ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

7ஆம் நூற்றாண்டில் தமிழர்கள் பாசிமணிகள் உற்பத்தி செய்த மலேசியாவின் குவாலா செலின்சிங் வரலாற்றுத்தளம்

ஆசிரியர் ம. லிங்கேஸ்வரன் 16 Oct 2020 Read Full PDF

 

கட்டுரையாளர் :

      ஆசிரியர் ம. லிங்கேஸ்வரன்,

பேராக் மாநிலம், மலேசியா

 

 

ஆய்வுச் சுருக்கம்

மலேசியாவிலுள்ள குவாலா செலின்சிங், களும்பாங் தீவில், 7ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டிலிருந்து  வருகைபுரிந்த கைவினைஞர்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட பாசிமணிகள் உற்பத்தி செய்யும் மணி கிராமம் இருந்துள்ளதை ஆகழ்வாராய்ச்சியாளர்கள் கடந்த நூற்றாண்டில் வெளியுலகிற்குத் தெரிவித்தனர். பாசிமணிகள் தவிர்த்து ஆபரணங்கள், மட்பாண்டங்கள்,  அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள், உணவுப் பொருள்களின் எச்சங்கள், தங்க மோதிரம், பல்லவ எழுத்துகள் கொண்ட கல் முத்திரை போன்றவையும் அகழ்ந்தெடுக்கப்பட்டன. சதுப்பு நிலக்காடுகள் கொண்ட இத்தீவில் வாழ்ந்த இம்மக்கள், இறந்தவர்களின் உடல்களைப் படகினுள் வைத்து புதைக்கும் மரபினைப் பின்பற்றியிருப்பது அகழ்ந்தெடுக்கப்பட்ட பல எலும்புக்கூடுகளின் மூலம் கண்டறியப்பட்டது. அகழ்ந்தெடுக்கப்பட்ட பல பழம்பொருள்கள் இன்று கோலாலம்பூரிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வுக்கட்டுரை இத்தீவில் வாழ்ந்து மடிந்து போன இக்கிராமத்தினரைப் பற்றி விரிவாக விவரிக்கின்றது.

 

திறவுச் சொற்கள்: களும்பாங் தீவு, சதுப்பு நிலக்காடுகள், பாசிமணிகள்,  தங்க மோதிரம், கல் முத்திரை, மட்பாண்டங்கள், பிரேதக்குழிகள், எலும்புக்கூடுகள், அரிக்கமேடு.

குவாலா செலின்சிங்கிலுள்ள களும்பாங் தீவு மணி கிராமம்

மலேசியா, வட பேராக் மாநிலத்திலுள்ள குவாலா செலின்சிங் அகழ்வாய்வுத் தளமானது 7ஆம் நூற்றாண்டில் தீபகற்ப மலேசியாவின் கடலோரப் பகுதிகளிலேயே மிகவும் முக்கியமான ஒரு வாணிபத்தளமாகவும் பழங்காலத்து துறைமுகமாகவும் திகழ்ந்துள்ளது. குவாலா செலின்சிங்கிலுள்ள களும்பாங் தீவில் பல ஆண்டுகளாக அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தீவு ‘கோத்தா கெராங்’ மற்றும் ‘புலாவ் பூலோ’ என்றும் இவ்வட்டார மீனவர்களால் அழைக்கப்பட்டது. சதுப்பு நிலக்காடுகளைக் கொண்ட இங்கு நடத்தப்பட்ட அகழ்வாய்வுக்குப் பின்னர் பல வியக்கத்தக்க விசயங்கள் வெளி உலகிற்குத் தெரிய வந்தன. உலகிலேயே முதன் முதலாக சதுப்பு நிலக்காட்டில் மனித குடியேற்றம் நிகழ்ந்துள்ளது என்றால் அது குவாலா செலின்சிங், களும்பாங் தீவில்தான் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

சதுப்பு நில மரங்கள் அதிகமாகக் காணப்படும் களும்பாங் தீவில், காடுகளிலும் கிராமங்களிலும் காணக்கூடிய தாவரங்களும் உயரமான மரங்களும் பிரம்பு மரங்களும் பரவலாக உள்ளன. அதிலும் குறிப்பாக மூங்கில் மரங்களே இங்கு அதிகமாகக் காணப்படுகின்றன. 6ஆம் நூற்றாண்டு முதல் 12ஆம் நூற்றாண்டு வரை, களும்பாங் தீவில் மனித குடியிருப்பு இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் ஐ.எச்.என். இவான்ஸும் (1932) எச்.ஜி. குவாட்ரிச் வேல்ஸும் (1940) தெரிவித்தனர். பண்டைய களும்பாங் தீவுவாசிகள், பலகைகளால் செய்யப்பட்ட தூண்களைக் கொண்ட வீடுகளில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதோடு அவர்கள் உப்புத் தண்ணீரை அன்றாட வாழ்க்கைக்குப் பயன்படுத்தியிருப்பதும் தெரிய வந்தது.

குவாலா செலின்சிங்கிலிருந்து தைப்பிங்கிலுள்ள மேக்ஸ்வெல் மலையைத் தெளிவாகக் காண இயலும். களும்பாங் தீவில் மனிதர்கள் குடியிருந்த வேளையில், மலாக்கா நீரிணை வழியாக வரும் வர்த்தகப் படகுகளும் கப்பல்களும், களும்பாங் தீவினை எளிதில் சென்றடைவதற்கு மெக்ஸ்வெல் மலை ஒரு கலங்கரை விளக்கமாகவும் அமைந்திருக்கலாம் என நம்பப்பட்டது.

 

1930ஆம் ஆண்டு முதல் ஐ.எச்.என். இவான்ஸ் (Ivor Hugh Nrman Evans) எனும் வரலாற்று அறிஞரே முதல் முதலில் குவாலா செலின்சிங்கில் அகழ்வாய்வினை மேற்கொண்டார். இவர் தைப்பிங்கிலுள்ள பேராக் அருங்காட்சியகத்தின் இயக்குநராக இருந்துள்ளார். 1924ஆம் ஆண்டு, வட பேராக் வனப்பகுதி பாதுகாப்புத்துறை துணை அதிகாரியான பி.டபல்யூ.எஃப். பெர்னார்ட் பெளியிட்ட ஓர் அறிக்கையில், தாம் தஞ்ஜோங் ராவாவில் (களும்பாங் தீவின் தொன்மையான பெயர்) மனித மண்டை ஓடு, மணிகள் மற்றும் நீல நிறப் படிகம் போன்றவற்றைக் கண்டதாகக் குறிப்பிட்டிருந்தார். இதுவே இவான்ஸ் இத்தீவில் அகழ்வாய்வு செய்வதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது. இத்தீவுவாசிகளின் பூர்வீகம் என்ன? இவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள்? என்ற வினாக்களுக்கு பல வியாக்கியானங்கள் கொடுக்கப்பட்டன.

இவான்ஸின் ஆய்வின் போது பல தொல்பொருள்களும் உணவுப் பொருள்களின் எச்சங்களும் அகழ்ந்தெடுக்கப்பட்டன. மனித எலும்புகள், மனித எலும்புக்கூடுகளைக் கொண்ட பழைய படகுகள், பாசிமணிகள், கண்ணாடி மணிக்கல், கர்னீலியன் மணிகள், மணிகளை உருவாக்கும் சிட்டங்கள், சங்குகளிலான வளையல்கள், சங்கிலிகள், இந்தியா, சீனா, அரபு, ஈரான் மற்றும் சில நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரத்தினக் கற்கள், பல்வகை மட்பாண்டங்கள், மட்பாண்டங்களின் ஓடுகள், ஈயத்தாலான தோடு, உடலை அலங்கரிக்கும் ஆபரணங்கள், மனிதன் மற்றும் பிராணிகளின் பற்கள், கற்கருவிகள், பீங்கான் துண்டுகள், எலும்பால் உருவாக்கப்பட்ட கத்தியின் பிடி, பிசின் போன்றவையும் அகழ்ந்தெடுக்கப்பட்டன. சில பொருள்கள் கார்பன் தேதியிடும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. தீபகற்ப மலாயா, போர்னியோ மற்றும் பல இடங்களில் அகழ்வாய்வுகளை நடத்திய ஐ.எச்.என். இவான்ஸ், 3.5.1957இல் கிழகு மலேசியாவிலுள்ள லபுவான் தீவில் இயற்கை எய்தினார். இவான்ஸ் எழுதிய ‘Skeletel Remains From The Kuala Selingsing Excavations’ எனும் நூலில், குவாலா செலின்சிங் அகழ்வாய்வுகள் குறித்த பல தகவல்கள் உள்ளன. இந்த நூல் தற்போது ஆஸ்திரேலிய தேசிய நூலகத்தில் உள்ளது. இவான்ஸின் சில ஆய்வு நூல்களும் ஆவணங்களும் மலேசிய நாட்டிலுள்ள சில அருங்காட்சியகங்களில் இருக்கக்கூடிய நூலகங்களில் பாதுகாப்பாக உள்ளன.

குவாலா செலின்சிங்கிலுள்ள களும்பாங் தீவில் முன்பு பாசிமணிகளே அதிகமாக அகழ்ந்தெடுக்கப்பட்டன. இங்கு அகழ்ந்தெடுக்கப்பட்ட பாசிமணிகள் தமிழ்நாட்டின் அரிக்கமேடு எனும் ஊரிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்கின்றன. உள்ளூர் மக்களுக்கும் அவை விற்கப்பட்டிருக்கின்றன. குவாலா செலின்சிங் மட்டுமின்றி சுங்கை மாஸ், (கெடா மாநிலம்) சந்துபோங் (சரவாக் மாநிலம்) ஆகிய இடங்களில் அதே காலக் கட்டத்தில் பாசிமணிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மணிகளை ‘மணிக்’ என்று மலாய் மொழியில் இன்றும் அழைக்கிறார்கள். ‘மனிக்யா’ என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து ‘மணிக்’ எனும் மலாய் சொல் உருவானது.

 

 

அரிக்கமேடு : பாசிமணிகள் உற்பத்தி செய்யும் இடங்களுக்கெல்லாம் தாய்வீடு

       தமிழ்நாட்டிலுள்ள அரிக்கமேடு என்ற பகுதி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் என்பதை லீ ஜெண்டில் (1734) என்ற பிரெஞ்சு ஆய்வாளர் தெரிவித்திருக்கிறார். இப்பகுதி முன்பு சிறந்த கடற்கரைத் துறைமுகப்பட்டினமாகவும் செழித்தோங்கியுள்ளது. அரிக்கமேட்டில் கி.பி. முதலாம் நூற்றாண்டுக்கு முன்னதாகவே மக்கள் குடியிருப்புகளை அமைத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அரிக்கமேட்டில் பல தொல்பொருள்கள், மட்பாண்டங்கள், பல அரிய வகை கல்மணிகல், தங்கத்தாலான மணிகள், நுண்ணிய அளவுடைய வண்ண மணிகள், படிகமணிகள், மணி உருக்குச் சிட்டங்கள், கச்சாப் பொருள்கள், உருக்குக் கிண்ணங்கள் போன்றவை அகழ்ந்தெடுக்கப்பட்டன. பண்டைய காலத்தில் இங்கு மணி உருக்கும் தொழிற்சாலை இருந்ததாக நம்பப்படுகிறது.

       அரிக்கமேடு, மணிகளைத் தயாரிப்பதில் மிக முக்கியமான மையமாகத் திகழ்ந்துள்ளது. முன்பு வாழ்ந்த இவ்வூர் மக்கள், மணிகளை உருக்கிக் காய்ச்சி துளையிட்டு  தூய்மை செய்து சிறந்த மணிகளை உருவாக்கினர். கடலில் கிடைக்கும் சங்குகளைக் கொண்டு வந்து அறுத்து, பட்டைத் தீட்டி, மெறுகேற்றி மணியாகவும், வளையலாகவும், மோதிரமாகவும் செய்துள்ளனர். அக்கால தமிழ் மக்கள் செம்மைப்பட்ட வாழ்க்கை முறையை மேற்கொண்டிருந்தனர் என்பது இதன் மூலம் புலப்படுகிறது.

       சங்க இலக்கியங்களில் அதிகம் பேசப்பட கடல் கடந்த வணிகம் அரிக்கமேட்டில் நிகழ்ந்துள்ளது என்ற உண்மை பல அகழ்வாய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டது. அதோடு இங்கு இறந்தோரை புதைக்கும் பொழுது அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் இறந்தோர் உடலுடன் புதைத்த மரபை அகழ்வாய்வியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். நன்கு ஆராந்து பார்த்தால், பண்டைய அர்க்கமேடு மக்களுக்கும் குவாலா செலின்சிங், களும்பாங் தீவு மக்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்திருப்பதை நம்மால் உணர முடிகின்றது.

 

 

 

குவாலா செலின்சிங்கின் களும்பாங் தீவு பாசிமணிகள்

       களும்பாங் தீவுவாசிகள், மணிகளை உருவாகுவதற்காக மெல்லிய ஓடுகளுடைய கடலாமைகள், மெல்லுடலிகள் போன்ற சில உயிரினங்களை வேட்டையாடியுள்ளனர். ஆற்றிலிருந்து கிடைக்கப்பெற்ற கற்களையும் பயன்படுத்தியிருக்கின்றனர். இம்மக்கள் புலியின் பற்கள், மட்பாண்டங்கள், கர்னீலியன் மணிகள், மணிகளை உருவாக்கும் கருவிகள் போன்றவற்றை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்துள்ளனர். இது தவிர்த்து மணிகளை உருவாக்க செம்மஞ்சள் நிறமுடைய மணிக்கல், பளிங்குப்படிகம், அகேட் பளிங்கு, பசும்படிகக்கல், மரகதக் கல், சொடலைட் கல், போன்றவை கர்நாடகம், ராஜஸ்தான், காஷ்மீர் போன்ற மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

       ஆய்வாளர் எச்.கி. குவாட்ரிச் வேல்ஸ் என்பவர், இங்கு கண்டெடுக்கப்பட்ட இரத்தினக் கற்களால் உருவாக்கப்பட்ட மணிகள், தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று கூறினார். மேலும் பலவகையான சிப்பிகளும் சங்குகளும் இங்கு அதிகமாக காணப்பட்டன. இவை அனைத்தும் உடலை அலங்கரிக்கும் பொருள்களாகவும் நாணயங்களாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

 

களும்பாங் தீவுவாசிகளின் வாழ்க்கை முறை

       இத்தீவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின் போது கொட்டங்கச்சி, பாக்குகள் போன்றவையும் கிடைத்தன. மேலும் கோழி, நாய், பன்றி போன்ற பிராணிகளின் எலும்புகளை அகழ்ந்தெடுத்ததன் வாயிலாக, இம்மக்கள் பிராணிகளையும் வளர்த்திருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் மெல்லுடலிகள், மீன்கள், ஓட்டு மீன்கள், கடலாமைகள் மற்றும் நில விலங்குகளை உண்டு வாழ்ந்திருக்கின்றனர். இத்தீவுவாசிகள் மிகவும் குறைவான அளவில் தாவர வகைகளை உண்டிருப்பதும் தெரிய வந்தது. இங்கு கண்டெடுக்கப்பட்ட சில மனித பற்களைப் பரிசோதித்ததன் மூலம் இங்கு வாழ்ந்தவர்களுக்கு வெற்றிலை உண்ணும் பழக்கம் இருந்த்தாக உறுதி செய்யப்பட்டது. கிடைக்கப்பெற்ற பெரும்பாலான பொருள்கள் பல ஆண்டுகளாக உப்புத்தண்ணீரில் பதப்படுத்தப்பட்டு கெடாமல் இருந்திருக்கின்றன.

       களும்பாங் தீவில் மிகவும் தீவிரமாக அகழ்வாய்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் கருட வாகன ரூடராய் மஹா விஷ்ணுவின் உருவம் பதிக்கப்பெற்ற தங்க மோதிரம் ஒன்றை அகழ்வாய்வாளர்கள் அகழ்ந்து எடுத்தார்கள். அதனுடன் தென்னிந்திய பல்லவ கிரந்தத்தில் சமஸ்கிருத மொழியில் ‘ஶ்ரீ விஷ்ணுவர்மன்’ என்ற பெயர் செதுக்கப்பட்ட சிவப்பு நிற கல் முத்திரை ஒன்றினையும் கண்டெடுத்தார்கள். பிரபல ஆய்வாளரான நீலகண்ட சாஸ்திரி (1936), அப்பெயர் ஒரு பெருவணிகரின் பெயராக இருந்திருக்கலாம் என எண்ணினார். நீலகண்ட சாஸ்திரி, வான் ஸ்டெய்ன் காலன்ஃபால்ஸ், பிலெட்ஜென் மற்றும் பர்னெட் போன்ற ஆய்வாளர்கள் இம்முத்திரையில் பொறிக்கப்பட்ட பல்லவ எழுத்துகளை ‘ஶ்ரீ விஷ்ணுவர்ம்மஷ்ய’ என்றே படித்தனர். இம்முத்திரை 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்பினர். கோட்ஸ் எனும் ஆய்வாளர், குவாலா செலின்சிங் தளத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து வர்த்தகம் செய்ய வந்த கடலோடிகள் வாழ்ந்திருக்கக்கூடும் என்று கருத்துரைத்தார். (கோட்ஸ், ஜி., 1968:51)

       கண்டெடுக்கப்பட்ட இவ்விரு பழம்பொருள்களும் இவான்ஸின் அகழ்வாய்வியலில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. அதன் பின்னர் இவான்ஸ், முன்னொரு காலத்தில் களும்பாங் தீவில் இந்தியர்களே வாழ்ந்துள்ளனர் என்ற தகவலை வெளியிட்டார். அதோடு இம்மக்கள் இந்து சமயத்தைச் சார்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்றும் நம்பப்பட்டது. இங்கு வசித்தவர்கள் நீருக்கு மேல் வீடுகளைக் கட்டி வாழ்ந்ததாகவும் பன்றி இறைச்சியை உண்ணும் பழக்கம் உடையவர்களாக இருந்துள்ளனர் என்றார் ஆய்வாளர் இவான்ஸ். இங்கு அகழ்ந்தெடுக்கப்பட்ட தொல்பொருள்களைத் துல்லியமாக ஆய்வு செய்ததன் மூலம், 5ஆம் அல்லது 6ஆம் நூற்றாண்டு வாக்கில் பேராக் மாநிலத்தில் முன்பு கங்கா நகரம் எனும் பேரரசு இருந்துள்ளது என்பதற்கு இப்பழம்பொருள்களும் ஆதாரங்களாக விளங்குகின்றன என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

 

இறந்தோரின் உடலைப் படகினுள் வைத்து புதைக்கும் மரபு

       களும்பாங் தீவில், இறந்தவர்களைப் படகில் வைத்து மண்ணில் புதைக்கும் சம்பிரதாயத்தை (உள்ளூர் வழிபாட்டு முறை) இவ்வூர் மக்கள் கடைப்பிடித்திருப்பதாக நம்பப்படுகிறது. சிலர் இவர்கள் ஆவியுலகக் கோட்பாட்டைக் கடைப்பிடித்திருக்கின்றனர் என்றும் கூறினர். இறந்தவரின் உடல் வைக்கப்பட்ட படகை, மட்பாண்டங்களின் சிதைவுகளைக் கொண்டு மூடிய பின்னரே புதைத்திருக்கின்றனர். அகழ்வாய்வின் போது அகழ்ந்தெடுக்கப்பட்ட 11 எலும்புக்கூடுகளில் ஓர் எலும்புக்கூட்டின் வாயிலாக இந்தத் தகவல் தெரிய வந்தது.

       1955ஆம் ஆண்டு சீவெகீங் எனும் மற்றொரு ஆய்வாளர், குவாலா செலின்சிங்கில் அகழ்வாய்வினை நடத்திய பொழுது படிகங்களாலும் கற்களாலும் உருவாக்கப்பட்ட 3000க்கும் மேற்பட்ட மணிகளை அகழ்ந்தெடுத்தார். அகழ்ந்தெடுக்கப்பட்ட பழம்பொருள்கள் அனைத்தும் இந்தியர்களுடயவை என்றார்.

       1987ஆம் ஆண்டு, மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அகழ்வாய்வியலாளர் டாக்டர் நிக் ஹசான் சுஹைமி நிக் அப்துல் ரஹ்மான் என்பவரே குவாலா செலின்சிங்கில் அகழ்வாய்வு நடத்திய முதல் மலேசியர் ஆவார். அவரின் தலைமையில் குவாலா செலின்சிங்கில் அகழ்வாய்வியல் பணிகள், அருங்காட்சியகத் துறையைச் சேர்ந்தவர்களின் உதவியோடு மேற்கொள்ளப்பட்டன. அப்போது 8 குடியிருப்புகள் இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆரம்பத்தில் தஞ்சோங் ராவா என்று அழைக்கப்பட்ட இவ்விடத்தின் பெயர் எந்த ஒரு வரைபடத்திலும் இடம்பெறவில்லை என்ற காரணத்தினால் டாக்டர் நிக் ஹசான் இத்தீவிற்கு ‘களும்பாங் தீவு’ என்று பெயர் சூட்டினார். நிக் ஹசான் ஆய்வு செய்ததில் கெடா, பூஜாங் பள்ளத்தாக்கில் (கடாரம்) வாழ்ந்தவர்களும் களும்பாங் தீவில் வாழ்ந்தவர்களும் உள்ளூர் மக்களே என்று தாம் நம்புவதாகக் கூறினார். கிடைக்கப்பெற்ற அனைத்து தொல்பொருள்களையும் வைத்துப் பார்க்கும்பொழுது, களும்பாங் தீவுவாசிகளுக்கும் பூஜாங் பள்ளத்தாக்கு மக்களுக்கும் இடையே வாணிபத் தொடர்பு இருந்துள்ளது என்றார் நிக் ஹசான். இம்மக்கள் வர்த்தகம் செய்வதற்கான பொருள்களைத் தயார் செய்து உள்ளூர் வர்த்தகர்களுக்குத் தந்திருக்கின்றனர். இவ்வணிகப் பொருள்கள் உள்ளூர் வர்த்தகர்களால் மற்ற துறைமுகங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன என்றார்.

       கிடைக்கப்பெற்ற மனித எலும்புக்கூடுகளை ஐ.எச்.என். இவான்ஸ் ஆய்வு செய்ததில், பல மண்டை ஓடுகளில் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு தாக்கப்பட்டதற்கான வடுக்கள் இருப்பதாகத் தெரிவித்தார். இத்தீவில் வாழ்ந்த மக்கள் ஒரு காலக்கட்டத்தில் பலத்த தக்குதல்களுக்கு இலக்காகி அழிவை எதிர்நோக்கியிருக்கின்றனர் என்றும் கூறினார். ஆனால் நிக் ஹசானோ, கடலின் நீர் மட்டம் உயர்ந்து, மனிதர்கள் இனியும் இத்தீவில் வசிப்பதற்கான இயற்கைச் சூழல் இல்லாமல் போன காரணத்தினால், கடலோரப்பகுதியில் பல்லாண்டு காலமாக வாழ்ந்த இம்மக்கள், இவ்விடத்தைவிட்டு வேறு இடங்களில் குடியிருக்கலாம் என்ற மாற்றுக் கருத்தினை வெளியிட்டார். அதோடு முழுமையான அகழ்வாய்வுகள் எதுவும், களும்பாங் தீவில் முன்பு வாழ்ந்த மக்கள், கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டு மறைந்தார்கள் என்பதனைக் காட்டவில்லை என்றார் அவர்.

       கடைசியாக 2008ஆம் ஆண்டு, டாக்டர் நிக் ஹசான் களும்பாங் தீவில் அகழ்வாய்வினை மேற்கொண்டார். அப்போது 5 பிரேதக்குழிகள், மட்பாண்டங்கள், மணிகள், கல்பொருள்கள், உணவுகளின் எச்சங்கள் போன்றவற்றை அகழ்ந்தெடுத்தார். கிடைக்கப்பெற்ற மனித எலும்புகளில் மரபணு சோதனை மேற்கொள்வதற்காகவும், மிகவும் முறையான அகழ்வாராய்ச்சித் தரவுகளைப் பெறுவதற்காகவும் இந்த இறுதி ஆய்வு நடைபெற்றது.

       பி. பிரான்சிஸ் (1991) எனும் ஆய்வாளர், கிடைக்கப்பெற்ற பழம்பொருள்களை மறுபரிசோதனை செய்து பார்த்தப் பின், களும்பாங் தீவு முன்பு தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த கைவினைஞர்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட பாசிமணிகள் உற்பத்தி செய்யும் மையமாக இருந்திருப்பதில் தமக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்ற கூற்றினை வெளியிட்டார்.

 

களும்பாங் தீவின் தற்போதைய நிலை

       பெரு நிலத்திலிருந்து இத்தீவைச் சென்றடைய 40 நிமிடங்கள் பிடிக்கும். முன்பு இத்தீவில் அகழ்வாய்வினை மேற்கொண்டவர்கள், அகழ்வாய்வுத்தளத்தில் சிறிய படகுத்துறை, வருகையாளர்களை வரவேற்கும் படகு வடிவக் கல், ஓய்வெடுக்கும் 2 குடில்கள், சமைக்கும் இடம், இத்தீவின் வரலாற்றை எடுத்துரைக்கும் பலகை போன்றவற்றை அமைத்திருக்கிறார்கள். 2008ஆம் ஆண்டிற்குப் பின் இத்தீவிற்கு யாரும் ஆய்வு செய்ய வருகை புரியாத காரணத்தினால் இத்தீவு முறையான கவனிப்பற்ற நிலையில் கிடக்கிறது. இவ்வரலாற்றுத் தளத்தில் மனித எலும்புகள் தோண்டியெடுக்கப்பட்ட பிரேதக்குழிகளை இன்றும் காண முடிகின்றது. அதோடு பலதரப்பட்ட மணிகள் தோண்டியெடுக்கப்பட்ட பகுதிகளையும் பார்வையிட வாய்ப்புள்ளது.

       இன்று மணிகள் எதுவும் மிக எளிதில் இங்கு தென்படுவதில்லை. ஒரு வேளை தென்பட்டால் அதனை எடுக்கக் கூடாதாம். மீறி எடுத்தால், நாம் சில பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடுமாம். அப்படியே மணிகள் கிடைத்தாலும் அவற்றை எடுத்த இடத்திலேயே வைப்பதுதான் நல்லது. மனித நடமாட்டமே இல்லாத இது போன்ற தீவுகளில் நாம் அவசியம் சில கட்டுப்பாடுகளைப் பின்பற்றியே ஆக வேண்டும். களும்பாங் தீவிற்குச் சற்று அருகில் வாழும் மீனவ கிராமத்தினர், அத்தீவின் பண்டைய வரலாற்றினைச் சரிவர அறிந்திராததால், முன்பு அத்தீவில் கடற்கொள்ளையர்களின் குடியிருப்பு இருந்ததாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இத்தீவில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பல பழம்பொருள்கள் தற்போது கோலாலம்பூரிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

       கி.பி. 500க்கு முன்பிருந்தே தமிழர்-மலாயா தொடர்பு இருந்தது என்று ‘History Of Malaya And Singapore’ எனும் நூல் குறிப்பிடுகின்றது. வியாபார நோக்கில் இங்கு வந்த அவர்களின் வருகை குறித்த முழுமையான பதிவுகள் இந்த நாட்டில் குறைவாகவே உள்ளன.

       இந்தியர்களின் பின்னணியைக் கொண்ட குவாலா செலின்சிங், களும்பாங் தீவின் வரலாறானது இதுவரையில் அதிகம் பேசப்படாமல் இருந்து வந்திருக்கிறது. இத்தீவு பற்றிய ஆவணங்கள், அருங்காட்சியகங்களிலும் பழஞ்சுவடி காப்பகங்களிலும் பத்திரமாக உறங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றைத் தூசு தட்டி எடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது எனலாம். ஏற்கனவே மலேசிய நாட்டின் இந்தியப் பின்னணியைக் கொண்ட புராதன வரலாறுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த பல ஆய்வாளர்களை பாராட்டியே ஆக வேண்டும்.

       மலேசிய  நாட்டில் இந்தியர்கள் ஒரு சிறுபான்மை இனமாக இருந்தபோதிலும் தங்களது இருத்தலை வலுப்படுத்திக்கொள்ள, தங்களது முன்னோர்களின் வரலாற்றினைப் பற்றி அறிந்திருப்பது அவசியமாகும். குவாலா செலின்சிங்கிலுள்ள களும்பாங் தீவில் இந்தியர்களின் ஆதிக்கம்தான் இருந்துள்ளது என்று மேற்கத்திய ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றனர். ஆய்வாளர் இவான்ஸ் கூறியது போல, இங்கு வாழ்ந்த மக்கள் பல தாக்குதல்களுக்கு ஆளாகி அழிவைச் சந்தித்திருப்பார்களேயானால், களும்பாங் தீவு மலேசியாவின் ‘அத்திப்பட்டி’ என்றே நம்மால் கூறத் தோன்றும். களும்பாங் தீவைப் பற்றிய இரகசியங்கள் இன்றளவும் மிகவும் மர்மமாகவே உள்ளன. ஒரு சமயம் மீண்டும் இத்தளத்தில் தொல்பொருள் ஆராய்ச்சிகள் நடைபெற்றால் நிறைய உண்மைகளைக் கண்டறியலாம். அவை வரலாற்றையும் மாற்றியமைக்கலாம்.

  • முற்றும் –

துணை நூற்பட்டியல்

1. A History Of Malaya, R.O. Winstedt, Journal of The Malayan Branch Of The Royal Asiatic Society, Vol. 13, No. 1(121)

2. Earthenware In Southeast Asia: Proceeding Of The Singapore Symposium On Premodern Southeast Asian Earthenwares.

3. Warisan Melayu Perak, A. Halim Nasir

4. History Of Malaya And Singapore

5. Sejarah Melayu / The Malay Anal

6. Skeletel Remains From The Kuala Selingsing Excavations

7. "On Ancient Remains from Kuala Selinsing, Perak" JFMSM 12(5)

8. "Excavations at Tanjong Rawa, Kuala Selinsing, Perak" JFMSM, 15(3), 79-133

 

 http://ayobhussin.com/melayupurba/mainpix2.jpg     Jabatan Warisan Negara (Department of National Heritage)'s photo.