ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

அகநானூற்றில் தாமரை

வெ. காமினி, பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர், தூய நெஞ்சக் கல்லூரி(தன்னாட்சி), திருப்பத்தூர் 09 Nov 2021 Read Full PDF

நெறியாளர்   :  முனைவர் க. மோகன்காந்தி,  உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூய நெஞ்சக் கல்லூரி(தன்னாட்சி), திருப்பத்தூர்

ஆய்வாளர்  :  வெ. காமினி, பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர், தூய நெஞ்சக் கல்லூரி(தன்னாட்சி), திருப்பத்தூர்

ஆய்வுச் சுருக்கம்

               சங்க கால நூல்கள் பன்முகச் செய்திகளை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றன. இதில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான அகநானூற்றில் தாமரை மலரின் தன்மைகள், அமைப்புகள், சிறப்புகள், பயன்கள் ஆகியவற்றை இந்த ஆய்வுக் கட்டுரையின் மூலம் அறிய முடிகிறது. 

முன்னுரை

               சங்க இலக்கியம் என்பது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், பண்பாடு, நாகரீகம், காதல், வீரம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டது. இதில் மக்கள், பறவைகள், விலங்குகள், தாவரங்கள், மலர்கள் ஆகியவற்றோடு அவர்கள் கொண்டிருந்த உறவையும், நட்பையும் நன்கு அறிய முடிகிறது. சங்க இலக்கிய நூல்களுள் அகநானூற்றில் பல்வேறு மலர்கள் இருந்தாலும் தாமரை மலரின் (Nelumb Nuclfera) சிறப்பை  இந்த ஆய்வுக் கட்டுரை எடுத்தியம்புகிறது.    

தாமரையின் வேறு பெயர்கள்

            “அரவிந்தம், எல்லிமனை, சூரிய நட்பு, பொன்மனை, விந்தம், புண்டர்கம், பதுமம், கமலம், நளினம், முளரி, முண்டகம், மாலுந்தி, சரோகம், கோகனகம், இண்டை, கஞ்சம், அப்புசம், அம்போருகம், சலகம், வனசம், வாரிசம், சரசீருகம், பங்கேருகம், சரோருகம்”1 எனப்  பல்வேறு பெயர்களை உள்ளடக்கியதாக க.முருகேச முதலியார் குணபாடம் (ப. 505) என்ற நூலின் மூலம் அறியலாம்.         

தாமரையின் வகைகள்

            தாமரையின் நிற வேற்றுமையைக் கொண்டு வெண்மை, செம்மை, நீலம், மஞ்சள் என நான்கு இனங்களாகப் பிரிக்கலாம்.

வெண்தாமரையின் பயன்

            வெள்ளைத் தாமரைப் பூ  உடலில் உள்ள ஈரலின் வெப்பத்தையும், வெப்பமுள்ள மருந்துகளின் உட்சூட்டையும் நீக்கும்.

தாமரையின் பயன்கள்

தாமரைப்பூவின் மகரந்தப் பொடியுடன், சர்க்கரையும் தேனும் கூட்டி விடியற்காலையில் நித்தியப்படி பத்தியத்துடன் புசித்து வந்தால் காது கேளாமை, அலி என்கின்ற பேடித் தன்மை, பலவீனம் என்பவை நீங்கும் என்பதை,

சண்டளையுஞ் சண்டனையுந் தள்ளமல ருள்ளுறையுண்

            சண்டளையுஞ் சண்டளையுஞ் சார்மதிபால சண்டணை (தே.யமக வெண்பா 35 : 1-2)

இந்த பாடலின் மூலம் அறியலாம்.

இலை

            இலையைப் புசிக்கில் உடற்கு வெப்பத்தைத் தரும். பசித்தீயை நீக்கும்.

பூ      

தாமரை பூவிற்கு நறுமணமுண்டு. இப்பூவில் இலட்சுமி வாசம் செய்கிறாள் என்ற நம்பிக்கை இந்துக்களுக்கிருப்பதால் இப்பூ மிகவும் உன்னதமான மலராக போற்றப்படுகிறது.

விதை

            சுவையின்மை போகும். விதையைத் தேன்விட்டு அரைத்து நாவில் தடவிவர வாந்தி, விக்கல் தீரும்.

நார்

            தாமரையிலிருந்து எடுக்கப்படும் நார் விளக்கெரிய திரியாக பயன்படுத்தப்படுகிறது.

கிழங்கு

            கண்ணிற்கு ஒளி, குளிர்ச்சி இவைகளைத் தரும். உடலில் ஏற்படும் தவளைச் சொறி, வயிற்றுக்கடுப்பு ஆகியநோய்களை நீக்கும்.

தாமரையின் அமைப்பு

சேற்றில் வளரும் செந்தாமரை கதிரவனைக் கண்டு மலரும். ஐந்து புற இதழ்களை உடையது. அகவிதழ்கள் 20 -25 ஒரே மாதிரியாக இருக்கும். தாமரையில் நூற்றுக்கணக்கான அகவிதழ்கள் உண்டு. தாமரை காலையில் மலர்ந்து இரவில் குவியும் என்பதை,

                        சேற்று வளர் தாமரை பயந்த ஒண்கேழ்

                         நூற்றிதழ் அலரின் நிரை கண்டன்ன”2                        

இந்தப் பாடலின் மூலம் அரசனின் சிறப்பைப் புலவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் அழகாக எடுத்தியம்புகிறார்.

தாமரையின் சிறப்புகள்

            கடல் போன்ற நீர்ப் பரப்பில் நிலம் பிளவுபடுமாறு கீழே இறங்கிய வேரில் முதிர்ந்த கிழங்கும், மூங்கிலைப் போலும் துளையுடைய தண்டும், யானையின் காது போலும் துளையுடைய தண்டும், யானையின் காது போலும் அகன்ற பசுமையான இலையும், கழுமரம் போன்று உயர்ந்து எழும் அரும்பும் அவற்றிடையே புன்முறுவல் பூத்த முகம் போன்ற பொலிவு பெறும் மலராக தாமரை உள்ளது என்பதை,

                        கடல்கண் டன்ன கண்அகன் பரப்பின்

                         நிலம்பக வீழ்ந்த வேர்முதிர் கிழங்கின்

                         கழைகண் டன்ன தூம்புடைத் திரள் கால்

                         களிற்றுச் செவி அன்ன பாசடை மருங்கில்

                         கழுநிவந் தன்ன கொழுமுகை இடை இடை

                         முறுவல் முகத்தின் பல்மலர் தயங்கப்

                         பூத்த தாமரைப் புள்இமிழ் பழனத்து”3                               

இந்தப் பாடலின் மூலம் இளங்கடுங்கோ என்ற புலவர் தாமரையின் அமைப்பை எடுத்தியம்புகிறார். மேலும்,

தீயைப் போன்ற தாமரைப் பூக்களை உடையது வயல் என்பதை,

                        சுடர்ப் பூந் தாமரை நீர் முதிர் பழனத்து”4                           

இந்தப் பாடலின் மூலம் நீர் நிறைந்த வயல்களில் தாமரை மலர்ந்திருப்பதைப் பரணர் எடுத்துரைக்கிறார்.

நீர் நாய்கள் பொருந்திய பழைய நீரில் தழைத்த தாமரை மலரின் பொகுட்டைச் சூழ்ந்துள்ள உள்ளிதழ்களை அடுத்துள்ள மெல்லிய இதழை உடையது என்பதை,

                        நாயுடை முது நீர்க் கலித்த தாமரைத்

                         தாதின் அல்லி அவிர் இதழ் புரையும்

                          மாசு இல் அங்கை”5                                                   

இப் பாடலின் மூலம் தாமரையின்  மென்மைத் தன்மையினை அறியமுடிகிறது. மேலும்,

தாமரையின் உள்ளிருந்து ஊதும் வண்டுகள் தாமரையின் குளிர்ந்த மலரைத் தின்னும் என்பதை,                      

“--------------------------தாமரை

                        வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர! ”6                                     

இந்தப் பாடலின் மூலம்  தாமரை மலர்கள் நிறைந்த வளம் கொண்டதாக ஊர் இருக்கிறது என்பதை எடுத்துரைத்துள்ளார் புலவர்

நெல் அரிவோர் தீயைப்  போன்ற பல மலர்களை மாறுபட வைத்து, அசையும் பக்கங்களையுடைய கதிர்க் கட்டுக்களை இறுக்கிக் கட்டுவர். அக்கட்டுக்களைக் கள்ளுண்டு களித்திருக்கும் களமரின் களந்தோறும் கொண்டு செல்வர் என்பதை,

                        எரி புரை பல் மலர் பிறழ வாங்கி

                         அரிஞர் யாத்த அலங்கு தலைப் பெருஞ் சூடு

                         கள் ஆர் வினைஞர் களம்தொறும் மறுகும்”7                      

இந்தப் பாடலின் மூலம் தாமரை போன்ற பல்வேறு மலர்களைக் கொண்டு நெல் கதிர்களைக் கட்டுவர் என்பதைப்  புலவர்   எடுத்துரைக்கிறார்.

கொழுந்து விட்டு எரியும் நெருப்பைப் போன்று தாமரைப் பூக்கள் வயல்களில் பூத்துக் கிடக்கிறது என்பதை,

                        எரி அகைந் தன்ன தாமரைப் பழனத்துப்”8                        

இந்தப் பாடலின் மூலம்  வயல்வெளி முழுவதும் தாமரை பூக்கள் மிகுந்திருப்பதை   அறிய முடிகிறது.

தீயானது கொழுந்து விட்டு எரிவது போன்ற தாமரை மலர்களின் இடை இடையே செந்நெல்லை அரிந்து ஓரிடத்தே குவித்து வைத்தனர் உழவர்கள் என்பதை,

                        எரி அகைந்தன்ன தாமரைஇடை இடை

                         அரிந்து கால் குவித்த செந் நெல் வினைஞர்”9                   

என்று பரணர்  எடுத்தியம்புகிறார்.

யானை பெருமூச்சு விட்டாற் போன்று பனிவாடை வீசத் தாமரை மலரும் கரிந்து போகும் என்பதை,

                         “ களிறு உயர்த்தன்ன கண் அழி துவலை

                          முளரி கரியும் முன்பனிப் பானாள்” 10                                    

இந்தப் பாடலின் மூலம்  தாமரை மெல்லிய இதழ்களை உடையதால் வெப்பத்தின் தன்மையைத் தாங்க முடியாமல் கருகிபோய்விடும்  எனப்  புலவர் பரணர் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

தூண்டில் முள்ளை மீன் பற்றியதை அறிந்து தூண்டிலை இழுக்கும் நீர் நிலையில் தாமரை தழைத்திருக்கும் தண்டினையுடைய அகன்ற தாமரை இலை பெரிய யானையின் காது போல் அசைந்திருக்கும் என்பதை,

                        மீன் முதர் இலஞ்சிக் கலித்த தாமரை

                         நீர் மிசை நிவந்த நெடுந்தாள் அகல் இலை

                         இருங்கயம் துளங்கக் கால் உறு தோறும்

                         பெருங்களிற்றுச் செவியன் அலைக்கும் ஊரனொடு”11         

  பரணர் தாமரை இலையின் அமைப்பை எடுத்துரைக்கிறார். மேலும்,

மழை பெய்வதால் உண்டான குமிழிகள் குதிப்பதைப் போன்ற சேற்றில் தாமரை மொட்டுகள் போல் குமிழிகள் தோன்றி மறையும் என்பதை,

                        துளி படு மொக்குள் துள்ளுவன சால

                         தொளி பொரு பொகுட்டுத் தோன்றுவன மாய”12                   

இந்தப்  பாடலின் மூலம் தாமரையில் மொட்டுகள் அழகாக குவிந்து இருக்கும் என்பதை எடுத்துரைக்கிறார். மேலும்,

குளத்தில் செறிந்த வண்டுகள் வந்து மொய்க்கும் இரட்டையாய் உள்ள தாமரை மலர் போன்று விளங்கும் அழகை இழந்த பசலையுடைய கண்களை உடையவளாய் தலைவி உள்ளாள் என்பதை,

                         “ தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்ப்

                          பெருந் தகை இழந்த கண்ணினைஇ பெரிதும்”13                    

இந்த பாடலின் மூலம் தாமரை தன் அழகை இழந்து வாடும் இயல்பினைக் கொண்டது என்பதை புலவர் எடுத்தியம்புகிறார். மேலும்,

வளைந்த கொம்பை உடைய எருமை, தாமரையைத் தின்று வெறுத்தலால் பலா மரத்தின் நிழலில் தங்கும் என்பதை,          

தட மருப்பு எருமை தாமரை முனையின்

                         முடம் முதிர் பலவின் கொழு நிழல் வசதியும்”14                       

இந்த செய்தியின் மூலம் மருத நிலத்துக்குக் குறிஞ்சி நிலம் அண்மையில் உள்ளதாகப் புலவர் மாமூலனார் எடுத்துரைக்கிறார். மேலும், எருமைக்குத் தாமரை மலர்  உணவாய் பயன்படுகிறது என்பதையும் அறியமுடிகிறது.

துன்பமிக்க வருத்தம் மேலிட கண்கள் உகுத்த சிலவாய நீர்த்துளிகள் பலவாய இதழ்களையுடைய தாமரை மலர் போன்ற குளிர்ச்சி பொருந்திய கண்ணின் கருமணியை மறைத்தன என்பதை,

                        நோய்மலிந்து உகுத்த நொசிவரல் சில்நீர்

                          பல்இதழ் மழைக்கண் பாவை மாய்ப்பஇ”15                         

இதன் மூலம் சீத்தலைச் சாத்தனார் எடுத்துரைக்கிறார். மேலும்,

தூய்மையான மலரான தாமரைப் பூவில் கரிய இதழ்களையுடைய குவளை மலர் இரண்டைப் பிணைத்து வைத்தாற் போன்ற அமைப்பை உடையது என்பதை,

                        தூ மலர்த் தாமரைப் பூவின் அம் கண்

                         மா இதழ்க் குவளை மலர் பிணைத்தன்ன”16                          

தாமரைப் பூவோடு பிற மலரும் நீர் நிலையில் காணப்படும் என்பதைப் புலவர் எடுத்துரைக்கிறார் புலவர்

பல இதழ்களையுடைய தாமரை மலர் போன்ற குளிர்ச்சி பொருந்திய கண்களின் உள்ளிடமெல்லாம் சிவக்குமாறு காட்சி கொடுக்கிறது என்பதை,

                        பல்இதழ் மழைக்கண் நல்லகம் சிவப்ப

                         அருந்துயர் உடையள் இவள் என விரும்பிப்

                         பாணன் வந்தனன் தூதே: நீயும்”17                                          

தாமரையின் இதழ்கள் சிவந்து காணப்படும் என்பதை இந்த பாடலின் மூலம் தெளிவுப்படுத்துகிறார்.

மருத்துவ குணம்       

            இராஜவைத்திய மகுடமென்னும் யமக வெண்பாவில் சீதேவியார் செங்கழுநீர் கிழங்கை திரிகடுகுடன் சேர்த்து சாப்பிட முப்பிணிகள் தீரும் என்பதை,

                         “ முண்டா மரைவாசி யுற்பலமே லாகியதை

                            யுண்டா மரைவாசி யுள்”                                                  (தே.யம. 33 : 3 – 4)

இந்த பாடலின் மூலம் அறிய முடிகிறது.

முடிவுரை

            தாமரையின் பூக்கள், இதழ்கள் முதலியவற்றை அக்கால சமயத்துறை மற்றும் கட்டிடக் கலை அலங்காரங்களிலும் பயன்படுத்தியுள்ளனர். பண்டைய இந்தியப் புராணங்களிலும் பழங்கால இந்திய மருத்துவ வகைகளிலும் தாமரை மிகவும் போற்றப்படும் அளவிற்கு இடம் பிடித்துள்ளது. இந்தியாவின் தேசிய மலராகவும் போற்றப்படுகிறது. மேலும் தாமரை மனிதர்களுக்கு மட்டும் பயன் தருவதில்லை. ஆடு, மாடு, குதிரை, யானை, பறவை ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பயன்தரக் கூடியதாக இருந்தது. இவை மட்டுமின்றி தாமரையின் வளரிடம், சூழல்கள், பயன்கள், சிறப்புகள் ஆகியவற்றை  இந்த ஆய்வுக் கட்டுரையின் மூலம் அறிந்துக் கொள்ள முடிகிறது.

சான்றென் விளக்கம்

  1. முருகேசமுதலியார் க.ச, குணபாடம், ப - 19,    ஆண்டு 1975
  2. முனைவர் ஜெயபால். இரா, புறநானூறு மூலமும் உரையும், புறம் . 27 : 1 – 2
  3. முனைவர் ஜெயபால். இரா, அகநானூறு மூலமும் உரையும், அகம். 176 : 1 – 7
  4. அகம். 6 : 16
  5. அகம். 16 : 1 – 3
  6. அகம். 46 : 5 – 6
  7. அகம். 84 : 11 – 13
  8. அகம். 106 : 1  
  9. அகம். 116 : 1 – 2 
  10. அகம். 163 : 7 – 8
  11. அகம். 186 : 3 – 6
  12. அகம். 324 : 7 – 8
  13. அகம். 59 : 1 – 2 
  14. அகம். 91 : 15 – 16
  15. அகம். 229 : 11 – 12
  16.  அகம். 361 : 1 – 2
  17.  அகம். 244 : 9 – 11
  18.  தேரையர், தேரையர் யமக வெண்பா, பா : 33 (3-4)             

துணை நூற் பட்டியல் :

  1. முருகேசமுதலியார் க.ச                          -   குணபாடம் (பொருட்பண்பு நூல்)

                                                                  மூலிகை வகுப்பு பகுதி I வெளியிடு

                                                                   இந்தியமருத்துவம் – சென்னை.

  1. முனைவர் ஜெயபால். இரா                   -    புறநானூறு மூலமும் உரையும்

                                                                  நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்,

                                                                  சென்னை – 600 098.

  1. முனைவர் ஜெயபால். இரா                  -    அகநானூறு மூலமும் உரையும்

                                                                               நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்,

                                                                  சென்னை – 600 098.

  1.  தேரையர்                                                   -    தேரையர் வெண்பா மூலமும் உரையும்

                                                                             இந்தியமருத்துவம் ஓமியோபதித்துறை

                                                                அரும்பாக்கம், சென்னை – 106.