ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

ஆய்வு நோக்கில் தோப்பில் முகமது மீரான் சிறுகதைகள்

முனைவர் சி.ஆர். மஞ்சுளா தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் சென்னை சமூகப்பணி கல்லூரி 30 Apr 2021 Read Full PDF

ஆய்வு நோக்கில் தோப்பில் முகமது மீரான் சிறுகதைகள்

முனைவர் சி.ஆர். மஞ்சுளா

தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்

 சென்னை சமூகப்பணி கல்லூரி

 

ABSTRACT

Among those who came to Tamilnadu for business purposes were Arabic merchants.  Although Muslims are found in Tamilnadu, three – quarters of them are native Tamil speakers.  They introduced new forms in the field of literature.  Born on 26.06.1944 in Thengaipattinam, near Nagercoil, Kanyakumari District, Thoppil Mohammad Meeran, who recoreded the biographies of Tamil Islamists in Thoppil, sided with the oppressed people.  He has whipped up anti-social germs, such as the culture of arrogant pseudo-life consumption, by building a strong mausoleum on superstitions such as the spirit and deeds that some believe in this century as well.  Many short stories illustrate the need to protect the environment from the destruction of nature by the need for fruit.

 

KEY WORDS : Arrival of Arabian Traders – Flourish of Islamic religion – New art form – Land based life – Exchange of Language - Criticism through creative literature – Humanity – Ecology – Greedy mind – Life reflecting literature - Marginal level struggle - Globalisation

 

பூமியில் பல்வேறு மக்கள் கலந்து பழகி வாழ்தல் இயல்பு.  வணிகத்தின் காரணமாகவும் கலப்பு நிகழ்வது தவிர்க்க முடியாதது.  வணிக நோக்கத்தில் தமிழகம் வந்தவர்களுள் அரேபிய வணிகர்களும் அடக்கம்.  இதனால் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இசுலாத்தின் அறிமுகம் பரவலாகத் தோன்றியது.  “தமிழகத்தில் இசுலாத்தின் வருகை என்பது நான்கு விதமான வரலாற்று நிகழ்வுகளால் நிகழ்ந்திருக்கின்றன. வணிகத்தின் பொருட்டுக் கடல் வழிப் பயணத்தின் மூலமாக வந்த அரபிகள், முகலாய படையெடுப்புகளின் மூலம் இங்கு வந்தவர்கள், சமயப் பணிக்காக வந்த சூஃபிகள், தமிழகத்திலயே மதம் மாறியவர்கள் என அவற்றை வகைப்படுத்தலாம்.”1 

வியாபாரத்தின் காரணமாகத் தமிழகம் வந்த அரபிகள் கிரேக்கர், ரோமர், சீனர், பாரசீகத்தினர் போல் அல்லாமல் தாம் கொண்டு வந்த பொருள்களை இங்கே விற்றுவிட்டுத் தங்கள் தேவைக்கேற்ப இந்த நாட்டுப் பொருட்களையும் வாங்கிச் சென்றதுடன், நாட்டின் அரசியல்-சமுதாய வாழ்வில் கலந்து தமிழ்ப்பண்பாட்டிற்குத் துணை நின்றனர்.  பதினாறாம் நூற்றாண்டுவரை இசுலாமியர்களுக்குத் தமிழகத்தின் சில பகுதிகளில் அரசியல் பிடிப்பு இருந்து வந்த விவரங்களைப் பல ஆய்வாளர்கள் எழுதிய நூல்கள் மூலம் அறிய முடிகின்றன.  ஆய்வு முடிவுகளைக் கொண்டு பல்சந்தமாலையின் பாட்டுடைத் தலைவனாகக் குறிப்பிடப்படுபவர் குறுநிலக்கிழாரான கலுபா என்பதை ஊகித்து உணரமுடிகிறது.2 

தமிழக இசுலாமியர்கள்

தமிழ், உருது, அரிதாக அரபு பேசுபவர்களாக இசுலாமியர்கள் தமிழகத்தில் காணப்பட்டாலும் நான்கில் மூன்று பகுதியினர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்.  வணிக வளர்ச்சி, சமயப்பணி, அரசியல் ஊக்குவிப்பு ஆகிய காரணங்களினால் தனிமையை ஒழித்து, தமிழ்ச் சமுதாயத்தில் ஒன்றி உறவாடி நாளடைவில் தமிழராகவே மாறினர்; மொழிக்கும் தொண்டு புரிந்தனர்.  மேலும், தமிழகத்தில் வேற்றுமொழியினர் படையெடுத்து வந்து அவர்களின் ஆட்சி நிலவிய காலமான பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் தமிழ்மொழி புறக்கணிப்புக்கு உள்ளானது.  மொழியைப் பாதுகாக்க தமிழ்ப் புலவர்களின் தமிழ்ப்பணியை ஊக்குவித்த பெருமைக்கு உரியவர்கள் தமிழ் இசுலாமியர்கள் என்று வரலாறு பறைசாற்றுகிறது. 

புதிய கலை வடிவம்

இசுலாமியர்களின் முதல் தமிழ் இலக்கியமான ஆயிரம் மசாலா கி.பி.1572-இல் அரங்கேற்றம் பெற்றது.  பின்னர் பல தமிழ் இலக்கியங்கள் தமிழ்மொழிக்குக் கொடையாகக் கிடைத்தன.  தமிழுக்குப் புதுமையான கலை வடிவங்களை இசுலாமியர்கள் கொண்டு சேர்த்தனர்.  ‘மாலை’ என்ற சிற்றிலக்கிய வகையில் இசுலாமியப் புலவர்கள் மட்டும் இருநூறுக்கும் மேற்பட்ட படைப்புகளை இயற்றியுள்ளனர். “அந்தாதி, அம்மானை, அலங்காரம், ஏசல், கலம்பகம், கிஸ்ஸா, கும்மி, குறவஞ்சி, கீர்த்தனை, கோவை, ஞானம், பதம், பள்ளு, படைப்போர், பிள்ளைத்தமிழ், சதகம், சிந்து, மஞ்சரி, மசாலா, முனாஜாத், நாமா, லாவணி, வண்ணம், வாழ்த்து என்ற பல்வேறு சுவையும் துறையும் கொண்ட இலக்கிய வடிவங்கள் இசுலாமியர்களின் பங்களிப்பாக உருவாக்கப்பட்டன.  இவற்றில் கிஸ்ஸா, முனாஜாத், மசாலா, நாமா, படைப்போர் என்பன முழுவதும் தமிழுக்குப் புதுமையான கலை வடிவங்கள்.”3  இதைப் போன்று உருதுமொழி கவிஞர்களின் கஜல்களும் தமிழ்மொழிக் கவிகளாக இசுலாமியர்களால் வழங்கப்பட்டன.

மீரானின் உரைநடையில் தமிழ்

தற்காலத்தில் அவர்களின் பங்களிப்பு நவீனப் படைப்புகளாகவும் நீள்கின்றன.  தமிழ் நவீன இலக்கியம் தொண்ணூறுகளில் யதார்த்த வாழ்வைப் பேசியது.   நிலவியல் சார்ந்து திணை வாழ்வின் தொடர்ச்சியைக் கதைகள் தத்தெடுத்துக் கொண்டன.  இத்தருணத்தில் தோப்பில் முகமது மீரான் எழுத்துப் பிரவேசம் செய்தார்.  26.09.1944 – அன்று குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகில் உள்ள தேங்காய்ப்பட்டினம் எனும் ஊரில் பிறந்தார்.  வணிகக் குடும்பத்தில் பிறந்த வீட்டில் பொருளாதார வசதி போதுமான அளவிற்கு இருந்தது.    இவர் ஊரில் மீனவர்கள் பேசும் தமிழ், இசுலாமியர்கள் வழங்கும் தமிழ், நாடார்கள் பயன்படுத்திய தமிழ், நாயர்கள் உரையாடும் தமிழ், பறையர் – புலையர் உரைக்கும் தமிழ் என்று ஐந்து விதமான தமிழ் இருந்தது. இவரின் படைப்புகள் இவற்றைத் துல்லியமாகப் பதிவு செய்தன.

மனிதாபிமானமிக்க தோப்பிலார் புதினங்களையும், சிறுகதைகளையும், மொழிபெயர்ப்பு நூல்களையும் படைத்துத் தந்துள்ளார்.  கதைகளின் அடிநாதமாக இருக்கக்கூடியவை அன்பு, அருள், உயிர் இரக்கம் முதலான பண்புகள்.  இவரது ‘சாய்வு நாற்காலி’ என்ற புதினம் 1977-ஆம் ஆண்டின் சாகித்ய அகாதெமி விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.  கலை உருவாவதற்கு புரட்சி மனோபாவம் காரணமாக அமைகிறது என்ற கோட்பாடு கொண்டவர்.  ஒடுக்கமுறைக்கு எதிராகத் தன் கதைக் கருவை அமைத்துக் கொண்டார்.

படைப்பாளி ஒரு படைப்பை எழுதும் முன் தன் ஊரைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கவேண்டும் என்று விரும்பியவர்.  அந்த ஊரின் வரலாறு, மக்களின் இயல்பு, அங்கே நிலவும் அரசியல் தெரியாமல் ஏதோ நானும் எழுதுகிறேன் என்ற மனநிலையில் எழுத்துலகிற்குள் நுழையக்கூடாது என்ற தீர்க்கமான பார்வை கொண்டவர்.  தனக்குப் பரிச்சயமான சமூகச்சூழலைப் படிப்பவர் கண்முன் கொண்டு நிறுத்துவதில் வல்லமை மிக்கவர்.  இங்கு அவரின் சிறுகதைகளின் போக்கு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

சிறுகதை ஓர் அறிமுகம்

சிறுகதை என்பது வசனத்தில் அமைந்த ‘லிரிக்’ என்றும் வாழ்க்கையை ஒரு சாளரத்தின் வழியாகப் பார்ப்பது போல் வாழ்க்கையின் அம்சத்தை ஒரு புதுச் சிறப்போ, பொருளோ தொனிக்கும்படி அல்லது புதுச் சிறப்புப் பொருள் ஒன்றும் இல்லாதபடி அதுவே அதன் முழுமையான இலட்சியமாக இருக்கும் வகையில் அமைக்கும் ஒரு கட்டுக்கோப்பு என்றும் தமிழ்ச் சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன் கருதுகிறார்.4 சுருங்கக்கூறின், கதாசிரியனின் சிந்தனையில் பிறந்து வாசகனின் சிந்தனையில் நிறைவு பெறுவது சிறுகதை என்ற முடிவுக்கு வந்துவிடுவது நலம்.

கல்கியின் கதைகளில் நகைச்சுவையும் இனிய வர்ணனைகளும் இருந்தன.  மேலோட்டமான கதை அம்சத்திற்கும், அழுத்தமான சொற்சித்திரங்களுக்கும் இடைப்பட்ட மிதவாதப் போக்கும் சிறுகதைத் துறையில் செயல்பட்ட நிலைகளும் நிலவுகின்றன.  சமூக அநீதிகளால் கோபமடைந்தவர்கள் முற்போக்குக் கதைகளை எழுதினர்.  திராவிட எழுத்தாளர்களின் தாக்கமும் கதைகளில் இடம்பெற்றன.  தற்காலத்தில் சிறுகதைகளை நடனமாக வழங்கும் புது முயற்சியும் நடந்து வருகிறது.  பார்வையாளர்களுக்குக் கதையை நடன நிகழ்ச்சிக்கு முன்னர் படித்துவிட்டால் அவர்கள் ஆவலுடன் நடனத்தைக் காணத் தயாராகிவிடுவர்.  இசைக்கருவிகள் மட்டும் பயன்படுத்திக் கதைகளைத் தங்கள் அபிநயம் மூலம் நடனக்கலைஞர்கள் நடனமாடி பார்வையாளர்களுக்கு உணர்த்துவர் கலைஞர்கள்.

மீரானின் படைப்புகள்

தோப்பிலின் படைப்புகள் இசுலாம் சமூகம் குறித்த விமர்சனங்களையும், சுய விமர்சனங்களையும் எள்ளல் தொனியிலும் வெளிப்படுத்தின.   மலையாளம், அரபி, நாகர்கோவில் வட்டார வழக்கு, இசுலாமியர்களின் பேச்சு வழக்கு ஆகியவற்றின் கலவையான ஒரு மொழிநடையைச் சிறுகதையில் கையாண்டு வெற்றி பெற்றார். 

சிறுகதைகளில் தமிழக இசுலாமியர்களின் வாழ்வியலைப் பதிவு செய்ததுடன் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று அவர்களுக்கான நியாயம் பேசினார்.  மனித வாழ்க்கையின் துயரங்களை அதன் போக்கில் சொல்லி வாசகரைக் கதையோடு பயணிக்கச் செய்வார்.  வகுப்புவாதம், சாதி மத முரண்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்றவை தமிழ்ச் சமூகத்தை எவ்வாறு நிலை குலைய வைக்கின்றன என்பதை விளக்கி அதிலிருந்து மனிதர்களை மீட்டெடுக்கும் போராளியாகக் கையில் எழுதுகோலுடன் செயல்பட்டார்.  பல்வேறு வாழ்க்கைப் போராட்டங்கள் இருந்தாலும் தன்னையும் தன் எழுத்தையும் இழக்காமல் இயங்கியவர்.

சிறுகதை உத்தி

படைப்பின் அழகு வெளிப்படுவதற்கு ஆசிரியர் கையாளும் உத்தி துணை நிற்கிறது.  உருவத்திற்கும் சிறுகதையின் உள்ளடக்கத்திற்கும் அப்பாற்பட்டு நிற்கும் வெளிப்பாட்டுத் திறன் என்பது படைப்பின் தரத்தை மதிப்பிடத் தகுந்த அளவுகோலாக அமைந்து படைப்பை உயர்ந்து நிற்கச் செய்கிறது.5  தலைப்பு தேர்ந்தெடுக்கும் முறையாலும், தொடங்குகின்ற நிலையாலும், விறுவிறுப்பாகச் செல்லும் நடையாலும், பாத்திரங்களாலும், முடிவு கூறும் தன்மையினாலும் சிறுகதை வெற்றி பெறுவது உண்டு.  இதனை உத்தி என்று சுருக்கமாக விளக்கிவிடலாம்.  தோப்பில் முகமது மீரான் கதைகளைப் பொறுத்தவரை கதைகள் தமக்கான தலைப்பைத் தாமே தேர்வு செய்து கொள்கின்றன.  சில கதைகளில் கதையின் தலைப்பு பாதி கதையைச் சொல்லிவிடுவதாகவும் அமைகின்றன.

தொடக்கம் கதைக்குக் கூடுதல் அழகு தரவல்லது.  சுவாரசியமாகவும், கதையின் போக்கை ஒருவாறு கூறுவது போலவும் தொடக்கம் அமையும் பட்சத்தில் வாசகனை எளிதில் ஈர்த்துவிடும்.  தோப்பில் முகமது மீரானின் முதல் சிறுகதை ‘நரகம் பூமியில்!’ என்பது.  இது 1968-ஆம் ஆண்டு பிறை மாத இதழில் வெளியானது.  இக்கதையின் தலைப்பு உலகத்தில் நடந்து கொண்டிருக்கிற தீமையைச் சொல்ல வந்திருக்கும் கதை என்பதை ஊகித்துக் கொள்ள வழியமைத்துக் கொடுக்கிறது. 

கதையின் தொடக்கமும் அதற்கு ஒத்து ஊதுவது போல அமைத்திருக்கிறார் ஆசிரியர்.  “உலகம் ஆழ்ந்த நித்திரையில் மூழ்கிக் கிடந்தது.  உருண்டு புரண்டு வேண்டுமென்றே உறக்கத்தை வரவழைக்க முற்பட்டேன்.  என்னால் முடியவில்லை.  நெஞ்சில் அவ்வளவு சுமை!  எழுந்து ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக் கொண்டே வெளியே எட்டிப் பார்த்தேன்.  ஏதாவது முனகல் சப்தம் வீட்டை ஒட்டிய குடிலிலிருந்து கேட்கிறதா என்று.”6  இந்தத் தொடக்கத்தின் மூலம் யார் உறங்காமல் தவிக்கிறார்கள்? யாருடைய முனகல் சத்தம் கேட்கவிருக்கிறது? தூங்க முடியாத அளவிற்கு மனத்தில்  யாருக்கு என்ன பாரம்? என்பன போன்ற கேள்விகளைப் படிக்கும் வாசகர் மனத்தில் தோற்றுவிக்கிறது. 

ஏழ்மையின் காரணமாக வீட்டு வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று வரும் சிறுமி லைலா, பெயர் மாற்றப்பட்டு நோயின் காரணமாக மருந்துவமனைக்கு அழைத்துச் செல்ல மறுக்கும் முதலாளிகளின் கொடுமைக்குப் பலியாகிவிடுகிறாள் என்று கதை முடித்திருப்பார் ஆசிரியர்.  அந்த வீட்டு முதலாளியம்மாள் லைலா என்ற பெயரால் அழைப்பதற்குப் பதிலாக ‘பாத்தே’ என்று அழைக்கிறாள்.  தன் மகளின் பெயரை எப்படி வீட்டு வேலைக்காரிக்கு வைத்து அழைப்பது என்ற இடத்தில் “பணக்காரப் பிள்ளைகளுடைய பெயரை எளியவங்க வைக்கக்கூடாது என்கிறீங்களா உம்மா?”7 என்ற ஒரு கதாபாத்திரத்தின் கேள்வி மூலம் சமூகத்தைப் பார்த்து கேள்வி எழுப்புகிறது கதை. 

ஆரம்பத்தில் குழந்தையைத் தாலாட்டித் தூங்கவைக்க வேண்டும் என்பதற்காக வேலைக்கு வந்தவள் போகப் போகப் பெரியவளானதும் வீட்டின் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறாள்.  இதற்கு நடுவில் அடியும் உதையும் வேறு.  சுப்ஹ்நேரம் என்ற அதிகாலையில் எழுந்தால் இரவு பன்னிரண்டு மணிவரை வேலை இருக்கும்.  அப்படி உழைத்தவளுக்குக் காய்ச்சல் கண்டவுடன் மருந்துகூட வாங்கித்தர மறுக்கும் வாப்பாவையும் உம்மாவையும் பார்த்துச் சகியாத மகன் அவர்களுக்குத் தெரியாமல் வேலைக்காரப் பெண்ணுக்கு உதவலாம் என்று போனால் கன்னங்களில் வாப்பாவின் கைகள் பதிய அடி வாங்குவதுதான் மிச்சம்.  கடைசியில் இருமிக் கொண்டு இறந்தே போனாள் லைலா.  இந்த மண்ணுலகு நரகமாயிருந்தாலும் இறந்தபின் சொர்க்கத்தில் சேரட்டும் என்று எழுத்தாளர் எதிர்பார்ப்பது வாசகர் மனத்தை ஒருவாறு ஆறுதல்படுத்தும்.

பொதுவான வறுமை

முரண்கள் வாழ்க்கையை மேலும் சுவாரசியம் உடையதாக மாற்றுகின்றன.  வாழ விரும்பாதவனுக்கு வாழ்க்கையும், வாழத் துடிப்பவனுக்கு அவன் எதிர்காலத்தை இருட்டாக்கிக் காட்டுவதும் வாழ்க்கையின் விளையாட்டு.  ஒருவர் தன் விருப்பத்தை நிறைவேற்றிடத் துடிக்கும் அந்தப் போராட்டங்களில் நகர்ந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை.  தன்னுடைய துன்பத்தை எண்ணி வருந்தும் ஒருவனுக்கு அதைக் காட்டிலும் அதிக துன்பத்தில் சிக்கிக் கொண்டிருப்பவனைப் பார்க்கும் போது ஏற்படும் இரக்க உணர்வு மனிதநெகிழ்ச்சிக்குச் சான்று.  கல்யாண வயதில் இருக்கும் இளைஞனுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை என்பது அவனைக் கொன்றெடுக்கும் துயராமக மாறுகிறது.

இசுலாமியர்கள் பிறையைப் பார்த்த பின் பெருநாள் பண்டிகையைக் கொண்டாடுவார்கள்.  பண்டிகையின் உற்சாகம் எல்லோரையும் தொற்றிக் கொள்கிறது.  “உலக முஸ்லிம்களின் மனத்தில் தேங்கிக் கிடந்த துயரங்களை இந்த இரவும் நாளைய பகலும் துடைத்தெடுக்கின்றன.  துடைத்தெடுத்த துக்கங்களை என் இதயத்தில் பிழிந்து விட்டன.  என்னிதயம் துக்கத்தின் கழிவுநீரைத் தாங்கி நிற்கும் சாக்கடை.”8 என்பதாகக் குமுறுகிறான் அந்த இளைஞன். இரண்டு கண்ணும் தெரியாத ஹனீபாவுக்கு மணமாகிவிட்டது.  ஆனால் எனக்கு மட்டும் அதற்கான அறிகுறியே இல்லை என்று வருந்தும் பாத்திரம் மூலமாக மனைவியைப் பற்றி இசுலாம் மார்க்கம் தீட்டும் கருத்துக்களைப் பதிவு செய்கிறார் எழுத்தாளர்.  “அந்தகனான கணவனின் கண்கள் அவன் மனைவி.  முடவனின் கால்கள் அவன் இல்லாள்.  எல்லா அவயவங்களும் உள்ளவனுக்கோ அவன் வாழ்வின் சரிபாதி அவள்.  துன்பத்தை இன்பமயமாக்குபவள் அவள்.”9 என்ற வரிகளில் இல்லத்தரசிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் விளங்குகிறது.

அடிப்படைத் தேவையான உணவுத் தேவையை நிறைவு செய்வதில் பலரின் வாழ்வும் முடிந்து விடுவதாக மீரான் விளக்குகிறார்.  வயிற்றுப்பாட்டை நீக்குவதற்குக் கௌரவமான முறையில் ஏதாவது வேலை செய்து பிழைப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நியாயம் பேசுகிறார் எழுத்தாளர்.  வரால் குஞ்சுகளை அனாதையாக விட்டுத் தாயைப் பிடித்துச் சுடச்சுடப் பொரித்துத் தின்னும் அநியாயப் பாவியான அனீபாவை அல்லா விடுவாரா? என்று அறத்தைப் பேசும் இவர், “எழும்பு மோளே! உம்மாவின் குரல் கேட்டு எழுந்து உட்கார்ந்த ஆபிதாவின் ஒட்டிப்போன பட்டுப்போன்ற கன்னங்களில் கண்ணீர்த் துளிகள் வடிந்து காய்ந்து உறைந்து விட்டிருந்தன.

ஆபிதா! நாளை முதல் நீ மில்லுக்குப் போய் வேலெ செய்.  வேலெ செஞ்சு பிழைப்பது ஆண்டவனுக்கு விரோதமில்லே.”15 என்ற ‘தலைப்பெருநாள்’ என்ற கதையில் பெண்களை வேலைக்கு அனுப்பக்கூடாது என்ற தேவையற்ற வாதத்தை நீக்க முற்படுகிறது கதை.  கணவனை இழந்த வீயாத்தும்மா தன் மகளை வேலைக்கு அனுப்பினால் ஊரில் உள்ளோர் என்ன பேசுவார்களோ என்று அச்சத்தில் அவளை மில் வேலைக்கு அனுப்பாமல் தவிர்த்து வந்தாள்.  ஒரு கட்டத்தில் பசியின் கொடுமை தாங்க முடியாத மகள் ஆபிதா முதல் நாள் வேலைக்குப் போய் திரும்பி வருவதைப் பார்க்கும் மம்மரோ இப்படி வேலை செய்து பிழைக்க வெட்கமாக இல்லையா என்பதாகக் கேவலமாகப் பேசுகிறாள்.

பழி சொல்லத் தெரிந்த சமூகத்திற்கு வாழ வழி சொல்லத் தெரியாது என்பது இக்கதையில் எத்தனை உண்மை!  தாய்க்குத் தெரியாமல் வேலைக்குப் போன மகளைச் சுள்ளிக் கம்பு உடைந்து போகிற அளவில் அடித்துவிட்ட பின் தன் தவறுக்கு வருந்தும் தாயாக இருக்கிறாள் வீயாத்தும்மா.  பிறகு வேலைக்குப் போவது தவறல்ல என்ற முடிவுக்கு வந்தவளாக மகளைத் தொடர்ந்து வேலைக்கு அனுப்புகிறாள்.  ஆபிதாவும் தினமும் கூலியைப் பெற்றுக் கொள்ளாமல் அதைச் சேர்த்துப் பெருநாளுக்கு முன்பாகப் பெற விரும்பி அவ்வாறே பெற்றுக் கொண்டாள். 

கைநிறைய சம்பளத்துடன் வரும் ஆபிதா தாயிடம் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியடையும் வேளையில் வேலைக்குப் போவதைக் கேவலமாகப் பேசிய மம்மேரா பெருநாள் கொண்டாடும் பொருட்டுக் கடன் கேட்டு வருகிறாள்.  ஆபிதாவுக்குத் தான் வேலைக்குப் போகும் போது தன்னைக் கேவலப்படுத்திய காட்சி நினைவிலேயே இருந்தது.

பழமைவாதத்திற்கு முற்றுப்புள்ளி

நாம் ஒருவருக்கு உதவி செய்தால் நமக்கு வேறு இடத்திலிருந்து உதவி கிடைக்கும் என்ற சித்தாந்தத்தைக் கேள்விக்குறியாக்கும் எழுத்தாளர் அவநம்பிக்கையைப் பரப்புகிறார் என்ற குற்றச்சாட்டு பல கதைகளிலும் வெளிப்படுகிறது.  எதிர்பார்த்த முடிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டுப் புதிய விடியலுக்கு வித்திடுகிறார்.  தன் முயற்சியால் விளைந்த பொருட்களை உண்டு வாழ்ந்து உயிர்விட்ட பின்னர் கௌரவமான முறையில் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது தனிமனிதனின் அடிப்படை உரிமை.  அதற்குப் பங்கம் ஏற்படும் இடத்தை ‘சுருட்டுப்பா’ என்ற கதை சொல்லும் விதமே தனியழகு. 

ஊரில் விழும் பிணங்களை அடக்கம் செய்யக் குழி வெட்டி நல்லடக்கம் செய்த சுருட்டுப்பா இறந்தபின் அந்த மய்யித்தை (பிணத்தை) அடக்கம் செய்ய ஒவ்வொரு நபராகக் கெஞ்ச வேண்டியிருக்கிறது.  ஆனாலும் வேலை நடந்தபாடில்லை.  விரக்தியடைந்த ஆமினா இப்படி ஒரு முடிவு எடுக்கிறார்.

“மக்கத்துக்குச் செல்லும்போது கப்பலில் இறந்தால் மய்யித்தைக் கடலிலல்லவா இறக்குவார்கள்.  கடலுக்கடியில் முன்கர் நக்கீர் போவார்களா?  அந்த மய்யித்துக்குச் சொர்க்கம் கிடைக்குமா?  அப்படியானால் இந்த மய்யித்தைக் கேள்வி கேட்க முன்கர் நக்கீர் செல்வார்கள்.  இந்த மய்யித்துக்கும் சொர்க்கம் கிடைக்கும்.

ஆமினா உம்மாள் அருமைக் கணவனின் சுருக்கம் விழுந்த நெற்றியில் கடைசியாக முத்தமிட்டாள்.  அவள் அந்த மய்யித்தைத் தூக்கினாள்.  நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.  முதல் இரவில் கணவன் அவளை நெஞ்சோடு அணைத்த நினைவு வந்தது.  அந்தக் கிழவியின் கண்ணிலிருந்து குடுகுடுவெனக் கண்ணீர் ஒழுகியது.  அந்தக் கண்ணீரின் ஒழுக்கில் நைல் நதியின் முகம் தோன்றியது.”10 என்ற பகுதி உள்ளத்தைப் பிழிகிறது.  அன்புடைய ஒரு பெண்ணின் கண்ணீரில் நைல் நதியின் முகம் தோன்றியது என்று கூறும் ஆசிரியரின் நடை அவலத்தை அழமாகப் பதிவு செய்கிறது.

படைப்பாளனின் தனித்துவத்தைக் காட்டுவது அவரின் நடை.  நடையில் புலமையும், கலை உணர்வின் ஆழமும் புலப்படுகின்றன.  ஒரு படைப்பைப் படிக்கும் பொழுது செவிகளில் அது பற்றிய உரையாடலை ஒரு குரலாக உணரும் நிலையை நடை என்று குறிப்பிடுவர்.  இது இலக்கியத்திற்கு அழகும் பலமும் சேர்க்கக்கூடியது.  நடை ஆசிரியர் வாழ்ந்த காலத்தைப் பிரதிபலிக்கும்.  மிதமிஞ்சிய வர்ணப்பூச்சுக்களையும், கட்டுமீறிப் போன மனவுணர்வுகளையும் மக்கள் விரும்புவதில்லை.  கதையைக் கூறும் எழுத்துநடை, கதைமாந்தர் உரையாடும் பேச்சு நடை ஆகிய இரண்டும் சிறுகதையின் இரு கால்கள்.

ஓர் எதிர்பாராத வகுப்புக் கலவரத்தில் தன்னந்தனியாக மாட்டிக் கொண்ட ஒரு பெண்ணைக் காப்பாற்ற முன் வந்த ஒருவர் பகைவரின் அரிவாளுக்கு இரையாகி இறக்கிறார்.  “எதையும் லட்சியம் செய்யாமல் ஹமீதின் வாப்பா ஒரு அரிவாளுடன் எதிரிகள் அணியில் குதித்து அப்பெண்ணைக் காப்பாற்றினார்.  திரும்பும்போது அவர் தோளில் வெட்டு ஒன்று வீழ்ந்தது.  கை தளர்ந்தது.  கையிலிருந்த அரிவாள் கீழே விழுந்தது.  அத்துடன் அவரும் விழுந்துவிட்டார்.  இரத்தம் கொப்பளிக்கத் துடித்து அடங்கியது அவர் உடல்.  சமுதாயத்தின் மானத்தைக் காக்கத் தன்னைத் தியாகம் செய்தவரின் மகன் வயிற்றுக்கு உணவில்லாமல் கிடக்கிறான்.  ஒரு மத்தாப்புக் கொளுத்திப் பிடிக்க ஆசைப்படுகிறான்.  ஒரு துண்டு இறைச்சி ருசி பார்க்கத் துடிக்கிறான்.  யார் இருக்கிறார்கள் அவனுக்கு?”11 என்ற எழுத்தாளரின் நடை இயல்பாக அமைந்து சூழலின் வக்கிரத்தை உரைக்கிறது.

கலைமகள் இதழில் வெளியான தண்ணீர் பஞ்சத்தைப் பற்றிப் பேசும் கதையில் தண்ணீர் லாரி வரும் காட்சியை ஆசிரியர் சொல்லும் விதம் நேர்த்தியாக இருக்கும்.  “சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் நடந்த போர்க்களத்தில் எத்தனையோ துப்பாக்கித் தோட்டா சப்தத்தையும் வெடிச் சத்தத்தையும் கேட்டு எரிச்சலடையாத அவருக்கு இந்தத் தண்ணீர் மோட்டார் சப்தம் மட்டும் அலர்ஜியாக இருக்கும்.  ஆனால் மூன்று நாள்களுக்குப் பிறகு இப்போது தான் தண்ணீர் வந்திருக்கிறது என்ற நிலையில் அந்தச் சப்தம் அவருக்கு ஏதோவொரு அபூர்வ இசைக்கருவியை அழகாக இசைக்கப்படும் போது கேட்கும் சங்கீத ஒலியாகக் கேட்டது.”12 என்ற ஆசிரியரின் நடையில் வறட்சியின் அவலம் தெளிவாக விளங்கி விடுகிறது.

மிகுந்த பொறுப்புடன், எந்தச் சார்பும் இல்லாமல், காலத்தால் அழிக்க முடியாத எழுத்தாளராக உருவாகிய இவரின்  ‘ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்’ என்ற சிறுகதைத் தொகுப்பு இந்த நூற்றாண்டிலும் சிலர் நம்பிக் கொண்டிருக்கும் ஆவி, செய்வினை போன்ற மூட நம்பிக்கைகள் மீதான வலிமையான சமாதியை எழுப்பியுள்ளது.  மேட்டிமை, போலி பகட்டு வாழ்க்கை, நுகர்வுக் கலாச்சாரம் ஆகிய சமூகத்திற்கு ஒவ்வாத கிருமிகளுக்கு ‘அனந்தசயனம் காலனி’, ‘தங்க வயல்’ ஆகிய சிறுகதைகள் மூலம் சவுக்கடி கொடுத்திருக்கிறார்.

மருத்துவ வசதி இல்லாத காலங்களில் மதிய வேளைகளில் அல்லது இரவு நேரங்களில் வயல் வெளிக்குச் சென்ற மனிதர்கள் உடல் உபாதையால் இறக்க நேரிடும் பொழுது முனி அடித்து விட்டது, காத்து கறுப்பின் சேட்டை என்றெல்லாம் நம்பின கிராமங்கள்.  ஆனால் அறிவியல் முன்னேற்றத்தால் மின்சாரம் பரவி எங்கு என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளும் நிலை ஏற்பட்ட பின் அது மாரடைப்பால் வந்த மரணம் என்பதை உணர்ந்து அது நடக்காமல் தடுக்கவும் வழி வகைகள் செய்து விட்டனர்.  ‘அடையாளங்கள்’ என்ற கதையில் மூதாட்டி ஒருத்தி இறந்தபின் ஆவியாக அலைவதாகச் சொல்லப்பட்டுள்ளது.  இரவு நேரங்களில் அந்தப் பக்கம் வருவோரைச் சுண்ணாம்பு கேட்பாள் என்று மக்கள் பேசிக் கொள்வதாகப் பின்னப்பட்ட கதையில் “இருட்டுவதற்கு முன் சாலி மாமா கடையை அடைத்து விடுவது அவள் சுண்ணாம்பு கேட்பாள் என்றல்ல.  அவருக்கு மாலைக்கண்ணு” என்று எழுதியிருப்பது சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.

இறைக் கோடிபாட்டில் மூழ்கியிருக்கும் ஒருவர் ஒருநாள் அதிலிருந்து விடுபட்டு முற்போக்குக் கருத்துக்களைப் பேசும் போது உண்டாகும் அதிர்ச்சியை எள்ளல் தொனியில் விளக்கும் கதை மிகுந்த ரசனையை உடையதாக இருக்கிறது.  இசுலாமிய மதகுரு ஒருவர் யாரும் எதிர்பாராத ஒருநாளில் நாத்திகத்தைத் தழுவுகிறார்.  யாருடைய பேச்சு ஆத்திக மக்களுக்கு பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியதோ அவர் இன்று முற்றிலுமாக அந்தக் கொள்கையிலிருந்து விலகி விடுகிறார். 

மாற்றம் என்பது மானுடத் தத்துவம் என்பதை ஏற்காத மக்கள் ஒருவரின் கருத்துப் பிடிப்பு காணாமல் போய்விட்டதே என்று எண்ணி எதிர்வினை ஆற்றுகின்றனர்.  முற்போக்கு மேடைகளில் முழங்கும் மௌலவியை இறந்ததாகச் சித்தரித்துக் காட்டுகிறது அந்தச் சமுதாயம்.  ‘ஒரு மௌலவியின் மரணம்’ என்ற கதையில் வரும் அப்துல் ஷூக்கர் இறந்துவிட்டதற்காக மக்கள் அழவில்லை என்றும் அது குறித்துச் சிந்திக்கவில்லை என்றும் என்று கதையைத் தொடங்குகிறார் ஆசிரியர்.  மேடையில் அவர் மரணம் நிகழ்ந்ததாக மிகுந்த நையாண்டியும் பதிவு செய்கிறார்.

“அவர் மேடையில் ஏறும்போது எப்பொழுதும் தலையிலிருக்கும் தொப்பி மறைந்துவிட்டது.  எப்போதும் தோளில் தொங்கிக் கிடக்கும் வாயில் சால்வை தோளிலிருந்து எங்கோ பறந்துவிட்டது.  சற்று நீண்டு வளர்ந்திருந்த தாடியின் நீளம் மிகவும் குறைந்துவிட்டது.  மணிக்கட்டுவரை நீண்டு கிடக்கும் சட்டை கைமுட்டு வரை சுருங்கியது.  கரண்டைக்கு மேல் உடுக்கக்கூடிய கைலியின் இடத்தில் கரண்டைக்குக் கீழ் நிலத்தைத் தொட்டுக் கிடக்கும் எட்டு முழ வேட்டி தோன்றியது.  பின்பக்கமாக வாரிவிடக்கூடிய முடியை நடுவே வகிர்ந்து இரு பக்கமாக விட்டிருந்தது. 

தன்னை அறியாமல் வாயிலிருந்து நழுவி விழுந்த அஸ்ஸலாமு அலைக்கும் என்ற சொல்லுக்குக் கடிவாளம் இட்டார்.”15 என்ற வர்ணனை மூலம் ஒரு மதகுரு அந்தச் சித்தாந்தத்திலிருந்து விடுபட்டு வெளியில் வந்தவுடன் அந்த மௌலவியை ஏற்க மறுக்கும் அவலத்தைப் பேசுகிறார் எழுத்தாளர்.  மௌலவியின் நண்பர் அவரை இழந்ததற்காக வருந்தும் போது மோதினார் உங்கள் நண்பன் இறக்கவில்லை, மௌலவிதான் இறந்துவிட்டார் என்கிறார்.

வாழ்க்கையை அசைபோடும் படைப்பு

தன் வாழ்க்கையை ஒட்டிய அனுபவங்களைத் தேர்வு செய்த போதும் எழுத்தாளர் அவற்றை சுவை குன்றாமல் கதைகளாக வடிப்பதில் வெற்றி கண்டார்.  கண்ணில் கண்ட மனிதர்களைக் கதைமாந்தர்களாக உலவ விட்டிருக்கிறார். அள்ள அள்ளக் குறையாத அட்சயபாத்திரமாக அனுபவங்கள் தொடர் சங்கிலி போல் வந்து கொண்டிருப்பது வாசகர்களுக்கு வியப்பைத் தருகிறது.  குழந்தைகளின் விளையாட்டையும் ரசிக்கக்கூடியதாகப் படைத்திருக்கிறார்.  இயலாமையில் இருக்கும் அப்பாக்களை, குடும்ப நிலையைப் புரிந்து கொள்ளாத பிள்ளைகளை எடுத்துக் காட்டுவதன் மூலம் அவர்கள் தங்கள் நிலையை உணர்ந்து திருந்தும் வாய்ப்பை முடிவுக்குள் தந்துவிடுகிறார்.

ஒரு காலத்தில் முன்னோர்கள் பயன்படுத்திய பொருளைப் புதையல் என்று கருதிப் பாதுகாத்து வந்தனர்.  தன் பிள்ளைகளுக்கு அணிவித்து அழகு பார்த்த நகைகள், குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்கள் ஆகியவற்றையும் பத்திரப்படுத்திய தலைமுறை இருந்திருக்கிறது.  ஆனால் இன்று பயன்பாடு முடிந்தவுடன் தூக்கி எறியும் பழக்கம் எல்லா இடங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டது.  மறு பயன்பாட்டுக்கான பொருள்கள் என்றும் எதுவும் இல்லாத இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கும் நிலை.  மேகப் பஞ்சுகளைத் தொட்டு நசுக்க ஆசை என்று ஓர் இளைஞன் அசைப்படுவது போல் அமைந்த கதைகளில் பழையவற்றைப் பாதுகாக்க மறுக்கும் கதைகளும் புனையப்பட்டுள்ளன.

தலைமுறை இடைவெளி என்ற ஒன்று வாழ்வியலில் இல்லாமல் போனால் என்ன? என்ற கேள்வி ‘வட்டக் கண்ணாடி’ என்ற கதையைப் படிக்கும் போது தோன்றுகிறது.  முன்னோர்களின் முகங்களைக் கண்ணாடியில் பார்த்து மகிழும் ஒருவர் முழு உருவத்தையும் காட்டாத வட்டக் கண்ணாடிக்குப் பதில் ஆழுயர நிலைக் கண்ணாடி வேண்டும் என்று இளைய தலைமுறை விரும்புவதை ஆதங்கத்துடன் எதிர்கொள்கிறார். 

தான் தன் தந்தையாரிடம் எதற்காகவும் கோபமோ, வருத்தமோ கொள்ளாத நிலையை மகனுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கவலை கொள்கிறார்.  தொடர்ச்சியாக ரூபாய் 900 மதிப்புள்ள காலணிகளைக் கேட்டு அவரின் மகன் அடம்பிடித்த போது பிள்ளைகளுக்குத் தேவையானதை வாங்கிக் கொடுங்கள் என்று சொல்லி விட்டாள் மனைவி.  அதனால் மனைவியை அவள் பிள்ளைகளின் தாய் என்றே குறிப்பிடுகிறது கதை.  காலத்தின் சுவடுகளான முதுமை மனிதர்களுக்கு வந்தாலும் கண்ணாடிக்கு எந்த முதுமையும் நிகழவில்லை.  ஆனால் அந்தக் கண்ணாடி வீட்டில் உள்ள குடும்பத்தவருக்கு வெறுப்பைத் தந்தது.  ஒருகட்டத்தில் அதை உடைத்து விட்டதாகக் கதையை நிறைவு செய்திருப்பார் மீரான்.

உணவைக் குனிந்து உண்டு உணவு தந்த பூமிக்கு நன்றி சொல்லும் மரபில் வந்த நாம் இன்று ‘யூஸ் அண்ட் த்ரோ’ பண்பாட்டைத் தத்தெடுத்துக் கொண்டதை மிகுந்த வலியோடு பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர்.  மனைவியைப் பறிகொடுத்த ஒருவர் தன் மகனின் நல்வாழ்வுக்காக வேறு துணையைத் தேடிக் கொள்ளாமல் அவனுக்காகவே தன்னை மெழுகுவர்த்தியாக்கிக் கொண்ட போதும் அரபு நாடுகளில் வேலை பார்க்கும் மகன் திருமணம் முடிந்த பிறகு எப்போதாவது தந்தையைப் பார்த்து விட்டுச் செல்வான்.

ஒருநாள் கடைசியாகக் குடும்பத்துடன் அப்பாவைப் பார்க்க வந்த மகன் வீட்டைத் தன் பெயருக்கு மாற்றிக் கொண்டு வெளிநாட்டுக்குப் புறப்படுகிறான்.  வாப்பாவும் வழியனுப்பி விட்டு வீட்டிற்கு வரும் வழியில் பள்ளிவாசலிலேயே இறக்கிவிடப்படுகிறார்.  காரணம் கேட்டதற்கு உங்கள் மகன் தான் உங்களை இங்கே இறக்கிவிட்டுச் செல்லும்படி உரைத்தான் என்ற இடத்தில் கண்கள் குளமாகின்றன.                                                                                                     

இது போன்ற உணர்வைத் தரும் கதையை ஜெயந்தி சங்கர் என்ற எழுத்தாளரும் படைத்துள்ளார்.  மனிதர்களை நேசிப்பவர்களைக் காட்டிலும் பணத்தை நேசிக்கும் அபாயகரமான வாழ்க்கைச் சூழலில் சேவை போன்ற வார்த்தைகள் பொருளிழந்து காணப்படுகின்றன.  பெற்றெடுத்த அன்னையைப் பாதுகாக்கத் தவறும் பிள்ளைகள் அண்மைக் காலமாகப் பெருகி வருகின்றனர்.  அதிலும் இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வரும் தாயைப் பார்க்கவும் மனமில்லாத கொடுமையான மகனை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது, ‘சேவை’ என்ற ஜெயந்தி சங்கரின் சிறுகதை.   கலிஃபோர்னியா செல்லும் வழியில் சிங்கப்பூரில்  இருக்கும் மகனைப் பார்த்து விட்டு ஐந்து மணி நேரத்தில் புறப்பட இருக்கிறாள். 

ஒரு சேவை நிறுவனத்திற்குத் தொடர்பு கொண்டு தன் சொந்தக்காரரைப் பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறான் மகன்.  தன் மகனைப் பார்ப்போம் என்ற ஆசையுடன் வந்த தாய் ஏமாற்றும் அடைகிறார்.  அவருடைய பேச்சில், வாடிக்கையாளர் குறிப்பிட்ட சொந்தக்காரர் தாய் என்பதை உணர்ந்து சேவை செய்ய வந்தவர் அதிர்ந்து போகிறார்.  நிறுவனத்து வேலைக்காரரான ரவியிடன் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் மகன் ஒருமுறைகூட அம்மாவிடம் பேச விருப்பமில்லாமல் இருப்பது ரவிக்கு மிகுந்த துன்பமளிக்கிறது.  யாரோ ஒரு தாய்க்குச் சேவை செய்யும் ரவி தனக்கான கட்டணத்தையும் பெற மறுத்துவிடுகிறான்.13  யாரோ முகம் தெரியாத ஒருவருக்கு இருக்கும் பாசம் பெற்ற மகனுக்கு இல்லாத வேதனை உறைக்கிறது. 

இயந்திரத்துடன் வாழப் பழகிக் கொண்டவன் இன்றைய மனிதன்.  இயந்திரங்கள் மனிதனுடைய வேலைப்பளுவைக் குறைத்து அவனுக்கு உதவி செய்தாலும் அதனால் வேலை இழந்த ஆட்கள் கண் முன்னர் விரிகின்றனர்.  பல மணிநேரம் பலரும் சேர்ந்து செய்ய வேண்டிய வேலைகளை ஒரு சில மணி நேரங்களில் ஓர் இயந்திரம் முழுவதுமாகச் செய்து முடித்து விடுகிறது.  இந்தக் காரணத்தினால் வேலை இழக்கும் மைதீன் பிள்ளை, வானத்தில் செல்லும் விமானத்தைப் பார்த்து ஆவேசம் கொள்கிறான்.  அவன் இருக்கும் கிராமத்தில் பிறந்து வளர்ந்த பிள்ளைகள் அரபு நாடுகளில் போய் வேலை பார்த்து வருகின்றனர்.  கை நிறைய சம்பாதிக்கும் அவர்களில் ஒருவன் பள்ளிவாசலில் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்கும் மோட்டார் ஒன்றைப் பொருத்த காரணமாகிறான். 

மைதீன் பிள்ளை அறுபது அடி ஆழமுள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து அதன் மூலம் மாதச் சம்பளம் பெற்று வாழ்க்கை நடத்தி வந்தான்.  அவனுக்கென்று யாரும் கிடையாது.  கிராமத்தில் எங்கே விழாக்கள் நடந்தாலும் தவறாமல் போய் விருந்து சாப்பிடுவான்.  இப்படிச் செல்வாக்கோடு இருந்த ஒருவனை மோட்டார் பொருத்தியபின் தண்ணீர் இறைக்கும் வேலையிலிருந்து நீக்கி விட்டனர்.  இதனால் மோட்டார் பொருத்திய செயல்பாட்டை ‘பாவம்’ என்று கூறுகிறான் மைதீன் பிள்ளை. 

வருமானமில்லாததால் தினமும் சாப்பிடுவது சவாலாக இருந்தது.  இதனால் கடனாளியாகிவிட்டான்.  நெஞ்சின் மீது யானைப் பாறை பெயர்ந்து விழுந்து விட்டது போல் துன்பப்பட்ட அவன் பாறையின் மீது இருந்த இடிந்த சேண்டப் பள்ளிவாசலில் அடைக்கலமாகிவிட்டான்.  தன் தலைக்கு மேல் பறக்கும் விமானத்தைப் பார்க்கும் போதெல்லாம் தன் ஊரின் இளைஞர்களை அரபு நாடுகளுக்குக் கொண்டு சென்ற விமானம் இதுதான் என்றெண்ணிக்  காறி உமிழ்ந்தான்.  அவன் தன் கோபத்தை இந்த நிலையில் தெரிவித்தான்.                                                               பணத்தைக் கொண்டாடும் மனிதர்கள் மனத்தைப் பற்றிக் கவலைப்படாமல் போய்விட்ட உண்மையை உரக்கச் சொல்கின்றன கதைகள்.  தன் உறவுகளையும், சக மனிதர்களையும் அன்பு பாராட்டி வாழும் இயல்பு நடைமுறையில் சாத்தியப்படுவதில்லை.  ஆனால் ஒரு விலங்கு மனிதனிடம் காட்டிய அன்பு அளப்பரியது; வியப்பானதும்கூட. வலம்புரி ஜான் எழுதிய ‘குரங்காட்டி’ கதையில் ஒரு குரங்கின் அன்பு ஆழமாகச் சொல்லப்பட்டிருக்கும். 

குரங்கு வைத்து வித்தைக் காட்டிப் பிழைப்பு நடத்தும் குரங்காட்டி குரங்கைக் கட்டி வைத்திருக்கும் வார்ப்பட்டையில் கண்ணும் கருத்துமாக இருப்பான்.  “வார்ப்பட்டை அவிழ்ந்து விட்டால் குரங்கு குதித்து ஓடி விடும் என்று மட்டும் தான் குரங்காட்டியால் நினைக்க முடிந்தது.  தான் ஓடாததற்குக் காரணம் வார்ப்பட்டை அவிழ்ந்திருப்பதல்ல.  என்னைப் புரிந்து கொள் என்று மனிதனுக்குக் கொடுக்கிற சந்தர்ப்பமே அதற்குக் காரணம்.”14  இக்கதை மனிதர்களைக் காட்டிலும் விலங்குகளிடம் அன்பு, பண்பு, பாசம் நிறைந்திருப்பதை நன்கு உணர்த்தி இதன் மூலம் மனிதனுக்குப் பாடம் கற்பிக்க விழைகிறது.  இது போன்ற ஓர் உணர்வை ‘நாராயண முதலி தெரு, 52ஆம் நம்பர் வீடு’ என்ற மீரானின் சிறுகதையும் எள்ளி நகையாடுகிறது.

தம்பி மகளின் திருமணத்திற்காகப் பெரிய தொகையை அதிக சிரமப்பட்டுச் சம்பாதித்துத் தரும் அந்தப் பெரியப்பாவை ஒரு வாரம் தன் வீட்டில் வைத்துப் பராமரிக்க விருப்பமில்லாத நிஷாவைப் பார்க்கும் போது உறவுகள் மீது கோபமே பிறக்கிறது.  இப்படித்தான் ‘ஒரு சவ ஊர்தியின் நகர்வலம்’ என்ற கதையிலும் குளிப்பாட்டி அடக்கம் செய்யப்பட வேண்டிய சவத்தை வைத்துக் கொண்டு ஊர்தியில் அந்த உடலைக் குளிப்பாட்ட உறவினர் வீட்டில் இடம் கிடைக்காதா என்று வீடு வீடாக அலைந்து கடைசியில் பள்ளிவாசலுக்கே சென்று விடும் காட்சி மனத்தைப் பிழிகிறது.

சூழலியல்

சூழலியலின் அவசியத்தைக் காலம் கடந்த பின் பேசிக் கொண்டிருக்கிறது சமூகம்.  ஆனால் இயற்கையின் அழிவை எடுத்துச் சொல்லிச் சுற்றுப்புறத்தைப் பேணிப் பாதுகாக்கும் விழிப்புணர்வைப் பல கதைகள் விளக்குகின்றன.  ஏரிகளைக் கார்ப்பரேட் கம்பெனிகளுக்குப் பட்டா போட்டு விற்று விட்ட உண்மையை ‘மிஸ்டர் மார்ட்டின்’ என்ற கதை சொல்லாமல் சொல்கிறது. 

வீர ராஜமார்த்தாண்டன் ஏரியில் கால்நடைகள் இறங்கித் தண்ணீர் குடிப்பதற்கெனத் தனியிடம், குளிப்பாட்டுவதற்குத் தனியிடம்.  அதில் யானை தண்ணீர் குடிப்பதற்கெனத் தனியிடம், குளிப்பாட்டுவதற்கும் தனியிடம்.  குளிக்கும் படித்துறைகளில் இருந்து சற்றுத் தூரத்தில் சிலர் மீன் வலை வீசிக் கொண்டிருந்தனர்.  ஏரியின் ஒரு பகுதியில் வாத்துகள் இராணுவ அணி வகுப்பாக நீந்திக் கொண்டிருந்தன.  மேகம் இழையாத நீல ஆகாயம் ஏரிக்குள்.  வானத்தில் ஏரிக்கு மேல் பகுதியில் சூரிய ஒளியை நுகர வரும் மீன்களைக் கால் நகத்தால் கொத்திக் கொண்டு போகப் பருந்துகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.  எந்தக் கொடும் வறட்சியிலும் வற்றாத ஏரி என்ற வர்ணனை தமிழ்நாட்டின் நில வளத்தை உலகத்திற்குப் பறைசாற்றும் இனிய பகுதி.

தொகுப்புரை

பணத்தைக் கொண்டாடும் மனிதர்கள் மனத்தைப் பற்றிக் கவலைப்படாமல் போய்விட்ட உண்மையை உரக்கச் சொல்கின்றன கதைகள்.   ஆங்கில வழித் தனியார் பள்ளிகளால் அரசுப் பள்ளி மூடப்படும் நெருக்கடியில் தொடங்கி, உடம்புக்குக் கேடு விளைவிக்கும் குளிர் பானங்கள் மீதான மோகம், மம்மி என்று அழைப்பதில் மகிழும் உம்மாக்கள், பிறந்த மண்ணில் வேலை பார்த்துப் பிழைக்க முடியாத அவலம், உயிரை விட பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நவீன மருத்துவமனைகள், காசு உள்ளவர்களுக்குத்தான் இலவச அவசர ஊர்தி என்று பல சூழ்ச்சிகளை அம்மணமாக அலையவிட்டிருக்கின்றன சிறுகதைகள். 

உலகமயமாக்கல் தொடங்கப்பட்டதன் விளைவாக விளிம்பு நிலை மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிய போராட்டத்தில் கிடக்கிறது.  விளிம்பு நிலை மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிய போராட்டத்தில் கிடக்கும் சூழலைப் புரிந்து கொள்ளாமல் சென்னையில் “பூமிக்கடியில் இருக்கும் தண்ணீர் முற்றிலும் உறிஞ்சப்பட்டதால் மழையும் பொய்த்துப் போனதால் சென்னையில் வாழ வசதிபடாது.  ஏதாவது கிராமம் நோக்கி  வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்” என்று தீர்மானித்த பலரின் வீடுகளுக்கு, எங்கே இருந்தாவது தண்ணீர் கொண்டு வந்து ஊற்றும் யதார்த்தத்தைக் கைதட்டி வரவேற்கும் பலர் மீரானின் சிறுகதைகளைப் படித்தபின் கைதட்டி வரவேற்பதை மறுபரிசீலனை செய்து பார்த்துக் கொள்வர். 

அரபி மாதங்களில் பத்தாவது மாதத்தை ஷவ்வால் என்று அழைப்பதையும், மலையாள ஆசிரியரை முன்ஷி என்று குறிப்பிடுவதையும், சிம்மாசனத்தை அரசு என்பதாகவும், தேங்காய் நாரை கதம்பு என்றும், உயிர் பிரியும் நேரம் என்பதை சக்ராத் என்றும் சொல்லப்படுவதையும் இவை போன்ற பிற சொற்களையும் தன் கதைகளில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

அடித்தட்டு மக்களின் குரலாக ஒலிக்கின்றன கதைகள்.  சங்க இலக்கியங்களில் காணப்படும் அவலச் சுவையை ஒவ்வொரு சிறுகதையிலும் பார்க்க முடிகிறது.  அவலம் மிகுந்த பாலைப் பாடல்கள் நம் உணர்வுகளோடு பின்னியிருப்பது போல மீரானின் சிறுகதைகளும் வாசகருடன் பயணப்படுகின்றன.

வரலாற்று ஆசிரியன் மனசாட்சியுடன் செயல்பட்டால் உண்மை வரலாற்றை அடுத்த தலைமுறையினர் தெரிந்து கொள்ள முடியும்.    அந்த வகையில் எந்தத் தற்சார்பும் இல்லாமல் தான் வாழ்ந்த சமுதாயத்தின் உண்மைகளை நேர்மையுடன் படைப்புகளில் படைத்துக் காட்டியுள்ளார் தோப்பில் முகமது மீரான்.

திறவுச் சொற்கள்

அரபு வணிகர் வருகை – இசுலாம் மார்க்கம் – புதிய கலை வடிவம் – திணை வாழ்க்கை – கலவை மொழிநடை – படைப்பே விமர்சனம் –  மனிதநேயம் – பிற்போக்குத்தனம் – சூழலியல் – பேராசை மனம் – வாழ்க்கையை ஒட்டிய படைப்பு - விளிம்பு நிலை போராட்டம் - உலகமயமாக்கல்.

சான்றெண் விளக்கம்

1.எஸ்.எம். கமால் ; தமிழகத்தில் முஸ்லிம்கள் ; அறிமுகம்

2.எஸ்.எம். கமால் ; தமிழகத்தில் முஸ்லிம்கள் ; ப.149

3.எஸ்.எம். கமால் ; தமிழகத்தில் முஸ்லிம்கள் ; பக்.151-152

4.சு. வெங்கட்ராமன் ; அகிலன் சிறுகதைகள் ஒரு திறனாய்வு ; ப.27

5.பா. உதயகுமார் ; அண்ணாவின் சிறுகதைத் திறன் ; ப.236

6.தோப்பில் முஹம்மது மீரான் ; வேர்களின் பேச்சு ; ப.24

7.மேற்படி ; ப.24

8.மேற்படி ; ப.13

9.மேற்படி ; ப.12

10.மேற்படி ; ப.211

11.மேற்படி ; ப.104

12.கலைமகள் ; ஜனவரி 2005 ; ப.40

13.மேலது ; அக்டோபர் 2005 ; ப.60

14.மேலது ; செப்டம்பர் 2004 ; ப.59

15. தோப்பில் முஹம்மது மீரான் ; வேர்களின் பேச்சு ; ப.22

16.மேற்படி ; ப.131