ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

திருக்குறள் காட்டும் பகைவெறி எதிர்ப்பியல் சிந்தனைகள்

திருமதி சு.சத்யா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரி, இராஜபாளையம்.  27 Jul 2021 Read Full PDF

திருமதி சு.சத்யா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,                                                                             இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரி, இராஜபாளையம். 

ஆய்வுச்சுருக்கம்

   மனிதனின்  மனக்குறையானது அவனுடைய  வாழ்க்கையைச் செறிவானப் பாதையில் பயணிக்கத் தடையாக அமையும். வாழ்க்கை  வாழ்வதற்காகத்தான், அழிவதற்கல்ல. விரைவு மிகுந்த தற்கால வாழ்வுச்சூழலில் சுயநலத்தன்மையும், பகைமையும்;;;தான்;  மனிதனுக்கும் இயற்கைக்கும் பலவாறானத் தீமைகளை விளைவிக்கின்றது. மனிதனின வாழ்வுச்சிக்கலுக்குத் தீர்வுகளை வழங்குவதில் திருக்குறள் ஈடுஇணையற்றது. அந்தவகையில் திருக்குறளில் திருவள்ளுவர் எடுத்துரைக்கின்ற இகல், உட்பகை மற்றும் வெளிப்பகைமைக்கானக் காரணக் காரணிகள், அதன் விளைவுகள், பகைமையின்மையின் மேன்மைகளையும் திருக்குறள்வழி  நின்று, மெய்பிக்கும் சான்றுகள் பல கொண்டும் ஆராய்வது இவ்வாய்வின் நோக்கமாகும். ஆட்சியாளர்களுக்கிடையே தோன்றும் பகைமை, நாடுகளுக்கிடையேத் தோன்றும் பகைமை இதன் காரணங்களாகத் தோன்றும் வன்முறையானது பகைவெறியின் அறமில்லாத செயல்களாகும்.  அவ்வகையில் நாட்டின் வளமைக்கும், மக்களின் சீர்மைக்கும் நலம்பயக்கும் வகைமையில் திருக்குறள்வழி பகைவெறி எதிர்ப்பியல் சிந்தனைகளாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.

திறவுச் சொற்கள்

  இகல், பகைவெறி, ஒன்றாமை, பரிவு, பிணி.

 

      

                                                                முன்னுரை

        திருக்குறள் காலம் தோறும் பல ஆய்வுகளுக்குத் தீர்வுகளை அளிக்கும் கருத்துப் பெட்டகமாகத் திகழ்கிறது.  இன்றைய காலத்தில் தந்நலம் மிகுந்து இருக்கும் இத்தகைய வாழ்வுச் சூழலில் திருக்குறளாய்வு பல பயன்களை விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை. மனிதனின் அழிவுக்கான வழிகளில் பகைவெறி முதன்மை வகிக்கிறது. அத்தகைய பகைவெறி மனிதனை மட்டும் அழிப்பதில்லை, இயற்கை வளங்களையும் அழிவுக்கு உள்ளாக்குகிறது என்பதை நாம் அறிவோம். பகைவெறி எதிர்ப்பியல் சிந்தனைகளாகத் திருக்குறளில் பதிவாகியுள்ள சிந்தனைகளைக் காண்போம்;.

பகை

      உயிர்கள் அனைத்தும் ஒன்றுபடாமல் பிரித்துவைக்கும் பண்புகெட்ட நோய் ஒன்று உண்டு. அதன் பெயர் இகல் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

  இகல்என்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்

   பண்பின்மை பாரிக்கும் நோய்           ( குறள்-851 )

      மனிதனுக்குள்ளே பகை என்ற இருள் வருவதற்கு முதற்காரணம் மனம் ஒன்றுபடாமல் மாறுபட்டு இருப்பது வேறுபட்டிருக்கும் மனத்தில் தோன்றுவதே பகை.  அத்தகைய பகைவெறி எந்தெந்த வழிகளில் நமக்குத் தீங்கிழைக்கிறது என்பதை உணர்ந்து பகைவெறி இல்லாமல் வளமோடு வாழ வலியுறுத்துகிறார் திருவள்ளுவர் அவ்;வகையில் நாம் முதலில் காண இருப்பது, 

உட்பகைவெறி எதிர்ப்பியல் சிந்தனைகள்

     உள்நாட்டு ஆட்சியாளர்கள் மட்டுமல்லாது தன் அரசின் கீழ் இயங்கும் அமைச்சர்கள் உறவினர்கள் இவர்களிடையே தோன்றும் பகைமை உணர்வுகளும் நாட்டை பலம் இழக்கச்செய்யும். இதனை திருவள்ளுவர் உட்பகை அதிகாரத்தில் 

   “நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்

     இன்னாவாம் இன்னா செயின்   (குறள்- 881) 

நிழலில் கிடக்கும் குளிர்ந்த நீரும் நோய் தருமாயின் தீயதே ஆகும்.  உறவினரும் கேடு தரும் பண்புடையாராயின் ஏற்புடையர் அல்லர்.

    “மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா

     ஏதும் பலவும் தரும்.”  ( குறள்-884) 

உள்ளம் ஒன்றாத உடபகை உருவாகுமானால் ஏனைச் சுற்றமும் ஒட்டி உறவாடாது துன்பங்களுக்குக் காரணம் ஆவர்.

      “உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்

      ஏதம் பலவும் தரும்.”  (குறள்-885) உறவுக்குள் உட்பகை பிறக்குமானால் பேரழிவைத் தரும் துன்பங்கள் பெருகும்.

     “ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்

       பொன்றமை ஒன்றல் அரிது.” ( குறள்-886) 

நெருங்கிய நட்புடையாருக்குள்ளே உட்பகை தோன்றுமானால் எக்காலத்திலும் வீழ்ச்சியிலிருந்து தப்புவது இயலாது.

   “அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொழுது

    உட்பகை உற்ற குடி.”   (குறள்-888)  

அரம் உராய உராயத் தேயும் இரும்பு போல் உட்பகை ஊடறுத்துத் தீமை விளைவிக்கும். மேலும்  குறட்பா 890 யில் மனத்தால் இசைந்து வாழ இயலாதவர் வாழ்க்கை சிறுகுடிலுள் பாம்போடு ஒன்றாக வாழ்வதற்குச் சமமாகும். என்று குறட்பாக்களில் உட் பகைவெறி எதிர்ப்பியல் சிந்தனைகளை நாம் காணலாம். இவ்வாறு உட்பகையினால் விளையும் தீங்குகளைத் தௌ;ளத் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார். ~புறப்பகைக்கு இடம் ஆக்கிக்கொடுத்து அது வெல்லும் துணையும் உள்ளாய் நிற்கும் பகை| என்பர் பரிமேலழகர் ~புறம்பு நாட்டார் போன்றும் சுற்றத்தாராயும் ஒழுகி மனத்தினால் பகைத்திருப்பார் செய்யும் திறம் கூறுதல|; என்பார் மணக்குடவர் ~பகையில் உட்பகை வெல்லல் அரிது| என்பர் பரிதி.

உள்நாட்டுப் பகைவெறி எதிர்ப்பியல் சிந்தனைகள்

      மக்கள் நலத்துடனும், வளத்துடனும் வாழ அரசு முதன்மை வகிக்கிறது. உள்நாட்டு ஆட்சியாளர்களிடையே வஞ்சகம், பொறாமை என்ற கொடிய எண்ணத்தால் ஏற்படும் பகை உள்நாட்டு மக்களுக்கும் அரசுக்கும் தீமைகள் ஏற்படும.; அத்தகைய தீமைகள் இல்லா நாடாக இருந்தல் வேண்டும் என்று 

“ பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்

  கொல்குறும்பும் இல்லது நாடு.” ( குறள்-735 )

      திருவள்ளுவர் நாடு அதிகாரத்தில் வேறு வேறு கொடி சின்னம் ஆகியவற்றைக் கொண்டு இயங்கும் பல குழுக்களும் நாட்டையே காட்டிக் கொடுக்கும் உள்பகையும் ஆளும் அரசை அமைதி குலையச் செய்யும் குறும்புத் தனங்களும் இல்லாததே நாடாகும் என்று உட்பகை எதிர்ப்பியல் செய்திகளை விளக்கியுள்ளார்.  மேலும் உட்பகை அதிகாரத்தில்            

     “வாள்போல் பகைவறை அஞ்சற்க அஞ்சுக

       கேள்போல் பகைவர் தொடர்பு.”      ( குறள்-882 )

வாள்போல் வெளிப்படையாக வெட்டிக் கொன்று விடுவோம் என நன்கு அறியத்தகும் பகைகைக்குக்கூட அஞ்ச வேண்டாம்.  ஆனால் உறவுபோல நடித்துக் கெடுக்க நினைப்பவரிடம் மிக விழிப்புணர்வோடு இருத்தல் வேண்டும்.

    “உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து 

     மட்பகையின் மாணத் தெறும்.”  ( குறள்-883 )

 உட்பகை உடையவரைக் கண்டறிந்து விழிப்பாகத் தன்னைக் காத்துக் கொள்ளுதல் வேண்டும். இல்லாவிடில் சற்றே கவனக்குறைவாக இருக்கும் போது புதைசேறு போல் ஆளை உள்வாங்கி அழித்துவிடும்

      “ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்

        பொன்றாமை ஒன்றில் அரிது.”  ( குறள்-886 )

 ஒன்றி அருகில் இருப்போரிடையே உள்பகை தோன்றுமாயின் ஒருவர் அழிவிலிருந்து தப்புவது எளிதன்று.

      “செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே

    உட்பகை உற்ற குடி.”       (குறள்- 887) 

ஒரு செப்புப் பாத்திரத்தின் மூடியும் கலசமும் ஒன்றியிருப்பது போல் தோன்றினும் வேறு வேறாதல் போல உட்பகை உற்ற குடி உள்நாட்டினுள்ளேயே முரண்பட்டு பகைவெறியுடன் இருந்தால் ஏற்படும் கேடுகளை எடுத்துணர்த்துகிறார்.

ஒப்பு நோக்குக

  “உட்பகை ஒருதிறம் பட்டெனப் புட்பகைக்கு

   ஏவான் ஆகலின் சாவே யாம் என”    (புறம்-230ஃ4)

 என்று புறநானூறு வரிகளை ஒப்பு நோக்கலாம்.   

வெளிநாட்டு பகைவெறி எதிர்ப்பியல் சிந்தனைகள்

      வெளிநாட்டவர்களிடையே பகையுணர்வின்றி வாழ வேண்டும். அவ்வாறு பகைவெறி இருந்தால் அந்நாட்டிற்குக் கேடு உருவாகும் என திருவள்ளுவர் கூறுகிறார். நாடு அதிகாரத்தில் 

  “உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் 

   சேரா தியல்வது நாடு.”  (குறள்-734)  

 ஒரு சிறந்த நாட்டில் மக்களிடையே மிக்க பசியும் நீங்காத நோயும் எதிரிகளின் பகையும் இருத்தல் ஆகாது. என்று வெளிநாட்டுப் பகைவெறி எதிர்ப்பியல் சிந்தனைகளாக வள்ளுவர் குறள்வழி நாம் அறியலாம் மேலும்.

  “ பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்

    அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து.”  (குறள்-738)

நோயின்மை பொன் கால்நடை முதலாய செல்வம் நன்கு விளையும் நஞ்சை செங்கோல் ஆட்சியால் மக்களுக்குக் கிடைக்கும் இன்பம் பகை அரசால ஊறு வராத பாதுகாப்பு என்ற ஐந்தும் சிறந்த நாட்டின் அணிகலன்கள் ஆகும்.அரசனாலும் அமைச்சனாலும் கொண்டு உய்க்கப்படுவது அரண் முதலிய அங்கங்கட்கு இன்றியமையாத சிறப்பினது என்பர் பரிமேலழகர். வெளிநாட்டினரின் பகைமையை ஊக்குவிக்காது நட்புணர்வுடன் ஆட்சி அமைந்திடல் நாட்டுக்கு நலம் என்று வெளிநாட்டுப் பகைவெறி எதிர்ப்பியல் சிந்தனைகளாக குறட்பா விளக்குகிறது.

 ஓப்பு நோக்குக

  "குறட்பா 738 நாட்டிற்கு அணியானவற்றுள் இன்பமும் ஒன்று என்கிறது. ஆக இன்பம் என்பது பணித் தேர்வுக்குரிய திறன்களுள் ஒன்றாகவும்  நாட்டிற்கு உரிய அணிகளுள் ஒன்றாகவும் அமையும் சிறப்புடையது".

  (திருவள்ளுவரின் இன்பியல் கோட்பாடுகள் பக்கம் எண்-54)

 

அறிவற்ற பகைவெறியினால் ஏற்படும் இழுக்கு

      தன் திறம் என்ன என்று உணராமல் நாட்டு மக்களுக்கு ஏற்படும் தீங்கினை நினைவில் நிறுத்தாது தானே தன் விதியைத் தேடிச் செல்வதைப் போல அறிவற்ற பகைவெறியினால் ஏற்படும் இழுக்கினை பகைத்திறம் தெரிதல் எனும் அதிகாரத்தில்

   “ஏமுற் றவரினும் ஏழை தமியனர்ய்ப்

    பல்லார் பகைகொள் பவன்.”  (குறள்-875) 

துணையற்ற தனியானாய் இருந்தும் பலரைப் பகைத்துக் கொள்பவன் பைத்தியக்காரனைவிடவும் அறிவு இல்லாதவன்.

 “தேறினும் தேறா விடினும் அழிவின்கண் 

   தேறான் பகாஅன் விடல்.”  (குறள்-876) 

முன்னர் பகைவனைத் தெளிய அறிந்திருந்தாலும் அறிந்திரா விட்டாலும் தமக்குத் தாழ்வு வரும்போது அவனை ஆராயவோ பகைமை பாராட்டவோ கூடாது. மேலும் குறட்பா 877 யில் உன் துன்பத்தை உணரத்தெரியாத நண்பர்முன் காட்டாதே உன் வலிமைக் குணவைப் பகைவர்முன் புலப்படுத்தாதே என்றும்  குறள்-879 யில் முள் மரத்தை முற்றாத முளைப்பருவத்திலேயே அழித்துவிட வேண்டும் இல்லையெனில் வைரம் பாய்ந்து மரமானபின் வெட்டுபவன் கையை அது காயப்படுத்தும். மேலும் ‘இகல்’ அதிகாரத்தில்

  “இகலின் மிகலினிது என்பவன் வாழ்கை

   தவலும் கெடலும் நணித்து.”   (குறள்-856)

மன மாறுபாட்டை ஊட்டி வளர்ப்பவனின் வாழ்க்கை தடுமாறிச் சிதைந்தழிய அதிகக் காலம்; பிடிக்காது என்றும்,  குறள் -858 யில் மன மாறுபாடு நேரும் போது விட்டுக்கொடுப்பவன் நன்மை பெறுவான் மாறுபாட்டை ஊக்குவிப்பவன் அழிவை ஊக்;குவிப்பவன் ஆவான் என்றும், குறள்-859 யில் சிலர் தமக்கு நன்மை வரும் போது மனவேறுபாட்டைப் பெருக்குவர் என்று ஆழமான உண்மையை வள்ளுவர் காட்டுகிறார். மேலும் பகையை முழுமையாக நீக்கவல்லாதவன் அழிவை அடைவதையும் கூறுகிறார்.

   “வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்

    தீயெச்சம் போலத் தெறும்.”  (குறள் - 674 ) 

செயலைப் பாதியில் விடுதலும் பகையை பாதியில்விடுதலும தீயை அணைக்காமல் விடுவதற்குச் சமம் அது அழிவைத் தரும் என்று அறிவற்ற பகைவெறியினால் ஏற்படும் இழுக்கினை இக்குறட்பாக்கள்வழி நாம் அறியலாம்.

ஒப்பு நோக்க

 “பாழ் ஆயின நின் பகைவர் தேஎம்”  ( ம.கா.-176 )

  என்ற மாங்குடி மருதனாரின் கூற்றை ஒப்பு நோக்கலாம்.

பகையிலும் பரிவு காட்டும் நெறி

      பகை மேற்கொண்டு போர் புரியும் போர்களத்தில் தன்தன் வெற்றிக்காக வீரத்தை நிலைநிறுத்திக்  கொண்டிருக்கும் அந்நேரக்கதில் வீரர் ஒருவர்க்குத் தாழ்வு ஏற்பட்ட இடத்து பகைமையை மாற்றிப் பரிவுகாட்டும் செயல் உயர்வு என திருவள்ளுவர் காட்டுகிறார்; படைச்செருக்கு அதிகாரம்

  “பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்

   ஊராண்மை மற்றதன் எஃது.”   (குறள்-773) 

 பகைவர் மேல் கருணை கொள்ளாமல் வீரர் திகழ்த்தும் வீரச் செயல் பேராண்மை என்று போற்றுத் தருவது. அதனினும் வீரர் ஒருவர்க்குத் தாழ்வு வந்தாயின் ஏற்ற உதவி செய்வது முன்னதைவிடப் பெரிய கருணை ஆகும். இலங்கைப் போரில் தோற்றுத் தனியே நின்ற இராவணனின் நிலைமையைப் பார்த்து இன்று போய் நாளை வா என்று சொன்ன இராமனின் செயலை எடுத்துக் காட்டுவார் பரிமேலழகர் ( திருவள்ளுவம் ப.எண் 476  க.ப. அறவாணன்) மேலும் இகல் அதிகாரத்தில் தீயவனுக்குப் பதிலுக்குத் தீமை செய்யின் பகைமை வளரும் தாம் தாழ்ந்து போக நேரும் தீயன செய்யாது இருப்பின் பகைமை தளரும் தாம் ஓங்கி வளர நேரும் என்று

  “பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி

  இன்னாசெய் யாமை தலை.”     ( குறள்-852)

பிளவுபடுத்திப் பகை மூட்டிய காலத்தும் மனவேறுபாட்டால் தீங்கு செய்யாமல் தவிர்ப்பதே தலையாய பண்பு. என்று பகையிலும் பரிவு காண்டும் மாண்பினை இக்குறட்பாக்கள்வழி நாம் அறியலாம்.

ஒப்பு நோக்க  

   திரு உடைத்து அம்ம – பெரு விறந் பகைவர்   (பதிற்றுப்பத்து-28ஃ1)

பகைவெறி நீக்கி வாழும் பண்பு

   மன வேறுபாட்டுடன் வாழ்வது என்பது ஒருவித ஐய உணர்வுடன் வாழவேண்டியச் சூழலே நிலவும், நிம்மதியும் மகிழ்ச்சியும கிட்டாது எனவே பகைவெறிதனை நீக்கி இன்புற்று வாழ திருவள்ளுவர் கூறும் குறட்பாக்கள் பகைமாட்சி அதிகாரத்தில்

  “வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா

   மேலியார்மேல் மேக பகை.”  ( குறள் -861) 

தம்மை விட வலியார் மேல் வலிந்து பகைத்து எதிர்ப்பதைத் தவிர்த்து நட்பைப் பேணுக மெலியார் மேலும் பகைத்தலைத் தவிர்த்து அவர்மேல் அன்பு காட்டுக என்று கூறுகிறார்;. பகைத்திறம் தெரிதல் அதிகாரத்தில்

   “பகை என்னும் பண்பிலதனை ஒருவன்

    நகையேயும் வேண்டற்பாற் றன்று”     ( குறள் - 871 ) 

பகை உணர்வு என்பது நற்பண்புக்கு மாறானது. எனவே. விளையாட்டிற்குக்கூடப் பகையை ஒருவன் போற்றுதல் கூடாது.

“பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடையாளன்

 தகைமைக்கன் தங்கிற்று உலகு.”     (குறள்-874) 

பகைவனையும் நண்பாக்கிக் கொள்ளும் பண்புசால் பெருந்தகைமையாளனின் நிழலில் உலகம் வாழ்கிறது பகைவெறி எதிர்ப்பியல் சிந்தனைகளைக் காணலாம்  இகல் அதிகாரத்தில்

  “இகலென்றும் எவ்வநோய் நீக்கின் தகவில்லாத்

   தாவில் விளக்கம் தரும்”  ( குறள்-853)

 பகையுணர்வான துயர்தரும் நோய் நீங்கிவிட்டால் தீங்கும் அழிவும் விலகி அறிவு வெளிச்சம் உண்டாகும்;.

“ இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்

  துன்பத்துள் துன்பம் கெடின்”  (குறள்-854)  

 துன்பங்களில் பெருந்துன்பமாகிய பகையுணர்வு அகன்றால் இன்பங்களில் பேரின்பம் இனிது வந்து சேரும். குறள்- 860 வில் பகைத்துப் பிரிவதால் விளைவன துன்பமும் துயரமும் நகைத்து ஒன்றாவதால் விளைவன நல்லுறவும் பெருமிதமும் என்று கூறுகிறார். வினை செயல் வகை அதிகாரத்தில்

   “நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே

    ஒட்டாரை ஒட்டிக் கொளல்.”   (குறள்- 679) 

 நண்பர்களுக்;கு நல்லவை செய்வதை விடப் பகைவரை நண்பர்களாக்கிக் கொள்வதில் விரைந்து செயல்பட வேண்டும் என்று வள்ளுவ பெருமகனார் நமக்கெல்லாம் பகைவெறி எதிர்ப்பியல் சிந்தனைகளாக பதிவுசெய்துள்ளார் என்பதை ஆய்ந்தறியலாம்

ஒப்பு நோக்குக

     பகைவரையும் விரைந்து நண்பர் ஆக்;குதல்

     பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே…..!

    பகைவனுக்கு அருள்வாய்..! –பேரருட் கவிஞர் பாரதியார்

( திருவள்ளுவம் வரையறுத்த மனித நேய சிந்தனைகள்  ப.எண் -120 பேராசிரியர் வெ. அரங்கராசன் )

  “யாரோடும் பகைக்கூற்றை ஊசிமுனை அளவும்

  வேரோட இல்லை எனும் பாரோடு வாழ்வோம்” -பேராசிரியர் வெ. அரங்கராசன் ப.எண்151

(திருவள்ளுவம் வரையறுத்த மனித நேய சிந்தனைகள்   பேராசிரியர் வெ. அரங்கராசன்)

ஒப்பு நோக்குக

   ‘விலங்குபகை கடிந்த கலங்கா செங்கோல’; -புறம்-230ஃ4

என்ற வரிகளை ஒப்பு நோக்கலாம். 

“விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியா – ப.பா. அடி-26 

‘கிளை கலித்து பகை பேணாது’ – ப.பா. அடி 196

தொகுப்புரை:

 காலம் மாறினாலும் மனிதனின் மனத்தில் பகைவெறி மாறாமல் வீட்டையும், நாட்டையும் அழித்துக்கொண்டிருக்கிறது. தன்னுடைய நலனிழந்து, உடைமையிழந்து துன்புறுத்தும் அப்பகையை கையாளும் தன்மையைத் திருக்குறளில் இகல், படைச்செருக்கு, பகைத்திறம் தெரிதல், நாடு, உட்பகை, பகைமாட்சி, வினைசெயல்வகை ஆகிய அதிகாரங்களின்வழி நாம் நன்கு உணரமுடிகிறது. பகை உட்புகுவதற்கான  காரணத்திலிருந்து, அப்பகை வளர்ந்தால் எத்தகைய கேடு, அப்பகையை பண்போடு மாற்றினால் எத்தகைய மாண்பு உண்டாகும் என்பதைத் தௌ;ளத்தெளிவாக உணர்த்துகிறார்.

முடிவுரை

   பெட்டி நிறைய தங்கம் வைத்துக் கொண்டு வெளியே தங்கத்தைத் தேடுவதைப் போல மனிதனை நன்னெறிப் படுத்தி வாழ்வை உயர்த்தும் அற்புதமான நூல்களின் துணையை நாடாமல் வீணாக நிம்மதியை இழந்து வரும் மானிடர்களுக்;கு திருக்குறளின் சிந்தனையை சுவைக்கச் செய்வதே சிறந்த அறம்.

துணை நூல் பட்டியல்

1. அறவாணன் முனைவர் க.பா

 திருவள்ளுவம,;  தமிழ்க் கோட்டம் 2 முனிரத்தினம் தெரு அய்யாவு குடியிருப்பு 

அமைந்தகரை சென்னை 600029

2. சிற்பி பாலசுப்பிரமணியம் உரையாசியர் ,

திருக்குறள் சிற்பி உரை,

தாமரை பதிப்பகம்

அம்பத்தூர் சென்னை 600098.

3. அரங்கராசன் , பேராசிரியர் வெ. ,

திருவள்ளுவர் வரையறுத்த மனிதநேயச் சிந்தனைகள்.

முணிவாசகர் பதிப்பகம்

31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 600108

4. மோகனராசு , முனைவர் கு, 

 அரங்கராசன் , பேராசிரியர் வெ, 

திருவள்ளுவரின் இன்பியல் கோட்பாடுகள்

மணிவாசகர் பதிப்பகம்

31 சிங்கர்தெரு, பாரிமுனை , சென்னை 600108

5. நாகராசன் முனைவர்.வி

உரையாசிரியர் 

சங்க இலக்கியம் பத்துப்பாட்டு

பாவை பிரிண்டர்ஸ்

ராயப்பேட்டை சென்னை

6.முனைவர்.ஆலிஸ்

  பதிப்பாசிரியர்

முனைவர் அ.மா. பரிமணம்

முனைவர் கு.வே.பாலசுப்புரமணியன்

பதிற்றுப்பத்து

நியுசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட்

அம்பத்தூர் சென்னை

7. பிரபாகரன்இ முனைவர் இர.  

உரையாசிரியர்

மேரிலாந்து அமெரிக்கா

புறநானூறு (மூலமும் எளிய உரையும்)

வெளியீடு காவ்யா 16 கோடம்பாக்கம்

சென்னை