ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

பழந்தமிழர் திருமணம்

ம.நந்தினி, முனைவர்பட்ட ஆய்வாளர் தமிழ் உயராய்வு நடுவம் டோக் பெருமாட்டி கல்லூரி மதுரை-2 30 Apr 2021 Read Full PDF

கட்டுரையாளர்

ம.நந்தினி (F10243)

முனைவர்பட்ட ஆய்வாளர்

தமிழ் உயராய்வு நடுவம் 

டோக் பெருமாட்டி கல்லூரி

மதுரை-2

நெறியாளர்    

முனைவர் அ.கவிதாராணி

துறைத் தலைவர்

தமிழ் உயராய்வு நடுவம்

டோக் பெருமாட்டி கல்லூரி

 மதுரை-2                                                                                                                                                                                                                                         

ஆய்வுச்சுருக்கம்

     திருமணம் என்பது மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப் படைத்துக்கொள்ளப்பட்ட  ஓர் ஒழுக்கமுறை ஆகும். திருமணமானது மனித சமுதாயத்தின் பொதுமையான ஒன்றாக இருப்பினும் மதம், இனம், பண்பாடு, மனப்பாங்கு ஆகியவற்றிற்குத்தக மாறுபடும் இயல்பினது. தமிழ்ச் சமூகம் பழமைச் சமூகம் மட்டுமல்ல அது உலகளாவிய பண்பாட்டுப் படிமலர்ச்சியின் அனைத்து படிநிலைகளையும் கொண்டது. அத்தகைய தமிழ்ப் பண்பாட்டின்  திருமணமுறை தமிழரின் தனித்த பண்பாட்டினை உணர்த்தும் நிலையில் அமைந்திருந்ததனைத் தொல்காப்பியமும்  சங்கப் பாடல்களும் தெளிவுறுத்துகின்றன.சங்க இலக்கியம் காட்டும் பழந்தமிழரின் வாழ்வு களவு மற்றும் கற்பு வாழ்வாகும். களவு வாழ்வில் நேர்ந்த பொய் வழு ஆகியவற்றால் கற்பு மணம் பலரின் முன்னிலையில் நிகழும் சடங்காக வலியுறுத்தப்பட்டது. கற்பு வாழ்வின் தொடக்கமாக அமைந்த திருமணம் நிகழ்ந்த முறைகளும் அச்சடங்கில் பின்பற்றப்பட்ட பழக்கவழக்கங்களும் குறித்து இக்கட்டுரை ஆய்வு செய்கின்றது.

திறவுச் சொற்கள்

     திருமணம்-பழந்தமிழர்-பண்பாடு-இல்லறம்-நெறிகள்-வினைமுறை-பழக்கவழக்கம்

முன்னுரை

     தமிழ்ச் சமூகம் தொன்மையும் தொடர்ச்சியும் கொண்டது. அது பல்வகைத் திணைகளையும் பல்வகைச் சமூக முறைகளையும் ஒரு நீண்ட நெடிய அறுபடாத தொடர்ச்சியோடு பெற்று வந்திருக்கிறது. இதனூடே மாற்றங்களும் நிகழ்ந்து வந்துள்ளன. இத்தகைய தமிழ்ப் பண்பாட்டின் முக்கிய அடையாளங்களுள் ஒன்று திருமணம். திருமணம்; என்னும் வினைமுறையே இல்லறத்தின் தொடக்கமாக அமைந்து குடும்ப வாழ்விற்கும் சமூக வாழ்விற்கும் வழியமைக்கிறது. பழந்தமிழரின் பண்பாட்டையும் வாழ்வியலையும் வெளிக்காட்டுவதாகத் தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் அமைந்துள்ளன. அவற்றின் வழி பழந்தமிழரின் திருமணத்தை  விளக்குவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

திருமணம்

     தமிழர் பண்பாட்டின் இன்றியமையாக் கூறாகத் திகழ்வது குடும்ப அமைப்பாகும். குடும்ப வாழ்வின் அடிப்படை திருமணம் ஆகும். “திருமணம் என்பது ஓர் ஆடவனும் ஒரு பெண்ணும் இணைந்து வாழ்வதற்குச் சமுதாயத்தால் ஏற்படுத்தப்பட்ட வினைமுறையாகும்.”1 இவ்வினை  காரணமாக மணமக்கள் சில மதிப்புகளையும் பல பொறுப்புகளையும் பெறுகின்றனர்.

பண்டைத் தமிழர்கள் திருமணத்தை ஓர் உயர்ந்த வாழ்வியல் நெறியாகக் கொண்டிருந்தனர். இதனைத் தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் தெளிவுறுத்துகின்றன. திருமணம் என்பதைக் குறிக்க மன்றல், வரைதல், வரைவு, கரணம் முதலிய சொற்களைத் தொல்காப்பியமும் வதுவை, வதுவை நன்மணம், மன்றல், கடி, வரைவு மணம், பெண்கோள் ஒழுக்கம் போன்ற சொற்களைச் சங்க இலக்கியங்களும் பயன்படுத்தியுள்ளன.

திருமணத்தின் தோற்றம்

ஓர் ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாக இல்லறம் நடத்த இசைந்து ஒன்றிணைவது திருமணம் ஆகும். களவும் கற்பு வாழ்வுமே அன்பின் ஐந்திணையில் போற்றப்பெறும் உயரிய வாழ்வியல் நெறியாகத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இதில் களவு என்பது ஒத்த தலைவனும் தலைவியும் மனமொத்து வாழும் காதல் வாழ்வாகும். இன்பம், பொருள், அறம் என்று சொல்லப்பட்ட அன்பின் ஐந்திணையில் ஆராயுமிடத்து மறையோரால் வரையறை செய்யப்பட்ட எண்வகை மணத்துள் கந்தருவ மணத்தை ஒத்தது களவு மணமாகும். கற்பு மணவாழ்விற்கு முன்பு சமுதாயத்தில் மேலோங்கிய நிலையில் களவு மணமே இருந்துள்ளது. அத்தகைய களவு வாழ்வில் நேர்ந்த பொய், வழு போன்ற காரணங்களால் கற்பு மணம் பலரின் முன்னிலையில் நிகழும் சடங்காக  வலியுறுத்தப்பட்டது என்பதனை,

“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்   

ஐயர் யாத்தனர் கரணம் என்ப”  (தொல்.,பொருள்.,கற்.,நூ.143)

என்று தொல்காப்பியர் தெளிவுறுத்துகிறார். தொல்காப்பியத்தின் வாயிலாகக் களவு வெளிப்பட்ட பின் வரைதல், களவு வெளிப்படும் முன் வரைதல் என்ற இரு வழிகளில் திருமணம் நடந்தேறியது என்பதனை,

“வெளிப்பட வரைதல் படாமை வரைதல் என்று 

 ஆயிரண்டு என்ப வரைதல் ஆறே”(தொல்;.,பொருள்.,கள.,நூ.138)      

என்ற நூற்பாவினால் அறிய இயலுகிறது. தலைவன் தலைவியின் களவு வாழ்க்கை கற்பு மணமாக மாறுவதற்குத் தோழியின் அறத்தொடு நிற்றல் முக்கிய காரணமாக இருந்துள்ளது. களவு இல்லாமலும் கற்பு வாழ்க்கை அமையப்பெறும்.  இவ்வாறு திருமணத்தைத் தொடக்கமாகக் கொண்டு அமையப்பெறும் வாழ்க்கை கற்பு வாழ்க்கை எனப்படுகிறது.  

“கற்பெனப் படுவது கரணமொடு புணரக்  

       கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்

கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே”           (தொல்.,பொருள்.,கற்.,நூ.140) 

எனக் கற்பின் இலக்கணம் கூறும் தொல்காப்பிய வரிகளின்வழித் திருமணமானது சடங்கொடு பொருந்தியதாகக்  கொள்ளுதற்குரிய மரபினையுடைய தலைவனுக்குக் கொடுத்தற்குரிய மரபினையுடைய தலைவியைத் தமர் மணம் செய்துகொடுப்ப மணந்து கொள்ளுதல் என்பது புலப்படுகிறது.  தலைவி தலைவனுடன் உடன்போக்கு சென்றவிடத்துத் தமர் மணம் செய்து கொடுக்காமலே திருமணம் நடந்தேறியுள்ளது. மணமான பின்னர் தமர் ஏற்றுக்கொள்ளும் சூழலும் அமைவதுண்டு.முண்டக மலர் அரிதினில் பறிக்கப்படாமல் காற்றினால் உதிர்ந்து எளிதில் கொள்ளுமாறு மணற்பரப்பில் பரந்திருந்தன. அதுபோல தாயும் தந்தையும் எளிதில் உடன்பட்டுத் தலைவி விரும்பிய தலைவனை மணமுடித்த நிகழ்வினை,

“கூன் முன் முண்டகக் கூர்ம்பனி மாமலர்  

நூலறு முத்தின் காலொடு பாறித்   

துறைதொறும் பரக்கும் தூமணற் சேர்ப்பனை

யானும் காதலென்;: யாயும் நனி வெய்யள்:

எந்தையும் கொடீஇயர் வேண்டும்   

அம்பல் ஊரும் அவனொடு மொழிமே”    (குறுந்தொகை,51)

என்ற குறுந்தொகைப் பாடல் புலப்படுத்தியுள்ளது.

திருமணப்பொருத்தம்

 களவு மற்றும் கற்பு மணங்களின் வழி இணையும் மணமக்கள் இருவரும்,

“ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப 

மிக்கோன் ஆயினும் கடிவரை இன்றே” (தொல்.,பொருள்.;,கள.,நூ.90)

என்ற கூற்றிற்கேற்ப ஒத்தப் பண்புகளைக் கொண்டிருத்தல் வேண்டும் என்பதும் தலைவன் அக்குணங்களில் மிக்கு விளங்கினாலும் குற்றமில்லை என்பதும் அறியலாகிறது. மேற்கண்ட ‘ஒத்த’ என்ற மணமக்களுக்கிடையே இருக்கவேண்டிய மணப்பொருத்தங்களை மெய்ப்பாட்டியல் விளக்கியுள்ளது. அவையே,

“பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு

உருவு நிறுத்த காமவாயில்

நிறையே அருளே உணர்வொடு திருவென

 முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே”   (தொல்.,பொருள்.,மெய்.,நூ.269)

என்பதாகும். இவற்றின் வழி  ஒரே குடியில் பிறத்தல், குடிக்கேற்ற ஒழுக்கங்களை மேற்கொள்ளுதல், ஆள்வினையுடைமை, ஏற்ற பருவம், வடிவால் ஒத்திருத்தல், ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நிலைத்த அன்பு, மன அடக்கம், பிறரின் வருத்தம் கண்டு இரங்குதல், புரிந்துணர்வு,  வளம் முதலியவற்றில் ஒத்திருந்தால் இல்லற வாழ்வு நலமும் வளமும் பெற்றுத் திகழும் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இவையே இல்வாழ்வில் இன்பத்தின் நிலைக்களன்களாகத் திகழ்கின்றன.

      மணப்பொருத்தங்கள் மட்டுமன்றி இல்வாழ்வின் இனிமையைச் சிதைக்கவல்ல மணமுறிவுக்கான காரணிகளையும் மெய்ப்பாட்டியலில் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

“நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி

வன்சொல் பொச்சாப்பு மடிமையொடு குடிமை

இன்புறல் ஏழைமை மறப்பொடு ஒப்புமை

என்றிவை இன்மை என்மனார் புலவர்”  (தொல்.,பொருள்.,மெய்.,நூ.270)

இம்மெய்ப்பாட்டியல் வரிகளின்வழி இல்லறத்தாருக்கான ஆகாத பண்புகள் தெளிவுறுத்தப்படுகின்றன. இவற்றின்வழி பொறாமை, அறன் அழிய நெறி பிறழும் இயல்பு, தன்;னை வியத்தல், பழி தூற்றுதல், வருத்தமுறுத்தும் கடுஞ்சொல் கூறல், தமக்குரிய கடமைகளைத் தவிர்த்தல், சோம்பல், தன் குடிப்பெருமை கொள்ளல், பேதைமை, மறதி, தன் துணையைப் பிறருடன் ஒப்பிடல் முதலிய குணங்கள் இல்லற வாழ்வையே அழிக்கும் தன்மை கொண்டவை என்பது அறியலாகிறது. இவ்வாறு இல்லற வாழ்வினைத்தொடங்கவிருக்கும் மணமக்களின் உறவு வலுபெற்று நீடித்த வாழ்வாக அமைவதற்கும் பழந்தமிழர் வழிவகுத்துள்ளனர் என்பது புலனாகிறது.

 

திருமண நிகழ்ச்சி

     சங்க காலத் திருமண நிகழ்வில் மணம் செய்துவைக்கும் ஆரவாரமுடைய முதிய மங்கல மகளிர் தலையில் நிறைநீர் குடத்தினைச் சுமந்தவராய்க் கைகளில் புதிய அகன்ற மண்டை என்னும் கலத்தினை  ஏந்தியவராய் ஒன்றுகூடி முன்னே தருவனவற்றையும் பின்னே தருவனற்றையும் முறைமுறையாக எடுத்துத் தந்தவண்ணம் இருந்தனர். பின்னர் தூய அணிகலன்கள் அணிந்த மகன்களைப் பெற்றெடுத்த மகளிர் நால்வர் கூடி நின்று “கற்பினின்றும் வழுவாது நல்ல பலவற்றினும் உதவியாக இருந்து, நின்னை மனைவியாகப் பெற்ற நின் கணவனைப் பேணிக்காக்கும் பெருவிருப்பத்தை உடையை ஆகுக”, என வாழ்த்தி நீரொடு குளிர்ந்த இதழ்களையுடைய மலர்களை நெல்லுடன் கலந்து மணமக்களின் தலையில் தூவி வாழ்த்தியுள்ளனர் என்பதை,

     “புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று

     வால் இழை மகளிர் நால்வர் கூடி,

     கற்பினின் வழாஅ நற் பல உதவிப்

     பெற்றோர் பெட்டு;ம் பிணையை ஆக! என

     நீரொடு சொரிந்த ஈர்இதழ் அலரி

     பல்இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க

வதுவை நல் மணம்……....”                  (அகநானூறு,86:11-17)

என்ற வரிகள் காட்சிப்படுத்தியுள்ளன. இப்பாடலின்வழிச் சங்ககாலத் திருமணம் எவ்வாறு நடந்தேறியது என்பதையும், அதில் பெண்களின் பங்கு எத்தகையது என்பதையும் அறியமுடிகிறது. இது தொல்காப்பியர் குறிப்பிடும் கற்பு மணத்திற்குச் சான்றாக அமைந்துள்ளது.

    மேலும் அன்று நிலவிய திருமண முறையில் பெண்ணின் தந்தை மகளின் கையைப் பற்றித் தலைவனிடம் ஒப்படைத்த நிகழ்வு சிறப்புற்றிருந்ததை,

     “நேரிறை முன்கை பற்றி நுமர்தர

நாடறி நல்மணம் அயர்கம்: சின்னாள்

கலங்கல் ஓம்புமின் இலங்கு இழையீரென”      (குறிஞ்சிப்பாட்டு,146)

எனக் குறிஞ்சிப்பாட்டு விளக்கியுள்ளது. இதன்வழி திருமணத்தில் இன்று காணப்படுவது போல் வேள்வி வளர்த்துத் தாலி கட்டும் பழக்கம் இல்லை என்பது புலப்படுகிறது. இவற்றின் வழி பழந்தமிழரின் திருமண நிகழ்வினை அறிய முடிகிறது.

காலமும் பொழுதும்

பழந்தமிழரின் வாழ்வு இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்க்கைமுறை ஆகும். அதாவது இயற்கை கூறுகளின் செயற்பாடு கொண்டே அவர்களின் அன்றாட வாழ்வு அமைந்திருந்தது. “நல்ல பொழுதில் தொடங்கப்படும் செயல்கள் நன்மை பயக்கும் என்பது பண்டைத் தமிழர் கொள்கை”2 அதனடிப்படையில் மண நாளானது தீய கோள்கள் நீங்கப்பெற்ற, வளைந்த வெண்மையான திங்களைத் தீமையற்ற சிறந்த புகழையுடைய உரோகிணி எனும் நட்சத்திரம் வந்து கூடும் நன்னாளாகும். இதனை

“கனை இருள் அகன்ற கவின்பெறு காலை

     கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்

கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென”      (அகநானூறு,86:4-6)

என்ற அகநானூற்றுப்பாடல் புலப்படுத்துகிறது. திருமணத்திற்குரிய பொழுதாக காலைப்பொழுது விளங்கியமையை,

“புள்ளுப்புணர்ந்து இனியஆக, தௌ;ஒளி

     அம்கண் இருவிசும்பு விளங்க”  (அகநானூறு,136:3-4)

என்ற பாடல் வழி புலனாகிறது. மேலும் இவ்வரிகளின் வாயிலாகத் திருமணத்திற்குப் புள் நிமித்தம் பார்த்துச் செயல்பட்ட நிலையும் வெளிப்படுகிறது. பழந்தமிழர் மணநிகழ்வுக்குரிய பெரும்பொழுதாக திங்கள் உரோகிணியைக் கூடும் வளர்பிறை நாட்களையும் சிறுபொழுதாகக் காலைப்பொழுதையும் கொண்டிருந்தனர் என்பதை சங்க இலக்கியங்களின் வழி அறியலாகிறது.

பழக்கவழக்கங்கள்

மணவினை முதலிய நற்செயல்களைத் தொடங்கும் முன்னர் முரசொலித்துக் கடவுளை வழிபடும் மரபு இருந்ததை,

“சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்து

கடிநகர் புனைந்து கடவுட் பேணி

     படுமண முழவொடு பரூஉப்பணை இமிழ”            (அகநானூறு,136:5-7)

என்ற அகநானூற்றுப் பாடல் பதிவாக்கியுள்ளது.

தமிழர் வாழ்வில் இன்பியல் நிகழ்ச்சிகளைக் கொண்டாடும் விழாக்களில் பந்தல் அமைத்துப் புதுமணல் பரப்பி விளக்கேற்றும் வழக்கம் சங்ககாலம் முதல் தொன்றுதொட்டு நிலவி வருகிறது என்பதனை

“……நிரைகால்                                    

தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி  

மனை விளக்குறுத்து, மாலைதொடரி”          (அகநானூறு,86:2-4) 

என்ற அகநானூற்று வரிகள் அரண்செய்கின்றன.

சிலம்புகழி நோன்பு

திருமணத்தைப் பெண்வீட்டில் நிகழ்த்துவதையே பழந்தமிழர் வழக்கமாகக் கொண்டிருந்தனர். மேலும், பெற்றோர் அணிவிக்கும் கன்னிச் சிலம்பினை திருமணத்திற்கு முன்னர் கழிக்கும் ‘சிலம்புகழி நோன்பு’ என்ற சடங்கு முறை பழந்தமிழரிடம் காணப்பட்டுள்ளது.

“நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்

எம்மனை வதுவை நன்மணங் கழிகெனச்   

சொல்லின் எவனோ மற்றே வென்வேல்   

மையற விளங்கிய கழலடிப்   

பொய்வல் காளையை ஈன்ற தாய்க்கே”          (ஐங்குறுநூறு,399)

என்ற ஐங்குறுநூற்றுப் பாடலில் நற்றாய், தன் மகள் தலைவனுடன் உடன்போகிய  காரணத்தினால் தான் செய்யவேண்டிய சிலம்புகழி நோன்பினை மகளின் காதலனை ஈன்ற தாய் செய்ததை அறிந்து வருத்தமடைகிறாள். அந்நோன்பினைச் செய்யும் வாய்ப்பினை இழந்தாலும் முறையாக மணமகள் இல்லத்தில் நடைபெறக்கூடிய திருமண நிகழ்வினை செய்ய விரும்புவதாக இப்பாடல் அமைந்துள்ளது

பரிசம் போடுதல்

      பழந்தமிழர் காலம்தொட்டு இன்றுவரை மணமகன் வீட்டார் பெண்வீட்டாரிடம் பெண் கேட்டுத் திருமணத்தை நிச்சயிக்கும் பழக்கம் காணலாகிறது. பெண் கேட்பதற்கு நல்லநாள் பார்த்துப் பெரியவர்களையும் அறிவர்களையும் அழைத்து வந்துள்ளனர் என்பதனை,

“அம்மவாழி தோழி- நம்ஊர்ப் 

பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லேர்

தண்டுடைக் கையர், வெண்தலைச் சிதவலர்,

நன்று நன்று என்னும் மாக்களோடு  

இன்று பெரிது என்னும் ஆங்கணது அவையே”  (குறுந்தொகை,146)

என்ற பாடல்வழி அறியமுடிகிறது.

மலர் சூடுதல்

      தமிழர் பண்பாட்டில் மலருக்கு முக்கியப் பங்குள்ளது என்பதை“மணம் என்பதே தமிழரின் பழைய மரபுதான். ஒரு கன்னிப்பெண்ணின் கூந்தலிலே மலர் சூட்டி அவளை ஊரும் உறவும் அறியத் தன் மனத்திற்கு இனியளாக,வாழ்க்கைத் துணைவியாக ஒருவன் ஏற்றுகொள்வதனாலேதான் மணம், திருமணம் என்ற பெயர்கள் அச்சடங்கிற்கு ஏற்பட்டன”3 என்கிற முனைவர் வி.சி.சசிவல்லி அவர்களின் கூற்று தெளிவுறுத்துகின்றது. 

“எரிமருள் வேங்கை இருந்த தோகை

     இழையணி மடந்தையின் தோன்றும் நாட!

     இனிதுசெய் தனையால் நுந்தை வாழியர்

     நன்மனை வதுவை அயரவிவள

பின்னிருங் கூந்தல் மலரணிந்தோயே”  ( ஐங்குறுநூறு,294)

என்ற பாடலின் வாயிலாகத் திருமணத்தின் போது இல்லறவாழ்வில் உரிமை பெற்றதற்கு அறிகுறியாகத் தலைவன் தலைவியின் கூந்தலில் பூமுடித்த நிகழ்வினை அறிய முடிகிறது.

விருந்தோம்பல்

 விருந்தோம்பல் என்பது தமிழரின் தலையாயப் பண்புகளுள் ஒன்றாகும். பழந்தமிழர் திருமணத்தின் போது பெருந்திரளான விருந்தினருக்கு  உழுத்தம்பருப்புடன் கூட்டி சமைத்த குழைந்த பொங்கல் மற்றும் இறைச்சியுடன் சேர்த்துச் செய்யபட்ட நெய்கலந்த வெண்சோறு போன்ற உணவினை வள்ளன்மையோடு விருந்தோம்பல் செய்ததை,

     “உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை

பெருஞ் சோற்று அமலை நிற்ப”            (அகநானூறு,86:1-2)

     “மைப்புஅறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு

     வரையா வண்மையோடு புரையோர்ப் பேணி”     (அகநானூறு,136:1-2)

என்ற பாடல்கள் காட்சிப்படுத்துகின்றன.

முடிவுரை

ஓர் ஆணும் பெண்ணும்  உள்ளத்தாலும் உடலாலும் இரண்டறக் கலந்து உலக இன்ப நெறியோடு வாழும் இல்லறம் அறம் வளர்க்கும் களமாகும்.இயல்பாக மனம் ஒன்றி இணைந்த வாழ்க்கைமுறை ஒரு சில சமூகக் காரணிகளுக்காக பலர் அறியும்வண்ணம் சில நிகழ்ச்சிகளோடு அரங்கேறியது. திருமண வினைகளைச் செய்வதற்கு நல்லநாள் மற்றும் நல்லநேரம் பார்க்கும் முறை இருந்துள்ளது. பழந்தமிழரிடமிருந்து இன்றைய நடைமுறை வரை மணமகன் வீட்டார் பெண்ணின் வீட்டிற்குப் பெரியவர்களுடன் சென்று பெண் கேட்கும் நிகழ்வும், பெண்ணிற்கு மணமகன் வீட்டார் பரிசம் போடும் வழக்கமும்  காணலாகிறது. பழந்தமிழரின் திருமணத்தில் ஊரும் உறவும் கூடி மணமகளை மணமகனின் கையில் கொடுத்து வாழ்த்துவதே திருமண நிகழ்வாக இருந்துள்ளது. இன்றைய திருமணத்தில் காணப்படுவது போல் வேள்வி வளர்த்துத் தாலி கட்டும் பழக்கம் இல்லை என்பது தெளிவாகிறது. பழந்தமிழரிடம் அவர்களின் இல்வாழ்வை சிறப்புற வைக்கத் தேவையான ஒத்த குணநலன்களைக் கொண்டு மணமக்களுக்கிடையே பொருத்தம் பார்க்கும் வழக்கம் காணப்பட்டுள்ளது.இக்கட்டுரையின்வழிப் பழந்தமிழரின் திருமண முறைகளையும் அவற்றில் பின்பற்றப்பட்ட பழக்க வழக்கங்களையும் அறிய முடிகிறது.

சான்றெண் விளக்கம்

1.    க.காந்தி, தமிழர் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும், ப.33

2.   மேலது, ப.38

3.   வி.சி.சசிவல்லி,தமிழர் திருமணம், ப.7

பார்வை நூல்கள்

1.    அகநானூறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை-600 098. முதற்பதிப்பு,2004

2.   ஐங்குறுநூறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை-600 098. முதற்பதிப்பு,2004

3.   குறுந்தொகை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை-600 098. முதற்பதிப்பு,2004

4.   பத்துப்பாட்டு, முதல் பாகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை-600 098. முதற்பதிப்பு,2004

5.   தொல்காப்பியம், முல்லை நிலையம்,சென்னை-600 017. முதற்பதிப்பு,1996.

6.   காந்தி.க., தமிழர் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை-600 113. முதற்பதிப்பு,1980.

7.    சசிவல்லி. வி.சி., தமிழர் திருமணம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை-600 113. முதற்பதிப்பு,1985.

8.   சாமி சிதம்பரனார்., தொல்காப்பியத் தமிழர், மணிவாசகர் பதிப்பகம், முதற்பதிப்பு,2000.

9.   சுப்பு ரெட்டியர். ந., தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை- 600 014. முதற்பதிப்பு,1963.

10.   செல்வராசு. நா., தொல்காப்பியத்தில் மணமுறைகள், காவ்யா வெளியீடு, சென்னை-600 024. முதற்பதிப்பு,2010.

11.   செல்வராசு. நா., பண்டைத் தமிழர் திருமண வாழ்க்கை, காவ்யா வெளியீடு, சென்னை-600 024. முதற்பதிப்பு,2009.

12.   ஜெகதீசன். இரா., கார்த்திகேயன். வேல்., தொல்காப்பிய ஆய்வுக் கோவை, குறிஞ்சிப் பதிப்பகம், வேலூர்-632 007. முதற்பதிப்பு,2015