ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சங்ககாலம் - சேலம் மாவட்டம் ஒரு பார்வை

முனைவர் . இரா.ரமேஷ் தொல்லியல் ஆய்வாளர்,  இந்திய தொல்லியல் துறை, சென்னை 27 Jul 2021 Read Full PDF

முனைவர் . இரா.ரமேஷ்

தொல்லியல் ஆய்வாளர், 

இந்திய தொல்லியல் துறை,

சென்னை

ஆய்வுச் சுருக்கம்:

 

சேலம் வட்டாரப் பகுதி மலை மற்றும் காடுகளை உள்ளடக்கியுள்ளதால் புதிய கற்காலத்தில் மக்கள் வேட்டையாடியும், காவிரி மற்றும் சிற்றாறுகளை கொண்டுள்ளதால் விவசாயம் செய்தும் வாழ்ந்துள்ளனர். புதிய கற்கால பண்பாட்டு மக்கள் இப்பகுதியின் மேற்குப் பகுதியில் மட்டும் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இரும்புக்காலத்தில் இப்பண்பாட்டின் வளர்ச்சி மிகவும் அதிக அளவில் காணப்பட்டதற்கு இப்பகுதியில் காணப்படும் தொல்லியல் இடங்களே சான்றுகளாகும். ஆனால் அதன் பின் சங்ககால அல்லது வரலாற்றுத் தொடக்க காலம் மற்றும் வரலாற்றுக் காலத்திற்கான சான்றுகள் போதிய அளவு இல்லாமல் குறைந்த அளவே கிடைக்கின்றன. இருப்பினும் இப்பகுதியில் சில சங்ககால/வரலாற்றுத் தொடக்க கால வாழ்விடங்கள், கல்வெட்டு, மற்றும் நாணயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. சேலம் பகுதியின் சங்ககால/வரலாற்றுத் தொடக்க கால அரசியல் நிலை மற்றும் தொல்லியல் இடங்களின் அமைப்பு பற்றி இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. 

திறவுச் சொற்கள் :

சேலம் மாவட்டம், சங்க காலம், வரலாற்றுத் தொடக்க காலம், தொல்லியல், தமிழகத் தொல்லியல் இடங்கள்.

முன்னுரை

தமிழக வரலாற்றில் சேலம் மாவட்டத்தின் பங்கு இன்றியமையாததாக காணப்படுகிறது. புதிய கற்காலம் முதல் இன்றுவரை பல்வேறு வரலாற்றுச் சான்றுகளைத் தன்னகத்தே உள்ளடக்கியுள்ளது. வரலாற்று காலத்தில் சேலம் மாவட்டத்தின் தெற்குப் பகுதி கொங்கு நாட்டின் ஒரு பகுதியாகவும் ஆத்தூரைச் சுற்றியுள்ள பகுதிகள் மிலாடு/மலைநாடு போன்ற நாட்டுப்பிரிவிலும் காணப்பட்டன. பின்பு சேலம் மாவட்டம் காலனி ஆதிக்கத்தின் போது பாராமஹால் என்ற பெயருடன் விளங்கியது. விஜயநகர் பேரரசு காலத்திலும் அதன் பின்னர் வந்த நாயக்க அரச மரபு காலத்திலும் உருவாக்கப்பட்ட கோட்டைகளின் காரணமாக பாராமஹால் என்று பெயர் பெற்றது. பாராமஹால் என்றால் 12 கோட்டைகளை உள்ளடக்கிய பகுதி என்றும், நிருவாகப் பகுதி என்றும் இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. 

சங்ககாலம், கல்வெட்டு மற்றும் நாணயங்கள்

சங்க காலத்தில் வாழ்ந்தவர்களான சேரர்கள், தகடூர் அதியமான் மற்றும் கொல்லிமலையின் ஓரி போன்றவர்கள் இப்பகுதியில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வந்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள மஞ்சவாடி கணவாய், தொப்பூர் கணவாய் மற்றும் ஆத்தூர் கணவாய் போன்ற கணவாய்கள் தமிழகக் கடற்கரைப் பகுதியையும் மைசூரையும் இணைக்கும் வணிகப் பெருவழியாக முன்னர் காலத்தில் திகழ்ந்துள்ளன. சேரர்களின் ஆட்சிக்கு உட்பட்ட குறுநில மன்னரான மழவர் பெருமகனாக (நற்றினை 52) இருந்து ஆட்சிபுரிந்த வல்வில் ஓரி போன்றோர் கொல்லிமலையை தமது ஆட்சிப்பரப்பாகக் கொண்டிருந்தனர். இக்கொல்லிமலை இன்றும் மிளகு, ஏலக்காய், சீரகம் போன்ற வாசனை திரவியங்களுக்கு பெயர் பெற்ற நிலமாக திகழ்கிறது. இவை பண்டை காலத்தில் பிற பகுதிகளுக்கு வணிகப் பொருட்களாக எடுத்துச் சென்றிருக்க வேண்டும். அவை மேற்குறிப்பிட்ட கணவாய் வழியாக செல்லும் வணிகப் பெருவழி மூலம் எடுத்துச் சென்றிருக்க வேண்டும். அதே போன்று இதன் அருகில் உள்ள மலைநாட்டில் ஆட்சி செய்த திருமுடிக்காரியும் (திருக்கோவிலூர்) தன்னுடைய ஆதிக்கத்தைச் கொல்லிமலை மற்றும் ஆத்தூர் பகுதிகளில் செலுத்தியுள்ளார். 

 

பாணர்கள்:

கி.பி. 12-13 ஆம் நூற்றாண்டுகளில் ஆத்தூர் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியை வாணகோவரையர் என்ற குறுநில மன்னர்கள் ஆட்சி செய்துவந்தனர். இவர்கள் சங்ககாலத்தில் வடதமிழ் நாட்டை ஆட்சி செய்த பாணர்களாக இருக்கலாம். பாணர்கள் என்ற குறுநில மன்னர்கள் பற்றி சங்க இலக்கியங்களில் குறிப்புகள் வருகின்றன (அகநானூறு 113, 226). பிற்கால கல்வெட்டுக்களில் இவர்கள் பாணர்கள் அல்லது வாணர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளனர். இவ்வாணர்கள் தான் பின் வாணகோவரையர் என்ற பட்டபெயருடன் மகதை மண்டலத்தை ஆட்சி செய்தனர். இவர்கள் சோழர்கள், பாண்டிய மன்னர்களின் தலைமக்கு கட்டுப்பட்டு ஆட்சி செய்தனர். மகதை மணடலத்தின் தலைநகரம் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆறகளூர் ஆகும். 

 

கட்டிகள் :

கி.பி. 10 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து கி.பி. 16 ஆம் நூற்றாண்டு வரை கட்டி முதலிகள் என்ற குறுநில மன்னர்கள் தாரமங்கலம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியை ஆட்சி செய்து வந்தனர். இவர்கள் வெள்ளாள-கவுண்டர்கள் வழி வந்தவர்கள் என சில வரலாற்று ஆய்வாளர்கள் குறித்துள்ளனர். ‘வேற்கட்டி’ என்றும் ‘குன்ற கட்டி’ என்றும் இலக்கியங்கள் விவரிக்கும் இக்கட்டிகள் இன்றும் கொங்கு நாட்டில் சில பகுதியில் காணப்படுகின்றனர். இவர்கள் தங்களை ‘பவழக்-கட்டி வன்னியர்’ என்றும் கால் ‘கட்டி-வன்னியர்’ என்றும் அழைத்துக் கொண்டனர். இவர்கள் மேற்குறித்த வெள்ளாள-கவுண்டரின் பிரிவுதான் என்று உறுதியாதலின் கட்டிகளும் கவுண்டர்களும் ஒரு மரபினரே எனக் கருதலாம். 

சங்க இலக்கியங்கள் கட்டி என்ற குறுநில மன்னர்களை குறிக்கிறது. பெரும்பூட் சென்னி என்ற சோழ மன்னன் கழுமப் போர்க்களத்தில் நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை, கணையன் என்ற எழுவரை முறியடித்தான் என அகநானூறு கூறுகிறது (அகநானூறு 44). இச்சோழர்கள் பலமுறை சேரர்களை எதிர்த்து கழுமலத்தில் போர்த்தொடுத்து வெற்றி வாகை சூடியுள்ளனர். இவர்களைப் பற்றி குறுந்தொகையில், 

‘குல்லைக் கண்ணி வடுகர் முனையது

வல்வேற் கட்டி நன்னாட் டும்பர்’

என்று புகழ்ந்து கூறுகிறது (குறுந்தொகை 11: 5-6). இங்கு ‘வல்வேற்கட்டி’ எனக் குறித்தலின் இவர்களின் சிறப்பு விளங்கும். இக்கட்டியும் வடதமிழ்நாட்டை ஆண்ட பாணன் என்ற குறுநில மன்னனும் சேர்ந்து தெற்கே சோழன் திதியன் வெளியனின் தலைநகரான உறந்தை மீது போர் தொடுத்தனர் என அகநானூறு கூறுகிறது (அகநானூறு 226). 

‘வலிமிகும் முன்பின் பாணனொடு மலிதார்த் தித்தன் வெளியன் உறந்தை நாளவைப் பாடுஇன் தெண்கிணைப் பாடுகேட்டு அஞ்சி

போரடு தானைக் கட்டி பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே’. (அகம் – 226).

மறுமுறை இக்கட்டி குறுநில மன்னர்களின் துணையுடன் சோழனை எதிர்த்து வந்தான். அதுபொழுது சோழர் படைத்தலைவன் பொறையன் என்பவன் இவர்களை எதிர்த்து வீரமரணம் அடைந்தான். இச்செய்தியைக் கேட்ட சோழ வேந்தன் தானே போர்களத்தில் புகுந்து வீரப்போர் புரிந்து கணையனை சிறைபிடித்து, கழுமலத்தை கைப்பற்றினான் (அகநானூறு 44). இக்கணையன் என்பவன் கழுமலத்தை சேர்ந்தவனாயிருத்தல் வேண்டும். கணையனும் கட்டியும் இணைந்து சோழனை எதிர்த்தலிருந்து இவ்விருவரும் நண்பர்கள் எனத் தெரிகிறது. இதன்பின் இக்கட்டிகளைப் பற்றிய குறிப்புகள் கி.பி. 7, 8 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுக்களில் தான் காணப்படுகின்றன. 

கி.பி. 7-8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த எடக்கல்லில் உள்ள நடுகல் ஒன்று ‘குன்ற கட்டி’ என்பவனை குறிக்கிறது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சாத்தனூரில் உள்ள நடுகல்லில் குமாரமங்கல கவுண்டன் என்பான் ஆநிரை மீட்டு வீரமரணம் அடைந்ததை குறிக்கிறது. இவர்கள் தொடர்ந்து வடதமிழ்நாடு மற்றும் தகடூர் பகுதியையும் ஆட்சி செய்துள்ளனர். தொடர்ந்து கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் தாரமங்கலம் பகுதியை ஆட்சி செய்த இவர்கள் கட்டிமுதலிகள் என அழைக்கப்பட்டனர். இவர்களின் முதல் தலைநகரமாக தாரமங்கலமும் இரண்டாவது தலைநகரமாக அமரகுந்தியும் திகழ்ந்துள்ளது. சங்ககிரி, திருச்செங்கோடு, இடங்கண்சாலை, பூலாம்பட்டி, ஆத்தூர், ஓமலூர் போன்ற இடங்களில் இக்கட்டி முதலிகள் விட்டுச் சென்ற வரலாற்று நினைவுச் சின்னங்கள் இன்றும் உள்ளன. 

அம்மன்கோவில்பட்டி :

சேலம் மாவட்டத்தில் உள்ள கல்வெட்டுக்களில் காலத்தால் முற்பட்ட கல்வெட்டாக கருதப்படுவது ஓமலூர் வட்டம் அம்மன்கோவில்பட்டியில் உள்ள கல்வெட்டேயாகும். இக்கல்வெட்டின் காலம் கி.பி. 4 ஆம் நூற்றாண்டு ஆகும். இக்கல்வெட்டு தமிழ் எழுத்து வளர்ச்சியின் நிலையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. அதன் பின் இம்மாவட்டத்தில் சில காலம் கல்வெட்டுத் தொடர்பான எந்தச் சான்றுகளும் காணப்படவில்லை. பின் கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த டேனிஷ் கோட்டை மதகுக் கல்வெட்டு, கே.என்.புதூர் நடுகல் கல்வெட்டு, கி.பி. 9 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பள்ளத்தாண்டனூர் நடுகல் கல்வெட்டு போன்றவையே அடுத்த சான்றுகளாக உள்ளன. அதாவது கி.பி. 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 8 ஆம் நூற்றாண்டு வரை எறக்குறைய 4 நூற்றாண்டுகள் எந்த கல்வெட்டு மற்றும் பிற சான்றுகள் இதுவரை கண்டறியப்படவில்லை. 

அம்மன்கோவில்பட்டியில் உள்ள கல்வெட்டில் பரம்பன் கோகூர் கிழாரின் மகன் வியக்கன்கோபன் குணதேவன் என்பவர் தோண்டிய சுனை பற்றி கூறுகிறது. இப்பகுதியில் காணப்படும் முதல் ஊர் கோகூர் ஆகும். கோகூர் கிழார் என குறிப்பிடப்படுவதால் இப்பகுதியில் ஊர் மற்றும் நிலக்கிழார் போன்ற அமைப்பு உருவாகிவிட்டதை அறியமுடிகிறது. 

கோனேரிப்பட்டி:

ஆத்தூர் அருகே உள்ள கோனேரிப்பட்டியில் 1987 இல் கண்டறியப்பட்ட இரண்டு ஆபரணங்களுடன் அகஸ்டஸ் மற்றும் தைபீரியஸின் கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த 35 ரோமானிய நாணயங்கள் கிடைத்தன. இப்பகுதி ரோம் நாட்டுடன் வாணிக தொடர்பு கொண்டிருந்ததை அறிய உதவுகிறது. இவ்வூர் ஆத்தூர் கணவாய்க்கு அருகில் உள்ளதால் கொங்கு மண்டலத்தில் இருந்து இக்கணவாய் வழியாக கிழக்கு கடற்கரை பகுதிக்கு வந்து அங்கிருந்து பிற நாடுகளுக்கு குறிப்பாக ரோம் நாட்டிற்கு வாணிக பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளனர் என்பதை அறியலாம். இதனை மேலும் உறுதி செய்யும் வகையில் கி.பி. 12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வணிக பெருவழிக் கல்வெட்டு ஆறகளூரில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். இக்கல்வெட்டில் மகதேசன் பெருவழி என்ற பெருவழி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆறகளூரிலிருந்து காஞ்சிபுரத்திற்கு செல்லும் பெருவழியை இக்கவெட்டு குறிப்பிடுகிறது.   

வரலாற்று தொடக்க கால வாழ்விடப் பகுதிகள்

தற்பொழுது மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் சில வரலாற்று தொடக்க கால வாழ்விடப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் வெள்ளார், கோட்டைமேடு, மேச்சேரி, சிலுவம்பாளையம் கோட்டைமேடு, காவேரிபட்டி, ஆத்தூர் போன்ற இடங்கள் மிகவும் அதிக அளவிலான பரப்பளவை கொண்டுள்ளது. இவ்விடங்களில் கண்ணாடி மணிகள், சங்கு மற்றும் கண்ணாடி வளையல் துண்டுகள், வட்டச்சில்லுகள், சுடுமண் பொம்மை மற்றும் சுடுமண் விளக்கு போன்றவை கண்டறியப்பட்டுள்ளன. இங்கு கிடைத்துள்ள கண்ணாடி மணிகள் கொடுமணல், பொருந்தல், அரிக்கமேடு, திருசோபுரம், அழகன்குளம், காரைக்காடு, செங்கமேடு மற்றும் மணிக்கொல்லை போன்ற இடங்களில் கிடைத்த மணிகளை ஒத்துள்ளது. இவ்விடங்களின் காலம் வரலாற்று தொடக்க காலம் என இங்கு கிடைத்த தரவுகளின் வாயிலாக ஏற்கனவே வறையறுக்கப்பட்டுள்ளது. வெள்ளார் எனும் இடம் தொப்பூர் கணவாயின் அருகில் தொப்பையாற்றின் இடது கரையில் அமைந்துள்ளது. தொப்பூர் கணவாய் சங்க காலம் முதல் கொங்கு மண்டலத்தையும் தகடூர் நாட்டையும் இணைக்கும் பெருவழியில் அமைந்துள்ளது. அதாவது தற்போது சேலத்திலிருந்து தருமபுரி செல்லும் நெடுஞ்சாலை தான் முன்பு பெருவழியாக இருந்திருக்க வேண்டும். இவ்வெள்ளார் தொல்லியல் இடமும் இப்பெருவழியில் தான் அமைந்துள்ளது. வெள்ளார் வரலாற்று காலத்திலும் தொடர்ந்து சிறப்புடன் விளங்கியதற்கு சான்றாக கி.பி. 13 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டு காணப்படுகிறது. இக்கல்வெட்டில் பக்கநாடான வெள்ளறை நாட்டவர் மற்றும் நகரத்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளறை நாடு என்பது தற்போது உள்ள வெள்ளாரை மையமாக கொண்டு விளங்கியிருக்க வேண்டும். பக்கநாடு எனும் ஊர் தாரமங்கலத்திற்கு அருகில் தற்பொழுதும் அதே பெயரில் குறிப்பிடப்பட்டு வருகிறது. 

வெள்ளார்:

வெள்ளார் தொல்லியல் இடத்தின் மேற்கு பகுதியில் முதுமக்கள் தாழிகள் காணப்படுகின்றன. ஈமக்காடு உள்ள பகுதியில் கருப்பு-சிவப்பு, பளபளப்பான சிவப்பு, பளபளப்பான கருப்பு பானை ஓடுகள் மற்றும் குறியீடுடன் கூடிய பானை ஓடு போன்றவை கண்டறியப்பட்டுள்ளன. வாழ்விடப்பகுதி 2.5 மீ உயரம் கொண்டதாக உள்ளது. தற்போது இப்பகுதியின் பாதி அளவு அழிக்கப்பட்டுள்ளது. இவ்வாழ்விடப்பகுதியில் வரலாற்று தொடக்க கால பானை ஓடுகள் அதிக அளவு காணப்படுகின்றன. கண்ணாடி மணி, பளிங்கு கல் மணி, சங்கு வளையல் துண்டுகள் மற்றும் சுடுமண் விளக்கு போன்றவை இங்கு கண்டறியப்பட்டுள்ளன. இங்குள்ள வாழ்விடப்பகுதியை பார்க்கும் போது இவ்வாழ்விடம் இரும்புகாலம் முதல் வரலாற்று காலம் வரை தொடர்ந்து ஒரு சிறந்த ஊராக திகழ்ந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது. ஏனெனில் அதனை நிரூபிக்கும் இரும்புக்கால ஈமச்சினங்கள், வரலாற்று தொடக்க கால மணிகள் மற்றும் பானை ஓடுகள், வரலாற்று கால கல்வெட்டு போன்ற அனைத்து சான்றுகளும் நமக்கு கிடைத்துள்ளன. 

கோட்டைமேடு:

கோட்டைமேடு எனும் ஊர் ஓமலூரிலிருந்து வடகிழக்கே 5 கி.மீ தொலைவில் நாலுகால் ஓடை எனும் சிறிய ஓடையின் இடது கரையில் அமைந்துள்ளது. இந்நாலுகால் ஓடை சேர்வராயன் மலையில் தொடங்கி கோட்டைமேடு வழியாக ஓடி ஓமலூர் அருகில் சரபங்கநதியில் இணைகிறது. சுமார் 2 மீ உயரம் கொண்ட இவ்வாழ்விடப்பகுதி 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. வாழ்விடப்பகுதியின் வடக்கு பெரும்பகுதி அழிக்கப்பட்டு தற்போது விவசாய நிலமாக மாற்றப்பட்டுள்ளது. கண்ணாடி மணிகள் மற்றும் கண்ணாடி வளையல் துண்டுகள் போன்றவை இவ்வாழ்விடப்பகுதியில் கண்டறியப்பட்டது. நீல நிறம் கொண்ட இதே போன்ற கண்ணாடி மணி பொருந்தல், கொடுமணல், அரிக்கமேடு மற்றும் மணிக்கொல்லை போன்ற இடங்களிலும் கிடைத்துள்ளது. இக்கோட்டைமேடு வாழ்விடப்பகுதியும் வெள்ளாரை போன்று பல காலம் தொடர்ந்து சிறப்புடன் திகழ்ந்துள்ளது. சேலம் பகுதியிலேயே காலத்தால் முற்பட்ட கல்வெட்டை கொண்ட அம்மன்கோவில்பட்டி எனும் ஊர் இக்கோட்டைமேட்டிற்கு அருகில் அமைந்துள்ளது. மேலும் இவ்விடத்தின் அருகில் காமலாபுரம், மலங்காடு, குப்பூர் போன்ற இரும்புக்கால ஈமச்சின்னங்களைக் கொண்ட தொல்லியல் இடங்கள் காணப்படுகின்றன. 

மேச்சேரி:

மேச்சேரி சேலத்திலிருந்து மேட்டூர் செல்லும் வழியில் சேலத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஊரின் தெற்கே கோட்டைமேடு எனும் பகுதியில் வரலாற்று கால கோட்டையின் இடிபாடுகள் காணப்படுகின்றன். இதன் அருகில் வரலாற்று தொடக்க கால வாழ்விடப்பகுதி கண்டறியப்பட்டுள்ளது. உடைந்த சுடுமண் உருவம், வட்ட சில்லுகள் போன்றவை இவ்விடத்திலிருந்து சேகரிகப்பட்டன. இவ்விடமும் வெள்ளாரை போன்று கொங்கு மண்டலத்திலிருந்து தகடூர் நாட்டிற்கு செல்லும் பெருவழியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தற்போதும் இவ்வூரில் பத்ரகாளி அம்மன் கோவில் எனும் சிறப்பு வாய்ந்த கோவில் வழிபாட்டிலிருந்து வருகிறது. எனவே மேச்சேரி கோட்டைமேடும் வரலாற்று தொடக்க காலம் முதல் இன்று வரை தொடர்ந்து சிறப்புடன் திகழ்ந்து வருகிறது.

ஓமலூர்:

ஓமலூர் சரபங்க நதிக்கரையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க இடம் ஆகும். கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் கட்டிமுதலிகளால் கட்டப்பட்ட கோட்டை மேட்டூர் முத்துநாயக்கன்பட்டி, தாரமங்கலம் செல்லும் பெரும் பாதையில் அமைந்துள்ளது. இவ்வூர் அமரூர், அமலூர், ஆரோமலூர், வொம்பி நெல்லூர், வாம்லேர், ஓமலூர் என பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டு வந்துள்ளது. சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் வல்வேற்க் கட்டி என்ற இன மரபினர் இப்பகுதியில் தான் குறுநில மன்னர்களாக ஆண்டனர். இவர்கள் கரிகால் சோழனுக்கும் பின் அதியமான் மரபினருக்கும் கீழிருந்து அரசாண்டனர் என அறியலாம். இவ் வல்வேற் கட்டிகளே பின்னர் கட்டிமுதலிகள் என அழைக்கப்பட்டனர் எனக் கருதலாம். ஓமலூர் கோட்டை அகழியின் அடிப்பகுதியில் இரும்புக்காலம் மற்றும் சங்ககால/வரலாற்று தொடக்க காலத்தைச் சார்ந்த கருப்பு-சிவப்பு பானை ஓடுகள் நிறைய காணக்கிடைப்பதால் இவ்விடம் சங்ககால வாழ்விடமாக திகழ்ந்துள்ளதை அறியலாம்.

அகழியை வெட்டி அம்மண்ணைக் கொண்டு கோட்டை சுவர்களையும், கொத்தளங்களையும் அமைத்ததால் இன்றும் கோட்டை மேடுகளில் அக்கால பானை ஓடுகளும், தொன்மையான சின்னங்களும் காணக் கிடைக்கின்றன. ஓமலூரில் முதுமக்கள் தாழிகளும் கண்டறியப்பட்டுள்ளன. கோட்டை அமைந்துள்ள சரபங்க நதிக்கரையில் நடுகல் ஒன்று காணப்படுகிறது. இவ்வூர் தொன்று தொட்டு அமர்களமாக இருந்ததற்கு காரணமாக அமரூர் (அமர்-ஊர்) என காரணப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டு வந்துள்ளது எனவும் அறியலாம். இப்பகுதி அதியமான், சோழர், போசாளர், கொங்குச் சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர், மைசூர் மன்னர், கொங்கு மன்னர்கள் கட்டிமுதலிகள் மற்றும் ஆங்கிலேயர் இன்ன பிறரால் தொடர்ந்து கோலோச்சிய திருநகராகவும், போர்க்களத்தின் மையமாகவும் இப்பகுதி இருந்து வந்திருக்கிறது என்பதை வரலாற்றுச் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன.   

 

சிலுவம்பாளையம் கோட்டைமேடு: 

சிலுவம்பாளயம் என்ற கிராமம் எடப்பாடிக்கு மேற்கே 13 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அதாவது தற்பொதைய தமிழக முதல்வர் திரு. எடப்பாடி கே.பழனிசாமியின் சொந்த ஊர். கோட்டைமேடு என்ற இடம் காவேரி ஆற்றின் கரையில் உள்ளது. தரைமட்டத்திலிருந்து 2 மீட்டர் உயரத்தை உள்ளடக்கிய வரலாற்றுத் தொடக்ககால வாழ்விடப்பகுதி கிராமத்தின் வடக்குப் பகுதியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் காணப்படுகிறது. இவ்வாழ்விடப்பகுதி உள்ளூர் மக்களால் கோட்டைமேடு என்று அழைக்கப்படுகிறது. இங்கு கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்ட ஓடுகள், சிவப்பு மட்பாண்ட ஓடுகள் மற்றும் கருப்பு மட்பாண்ட ஓடுகள் பெருமளவில் காணப்படுகின்றன. இங்கு சங்ககால செங்கற்கள் பெருமளவில் காணப்படுகின்றன. அதன் அளவு 42x21x7 செ.மீ ஆகும். இதே அளவுள்ள செங்கற்கள் கீழடி, காவேரிபூம்பட்டினம் மற்றும் பல சங்ககால வாழ்விடப்பகுதிகளில் கிடைத்துள்ளன.

காவேரிபட்டி:

இந்த கிராமம் எடப்பாடிக்கு மேற்கே 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. வரலாற்று தொடக்ககால வாழ்விடப் பகுதியானது சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் காவிரியாற்றின் இடது கரையில் காணப்படுகிறது. சங்ககால செங்கற்கள் பெருமளவில் உடைந்த நிலையில் காணப்படுகின்றன.  இங்கு கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்ட ஓடுகள், சிவப்பு மட்பாண்ட ஓடுகள் மற்றும் கருப்பு மட்பாண்ட ஓடுகள் பெருமளவில் காணப்படுகின்றன. இரண்டு பளபளப்பான கற்கருவிகள் இவ்வாழ்விடப் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. பாழடைந்த கோயில், தூண்கள் மற்றும் சிற்பங்களும் காணப்படுகின்றன.

சேலம் பகுதியில் சங்ககால/வரலாற்று தொடக்க காலத்தின் நிலை:

நிலவியல் அமைப்பில் பல அறிய வளங்களைக் கொண்டுள்ள இப்பகுதியைப் பற்றி சங்க இலக்கியங்கள் குறைந்த அளவில் குறிக்கப்பிடுவது வியப்பாக உள்ளது. சங்ககால மன்னர்களான சோழ, பாண்டிய மற்றும் சேரர்களின் ஆதிக்கமும் குறைந்த அளவே காணப்படுகிறது. ஆனால் குறுநில மன்னர்களின் ஆதிக்கம் மட்டும் அதிக அளவில் காணப்பட்டுள்ளது. இதன்மூலம் இப்பகுதியில் இருந்த குறுநில மன்னர்கள் வலிமை வாய்ந்தவர்களாக இருந்தனர் என அறியமுடிகிறது.

முடிவுரை:

தற்போது உள்ள சேலம் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் புதிய கற்காலம் முதல் இரும்புக்கால தொல்லியல் இடங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. சங்ககால/வரலாற்று தொடக்க காலத்தை சார்ந்த தொல்லியல் இடங்கள் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன. ஆனால் சேலத்தின் கிழக்கு மற்றும் தெற்கு அதாவது ஆத்தூர் மற்றும் தாரமங்கலம் அதனை ஒட்டியுள்ள பகுதியில் வரலாற்று கால சான்றுகளே அதிக அளவில் கிடைக்கின்றன. இப்பகுதியில் புதிய கற்காலம் மற்றும் இரும்புக்கால தொல்லியல் சான்றுகள் மிகக்குறைவாகவே கண்டறியப்பட்டுள்ளன. இருப்பினும் எதிர் காலங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் மூலம் மேலும் பல சான்றுகளை வெளிக்கொணர இயலும்.