ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழியின் தனித் தன்மையும் பக்தி மார்க்கமும் -ஓர் ஆய்வு

முனைவர் பிரியா கிருஷ்ணன், முதுமுனைவர் பட்ட ஆய்வாளர், தேசியக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி 09 Nov 2021 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம்:

மனித வாழ்க்கையில் முக்கிய பங்களிப்பாக அமைவது  சமங்களாகும். ஆதி காலத்தில் இயற்கையை வணங்கிய மக்கள் பல்வேறு சமயங்களை உருவாக்கினர். அவ்வகையில் தமிழரிடையே ஆதி சமயங்களாக ஆசுவீகம், சமணம், பெளத்தம், சைவம், வைணவம் என பல சமயங்கள் தோன்றின. அதன்படி  நமக்கு கிடைத்த முதல் நூலான தொல்காப்பியப் பதிவின் படி  மாயோன், சேயோன், வேந்தன், வருணன் போன்ற தெய்வங்கள் அந்தந்த திணைகளின் தெய்வங்களாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளன. பழந்தமிழ் இலக்கண நூலான இத்தொல்காப்பியத்திலேயே திருமால் வணக்கம் பேசப்படுகின்றது. அந்தவகையில் திருமால் வழிபாடு என்பது மிக பழைமையான வழிபாடு என்றே சொல்லலாம் ஆதியிலேயே மாயோனாக முல்லை நிலத்து ஆயர்களின் இறையாக விளங்கிய திருமால் தொன்றுத் தொட்டு ஆயர்களின் பெருந்தெய்வமாய் விளங்குகின்றார். இதனை மையமிட்டே திருமாலையும் திருமாலின் இறையாண்மையையும் வளர்ப்பதில் ஆழ்வார்களும் முக்கிய பங்கு வகித்தனர். ஆழ்வார்கள் வைணவத்தை வளர்க்க தமிழ் பாசுரங்களை பாமாலைபாடி பக்தி தமிழுக்கு புகழ் சேர்த்தனர். அவர்களுள் சிறிய பெண்ணாகவும் திருமாலின் விருப்பத்திற்குரிய பூமாதேவியுமான ஆண்டாள் நாச்சியாரின் பங்களிப்பு மிக்க ஏற்றம் உடையது.பன்னிரு ஆழ்வார்களில் ஆண்டாள் நாச்சியார் நாராயணனை நினைத்து திருப்பாவையையும் நாச்சியார் திருமொழியையும் இயற்றி  பெருமை சேர்த்தாள். ஆண்டாள்தம் பாடல்களின் வழி சமுதாயம் உய்ய தன்னலமில்லா பக்தியின் அவசியத்தையும் அதன்வழி பெண்ணியத்தின் ஆளுமையையும் மிக அழகாக வெளிப்படுத்தியவர். ஆண்டாள் அருளிய  நாச்சியார் திருவாய்மொழியில் உள்ள தனித்தன்மையினையும் ஆண்டாளின் தமிழ் பக்தி மார்க்கத்தையும் ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

திறவுச் சொற்கள்: ஆண்டாள், நாச்சியார் திருவாய்மொழி, பெண்ணியம், வைணவம், திருமால்.

முன்னுரை:

    கி பி 6 ஆம் நூற்றாண்டிலிருந்து 9 ஆம் நூற்றாண்டுவரை  பன்னிரு ஆழ்வார்களால் பாடப்பட்ட  அருட்பாசுரங்களை எல்லாம்   நாதமுனிகள் என்னும் ஆசாரியர் பத்தாம் நூற்றாண்டில்  தொகுத்தார். பின்னர் வந்த மணவாளமாமுனிகள், நாதமுனிகள் தொகுத்த ஆழ்வார்களின் பிரபந்தங்களோடு ,   திருவரங்கத்தமுதனார்   இயற்றிய  இராமானுச நூற்றந்தாதியும் சேர்த்து நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என அழைக்கும்படி அருளினார். முதலாயிரம் 947 பாடல்களும் பெரிய திருமொழி 1134 பாடல்களும் , திருவாய்மொழி 1102 பாடல்களும் இயற்பா 817 பாடல்களும் ஆக   மொத்தம் 4000  என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன .முதலாயிரத்தில் ஆண்டாளின் 173 பாசுரங்கள் இடம்பெற்றுள்ளன. ஆண்டாள் நாச்சியார் தாம் இயற்றிய  திருப்பாவை முப்பது பாடல்களோடு  நாச்சியார் திருமொழி 143 பாடல்களையும் சேர்த்து 173 பாடல்களாக திருப்பாவை,நாச்சியார் திருமொழி என இரண்டு பிரபந்தங்கள் மட்டுமே பாடியுள்ளாள் . ஆண்டாள் நாச்சியார் இயற்றியது மிக குறைந்த பாக்களே ஆயினும் அவற்றின்  சாரமும்  சங்கத்தமிழ்  அழகும்   பக்தியின் உச்சமும் அனைவராலும்  ஏற்று போற்றப்படக்கூடியது.  அன்றைய  சமுதாயத்திற்கு மட்டுமல்லாது  என்றும்  அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய உயர்ந்த சிந்தனையான   இறைவன்  மீதான பக்தி ஒன்றே ஏழேழ் பிறவிக்கும் ஏற்றது என்று   எடுத்துரைப்பது பெரும் சிறப்பு. இறைவன் மீது சிந்தனை ஒருமைப்படின் மனிதன்  என்றும் தவறே செய்யமாட்டான் என்ற உயர்ந்த அறநெறியை உலகிற்கு காட்டியது ஆண்டாளின் பக்தி  என்றுகூட சொல்லலாம். இதன்படி ஆராயின் எத்தகையோரும் எளிமையான  இறைவழிபாட்டால்  சிறப்புப் பெறலாம் என ஆண்டாள் பக்திப் பனுவல்கள்  முன்னிறுத்துகின்றன.

ஆழ்வார்களில் ஆண்டாள் நாச்சியார்;

திருமாலின்பால் ஆழ்ந்து பக்தி கொண்டவர்கள் ஆழ்வார்கள் என்று போற்றப்படிகிறார்கள்.  திருமாலைப் பரம்பொருளாக ஏற்று வழிபடும் வைணவப் பெரியோர்களை ஆழ்வார்கள் என்றும் ஆசாரியார்கள் என்றும் இருவகைப் படுத்துவர். ஆழ்வார்கள் தனது இறை அனுபவத்தின் வெளிப்பாட்டை பாமாலைகளாக பாட, அவற்றை அடியொற்றி வைணவத்தை வளர்த்தவர்கள் ஆசாரியர்கள் .

ஞானம் செழிக்கும் தங்களுடைய இடமான வைகுந்தத்தை விட்டு ,இந்த இருள் தரும் மா ஞாலத்தில் அவதரித்து , உலகம் உய்யும் கைங்கரியத்தில் ஆழங்கால் பட்டமை கொண்டும், மண்ணுலகில் அவதரித்து , உண்டியே , உடையே அகத்தோடும் இம்மண்ணுலகத்தாரோடும் கூடுவதன்றி பகவானுடைய பக்தியிலே ஆழ்ந்திருந்தமையாலும் ஆழ்வார் எனப்பட்டனர் .(1) என்ற கருத்து இங்கு உற்றுநோக்கத்தக்கது.

ஆழ்வார்களின் வரலாற்றை அறிய  பல்வேறு பனுவல்கள் நம் முன்னோர்கள் படைத்துள்ளனர்.அதன்படி கருட வாகன் பண்டிதர் வடமொழியில் இயற்றிய திவ்யசூரிசரிதம்,அனந்தாசாரியர் இயற்றிய பிரபந்நாம்ருதம், பின்பழகிய பெருமாள் சீயர் மணிப்பிரவாள நடையில் இயற்றிய ஆறாயிரப்படி குருபரம்பரைப் பிரவாகம் ,வடிவழகிய நம்புதாசர் தமிழில் இயற்றிய ஆழ்வார்கள் வைபவம், ஸ்ரீ தேசிகன் , ஸ்ரீ மணவாளமாமுனிகள் ஆகியோர்  முறையே இயற்றிய பிரபந்தசாரம், உபதேசரத்தினமாலை போன்ற பிரபந்தங்கள் வழி பல்வேறு செய்திகள் செவ்வனே அறியப்படுகின்றன. பன்னிரு ஆழ்வார்களாக  பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் , பேயாழ்வார் ,திருமழிசையாழ்வார், நம்மாழ்வார் , மதுரகவியாழ்வார், குலசேகராழ்வார்,  பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடியாழ்வார் ,  திருப்பாணாழ்வார் , திருமங்கையாழ்வார் ஆவர். இவர்களில் பதினொருவரே திருமாலைப் பாட மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரை பாடியவர். ஆழ்வார் பதின்மர் என்னும் வழக்கும் உண்டு. மதுரகவிகளை நம்மாழ்வார் வைபவத்திலும் ஆண்டாள் என்னும் கோதை நாச்சியாரைப் பெரியாழ்வார் வைபவத்திலும் அடக்கிக் கூறுதலே இதற்குக் காரணம் ஆகும். ஆழ்வார்களில் ஆண்டாள் ஒருவர் மட்டுமே பெண். பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளாதலால் அவரை ஆழ்வார் பதின்மரின் சந்ததி என்றும் அவர்களின் ஞானத்தையெல்லாம் சீதனமாகப் பெற்றவர் என்றும் வைணவப் பெரியோரால் சிறப்பிக்கப்படுபவர் .திருவாடிப் பூரத்திலே செகத்துதித்தவளாகிய ஆண்டாளுக்கு ஆழ்வார் என்ற வரிசையிலும் நாச்சியார் வரிசையிலும் இடமுண்டு. இவளது திருக்கைத்தலம் பற்றியபின்பு கோதாரங்கன் ஆனார் அரங்கர். சுரும்பார் குழற்கோதை, தென்னரங்கம் தொழும் தேசயாள், கோதாதேவி என்றெல்லாம் அழைக்கப்படும் ஆண்டாள் அரங்கன் கைப் பிடித்ததாகக் கருதப்படுவதால் நாச்சியார் வரிசையிலும் இடம் பெற்றாள்.

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் - பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளைப் பத்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து
  (2)

ஆண்டாள் நாச்சியார் பெருமையை  பாடி மகிழ்கிறார்.  ஆழ்வார்களின் குடிக்கு ஒரே வாரிசாக வந்து அவதரித்தாள் ஆண்டாள். அஞ்சு என்பது ஐந்து என்ற எண்ணையும்,பயம் என்றும் பொருள்படும். அதாவது பஞ்ச பாண்டவர்களுக்குப் பின் இருந்த ஒரே வாரிசான பரீக்ஷித்து போலே ஆழ்வார்கள் பதின்மர்க்கும் ஒரே வாரிசு என்று முதல் அர்த்தம். எம்பெருமானுக்கு என்ன ஆபத்து வருமோ என்று பயப்படுபவர்களான ஆழ்வார்களுக்கு ஒரே வாரிசு என்று இரண்டாம் அர்த்தம். பெரியாழ்வார் எம்பெருமானே முழுவதுமாக மங்களாசாஸனம் செய்தார். மற்றைய ஆழ்வார்கள் பரமபக்தி நிலையை மட்டுமே  அடைந்தார்கள். ஆண்டாளோ, பெரியாழ்வாரைப் போலே மங்களாசாஸனமும் செய்தாள், மற்றைய ஆழ்வார்களைப் போலே பக்தியிலும் உயர்ந்து விளங்கினாள்., “திருத்துழாய் முளைக்கும் போதே பரிமளிக்குமா போலே” அதாவது இறை ஞானம் மிகுதியாகி முதலிலேயே பழமாகப் கனிந்து இருத்தல் நிலையை எட்டியவர் ஆண்டாள் எனலாம். சிறு வயதிலேயே உயர்ந்த பக்தி நிலையினை அடைந்த நிலையினை இது குறிக்கின்றது. இருத்தலைக் குறிக்கின்றது. ஆண்டாள் நாச்சியார் ஐந்து வயதிலேயே திருப்பாவை பாடினாள். நாச்சியார் திருமொழியிலே எம்பெருமானை அடைய மிகவும் உருகினாள் என்பதை வெளிப்படுத்தும் வண்ணம் மனமே! இப்படிப்பட்ட ஆண்டாளை எப்பொழுதும் கொண்டாடு என்று பாடி மகிழ்வதையே இப்பாடல் வழி அறிகின்றோம்.

ஆண்டாளின் வரலாறும் காலமும்:

ஆண்டாள் என்னும் பெயர் இறைவனை ஆண்டு மணவாளானாக ஏற்று வாழ்ந்தவள் என்னும் பொருளில் வழங்கப்படுகின்றது. 16 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட குருபரம்பரையில் ஆண்டாள் என்று குறிப்பிடாமல் சூடிக் கொடுத்தருளிய நாச்சியார் என்றே அழைக்கப்படுகின்றது.இதை உறுதி செய்யும் வகையில் கல்வெட்டுகளிலும் சூடிக் கொடுத்தருளிய நாச்சியார் என்றே குறிக்கப்படுகின்றது.

குருபரம்பரை, திவ்ய சூரிசரிதம் ஆகிய நூல்களின்படி , ஸ்ரீவல்லிபுத்தூரே நம் ஆண்டாளின் பிறப்பிடமாகும். ஆண்டாள் பூமிப்பிராட்டியின் அவதாரமாய் கருதப்படுகிறாள். கலியுகத்தின் ஒரு நள வருஷத்தில் ஆடி மாதம் சுக்ல சனிக்கிழமை கூடிய பூர நட்சத்திரத்தில் பெரியாழ்வார் கொத்தி வைத்த பூமியின் துளசி மடியில் கிடந்த தெய்வக்  குழந்தை என்று அறியப்படுகின்றது. ”அவ்வமயம் அக்குழவி ஐந்து வயதுக் கன்னிகையாய் ஸர்வாபரண் பூஷிதையாய் ஆழ்வாரை நமஸ்கரித்து ,தந்தையே யான் உமது மகள் இத்துளசி எனது தாய் என்று நவின்று மீண்டும் குழவியானாள் ” என்கிறது ஸ்ரீ வில்லிபுத்தூர் மகாத்மியம்.(3 ) .இக்குழந்தைக்கு  பெரியாழ்வார்  ‘கோதை’ எனப் பெயரிட்டு வளர்த்தார். பெரியாழ்வார் ஆண்டாளைப் பற்றி முன்கூட்டியே அறிந்தாரோ என்னவோ கோதை என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார் .கோதை என்றால் தமிழில் மாலை என்று பொருள் வடமொழியில் வாக்கைக் கொடுப்பவள் என்று பொருள். அதனாலேயே கோதைத்தமிழ் பாமாலைப் பாடி பூமாலைச் சூடி , சூடிக் கொடுத்த சுடர் விழியாளாக ஏற்றம் பெற்று அரங்கனை மணவாளனாக அடைந்தாள். விஷ்ணு சித்தர் கோதைக்கு வட பெருங் கோயிலுடையான் பெருமையும் வைணவ தர்ம சாராம்சமும் சொல்லி வளர்த்தார். துளசி இயற்கையாகவே நறுமணத்தோடு இருப்பது போல் ஆண்டாளும் எம்பெருமான் மேல்பக்தியும் காதலும் கொண்டாள். விஷ்ணு சித்தர் வீட்டில் இல்லாத நேரத்தில் தன்னை அலங்கரித்துக் கொண்டு ஆழ்வார் எம்பெருமானுக்கு கட்டிய மாலையைச் சூடுவாள். கண்ணாடி முன் நின்று தன் மாலை சூடியத் தோற்றம் கண்டு “நான் அவனுக்கு இணையோ? இல்லையோ?” என்று எண்ணி நிற்பாள். இணை என்று ஒரு நாள் மகிழ்வாள். இல்லை என்று தன்னை இன்னும் அழகு படுத்திக் கொள்வாள். விஷ்ணு சித்தர் வரும் முன் மாலையைக கழற்றி மீண்டும் பந்தாகச் சுருட்டி வைப்பாள். இப்படி

பல நாள் நடந்தது. ஒரு நாள் விஷ்ணு சித்தர் கோதையை சூடிய மாலையோடு பார்க்க நேர்ந்தது. அவர் மிகவும் மனம் வருந்தி “இப்படிச் செய்யலாமா?

எம்பிரான் மாலையை நீ சூடலாமா?” என்று கோபத்துடன் கேட்டார். அவர்

அன்று அம்மாலையை எம்பிரானுக்குச் சாத்தவில்லை. அன்றிரவு

எம்பெருமான் ஆழ்வார் கனவில் தோன்றி “இன்று நமக்கு மாலை

சாத்தாதது ஏன்?” என்றார். ஆழ்வார் தன் மகள் அதைச் சூடிய தவறைச்

சொல்லி மன்னிக்க வேண்டினார். இறைவனோ “அவள் சூடிய மாலையே

நல்ல மணமுடையதும் நம் விருப்பத்திற்கு உகந்ததும் ஆகும்” என

அறிவித்தார். பெரியாழ்வார் அன்று முதல் ஆண்டாளைப் பூமிப்

பிராட்டியாகவே கருதலானார். ஆண்டாளில் தூய பக்தியாலும் காதலாலும் அரங்கனின் விருப்பப்படியே அவரை மணந்து அவரோடு கலந்தாள் ஆண்டாள் நாச்சியார் .

பெரியாழ்வாரின் காலத்தை ஓரளவு கிடைக்கும் சான்றுகளால் அறிய முடிகின்றது.9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வார் 85 ஆண்டுகள் வாழ்ந்தவராதலால் 800 முதல் 885 வரையாக இருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர்களால் கல்வெட்டுத் துணையுடன் கணிக்கப்படுகின்றது. இன்றைய ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் 13 ஆம் நூற்றாண்டின் மாறவர்மன் குலசேகரனின் கல்வெட்டு ஒன்றில் பெரியாழ்வாருக்காகத் திருவிடையாட்டம் கொடுக்கப்பட்ட செய்தி சுட்டப்படுகின்றது  .(4) ஆகையால் ஆண்டாள் வாழ்ந்த  காலமும் அதுவே என ஆய்வாளர்களால் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. ஆண்டாள் ,பெரியாழ்வாரின் கவிதை உள்ளத்தின் கற்பனைப் படைப்பே என்று சிலர் கூறுகின்றனர்.ஆனால் ,ஆண்டாள் வாழ்ந்து உள்ளதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலே ஆதாராம். அக்கோயிலுக்கு முன்னுள்ள ஸ்ரீ ரங்க கல்வெட்டு ஆதாரம்.(5)
ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழி :

வைணவ திவ்விய தேசங்கள் 108. இந்த நூற்றியெட்டில் முதலாவது திருத்தலம் எனப் போற்றப்படுகிறது ஸ்ரீரங்கம். கடைசித்தலமாக போற்றப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூர். ஸ்ரீரங்கம், ஆண்டாளின் புகுந்த வீடு. ஸ்ரீவில்லிபுத்தூர்  ஆண்டாள்  அவதரித்த பிறந்தவீடு . வைணவத்தில் ஆண்டாள் நாச்சியாருக்கு  தனித்த ஏற்றம் உண்டு. உலகம் உய்ய பல அவதாரங்களை எடுத்து மக்களோடு மக்களாக இருந்து அனைத்து துன்பங்களையும் அடைந்து மக்களைக் காப்பாற்றியவன் திருமால்.அவனது அனைத்து அவதாரங்களும் வைணவ பக்தர்களால் மட்டுமல்லது அனைவராலும்  போற்றப்படுகின்றது. ஆண்டாள் நாச்சியார் அந்த அவதார புருஷர்களிலே மிகவும் எளிமையான அன்பான குறும்பான கண்ணனையே தேர்ந்தெடுக்கின்றார். அவன் மீதே பாடல் பல பாடுகின்றாள்.அதனை,

குறும்பு செய்வானோர் மகனைப் பெற்ற

நந்த கோபாலன் கடைத்தலைக்கே

நள்ளிருட்கண் என்னை உய்த்திடுமின் (நா.தி.12-3) (6)

என்று அனைவருக்கும் உரைக்கின்றாள் .வைணவர்களுக்கு அர்ச்சாவதாரத்தில் ஊற்றம் அதிகம். அர்ச்சையே பூரணமானதென்பதும், ஈச்வர குணங்கள் யாவற்றையும் பெற்றுள்ளதென்பதும் இதுவே பக்தியிலும் சிறந்த பிரபத்தியைச் சேதனன் செய்வதற்குப் பொருத்தமான இடம் என்பதும் இதில் செய்யும் பிரபத்தியே தவறாமல் விரைவில் பயனளிக்கும் என்பதும் வைணவர்களது உறுதியாகும் (7) . அதன்படியே ஆண்டாள் வாழ்ந்தார் என்பதில் எந்த ஐயமுமில்லை.

அன்பின் ஐந்திணைக் களவெனப் படுவது

அந்தணர் அருமறை மன்றல் எட்டனுள்

கந்தருவ வழக்கம் என்மனார் புலவர் (8)

என்று ஆன்றோர் வகுத்த இலக்கணத்தின்படி ஒத்த குலமும்,ஒத்த அறிவும் வாய்த்த இருவர் தம்முள் உணரும் உணர்வு அன்பிற்குரியது என்று இலக்கணம் வகுத்தனர்.

அத்தகைய காதல் உணர்வின் வெளிப்பாடு  , உடல் வழியாகவும் உயிர் வழியாகவும் படும் துன்பத்தை ,திருக்குறள் முதற்கொண்டு சங்க இலக்கியங்கள் வழி பலவாறு பதிவு செய்த போதிலும் ஆண்டாளின் பாசுரங்கள் அவற்றினின்று சற்று வேறுபட்டு உற்றது உரைத்தல்வழி புலப்படுத்தியிருப்பதிலிருந்தே அவளது தனித் தன்மை வெளிப்படுவதை அறியலாம். தோழியரிடம் தன்னிலை குறித்து வெளிப்படையாக எடுத்துக்கூறும் மனப்பாங்கு இன்றளவும் அனைத்து பெண்களிடமும் உள்ள பண்புதான். தான் கண்ணன் மீது கொண்ட காதல் அவன் வருவானா, தன்னை ஏற்பானா அல்லது இப்படியே நாட்கள் நகர்ந்து போய்விடுமா என்று அத்தனை துயரங்களின் கேள்விகளுக்கு பதில் இல்லாமல் தவித்தவருக்கு  சிந்தை முழுவதும் பார்க்கும் இடங்களிலெல்லாம் கண்ணன் மீதான காதலை காணமுடிகினறது.அதனால் ஏற்படும்  ஆற்றாமை தொடர்ந்து வருத்துகின்றது. அதன் வெளிப்பாடே  நாச்சியார் திருமொழி.  மார்கழி மாதம் நோன்பு முடிந்ததும் கண்ணன் வரவில்லை. அதனால் தை மாதம் மீண்டும் ஒரு நோன்பு தொடங்குகிறாள். இந்த சமயத்திலேயே பாடப்பட்ட பாசுரம் தான் நாச்சியார் திருமொழி. அதனாலேயே இந்த பாசுரம் “தையொரு திங்கள்” என ஆரம்பமாகிறது.  நாச்சியார் திருமொழியில் உள்ள 143 பாசுரங்களை 14 பதிகங்களாக ஆண்டாள் இயற்றியுள்ளார்.  ஆண்டாள் திருவரங்கம், திருக்கண்ணபுரம், திருமாலிருஞ்சோலை, ஸ்ரீ வில்லிபுத்தூர், திருவேங்கடம், துவாரகை, வடமதுரை, திருவாய்பாடி,(கோகுலம்),திருப்பாற்கடல் ஆகிய 9 திவ்ய தேசங்கள் குறித்துப் பாடியுள்ளார்.  ஆண்டாள் பாடல்களில் கோபிகை பாவங்களைக் காண்கின்றோம் என்கிறார் என்.எச்.பட்டாச்சாரியார் மற்றும் தமிழறிஞர் மு அருணாசலம். அதே போல் ஆண்டாள் குறித்து ஆண்டாள் சந்திர கலாமலை, ஆண்டாள் பிள்ளைத்தமிழ் ஆகிய இரண்டு நூல்கள் ஆண்டாள் மேல் இயற்றப்பட்டவையாகும்.

  1. தையொரு திங்கள்: காமதேவன் மூலமாக கண்ணனை அடைய வேண்டும் என்று அமைந்த முதற் பத்துப் பாடல்கள்.
  2. நாமமாயிரம்: ஆயர்பாடியில் உள்ள கோபிகா ஆண்டாள், தன்னை அடைய வேறு தேவதைகளை தொழ வேண்டாம் என கண்ணன் வந்தார். தாமதமாக வந்த கண்ணனுடன் ( பிரணய ரோஷம்) ஊடல் காரணமாக நடக்கும் சேட்டிதங்கள் பற்றிய இரண்டாம் பத்து
  3. கோழியழைப்பதன்: ஆண்டாள் மற்றும் தோழிகளான கோபிகா பெண்கள் கண்ணனுடன் விளையாடுவதைக் கூறும் மூன்றாம் பத்து.
  4. தெள்ளியார் பலர்: தான் கண்ணனுடன் கூடுவதற்கு  குறி பார்ப்பதாக அமைந்த நான்காம் பத்துப் பாடல்கள்
  5. மன்னு பெரும்புகழ்: கண்ணனை அடைய குயிலை தூது விடும் ஐந்தாம் பத்து.
  6. வாரணமாயிரம்: கண்ணன் தன்னை கனவில் வந்து மணஞ்செய்யக் கண்ட கனவைத் தோழிக்கு உரைப்பதாக அமைந்த ஆறாம் பத்து
  7. கருப்பூரம் நாறுமோ: பாஞ்சசன்னியம் பெருமாளுக்கு அணிகலன்

அது எப்படி பெருமாளுடன் சேர்ந்தே உள்ளது என அதன் பெருமைகள் கூறும் ஏழாம் பத்து.

  1. விண்ணீல மேலாப்பு: திருவேஙடமுடையானுக்குமேகவிடுதூதாக அமைந்த எட்டாம் பத்து
  2. சிந்தூரச் செம்பொடி: திருமாலிருஞ்சோலை எம்பெருமானை கண்ணனாக போற்றும் ஒன்பதாம் பத்து
  3. கார்க்கோடல் பூக்கள்: கண்ணன் தன்னிடம் வராத துன்பத்தில் தான் பார்க்கும் அனைத்தும் கண்ணனை நினைவூட்டுவதாக அமைந்த பத்தாம் பத்து.
  4. தாமுகக்கும்: திருவரங்கத்துச் செல்வனை தனது ஸ்வாமியாக அமைந்த பதினோராம் பத்து
  5. மற்றிருந்தீர்: தன் உறவினர்கள் கண்ணனுடன் சேர உதவ வேண்டும் பன்னிரண்டாம் பத்துப் பாடல்கள்
  6. கண்ணனென்னும்: அவலம் கண்ணனின் ஆடைகளை அணிந்து அவர் வராத கவலையை போக்குவதாக அமைந்த பதின்மூன்றாம் பத்து
  7. பட்டி மேய்ந்து: பிருந்தாவனத்தே கண்ணனை கண்டு அவரை அடைந்தது பற்றிக்கூறும் இறுதிப் பாடல்கள்.

நாச்சியார் திருமொழிப் பாடல்களின் தனித் தன்மை:

பக்தி அனுபவம் என்பது அதற்கான ஞானம் பெற்ற பிறகுதான் ஏற்படும்.அந்த வகையில் எம்பெருமானுக்குத் திருபள்ளியெழுச்சி பாடிய விப்ர நாராயணர் ,கதிரவன் குணதிசை என எம்பெருமான் உணர்த்தியப் பிறகே திருப்பள்ளியெழுச்சி பாடினார். ஆனால் கோதை நாச்சியாரோ தாம் பிறந்தது முதல் கேசவனையே காமுற்றவராக இருந்து திருப்பாவைப் பாடல்களில் பள்ளி எழுப்பினார்.

அவரைப் பிராயம் தொடங்கி என்றும்

  ஆதரித்தெழுந்த என் தடமுலைகள்

துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்

 தொழுது வைத்தேன் (9)

என்ற பாடல் அடிகளால் இதனை அறியமுடிகின்றது.

ஆண்டாளோ எந்நேரமும் எம்பெருமானின் வரவை எதிர்னோக்கிக் காத்திருப்பவள். எனவே அவள்  எப்போதும் அணிகலன்கள் அணிந்து ஆடைகளை அழகாக உடுத்தி அழகு பார்த்து காத்திருந்தாள் என்பதை,

காறைபூணும் கண்ணாடி காணும் தன்

கையில் வளை குழுங்கும்

கூறையுடுக்கும் அயர்க்கும் தன்

கொவ்வைச் செவ்வாய் திருத்தும் (10)

என்ற வரிகள் செம்மைப்படுத்தும்.

ஆண்டாள் கண்ணன் மீதி கொண்ட காதல் பக்தி மயமானது. காதலோ தெய்வீகமானது. மானிடப் பெண்ணுக்கும் இறைவனுக்கும் உள்ள காதல் மனிதர்களால் நம்பமுடியாத அற்புத வரலாறு. ஆண்டாளின் காதலும் பக்தியும் ஆழ்ந்து மூழ்கிய சிந்தையினை ,எம்பெருமான் மீதே நாட்டம் கொண்டது. தனக்கான அனைத்தும் எம்பெருமான் ஒருவனுக்கே  என  எண்ணி நெகழ்ந்தவள் ஆண்டாள். இதன்படி காதலால் ஆற்றாமை ஏற்பட , திருமாலை சென்றடையும் வழியாக நாச்சியார் திருமொழியைப் பாடினாள். 

இவ்வுலகில் உடம்போடு பிறந்த உயிர்கள் அனைத்தும் பரமனாகிய எம்பெருமானையே அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதி பாடு கொண்டவள் ஆண்டாள். இந்நெறியைத்தான் பாவை நோன்பு ஏற்று எம்பெருமானை அடைவதற்குரிய வழியைக் காட்டிக் கொடுக்கின்றாள் ஆண்டாள் .குறிப்பாக   ஸ்ரீ வைணவக் கோட்பாடுகளில் தலையாயது பயன் கருதாது பக்தி செய்யும் பண்பேயாகும். அதன்படியே பிறவிதோறும் நின் புகழ் பாடி உன்னை மறவாதிருக்க வரம் வேண்டும் என்றே வேண்டுகின்றாள்.

பெரியாழ்வாரின் பெண்பிள்ளையான ஆண்டாள் நாராயணனின் புகழை தினந்தோறும் கேட்டுவந்த நாச்சியாரின் மனம் முழுதும் திருவரங்கனின் அன்பை மேலோங்கச் செய்தாள். ஆண்டாள் நாச்சியாரின் பாடல்களில் பல இடங்களில் பெரியாழ்வாரின் வரிகளின் தாக்கம் இணைந்தே வருவது தொட்டனைத் தொட்டு  என்னும் வைணவக் கோட்பாட்டுக்கு ஏற்றதாக அமையும்.பெரியாழ்வாரினின் இறைவனுபவம் கண்ணைப் பிள்ளையாக பாவித்து தமிழ் பிள்ளைத்தமிழுக்கு  ஓர் ஏற்றமாக இவளும் பிள்ளைத்தமிழ் பாடியது பெரிய ஏற்றம் எனலாம். இதன்படி பிள்ளைத் தமிழ் தாக்கம் ஆண்டாள் பாடல்களில் நிறைந்து வருவதைக் காணலாம்.

செப்பேது மென்முலையார்கள் சிறுசோறும் இல்லும்

சிதைத்திட்டு (11)

இப்பாடலில் வரும் சிற்றில் சிதைத்தட்டு என்னும் சொல்லை மட்டும் கொண்டு,சிற்றில் சிதைக்காதே கண்ணா என்று ஆண்டாள் வேண்டுகின்றாள்.

வட்ட வாய்ச் சிறு தூதையோடு

சிறு சுளகும் மணலுங் கொண்டு (12)

வண்டல் நுண்மணல் தெள்ளியாம்

வளைக்கைகளால் சிரமப்பட்டோம் (13)

இன்று முற்றும் முதுகு நோவ

இருந்திழைத்த இச்சிற்றிலை  (14)

தெள்ளி நாங்கள் இழைத்த கோலம்

அழித்தி யாகிலும் உன்றன் மேல்

உள்ளமோடி உருகலல்லால்

உரோட மொன்று மிலோம்…. (15)

எங்களை மையலேற்றி மயக்க உன்முகம்

மாய மந்திரந்தான் கொலோ!

செய்ய தாமரைக் கண்ணினாய் ! எங்கள்

சிற்றில் வந்து சிதையாதே (16)

இங்ஙனம் தாங்கள் விளையாடும் சிற்றிலை சிதையாதே என்று சிறு குழந்தையாய் கண்ணனிடம் வேண்டுவதைப் பார்க்க முடிகின்றது.

பண்டைய இலக்கியங்கள் கூறும் காதலுற்ற பெண் காதலால் கசிந்துருகி உடல் மெலிந்து பசலை படர்ந்து வளை கழண்டோட வருந்துவாள் என்பதற்கிணங்க ,ஆண்டாள் நாச்சியார் கண்ணனையே எண்ணி எண்ணி உடல் மெலிகின்றாள்.அவளது வளை கழண்டோடுகின்றது.இதனை வெளிப்படுத்தும் வண்ணம்,

கழல் வளையைத் தாமும் கழல் வளையே யாக்கினாரே (17)

என்று தனது ஆற்றாமையை மிக அழகாக வெளிப்படுத்துகின்றாள்.அந்த ஆற்ற்மையை உலகமறிய அரற்றுகின்றாள்.அதனால்தான் தன்னிலையை திருமாலிடம் சென்று சொல்வதற்கு இயற்கையை நாடுகின்றாள்.மயிலைப் பார்த்தால் மாயவன் நினைவு.மேகத்தைப் பார்த்தால் கார்முகில் நிறத்தவன் கண்ணன் கண் முன் வந்து நிற்கின்றார். கரிக்குருவிகள் கத்தினோலோ மனத்துக்கு இனியவன் வருவான் என்பது ஐதீகம் .அப்படியானால் நான் கண்ணனை காண்பேனா? அவன் வருவானா என ஒவ்வொரு நொடியும் ஏங்கின்றாள்.

காலை எழுந்திருந்து கரிய குருவிக் கணங்கள்

மாலின் வரவு சொல்லி மருள்பாடுதல் மெய்மை கொலோ (18)

துங்க மலைப் பொழில் சூழ்

திருமாலிருஞ் சோலை நின்ற

செங்கண் கருமுகிலின்

திருவுருவப் போள் மலர்மேல்

தொங்கிய வண்டினங்காள்!

தொகு பூஞ்சுனைகள் !சுனையில்

தங்கு செந்தாமரைகள் !

எனக்கோர் சரண் சாற்றுமின் (19)

அதாவது மழைக் காலத்தில் திருமாலின் திருமேனி நிறத்தைப் போன்ற கோடல் மலர்கள் மலர்ந்தும் ,அவன் திருவதிரத்தை கொவ்வைக் கனிகளைப் போலவும் கண்டு ரசிக்கின்றாள்.இதனால் கண்ணன் நினைவில் மீண்டும் ஆற்றாமை கொண்டு  வருத்தம் கொள்கின்றாள்.எனவே  அவை அனைத்தும் தனக்கு பகை எனக் கருதுகின்றாள்.இவ்வாறு இயற்கையின் மடியில் உள்ள ஒவ்வொன்றிலும் கண்ணனை நோக்கி இயற்கையில் இறைவன் நிறைந்துள்ளான் என்பதை நமக்கெல்லாம் உணர்த்துகின்றாள்.

இது மட்டுமின்றி அன்றைய திருமணமுறை குறித்து அறிந்து கொள்ள உதவும் ஒரு கருவூலம் நாச்சியார் திருமொழி எனலாம் .தான் கண்ட கனவைப் பற்றி கூறும் போது திருமண சடங்குகளையும் அடுத்தடுத்த நிகழும் நிகழ்வுகளையும்  பட்டியலிடுகின்றாள் நாச்சியார் . வைணவத் திருமணம் அன்று எவ்வாறு  நடந்தேறியது என்பதை அறிய உதவும்  ஒரு வரலாற்றுச் சான்றாக இக்கனா நிலை உரைத்தலை பார்க்க முடிகின்றது.

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்

தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி !நான்  ( 20)

என வரும் பாடல் வரிகளால் இதனை அறியமுடிகின்றது.வைணவம் என்பது எம்பெருமானை தவிர மற்றோர்  தெய்வத்தை தொழாமை என்பதே அதன் கொள்கை. இக்கொள்கைக்கு ஏற்ப  முப்பொழுதும் எம்பெருமானையே தொழுது கொண்டிருக்கும் நாச்சியார் ஆற்றாமை மிகவாகி காமனைத் தொழுது தனக்கு விரைவில் கண்ணனை அடையும் பாக்கியம் வேண்டும் என்று தொழுகின்றாள். நோக்கம் திருமாலை அடைவது அல்லவா? இதில் தவறில்லை என்பதே பெரியோர் வாக்கு.

வானிடை வாழுமவ் வானவர்க்கு

மறையவர் வேள்வியில் வகுத்தவவி

கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து

கடப்பதும் மோப்பதுஞ் செய்வதொப்ப

ஊனிடை யாழி சங்கூத்தமர்க் கென்

றுன்னித் தொழுந்த வென் தடமுலைகள்

மானிடவர்க் கென்று பேச்சுப்படில்

வாழகில்லேன் கண்டாய் மன்மதனே  (21)

எம்பெருமானுக்காக சங்கல்பித்து வைத்த தனது உடலை மானிடவர்க்கு உரிமையாக்கக் கருதினால் உயிர் வாழமாட்டோம் என்று எடுத்துரைக்கின்ற பாங்கு கண்ணன் மீதான அதீத அன்பையும் காதலையும் காட்டுகின்றது.சாதரண வாழ்க்கையில் உழலும் மனிதர்களைப் போல மானிடனை மணக்க எண்ணியவர் அல்ல ஆண்டாள். இறைவனையே கணவனாக அடைவேன் என எண்ணி நோற்ற நோன்பு பலிதம் ஆனது. அந்த நம்பிக்கை அவளுக்கு இறைவனைக் காட்டியது. இதுவே பக்திநெறியின்  உச்சம். பக்தி மார்க்கத்தை பலரும் பலவராகப் பாடி மகிழ்ந்த போதும் இறைவனை கண்ணுற்றவர் சிலரே. அதிலும் இறைவனையே கணவனாக பெறுவது என்பது எத்தனைபேறு.  அந்தளவு பக்தியில் சிறந்து விளங்கியவர் ஆண்டாள் நாச்சியார்.அவரது திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் அதைத்தான் சொல்லித் தருகின்றது.எதிர்பார்ப்பு இல்லாத பக்தி நம்மை இறைவனின் திருவடிகளே சேர்ப்பிக்கும் என்பதைத்தான் நாச்சியார் பாடல்கள் எடுத்துரைக்கின்றன.

ஆண்டாள் நாச்சியாரின்  பக்திக்கான மரியாதை:

ஆண்டளின் பக்திப் பனுவலைகளையும் அவரின் பக்திமார்க்கத்தையும் நன்குணர்ந்த பெரியவர்கள் ஆழ்வார்களிலே ஏற்றம் மிக்கப்  பெண்மணியாக  அவரை கொண்டாடுகின்றார்கள்.அன்று முதல் இன்றுவரை நெடுங்காலமாக அவருக்கான தனித்துவமிக்க மரியாதையும் பக்தியையும் செலுத்தி வருகின்றார்கள். அதாஅல் தான் ஸ்ரீவில்லிபுத்தூரில் திருக்கோயிலில் ஆண்டாளுக்கென்று  ஐந்து சிற்ப விக்கரங்கள் வடிவமைத்து இன்றளவும் தினந்தோறும் பூஜைகள் செய்து வருகின்றார்கள்.ஐந்து சிற்பங்களுக்கும்  சூடிக்கொடுத்தார் , .திருமல்லிவளநாடி , புதுவையாண்டாள் , வீதிகண்டருள்வார் , வேயர் பயந்த விளக்கு என்ற திருப்பெயர்கள் தாங்கி பூஜிக்கப்படுகின்றது.அவைகள் முறையே,

1.சூடிக்கொடுத்தார் : கருவறையில் இருக்கும் திருவுருவத்திற்குச் சூடிக் கொடுத்தார் என்று பெயர். இது படாச்சானம் என வழங்கும் சுதையால் ஆகியது.
2.திருமல்லிவளநாடி:கெளதுக பேரம் என வழங்கப்படும் இவ்வெள்ளியினாலாகிய விக்ரத்திற்கு திருமல்லிவள நாடி என்று பெயர்.
3.புதுவையாண்டாள்: தாமிரத்தாலாகிய இது ஸ்நாந  அல்லது ஸ்நபனபேரர். புதுவையாண்டாள் என்று வழங்கப்படுகின்றது.
4.வீதிகண்டருள்வார் : இது உத்ஸவ காலங்களில் வெளிக் கொண்டு வரப்படும் உத்ஸவ திருப்பாவை பாடினார் என வழங்கப்படுகின்றது.
5.வேயர் பயந்த விளக்கு: அன்றாட நாள் பலி (பூசை)க்காகத் திருச்சுற்றை வலம் வரும் நித்தியோத்சவர் வேயர் பயந்த விளக்கு எனப்படுகிறார். (22)

 
கிளிக்கட்டு என்னும் ஆண்டாளின் கிளி:
இவ்வாறு சிற்பங்கள் மட்டுமல்லாமல் ஆண்டாளின் கிளி இத்திருத்தலத்திலே மிக சிறப்பு வாய்ந்த வைபவமாக தினந்தோறும் கொண்டாடப் படுகின்றது.   ஸ்ரீ வில்லிபுத்தூரில் தற்காலம் வரை பல கலைகளில் ஒன்று கிளிக்கட்டு என்பதாகும். பச்சைக் கிளியினை தூதாக அனுப்பி வைத்தாள் ஆண்டாள் நாச்சியார். அதற்காக் ஆண்டாளின் திருக்கரத்தினில் அன்றாடம் அமரும் ஒரு நல்வாய்ப்பைப் பெற்றது அந்த கிளி. அதற்காக தினந்தோறும் ஒரு கிளியினைக் கட்டி ஆண்டாள் உற்சவ விக்கிரத்திற்கு அளிக்கின்றனர் . மரவள்ளிக்கிழங்கின் இலைகளை மேலும் மேலும் சுருட்டி அதன்மேல் நாரால் சுற்றி மீண்டும் இலைகளையும் தழைகளையும் சுற்றி சிவப்பு அரளி ,வெள்ளை அரளிகளை இறக்கைக்கு கொடுத்து , உள்ளிருக்கும் நார் வெளித் தெரியாமல் கட்டப்பட்டு அதன் சிவந்த மூக்கிற்காக மாதுளம் பூவின் ஓட்டினை எடுத்து மூக்கினைப் போல் வெட்டி வைத்துக் கட்டப்படுகின்றது . கருப்பான கண்களுக்கு காக்காய்ப் பொன் என்பதனை வைத்துச் சுருட்டி நிறம் கொடுத்து இந்த கிளி செய்யப்படுகின்றது. இக்கிளி ஒவ்வொரு நாளும் காலையில் உருவாக்கப்பட்டு அன்று  மாலை ஆண்டாளின் திருக்கரத்தினை அலங்கரிக்கின்றது என்பது சிறப்பாகும். (23)
சூடிக் கொடுத்த சுடர்விழியாள்:

இறைவனுக்காக தொடுத்த மாலையை தான் சூடி அழகு பார்த்து அது எம்பெருமானின் உடலுக்கு அழகு சேர்க்குமா என்று அறிந்தபிறகே அதனை எம்பெருமான் சூட அனுப்புகின்றாள். ஒரு பெண்ணின் பக்தியும் காதாலும் ஆழமானது. தான் நேசிக்கும் ஒருவனுக்கு எல்லாவகையிலும் உறுதுணையாக இருக்கவேண்டும் என்பதும் அவன் மீதான அக்கறையும் பொறுப்பும் இருக்க வேண்டும் என்பதை இது உணர்த்துவதாகவே பார்க்க வேண்டும். இதில் குற்றம் என்பது எங்கு இருக்கின்றது?  ஆண்டாளின் பக்தியும் காதலும் அரங்கனை அல்லவா சுற்றி சுற்றி வருகின்றது. ஆண்டாள் எம்பெருமானுக்கு சூடிக் கொடுத்தது சரியென்பதால்தான் பெரியாழ்வாரின் கனவில் தோன்றி ஆண்டாள் சூடிய மாலையே தான் சூட விரும்புவது என்றுரைத்தார் பகவான். அதனால்தான் இன்றளவும் திருவில்லிப்புத்தூரிலே கோதை நாச்சியார் சூடிக் கொடுத்த மாலை , திருவேங்கடவன் திருத்தேர் திருவிழாவின் போது , பாண்டி நாட்டிலிருந்து கொண்டு சென்று ,வடவேங்கமுடையானுக்குச் சூட்டப்படுகின்றது. இத்தகைய பெருமை வாய்ந்தது ஆண்டாள் சூடிய மாலை .(24)

முடிவுரை:

இவ்வாறு மனிதராய் பிறந்து உண்மையான பக்தி ஞானத்தாலிறைவனை வணங்கி ,தான் நினைத்த அன்பை அவனுக்கே உரித்தாக்கி மகிழ்ந்தவள் ஆண்டாள். ஆண்டாளின் புகழ் நாள்தோறும் அனைவராலும் கொண்டாடப்படுகின்றது. ஒரு சாதரணப் பெண்ணின் பக்தியும் காதலுமே இறைவனோடு கலக்கும் பேற்றைத் தந்திருக்கிறது என்றால் நமக்கும் பகவான் கேட்டதை அருளுவான் என்ற நம்பிக்கையை அனைவரின் மத்தியிலும் உதிர்க்கும் ஒரு வரலாறாக ஆண்டாளின் கதை அமைக்கின்றது .தொன்றுதொட்டு திருமால் வழிப்பாட்டின் நம்பிக்கை நட்சித்திரம் ஆண்டாள் எனில் மிகையில்லை.

அடிக்குறிப்புகள்:

  1. என்.எழ்.தாத்தாச்சாரியார் - தொகுப்பு,வைணவ வினா விடை
  2. ஸ்ரீ மணவாள மாமுனிகள், உபதேச ரத்தின மாலை 24ஆம் பாசுரம்
  3. ஸ்ரீ வில்லிபுத்தூர் மகாத்மியம்
  4. (533/1926)  ப98,ஸ்ரீ வில்லிபுத்தூர்,இரா.இரகுநாதன்,தமிழ்நாடு தொல்லியல் துறை,சென்னை,2008

5.(39/1948-49)( ப:101, ஸ்ரீ வில்லிபுத்தூர், இரா.இரகுநாதன்)

   6. நாச்சியார் திருமொழி (12-3)

   7. ப73, நாச்சியாரது அழகுநடை,செல்வி.தா.கோதைநாயகி

   8. இறையனாரகப் பொருள்

   9. நாச்சியார் திருமொழி (1-4)

   10. பெரியாழ்வார்,பெரியாழ்வார் திருமொழி (3-7- 8)

   11. பெரியாழ்வார் ,பெரியாழ்வார் திருமொழி (2-8-3)

   12. நாச்சியார் திருமொழி (2-8)

  13. நாச்சியார் திருமொழி   (2-3)

  14. மேலது .,(2-2)

  15. மேலது,. (2-5)

  16. மேலது,. (2-4)

  17. மேலது,. (11-2)

  18. மேலது ,. (9-8)

  19. மேலது ,. (9-5)

  20. மேலது ,.(6-1)

  21. மேலது ,.(1-5)

  22. (ப:102-103, ஸ்ரீ வில்லிபுத்தூர், இரா.இரகுநாதன்)

  23.மேலது ,.  (ப:78)

  24. மேலது ,. (ப.98)

துணை நின்ற நூல்கள்:

1.நாச்சியார் திருமொழி ,அண்ணங்காராசாரி.1986.

2.பெரியாழ்வார் ,  பெரியாழ்வார் திருமொழி ,

3. இறையனாரகப் பொருள்

4. ஸ்ரீ மணவாள மாமுனிகள், உபதேசரத்தின மாலை

5 ஸ்ரீ வில்லிபுத்தூர் மகாத்மியம்

6. செல்வி.தா.லோகநாயகி, நாச்சியார் அழகுநடை , ஸ்ரீ ராமாநுஜா பதிப்பகம்,  குப்பனூர்  , கோயமுத்தூர், 1999 )

7 . இரா.இரகுநாதன் , ஸ்ரீ வில்லிபுத்தூர், தமிழ்நாடு தொல்லியல் துறை,சென்னை 60008

8.இணைய தகவல்கள்