ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

கலித்தொகையில் புராணச் செய்திகள்

முனைவர் மு. ஸ்ரீதேவி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அக்சிலியம் கல்லூரி, வேலூர் - 6 04 Feb 2021 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்:

ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புக்களைக் கொண்டது கலிப்பாவாகும். அப்பாவினால் அமைந்த நூல் கலித்தொகையாகும். இந்நூல் 150 பாடல்களைக் கொண்டு விளங்குகின்றது. அகப்பொருள் துறை பாட ஏற்ற யாப்பு வடிவங்கள் என்பது தொல்காப்பியரின் கருத்தாகும். அதனால் தான் தொல்காப்பியர் ‘வெண்பா நடைத்து’ என்றும், உரையாசிரியர்கள் ‘இசைப்பாட்டு’ என்றும் இயம்புகின்றனர். அத்தகைய சிறப்பு வாய்ந்த கலித்தொகையில் இடம் பெறும் பாரதக் கதை நிகழ்ச்சிகள், திருமால், முருகன், கண்ணன், பலராமன் முதலிய கடவுளர் பற்றிய செய்திகள், பிற தொகை நூல்களில் இடம் பெறாத காமன் வழிப்பாட்டுச் செய்தி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் போன்ற முருகனின் படைவீடுகள் பற்றிய குறிப்புகள் குறித்து இக்கட்டுரை எடுத்தியம்புகின்றது.

திறவுச் சொற்கள்:

வில்லவன் விழா, கதிரவன், காமன், சாமன், தாமரைமலர், செருந்தி மரம், ஞாழல் மரம், இலவ மரம், மாமரம், ஞாயிறு, திங்கள், அரவம், நிலவு, அரக்கு மாளிகை, வேல், சேவல், மயில், கொடி, ஊர்தி, ஞாலம்.

முன்னுரை:

கலித்தொகையில் அகமாந்தர்களின் உணர்வையும் மனக்கிளர்ச்சியையும் சுட்டுமிடங்களில் கடவுளர் பெயர்களையும், புராணக் குறிப்புக்களையும் காண முடிகின்றது. இதனுள் காமன், திருமால், சிவன் போன்ற கடவுளர்களைக் குறித்த சைவ, வைணவக் கருத்துக்கள் விரவிக் கிடப்பதனையும் காண முடிகிறது. புராணங்கள் குறித்த குறிப்புகள் அவ்வக்கால மக்களின் சமய சார்புத்தன்மையை வெளிக்காட்டுவனவாக அமைகின்றன. “புராணங்கள் வரலாறு கூறுவது மட்டுமல்ல மனித இலட்சியங்களுக்கு உதாரணங்கள் காட்டுவதாகவும் அமையும்” என்ற ஆ. வேலுப்பிள்ளையின் கூற்றுக்கேற்ப மன உணர்வை வெளிக்காட்ட பல புராணச் செய்திகள் கலித்தொகையில் சுட்டப்பட்டுள்ளன.

காமன் விழா:

காமன் விழா மன்மதனுக்குச் செய்யும் விழாவாகும். இதனை ‘உயர்ந்தவன் விழா’ என்றும் ‘வில்லவன் விழா’ என்றும் கூறினர். இவ்விழாவின் போது கணவன் மனைவி அல்லது காதலர்கள் மகிழ்ச்சியாக மலை போன்ற அழகு சூழ்ந்த இடத்திற்குச் சென்று பொழுதினைக் கழிப்பார்கள்.

உறல்யாம் ஒளி வாட உயர்ந்தவன் விட

விறல் இழையவரோடு விளையாடுவன் மன்னோ

பெறல் அரும் பொழுதோடு பிறங்கு இணத்துடுத்தி சூழ்ந்து

அறல் வாரும் வையை என்று அறையுள் ஊராயின்

(பாலைக்கலி 30:13-16)

என்ற பாடலில் இளவேனிற்காலம் வந்துவிட்டதையும், வையையில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதையும் காமனுக்கு விழா எடுக்கும் காலம் வந்தும் தலைவன் இன்னும் வரவில்லையே என்று தலைவி ஏங்குவதாக அமைந்துள்ளமை துலக்கமாகக் காணப்படுகிறது.

நோய் மலி நெஞ்சமொடு இணையல் தோழி!

நாம் இல்லாப் பலம்பாயின் நடுக்கம் செய் பொழுதியான்

காமவேள் விழாவாயின் கலங்குவள் பெரிது என

ஏமுறு கடுந்திஐ தேர் கடவி

நாம் அவர் காதலர் துணை தந்தார் விரைந்தே

(பாலைக்கலி 27:22-26)

பிரிந்தவர்க்கு நடுக்கம் செய்யும் இளவேனிற் காலம் ஊரில் உள்ளவர் கொண்டாடும் காமன் விழாக்காலம் வந்தால் தலைவி மிகவும் வருந்துவாள் எனத் தலைவன் நினைத்து தேரை விரைவாகச் செலுத்தி வந்து விடுவார் என வருந்தும் தலைவிக்குத் தோழி ஆறுதல் கூறுகிறாள்.

கலித்தொகையில் பலதேவன், கதிரவன், காமன், சாமன், சிவபெருமான் போன்றோரின் குறிப்புகள் வந்துள்ளதைப் பாலைக்கலி 26 ஆம் பாடல் வழி அறிய முடிகிறது.

ஒரு குழை ஒருவன் போல் இணர் சேர்ந்த மறா அழும்

 --------------------------------------------------------------------

 போது அவிழ் மரத்தொடு பொருகரை கவின் பெற

 நோ தக வந்தன்றால் இளவேனில் மேதக

(பாலைக்கலி 26:1-8)

பலதேவனைப் போலப் பூங்கொத்துக்கள் பொருந்திய வெண் கடம்பு மரம் கதிரவனைப் போல அரும்புகள் அலர்ந்த செருந்தி மரம் மீன் கொடியையுடைய காமனைப் போல வண்டுகள் ஆரவாரத்திற்கு இடனான காஞ்சி மரம் காமனின் தம்பியான சாமன் என்பவனைப் போன்ற நிறம் உடைய ஞாழல் மரம் காளைக் கொடியையுடைய இறைவனைப் போல மலரும் காலத்தை எதிர் கொண்ட இலவ மரம் ஆகியவை தமக்குக் குற்றம் நீங்கிய தன்மை வாய்ந்த ஐவரின் நிறத் தன்மையைப் போல் மற்ற மரங்களுடன் இம் மாமரங்கள் அழகு பொருந்த விளங்குகிறது. செழிப்பான இளவேனிற் காலம் வந்ததை இம்மரங்கள் உணர்த்துகின்றன. எனவே தலைவரும் விரைந்து வந்து விடுவார் வருந்தாதே எனத் தலைவி தோழியை ஆற்றுவிக்கிறாள்.

திருமகள்:

திருமகளுக்குரிய இருக்கை தாமரைப் பூவென அக்காலத்தில் கருதப்பட்டது. இன்றும் தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் திருமகளுக்கு இருபுறமும் இரு யானைகள் நின்று தும்பிக்கையால் திருமகள் மேல் நீரிறைத்து வழிபடல் போன்று ஓவியம் தீட்டும் வழக்கம் அக்காலத்தும் இருந்ததை கலித்தொகைப் பாடல் விளக்குகின்றது.

வரிநுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதர

புரி நெகிழ் தாமரை மலர் அம்கண் வீறு எய்தி

திரு நயந்து இருந்தன்னை தேம் கமழ் விறல் வெற்ப

(பாலைக்கலி 44:5-7)

அது போல,

மரீஇத் தாம் கொண்டாரைக் கொண்டகால் போலாறு

பிரியுங்கால் பிறர் எள்ள பீடு இன்றிப் புறம் மாறும்

திருவினும் நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ?”

(பாலைக்கலி 8:12-14)

என்ற பாடலும் தலைவியைப் பிரிந்து சென்று பொருள் தேட நினைக்கும் தலைவனிடம் தோழி தலைவியுடன் சேர்ந்து வாழும் வாழ்க்கையை விட பொருள் பெரிதல்ல இப்பொருளை அறிவுடையோர்கள் விரும்பமாட்டார்கள் எனப் பாலைக்கலிப் பாடல் சுட்டுகிறது. இங்குப் பொருள் என்பது திருமகளைச் சுட்டுகிறது. இவ்வாறு வேறு சில பாடல்களிலும் திருமகளைச் சுட்டுவதனைக் காணலாம்.

பருதியஞ்செல்வன்:

சங்க கால மக்கள் ஞாயிறு, திங்கள் ஆகிய இயற்கைப் பொருள்களையும் வழிப்பட்டனர்.

நனவினால் ஞாயிறே காட்டாய் நீ யாயின்

(நெய்தற்கலி 147-148)

ஞாயிறு உலகில் நிகழும் அனைத்தையும் அறியும் என்ற கருத்து கலித்தொகையில் காணப்படுகிறது. இப்பாடலில் தலைவனைப் பிரிந்த தலைவி தலைவனைத் தனக்குக் காட்டுமாறு ஞாயிற்றிடம் வேண்டுகிறாள் என்பதை விளக்குகிறது.

பழி தடி ஞாயிறு! பாடு அறியாதார்கள்

ஆழியத் துறந்தானைச் சீறுங்கால் என்னை

ஓழிய விடாதீமோ என்று

(நெய்தற்கலி 143:22-26)

தலைவி துன்பப்படுவதைக் கண்டவர்கள் தலைவனை ஞாயிறு வருத்தும் என்று கூறியதைக் கேட்டாள் தலைவி. தன் தலைவனுக்கு ஞாயிறு எந்த விதமான துன்பமும் நேராதபடி காக்க வேண்டும் என்று வேண்டுகிறாள். தலைவனிடம் ஞாயிறே சினந்தால் தலைவி இறந்து விடுவேன் என்றும் கூறுகிறாள் என்பதை நெய்தற்கலிப் பாடல் வழி அறிய முடிகிறது.

பாம்புசேர்மதி:

தலைவியின் முகமானது திங்களைப் போன்று அழகாக இருந்தது. தலைவன் பிரிந்து சென்றதால் பாம்பால் விழுங்கப்பட்ட திங்களைப் போன்று பசலைப் படந்து காணப்படுகிறது என்று பாலைக்கலி பாடல் விளக்குகிறது.

பால்மதி சேர்ந்த அரவினைக் கோள் விடுக்கும்

நீல்நிற வண்ணனும் போன்ம்

(முல்லைக்கலி 104:37-38)

பால் போன்ற நிறத்தை உடைய நிலவினை பாம்பு கவ்வும் போது அதனைக் காணாது உலக மக்கள் ஒளியைக் காணாமல் துன்பப்பட்டனர். இம்மக்களின் துன்பம் நீங்கும்படியாகத் திருமால் அதனை மீட்டு வந்து விண்ணில் நிறுத்தினார் என்ற செய்தியை முல்லைக்கலிப் பாடல் எடுத்துக்காட்டுகிறது.

பாம்பு சேர்மதி போல் பசப்பு ஊர்ந்து தொலைந்தக்கால்

(பாலைக்கலி 15-17)

தலைவியின் முகமானது இனிய கதிர்களை உடைய நிலவினைப் போன்று இருக்கிறது. தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து சென்றால் அவளின் நிலை பாம்பால் விழுங்கப்பட்ட நிலவினைப் போன்று பசலை படர்ந்து ஒளியிழந்து காணப்படும். ஆகவே தலைவன் தலைவியை விட்டுப் பிரிய வேண்டாம் எனத் தோழி கூறுகிறாள்.

 

 

 

மகாபாரதக் குறிப்பு:

கண்ணற்ற முகத்தினை உடையவன் திருதராட்டிரன். திருதராட்டிரனின் மூத்த மகன் துரியோதனன். துரியோதனின் சூழ்ச்சியால் பாண்டவர்கள் வேலைப்பாடு மிகுந்த அரக்கு மாளிகையில் இருக்கும் போது அம்மாளிகைக்குத் தீயூட்டினர். தீயானது அம்மாளிகையைச் சூழ்ந்தது. அப்போது காற்றின் மகனாகிய வீமன் புகையும் அழலும் சூழ்ந்த அரண்மனையைக் கடந்து தன் சுற்றத்தாரையும் மீட்டான் என்ற பாரதக் கதையைக் கலிச் சுட்டுகிறது. 

ஐவர் என்ற உலகு ஏத்தும் அரசர்கள் ஆத்தரா

கை புனை அரக்கு இல்லைக் களிறு அகத்தவா

-----------------------------------------------------------

இறத்திரால் ஐய! மற்று இவள் நிலைமை கேட்பின்

(பாலைக்கலி 25:1-12)

என்ற பாடல் அரக்கு மாளிகையில் எழுந்த புகையைப் போல அனல் மிக்க இடம் பாலை நிலம். இப்பாலை வழியால் சென்றால் தீயவர்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். அவ்வாறு நேர்ந்தால் தலைவியின் நிலைமை என்னவாகும். மேலும் உன்னைத் தூற்றுவார்கள் என்று தோழி தலைவனுக்கு உணர்த்தி அவன் பிரிந்து செல்லாதவாறு தடுத்து நிறுத்தினாள் என்பதை அறிய முடிகிறது.

முருகன் மா கொன்ற செய்தி:

முருகப் பெருமான் தலைகீழ் மாமரமாகக் கடலில் விழுந்திருந்த சூரனைத் தம் வேலால் இரு கூறுகளாக்கிச் சேவலாகவும் மயிலாகவும் மாற்றினார். சூரபத்மன் முருகனுக்குக் கொடியாகவும் ஊர்தியாகவும் மாற்று வடிவம் பெற்றானன்றி அவன் விடவில்லை என்ற புராணச் செய்தியை பின்வரும் கலித்தொகைப் பாடல் சுட்டுவதனை அறியலாம்.

ஒண்ணாதார்க் கடந்து அடூஉம் உரவுநீர் மாகொன்ற

வெண்வேலான் குன்றின் மேல் விளையாட்டும் விரும்பார் கொல்?”

(பாலைக்கலி 27:15-16)

என்ற சூரபத்மனைக் கொன்ற செய்தியை மாகொன்ற என்ற வரி மூலம் விளக்குவதைக் காண முடிகிறது.

மூன்றடி அளந்தான்:

திருமால் நெடிய உருவம் கொண்டு விண்ணுலகை ஓரடியாலும், மண்ணுலகை ஓரடியாலும் அளந்தான். மற்றோர் அடியை அளக்க இடம் இல்லாத காரணத்தால் மாவலி சக்கரவர்த்தியின் தலைமீது வைத்து அளந்து அவனை கீழ் உலகிற்கு போகும்படிச் செய்தார் என்பது புராணச் செய்தியாகும். இச்செய்தியினை கலித்தொகைப் பாடல் எடுத்தாளுகிறது.

ஞாலம் மூன்று அடித்தாய முதல்வற்கு

(நெய்தற்கலி 124)

என்று மாவலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அழித்ததை இப்பாடல் வரி விளக்குகிறது.

முடிவுரை:

பழந்தமிழரின் நல்வாழ்விற்கான நெறிகள் பற்றியும், பிரிவாற்றாத தலைவியின் உள்ளக் கொந்தளிப்பையும், இதிகாச, புராணக் கருத்துக்களும், வரலாற்றுச் செய்திகளும் இடம் பெற்றுள்ளதை இக்கட்டுரையின் மூலம் அறிய முடிகிறது. கலித்தொகையானது அகம் புறம் என்கிற பகுப்பினுள் கருத்தினைச் சொல்லக்கூடியதாக இருந்தாலும் அவ்வக்கால மக்களிடம் பழக்கத்தில் இருந்த புராணச் செய்திகளையும் உடையதாக இருக்கின்றது என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.

துணை நூற்பட்டியல்:

1. கலித்தொகை நெய்தற்கலி, ஆசிரியர் வீ. இளவழுதி, கவிதா பதிப்பகம்

2. கலித்தொகை மூலமும் உரையும், கழக வெளியீடு, சென்னை.

3. கலித்தொகை மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை.

4. கலித்தொகை கருத்தும் காட்சியும், முனைவர் துரை. குணசேகரன்.

5. கலித்தொகை மூலமும் விளக்க உரையும், முல்லை பதிப்பகம்.

6. தமிழ் இலக்கிய வரலாறு, முனைவர் மு. வரதராசனார், மணிவாசகர் பதிப்பகம், சென்னை.