ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைகளில் குடும்ப உறவுச்சிக்கல்

செல்வி ர.ரத்தினகுமாரி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ் உயராய்வு நடுவம், டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை - 2 30 Apr 2021 Read Full PDF

 கட்டுரையாளர்

 செல்வி    ர.ரத்தினகுமாரி,                                                                                                                     முனைவர்    பட்ட    ஆய்வாளர், தமிழ் உயராய்வு நடுவம்,டோக் பெருமாட்டி கல்லூரி,        மதுரை - 2.

நெறியாளர்

முனைவர் அ.கமலம், உதவிப் பேராசிரியர், தமிழ் உயராய்வு நடுவம், டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை -2

ஆய்வுச்சுருக்கம் 

மானுட    சமுதாயத்தின்    வளர்ச்சிக்குக்    குடும்பமே    ஆணிவேராகத்    திகழ்கின்றது.    இதன்    உருவாக்கம்    ஒரு    தொடர்    நிகழ்வாக    இருந்தாலும்    இன்று    பல்வேறு    மாற்றங்களுக்கும்,    சிதைவுகளுக்கும்    உட்பட்டு    வருவதை    நம்மால்    காண    முடிகிறது.    குடும்ப    அமைப்பில்    இன்றைய    சூழலில்    காணப்படும்    சிக்கல்களுக்கு,    புரிதல்    இல்லாமையும்    பொருளாதாரச்    சிக்கல்களுமே    பெரும்    காரணங்களாக    அமைகின்றன.    இக்குடும்ப    உறுப்பினர்களுக்குள்    ஏற்படும்        சிக்கல்களை    அவிழ்க்கும்    முடிச்சுகளாகத்    ‘புரிந்து    கொள்ளும்    உணர்வு’    அமைவதைப்    படைப்பாளர்கள்    தங்களின்    இலக்கியத்தின்வழி    வாசகர்களுக்கு    உணரவைக்க    முயற்சிக்கின்றனர்.        அவ்வகையில்    நவீன    எழுத்தாளரான  எஸ்.ராமகிருஷ்ணன்,    குடும்பத்தில்    உள்ள    உறவுச்சிக்கல்களைத்    தம்    கதைகளில்    எடுத்தியம்பும்    விதத்தை    ஆராய்வதாக    இக்கட்டுரை    அமைகிறது.

திறவுச்    சொற்கள்

     குடும்பம்    ,    உறவுச்    சிக்கல்    ,    சிறுகதை  ,    படைப்பாளர் ,   எஸ் ராமகிருஷ்ணன்

முன்னுரை

மனித    சமுதாயத்தில்    மிகத்    தொன்மையாகத்    திகழ்வது    குடும்பமே    ஆகும்.        இது    மக்களின்    உயிரியல்,    உளவியல்,    வாழ்வியல்    சார்ந்த    அனைத்துத்    தேவைகளையும்    நிறைவுசெய்வதாக    உள்ளது.    அத்தகைய    உறவுகள்    வாழ்விலும்,    தாழ்விலும்    துணைபுரிபவைகளாக    அமைய    வேண்டும்.    ஆனால்    இன்று    இடம்    பெயர்வு,    பணம்    தொடர்பான    பரிமாற்றம்    காரணமாக    உறவுகளில்    சிக்கல்கள்    ஏற்படுகின்றது.    அச்சிக்கல்கள்    பேசித்    தீர்க்கப்படாமல்    பெரிதாகிக்    கொண்டு    போகும்போது    அது    தீராத    வேதனையையே    தருகின்றது.    படைப்பாளிகள்    பலர்    இதனைத்    தங்கள்    படைப்புகளில்    படைப்பாக்கம்    செய்துள்ளனர்.

எஸ்.ராமகிருஷ்ணனின்    சிறுகதைகளில்    உறவுகளைக்,    குடும்ப    உறவுகள்    என்று    தனித்துக்    காணும்    போது    தாய்,    தந்தை,    மகன்,    அண்ணன்,    அக்கா,    தம்பி,    கணவன்,    மனைவி    போன்றோர்    சித்தரிக்கப்பட்டுள்ளனர்.    அவர்களில்    குறிப்பிட்ட    சிலரின்    உறவுச்    சிக்கலை    எஸ்.ராமகிருஷ்ணனின்    சிறுகதைவழி    எடுத்துச்    சொல்வது    இவ்வாய்வுக்    கட்டுரையாக    அமைகிறது.

குடும்ப    உறவுச்    சிக்கல்

‘உறவு’    என்பது    மனிதர்கள்   இணைந்து    வாழ    ஏற்படுத்திக்    கொண்ட    பிணைப்பு    ஆகும்.    தனியொரு    மனிதனின்    நடத்தைகளை    ஒழுங்குபடுத்துவது    உறவுகளே.    மனிதனால்    தான்    உறவுமுறைகள்    போற்றப்படுகின்றன.    அத்தகைய    உறவுமுறைகள்    திருமணத்தின்    மூலம்    குடும்பமாக    மாற்றம்    பெறுகின்றன.        “குடும்பம்    ஒரு    சிறிய    குழு.    குறைந்த    அளவு    இது    ஓர்    ஆணையும்    பெண்ணையும்    உறுப்பினராகக்    கொண்டிருக்கும்.    ஓர்    ஆணும்    பெண்ணும்    கணவன்,    மனைவி    என்ற    உறவுநிலையை    ஏற்படுத்திக்    கொள்ளும்போது    அவர்கள்    ஒரு    குடும்பமாக    அமைகின்றார்கள்”1   என்று    வாழ்வியற்களஞ்சியம்    குடும்பம்    என்ற    சொல்லுக்குப்    பொருள்    கூறுகிறது.    அத்தகைய    குடும்பத்தால்    மனிதன்    பல    புதிய    உறவுகளை    உருவாக்கிக்    கொண்டு    பெரும்    குழுவோடு    வாழுகின்றான்.    அக்குழுவே    சமுதாயமாக    மாறுகிறது.

சமுதாயத்தில்    நடப்பவைகளைப்    படைப்பதையே    எழுத்தாளர்கள்    தங்களின்    கருதுகோளாகக்    கொண்டு    படைப்புகளை    வெளியிட்டு    வருகின்றனர்.    அவற்றில்    இந்த    உறவு    முறைகளையும்    அவற்றின்    நன்மைகளையும்,    தீமைகளையும்    எடுத்துரைக்கும்போது    ஏற்படும்    சிக்கல்களையும்    பகுத்துக்    கூறுகின்றனர்.    தற்காலப்    படைப்பாளிகள்    மட்டுமல்லாது    தொடக்ககாலப்    படைப்பாளர்களும்    அவற்றைப்    படைப்பாக்கம்    செய்வதைத்    தவறாது    செய்து    வந்துள்ளனர்.    அவர்களைப்    போலவே    இன்றைய    கால    கட்டச்    சூழ்நிலையில்    உறவுகளின்    போக்குகளை    எஸ்.ராமகிருஷ்ணனும்    தனது    படைப்புகளில்    பதிவு    செய்துள்ளார்.    அவற்றுள்    குறிப்பாக    குடும்ப    உறவுச்    சிக்கல்களை    இங்கு    இக்கட்டுரை    அறிய   முற்படுகிறது.

கணவன்    -    மனைவி    உறவுச்    சிக்கல்

குடும்ப    அமைப்பில்    முதல்    உறவுநிலை    கணவன்    மனைவி    உறவு    ஆகும்.    மனித    வாழ்வில்    திருமணத்தின்    பங்கு    மிக    முக்கியமானது.    திருமணம்    தொடங்கி    இறக்கும்    வரை,    ஒருவருக்கொருவர்    துணையாக    வாழ    ஏற்படுத்தப்பட்ட    உறவு    கணவன் -  மனைவி    உறவு.    ஆனால்   இவ்வுறவு    எல்லா    நேரங்களிலும்    நிறைவுதருவதாக    அமைவதில்லை.    அதனை    எஸ்.ராமகிருஷ்ணனின்    ‘அவரவர்    ஆகாசம்’    ‘வீடு    -    வெளி’    ‘வேறு    பகல்’    போன்ற    சிறுகதைகளில்    படைத்துள்ளார்.

‘வேறு    பகல்’    கதையில்    வரும்    சுப்புவிற்குக்    குழந்தைகள்    இல்லை.    அவள்    கணவன்    நாய்குட்டியை    வீட்டிற்குக்    கொண்டு    வந்து    வளர்ப்பான்.    ஆனால்    அவையாவும்    இறந்துவிடும்.    இதனால்    அவளுக்கு    நாய்    குட்டிகளே    பிடிப்பதில்லை.    அவை    இறக்கும்    போதெல்லாம்    அவள்    கணவன்,    “சனியன்    நம்ம    வீட்டுக்குன்னு    வருதுபாரு….எதுவும்    நிக்குது    இல்ல    அவள்    பதில்    சொல்ல    மாட்டாள்,    எதைச்    சொல்கிறான்    என    அவளுக்குத்    தெரியும்.    அவனே    பேசுவான்,    எதப்போட்டாலும்    தின்னுட்டு    வளர்ற    நாய்க    நம்ம    வீட்ல    பாலுத்தி    வளத்தாலும்    நிக்க    மாட்டேங்குது.    எதுக்கும்    கொடுப்பினை    வேண்டும்”2    எனக்    கூறுவான்.    அவன்    குழந்தையில்லை    என்பதனைக்    கூறவே    இவ்வாறு    மறைமுகமாக்    கூறுகிறான்    என்பதை    புரிந்து    கொள்ளுவாள்.    இதனைக்    கேட்டவுடன்    அவளுக்கு    அழுகையாக    வரும்.    பின்னர்    அவன்    சமாதானப்    படுத்துவான்.    இங்கு    குழந்தை    இல்லாததால்    கணவன்-மனைவி    இருவருக்குள்ளும்          மனரீதியான    சிக்கல்கள்    எழுகின்றன.   

மற்றொரு    சிறுகதையில்    அண்ணாச்சி    என்ற    பாத்திரம்,    தன்னுடைய    தவறான    நடத்தையினால்,    தனது    மனைவியும்    தவறானவளாகத்    தான்    இருப்பாள்    என்று    சந்தேகித்து    அவர்    வாழ்க்கையையே    அழித்துக்    கொள்கிறார்.  “நல்ல    பய..தன்    பயம்…ஜாஸ்தி… மில்லுல    வேலை    பாத்த    மணி    சம்சாரத்ததுக்கும்    அவனுக்கும்    பழக்கமிருந்தத… அந்தப்    பயம்தான்    தன்    பெண்டாட்டியையும்    சந்தேகப்பட்டு    மனுசன்    அடையாளமில்லாமப்    போயிட்டான்”3        ஒருவரின்        நடத்தையில்    தவறு    ஏற்படுவதால்    கணவன்    -    மனைவி    இருவரின்    வாழ்வும்    கேள்விக்குறியாக    மாறி    விடுவதை    ஆசிரியர்    பதிவு    செய்துள்ளார்.

‘வீடு    வெளி’    என்னும்    சிறுகதையில்    வரும்    செல்வி,    வேலை    பார்த்து  கணவனையும்    குழந்தைகளையும்    பாடுபட்டுக்        காக்கிறாள்.   அவள்    கணவன்    தன்    நண்பன்    தேவராஜுடன்    இணைந்து        உணவகம்    தொடங்குவதற்காக    அவன்    மாமாவிடம்    செல்கிறான்.    போக்குவரத்துச்    செலவுக்கு    என    மனைவியிடம்    பணம்    வாங்கிக்    கொண்டு    செல்லுகிறான்.    அதைப்    பெற்றுக்கொண்டு    செல்லும்    வழியில்    சீட்டாடியும்    மது    அருந்தியும்    தன்    காசுகளை    இழந்து,    அன்று    இரவு        வீட்டிற்குச்    செல்லாமல்    ரோட்டில்    தூங்கிவிட்டு    விடியற்காலையில்    வீட்டிற்கு    வருகிறான்.    அப்பொழுது    தன்    கணவன்    குடித்துவிட்டு    வந்ததை    அறிந்து,

“போகலையா    அப்ப…

               போகலை    என்றான்…

அவன்    குழந்தையை    ஒட்டிப்    படுத்துக்கொண்டான்.    அவள்    அந்;த    அதிகாலையில்    அழ    ஆரம்பித்தாள்.    உடம்பெங்கும்    குலுங்கியது.    அழுதபடியே    சுவரில்    சாய்ந்து    கொண்டாள்.    அவன்    அவளைப்    பார்த்தபடியே    இருந்தான்.    அவள்    அழுகைச்    சத்தத்தில்    குழந்தை    முழித்துக்    கொண்டது” 4

செல்வி    என்பவள்    கணவனுடன்    சேர்ந்து    வாழ்ந்தாலும்    குடும்பச்    செலவை    ஒருத்தியாகப்    பார்க்கிறாள்.    மேலும்    சிவா    வேலைக்குச்      செல்லாமல்    அவள்    வருமானத்தையும்    செலவு    செய்கிறான்.        கணவன்    மனைவிக்குள்    ஏற்படும்    சிக்கல்கள்    பெரும்;பாலும்    பணம்    சார்ந்தவையாக    இருப்பதை    அறிந்து    கொள்ள    முடிகிறது.

தந்தை    -    மகன்    உறவுச்சிக்கல்

     தந்தைக்கும்    மகனுக்கும்    உள்ள    உறவு    காலம்    காலமாகத்    தொடர்வது.    எனவே    தந்தையானவர்    மகனிடம்    ஆரம்ப    கட்டத்திலே    குடும்பப்    பொறுப்புகளை    உணர்ந்து    வாழ்வதற்காகச்    சற்றுக்    கண்டிப்புடன்    கடமையை    ஆற்றுகின்றார்.    ஆனால்    இளைஞர்களோ    அதைச்    சரியாகப்    புரிந்து    கொள்ளாது    தங்கள்    தந்தையைப்    பற்றிய    தவறான    பிம்பங்களை    வளர்த்துக்    கொள்கின்றனர்.    தந்தை    மகன்    உறவுச்சிக்கலை    இன்றைய    காலகட்டத்திற்குப்    பெரிதும்    பொருந்தி    வருமாறு    எஸ்.ராமகிருஷ்ணன்    சிறுகதைகளைப்    படைத்துள்ளார்.   

குடும்பத்தில்    பெற்றோர்கள்,    ஏதோ    ஒரு    காரணத்தினால்    தன்    பிள்ளைகள்,    குற்றங்கள்    செய்வதை    அடித்துக்    கண்டிக்கின்றனர்.    இதனால்    அவர்களின்    மனஉணர்ச்சிகள்    கட்டுப்பாடுகள்    அற்று,    என்ன    செய்கிறோம்    என்பதைப்    புரிந்துகொள்ளாது    மனவேதனை    அடைந்து    சில    இளைஞர்கள்    வீட்டை    விட்டுச்    சென்றுவிடுகின்றனர்.    ஆனால்    அங்கேயும்    பல    இன்னல்களை    அடையும்    வாய்ப்பு    ஏற்படுகிறது    என்ற    கருத்தைப்    புலப்படுத்த    ‘இருப்பிடம்    விட்டுப்    போனவர்கள்’    என்ற    கதைiயில்    படைத்துக்    காட்டுகிறார்.   

‘மூர்த்தி’    என்பவன்    சிறுவயதில்    பள்ளிக்கூடத்தில்    படிக்கும்    பொழுது    வாத்தியார்    வீட்டுப்பெண்ணைக்    கேலி    செய்வதோடு,    அவளைப்    பிடித்து    தள்ளிவிடுகிறான்.    இச்செய்தியை    அறிந்த    அவன்    அப்பா,    மூர்த்தியை    அடித்து    விடுகிறார்.    இதனால்    அவன்    மனம்நொந்து    வீட்டில்    உள்ள    காசை    எடுத்துக்கொண்டு    வெளியூருக்கு    ஓடிவிடுகிறான்.    “அவனுக்கு    அய்யாவின்    மேல்    கோபம்    கோபமாக    வந்தது.    பேசாமல்    எங்காவது    ஓடிவிடலாம்    எனத்    தோணியது.    காலையில்    அவன்    கிளம்பியபோது    அம்மா    உண்டியலை    உடைத்துக்    காசை    எடுத்தான்.    நிறைய    சில்லறை    இருந்தது.…அவன்    ரயிலில்தான்    வந்;தான்.    நிறைய    கூட்டமிருந்தது.    கோவில்பட்டி    ரயில்வே    ஸ்டேஷன்    அனாதியாக    இருந்தது”5       இறுதியில்    அவன்    தன்    இருப்பிடம்    நோக்கிச்    செல்கிறான்    என்ற    பொழுதும்.    தந்தைக்கும்    மகனுக்கும்    ஏற்பட்ட    மனத்தாங்கலை    ஆசிரியர்    எடுத்துக்காட்டுகிறார்.

தாய்    மகன்    உறவுச்    சிக்கல்

     ஒரு    பெண்ணுக்கு    எப்படித்    தாயின்    பாசத்தை    விடத்    தந்தையின்    அன்பு    அதிகமாகக்    கிடைக்கிறதோ    அதுபோல    தாயும்    தன்    மகன்    மீதே    அதிகம்    பாசம்    வைத்திருக்கிறாள்.    அதே    நேரத்தில்    கண்டிக்கவும்    செய்கிறார்.    இதனால்    தன்    மீது    அதிகப்    பாசம்    வைத்த    தாய்    திட்டும்போதும்    புரிந்து    கொள்ளாமல்    நடந்து    கொள்ளும்    போதும்    மனம்    வருந்துகிறார்கள்.    ‘வெளியில்    ஒருவன்’    சிறுகதையிலும்    ‘நகர்    நீங்கிய    காலம்’    என்ற    சிறுகதைகளிலும்    காணமுடிகிறது.   

“இரண்டாவது    மகனா..    என்ன    செய்யுறாரு..”

“இருக்காரு..”    என்றாள்.    அவன்    பேசாமல்    கேட்டுக்    கொண்டு    இருந்தான்.    பழைய    பிளாஸ்க்    மூடாமல்    காலடியில்    திறந்தபடியே    கிடந்தது.    சாயங்காலமாகக்    கிளம்பி    வரும்    வரை    அம்மா    எதுவும்    பேசவில்லை”6

தன்னுடைய    இயலாமையால்        அம்மா    கேட்ட    பிளாஸ்க்கை    வாங்கித்    தர    முடியாமல்    போய்    விடுகிறது.    அது    அவனுடைய    அம்மாவிற்கும்    அவனுக்கும்    இடையிலான    விரிசலைக்    கொண்டுவருகிறது.

 

‘நகர்    நீங்கிய    காலம்’    சிறுகதையில்        வேலைக்குச்    செல்லாமல்    இருக்கும்    மகனால்    தாய்    வேதனையடைகின்றார்.   “இவன்    இங்கய    கிடக்கான்…    யாரு    சொல்றதையும்    கேட்க    மாட்டேங்கான்..    வர    வர    சகவாசமும்    சரியில்லை.    நாள்    தவறாம    சண்டை    தான்    மிஞ்சுது.….    எதுவும்    பேசலை… உசிரோட    இருந்தாதான்.    பேச..    நான்    எதுக்கு    இருக்க..”    உட்கார்ந்த    இடத்திலே    அழுதாள்.    அவன்    பாதி    சாப்பாட்டிலே    எழுந்து    கொண்டான்.    அழுதபடியே    அந்தப்பெண்    உள்ளே    போய்விட்டாள்.”7    இவ்வாறு    வேலைக்குச்    செல்லாத    மகனை    எண்ணி    வருத்தமுறுகின்ற    உறவுகளாகத்    தாய்    -    மகன்    உறவு    சிக்கலுடன்    அமைந்துள்ளது.

 

தாய்    -    மகள்    உறவுச்    சிக்கல்

பெண்களின்    வாழ்க்கை    என்றுமே    துயரங்கள்    நிறைந்தது    தான்.    அது    தனிவாழ்வாக    இருந்தாலும்    சரி    குடும்ப    வாழ்க்கையில்    ஈடுபட்டாலும்    சரி,    பல    வகையில்    துன்பங்களை    அனுபவிக்கின்றனர்.    ஆனால்    எஸ். ராமகிருஷ்ணன்       படைக்கும்    பெண்    ‘தாய்    அன்பு’    கிடைக்காததால்    துன்புறுகிறாள்.   

‘காற்று    மரங்கள்’    என்ற    கதையில்    அம்மா    தன்    இரண்டு    மகனிடம்  அன்பையும்    அரவணைப்பையும்    காட்டுகிறாள்.    ஆனால்    மகளிடம்    அன்பின்றிச்    செயல்படுகிறாள்.    இதனால்    அவள்    பள்ளி    படிக்கும்    நாளிலிருந்தே    தாயன்புக்கு    ஏங்குகிறாள்.        ஆகையால்    அவள்    மனம்    சிறிது    சிறிதாக    மாறிப்பெரிய    பெண்ணாக    வளர்ந்தவுடன்    வேறொரு    ஆண்மகனின்    அன்பை    நாடுகிறது.    இதனை    “இப்போதும்    அம்மாவுக்கும்    அவளுக்கும்    ஆகாமலே    இருந்தது.    இன்று    அவன்    வந்தபோது    இதையெல்லாம்    அவனிடம்    சொன்னாள்.    அவள்    அவனை    வரச்    சொல்லியிருந்தாள்.   முதல்    நாள்    பஸ்ஸில்    வரும்போதே    சொன்னாள்    நாளைக்கு    ஆபிஸ்    முடியுற    நேரம்    வாங்களேன்”8    என    ஆசிரியர்,    அவளன்புக்கு    ஏங்குவதைச்    சுட்டுகிறார்.

இக்கதையில்    தாய்    தன்னுடைய    முழு    அன்பையும்    கொட்டி    வளர்க்கும்    மகன்கள்    விட்டுச்    சென்றுவிடுகின்றனர்.    மகள்    வேலைக்குச்    சென்று    காப்பாற்றுகிறாள்.    அப்பொழுதும்    தன்னை    விட்டுச்    சென்ற    மகன்களுக்காக    வருந்துகின்றாரே    தவிர,    மகளைக்    கவனிப்பதில்லை.    “விரலைப்    பிடிச்சுக்கிட்டே    திரிவாங்க.    இப்போ    பையன்கள்    ஒருத்தரும்    உதவிக்கு    இல்லே.    அவளா    வேலைக்குப்    போயி…ஆம்பிள்ளையில்லாத    குடும்பமாப்    போச்சு.”9

ஒரு    தாய்    என்பவள்    ஆண்குழந்தையாக    இருந்தாலும்    சரி,    பெண்குழந்தையாக    இருந்தாலும்    சரி        இருவரையும்    இரண்டு    கண்களாகப்    பார்க்க    வேண்டும்.    பெற்றோர்கள்    பெண்களை    இன்றும்    பாரமாக    நினைக்கும்    நிலையை    மாற்றி,    அவர்களை    சரிசமமாகப்    பார்க்க    வேண்டும்.   

இச்சிறுகதையில்    இன்றளவும்    பெண்களை    இரண்டாந்தரப்    பிரஜைகளாக    நடத்தும்    மனப்பாங்கினை    கொண்ட    இச்சமூகத்தின்    முரண்பாடுகளை        எழுத்தாளரின்    வழி    அறியமுடிகிறது.

அண்ணன்    -    தம்பி    உறவுச்    சிக்கல்

     வீட்டை    விட்டுப்    பிரிந்து    போகும்    தம்பியின்    பண்புகளை    ‘அம்மா’    என்னும்    சிறுகதை    உணர்த்துகிறது.    “ஆனாலும்    முதலில்    பிரிந்து    போனது    சித்தப்பாதான்    அந்த    வீட்டை    விட்டு.    அன்றைய    இரவில்    கடைச்    சாவியைக்    கொண்டுவந்து    வைத்து    விட்டு    அப்பா    மட்டும்    சாப்பிட    வந்தார்.    சித்தப்பா    வரவில்லை.    அப்பா    சாப்பிட்டுக்    கொண்டே    சொன்னார்,    “கடையில    கணக்கு    முடிச்சோம்.    அவன்    தனியாகப்    போகப்    பிரியப்படுறான்.    இந்த    வியாபாரம்    வேணாமாம்.    டவுனுக்குப்    போறானாம்”10  இவ்வாறு  பணத்தேவைக்காக    இடப்    பெயர்வுகளினால்    குடும்பங்களுக்கும்    உறவுகளுக்கும்    இருந்த    பாலம்    நீண்டு    கொண்டே    போகிறது.   

அக்கா    -    தம்பி    உறவுச்    சிக்கல்

ஒரு    உறவு    நிலைக்கு    அன்பே    அடித்தளமாக    அமைய    வேண்டும்.    ஆனால்    மனிதன்    இன்றைய    உலகில்        பொருளை    மட்டுமே    பெரிதாகப்    பார்க்கின்றான்    என்ற    கருத்தை    ‘விரும்பித்    தோற்றவை’    படைப்பு    வழி    அறியலாம்.

சிறுவயதிலிருந்தே    தன்    அக்கா    மீது    அளவற்ற    பாசம்    கொண்டிருக்கிறான்.    ஆனால்    அவன்    ஒவியம்    வரைவதில்    ஈடுபாடு    கொண்டவனாக    இருப்பதால்    எந்த    வேலைக்கும்    செல்லாமல்    வீட்டிலிருக்கிறான்.    இதனால்    அம்மாவும்,    அக்காவும்        அவனைத்    திட்டுகிறார்கள்.    காரணம்,    அவனுடைய    தம்பி    வேலை    பார்த்து    பல    விளையாட்டுப்    பொருட்கள்    வாங்கித்    தருகிறான்    என்பதை    அவனுடைய    அம்மாவே    கூறுகிறார்.    இதனால்    அவன்    குழந்தைக்கு    என    ஒரு    பொருளைக்    கொடுக்க    நினக்கிறான்.    அது    தன்    அக்காவின்    ஞாபகமாக    அவன்    வைத்திருந்த    தங்கம்    போன்ற    மணல்    அடைந்த    பையைக்    குழந்தைக்கு    வாங்கிக்    கொடுக்கிறான்.    “வேற    எதுவும்    வாங்கித    தர    முடியலைன்னாலும்    ரோ~த்துக்குக்    குறைவில்லை..’    மணலைப்    பிடுங்கித்    தண்டவாளத்தில்    எறிந்தாள்.    மணல்    சிதறியது.    கறுத்துப்போன    மணல்.    தங்க    நிறமெல்லாம்    போயிருந்தது.    அவன்    வெளியே    வந்துவிட்டான்    அப்போதே”12    அதை    அக்கா    பிடுங்கி    எறிந்துவிட்டு    அவனைத்    திட்டுகிறாள்.    உண்மையான    அன்புக்கு    இவ்வுலகில்    மதிப்பில்லாமல்    போகும்    இச்சமுதாயத்தின்    போக்கை        ‘விரும்பித்    தோற்றவை’    என்னும்    படைப்பின்    மூலம்    வெளிக்கொணர்வதைக்    காண    முடிகிறது.

திருமண    உறவுச்    சிக்கல்

     தாயின்    சகோதரனைத்    திருமணம்    செய்யும்    எண்ணம்    வெளிப்படுத்துவதை    சிறுகதைகள்    எடுத்துரைக்கின்றன.    அது    ஈடேறாது    போகும்போது    அந்த    உறவே    நிலைக்காமல்    போய்விடும்    வாய்ப்புகளும்    நடைபெறுகின்றன.   

‘கல்யாணி    வீடு’    என்ற    சிறுகதையில்    வரும்    பிரபா    அவளுடைய    தாய்மாமன்    மேல்    அன்பு    வைத்திருக்கிறாள்.    ஆனால்    அவன்    வேறொரு    பெண்ணைத்        திருமணம்    செய்ய    நினைத்து    அவளை    வேண்டாமென்று    கூறுகின்றான்.    இதனால்    பிரபா    மனம்நொந்து    விடுகிறாள்.    அதன்    பிறகு    ரொம்ப    நாள்    கழித்துத்    தான்    அவளுக்குத்    திருமணம்    நடைபெறுகிறது.    “மாமா    அந்த    அறையை    விட்டுப்    போகும்    போது    பிரபா    சத்தமாக    அழுதாள்.    அவள்    பிரியத்தின்    விடாத    மூச்சு    இன்னமும்    ஏங்கி    விம்மியது.    மாமா    சாப்பிடாமலே    போய்விட்டார்.”13    இதன்பின்பு    பேசாமல்    அவள்    மாமாவும்    வீட்டை    விட்டு    வெளியேறிவிடுகிறார்.

இதேபோன்று    தான்    ஆசைப்பட்ட    மாமாவின்    மகளைத்    திருமணம்    செய்ய    இயலாததால்    காய்ச்சல்    கண்டு    இறந்து    போகின்ற    நிலைமைக்குத்    தள்ளப்படுவதனையும்    ‘போய்க்கொண்டிருப்பவள்’    சிறுகதையில்    சிவா    -    மல்லிகா    என்ற    பாத்திரங்கள்    வெளிப்படுத்துகின்றன.

“ஏன்,    கல்யாணத்துக்கு    வரலே..என்ன    கோவம்    எம்மேலே    ?

 பதில்    சொல்லவில்லை    அவன்

 நான்    என்ன    செய்ய?    என்றாள்

அவள்    சப்தம்    வராமல்    குலுங்கி    அழுதாள்.    அவனால்    தாங்கி    கொள்;ள    முடியவில்லை”14    மல்லிகா    திருமணம்    முடிந்த    பிறகு    அவனைக்    காண    அவன்    வீட்டிற்கு    வருகிறாள்.    சிவா    ஒர்க்ஷாப்பில்    வேலை    செய்பவனாகவும்,    மல்லிகா    ஆசிரியர்    படிப்பை    முடித்தவளாகவும்    இருக்கிறாள்.    பொருளாதார    இயலாமையினால்    அவன்    அவளைத்    திருமணம்    செய்ய    இயலாது    போகின்றது.    இத்தகைய    திருமணங்கள்    நடைபெறாததால்    உறவில்    விரிசல்கள்    ஏற்படுகின்றன    என்பதைச்    சுட்டிக்    காட்டியுள்ளார்.

முடிவுரை

        • குடும்பம்    என்பது    ஒருவருக்கொருவர்    விட்டுக்    கொடுத்தல்,    பிறரின்    எண்ணங்களுக்கு    மதிப்புக்    கொடுத்து    செல்லுதல்    போன்றவற்றினை    அடிப்படையாகக்    கொண்டது.

        • கணவன்    -    மனைவி    உறவுகளில்    மனைவி    கணவனுக்கு    அடங்கி    வாழும்    மனப்பான்மையையே    பெரும்பாலும்    சுட்டப்பெறுகின்றது.   

        • தந்தை-மகன்,    தாய்-மகன்,    உறவுகளில்    பொருளாதாரத்தினால்    பாதிக்கப்படும்    நிலையையும்,    கண்டிக்கும்    பாங்கினையும்    அதனால்    விபரிதமான    விளைவுகளையும்    கதைகள்    வெளிக்கொணர்கின்றன.   

       •  உடன்    பிறப்புகளுக்குள்ளான    உறவின்    மேன்மை    என்பது    அன்பை    மையமாக்க    கொள்ளாமல்    பொருளில்    சிறந்தவர்மாட்டு    உள்ளதைச்    சித்தரித்துள்ளன.

       •  குடும்ப    உறவுகளோடு    மட்டும்    நில்லாது    தாய்    வழி,    தந்தை    வழி    உறவுகளிலும்    எவ்வாறு    சிக்கல்கள்    எற்படுகின்றன    என்பதையும்    காண    முடிகிறது.

       •  உறவுகள்    எத்தகைய    சிக்கலான    தன்மையினை    உடையவை,    ஒட்டு    மொத்த    குடும்பத்தையும்    எவ்வாறு    பாதிக்கும்    என்பதை    எஸ்.ராமகிருஷ்ணன்    குடும்ப    உறவுச்    சிக்கல்    என்னும்    இக்கட்டுரையின்    மூலம்    அறிய    முடிகிறது.

அடிக்குறிப்புகள்

1.        நா.    பாலுசாமி, வாழ்வியற்களஞ்சியம்,    ப.591

2.       எஸ்.ராமகிருஷ்ணன்,     எஸ்.ராமகிருஷ்ணன்  கதைகள்,    தொகுதி-1,    ப.78,

3.       மேலது,    ப.153

4.       மேலது,    ப.66

5.       மேலது,    ப.215

6.       மேலது,    ப.36

7.        மேலது,    ப.120

8.       மேலது,    ப.30

9.       மேலது,    ப.31

10.       மேலது,    ப.76   

11.       மேலது,    ப.36

12.       மேலது,    ப.197

13.       மேலது,    ப.47

14.       மேலது,    ப.70