ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

இந்தியப் பண்பாட்டுக்குச் சோழர்கள் வழங்கிய பங்களிப்பு : மெய்யியல் – இராமானுஜரின் விசிட்டாத்வைதம்

முனைவர் க. கதிரவன் துணைப்பேராசிரியர், தமிழ்த்துறை & ஆய்வுமையம், அரசுக்கல்லூரி, சித்தூர், பாலக்காடு 30 Apr 2021 Read Full PDF

முனைவர் க. கதிரவன்

துணைப்பேராசிரியர், தமிழ்த்துறை & ஆய்வுமையம், அரசுக்கல்லூரி, சித்தூர், பாலக்காடு 678104

ஆய்வுச்சுருக்கம் :

இந்திய மெய்யியல் பள்ளிக்கு, பிற்காலச் சோழர் காலத்தவரான திராவிட மெய்யியலார் வழங்கிய பங்களிப்பினை தொடர்பான இரண்டு எடுகோள்களை இக்கட்டுரை மேற்கோள்களுடன் முன்வைக்கிறது.

  1. வட இந்திய பக்தி இயக்கத்தைச் சார்ந்த கபீர்தாசர், இரவிதாசர், மீராபாய் போன்றோர்க்கு தமிழக பக்தி இயக்கம் தூண்டுகோலாகவும் மறைமுக கரணியமாகவும் அமைந்துள்ளது.
  2.  சீக்கிய மதம் தோன்றுவதற்கான பல கூறுகளுள் ஒன்றாக இராமானுஜரின் தமிழ் வைணவத்தையும் குறிப்பிடலாம்.

திறவுச் சொற்கள்:

இராமானுஜர் , மெய்யியல், சோழர்கள் , விசிட்டாத்வைதம்

இந்தியத் துணைக்கண்டத்தின் அகன்று விரிந்த சிந்து கங்கைச் சமவெளிப் பகுதிக்கு குறுகிச் சரியும் தென்மேடகம் என்னும் தக்காணப்பீடபூமி வழங்கிய (தொல்பழங்காலத் தமிழி எழுத்துக்கள் முதல் விடுதலைப் போரின் முதல் குரல் வரை என) பங்களிப்புகள் பலவுள.  இந்தியத் துணைக்கண்டத்தில் மிக நீண்ட காலம் நிலைத்திருந்த பெரும்பேரரசு என்னும் பெருமையைத் தன்னகத்துக்கொண்ட சோழப்பேரரசு இந்தியத்துக்கு நிலவரி, நீர்ப்பாசனம், கடற்படை, உள்ளாட்சிக் கட்டமைப்பு, கட்டடவியல், சிற்பவியல், இசை, நடனம்,  இலக்கியம், மெய்யியல் எனப் பலதுறைகளிலும் தன் பங்களிப்பை வழங்கியுள்ளது.

இக்கட்டுரையில் இந்திய மெய்யியல் பள்ளிக்கு, பிற்காலச் சோழர் காலத்தவரான திராவிட மெய்யியலார் வழங்கிய பங்களிப்பினைப் பற்றி சிறிது பேசலாம். இக்கட்டுரை இரண்டு எடுகோள்களை முன்வைக்கிறது.

  1. வட இந்திய பக்தி இயக்கத்தைச் சார்ந்த கபீர்தாசர், இரவிதாசர், மீராபாய் போன்றோர்க்கு தமிழக பக்தி இயக்கம் தூண்டுகோலாகவும் மறைமுக கரணியமாகவும் அமைந்துள்ளது.
  2.  சீக்கிய மதம் தோன்றுவதற்கான பல கூறுகளுள் ஒன்றாக இராமானுஜரின் தமிழ் வைணவத்தையும் குறிப்பிடலாம்.

மெய்யியல் பங்களிப்பு :

இந்தியத் துணைக்கண்டத்தில் தோன்றிய பல மெய்யியல் பள்ளிகளுக்கும் தமிழ்ச்சமூகம் தொடக்கப்புள்ளியாகவும் வளர்ச்சித் தலமாகவும் இருந்தமையை வரலாறு தொடர்ந்து சுட்டிக்காட்டுகிறது.

உலகாயதம் போன்ற பொருள்முதல்வாத மெய்யியல் பள்ளிகளுக்கும் தமிழ்ச் சைவம், தமிழ் வைணவம் போன்ற கருத்துமுதல்வாத மெய்யியல் பள்ளிகளுக்கும் தமிழகம் முன்னோடியாய் விளங்கியுள்ளது.

கிமு ஆறாம் நூற்றாண்டில் தோன்றிய பொருள்முதல்வாத மெய்யியல் பள்ளிகளில் ஒன்றான சாங்கியத்தின் தொடக்கப்புள்ளி தமிழகமே. சாங்கியம் தமிழில் எண்ணியம் என்று வழங்கப்படுகிறது. சாங்கியக் கோட்பாட்டின் தலைவராக விளங்கியவர் சங்ககாலப் புலவரான பக்குடுக்கை நன்கணியார். இவர்  இயற்றிய,

ஓரில் நெய்தல் கறங்க ஓரில்

ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்

புணர்ந்தோர் பூவணி அணியப், பிரிந்தோர்

பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்

படைத்தோன் மன்ற, அப்பண்பிலாளன்

இன்னாது அம்ம இவ்வுலகம்

இனிய காண்க இதனியல்புணர்ந்தோரே[1]

என்னும் புறநானூற்றுப் பாடல் இந்தியா முழுமையும் அறியப்பட்டிருந்தது. தமிழகத்தில் பொருள்முதவாத மெய்யியல் மிக ஆழமாக வேரூன்றி இருந்தமையை இப்பாடல் எடுத்துக்காட்டுகிறது.

இந்திய மொழிகளில் எண்ணியத்தின் கடவுள் மறுப்பிற்கும், ஆசிவகத்தின் கடவுள் மறுப்பிற்கும் எடுத்துக்காட்டாகக் காட்டப்படுவது இவரின் இந்தப் புறம் 194ஆம் பாடலே என்பது வியப்பூட்டும் விடயமாகும். பொருள்முதவாத மெய்யியல் தமிழகத்தில் மிக ஆழமாக வேரூன்றி இருந்தது என்பதற்கு இவர் போன்றவர்களே காரணமாவர்.[2]

கிமு ஆறாம் நூற்றாண்டின் பக்குடுக்கை நன்கணியார்  என்ற கோசால மற்கலியின் கருத்துக்கள் வடநாட்டில் பரவி வைதிகத்தை எதிர்த்தோரான வர்த்தமான மகாவீரர் சைன சமயத்தைத் தோற்றுவிக்கவும் கௌதம புத்தர் பௌத்த சமயத்தைத் தோற்றுவிக்கவும் தூண்டுகோலாயின எனலாம். பின்னர் சைனமும் பௌத்தமும் சந்திரகுப்த மோரியன், அசோகன் போன்ற பேரரசர்களின் துணைகொண்டு தமிழகத்திலும் கிழக்காசிய நாடுகளிலும் பரவின. மக்கள் சமயமாக வழங்கிய சாங்கியமும் சமணமும் பௌத்தமும் தமிழகத்தில் இன்று எச்சங்களாக மிஞ்சிப்போயின. பௌத்தம் இன்று முழுவீச்சுடன் மீட்டெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு பொருள்முதவாத மெய்யியல் தமிழகத்திலிருந்து வடக்கே பரவியது போன்று, கருத்துமுதல்வாத மெய்யியலும் தமிழகத்திலிருந்து வடக்கே சென்று பரவியது, பரப்பப்பட்டது.

வடக்கிலிருந்து வைதிகம் வந்ததைப் போன்று தெற்கிலிருந்து சிவனியம், மாலியம், முருக வழிபாடு, தாய்த்தெய்வ வழிபாடு ஆகியன வடக்கே சென்றன என்பர்.

சோழப் பேரரசின் இறுதிப்பகுதியைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தவரும் விசிட்டாத்வைதம் தந்தவருமான இராமானுஜர் விசிட்டாத்வைதம் அடிப்படையிலான தமிழ் வைணவத்தைக் கசுமீர் வரை பரப்பியுள்ளார்.

ஆண்டாளும் மீராவும்

நாயன்மார்களும் ஆழ்வார்களும் வளர்த்தெடுத்த தமிழகத்தின் பக்தி இயக்கமே வட இந்தியாவின் பக்தி இயக்கத்துக்கு அடிகோலியது எனலாம்.[3] அதற்குச் சான்றாக பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளுக்கும் வட இந்தியப் பக்தி இயக்கத்தின் இசைக்கவியான மீராவுக்குமான தொடர்பினை எடுத்துக்காட்டலாம்.

திருவரங்கத்து அரங்கநாதப் பெருமாளைத் தன் கணவராக அடையவேண்டும் என எண்ணிப் பாடிய தமிழகத்தின் ஆண்டாள்தான் கண்ணன் மீது காதல்கொண்டு கட்டிய கணவனை விட்டுப் பிரிந்து பாடல்கள் இயற்றிய வட இந்தியாவின் மீராவிற்கு முன்னோடியாக அமைந்தவள் என்று கூறலாம்.

விஷ்ணுவின் மீது கொண்ட காதல் என்னும் பொதுத்தன்மையையும் காலத்தால் முற்பட்டமையையும் கொண்டு மட்டுமன்று வேறொரு ஏற்கத்தக்க தொடர்பினையும் சுட்டிக்காட்டலாம்.

திருமுறைத் தொகுப்பும் திவ்யபிரபந்தத் தொகுப்பும் :

சைவர்களான சோழர்கள் காலத்தில்தான் நாயன்மார்களின் பாடல்கள் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. சிவபாதசேகரன் என்று தன்னைக் கல்வெட்டுக்ககளில் அழைத்துக்கொண்ட முதலாம் இராஜராஜசோழனே நம்பியாண்டார் நம்பியைக் கொண்டு திருமுறைகளைத் தொகுக்கச் செய்தான் என்று வரலாற்றாய்வாளர்கள் கூறுவர்.

நம்பியாண்டார் நம்பி இராஜராஜன் காலத்திற்கு முன் வாழ்ந்தவர் எனவும் ஒன்பதாம் திருமுறையில் இடம்பெற்றிருக்கும் பதிகம் பாடிய கருவூர்ச்சித்தர் இராஜராஜனுக்குக் காலத்தால் பிற்பட்டவர் எனவும் சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர் எனினும் முற்கூறிய கருத்து பெரும்பாலான வரலாற்றாசிரியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இராஜராஜன் தன் முன்னோர் போல் பாசுபதச் சைவநெறியைப் பின்பற்றியவன் எனப் பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். நொபுரு கராஷிமா, சுப்புராயலு போன்ற வரலாற்றறிஞர்கள் மேற்கொண்ட அண்மைக்கால ஆய்வுகளின் முடிவுகள் இராஜராஜன், பாசுபத சைவநெறியிலிருந்து மாறுபட்ட சைவசித்தாந்த நெறியினைப் பின்பற்றியவன் என்பதையும் நம்பியாண்டார் நம்பி இராஜராஜன் காலத்தவராக இருக்கவே சாத்தியங்கள் அதிகம் என்பதையும், நிறுவுகின்றன.

பாசுபத சைவம் ஆத்மார்த்த பூஜையினை வலியுறுத்துகிறது. ஆத்மார்த்த பூஜை என்பதனை ஒருவன் தனக்காக இறைவனை வழிபடுவது என்று பொருள் கொள்ளலாம். சைவசித்தாந்த நெறி பரார்த்த பூஜையினை வலியுறுத்துகிறது. பரார்த்த பூஜை என்பதனை ஒருவன் பிறரது நன்மைக்காக வழிபடுவது என்று பொருள் கொள்ளலாம். எனவே சைவசித்தாந்த நெறி பொதுமக்களின் பாமரரின் கடைத்தேற்றத்துக்காக தன் கொள்கைகளையும் வழிபடுமுறைகளையும் நிறுவ ஏதுவாக பக்தி வழிபாட்டை முறைப்படுத்த முனைந்தது.[4]

பாமரர்களின் கடைத்தேற்றத்துக்காகத்தான் நாயன்மார்கள் பாடிய தேவாரப் பாடல்களைத் தொகுப்பதற்கும் அதனைக் கோயில்கள்தோறும் இசையோடு பாடுவதற்கும் தேவையான ஏற்பாடுகளை இராஜராஜன் செய்தான் என்பர்.

இராஜராஜன் சைவனாக இருந்தபோதிலும் அவனுடைய அரசு சமயப்பொதுமை கொண்ட அரசாகவே இருந்தது. ஆகவே, சைவர்களான சோழர்கள் சிவனுக்குக் கோயில்கள் கட்டியும் மண்டளிகளாகவும் செங்கற்றளிகளாகவும் இருந்த சிவன் கோயில்களைக் கற்றளிகளாக மாற்றியமைத்தும் திருமுறைகளைத் தொகுத்தும் சைவத்துக்குத் தொண்டாற்றியது போலவே, ஆங்காங்கே வைணவக் கோயில்களையும் பௌத்த விகாரங்களையும் கட்டியும் சமணப் பள்ளிகளுக்கு பள்ளிச்சந்தம் வழங்கியும் ஆழ்வார்கள் பாடிய பாடல்களை நாதமுனி என்னும் வைணவ அறிஞரைக் கொண்டு தொகுக்கச் செய்தும் தங்கள் சமயப்பொறையைக் காட்டிக்கொண்டனர் எனலாம்.

நாதமுனிகள் ஆழ்வார் பாடல்களைத் தொகுத்து நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் என்னும் தொகுப்பினை உண்டாக்கியதும் இராஜராஜன் காலமே என்பர்.

இராமானுஜர்

அத்வைதம், விசிட்டாத்வைதம், த்வைதம், திராவிடத்தைச் சேர்ந்த மூன்று வேதாந்திகள் பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதி விளக்கமளித்துள்ளனர். இன்றைய கேரளப் பகுதியைச் சார்ந்த காலடியில் தோன்றிய ஆதிசங்கரர், இன்றைய தமிழகப் பகுதியைச் சார்ந்த இராமானுஜர், இன்றைய கர்நாடகப் பகுதியைச் சார்ந்த மத்வர் என்னும் மூவரும் முறையே அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் என்று மூன்று விதமான விளக்கங்களைத் தந்துள்ளனர் இம்மூன்று நூல்களையும் திராவிடம் இந்தியத்துக்கு வழங்கிய பங்களிப்பு எனக்குறிப்பிடலாம். இம்மூவரும் தென்னிந்தியாவில் மட்டுமன்றி வடநாட்டிலும் தங்கள் மடங்களை நிறுவி, சீடர்களைச் சேர்த்து தங்கள் சமயப்பிரிவினை நிலைநாட்ட முயன்றனர்.

இம்மூவரில் இடையரான இராமானுஜர் நாதமுனிகள், யமுனாச்சாரியார் ஆகியோரின் வழிவந்தவர். இவரின் காலம், சைவப்பற்றுமிக்கு சமயப்பொறை இழந்து ஆண்ட முதலாம் குலோத்துங்க சோழனின் காலத்திற்கு இணையானதாகும்.

 சோழர்கள் சைவத்தைப் பேணிய அளவுக்கு இல்லாவிடினும் வைணவத்திற்கும் நல்கைகள் தந்து காத்தனர். திருவரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு பல நல்கைகளைச் சோழர்கள் நல்கியுள்ளதைக் கல்வெட்டுகள் வழி அறியமுடிகிறது. பதினொன்றாம் நூற்றாண்டின் இறுதி அல்லது பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருவரங்கம் கோயில் பொறுப்பாளராக இராமானுஜர் செயல்பட்டார். இராமானுஜர் ஆதிசங்கரரின் ஞானவழியில் கடைத்தேற்றம் அடையலாம் என்னும் கொள்கையினை ஏற்றார் எனினும் பக்தி வழியே கடைத்தேற்றத்துக்கான சிறந்த வழி எனக்கருதி அதனை வளர்க்கப் பெரிதும் முயன்றார்.

வேதாந்த நெறிச் சட்டகத்துக்குள் ஆழ்வார்கள் முன்வைத்த பக்தி வழியினை இணைத்து தமிழ்மரபும் பார்ப்பனமரபும் ஒத்திசைந்து செல்லத்தக்க புதிய நெறியொன்றை வடிவமைத்து வைணவத்துக்கு புத்துயிரூட்டினார் இராமானுஜர். தாழ்த்தப்பட்ட மக்களிடையே பரம்பொருளுக்கே சரணாகதி என்னும் தத்துவத்தைப் போதித்து வைணவத்தைப் பரப்பினார். இராமானுஜரின் இந்நெறியே விசிட்டாத்வைதம் என அழைக்கப்பட்டது.[5]

வட இந்தியப் பக்தி இயக்கத்தின் மூலவராக இராமானுஜரே குறிப்பிடப்படுகிறார். த்வைதம் நிறுவிய மத்வரோடு நிம்பர்கா, வல்லபாச்சார்யா போன்ற தென்னிந்தியர்களும் வட இந்தியப் பக்தி இயக்கத்தினராக அறியப்படுகின்றனர். எனினும் இக்கட்டுரை இராமானுஜரின் பங்களிப்பினை மட்டும் எடுத்துப் பேச முனைகிறது. 

இராமானுஜரும் ஆண்டாளும் :

விசிட்டாத்வைதக் கோட்பாட்டினை முன்வைத்த இராமானுஜர், சோழர் காலத்தில் நாதமுனிகளால்  தொகுக்கப்பெற்ற ஆழ்வார் பாடல்களைப் போற்றிப் பரப்பியவர். ஆழ்வார்கள் மீது, குறிப்பாக ஆண்டாள் மீதும் நம்மாழ்வார் மீதும் பெரும் பற்றுக் கொண்டிருந்தவர். இராமானுஜர் ஆண்டாள் மீது கொண்டிருந்த மதிப்பிற்கு எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்வை திவ்யசூரிசரிதம் எடுத்தியம்புகிறது.

திருவரங்கத்துப் பெருமாளாகிய கண்ணன் தன் கணவனாக வேண்டும் என விரும்பிய ஆண்டாள், தன் வேண்டுதல் நிறைவேற அருளினால், இன்னது நேர்ந்துகொள்கிறேன் என நாச்சியார் திருமொழியின் 89ஆம் பாசுரத்தில் திருமாலிருஞ்சோலை நம்பிக்கு நேர்ந்து கொள்கிறாள்.

நாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்குநான்

நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்

நூறுதடா நிறைந்த அக்கார வடிசில்சொன்னேன்

ஏறுதிருவுடையான் இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ[6]

நாச்சியார் திருமொழியில் மதுரை அழகர்கோயில் பெருமாளுக்கு ஆண்டாள் வாய்நேர்ந்த இந்த வேண்டுதலை ஆண்டாள் நிறைவேற்றவில்லை என்பர் வைணவப் பெரியோர். திருவரங்கம் சென்று திருவரங்கத்துப் பெருமாளோடு இரண்டறக் கலந்துவிட்ட ஆண்டாளுக்கு மதுரைவந்து நேர்த்திக்கடன் நிறைவேற்றிச் செல்ல நேரமிருந்திருக்காது எனக்கொள்ளலாம்.

நாலாயிரத் திவ்யப் பிரபந்தப் பாடல்களை மக்களிடம் பரப்புவதில் பேரார்வம் கொண்டிருந்த, ஆண்டாளுக்குச்  சில நூற்றாண்டுகள் பின்வந்தவரான இராமானுஜர் திருப்பாவை ஜீயர் என்றே போற்றி அழைக்கப்பட்டார். திருப்பாவை கற்றவரான இராமானுஜர் நாச்சியார் திருமொழியையும் கற்றிருந்தமையால் ஆண்டாள் மாலிருஞ்சோலை நம்பிக்கு நேர்ந்த நேர்த்திக் கடனைத் தெரிந்து, ஆண்டாளின் சார்பாக நூறு தடா வெண்ணெயும் நூறு தடா அக்காரவடிசிலும் மாலிருஞ்சோலை நம்பிக்குப் படைத்து ஆண்டாளின் வேண்டுதலை  நிறைவேற்றிவைத்தார் என்று திவ்யசூரிசரிதம் விளம்புகிறது. ஆண்டாளின் நேர்த்திக்கடனை நிறைவேற்றிவைத்தமையால் ஆண்டாளின் அண்ணனாக வைணவர்கள் இராமானுஜரைப் போற்றினர்.

எனில் இராமானுஜர் விசிட்டாத்வைதத்தின் அடிப்படையிலான தமிழ் வைணவத்தினைப் தென்னகத்தில் பரப்பியதோடு ஆழ்வார்களின் பெருமையையும் ஆண்டாளின் சிறப்பையும் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரப்பியிருப்பார் எனக் கொள்ளலாம்.

இராமானுஜர் சோழமன்னன் ஒருவனால் திருவரங்கம் கோயில்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதாகவும் அதனால் இன்றைய கர்நாடக மாநிலத்திலுள்ள மேல்கோட்டை என்னும் பகுதியில் சிறிதுகாலம் வாழ நேர்ந்தது எனவும் வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இராமானுஜர் எழுதிய பிரம்மசூத்திரஉரை முதலான படைப்புகள், வைணவ வளர்ச்சிக்குப் புத்துயிர்ப்பு அளித்ததோடு மட்டுமன்றி தமிழ்ச் சைவசித்தாந்தந்தின் மறுமலர்ச்சிக்கும் அடிகோலியது என்பர். [7]

சோழப்பேரரசு காலத்தில் தமிழகத்தின் இராஜராஜசோழன் கசுமீரிலிருந்த சைவ சித்தாந்திகளால் கவரப்பட்டு சைவசித்தாந்தத்தையும் சைவகுருமார்களையும் தமிழகம் கொண்டுவந்தான் என்பர். ஒருவகையில், பிற்காலத்தில் தமிழ்ச் சைவசித்தாந்தம் தோன்றுவதற்கு இராஜராஜன் கொணர்ந்த கசுமீர் சைவசிந்தாந்தமும் இராமானுஜரின் விசிட்டாத்வைதமும் இணைந்தும் உறழ்ந்தும் காரணமாயுள்ளன எனலாம்.

ஆயின், இராமானுசரின் விசிட்டாத்துவைதத் தத்துவங்கள் வடநாட்டில் கசுமீர் வரை பிரபலமடைந்தன என்பது வரலாற்று உண்மை.

இராமானுஜரின் வடநாட்டுச் சீடர் பரம்பரை :

இராமானுஜர் ஜாதி வேற்றுமையைச் சாடியவர் எனத் தமிழக வரலாற்றறிஞர்களும் வைணவ அறிஞர்களும் குறிப்பிடுகின்றனர். இராமானுஜரின் இத்தன்மை இராமானுஜரின் வடநாட்டுச் சீடர்களாக அறியப்படுபவர்களிடமும் வெளிப்படுவதைக் காணமுடிகிறது.

இராமானுஜரின் விசிட்டாத்வைதத்தை ஏற்றவராக இராகவானந்தர் என்னும் பெரியார் அறியப்படுகிறார் எனினும். இந்த இராகவானந்தரின் சீடரான பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இராமானந்தர்தான் விசிட்டாத்வைதத்தை வடநாட்டில் வெகுவாகப் பரப்பி அதன்வழி இராம பக்தியைப் பரப்பினார் எனப் போற்றப்படுகிறார். காசியில் ஜாதிமதவேற்றுமை பாராது வைணவத்தைப் பரப்பித் தன்னைப் பின்பற்றக் கூடிய இராமானந்தி சம்பிரதாயம் என்று அழைக்கப்பட்ட வைணவப் பரம்பரையை உருவாக்கினார். இராமானந்தரின் சீடர்களாக நால்வருணத்தவரும் இருந்தனர் எனினும் இராமானந்தர் தான் எழுதிய ஆனந்த பாஷ்யம் என்னும் நூலில் சூத்திரர்கள் வேதம் படித்தல் தகாது என மரபின் வழிநின்று பேசுவதையும் காணமுடிகிறது. இராமானந்தர் இராமானுஜரைப் போலன்றி வருணாசிரம உயர்வுதாழ்வினை ஏற்று நடந்தவராகவேச் சுட்டப்படுகிறார்.

விசிட்டாத்வைதமும் சீக்கியமும் :

இராமானந்தரின் சீடர்களுள் கபீர்தாசர், இரவிதாசர் ஆகியோர் முதன்மையானவர்கள்.

இவர்கள் இருவருமே புரட்சித்துறவி இராமானுஜரைப் போன்றே, ஜாதிவேற்றுமையை ஒழிக்கப் பாடுபட்டவர்கள். இவர்கள் இருவருமே பக்திக் கீர்த்தனைப் பாடல்களை இயற்றியவர்கள். இந்து மத மறுமலர்ச்சிக்காகப் பாடுபட்டவர்களாகச் சுட்டப்படும் இவர்கள் இருவரின் பாடல்கள், பிற்காலத்தில் தோன்றிய சீக்கிய மதத்தில் பெரும்செல்வாக்கைச் செலுத்தின. சீக்கிய மதநூலான குருகிரந்த் சாகிப்பில் இவர்களின் பாடல்கள் பலவற்றைக் காணமுடிகிறது என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

இராமனந்தரைப் பின்பற்றி இராமானந்த சம்பிரதாயம் என்னும் ஜாதிமறுப்புக் குழுவினர் தோன்றியதைப் போன்று கபீர்தாசரைப் பின்பற்றி கபீர்பந்த் என்னும் ஜாதிமறுப்புக் குழுவினரும் இரவிதாசரைப் பின்பற்றி இரவிதாசியர் என்னும் ஜாதிமறுப்புக் குழுவினரும் தோன்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்ப்பனக் கைம்பெண்ணுக்குப் பிறந்து குளக்கரையில் கைவிடப்பட்டு இசுலாமிய நெசவாளரால் எடுத்து வளர்க்கப்பட்டதாகப் புனையப்படும் கபீர்தாசர் இராமானந்தரின் சீடராக விளங்கியதோடு இசுலாமிய ஞானி பீர்தாஹி என்பவரின் கருத்துக்களாலும் ஈர்க்கப்பட்டார். எனவே கபீர்தாசர் உருவ வழிபாட்டை நிராகரிக்கும் புதிய வழிபாட்டு முறை ஒன்றை வடிவமைத்தார். விசிட்டாத்வைதமும் இசுலாமும் இணைந்த புதுநெறி ஒன்று பிறந்தது.

ஆண்டவன் மசூதியின் உள்ளேதான் இருக்கிறானெனில்

இந்த உலகம் யாருக்குச் சொந்தமானது?

நீ மேற்கொண்ட புனித யாத்திரையில்

காண நேர்ந்த கற்சிலைதான் இராமனெனில்,

உலகத்தில் நிகழ்வனவற்றை அவனல்லாமல் அறிவான் யார்?

ஹரி கீழ்த்திசையில் இருக்கிறான்,

அல்லா மேற்றிசையில் இருக்கிறான் என்கிறாயே,

நீ உன் இதயத்தை உள்நோக்கிப்பார்.

அங்கே கறீம் ராம் இருவரையும் காண்பாய். ….. [8]

என்னும் கபீர்தாசரின் பாடலில் நம்மாழ்வாரின் குரலும் எதிரொலிக்கக் காணலாம்.

இராமானுஜரும் மீராபாயும்

 இராமனுஜரின் சீடர் பரம்பரையில் வந்தவரும், செருப்பு தைக்கும் குடும்பத்தில் பிறந்தவருமான இரவிதாசரின்  சீடர்தான் இராசபுதனத்து மன்னன் போஜனின் மனைவியான மீராபாய். கணவனை இழந்தபின் சிதையேற மறுத்த மீராபாய் அன்றைய வைதிகத்தின் கண்களில் பித்தராகத் தெரிந்ததில் வியப்பில்லை.

கண்ணன் மீது மாறாப் பற்று கொண்டு பக்தி இலக்கியம் படைத்த மீராபாய்க்கும் இரவிதாசருக்கும் இடையில் நூறாண்டுகள் இடைவெளி உண்டு எனக்கூறி சில ஆய்வாளர்கள் இரவிதாசருக்கும் மீராவிற்குமான தொடர்பினை மறுத்துரைக்க முனைகின்றனர். மீரா சிறுமியாக இருந்தபோது அவளுக்கு கண்ணன் சிலையைத் தந்தவர் இரவிதாசர் என்போரும் உண்டு இராஜஸ்தான் மாநிலத்தில் சித்தூர்கர் மாவட்டத்தில் அமைந்துள்ள மீராபாய் வழிபட்ட கண்ணன் ஆலயத்தின் முன்பு இரவிதாசரின் பாதச்சுவடுகள் அமைந்துள்ள சிறுகுடை அமைக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி மீரா, இரவிதாசரின் சீடர்தான் என நிறுவுவோரும் உண்டு.

எந்தன் உடலை விளக்காக்கி இடுதிரியாக்கி இதயத்தை

உன்பால் உள்ள காதலையே எண்ணை ஆக ஏற்றிடுவேன்

இரவும்பகலும் எரியட்டும்

அருள்மிகுஅடியார் கூடிடும் உன்

அழகிய சந்நிதி முன்னிலையில்

உன்னைப் பிரிந்து ஒருக்கணமும் இருக்கமாட்டேன் இனி ஐயா

என்னை உனதாய் ஏற்றுக்கொள் என்னை உனைப்போல் ஆக்கிவிடு[9]

என்னும் மீராவின் பாடல் முதலாழ்வார்களின் பாடலை நினைவூட்டுவதாக அமைந்துள்ளமை மீராபாயிடம் ஆழ்வார்பாசுரங்கள் பெற்றிருந்த செல்வாக்கை உணர்த்துவதாய் அமைகிறது எனலாம்.

ஜாதிவேற்றுமை, மதவேற்றுமை ஆகியன மட்டுமன்றி பால்வேற்றுமையும் இறைவனை அடையத் தடையில்லை என்பதே மீரா வழங்கும் செய்தி. அவ்வகையில் வடநாட்டில் போற்றிக் கொண்டாடப்படும் மீராவின் பக்தி இலக்கியப் பாடல்களுக்குப் பின்னணியில், தமிழகத்தில் போற்றிக் கொண்டாடப்படும் ஆண்டாள் முதலான ஆழ்வார்களின் பாசுரங்கள் இருப்பதனையும் இத்தொடர்புக்குக் காரணமாக அமைபவர் பிற்காலச் சோழர்கால மெய்யியல் அறிஞரான இராமானுஜரே என்பதனையும் அறியலாம்.

நிறைவுரை

     ஆண்டாளின் திருப்பாவை, நாச்சியார் திருமொழிப் பாடல்களுடன் மீராவின் கீர்த்தனைப் பாடல்களை ஒப்பிட்டு ஆய்வுசெய்வதன்வழி இத்தொடர்பின் மெய்மைபொய்மைகளை ஆய்ந்தறியலாம். மேலும் ஆழ்வார் பாடல்களுடனும் விசிட்டாத்வைத விளக்க நூல்களுடனும் கபீர்தாசர், இரவிதாசர் பாடல்களை ஒப்பிட்டு ஆய்வுசெய்வதன் வழி இத்தொட்ர்பு உறுதிப்படக்கூடும். நன்றி.

 


[1] பா.194, புறநானூறு

[2] பக். 39, பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், ஜூன் 2016

[3] P 366, A Concise History of South India, Noboru Karashima

[4]  P.149, Noboru-Karashima 2014

[5]  Pp 149-150, A Concise History of South india, Noboru Karashima (Editor)

[6] பா.89, நாச்சியார் திருமொழி, ஆண்டாள்

[7] P 153, A Concise History of South India, Noboru Karashima

[8] பா. 69, கபீரின் நூறு பாடல்கள், எழில்முதல்வன்

[9] http://kannansongs.blogspot.com/2007/04/blog-post_25.html