்கம் செய்தல் :

       மக்கள் ஒவ்வொரும் இந்த பூமியில் பிறக்கின்றனர். இறுதியில் இந்த பூமியிலே புதைக்கப் படுகின்றனர். இறந்த ஒவ்வொருவரையும் குலம், சாதி, மத ரீதியாக புதைக்கவோ, எரிக்கவோ நிகழ்த்துவர். புதைப்பதில் இடத்திற்கேற்ப மாறுபடுகிறது. வெறும் உடலையோ, உடலின்மீது துணி சுற்றியோ, தற்போது கரோனாவில் இறந்தவர்களை பாலீதீன் பைகளில் போட்டு அடைத்து புதைப்பது, மற்றும் தூக்கி வீசி எரிதலோ செய்திகளில் காணும்போது கண் கலங்க செய்கிறது. கிறித்தவ மதங்களில் பெட்டிகளில் வைத்து குழிகளில் வைக்கும் முறையைப் பின்பற்றுகின்றனர். அறிவியல் வளர்ச்சி அடையாத அக்காலத்தில் இறந்தவரை தாழியில் வைத்து அடக்கம் செய்யும் முறை இருந்துள்ளது.

கலம் செய் கோவே! கலம் செய் கோவே!

...................................................................................

நனந் தலை மூதூர்க் கலம் செய் கோவே! (புறம் : பா: 228: 1-4)

       இறந்தவரை அடக்கும் தாழி அவரது பெருமைக்குரிய வகையில் பெரியதாக அமைதல் வேண்டுமென்பார். மண்ணாற் கலங்களைச் செய்யும் குயவனே! இருள் திரண்டு வந்து ஓரிடத்தே செறிந்து நின்றது போல நிறம் கொண்ட அடர்ந்த பெரும்புகை அகன்ற பெரிய ஆகாயத்தில் தங்கும் சூளையை உடைய இடமகன்ற பழைய ஊரில் கலங்களைக் செய்கின்ற வேட்கோவே! நீ இறங்கத்தக்கவன்.        பெருந் தாழியில் அடக்குவதால் அவனுக்குப் புகழ் இல்லை எனக்கூறுவதை ‘‘இடுக ஒன்றோ, சுடுக ஒன்றோ படுவழிப் படுக இப்புகழ் வெய்யோன் தலையே’’ (புறம்: 239 : 20-21)  என்று கூறப்பட்டுள்ளது. அக்காலத்தில் இறந்தவரை தாழியில் வைத்து புதைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதற்கான வரலாற்று சான்றுகளாக இன்றும் கன்னிமரா நூலக அருங்காட்சியகத்தில் தாழிகள் காணக் கிடக்கின்றன.

       தாழியில் வைத்து மண்ணில் சரியாக புதைக்க வில்லையெனில், பிணத்தைத் தாழியில் இருந்து விலங்குகள், பருந்துகளும், கோட்டான்களும், காகங்களும் வெளியே இழுத்துவந்து நாசம் செய்வதை பின்வரும் பாடல் குறிப்பிடுகிறது. விலங்குகள், பற்றியிழுத்தலாகாது என்று கருதி தாழிகளைக் கவிழ்த்துப் புதைப்பர். அதை கவிசெந் தாழி, கவிக்கும் கண் அகன்தாழி (புறம். 238) என்றும் கூறுவர். இதை,

கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த

....................................................................

தொடி கழி மகளிரின் தொல்கவின் வாடி (புறம்: பா: 238 : 1-6)

                    பிணங்களை இட்டுக் கவிழ்த்த தாழியினைப் புதைத்த குவிந்த மேட்டுப் பகுதியில், சிவந்த செவியுடைய ஆண் பருந்துகளும், பொகுவல் என்னும் பிணம் திண்ணி கழுகுகளும் அஞ்சாதவாறு காத்திருக்கின்றன. அவ்விடத்தில் வாய் வலிமை கொண்ட காக்கை, கோட்டான், பேய்க்கூட்டத்துடன் தாம் விரும்பியவாறெல்லாம் இயங்கும் தன்மை கொண்டது காடு. அவ்விடத்தில் நாசம் செய்ய அவைகள் காத்திருக்கின்றன. அவ்வாறு நிகழா வண்ணம் தாழியின் வாய் பகுதி வார் வைத்து இறுகி கட்டி வைக்கப்பட்டிருக்கும்.

கூந்தல், வளையல்களைக் களைதல்:

        இறப்பு நிகழ்ந்த வீட்டில் கணவனை இழந்த பெண்கள் காரியம் நிகழும் வரை பூவும்போட்டும் வைத்திருப்பர். இறந்த பதினாறாவது நாளன்று காரியம் நடைபெறும். காரியத்திற்கு முந்தைய நாள் இரவு நடப்பு என்று நிகழ்த்துவர். அதில் சொந்த பந்தங்கள் அனைவரும் கலந்து கொண்டு இறந்தவர்க்குப் பிடித்த உணவுகளை படையலிட்டு வழிபாடு செய்வர். கணவனை இழந்த பெண் மறு நாள் சூரிய உதயத்திற்கு முன் விடியற் காலையில் பசுவும் கன்றுமாக வீட்டிற்கு வரவழைத்து அதன் கால்களில் மஞ்சளைத் தடவி குங்குமம் வைத்து அதற்குக் கற்பூரம் காட்டி, பின் பச்சரிசி வெல்லம் கொடுத்து பூசை செய்து வீட்டிற்கு அழைப்பர். அதற்கு பிறகு வயதில் மூத்த கணவனை இழந்த பெண்கள் தாலி அறுக்கும் சடங்கினை செய்வர். இச்சடங்கை செய்யும்போது வீட்டில் உள்ளவர்கள் யாரும் பார்க்கக் கூடாது.

சடங்கில் அப்பெண்ணுக்கு கூந்தல் களைத்து, வளையல் உடைத்து, பொட்டு அழித்து, பூ எடுத்து விட்டு, தாலியை அறுத்து பாலில் போட்டு விடுவர். மெட்டியையும் கழட்டி விடுவர். புதுத்துணியை அணிய செய்து முகத்தினை யாரும் பார்க்காதவாறு மறைத்து அழைத்து வந்து உட்கார வைப்பர். அந்நேரத்தில் சொந்த பந்தங்கள் அனைவரும் புடவை போடுவர். அனைத்தும் முடிந்த பிறகு மூடியிருந்த முகத்தை திறந்து அனைவருக்கும் ஆசிர் வழங்குவர்.

இறந்த மறுநாள் ஒரு தட்டில் ஊறவைத்த நவதானியங்களைப் போட்டு கிளறி வைத்து அதன் நடுவில் ஒரு சிறு பல்லாவில் (சிறு பானை) நீரை ஊற்றி வைப்பர். அதில் தினந்தோறும் பல்லாவில் உள்ள நீரை மாற்றி கொண்டே இருப்பர். காரியம் செய்யும் நாள் வரை நவதானியங்கள் நன்றாக வளர்ந்து நிற்கும். அதற்கும்கூட அர்த்தமுள்ளது. அவை அவ்வாறு வளர்ந்தால் ஆண்டு அனுபவித்துதான் இறந்துள்ளனர் என்று கணக்கில் கொள்வர். அதை காரியம் செய்ய நீர் நிலைகள் உள்ள இடங்களுக்குக் கொள்ளி போட்டவருடன் இறந்தவரின் வாரிசுகள் அனைவரும் அவருக்கான ஈமகாரியங்களை செய்து எள்ளு தண்ணி இறைத்து அவரது ஆன்மாவை அமைதி அடைய செய்துவிட்டு வருவார்கள். பிறகு வீட்டிற்கு வந்து அகத்திகீரைப் பொரியல் வைத்து, சாம்பார் சாதம் படையல் போட்டு இறந்தவருக்குப் படைத்து அனைவருக்கும் அதை சாப்பிடகொடுத்து உபவாசத்தை முடித்து விடுவர். மறுநாள் பெரியவர்களோடு சேர்க்கும் சடங்கு நடைபெறும். அதில் அசைவ சாப்பாடு செய்து இறந்தவர்களுக்குப் படைத்து உறவினர்களுடன் சேர்ப்பர். 

வீட்டில் கணவனை இழந்த மனைவிக்கு தாலி அறுக்கும் சடங்கு முடிந்த பிறகு பிள்ளைகள் மருமகள் பேரன் பேத்திகள் அனைவரும் அவர்கள் காலில் விழுந்து வணங்குவர். இச்சடங்குகள் இன்றைக்கு வந்ததல்ல. சங்க இலக்கிய காலங்களில் இருந்தே காணப்படுகின்றன. மேற்கூறப்பட்ட செய்திகள் ஊர், சாதி, மதம் ஆகியவற்றிற்கேற்ப அவை மாறுபடுகின்றன. இச்செய்தி புறனாநூற்றிலும் காணப்படுகின்றன. அவை,

       கண்ணீர்த் தடுத்த தண் நறும் பந்தர்,

       கூந்தல் கொய்து, குருந் தொடி நீக்கி

       அல்லி உணவின் மனைவியொடு, இனியே

       .....................................................................................

       தனித் தலைப் பெருங் காடு முன்னிய பின்னே (புறம் : பா: 250: 3-9)

அழகிய மாளிகையே! நன்கு தாளித்த வளமான துவையலோடு கூடிய உணவை அளித்து இரவலர்களை வேறு எங்கும் செல்லாமல் தடுத்து நிறுத்திய வாயிலையும் தன்னிடம் ஆதரவு தேடி வந்தவர்களின் கண்ணீரைத் துடைக்கும் குளிர்ந்த நறுமணமுள்ள பந்தலையும் உடையதாக முன்பு விளங்கின. ஆனால் இன்று கணவன் சுடுக்காட்டை அடைந்த பிறகு அத்தகைய இடத்தில் அவன் மனைவியின் கூந்தலை வெட்டியும், களைந்தும்(மொட்டையடித்தல் புறம்: 260: 15-19), வளையல்களை நீக்கியும் (புறம்: 238 : 1-6) அல்லி அரிசியை உணவாகக் கொள்ளும் நிலையை ஆசிரியர் விளக்குகின்றார்.

மொட்டையடித்தல், அணிகலன்களைத் துறத்தல்: :

கணவனை இழந்த பெண் ஒருத்தி மொட்டையடித்து அணிகலன்களையும் துறக்கும் நிலையை புறம்: 261வது பாடலில் குறிப்பிடப் பட்டுள்ளது.

நிரை இவண் தந்து, நடுகல் ஆகிய

வென் வேல் விடலை இன்மையின் புலம்பி

கொய்ம் மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய

கழி கல மகடூஉப் போலப்

புல்லென்றனையால், பல் அணி இழந்தே (புறம்: பா: 261: 15 – 19 )

ஆநிரைகளை மீட்டுத் தந்தவன் இன்று நடுகல்லாகிவிட்டதால் வெற்றி வேலையுடைய கணவன் இல்லாமையால் மழிக்கப்பட்ட மொட்டைத் தலையுடன் கைம்மை நோன்பு மிக, அணிகலன்கள் அனைத்தையும் கலைந்துவிட்ட கோலத்தில் புல்லென்று அற்பமானது போல, அவனது வீட்டு முற்றமும் அழகு இழந்து காணப்படுகிறது.

கைம்மையுற்றார் கூந்தல் களைதலும், தோடை நீக்குதலும் பழமையினால் வந்த மரபாகும். அக்காலத்திலிருந்தே கணவனை இழந்த பெண்ணுக்கு முடி, வளையல் ஆகியவற்றை நீக்குதலும் சடங்காகக் கொள்ளப்படுகின்றது. இச்செய்தி புறம்: 280: 11-15 வது பாடலிலும் காணப்படுகின்றது.

பாடையில் கிடத்தல்:

        இறந்தவர்களை அவரவர் வசதிக்கேற்ப பல்லக்கில் தூக்கிச் சென்று அடக்கம் செய்வர். எதுவாக இருந்தாலும் அதில் பாடைக் கட்டுதல் கட்டாயம் இருக்கும். பாடை என்பது ஏழு புல் ஏழு வாரை என்று கூறுவர். அதில் எல்லாம் ஏழு என்ற எண்ணிக்கையில் இருக்கும். ஏழு மூங்கில் கொம்பு சேர்த்துப் பின்னப்பட்டு தென்னம் ஓலையைப் பின்னி அதில் வைக்கோலை தலையணியாக கொண்டு கிடத்துவர். இவை இன்றும் வழக்கத்தில் இருந்து வருகின்றது.

       பலர்மீது நீட்டிய மண்டை என் சிறுவனைக்

       கால் கழி கட்டிலில் கிடப்பி

தூ வெள் அறுவை போர்ப்பித்திலதே!  (புறம்: பா: 286: 3-5)

வெண்மை நிறம் கொண்ட வெள்ளாட்டுத் தாடி போலத் இளந்தாடித் தோற்றத்துடன்   இளைஞர்கள் பலர் இருக்க, இறந்தவர்களைக் கால் இல்லாத கட்டிலாகிய பாடையில் கிடத்தித் தூய வெள்ளாடையை அவன் மீது போர்த்தி சடங்கு செய்து எரிப்பார்களே. அது போன்ற சடங்கைக் கூட அவனுக்கு என்னால் செய்ய முடியவில்லையே என்று தாய் ஒருத்தி புலம்புகிறாள்.

இறந்தோரின் உடலுக்குத் தூய வெள்ளாடையைப் போர்த்துதல்:

பாடையில் பிணத்தைக் கிடத்தி அதன் மீது தூய வெண்மைநிற போர்வையைப்  போர்த்தி கொண்டுச் செல்வர். இம்முறைக் குறித்து புறப்பாடலிலும் காணப் படுகிறது.

களர்ப்படு கூவல் தோண்டி, நாளும்

..........................................................................

தாதுஎரு, மறுகின் மாசுண இருந்து (புறம்: பா: 311: 1-3)

உவர் நிலத்தில் கிணறு தோண்டி நாள்தோறும் ஆடையை வெளுப்பவளால் தூய்மை செய்யப்பட்ட மிகவெள்ளிய ஆடை எருப் பொடிகளையுடைய வீதியில் அழுக்குப் படும் படியாக இருந்தது. இறந்துபட்டவருடைய உடலுக்கும் புலைத்தியால் வெளுக்கப்பட்ட தூய ஆடை போர்த்தப்பட்டது. அக்காலத்தில் மட்டுமின்றி இக்காலத்திலும் இறந்தவரின் உடலுக்கு ஆடை போர்த்தும் வழக்கம் காணப்படுகிறது.

உடன்கட்டை ஏறுதல்:

       கணவன் இறந்ததை அறிந்து தலைவன் இல்லாமல் இவ்வுலகில் தனிமையில் வாழ விரும்பாமல் தானும் இறக்க விரும்புகிறாள் தலைவி. அதை,

கலம் செய் கோவே! கலம் செய் கோவே!

...................................................................................

வியல் மலர் அகன் பொழில் ஈமத் தாழி

.....................................................................................

நனந் தலை மூதூர்க் கலம் செய் கோவே! (புறம் : பா: 228: 1-4)

       பெண் ஒருத்தி தன் கணவனுடன் சுரத்திடை வந்து கொண்டிருந்தாள். அப்போது உண்டாகிய போரில் கணவன் விழுப்புண் பட்டு உயிர் கொடுத்துப் புகழ் கொண்டான். தலைவன் இல்லாமல் தனிமையுற்ற தலைவி தானும் தலைவனோடு இறக்க விரும்புவதால் இருவரையும் அடக்கத்தக்க வகையில் அகலமான தாழியை அருள் கூர்ந்து செய்ய வேண்டுமாறு ஊர்க் குயவனை நோக்கிக் கூறுகிறார். ஈமத் தாழியில் ஒருவருக்கு மட்டும் இடம் இருக்கும். ஆகையால் தாழியை அகன்றநிலையில் வனைவதற்குக் குயவனால் மட்டுமே செய்ய இயலும். அதனால் தலைவி குயவனிடம் பெரிய அகன்ற தாழியை செய்ய சொல்லி கேட்கும் நிலையில் பாடப் பட்டுள்ளது.

நடுகல் அமைத்தல்:

இறந்தவரின் நினைவாக எடுக்கப்படும் நினைவுக்கல் நடுகல் எனப்படும். நடுகற்கள் பாலை நிலத்தின் கண் மரத்தின் நிழலில் அச்சம் தரக் கூடிய வகையில் தனிமையான இடம், மற்றும் ஏரிக்கரையிலும் ஆற்றங்கரையின் அருகிலும் ஊரின் புறத்தே காட்டுப் பகுதியிலும் அமைக்கப்பட்டன. இது போர் முனையில் இறந்துபட்டோருக்கு நடுகல் அமைக்கும் மரபு அந்நாளில் இருந்தது. இறந்தவர் பிணங்களைத் தழை, சருகு ஆகியவற்றால் மூடுதலும் உண்டு.

நடுகல் பிறங்கிய உவல் இடு பறந்தலை

...................................................................................

சிறையும் தானே – தன் இறை விழுமுறினே (புறம்: பா: 314: 3-7)

அத்தகைய நடுகல்லிற்கு மயிற்பீலி சூட்டுதலும், பலிப் பொருள் படைத்தலும் தமிழர் மரபு என்பதை இப்பாடல் உணர்த்துகிறது. நடுகல் குறித்த பாடல் புறனாநூற்றில் (223, 232, 335, 265: 1-5, 260, 264, 329), அகம்(35, 67,131, 289,  387), பட்டினப்பாலை (78-79) மட்டுமில்லாது மலைபடுகடாம் (394-95) போன்ற அடிகளில் நடுகல் குறித்த பதிவுகள் காணப் படுகின்றன.

பிணத்தை எரித்தல்:

பிணங்களை எரித்தல், புதைத்தல் என இரு நிலைகளில் அடக்கம் செய்வர். அக்காலத்தில் இறந்தவர்களின் உடலைத் தாழியில் வைத்து புதைத்த செய்தி புறம் 228, 238,239 ஆகிய பாடல்களிலும், எரித்தலைக் குறித்த செய்தி புறம்: 231, 239,240,245 ஆகிய பாடல்களிலும் காணப்படுகின்றன.

எறி புனக் குறவன் குறையல் அன்ன

கரி புற விறகின் ஈம ஒள் அழல் (புறம்: பா: 231:  1- 2)

வெட்டி எரிக்கப்பட்ட கொல்லை நிலத்தில் குறவனால் துண்டுகள் ஆக்கப்பட்ட மரங்கள் போன்று கரிய புறத்தை உடைய விறகுகள் அதியமானின் உடல்மீது அடுக்கப் பட்டிருந்தன. இனி அந்த ஈமத்தீயானது அவன் உடலைச் சுடாமல் அணைந்தாலும் அணையட்டும். அல்லது வானத்தைத் தொடுமாறு அத்தீயானது மேல் எழுந்தாலும் எழட்டும். குளிர்ந்த கதிர்களையுடைய நிலவையொத்த வெண்கொற்ற குடையை  உடையவனும் ஒளி  பொருந்திய ஞாயிற்றை ஒத்தவனுமான அதயமானுடைய புகழ் என்றும் அழியாதவை. சமூகத்தில் இறந்தவர்களை எரிக்கும் வழக்கமும் காணப்படுகின்றன.  

பிண்டம் வைத்தல்:

இறந்தவர்களுக்குச் செய்யப்படும் சடங்கில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது பிண்டம் வைத்தல். இறந்தவர்களின் ஆன்மா முக்தி அடைய வேண்டும் என்பதற்காக குடும்பத்தினர் செய்யும் சடங்கு. விண்ணுலகு புகுந்த தன் கணவனுக்கு உணவிட தலைவி  விரும்புகிறாள். அதன் பொருட்டு முறத்தின் அளவாக இடத்தைத் துடைத்தும், அழுவதினின்று நீங்காக் கண்களை உடையவளாய்த் தன் கண்ணீருடன் பசுஞ் சாணத்தை மெழுகுமாறு அமைத்து உணவை படைக்கிறாள். நேற்று பலரொடு உண்டவன் நிலை இன்று பிண்டம் உண்ணுமாறு ஆயிற்று எனும் இரங்கற் பொருளில் வந்தது. இதை புறம்: 249: 10-14 வரிகள் உணர்த்துகின்றன. இதை போல பின்வரும் வரிகளான,

நோகோ  யானே? தேய்கமா காலை!

.............................................................................

பலரொடு உண்டல் மரீஇயோனே? (புறம்: பா: 234: 1-6)

பிடியானையின் அடி போன்ற சிறிய இடத்தின் அளவாக தரையில் மெழுகி அதன் மேல் தருப்பைப் புல் பரப்பி அதன் மேல் சோற்றுக் கவளப் பிண்டத்தை வைத்து இறந்துபோன தன்  கணவனுக்குப் படைக்கிறாள். இந்த சோற்றுப் பிண்டத்தை அவன் எங்கே உண்டான்? கைம்மை நோன்பு இருந்த மனைவி நொந்து பாடுவதாக இப்பாடல் உள்ளது.

 பித்துருக் கடன் :

       மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் கடமைகள் பல உண்டு. ஒன்று தேவ கடன், இரண்டு ரிஷி கடன், மூன்றாவது பித்துரு கடன். தன் குலத்தில் மறைந்த மூதாதையர்களுக்கு ஆண்டுதோறும் செய்யப்படும் சிரார்த்தங்கள் ‘பித்துருக் கடன்’ என்று அழைக்கப்படும்.

வருடத்திற்கு ஒரு முறையாவது செய்ய வேண்டும். இத்தகைய  கடன்களை அடைக்க கடன் என்னும் ஆறாவது ராசியான கன்னியில், சூரியன் பிரவேசிக்கும் (மஹாளய அமாவாசை) புரட்டாசி மாதத்தை ஒதுக்கினார்கள். மஹாளயத்திலும் அமாவாசையிலும் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்துருக்கள் வந்து நிற்பார்கள். தங்களுக்குத் தரப்படும் தர்ப்பணத்தை (எள் கலந்த நீரை) பெற்றுக் கொண்டு நல்லாசி வழங்குவார்கள்.

 இறந்தவர்களுக்குச் செய்யும் இக்கடமையை செய்யவேண்டுமென்றால் பிள்ளைபேறு பெற்றிருக்க வேண்டும். ஆரோக்கியமான பிள்ளைகள் பிறந்தால்தான் இக்கடனை செலுத்த இயலும் என்பதை பின்வரும் பாடலில் குறிப்பிடுகிறார் ஆசிரியர். அவை

சிறப்பு இல் சிதடும் உறுப்பு இல் பிண்டமும்

.............................................................................................

முன்னும் அறிந்தோர்  கூறினர்; இன்னம் (புறம் : பா: 28 : 1-6)

மக்கட் பிறப்பில் கண்ணிலாத குருடும், வடிவற்ற தசை பிண்டமும், கூனும், குறுகிய தோற்றமும், ஊமையும், செவிடும், விலங்கு வடிவிலான தோற்றமும் அறிவின்றி மயங்கிருப்பதும், ஆகிய எட்டுப் பெரிய குறைபாடுகள் மக்கள் பிறப்பில் உள்ளன. இவை இவ்வுலகில் வாழ்வார்க்குப் பேதை தன்மையிலான பிறப்புகள் அன்றி இவற்றால் யாதொரு பயனும் இல்லை என நன்கு அறிந்து முற்காலத்திலேயே கூறியுள்ளனர். குறையிலாத மக்கட் பேறு பெற்று பெற்றோர்களை இன்புறுத்த வேண்டியும், தென்புலம் வாழ்நர்க்கு உரிய கடன்களை செய்ய வேண்டும். மக்களின் இன்றியமையாத கடமைகளில் இதுவும் ஒன்று.

பித்துருக்களுக்குச் செய்யும் சடங்கு:

       பித்துருக்கள் என அழைக்கப்படுபவர். குடியில் முன் பிறந்து இறந்தவர். அவருக்கு நீர்க் கடன் செய்யப் பிள்ளைகளைப் பெறல் வேண்டும். அவ்வாறு பெறவில்லையெனில் அதுகாறும் போரிலிருந்து விலகுமாறு வேண்டப்படுவர்.

ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும்

..................................................................................

பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும் (புறம்: பா: 9: 1-4)

       இறந்து தென் திசையில் வாழும் முன்னோர்க்குச் செய்யும் அறிய சடங்குகளை பசுவின் இயல்பை ஒத்த பார்ப்பனரும் அக்காலத்திலே செய்துள்ளனர். இக்காலத்திலும் பார்ப்பனர்களை வைத்து புரட்டாசி மாதத்தில் செய்கின்றனர்.

முடிவுரை:

              ஒரு மனிதன் இறந்த பிறகு அவனைப் பிணம் என்றே அழைக்கப் படுகிறான். அவனுடைய உடம்பிலிருந்து உயிர் பிரிந்த நேரத்திலிருந்து சடங்குகளும் தொடங்கி விடுகின்றன. அந்த உடல் மண்ணில் புதைக்கவோ எரிக்கவோ செய்து அழிக்கப்படுகிறது. உயிர் பிரிந்த உடல் அழிக்கப்படுவதற்கு முன்பு பின்பும் செய்யப்படும் சடங்கு இறப்புச் சடங்கு என்பர். அவற்றில் தேங்காய் உடைத்தல், நல்லெண்ணெய் சீக்காய் வைத்தல், தண்ணீர் கொண்டு வருதல், பிணத்தை மந்திரம் ஓதி குளிப்பாட்டுதல், தாய் வீட்டு கோடி போடுதல், கண் பார்த்தல், பேரப் பிள்ளைகள் நெய் பந்தம் பிடித்தல், பாடை மாற்றுதல், காசு இறைத்தல், அரிச் சந்திரன் சிலை வழிபாடு, புதைத்தல், கொள்ளி வைத்தல், சாம்பலை புனித இடங்களில் கரைத்தல் போன்ற வழி வழியாக கடைபிடிக்கப்பட்டு வரும் இச்சடங்குகள், அவரவர்கள் வாழும் இடத்திற்கேற்ப சாதி, குல, மத, ரீதியாக மாறுபடுகின்றன.

துணை நூற்ப்பட்டியல் :

  1. புறநானூறு மூலமும் உரையும், முனைவர் கு. வெ. பாலசுப்பிரமணியன் (உரை. ஆ.), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், அம்பத்தூர், சென்னை – 98.
  2. தினகரன் நாளிதழ், ப. 7, 21.9.2021
  3. அகநானூறு மூலமும் உரையும், முனைவர் இரா. செயபால் (உரை. ஆ.), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், அம்பத்தூர், சென்னை – 98.
  4. பத்துப்பாட்டு மூலமும் உரையும், முனைவர் வி. நாகராசன் (உரை. ஆ.), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், அம்பத்தூர், சென்னை – 98.