ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

உடுமலை பீரங்கி  வார இதழ் - ஓர் ஆய்வு

முனைவர் ப. கற்பகவள்ளி உதவிப்பேராசிரியர் வரலாற்றுத்துறை ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரி உடுமலைப்பேட்டை 27 Jul 2021 Read Full PDF

முனைவர் ப. கற்பகவள்ளி உதவிப்பேராசிரியர் வரலாற்றுத்துறை

ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரி உடுமலைப்பேட்டை- 642128 

 

ஆய்வுச்சுருக்கம்

இந்தியப் பத்திரிகை உலகில்  1948 க்கு முன்பு  மிகவும் குறைந்த அளவிலான  இதழ்களும் பத்திரிகைளும் வெளிவந்துகொண்டிருந்தன. அப்போதைய சூழலில்  வெளிவந்த பத்திரிகைகளும், வார மாத இதழ்களும் பெரும் நகரப் பகுதிகளில் மட்டுமே அச்சிடப்பட்டு  பொதுமக்களுக்குக் கிடைக்கக் கூடியதாக இருந்தது.  ஆனால்  உடுமலைப்பேட்டை போன்ற  சிறுகிராமப் பகுதியிலிருந்து வெளிவந்த ஒரே இதழ் உடுமலை பீரங்கி மட்டுமே. இவ்விதழ் 1948- 1949 ஆகிய இரண்டு ஆண்டுகள் மட்டுமே வெளிவந்தது. ஆனால் , உடுமலை பீரங்கி என்ற பெயருக்கேற்ப இந்த இதழின் தாக்கம் பீரங்கியைப் போன்று அதிகமாக இருந்த காரணத்தினால் இரண்டே ஆண்டுகளில் இவ்விதழ் தடை செய்யப்பட்டுவிட்டது.  இரண்டு ஆண்டுகள் வெளிவந்த வார இதழ்களிலிருந்து ஒரு இதழை  மட்டும்  எடுத்துக்கொண்டு அச்செய்திகள் இக்கால கட்டத்தோடு எவ்வாறு ஒத்துப்போகிறது? கிட்டத்தட்ட  எழுபது ஆண்டுகளுக்கு முந்தைய இதழில் எவ்வாறு முற்போக்குச் சிந்தனைகள் மக்களிடையே விதைப்பதற்கு இவ் விதழ் காரணமாக இருந்தது என்பது குறித்த தகவல்களை இவ் ஆய்வுக் கட்டுரையில் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.  உடுமலை சிறு கிராமமாக இருந்தாலும் இவ்விதழுக்குத் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் கட்டுரைகளும்,  சிறுகதைகளும், கவிதைகளும் பல பெரிய எழுத்து ஆளுமைகள் எழுதியுள்ளனர். உடுமலையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட உடுமலை பீரங்கி இதழ்  சென்னையில் அச்சிடப்பட்டு அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றது. காலவோட்டத்தில்  எழுபது ஆண்டுகளுக்கு முந்தைய செய்திகளாக இருந்தாலும் அதில் சொல்லப்பட்ட செய்திகள் அனைத்தும்  இன்று வரையிலும் சமூக அரசியல் தளத்தில் பேசப்பட்டு வரக்கூடிய செய்திகளாகவே இருக்கின்றன என்பதுதான் இவ்விதழின் சிறப்பம்சமாகும். இவ்விதழை ஆய்வுக்குரிய கருவாக எடுத்துக்கொள்ளத் தூண்டியதும் இவ்விதழின் எழுத்தோட்டமும், எண்ண வோட்டமும்தான் என்றால் மிகையாகாது. 

திறவுச் சொற்கள்:  உடுமலை பீரங்கி, வார இதழ், முற்போக்குச்சிந்தனை

 

முன்னுரை

தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் பகுதிகளில்  கொங்கு நாட்டிற்கு ஒரு தனிப்பெருமை உண்டு என்றால் அது மிகையாகாது. குறிப்பாக  தென் கொங்கு நாடு பெருங்கற்காலம்  முதல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் வரை ஒரு நீண்ட நெடிய வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள பகுதியாகும்.  இந்தியா  1947 ஆகஸ்ட் 15 ல் விடுதலை அடைந்தபின்  1948  மற்றும் 1949 என இரண்டு ஆண்டுகள்  தமிழ்நாட்டில் பல புரட்சிகரமான  கருத்துக்களால் ஒரு தாக்கத்தை  ஏற்படுத்திய “உடுமலை பீரங்கி” எனனும் வார இதழைப் பற்றித்தான்  இக் கட்டுரையில்  காணப்போகிறோம்.

உடுமலை எஸ்.ஆர். ரங்கநாதன்  என்பவரால்  எழுதித் தொகுத்து  வெளியிடப்பெற்ற  ஒரு வார இதழ்தான் உடுமலை பீரங்கி.  வெடி -1, குண்டு -18,  என்று வெளிவந்து அக்கால கட்டத்திலேயே முதல் பக்கத்தில் ஆங்கிலத்திலும்  UDUMALAI BEERANGI என்று இடம் பெற்றுள்ளது.   அக்கால அரசியல் பொருத்தப்பாட்டுகளை  கருத்துப் படங்களாகவே விளக்கும் வகையில்  கார்ட்டூன் படங்கள் எனும் கேலிச்சித்திரங்கள் முதல் பக்கத்திலேயே அப்போதைய அன்றைய அரசியல் நிகழ்வை கண்ணாடியாகப் பதிவு செய்துள்ளது. இரண்டு ஆண்டுகள் வெளிவந்த இந்த இதழிலிருந்து 05.02.1949 வெடி 1, குண்டு -18 என்ற ஓர் இதழை மட்டும்  என் ஆய்வுக் கட்டுரைக்கு எடுத்துக்கொண்டுள்ளேன். இது அக்கால கட்டத்தில் ஒரு அணாவிற்கு விற்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இதழில் தலைப்பிற்கு மேல் ‘எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும்”என்ற முழக்கத்தைக் கொண்டு வெளிவந்துள்ளது.  

புரட்சிகரமான இதழ்

இந்த இதழிற்கு தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் முக்கியமான பல ஆளுமைகளிடமிருந்தும் சமூகம் சார்ந்தும் அரசியல் சார்ந்தும் கட்டுரைகள் வந்துள்ளன. மிக முக்கியமாகக் கருதப்படுவது  பாவேந்தர் பாரதிதாசன் மற்றும்  தந்தை பெரியார்  ஆகியோரது கட்டுரைகளும் இதில் இடம் பெற்றுள்ளதுதான்.  எல்லா இதழ்களும் எட்டு பக்கங்களை   உள்ளடக்கிய  இதழ்களாக வெளி வந்துள்ளன. இத்தகைய புரட்சிகரமான கருத்துக்களைத் தாங்கிய ஓர் இதழ் 1949 ஆம் ஆண்டிலேயே  உடுமலையிலிருந்து வெளி வந்திருக்கிறது என்பது உடுமலை வரலாற்றில்  ஓர் முக்கியமான ஒரு பதிவு ஆகும். 1948 மற்றும் 1949 ம் ஆ;ணடிற்குப் பின்னர் எக்காரணத்தினாலோ  இந்த இதழ் தடை செய்யப்பட்டுவிட்டது.  எதனால் தடை செய்யப்பட்ட என்பதற்கான தெளிவான சான்றாதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை.  ஆனால் இந்த ஒரு இதழில்  வெளிவந்துள்ள செய்திகளே போதும் எதனால் இவை தடை செய்யப்பட்டிருக்கலாம்  என்பதை மறைமுகமாக உணர்த்துகின்றது. 

முதலில் 05.02.1949 வெடி -1 குண்டு -18 இந்த இதழின் முகப்பில்  வித்தியாசமான  முறையில் கேலிச்சித்திரத்தை வெளியிட்டுள்ளனர். விடுதலைக்குப் பின்னர் எத்தயை சூழல் நிலவியது, மக்களின் தொழில்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தது நேர்மையாக இருந்தவர்கள் , எவ்வாறு  பாதிக்கப்பட்டனர் என்பன போன்ற நல்ல தகவல்களுடன் வெளிவந்துள்ளது

 

 

 

 

 

 

திரைப்பட நடிகை குறித்த திறனாய்வு

இரண்டாவது பக்கத்தில் ‘நம்பினேன் உன்னை நடிகை ரம்பா” எனற் தலைப்பில் நடிகைகளுடைய மேக்கப் எப்படி இருந்தது., எந்தெந்த பொருள்களைப் பயன்படுத்தினர், அவர்களுக்கு எந்த அளவில் மரியாதை கிடைத்தது., பத்திரிகைகள் அவர்களை எவ்வாறு நடத்தின என்றும்  சில பத்திரிகைகள் நினைத்தால் நடிகைகளை முன்னுக்குக் கொண்டு சென்று அவர்களை எப்படி உச்ச நட்சத்திரமாக மாற்ற முடியம் என்றும், இல்லையெனில்  அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல்  கூட செய்ய முடியும் என்பதை  இக்கட்டுரை விரிவாகவும் தெளிவாகவும் விளக்குகிறது.  மேலும:. அதே பக்கத்தில் ‘சமுதாய பொதுமக்கள் சிநத்திதுப்பார்ப்பார்களா?  ஏன்ற தலைப்பில்  ஜெ.ராமகிருஷ்ணன் என்பவர்  எழுதிய கட்டுரையில் தற்போதைய சூழலைமுன்பே கணித்து கட்டுரை எழுதியது போல் இருந்தது.  இக்கட்டுரையில் எந்த வரிகளை தவிர்ப்பது, எந்த சொற்றொடர்களை  எடுத்துக்கொள்வது  என்றே தெரியவில்லை. 

இதில்  பிரிட்டிஷாரிடமிருந்து  விடுதலை பெற்ற நாம் இன்றும் ‘ வடநாட்டு  கொள்ளை லாபமடிக்கும்  முதலாளிகளிடமிருந்தும், சமூகத்தை பாழ்படுத்தி வைத்திருக்கும் வைதீகப் பித்தமும், போலி பக்தியும் கொண்ட சுயநலவாதிகளின் ஆதிக்கத்திலிருந்து  இன்றும் விடுதலை அடையவில்லை” என்ற இக்கட்டுரை தொடங்குகின்றது. இது இப்போதைய சூழ்நிலைக்கு பொருந்துவதாகவும் உள்ளது.  மேலும், “ பஞ்சத்தினால்  பாதிக்கப்பட்டு அவதுpயுற்றுத் தவிக்கும்போது, கடவுளின் பெயரால்  நடத்தப்படும் கும்பாபிசேகங்களுக்கும், உற்சவங்களுக்கும் பொதுமக்கள் பணத்தை விரயம் செய்வது, எவ்வளவு மதியீனம்” என்றும் இடம்பெற்றுள்ளது. ஜெ.ராமகிருஷ்ணனின்  வரிகளை அப்படியே  பகிர்ந்துகொள்ள விழைகின்றேன்.

 

‘உலகத்தில் மானிடர் யாவரும் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை, இம் மூன்றையும்  நீக்கி உண்மை பக்தியுடன் கடவுளை  பூஜிப்பவனே  மோட்சம் அடைவான். ஆகையால் பொதுமக்கள்,  மோச்ஷம் அடைவதற்கு  ஆண்டவனை அனுதினமும் பூசை செய்ய வேண்டும்” என்று ஊராருக்கு உபதேசம் செய்யும் மடாதிபதிகள், மறைவில் பெண்களுடன்  லீலைகள்  புரிந்து கொண்டும், பொதுமக்கள் பணத்தை வீண் விரயம் செய்தும், அட்டுழியங்கள் புரிந்தும் வருகிறார்கள். பொதுமக்கள்  இவர்களை கடவுளின் மறு அவதாரம் என்றும் காலடிகளில் விழுந்து வணங்குகின்றார்கள். இந்த நிலை மாற வேண்டாமா? ஏன்ற கேள்வி கேட்கிறார். இது தற்போது  நடப்பதை முன்பே கணித்துக்கூறியது போல் உள்ளது.  பாடசாலைகள் ஏற்படுத்த பண உதவி செய்ய மறுப்பவர்கள் கோவிலைப் புதுப்பிக்கும்  பணிக்கும், கடவுளின் வாகனத்;தைப் புணரமைக்கவும்    தாரளமாக செலவு செய்கின்றனர் என்று சமூகத்தைச் சாடுகின்றார்.   மிக முக்கியமாக  இந்த இதழின்  மூன்றாவது பக்கத்தில்,’ நபிகள் பிற்நத தின விழா” என்று குறிப்புச் செய்தியை கட்டம் போட்டு பதிவிட்டுள்ளனர். நபிகள் நாயகம் பிறந்த தினத்தை அப்போதைய நகரமன்றத் தலைவராக இருந்த தோழர் எம்.எஸ்.கனகராஜன் தலைமையில் பொள்ளாச்சி ரோடு, ரஹ்மானியா ரைஸ்மில் மைதானத்தில் மாலை ஏழு மணிக்கு  கொண்டாடப்பட்டது. இதில் நபிகளின் வரலாறு, அவருடைய கொள்கைகள் பற்றியும் சொற்பொழிவாற்றினார்கள் என்றும் இடம் பெற்றுள்ளது.  இதில் குறிப்பாக  நாம் உற்று நோக்க வேண்டியது இந்து மதத்தைச் சார்ந்த நகர சபைத் தலைவர் , நபிகள் பிறந்த தினம் கொண்டாடுவதும், ஒரு நகரசபைத் தலைவரை , பத்திரிகைகள்  தோழர் என்று 1949 ஆம் ஆண்டிலேயே அழைத்துள்ளது மிகவும் புரட்சி கரமானதாகும்.

 

இதே பக்கத்தில் மணி மருதன் என்பவர் எழுதிய மந்திரிகளும் மக்களும் என்ற கவிதையும்  இடம் பெற்றுள்ளது. இதில் மந்திரிகளின் வாழ்க்கை முறையும் அவர்களின் வசதிகளும், பட்டியலிடப்படுகின்றது.  பாமர மக்களின் நிலையும் மிகத்தெளிவாக ஒப்பிட்டுப் பதிவு செய்துள்ளார் மணி மருதன். 

உலக நடப்போடு உண்ணாவிரதம்

“உண்ணாவிரதம்” என்ற தலைப்பில் ஒரு சிறிய கதையுடன் கூடிய ஒரு நகைச்சுவைக் கலந்த ஒரு உரையாடல்  இடம் பெற்றுள்ளது.  ஒரு வக்கீல்  தன் கட்சிக்காரர்களுக்கு கோர்ட்டில் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் “பே, பே” என்று பதில் சொல்லும்படி கூற அவர் புத்தி சுவாதீனம் இல்லாதவர் என்று நிரூபித்துத் தன் கட்சிக்காரரை வெளியே கொண்டு வருகிறரர். நீதிமன்றத்தை விட்டு வெளியே வந் அவரிடம் தன் ஊதியத்தை வக்கீல் கேட்டவுடன் , கட்சிக்காரர் சற்று உரத்த குரலில் “பே, பே”என இரண்டு கையை விரிக்கிறார். வக்கீல் ஊதியம் கேட்டு  விவாதிக்கும்போது உனக்கும் “பே, பே”  உங்கப்பனுக்கும் பே, பே, என்று சொல்லி திரும்பிப்பார்க்காமல்  சென்றுவிட்டார். இந்தப் பழமொழி  தற்போது கூட இன்றைய இளைஞர்களிடம்  பரவலாக உள்ளது.  ஆனால் இப்பழமொழிக்கு முன்னர் இத்தகைய நகைச்சுவை கதை இருக்கும் என்பதை இக்கட்டுரை வெளிப்படுத்தி உள்ளது.

இதே இதழில்  ‘நாட்டுப்பற்று” என்னும் தலைப்பில் சி.எஸ்.எம்.ஹபீப்  என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் , சாதாரண பாமரனிடம் உன் நாட்டுப்பற்று எங்கப்பா? என்று கேட்டால் ‘நட்டு வைத்த கத்திரிக்காய் செடிகள் அத்தனையும் கருகிவிட்டது. கம்புக்கொல்லையில்  பக்கத்து ஊர் வம்புக்கார மாடுகள் வந்து மேய்ந்துவிட்டது என்று கூறுவான் அவ்வளவதான் அவனுக்குத் தெரியும். அது அவனுடைய குற்றமில்லை.  அவனுக்குக் கல்வி அறிவு தரவேண்டியது யாருடைய கடமை, தமிழராட்சி தலைத்தோங்க வேண்டும். தன்னிகரற்று தமிழ் கல்வி பரவ வேண்டும் என்ற  கொள்கை ஒவ்வொரு தமிழரது மனதிலும் உதிக்க வேண்டும்.  1949 ஆம் ஆண்டு  வெளி வந்துள்ள ஒர் வார இதழிலேயே இவ் வாசகங்கள் இருப்பது  கிட்டத்தட்ட 72 ஆண்டுகளுக்குப் பின்னர்  தமிழ் தெரியாத தமிழர்கள் எண்ணிக்கையில்  அதிகமாக வருவார்கள் என்று முன்னமே அறிந்து கூறியுள்ளது போல் உள்ளது. 

‘மறைந்த மாவீரர்  சிந்திய ரத்தம்” எனும் தலைப்பில்  நாகை இரா. மணவாளன் என்பவர் எழுதிய கட்டுரையில் மதம் என்ற ஒன்று இல்லை. சத்தியமும் தர்மமுமே உண்மையான மதம் என்றார்.  உத்தமர் காந்தி  உண்மையைத் தவிர  உயர்ந்த மதம் வேறு ஒன்று உண்டா”? என்று கேள்வி எழுப்பியவரை மதத்தின் காரணமாகவே கொன்றுவிட்டனர் என்று தன் மனக்கொந்தளிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் நம் நாட்டில் 200 ஆண்டுகளாக அந்நிய மதங்களும், அரசுகளும் இருந்ததை அகற்ற எத்தணித்தோம். நினைத்த மாத்திரத்திலேயே போர் போர் நடந்தது என்று இதற்கு யார ;குற்றவாளி? மதவாதியா? புரோகிதரா? வைதீகர்களா? சுயநலவாத அரசியல்வாதிகளா? இவற்றால்  நாம் அடைந்த பயன் என்ன? நம் அறிவும் ஆண்மையும் எதற்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம்? என்ற ஆதங்கத்தையும் அப்போதே வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த ஆதங்கம் இன்றைய சூழலுக்கு மிகப்பொருத்தமாய் உள்ளது என்னை வியப்பிற்குக் குள்ளாக்கியது.

அடுத்த கட்டுரையாக  ‘அங்கும் இங்கும்” என்ற தலைப்பில்  உடுமலை எஸ். ரசாக் என்பவர் எழுதிய கட்டுரை ஆகும். இத்தலைப்பில்  அங்கு என்று அமெரிக்காவையும் இங்கு என்ற தமிழ்நாட்டையும் மிக ஆழ்ந்த ஒப்பீட்டுக்குள்ளாக்கி  மிக அரிய கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். ஒப்பீட்டை நோக்கியே பல கருத்துக்களில்  இன்றும் என்றும்  பொருத்தமாகத் தோன்றக்கூடிய சில கருத்துக்களை மட்டும் பகிர்ந்து கொள்கின்றேன்.  72 ஆண்டுகளுக்கு முன்னரே  அமெரிக்காவைப் பற்றியும், அங்கு நிலவும் பழக்கவழக்கங்கள்,  சட்டங்கள்  ஆகியவை பற்றியும் சிறு கிராமப்புறமான உடுமலையைச் சார்ந்த ரசாக் அறிந்திருந்தது மிகுந்த வியப்பிற் குள்ளாக்கியது.

1. அமெரிக்காவில்  அமேசான் நதியில் தன் உடல் அழுக்கைப் போக்க குளிக்கிறான் . 

இங்கு காவிரியால் தன் பாவத்தைப் போக்கக் குளிக்கிறான்.  

2. அங்கு விமானம் மூலம் உலகம் சுற்றும்போது இங்கு அரச மரத்தையும் கருங்கலையும் சுற்றுகிறார்கள். 

3. அங்கு பகுத்தறிவு வளரும் வகையில் பாடத்திட்டங்கள் உள்ளன, இங்கு புராணங்களே  பெரும்பாலும் பள்ளிப்பாடங்களாக உள்ளன.

4. அங்கு சந்திரமண்டலத்தில் போய் சோதனை நடத்துகிறார்கள். ஆனால் இங்கே சந்திரனை சாமியாகப் பாவித்து வழிபட்டு வருகிறார்கள்.

5. அங்கு விதவைக்கு மறுமணம் உண்டு, ஆனால் இங்கு விதவைக்கு ரணம் நிச்சயம் உண்டு.

6. அங்கு மழை பெய்வில்லையென்றால் செயற்கை மழையைப் பெய்யச் செய்கிறார்கள். ஆனால் இங்கு வருண பகவானுக்கு பூசை செய்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். தமிழ்நாட்டு மக்கள் எத்தகைய மூடநம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத:து வந்துள்ளனர் என்பதை இந்த இரண்டு வரிகள் தௌ;ளத் தெளிவாக விளக்குகிறது. 

7. மிக முக்கியமாக அங்கே தாய்மொழிக்கு மதிப்பு உண்டு, ஆனால் இங்கே  லம்பாடி மொழிக்கு பெருமதிப்பு உண்டு என்று பழமையான தமிழ் மொழியின் மதிப்பை ஏற்றுக்கொள்ள மறுக்கும் வடமாநிலத்தவரின்  எண்ண வெளிப்பாட்டை பிரதிபலித்தார். 

தற்போதைய கீழடி ஆய்வு  தமிழின் தொன்மையை  உலகிற்கு  பறைசாற்றினாலும் அதை ஏற்க மறுத்து சமஸ்கிருதத்தை  முன்னெடுப்பவர் களாகத்தான் வடமாநிலத்தவர் உள்ளனர்.

சாதி  பற்றிய முற்போக்குப் பார்வையில் ஒரு சிறுகதை 

இதில் கடைசிக் கட்டுரையாக ஓர் காதல் சிறுகதை தா. மதுரதாசன் எழுதிய, ‘ நான் விரும்பிய நங்கை எனும் தலைப்பில்  அது சாதிவெறியும், ஆணவக்கொலைகளும் ஆக்கிரமித்து இருந்தது என்பதை  பறைசாற்றுவதாக இருக்கிறது.  காதல் ரசம் சொட்டச் சொட்ட தொடங்கிய சிறுகதை வருணனையில்  “கருகிய கூந்தல் அலைய மயக்கும் கண்கள் கீழ் நோக்க இடையில் மண்குடம் இருக்க,  அசைந்தாடும்  அன்னம் போல் வந்து கொண்டிருந்தாள் என்தேவி “ என்று செல்கிறது. 

‘எங்களைத் துன்பத்தில் ஆழ்த்தியது சாதி என்னும்  சாத்திரமும்,  துன்பத்தில் ஆழ்த்தியது. ஏழை என்ற பொருளாதார பேதம் என்றனர். எப்போதும் போல்   தேவியைக் காணச் சென்றேன். கதவு மூடப்பட்டு இருந்தது.  நிசப்தம் நிலவியது. திகைத்தேன், கற்சிலை போல் நின்றேன்,  அன்பெனும் திரையில், காதல் எனும்  ஓவியம் தீட்டினேன். அது சமூகமென்னும் கத்தியால் சாதி வெறி என்று கூறிய முனையால் கிழிக்கப்பட்டது என்று  நான் விரும்பிய நங்கை என்ற சிறுகதையை முடிக்கிறார்.

தற்போதைய காலகட்டத்தில்  இருக்கக்கூடிய சாதி வெறி,  ஆணவக்கொலை போன்றவற்றிற்கு அப்போதே அடித்தளம் இருந்துள்ளது.  அதை உடுமலை பீரங்கி போன்ற  இதழ்களும் பதிவு செய்துள்ளது என்னை வியப்பில் ஆழ்த்தியது.  நூன் ஆய்வுக்கட்டுரைக்கு எடுத்துக்கொண்டு ஓர் இதழிலேயே  இத்தனை புரட்சிகரமான கருத்துகளும் தமிழ்நாட்டின், இந்தியாவின் தற்போதைய சூழ்நிலையையும்  72 ஆண்டுகளுக்கு முன்பே தௌ;ளத்தெளிவாக எடுத்துரைத்த  ஓர் காலக்கண்ணாடியாகத்தான் உடுமலை பீரங்கி தோன்றுகின்றது. 

இதழின் கடைசிப் பக்கத்தில் பிவியார் என்பவரின் ‘லட்ச ரூபாய் நட்சத்திரம்” என்ற தலைப்பில் அப்போதைய புகழ் பெற்ற கே.பி. சுந்தராம்பாள் அவர்களின் திரை உலக அனுபவங்களைத் தொடர்கதையாக எழுதி உள்ளார். அன்றைய கால கட்டத்தில்  இந்திய அளவில் ஒரு லட்சம் ரூபாயை ஊதியமாகப் பெற்ற முதல் தமிழ் பெண் நடிகை என்ற பெருமைக்குரியவர் இவரே. 

இவ் இதழில்  சிறு சிறு விளம்பரத் துணுக்குகளும்  இடம் பெற்றுள்ளன.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்

ஒரு பானை சோற்றுக்கு  ஒரு சோறு பதம் என்பது போல் இரண்டு ஆண்டுகள் வெளிவந்த இந்த இதழுக்கு இது ஓரு இதழே உதாரணம் என்றும், மேலும் எத்தகைய பிரச்சினைகளால் இந்த இதழ் வெளிவருவது தடை பெற்றிருக்கக்கூடும் எனவும். நம்மால் யூகிக்க முடிகிறது. எனவே, இத்தகைய சீர்திருத்தம் மிக்க புரட்சிக்கருத்துக்கள்  உடுமலையிலிருந்து  தமிழ்நாடெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது மிகுந்த பெருமையை அளிக்கிறது.  இந்த இதழுக்குக் கட்டுரைகளும், கவிதைகளும் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்துள்ளது. உதாரணமாக பாபநாசலம், தூத்துக்குடி, செங்கற்பட்டு, ஆத்தூர், சேலம், சிங்காநல்லூர், கோவில்பட்டி, டவுன் நீலகிரி, சென்னை, புதுவை என அனைத்துப் பகுதிகளியிருந்தும் வந்துள்ளது.  ஒரு சிற்றூரில் இருந்து வெளிவந்த வார இதழுக்கு அனைத்து இடங்களிலும் வரவேற்பு இருந்துள்ளது. மேலும் உடுமலையைத் தலைமையிடமாகக் கொண்டிருந்தாலும் இந்த இதழ் சென்னையில்தான் அச்சிடப்பட்டுள்ளது என்பது மிகுந்த வியப்பையும், பிரமிப்பையும் ஏற்படுத்துகின்றது.

அப்போதைய கால கட்டத்தில் கூட பத்திரிகைகள் எழுதத் தயங்குகிற பல தகவல்களை 1949 ஆம் ஆண்டிலேயே வெளியிட்டு  ஒரு எழுத்துப்புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. இத்தகைய இதழ் குறித்து ஓர் ஆய்வுக் கட்டுரை எழுத வாய்ப்புக்கிடைத்ததும்  அதன் மூலம் வெளிவந்துள்ள தகவல்கள் அனைத்துமே  72 ஆண்டுகளுக்குப் பின்னரும். இன்றைய காலகட்டத்திற்கும் அனைத்தும் பொருந்துவதாக அமைந்துள்ளதே உடுமலையின் பீரங்கியின் சிறப்பம்சமாகும்.

 

முதன்மைச் சான்று

‘உடுமலை பீரங்கி” வார இதழ் மெய்மம் நகல் (ஒரிஜினல் காபி)

துணை ஆதாரங்கள்

‘திராவிடம் வளர்த்த தமிழ்” கட்டுரை ஆசிரியர், தனுஷ். தலைப்பு : உடுமலை பீரங்கி, மணி அச்சகம், சென்னை. 2019, ISBN : 978-93-89182-03-3

நேர்காணல்

1. திரு. தி.குமாரராஜா, தலைவர், உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம்

2. திரு. இல. அ.அருட்செல்வன்,  பொருளாளர், 

உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம்

3. திரு. எஸ்.ஆர். மதுசூதனன்,  உடுமலை பீரங்கி வார இதழின் ஆசிரியரின் சகோதரர்

4. திரு.வி.கே.சிவக்குமார், செயலாளர், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம்.

5. திரு. முனியப்பன், ரெட்டிபாளையம், உடுமலைப்பேட்டை.