ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சிட்லிங் மலைவாழ் மக்களின் ஊழ் பற்றிய நம்பிக்கைகள்

மா. பெரியசாமி முனைவர் பட்ட ஆய்வாளர் அரசு ஆடவர் கலைக் கல்லூரி கிருட்டிணகிரி 08 May 2021 Read Full PDF

கட்டுரையாளர்

மா. பெரியசாமி, முனைவர் பட்ட ஆய்வாளர், அரசு ஆடவர் கலைக் கல்லூரி, கிருட்டிணகிரி

நெறியாளர்

முனைவர் வே. வேலுமணி, உதவிப் பேராசிரியர், அரசு ஆடவர் கலைக் கல்லூரி, கிருட்டிணகிரி

ஆய்வுச்சுருக்கம்

 ஊழ் பற்றிய எண்ணங்கள் பொதுவாக அனைத்து இன மக்களிடமும் உள்ளது. இதே  நம்பிக்கை சிட்லிங் பகுதியல் வசித்து வரும் மலையாளப் பழங்குடிகளிடமும் பெருமளவில் நம்பப்பட்டு வருவதை கள ஆய்வின் மூலம் காண முடிகிறது. ஊழ்  என்னும் சொல்லுக்கான விளக்கம் நிகண்டுகளில் காணப்படக்கூடிய சொற்கள் போன்றவற்றை அக்கட்டுரையின் வழி அறிய முடிகிறது.அறம் செய்தால் நற்பயன் விளையுமென்றும் அறமல்ல செய்தால் தீப்பயன் விளையுமென்றும் சங்க காலத் தமிழ் நம்பியதை (கலித்.39) சிட்லிங் மலைவாழ் மக்களிடமும் காண முடிகிறது.தீவினைப் பயனைத் துய்க்க நரக உலகம் சென்று துன்பத்தை அனுபவிக்கும் என்றும் ஊழ் பற்றிய சங்க கால மக்களின் நம்பிக்கை இன்றும் சிட்லிங் மலையாள மக்களிடம் உள்ளது என்பதை மேற்கண்ட ஆய்வின் மூலம் அறியமுடிகிறது.

முன்னுரை

சமூகத்தில் நிலவுகின்ற ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடுகளுக்கும் இன்பம் துன்பம் என்ற உணர்வுகளுக்கும் ஊழே காரணம் என்று பேசப்பட்டு வருகிறது. சங்க காலம் தொட்டு இன்று வரை ஊழ்  பற்றிய நம்பிக்கைகள் நிலவி வருகிறது. 'ஊழ்' பற்றிய எண்ணங்கள் பொதுவாக அனைத்து இன மக்களிடமும் உள்ளது என்றாலும் சிட்லிங் பகுதியில் வசித்துவரும் மலையாள பழங்குடிகளிடம்பெரும் அளவில் நம்பப்பட்டு வருவதை கள ஆய்வில் காண முடிந்தது. இதனடிப்படையில் சங்ககால மக்களிடம் நிலவி வந்த ஊழ் பற்றிய நம்பிக்கைகளையும்; சிட்லிங் மலையாள பழங்குடிகளிடம் இன்று நம்பப்பட்டு வரும் ஊழ் பற்றிய எண்ணங்களையும் ஒப்பிடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சிட்லிங் ஊராட்சி அறிமுகம்

தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் வட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி அரூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி மொத்தம் 7 ஊராட்சிமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 6757 ஆகும். இவர்களில் பெண்கள் 3245 பேரும் ஆண்கள் 3512 பேரும் உள்ளனர். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் காதல் திருமணங்கனை விரும்புவதில்லை. இவர்களிடம் நல்ல பண்பாடு, கலாச்சாரம் போன்ற அனைத்தும் சிறந்த முறையில் மேலோங்கி இருப்பதைக் காண முடிகிறது.

திறவுச் சொற்கள்:

சிட்லிங் பழங்குடியினர்,ஊழ்,நம்பிக்கைகள்,சடங்குகள், பழங்குடியினர்

ஊழ்-விளக்கம்

சென்னை பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி ஊழ் என்னும் சொல்லுக்கு பழமை, பழவினை, பழவினைப் பயன், முறைமை, குணம், தடவை, முதிர்வு, முடிவு, பகை, மலர்ச்சி, சூரியனட என பதினொரு பொருள்களைக் கூறுகிறது. மேலும்,

ஊழ் என்ற சொல்லுக்கு நேரான கருமம், தெய்வம், பால், முறை, வினை, எனப்பொருள் சொல்லப்படுகிறது.

கழகத் தமிழ் அகராதி ஊழ் என்ற சொல்லுக்கு உலக முடிவு, குணம், நியமம், பகை, பழவினை, பழைமை, புர்வகன்மம், முடிவு, முறை, வதி, வெயில், முதிர், வாகு, பதனழி, மலர், நினை, முதிர்வு, முதிர்ச்சி, தடவை, மலர்ச்சி, கதிரவன் (கழகத் தமிழ் அகராதி, கமகம், சென்னை, 1969, பக்.193). பிற அகராதிகளும் ஊழ் என்ற சொல்லுக்கு உலக முடிவு, பழைமை, பழவினைப் பயன், குணம், பகை, முறைமை, முடிவு, விதி ஆகிய பொருள்களையே கூறுகின்றன.

மரபு, பழைமை, பால், முறை ஆகிய சொற்கள் எல்லா நிகண்டுகளிலும் ஊழ் என்பதனுடன் தொடர்புடையனவாகக் காட்டப்படுகின்றன.

ஆக அகராதிகள் அனைத்தும் ஊழ் என்பதற்கு நேராகப் பழைமை, பழவினை, பழவினைப்பயன், முறைமை, முதிர்வு, முடிவு ஆகிய சொற்களைக் குறிப்பிடுவது சிந்திக்கத்தக்கது.

சங்க இலக்கியத்தில் ஊழ்

சங்க இலக்கியங்களில் 'ஊழ்' என்ற சொல் மிகுதியாக இடம் பெற்றுள்ளது. மலர்தல் (அகம்.17), முதிர்தல் (குறுந்.68), கனிதல் (அகம்.117), உதிர்தல் (ஐங்.368), முறை (குறுந்.270) ஆகிய பொருள்களில் ஆட்சி பெற்றுள்ளது. ஊழ்த்தல் (அகம்.10) என்ற சொல் மலர்தல், முதிர்தல், புழுத்தல், தோன்றுதல் ஆகிய பொருள்களிலேயே ஆளப்பெற்றுள்ளது.

பால், முறை, வினை முதலான ஏனைய சொற்கள் சங்க நூல்களில் ஊழ்க் கோட்பாடு பற்றிய சிந்தனைகளை உணர்த்துகின்றன.

சிட்லிங் மலையாள மக்களிடம் ஊழ் பற்றிய சிந்தனைகள்

இன்பத்தை ஏற்பதும் துன்பத்தை வெறுப்பதும் மனித இயல்பு. இன்பம் வரும்போது நல்வினைப் பயனால் வந்தது என்று எண்ணி ஊழை வியந்து பேசுவதை விடத்துன்பம் வந்தபோது ஊழைக் காரணமாகக் கருதிப் பேசுவதுதான் மிகுதி. இந்த எண்ணம் சிட்லிங்மலையாள மக்களிடம் நிலவி வருவதை கள ஆய்வில் காண முடிந்தது. கற்றோரிடம் மட்டுமின்றி, கல்லாரிடத்திலும் இக்கோட்பாடு செல்வாக்குப் பெற்றுள்ளதைக் காணமுடிந்தது. இடையறா முயற்சியும், உழைப்பும் கொண்டு தான் முன்னேறுவதற்கும் அமைதியும் வாழ்வதற்கும் ஊழ்க்கோட்பாடு உறுதுணையாக அமைய வேண்டும் என்ற எண்ணம் இம்மக்களிடம் அதிகம் உள்ளதை அறிய முடிந்தது. 'என்வினை, என்விதி, தலைவிதி என்பன போன்ற சொற்களைக் கையாளும் இம்மக்கள் ஊழ் பற்றிய கருத்தை ஏற்கின்றனர்.

 

அ. புண்ணியம்

சமயத் துறையில் அறத்தின் பயன் 'புண்ணியம்' என்று கூறுவது மரபு. நற்செயல்களின் விளைவாகக் கிடைக்கும் நல்வினைப் பயனாகிய புண்ணியத்தை அறம் என்று கூறுவார். அறமாகிய புண்ணியத்தைக் கடைபிடித்தால் அடுத்த பிறவியில் இன்பம் உண்டாகும் என்ற நம்பிக்கை சிட்லிங் மலையாள மக்களிடம் நிலவி வருகிறது.

அறம் செய்தால் நற்பயன் விளையுமென்றும் அறமல்ல செய்தால் தீப்பயன் விளையுமென்றும் சங்க காலத் தமிழ் நம்பியதை (கலித்.39) சிட்லிங் மலைவாழ் மக்களிடமும் காண முடிந்தது.

ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்தோருக்குப் பாவ நீக்கமில்லை என்று அறநூல்கள் கூறியதாகப் புறநானூறு (புறம்.34) குறிப்பிடுகிறது. அதாவது நன்றி மறத்தல் என்பது கூடாது என்பதை சிட்லிங் மலையாள மக்களிடமும் காண முடிகிறது.

ஆ. மறுபிறப்பு

இம்மையென்பது இவ்வுலக வாழ்க்கை. இம்மை வினைகளுக்கேற்ப பயன் மறுமையில் கிட்டும் என்று சங்க கால மக்கள் நம்பினர். மறுமை என்று மறுபிறது.

நல்ல ஆண்மக்களைப் பெற்ற செம்மலோர் இவ்வுலகத்துப் புகழோடு விளங்கி மறுபிறப்பில் மேலுலகத்தையும் தடையின்றி அடைவர் என்பதை அகநானூறு,

“இம்மை யுலகத்து இசையொடும் விளங்கி

மறுமை யுலகமும் மறுவின்றெய்துப

செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்

சிறுவர்ப் பயந்த செம்மலோர் (அகம்.66)

என்ற செய்யுள் குறிப்பிடும். சிட்லிங் மலையாள மக்களிடம் 'நாம் வாழும் காலத்தில் நல்லது செய்து பிறருக்கு துன்பம் தராதிருத்தலே அடுத்த பிறவி சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது ஒப்புநோக்கத்தக்கது.

நரகம்- சொர்கம்

இப்பிறவியில் நல்லதை நினையாமல், நல்லதை செய்யாமல் இருப்போர் நரகத்திற்கு செல்வர் என்ற நம்பிக்கை சிட்லிங் மலையாள மக்களிடம் உள்ளது. இதே கருத்தை பட்டினப்பாலையும்,

'பெறற்கரும் தொல்சீர்த் துறக்கம் (பட்டின.104)

என்று குறிப்பிடுகின்றது. அதாவது நல்லது செய்பவர் சொர்க்கத்திற்கு செல்வர் என்பதாகும்.

மண்ணுலகில் அறமல்லனவாகிய பாவங்களைச் செய்தோர் மறுமையில் நிரயம், நரகம், கீழோருலகம் என்னும் கொடியவுலகினை அடைவர் என்ற அக்காலமக்களின் நம்பிக்கை சிட்லிங்மலையாள மக்களிடமும் உள்ளதை கள ஆய்வில் காண முடிந்தது.

தீவினை செய்தவர் கொடிய நரகத்தையடைவர் என்னும் கருத்துப்பற்றி நரிவெரூஉத்தலையார் என்னும் புலவர், சேரமான்கருவுர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரலிரும் பொறையைக் கண்டபோது பாடிய பாடலொன்று புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது. அப்பாடல்:

'அருளும் அன்பும் நீக்கி நீங்கா

நிரயம்கொள்பவ ரோடொன்றாது காவல்

குழவி கொள்பவரின் ஓம்புமதி” (பட்டின.104)

என்பதாகும். தீயது செய்பவர் நரகத்திற்குச் செல்வர் என்ற புறநானூற்றுப் பாடலின் கருத்து சிட்லிங் மலையாள மக்களிடமும் இருப்பதை காணமுடிந்தது.

ஈ. நல்வினை தீவினை

சங்க இலக்கிங்களில் இன்பம் வந்தபோதும், துன்பம் வந்த போதும் ஊழை நினையும் நிலையினைக் காண முடிகிறது. சிட்லிங் மலையாள மக்களிடமும் இக்கருத்து இழையோடுவதைக் காண முடிகிறது. அதாவது துன்பம் வந்த நிலையில் 'போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தானோ? 'என்றும் இன்பம் வந்த நிலையில்' போன ஜென்மத்தில் அவன் புண்ணியம் செய்திருக்கிறான்' என்று பேசுவதை காண முடிந்தது.

முற்பிறப்பிலே செய்த நன்மைகளால் விழைந்த பயன்பற்றி உலோச்சனார் என்ற புலவர்,

'கானல் அல்கிய நங்கள வகலப்

பல்புரிந் தியறல் உற்ற நல்வினை (அகம். 400)

எனும் அகநானூற்றுப் பாடலில் பாடுகின்றார். அதாவது, 'களவொழுக்கத்திலிருந்த தலைவியைக் காணத் தலைவன் வந்தது பற்றிக் குறப்பிடும் போது, முறற்பிறப்பிலே பல நன்மைகளும் செய்து அவ்வினைப் பயன் பொருந்திய நல்வினையால் களவு நீங்கும்படி தலைவன் வந்து சேர்ந்தான் 'என்பதாகும். சிட்லிங் மலையாள மக்களின், 'போன ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்தானோ!' என்ற கருத்து மேற்கண்ட பாடலோடு ஒப்பிடத்தக்கது.

போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தானோ! என்ற சிட்லிங் மலையாள மக்களின் கருத்திற்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்த பாடலொன்று அகநானூற்றில் இடம் பெற்றுள்ளது. அப்பாடல்:

'பணிவார் கண்ணே மாக யினியது

நமக்கே யெவ்வம் ஆகின்றது,

அனைத்தாற றோழிநற் தொல்வினைப் பயனே (அகம்.243)

என்பதாகும். அதாவது 'தலைவன்' குறித்துச் சென்ற கார்ப்பருவமும் கடந்து, கூதிர்ப் பருவமும், பனிமுதிர்ப் பருவமும் வந்துற்றது. கண்ணோட்டமில்லாத வாடைக் காற்றானது தலைவனிடம் சென்று நீ பொருளீட்டுவதிலேயே நீண்ட காலம் மகிழ்ந்தனை என இடித்துரைத்து, துணையில்லாத வாழ்க்கையில் நாம் பெற்றுள்ள துன்ப நிலையினை எடுத்துக் கூறி அறிவுறுத்துமானால் நமக்கு நன்மை பயக்கும்; அவ்வாறு செய்யாமல் கண்ணில்லாத வாடை முன்னைவிடப் பெரிதும் வருந்தி நீரொழுகும் கண்ணையுடையேம் ஆகும்படி நமக்கு மட்டுமே துன்பமாக அமைந்தது; நமது தொல்வினைப் பயன் அத்தன்மைத்துப் போலும்' என்று வருந்திக் கூறுவதாக அமைகிறது இப்பாடல்.

உ. வாழ்த்தலும், பழித்தலும்

சிட்லிங் மலையாள மக்களிடம் ஊழை பழிப்பதும், வாழ்த்துதலும் வழக்கத்தில் உள்ளதை கள ஆய்வில் காண முடிந்தது. அதாவது, ஒருவருக்கு நன்மை நிகழும் போது, 'நல்லகாலமாக விதியினால் வந்தது' என்றும்; தீமை வரும் நிலையில், 'நம் கெட்டகாலம் பாழாய்ப் போன விதி சதி செய்துவிட்டது' என்றும் கூறி ஊழை ஏற்பதும், பழிப்பதும் இம்மக்களிடம் உள்ள நம்பிக்கையாகும்.

சிட்லிங் மலையாள மக்களிடம் காணப்பெறும், 'நல்ல காலம் இது விதியினால் வந்தது' என்ற கருத்தையொட்டிய பாடலொன்று ஐங்குறுநூற்றில் இடம்பெற்றுள்ளது. அப்பாடல்:

'பிறிதொன்றாகக் கூறும்

ஆங்கு மாக்குமோ வாழியபாலே (ஐங்.110)

என்பதாகும். அதாவது, 'தலைவன் தன்னை வரைவதற்குரிய பிறப்பு, குடிமை முதலாகக் கூறப்பட்ட ஒப்புமையுடையனாதலால் அவன் தன் தலைவன் என்று தாம் வரைவினை உட்கொண்டு கூறியதாகவும் கூறிய தலைவி, 'நொதுமலர் வரைவு' என்பதனை வாயினால் கூற விரும்பாது, 'பிறிதொன்றாகக் கூறும்' எனக் கூறினாள். முன்னர் தலைவனுடன் கூட்டுவித்த ஊழ் மீண்டும் அவ்வாறு செய்தலைத் தவிராது என்னும் கருத்துடன், 'உறற்பாலயார்க்கும் உறும்' என்ற பழமொழிக்கேற்ப ஊழ் ஊட்டு வித்தவாறே கூட்டாது ஊரார். கூறியாங்கும் ஆக்குமோ என அஞ்சி” என வாழ்த்தியதாக அமைந்துள்ளது.

'நல்வினையால் விளைந்த செல்வமும் இன்பமும் பொருந்திய நுகர்ச்சிக்குரிய வீட்டில் இன்பம் துய்க்கும் வாய்ப்பில்லாமல், தமர் வருந்தும் படியாகத் தன் தலைவனுடன் வெஞ்சுரத்தினையடைவதற்குக் காரணமாக இருந்த அறப்பண்பிலா ஊழ், காட்டில்பட்ட தீ முழுவதுமாக அழிந்து ஒழிவது போல அழிவதாக என்று தாய் சினத்துடன் வெறுத்துப் பழிப்பதாக அமைந்த ஐங்குறுநூற்றுப் பாடலின் (ஐங்.376) கருத்தை சிட்லிங் மலையாளமக்களின், 'நம் கெட்ட காலம் பாழாய்ப் போன விதி சதி செய்து விட்டது' என்ற கருத்தோடு ஒப்புநோக்கலாம்.

அறத்தொடு நிற்றல்-நல்வினை செய்தல்

சிட்லிங் மலையாளப் பழங்குடிப் பெண்கள் ஒருவன் மேல் காதல் கொள்ளும் போதும் அவளையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணும் போதும் சில பெற்றோர்கள் அக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை உள்ளது. இந்த எதிர்ப்பால் அக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை உள்ளது. இந்த எதிர்ப்பால் அப்பெண்கள் வீட்டு வேலையை செய்யாமலும் காட்டு வேலையைச் செய்யாமலும் கோவித்துக் கொள்வர். இந்த உணர்வு நிலையை வெளிப்படுத்தும் பாடலொன்று கலித்தொகையில் உள்ளது.

அதாவது, 'மலையில் வாழும் குறுவர்கள் தலைவனுக்குத் தலைவியைக் கொடுக்காமல் வரைவு மறுத்துப் பிறருக்குக் கொடுக்க நினைத்து அறமல்லாதவற்றை விரும்பிச் செய்த காரணத்தினால் மலையில் வள்ளியும் கிழங்கு கீழ் வீழ்க்கமாட்டா; மலையின் மேல் தேனும் தொடா கொல்லையில் தினைக் கதிர்கள் விளையமாட்டா என்று அறத்தை எடுத்துச் சொல்லி, நல்வினையைச் செய்யும்படி தோழி அறத்தொடு நின்றதாகக் கலித்தொகைப் பாடலால் (கலித்.123) அறியலாம்.

முடிவுரை:

பிறப்பு என்பது வினைகளின் விளைவு என்றும், நல்வினையால் இம்மையிலும் மறுமையிலும் இன்பமும், தீவனையினால் இருமையிலும் துன்பமும் அடைய நேருமென்றும்; நல்வினைப் பயனைத் துய்க்க அமரருலகம் சென்று இன்பத்தை அனுபவிக்கும் என்றும், தீவினைப் பயனைத் துய்க்க நரக உலகம் சென்று துன்பத்தை அனுபவிக்கும் என்றும் ஊழ் பற்றிய சங்க கால மக்களின் நம்பிக்கை இன்றும் சிட்லிங் மலையாள மக்களிடம் உள்ளது என்பதை மேற்கண்ட ஆய்வின் மூலம் அறியமுடிகிறது.

அடிக்குறிப்புகள்

1. அகம். 66

2. பட்டின. 104

3. பட்டின. 104

4. அகம். 400

5. அகம். 243

6. ஐங். 110

துணை நூற்பட்டியல்

பொ.வே.சோமசுந்தரனார்     - ஐங்குறுநூறு

                                   சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம்  

                                   சென்னை - 18

அவ்வை துரைசாமி          -  செம்மொழி இலக்கியம் நற்றிணை

   ஜெ ஜெ பப்ளிகேஷன்ஸ்

   27 - அனெக்ஸ் - 7 அன்னை இந்திரா நகர்

   சென்னை - 24

முனைவர் இரா. செயபால்         -  அகநானூறு

   பாவை பிரிண்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்

   சென்னை - 14

ஆ.வெ. இராமசாமி              -  குறந்தொகை காட்டும் வாழ்வு

   திருவள்ளுவர் பதிப்பகம்

          சென்னை - 18

வ.த. இராம சுப்பிரமணியம் (உரை) -  தொல்காப்பியம்

    பூம்புகார் பதிப்பகம்

                                     சென்னை - 108

புகைப்படங்கள்