ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

வடஇலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை ஈமச்சின்னங்கள்

திருமதி. சிவரூபி சயிதரன் 16 Oct 2020 Read Full PDF

திருமதி. சிவரூபி சயிதரன்

தொல்லியல் விரிவுரையாளர்

வரலாற்றுத்துறை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

இலங்கை.

 

ஆய்வுச் சுருக்கம்

ஆசியாவில் நீண்ட பாரம்பரிய வரலாற்று மரபு மற்றும் பல்லினப்பண்பாட்டு அம்சங்கள் கொண்ட நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் வடபகுதி தற்போதைய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய நிர்வாக மாவட்டங்களைக் குறிப்பதாகும். பொதுவாக அநுராதபுரத்திற்கு வடக்கே அமைந்துள்ள வடஇலங்கை பண்டு தொட்டு தனியொரு பிராந்தியமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. வடஇலங்கைக்கு இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு குறையாத பாரம்பரிய வரலாறு இருப்பதனை வரலாற்று மூலங்கள் மட்டுமன்றி இன்றுவரை நிலைத்து நிற்;கும் தொல்லியல் பண்பாட்டுச் சின்னங்கள் மற்றும் இதுவரை இடம்பெற்ற தொல்லியலாய்வுகள் போன்றனவும் உறுதிப்படுத்துகின்றன. இத்தொல்லியல் ஆய்வுகளில் இலங்கையின் வரலாற்றுதய காலமாகிய பெருங்கற்காலப் பண்பாடு பற்றிய ஆய்வுகள் மிகமுக்கியத்துவம் வாய்ந்தவையாகும். தமிழகத்தினதும், இலங்கையினதும் அரசியல், பொருளாதார, சமூக, சமய பண்பாட்டம்சங்களின் தொடக்க வாயிலாக பெருங்கற்காலப் பண்பாடு (Megalithic Culture) அமைகின்றது. பெரிய கற்களினை பயன்படுத்தி தொழினுட்ப திறன் வாய்ந்ததாக ஈமச்சின்னங்கள் அமைக்கப்பட்டதன் காரணமாகவே இப்பண்பாடு பெருங்கற்காலம் எனப் பெயர் பெறுகின்றது. இப்பண்பாட்டம்சங்கள் செழிப்படைந்திருந்த இடங்களில் வடஇலங்கையும் ஒன்று என்பதனை இங்கு பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியலாய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. அதில் குறிப்பாக அண்மையில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களான மன்னார் மாவட்டத்தில் கட்டுக்கரை மற்றும் வவுனியா மாவட்டத்தில் கொங்குராயன்மலை என்பன முக்கியம் வாய்ந்தவையாகும். இவ்விரு மையங்களிலும் அடையாளப்படுத்தப்பட்ட ஈமச்சின்னங்கள் இலங்கையின் பெருங்கற்காலப் பண்பாடு பற்றிய ஆய்வில் புதிய திருப்புனையாகும். இதுவரையான இலங்கையின் பெருங்கற்காலப் பண்பாட்டு ஆய்வுகளில் குடியிருப்பு, வயல், குளம், ஈமச்சின்னம் ஆகிய நான்கு அம்சங்களும் ஒன்றுசேர அடையாளப்படுத்தப்பட்ட ஒரே மையம் என்ற வகையில் கட்டுக்கரைக்கு தனிச்சிறப்புண்டு. அதே போன்று கொங்குராயன்மலை என்ற இடத்தில் கல்வட்டம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் பத்திற்கு மேற்பட்ட பிராமிக் கல்வெட்டுக்களும், புராதன குடியிருப்புக்களுக்குரிய சான்றுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தென்னிலங்கை பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் வடஇலங்கையில் இதுவரை பரவலான வகையில் தொல்லியல் ஆய்வுகள் இடம்பெறாத நிலையில் கட்டுக்கரை, கொங்குராயன்மலை போன்ற இடங்களில் இடம்பெற்ற முதல்கட்ட ஆய்வுகள் வடஇலங்கையின் வரலாறு பொறுத்து முக்கியப்படுத்தப்பட்டிருப்பதோடு, எதிர்வரும் காலங்களில் இவ்விடங்களில் விரிவான தொல்லியல் ஆய்வுகள் இடம்பெற வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தியிருக்கின்றன.

திறவுச் சொற்கள் - ஈமச்சின்னங்கள், வடஇலங்கை, பெருங்கற்காலப் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள்.

 

வடஇலங்கைக்கு 2500 ஆண்டுகளுக்கு குறையாத தொன்மையான, தொடர்ச்சியான வரலாறு உண்டு என்பதனை அங்கு மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளும், வரலாற்று இலக்கியங்களும், தொல்லியல் மரபுரிமைச் சின்னங்களும் உறுதிசெய்கின்றன. இலங்கை வரலாறு கூறும் பாளி இலக்கியங்கள் இலங்கையின் எல்லாப்பிராந்தியங்களையும், அவற்றின் வரலாற்றையும் தனித்து அடையாளப்படுத்திக் கூறவில்லை. ஆனால் பாளி இலக்கியங்களில் வடஇலங்கை பண்டு தொட்டு பிற்காலத்தில் வன்னி யாழ்ப்பாணம் என்ற பெயரைப் பெறுவதற்கு முன்னர் நாகதீப(ம்), உத்தரதேசம் என தனித்து அடையாளப்படுத்திக் கூறுவதன் மூலம் வடஇலங்கையின் வரலாற்றுப் பழமையும், அதன் தனித்துவமான பண்பாடும் தெரியவருகின்றது. கிறிஸ்துவிற்கு முற்பட்ட நூற்றாண்டுகளிருந்து நாகதீபம் எனவும் அதனைத் தொடர்ந்து உத்தரதேசம் எனவும் தனித்து வட இலங்கை அடையாளப்படுத்தப்பட்டதனை தொல்லியல் மூலாதாரங்களும், வெளிநாட்டு இலக்கியக் குறிப்புகளும் உறுதிப்படுத்துகின்றன. பாளிஇலக்கியங்களில் வடஇலங்கை நாகதீப(ம்) என அடையாளப்படுத்தப்பட்டிருந்ததனை 1936 இல் வல்லிபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமிச் சாசனமும் (நகதிவ)  உறுதிசெய்கின்றது. இவ்வாறாக பாளியில் நாகதீப, பிராகிருதத்தில் நகதீவ என அடையாளப்படுத்தப்பட்ட வடஇலங்கை தமிழில் நாகபூமி, நாகநாடு என அழைக்கப்பட்டிருந்ததற்கான ஆதாரங்களினை மணிமேகலை, கலிங்கத்துப்பரணி போன்ற தமிழக இலக்கியங்களிலும், மட்டக்களப்பு மான்மியம் போன்ற ஈழத்து இலக்கியங்களிலும் காணமுடிகின்றது. வடஇலங்கையில் உள்ள உடுத்துறை என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நாணயம் ஒன்றில் ‘நாகபூமி’ எனப் பெயர்பெறிக்கப்பட்டிருந்தமையும் முக்கிய ஆதாரமாகும் (புஸ்பரட்ணம்.ப. 2017). இவ்வாதரங்கள் நாகதீபம், நாகபூமி, நாகநாடு போன்ற பெயர்கள் 13ஆம் நூற்றாண்டு வரை வடஇலங்கையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். 13ஆம் நூற்றாண்டிலிருந்து வடஇலங்கைக்கு உட்பட்ட பிராந்தியம் வன்னி, வன்னிப் பற்று எனவும், தற்போதைய யாழ்ப்பாணக் குடாநாடு யாப்பாபட்டுன, யாழ்பாணயன்பட்டினம், யாழ்ப்பாணதேசம், யாழ்ப்பாணம் என அழைக்கப்பட்டதை பாளி, சிங்கள தமிழ் இலக்கியங்களும், கல்வெட்டுக்களும், ஐரோப்பியர்கால ஆவணங்களும் உறுதி செய்கின்றன. 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் ஆட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து இலங்கையிலும், வடஇலங்கையிலும் புதிய நிர்வாக அலகுகள் ஏற்படுத்;தப்பட்டன. அதிலும் பிரித்தானியர் ஆட்சியில் நிர்வாக வசதிக்காக வடஇலங்கையில் ஏற்படுத்தப்பட்ட மாவட்ட நிர்வாக முறையால் அதன் எல்லைகள்  காலத்திற்கு காலம் மாற்றியமைக்கப்பட்டு தற்போதைய வட இலங்கையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா என்பன நிர்வாக மாவட்டங்களாக உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்தவகையில் இலங்கை வரலாற்றில் புராதன காலம்தொட்டு தனக்கென தனித்துவமான பாரம்பரிய வரலாறு கொண்ட பிராந்தியமாக நாகதீபமும் அதனுள் அடங்கியிருந்த மாவட்டங்களும் விளங்கியிருந்ததென்பதனை அறியமுடிகின்றது.

வடஇலங்கைப் பண்பாடு பண்டுதொட்டு தென்னிந்தியாவுடன் அதிலும் குறிப்பாக தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டு வளர்ந்ததனை இலக்கிய, தொல்லியல் சான்றுகள் பலவும் எடுத்துக்காட்டுகின்றன. இத்தொடர்புகள் ஏற்படுவதற்கு பௌதீக, புவியியல் அம்சங்களின் சாதக தன்மையும் முக்கிய காரணமாக அமைந்ததெனலாம். இவற்றின் அடிப்படையில் வரலாற்றுக்கு முற்பட்டகாலம் தொட்டு அதிலும் குறிப்பாக பெருங்கற்காலப் பண்பாட்டம்சங்கள் ஒரே பிராந்தியத்திற்குரியது எனக் கூறுமளவிற்கு இவ்விரு பிராந்திய பண்பாட்டம்சங்களும் ஒற்றுமைத் தன்மையினை வெளிப்படுத்தியிருந்தன. இவ்ஒற்றுமைத் தன்மையினை வெளிப்படுத்தியிருந்ததில் தொல்லியல் ஆய்வுகளுக்கு முக்கிய பங்குண்டு. அதில்  1970களில் பென்சில்வேனிய பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த விமலாபேக்லேயால் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் முக்கிய பங்கினை வகித்திருந்தன. குறிப்பாக தென் தமிழகத்தின் ஆதிச்சநல்லூரிலும் அதற்கு நேர்எதிரே காணப்பட்டிருந்த இலங்கையின் வடமேற்கு பிராந்திய பெருங்கற்கால மையங்களிலும் இடம்பெற்;ற அகழ்வாய்வுகளில் வெளிக்கெணரப்பட்ட ஈமச்சின்ன அடக்க முறைகள்;, இரும்பு, வெண்கல பொருட்கள், மட்பாண்டங்கள் மற்றும் அவற்றின் தொழினுட்பங்கள் போன்ற பல்வேறு அம்சங்கள் ஓரே பிராந்தியத்திற்குரியது எனக் கூறுமளவிற்கு ஒத்ததன்மையினை கொண்டு விளங்கியிருந்தமையானது இதனை மேலும் உறுதிப்படுத்துகின்றது (இந்திரபாலா.க.2006, சிற்றம்பலம்.சி.க.1990).

தமிழகத்தினதும், இலங்கையினதும் அரசியல், பொருளாதார, சமூக, சமய பண்பாட்டம்சங்களின் தொடக்க வாயிலாக பெருங்கற்காலப் பண்பாடு அமைகின்றது. இதன்பின்னனியிலேயே இப்பண்பாடு வரலாற்றுதயகாலம் (Pre Historical Period) மற்றும் ஆக்ககாலம் (Formation Period)  எனவும் அழைக்கப்படுகிறது. அத்துடன் இரும்பு உலோக தொழினுட்பம் மற்றும் கறுப்பு, சிவப்பு நிற மட்பாண்டங்களை அடிப்படையாகக் கொண்ட மட்பாண்டச் செய்கை தொழினுட்பம் என்பவை பெற்ற அதியுன்னத வளர்ச்சி நிலை காரணமாக இப்பண்பாடானது இரும்புக்காலம், கறுப்பு சிவப்பு நிற மட்பாண்டக்காலம் எனவும் பெயர்பெறுகின்றது. மனிதன் நாடோடி வாழ்க்கை முறையினை கைவிட்டு நிரந்தரமான வாழ்க்கை முறைக்குப் பொருத்தமான இடங்களில் நிரந்தர குடியிருப்புக்களை அமைத்து ஓரு சமூகமாக செறிந்து வாழத் தொடங்குதல், தமது இருப்பிடங்களுக்கு அண்மையில் குளநீர்ப்பாசன விவசாயம் மற்றும் மந்தைவளர்ப்பில் ஈடுபடுதல், மற்றும் சிறுதொழில் நுட்ப வளர்ச்சி, ஈமச்சின்ன அமைப்பு முறைகள், மட்பாண்டங்களின் உற்பத்தி, உலோகத் தொழில்நுட்பம், உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகம், குறுநில அரசுகளின் தோற்றம் போன்ற அம்சங்களின் அடிப்படையில் புதியதொரு பண்பாட்டு நிலையினை உருவாக்கியிருந்தான். உலகில் இந்த மாற்றங்கள் வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கப்பட்டாலும் தமிழகத்திலும், இலங்கையிலும் இப்பண்பாட்டு மாற்றம் பெருங்கற்காலப் பண்பாடு (Megalithic Culture) என அழைக்கப்படுகி;ன்றது. எனினும் பெருங்கற்காலப்பண்பாட்டிற்கு முன்னோடியானதொரு பண்பாட்டு உருவாக்கம் திராவிடமொழி பேசுகின்ற பிரதேசங்களில் அதற்கு முந்திய இருநிலைகளான பண்பாடுகளிலும் வெளிப்பட்டிருப்பதனையும் காணமுடிகின்றது (Shetty.2003, Rajan.2003, சிற்றம்பலம்.சி.க 2002, புஸ்பரட்ணம்.ப.1995). முதலாவது  தென்னிந்தியாவின் புதிய கற்காலப் பண்பாட்டின் ஆய்வுகள் மூலம் வெளிக்கொணரப்பட்ட எச்சங்கள் குறிப்பாக தாழி அடக்கம், நீளக்கிடத்தி அடக்கம் செய்யும் மரபு, இவ்ஈமக் குழிகளில் ஞாபகச் சின்னமாக நடப்பட்ட கற்கள் இவற்றுடன் காணப்பட்ட கறுப்புச் சிவப்பு நிற மட்பாண்டங்கள் என்பன பெருங்கற்காலம் புதிய கற்காலப் பண்பாட்டின் (Neolothic Culture)  வளர்ச்சியே என்பதனை எடுத்துக் காட்டியுள்ளன. இதனை பிக்லிகால், பிரமகிரி, நரசிப்பூர், வைகை ஆற்றுக்கு வடக்கே பெண்ணையாறு, பாலாறு பள்ளத்தாக்குகளில் அமைந்த அப்புக்கல், பையம்பள்ளி, மயிலாடும்பாறை ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.  இரண்டாவது, இடைக்கற்காலப்பண்பாடு அல்லது நுண்கற்காலப் பண்பாட்டின் தொடர்ச்சியாக பெருங்கற்காலப் பண்பாடு காணப்படுதல். இதற்கு தென்தமிழகப் பிரதேசங்கள் உதாரணமாக மாங்குடி, தேரிருவேலி, கல்லுப்பட்டி போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளும், இலங்கையின் பெருங்கற்காலப் பண்பாட்டு மையங்கள் குறிப்பாக அநுராதபுரம், பொம்பரிப்பு, பூநகரி, கட்டுக்கரை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. மேற்கூறப்பட்ட இரு முன்னோடியான பண்பாடுகளும் அவ்அவ் பிரதேசங்களின் இயற்கை அமைப்பிற்கேற்ப குறிப்பாக இயற்கையாகக் கிடைக்கப்பெற்ற கனிய வளங்களினை அடிப்படையாக கொண்டு தோற்றம் பெற்றிருந்தன. இந்தவகையில் இலங்கையின் பெருங்கற்காலப் பண்பாடானது தென்தமிழகத்தினைப் போன்று நுண்கற்காலத்தின் தொடர்ச்சியாகவே அமைந்திருந்தது. இதுவரை கிடைக்கப் பெற்ற சான்றாதாரங்களின் அடிப்படையில் பெருங்கற்காலப் பண்பாடானது தென்னிந்தியாவில் கி.மு 1200 தொடக்கம் கி.மு 300 வரையிலும், இலங்கையில் கி.மு 1000 தொடக்கம் கி.மு 300 வரையிலும் நிலவியிருந்ததாக அறியமுடிகின்றது. வரலாற்றுதய காலமாகிய பெருங்கற்காலப் பண்பாட்டம்சங்களினை பெரிதும் தொல்லியல் ஆதாரங்களில் மட்டுமே அறியக்கூடியதாகவிருப்பினும் அதன் வளர்ச்சி நிலையிலான அம்சங்கள் பலவும் சங்க இலக்கியங்களில் பிரதிபலித்திருப்பதும் சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இறந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட ஈமச்சின்னங்களை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்ற பண்பாடே பெருங்கற்காலமாகும். குறிப்பாக பெரிய கற்களினை பயன்படுத்தி தொழினுட்ப திறன் வாய்ந்ததாக ஈமச்சின்னங்கள் அமைக்கப்பட்டதன் காரணமாகவே இப்பண்பாடு பெருங்கற்காலம் எனப் பெயர் பெறுகின்றது. புராதன நதிக்கரை நாகரிகங்களின் காலம் தொட்டு மனிதன் தன் இனக்குழுவில் வாழ்ந்த ஒருவர் இறந்த பின்பு அவர் தொடர்ந்தும் தங்களிடையே வாழ்கின்றனர் என்ற நம்பிக்கை அல்லது மறுபிறப்பு பற்றிய நம்பிக்கைகள் வேரூன்றியிருந்ததன் அடிப்படையில் இறந்தவர் வழிபாட்டினை மேற்கொண்டிருந்தான். இதனையே கா.ராஐன் தனது தொல்லியல் நோக்கில் சங்ககாலம் என்ற நூலில் ‘இறந்தவர்களைப் புதைத்து அவர்களை வழிபடுகின்ற பழக்கம் பின்னாளில் பெருங்கற்படைச் சின்னங்களாக உருவாயின’ எனக் குறிப்பிட்டிருந்தார். பழையகற்காலத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்தமை, ஈமக்கிரியைகள் பற்றிய சான்றுகள் இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில் புதியகற்கால, இடைக்கற்கால பண்பாட்டு மக்கள் தமது வசிப்பிடங்களிலேயே இறந்தோரை அடக்கம் செய்திருந்தனர். இவ்வாறு வசிப்பிடங்களில் இறந்தோரை அடக்கம் செய்வதற்கு இறந்தோர் மீதான ஈடுபாடும், அவர்கள் தம்மைப் பயமுறுத்துவர் என்ற நம்பிக்கையும் காரணமாக அமைந்தது (சிற்றம்பலம்.சி.க.1993). இதன்விளைவாக இறந்தோரை அடக்கம் செய்வதில் அப்பாண்பாட்டில் ஒருவித நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டதனையே காணமுடிகின்றது. இவ்விதமான நம்பிக்கையின் வளர்ச்சி நிலையே பெருங்கற்காலப் பண்பாட்டில் சிறப்பாக பிரதிபலித்ததெனலாம். புதிய கற்கால, இடைக்கற்கால பண்பாட்டில் தமது வசிப்பிடத்திலேயே இறந்தோரை அடக்கம் செய்த மக்கள் பெருங்கற்காலத்தில் தம் வசிப்பிடங்களுக்கு அப்பால் பெரிய கற்களை பயன்படுத்தி இறந்தோரை அடக்கம் செய்தனர். அத்துடன் தாழிஅடக்கம், நீளக்கிடத்தி அடக்கம் செய்தல் போன்ற புதிய கற்கால ஈமச்சின்ன வழக்கங்களோடு பெரிய கற்களை கொண்டு அமைக்கப்பட்ட கற்பதுக்கை, கல்வட்டங்கள் போன்றனவும் அமைக்கப்பட்டன. எனினும் புதியகற்கால, இடைக்கற்கால பண்பாட்டுகளிலிருந்து பெருங்கற்காலம் வளர்ச்சி நிலையிலான புதிய பண்பாடாகவே காணப்படுவதுடன் இப்பண்பாட்டின் பிரதான அம்சங்களாகிய ஈமச்சின்னங்கள், வயல்கள், குளங்கள், மக்கள் இருப்பிடங்கள் போன்றவையெல்லாம் பெருங்கற்காலத்தின் தனித்துவமான வளர்ச்சியினையே சுட்டுகின்றது எனலாம் (சிற்றம்பலம்.சி.க,1993, 2002). பெருங்கற்காலப் பண்பாடானது ஒரு புதிய பண்பாட்டு வளர்ச்சி நிலையினை சுட்டிநிற்பதனால் ஈமச்சின்ன அமைப்பு முறையிலும் குறிப்பாக சுகாதாரநலன் போன்ற விடயங்களை கவனத்தில் கொண்டு அமைக்கப்பட்டதாக கருதமுடியும். அதாவது புதிய கற்கால, இடைக்கற்கால பண்பாட்டில் தமது வசிப்பிடத்திலேயே இறந்தோரை அடக்கம் செய்த மக்கள் பெருங்கற்காலத்தில் சுகாதாரநலன் கருதி தம் வசிப்பிடங்களுக்கு அப்பால் புறம்போக்கான இடங்களில் சவஅடக்கங்களை மேற்கொண்டிருந்தனர்.

தமிழக, இலங்கைப் பிராந்தியங்களில் இதுவரை இடம்பெற்ற பெருங்கற்காலப் பண்பாடு பற்றிய ஆய்வுகளிலிருந்து சில பொதுப்பண்புகளை காணமுடிகின்றதெனலாம். இப்பண்பாட்டு மையங்கள் ஈமச்சின்ன மையங்களாகவும், குடியிருப்பு மையங்களாகவும் வேறும் சிலவற்றினை குடியிருப்பு, ஈமச்சின்னங்கள் ஆகிய இரண்டினையும் உள்ளடக்கிய மையங்களாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவ்விரு பிராந்தியங்களிலும் காணப்படும் ஈமச்சின்ன அமைப்புக்;கள்; பெரிய கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்ததை விட பெரிதும் தொழினுட்பத்திறன் வாய்ந்த பல்வேறு வடிவிலான தாழிகளிலும், ஈமப்பேழைகளிலும் மற்றும் சிறிய கற்களைக் கொண்டுமே அமைக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாகவும், இவ்விருபிராந்திய பெருங்கற்காலப் பண்பாட்டு மையங்களில் கிடைக்கப்பெற்ற கறுப்பு, சிவப்பு நிற மட்பாண்டங்கள், இரும்பின் உபயோகம், சுடுமண் உருவங்கள், எழுத்துப் பொறிப்புடைய மட்பாண்ட எச்சங்கள் என்பனவெல்லாம் இப்பண்பாட்டினை பெருங்கற்கற்காலப் பண்பாடு என்பதைவிட ஆதியிரும்புக்காலப் பண்பாடு என்று அழைப்பதே பொருத்தமாகத் தெரிகின்றது (இந்திரபாலா.2006). அதிலும் குறிப்பாக சுடுமண்ணிலான தாழிகள், ஈமப்பேழைகள் போன்ற ஈமஅடக்கமானது தமிழக, வடஇலங்கைப் பிராந்தியத்திற்கேயுரிய தனித்துவமான கலைவடிவங்களாகவும் அமைகின்றன.

இவ்வகையான சுடுமண்ணிலான ஈமஅடக்கங்கள் இந்தியா, இலங்கைப் பெருங்கற்கால மையங்களில் மட்டுமன்றி, புராதன உலகின் பலபகுதிகளிலும் ஈமஅடக்கங்களின் போது சுடுமண்ணிலான உருவங்கள் பயன்படுத்தப்பட்டன. அவை விலங்கின உருவங்களாகவும், பறவை உருவங்களாகவும், ஆண், பெண் உருவங்களாகவும் காணப்பட்டதற்கான ஆதாரங்கள் உண்டு. சுடுமண் உருவங்கள் சிரியாவில் கி.மு 6000 – 5000ஆம் ஆண்டளவிலும், எகிப்திய நாகரிகத்தில் கி.மு 5000ஆம் ஆண்டளவிலும், இத்தாலியில் கி.மு 1000ஆம் ஆண்டளவிலும், கிரேக்கத்தில் கி.மு 325ஆம் ஆண்டளவிலும் இவ்வகையான சுடுமண் உருவங்களை இறந்தோரைப் புதைக்கும் புதைகுழிகளில் இட்டுப் புதைத்துள்ளனர். அத்துடன் இத்தாலியில் கி.மு 700ஆம் ஆண்டளவில் இறந்தோரை அடக்கம் செய்யும் ஈமப்பெட்டிகளின் மூடிகள் சுடுமண்ணிலான மனிதத்தலை, ஆண், பெண் உருவங்களில் உருவாக்கப்பட்டிருந்தன (சண்முகம்.ப.2009).

பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் பொதுவாக பெரிய கற்களால் அமைக்கப்பட்டவையாக இருந்தாலும், அவ்வமைப்பில் பின்பற்றப்பட்டிருந்த சிறு சிறு வேறுபாடுகள், தொழினுட்பம், கிடைக்கப்பெற்ற கனியவளங்கள் என்பவற்றின் அடிப்படையில் வெவ்வோறான பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டதனை இப்பண்பாட்டு ரீதியான ஆய்வுகள் வேறுபடுத்தியுள்ளன. பெருங்கற்கால பண்பாட்டு ஆய்வுகளிலிருந்து அவ்அவ் பண்பாட்டு பிராந்திய புவியியல் அமைப்பிற்கேற்ப ஈமச்சின்னங்கள் பல வகையினதாக அடையாளங்காணப்பட்டுள்ளன. இந்தியாவில் ஏறத்தாழ நாற்பதிற்கு மேற்பட்ட ஈமசின்ன வகைகள் இனங்காணப்பட்டுள்ளன (Codrington.K.1930, Krishnaswami.K.D.1949, Dikshit.K.N.1968, Sundara.S.1979). இலங்கையில் இதுவரை வெளிவந்த பெருங்கற்காலப் பண்பாடு பற்றிய ஆய்வுகளிலிருந்து  ஐம்பதிற்கு மேற்பட்ட இடங்களில் இப்பண்பாடு அடையாளப்படுத்தப்பட்டிருப்பதுடன் அவற்றில் பத்திற்கு மேற்பட்ட இடங்களில் குடியிருப்புக்களுக்குரிய சான்றுகளும், நாற்பது இடங்களில் ஈமச்சின்னங்கள் தொடர்பான சான்றுகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக அறியமுடிகின்றது (புஸ்பரட்ணம்.ப.2017). எனினும் இலங்கையில் குறைவான எண்ணிக்கையுடைய ஈமச்சின்ன வகைகளே இனங்காணப்பட்டுள்ளன. அவை கல்லறை (Cist Burial), கற்கிடை (Dolment), கல்வட்டங்கள்; (Stone circles),  தாழியடக்கம் (Urn Burial), நீளக்கிடத்தி அடக்கம் செய்தல் (Extended Burials), குடைக்கல் ஈமச்சின்னம் (Umbrellastone Burial) ஆகியனவாகும்.

வடஇலங்கையின் கற்காலப் பண்பாடானது மத்திய பழையகற்காலப் பண்பாட்டுடன் ((Middle Palaeolithic) அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இப்பண்பாடு இற்றைக்கு 125000 ஆண்டளவில் இரணைமடுப் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட கல்லாயுதங்களின் அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டதாகும். இப்பண்பாட்டினைத் தொடர்ந்து நுண்கற்காலப் பண்பாடு (Mesolithic culture) கி.மு 37000ஆம் ஆண்டிலிருந்து நிலவியதாக அறியமுடிகின்றது. வடஇலங்கையில் மாதோட்டம், இரணைமடு, பூநகரி, கட்டுக்கரைக்குளம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளில் நுண்கற்காலப் பண்பாட்டம்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டன. இவ்நுண்கற்காலப் பண்பாட்டம்சங்களின் தொடர்ச்சிநிலையானதொரு பண்பாடாகவே ஆதியிரும்புக்காலப் பண்பாட்டம்சங்கள் நிலவியிருந்தன. இலங்கையில் நுண்கற்கால மக்கள் பயன்படுத்திய கருவிகளுக்கும் தென்னிந்திய நுண்கற்கால மக்கள் பயன்படுத்திய கருவிகளுக்கும் இடையில் காணப்படும் நெருங்கிய ஒற்றுமைத் தன்மையினைக் காணமுடிகின்றது. மொழி அடிப்படையிலும், உடற்கூற்றடிப்படையிலும் இவ்விரு பிராந்திய நுண்கற்கால மக்களிடையே நெருங்கிய தொடர்புள்ளதாகக் குறிப்பிடும் மொழியிலாளர்கள், மானிடவியலாளர்களின் கருத்துக்களின் அடிப்படையிலும் இலங்கையில் வாழ்ந்த நுண்கற்கால மக்கள் தென்னிந்தியாவிலிருந்து குறிப்பாக தேரி மணற்குன்றுப் பகுதியிலிருந்து புலம்பெயர்ந்து வந்தனர் எனக் கூறப்படுகின்றது. பேராசிரியர் இந்திரபாலா யாழ்ப்பாணக் குடாநாடு தமிழகத்தின் தொடக்க வாயிலாக இருப்பதால் தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்த நுண்கற்காலக் பண்பாட்டு மக்கள் முதலில் குடியேறிய இடமாக யாழ்ப்பாணக் குடாநாட்டினைக் குறிப்பிடுகின்றார்.  யாழ்ப்பாணக் குடாநாடு உள்ளிட்ட வடஇலங்கை ஊடாகவே இலங்கையின் ஏனைய பிரதேசங்களுக்கு இவ்பண்பாட்டு மக்கள் புலம்பெயர்ந்ததாக கருதமுடியும் (இந்திரபாலா.2006).

வடஇலங்கையில் பெருங்கற்காலப் பண்பாடு பற்றி இதுவரை இடம்பெற்ற முக்கிய தொல்லியல் ஆய்வுகளினை பொதுவாக நான்கு காலகட்டங்களாக வகுக்க முடியும்.

1.     1887ஆம் ஆண்டு தொடக்கம் 1970 வரையிலானவை -   இக்காலப்பகுதிக்குரியவை பெரும்பாலும் தொடக்க கால ஆய்வுகளாகவே அமைந்தன. குறிப்பாக கந்தரோடையில் சேர்.போல்.பீரிஸ் -1917-19, 1946 –கொடகும்பற, 1960 - இலங்கைத் தொல்லியல் திணைக்களம் ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்ற ஆய்வுகளினையும்,  மாந்தையில் 1887 – பி.Nஐ.போக், 1926 – கோகட், 1950 – எஸ்.சண்முகநாதன் மற்றும் வடமேற்கிலங்கையில் புத்தள மாவட்டத்தில் பொம்பரிப்பில் கோகாட் - 1924, இலங்கைத் தொல்லியல் திணைக்களம் - 1956, 57, கொட்றிங்ரன் -  1965 ஆகியோரது ஆய்வுகளினையும் குறிப்பிடலாம்.

2.     1967 – 70களினைத் தொடர்ந்து 1980ஆம் ஆண்டு வரையிலானவை -  இக்காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் வரலாற்றுதயகாலமாக பெருங்கற்காலப் பண்பாட்டினை அடையாளப்படுத்தியதெனலாம். குறிப்பாக 1967 – 70 பென்சில்வேனியப் பல்கலைக்கழகத்தினை சேர்ந்த விமலாபேக்லேயினால் கந்தரோடை, மாந்தை மற்றும் வடமேற்கிலங்கையில் பொம்பரிப்பு ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

3.     1980களினைத் தொடர்ந்து 2000 வரையிலானவை - இக்காலப்பகுதியில் இடம்பெற்ற ஆய்வுகளில்; யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையினர்  பேராசிரியர் இந்திராபாலா தலமையில் ஆனைக்கோட்டையில் மேற்கொண்ட ஆய்வும், கலாநிதி ரகுபதியினால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் 40இற்கு மேற்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளினையும், 1989களினைத் தொடர்ந்து பேராசிரியர் புஸ்பரட்ணத்தினால் பெருநிலப்பரப்பில் பூநகரியில் இடம்பெற்ற ஆய்வு மற்றும் பேராசிரியர் செனெவிரத்னாவால் (1984) அடையாளப்படுத்தப்பட்ட வவுனியா மாவட்டத்தில் மாமடு  ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

4.     2000ஆம் ஆண்டுகளினைத் தொடர்ந்து 2018 வரையிலானவை - இவற்றுள் 2005ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் பிரிவினர் பேராசிரியர் புஸ்பரட்ணம் தலமையில் சாட்டியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும், இக்காலப்பகுதியில் கந்தரோடையில் இடம்பெற்ற ஆய்வுகளும், 2016 – 2018 வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் பிரிவினர் பேராசிரியர் புஸ்பரட்ணம் தலமையில் நாகபடுவான், கட்டுக்கரை ஆகிய இடங்களில் இடம்பெற்ற ஆய்வுகளினையும் குறிப்பிடலாம்.

இவ்வாறாக வட இலங்கையில் இடம்பெற்ற முக்கிய பெருங்கற்காலப்பண்பாட்டு ஆய்வுகளில் இப்பண்பாட்டிற்குரிய குடியிருப்பு மையங்களும் (Settlement Sites), ஈமஅடக்க மையங்களும் (Burial Sites) இனங்காணப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் வட இலங்கையிலும், அதனை அண்டிய பிரதேசங்களிலும் அடையாளப்படுத்தப்பட்ட முக்கிய ஈமச்சின்ன மையங்கள் (Burial Sites) பின்வருமாறு.

 

1.     ஆனைக்கோட்டை - 1980களில் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக பேராசிரியர் இந்திரபாலா தலமையில் இடம்பெற்ற ஆனைக்கோட்டை அகழ்வாய்வானது பெருங்கற்காலப்பண்பாடு பற்றிய ஆய்வுகளில் மிகமுக்கியமானதாகும். இப்பண்பாட்டிற்குரிய பல்வேறான சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டதுடன், நீளக்கிடத்தி அடக்கம் செய்யும் மரபு, தாழியடக்க ஈமச்சின்னமரபு என்பனவும் அடையாளப்படுத்தப்பட்டன. அத்துடன் கோவேத என தமிழ்ப்பிராமியில் பெயர்பெறிக்கப்பட்ட முத்திரைச் சாசனம் கிடைக்கப்பெற்றமையானது பெருங்கற்காலப் பண்பாட்டு பின்னனியில் குறுநில அரசு ஒன்று தோன்றியிருந்தமைக்கான மிகச்சிறந்த ஆதாரமாகவும் அமைந்தது (இந்திரபாலா.க.2006).

2.     சத்திராந்தை - 1980 களில் கலாநிதி இரகுபதி யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் காரைநகரில் (சத்திராந்தை) நீளக்கிடத்தி அடக்கம் (Extended Burial) செய்யப்பட்ட ஈமச்சின்னம் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது (Ragupathy.p.p.1987).

3.     மாதோட்டம் - 1950இல் எஸ்.சண்முகநாதன் என்பவரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் நீளக்கிடத்தி அடக்கம் செய்யும் வகையைச் சேர்ந்த சவஅடக்கம் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டது.

4.     சாட்டி - 2005இல் பேராசிரியர்.புஸ்பரட்ணத்தின் தலமையில் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக வரலாற்றுத் துறையினர் வேலணைப்பிரதேசத்தில் சாட்டி என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வும் முக்கியம் பெற்றதாகும். இவ்வாய்வில் குழியடக்க (Pit Burial) ஈமச்சின்னங்களும், குடைக்கல் ஈமச்சின்ன (Umbrellastone Burial) ஒன்றும் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது (புஸ்பரட்ணம்.ப.2007).

5.     மாமடு – பறங்கியாற்றினை மையப்படுத்திய வகையில் இங்கு பெருங்கற்கால பண்பாட்டம்சங்கள் வளர்சியடைந்திருக்கும். எனினும் இங்கு முறையான தொல்லியலாய்வுகள் எதுவும் இடம்பெறவில்லையாதலால் இவ்மையம் பற்றிய மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள முடியவில்லை. இங்கு இனங்கானப்பட்ட ஈமச்சின்னங்கள் கூட அழிவிற்குட்பட்டமையும் வருத்தத்திற்குரிய விடயமாகும். இப்பிரதேசத்தில் பெருங்கற்களால் அமைக்கப்பட்டு கற்பலகையினால் மூடப்பட்ட வகையிலான கற்கிடை ஈமச்சின்ன அடக்கங்கள் காணப்பட்டிருந்தது. இவ்கற்கிடை அமைப்பிலிருந்து சிறிது தூரத்தில் கற்களால் அமைக்கப்பட்ட வட்டங்களைக் கொண்ட  கல்வட்ட (Stone Circle) ஈமச்சின்னங்களும் அடையாளப்படுத்தப்பட்டன. இவ்வமைப்பினுள் தாழிகள் புதைக்கப்பட்டமைக்கான சான்றுகளையும் மற்றும் கறுப்பு, சிவப்பு நிற மட்பாண்ட துண்டுகளினையும் அடையாளப்படுத்திய பேராசிரியர் செனெவிரத்னா இவை இதுவரை இலங்கையில் வேறெங்கும் கண்டறியப்படாத தனித்துவமுள்ள கவ்வட்டங்கள் எனச் சுட்டிக்காட்டினார் (Seneviratne.S,1984).

6.     பொம்பரிப்பு – 1924இல் கோகாட் மேற்கொண்ட ஆய்வுகளில் ஒரு தாழியும் (Urn Burial),  1956, 1957களில் இலங்கைத் தொல்லியல் திணைக்களம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் பல தாழிகளும், 1965இல் கொட்றிங்ரனால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஒரு தாழியும், 1970இல் பென்சில்வேனியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விமலா பேக்லே மேற்கோள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலமாக அதிகளவிலான தாழிகளும் வெளிகொணரப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. இவ்தாழிக்காடானது ஏறத்தாழ 3-4 ஏக்கர் பரப்பளவில் சராசரியாக 1.5 அல்லது 02 மீற்றர் இடைவெளியில் 8000க்கு மேற்பட்ட பெருங்கற்கால ஈமத்தாழிகள் இனங்காணப்பட்டிருந்தது. இத்தாழிகளுக்குள் இறந்த மனிதனின் உடற் பாகங்களோடு, படையல் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கறுப்பு சிவப்பு, கறுப்பு, சிவப்பு நிற, பல வகையான மட்பாண்டங்கள், அத்துடன் வெண்கல ஊசிகள், வெண்கல காப்புக்கள், கண்ணாடி மணிகள், பறவை மிருக எலும்புகள் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தின் ஆதிச்சநல்லூருக்கு நேர்எதிரே அமையப்பெற்றிருந்த பெம்பரிப்பானது இலங்கையின் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஓரோயொரு தாழிக்காடாகவும் சிறப்பு பெறுகின்றது. அத்துடன்  இங்கு குழியடக்கம் (Pit Burial) ஈமச்சின்ன முறையும் இனங்காணப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

7.     கிளிநொச்சி – கிளிநொச்சி மாவட்டத்தில் குஞ்சுப்பரந்தனில் 1990களில் பயிர்ச்செய்கைக்காக நிலத்தை திருத்தும் போது எதிர்பாராத வகையில் முழுமையான தாழியும், தாழியின் உடைந்த பாகங்களும் கிடைக்கப்பெற்றன. வட இலங்கையில் கிடைக்கப்பெற்ற முதலாவது முழுமையான பெருங்கற்கால ஈமத்தாழி என்ற வகையில் இதற்கு தனிச் சிறப்புண்டு. இத்தாழிக்குள் மனித எலும்புக் கூட்டின் சில பாகங்களும், சாம்பல் போன்ற கரிய பொருட்களும், இரு மட்கலமும் காணப்பட்டிருந்தது (புஸ்பரட்ணம்.ப.2014). இத்தாழியானது தற்போது உடைந்த நிலையில் யாழ்.நாவலர் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

 

இவ்வாறாக வடஇலங்கையில் பலவகையிலான ஈமச்சின்னங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்த போதும் 2016ஆம் ஆண்டு தொடக்கம் 2017 வரையிலான காலப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஈமச்சின்ன வடிவங்களான ஈமப்பேழை, தாழி, கல்வட்டம் என்பன முக்கியம் வாய்ந்தவையாகும்.

 

வடஇலங்கையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்கள்

சமகாலத்தில் தமிழில் கட்டுக்கரைக்குளம் என்றும் சிங்களத்தில் யோதவேவ எனவும் அழைக்கப்படும் குளத்தை அண்மித்த பகுதியில் பேராசிரியர் புஸ்பரட்ணம் தலமையில் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக தொல்லியல் பிரிவினர் 2016 – 2017 காலப்பகுதியில் மேற்கொண்ட தொல்லியல் மேலாய்வுகள், அகழ்வாய்வுகள் அப்பகுதியின் வரலாற்று முக்கியத்துவத்தினை வெளிப்படுத்த உதவியதெனலாம். குறிப்பாக வடஇலங்கையின் முதன்மை தொல்லியல் மையங்களிலொன்றாக கட்டுக்கரையை அடையாளப்படுத்தியதெனலாம். இதுவரை காலமும் வடஇலங்கையின் முக்கிய ஆதியிரும்புக்கால மையமாக விளங்கிய கந்தரோடையினை விட கட்டுக்கரைத் தொல்லியம் மையம் வடஇலங்கையின் பண்பாடு பற்றிய ஆய்வில் முக்கியம் பெற்றதெனலாம். வடஇலங்கையின் மாந்தை துறைமுகப்பரப்பை அண்டியதாகவும்,  அருவியாற்றுப் பாதையில் மன்னார் நகரிலிருந்து 26 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்;ள குருவில் என்ற கிராமத்தில் கட்டுக்கரைத் தொல்லியல் மையம் அமைந்துள்ளது. புராதன குடியிருப்புக்கள் மற்றும் நாகரிக உருவாக்கத்திற்கு வேண்டிய சாதகமான அம்சங்களை இயற்கையாகவே கொண்டமைந்த பிரதேசமாகவும் அமைந்துள்ளது. இங்கு இடம்பெற்ற மேலாய்வுகள் மூலமாக தொன்மையான கற்கருவிகள், பல்வேறு காலப்பகுதிக்குரிய மட்பாண்டத்தின் உடைந்த பாகங்கள், கட்டிட எச்சங்கள், சுடுமண் உருவங்கள், கூரை ஒடுகள், செங்கட்டிகள். ஆதிகால, இடைக்கால உள்நாட்டு, வெளிநாட்டு நாணயங்கள் போன்ற பலதரப்பட்ட தொல்லியல் எச்சங்கள் இனங்காணப்பட்டன. இப்பிரதேசமானது பெரியளவிலான குளத்தினை கொண்டிருப்பதனால் குளமீளமைப்பின் போதும், நீர் பெருக்கம் ஏற்படும் காலங்களில் மண்ணரிப்புக்குட்படுவதும், மேட்டுப்பாங்கான காட்டுப்பகுதியில் மண்அகழும் நடவடிக்கை இடம்பெறுவதன் காரணமாகவும் தொல்லியல் எச்சங்கள் அழிவடைந்திருக்கக் கூடும் என்பது சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.

இவ்அகழ்வாய்வின் போது வேறுபட்ட கலாசார மண்ணடுக்குகள் அடையாளப்படுத்தப்பட்டதுடன் அவற்றிலிருந்து பல வடிவங்களில் அமைந்த மட்பாண்ட எச்சங்கள், கறுப்பு, சிவப்பு நிற மட்பாண்டங்கள், வெளிநாட்டு மட்பாண்டங்கள், குறியீடுகள் பொறித்த மட்பாண்ட ஓடுகள், கழிவிரும்புகள், இரும்புதாதின் படிமங்கள், கற்களில் வடிவமைக்கப்பட்ட கைவளையல்கள், சுடுமண் தெய்வ சிலைகள், சிற்பங்கள், சமயச் சின்னங்கள், ஆண், பெண் உருவங்கள், கல்லாயுதங்கள், எருது, யானை, குதிரை, பாம்பு, மயில் முதலியவற்றின் சிலைகள், தாழிகளின் உடைந்த பாகங்கள், ஈமச்சின்னங்கள், படையல் பொருட்கள், பலவடிவங்களில், பல அளவுகளில் செய்யப்பட்ட அகல் விளக்குகள், சங்கு, சிற்பி, கடல் உயிரினச் சுவடுகள், சுடுமண் உருவங்கள், புராதன கூரை ஒடுகள், செங்கற்கள் மற்றும் செங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட கட்டிட பகுதி போன்ற  ஐந்நூற்றுக்கணக்ககான தொல்;லியல் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுடன் தொல்லியல் மேலாய்வு, அகழ்வாய்வுகளில் அச்சுக்குத்தப்பட்ட நாணயங்கள், புராதன கால நாணயங்கள் தொட்டு 13ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்திலும், இலங்கையிலும் வெளியிடப்பட்ட சிலவகை நாணயங்கள், பல அளவுகளில், பல வடிவங்களில் பயன்படுத்தப்பட்ட கல்மணிகள் என்பனவும் இனங்காணப்பட்டுள்ளன. இத்தகைய தொல்லியல் சான்றுகள் இப்பிரதேசம் புராதன காலம் தொட்டு சிறு குளங்களினை அடிப்படையாகக் கொண்டதொரு பண்பாட்டுப் பிரதேசமாக விளங்கியதனை எடுத்துக்காட்டுகின்றது. குறிப்பாக கட்டுக்கரைத் தொல்லியல் ஆய்வுகளில் கிடைக்கப்பெற்ற குவாட்ஸ், சேட் கற்கள், கற்கருவிகள், கற்கருவிகளை ஆக்கும் போது உடைந்த பாகங்கள் என்பன இங்கு குறுணிக்கற்கால பண்பாட்டின் தொடர்ச்சியாகவே ஆதியிரும்புக்கால பண்பாடு சிறப்பு பெற்றிருந்தனை எடுத்துக்காட்டுகின்றதெனலாம். இவ்வாய்விற்கு தலமை தாங்கிய பேராசிரியர் புஸ்பரட்ணம் கட்டுக்கரைப் பிரதேசத்தின் தொன்மை வரலாற்றுச் சிறப்பு பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார் ‘இலங்கைத் தமிழர் தமிழ் நாட்டிலிருந்து தமிழ்மொழி பேசும் மக்களாக வருவதற்கு முன்னரே அவர்களின் மூதாதையினர் இலங்கையில் வாழ்ந்துள்ளனர் என்பதை எடுத்துக் காட்டுவதாகவும் அதற்குப் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் உருவான நாகமரபே காரணம் எனவும், இப்பண்பாடு இலங்கையில் 60க்கு மேற்பட்ட இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டாலும் நாகமரபை அடையாளப்படுத்தும் தொல்லியல் ஆதாரங்கள் கட்டுக்கரை, நாகபடுவனிலேயே அதிகளவில் கிடைக்கப்பெற்றுள்ளன’ எனக் குறிப்பிட்டுள்ளார் (புஸ்பரட்ணம்.ப.2018).

கட்டுக்கரை தொல்லியல் ஆய்வில் இனங்காணப்பட்ட மட்பாண்டக் குறியீடுகளின் தொன்மை பற்றி தமிழகத்தின் முதன்மைத் தொல்லியல் அறிஞரான பேராசிரியர் இராஐன் ‘கட்டுக்கரைத் தொல்லியல் மையத்தின் மக்கள் குடியிருப்புக்களின் தோற்றம் தமிழகத்தின் மிகப்பெரிய குடியிருப்பு மையமான கொடுமணலின் சமகாலமாக அல்லது அதற்கு முற்பட்டதாக இருக்கலாம்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும். தென்னிந்திய, இலங்கைப் பெருங்கற்காலப் பண்பாட்டு அம்சங்களில் முக்கிய அம்சங்களான ஈமச்சின்னம், குளம், வயற்பரப்பு, குடியிருப்பு ஆகிய நான்கு அம்சங்களும் கட்டுக்கரை தொல்லியல் தளத்தில் இனங்கானப்பட்டுள்ளன. இதுவரையான இலங்கையின் பெருங்கற்காலப் பண்பாட்டு ஆய்வுகளில் இவ்நான்கு அம்சங்களும் ஒன்றுசேர அடையாளப்படுத்தப்பட்ட ஒரே மையம் என்ற வகையில் கட்டுக்கரைக்கு தனிச்சிறப்புண்டு. இங்கு அதிகளவில் கிடைக்கப்பெற்ற கல்மணிகள், கல்லினால் வடிவமைக்கப்பட்ட காப்புகள், சங்கு வளையல்கள், சங்குகள், மட்பாண்ட அச்சுக்கள், இரும்புருக்கு சூலைகள், பிறநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கற்கள், கண்ணாடிகள் போன்றனவெல்லாம் இப்பிரதேசத்தின் தொல்லியல் முக்கியத்துவத்திற்கு சிறந்த சான்றுகளாகும். இவைபற்றி கருத்து தெரிவித்த கலாநிதி.இரகுபதி மற்றும் தமிழகத் தொல்லியல் அறிஞர்களான இராஐன், செல்வக்குமார், இராசவேலு போன்றோர் கட்டுக்கரைத் தொல்லியல் மையத்தில் புராதன கால இரும்புருக்கு, மட்பாண்டங்கள், கண்ணாடிப் பொருட்கள், கல்மணிகள் என்பன உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இருந்தமைக்கு முக்கிய சான்றுகள் என்கின்றனர். இவ்வாறாக கட்டுக்கரைத் தொல்லியல் மேலாய்வு, அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட ஈமப்போழை, தாழியடக்கம் போன்ற ஈமச்சின்னங்கள், சமய நம்பிக்கையினை வெளிப்படுத்தும் பல்வேறான அம்சங்கள், சுடுமண் சிலைகள், மட்பாண்டங்கள், உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகம், நகரமயமாக்கம், சிறு கைத்தொழில் சாலைகள் என்பன தொடர்பான சான்றுகள் கட்டுக்கரைப் பிரதேசத்தில் குறுணிக்கற்கால பண்பாட்டினைத் தொடர்ந்து ஆதியிரும்புக் கால பண்பாடு பெற்ற சிறப்பான வளர்ச்சியினையும் நாகரிக உருவாக்கத்தினையும் சுட்டுவதாக உள்ளன.

ஈமப்பேழை (Sarcophagus) – கட்டுகரைத் தொல்லியல் அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்ற சுடுமண்ணிலான தாழி மற்றும் ஈமப்பேழையானது இப்பிரதேசம் பெருங்கற்காலப் பண்பாட்டுப் பின்னனியில் பெற்றிருந்த முக்கியத்துவத்தினைப் புலப்படுத்துகின்றதெனலாம். அதிலும் குறிப்பாக இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது பெருங்கற்கால ஈமப்பேழை என்ற சிறப்பினையும் இது பெறலாம். தென்னிந்தியா குறிப்பாக தமிழக பெருங்கற்கால மையங்களில் பல வடிவங்களில் சுடுமண்ணினால் அமைக்கப்பட்ட ஈமப்பேழைகள் பரவலாக இனங்காணப்பட்டிருந்தன. தமிழகத்தில் இவ்வகையான ஈமச்சின்னங்கள் பொதுவாக சுடுமண்ணினால் அமைக்கப்பட்ட ஈமப்பெட்டிகளாகவே காணப்பட்டன. நீண்ட தோற்றத்துடனும், வளைவான மூலைகளுடனும் கால்களும், மூடிகளும் கொண்டவையாக இவை காணப்படும். அத்துடன் ஈமப்பேழைகள் மிருகங்களின் உருவங்களிலும் அமைக்கப்பட்டிருந்தன. வேறும்சில ஈமப்பெட்டிகளின் கீழ்ப்பகுதி ஆறு, எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட கால்களோடு கூடியதாக அமைக்கப்பட்டதுடன் அதன் மேற்பகுதியான மூடிகளில் ஆட்டுத்தலை, எருது, யானை போன்ற விலக்கின உருவங்களாக அமைக்கப்படுவதுமுண்டு (சண்முகம்.ப.2009).

கட்டுக்கரையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வின் போது எருது வடிவிலான ஈமப்பேழையொன்று வெளிகொணரப்பட்டிருந்தது. இங்கு மண்ணினால் ஆக்கப்பட்டு பின்னர் சுடப்பட்ட கிட்டத்தட்ட மூன்றடி நீளமும், இரண்டடி அகலமும் கொண்ட எருது வடிவிலான ஈமப்பேழைக்குள் இறந்தவரது எலும்புகளை வைத்து வைரமான களிமண் கொண்டு மூடப்பட்டிருந்தது. இவ்வாறு மூடப்பட்ட மண் மங்கலான சிவப்பு நிறத்தை உடையதாக தனித்து அடையாளம் காணக்கூடியதாகவுள்ளது. பொதுவாக பெருங்கற்காலப் பண்பாட்டில் இறந்தவர்களுடைய உடலை கிராமத்தின் ஒதுக்கு புறமாக அல்லது குடியிருப்பு மையங்களுக்கு அப்பால் வைத்து பின்னர் ஒரு குறிப்பிட்ட நாளில் உடலின் முக்கிய பாகங்களை மட்டும் சுடுமண்ணிலான தாழிகள் மற்றும் ஈமப்பேழைகளுக்குள் இட்டு, அவற்றுடன் படையல் பொருட்களையும் வைத்து அடக்கம் செய்யும் மரபினை காணமுடிகின்றது. தமிழக, இலங்கைப் பெருங்கற்கால ஈமச்சின்ன மையங்களில் கண்டுபிடிக்கப்பட்ட தாழிகளினையும் ஈமச்சின்னங்களினையும் இவற்றுக்கு உதாரணமாக குறிப்பிடலாம்.  இவ்ஈமப்பேழையினைச் சுற்றி இறந்தவர் வாழ்ந்த காலத்தில் பயன்படுத்திய பலதரப்பட்ட பொருட்களையும் படையல் பொருட்களாக மட்பாண்டங்களில் வைக்கப்பட்டதற்கான சான்றுகளும் இனங்காணப்பட்டது. இவ்வாறு படையல் பொருட்கள் வைக்கப்பட்டதனை உறுதிப்படுத்தும் வகையில் இவற்றுடன் இணைந்த வகையில் இரும்புப் பொருட்கள்,  கார்ணலேயன், அகேட் வகையிலான கல்மணிகள், குறியீடுகள் பொறித்த மட்பாண்ட ஒடுகள், சுடுமண் உருவங்கள், சங்கு, சிற்பி கடல் உணவின் எச்சங்கள், தானிய வகைகள், மாமிச உணவுகளின் எச்சங்கள் என்பன கிடைத்துள்ளன (புஸ்பரட்ணம்.ப. 2019). அவை ஆதியிரும்புக்கால பண்பாட்டிற்கேயுரிய கறுப்பு, சிவப்பு நிற மட்பாண்டங்களாகவும், நரைநிற, கறுப்பு மற்றும் சிவப்பு நிற மட்பாண்டங்களாகவும் காணப்பட்டிருந்தது. இவ்வாறாக ஈமப்பேழையும், அதனுடன் இணைந்த ஏனைய சான்றாதாரங்களும் கட்டுக்கரைப் பிரதேசத்தில் ஆதியிரும்புக்காலப் பண்பாடு ஏற்படுத்திய வளமான செல்வாக்கினையே புலப்படுத்தி நிற்கின்றது.

இங்;கு வெளிகொணரப்பட்ட மட்பாண்டங்கள் பல்வேறு வடிவங்களானதாகவும், குவழைகள், வட்டில்கள் மற்றும் மண்தட்டுக்கள் என்பவற்றையும் உள்ளடக்கியிருந்தன. பொதுவாக கட்டுக்கரைத் தொல்லியல் மையத்திலிருந்து வெளிக்கொணரப்பட்ட தொல்லியல் சான்றுகளில் பலவகையிலான, பல அளவுகளிலான மற்றும் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டதான  சுடுமண் உருவங்கள், தாழிகள், மண்தட்டுக்கள், வட்டில்கள், மண்பானைகள், குவளைகள், உடைந்த மட்பாண்ட விளிம்புகள் போன்ற எச்சங்கள் எண்ணிக்கையில் அதிகமாகும். இவற்றில் சுடுமண்ணிலான யானை, குதிரை, எருது, பாம்பு, மயில் போன்ற விலங்கினங்களின் உடற்பாகங்கள், தலைப்பகுதிகள், யானைத்தந்தங்கள் மற்றும் யானை, நந்தி, குதிரை போன்ற தெய்வ வாகனங்களின் கழுத்தில் அணியப்பட்ட மணிகள்,  நாக வழிபாட்டினை புலப்படுத்தும் பல்வேறான சுடுமண் எச்சங்கள், ஆவுடையுடன் கூடிய சிவலிங்கம், பீடத்துடன் கூடிய தெய்வச் சிலைகள், கலசத்தின் வாய்ப்பகுதியிலிருந்து தெய்வ உருவத்தின் முகம் வெளிவருவது போன்ற வடிவங்கள், ஆண், பெண் சுடுமண் உருவங்கள், சிறிய மட்கலசங்கள் மற்றும் பல்வேறு அளவுகளிலான சுடுமண்ணிலான அகல்விளக்குகள், தீபங்கள் என்பன எண்ணிக்கையில் அதிகமானதாகும். இவ்சுடுமண் ஆதாரங்கள் முழுமையிலான வடிவிலும், உடைந்த பகுதிகளாகவும் வெளிகொணரப்பட்டுள்ளன. இவ்வகையான மட்பாண்ட வடிவங்கள் களிமண், மணல், வைக்கோல், உமி, சுதை என்பன சேர்த்து உருவாக்கப்பட்டு பின்னர் நெருப்பில் சுடப்பட்டவையாகவும் காணப்படுகின்றன. இவ்மண்பாண்டங்களின் உருவாக்கத்தில் பின்பற்றப்பட்ட வடிவமைப்பு, தொழினுட்பம், அலங்காரங்கள், வர்ணங்கள் என்பன கட்டுக்கரையில் வாழ்ந்த புராதன மக்களிடையே குயவசக்கர பயன்பாடு மற்றும் மட்பாண்டத் தொழினுட்பம் பெற்றிருந்த அதியுன்னத வளர்ச்சியினையே சுட்டுகின்றதெனலாம். இதன் பின்னனியிலும், இறந்தோர் வழிபாடு பெற்ற செல்வாக்கின் அடிப்படையிலும் இவ்எருது வடிவிலான ஈமப்பேழையினது அமைப்பினை நோக்கமுடியும்.

தாழியடக்கம் (Urn Burial) – பெருங்கற்கால சவஅடக்க மையங்களில் இனங்கானப்பட்ட ஈமச்சின்ன வடிவங்களில் தாழியடக்க முறையும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாகும். இவை பெரும்பாலும் புவியியல் ரீதியாக பெருங்கற்கள் கிடைக்கப்பெறாத பகுதிகளில் அதிலும் குறிப்பாக மணற்பாங்கான பிராந்தியங்களில் அமைக்கப்பட்ட ஈமச்சின்ன வடிவமாகும். தமிழகத்தில் ஆதிச்ச நல்லூரும், இலங்கையின் பொம்பரிப்பு மையமும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பெருங்கற்கால தாழிக்காடுகளாகும். அதாவது இங்கு எண்ணிக்கையில் அதிகமான பலஅளவுகளிலான, பல வடிவங்களிலான தாழிகள் கண்டெடுக்கப்பட்டிருந்தன (சிற்றம்பலம்.சி.க.2002). ஈமப்பேழைகளினைப் போன்று தாழிகளிலும் இறந்தவருடைய உடலின் முக்கிய பாகங்களின் எலும்புகளே வைக்கப்பட்டிருந்தன. இறந்த ஒருவருடைய உடலின் முக்கிய பாகங்களான தலை, கை, கால் எலும்புகளே பொதுவாக இவற்றுள் அடங்கும். பொம்பரிப்பு, ஆதிச்ச நல்லூர் ஆகிய இடங்களில் கிடைக்கப்பெற்ற தாழியடக்கங்களினை உதாரணமாகக் கொண்டு நோக்கினால், தாழிகளில் இறந்த உடலின் முக்கிய எலும்புகளோடு, பெரும்பாலும் வட்டில்களில் மண்டையோடுகள் வைக்கப்பட்டிருந்தன. படையல் பொருட்களினை தாழிகளுக்குள்ளேயே மட்பாண்டங்களில் இடும் வழக்கமே பொதுவாக இருந்தாலும் தாழிகளின் வெளியேயும் மட்பாண்டங்களில் படையல் பொருட்கள் வைக்கப்பட்டமைக்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. தாழிகளுக்குள்ளே படையல் பொருட்கள் வைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட மட்பாண்டங்களின் எண்ணிக்கையானது ஆகக்குறைந்தது இரு மட்பாண்டங்களும், ஆகக் கூடியதாக பதின் மூன்று மட்பாண்டங்களும் காணப்பட்டன. ஒரு குழியில் ஒருவருடைய எலும்பினை மட்டும் இட்டு அடக்கம் செய்யும் மரபு பொதுவழக்காக இருப்பினும், ஒரே குழியில் ஒன்றுக்கு மேற்பட்ட தாழிகளும், ஒரே தாழியில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் எலும்புகளும் சேர்த்து அடக்கம் செய்யப்பட்டமைக்கான சான்றுகளும் உள்ளன. இவ்எலும்புகளில் முதியோர், இளையோர் எலும்புகள் காணப்படுவதானது ஒரே குடும்பத்தினர் பல்வேறு காலப்பகுதியில் இறந்தாலும் அவற்றை ஒன்றாக சேர்த்து வைத்து அடக்கம் செய்ததாகவும் அல்லது ஒரே காலத்தில் முதியோர், இளையோர் இறந்ததன் காரணமாகவும் இருக்கலாம். தாழிகளில் வைக்கப்பட்ட பறவை, மிருகங்களின் எலும்புகள், வெண்கல மைக்குச்சிகள், வெண்கல காப்புகள், வெண்கல மணிகள், கல்லிலான பல்வேறு மணிகள் போன்ற படையல் பொருட்கள் தாழிகளின் அடிப்பாகத்திலேயே இடப்பட்டன. தாழிகளின் அடிப்பாகங்கள் கூர்மையான, தட்டையான மற்றும் வளைந்த பாகங்களில் காணப்பட்டன (சிற்றம்பலம்.சி.க.2002). இவ்தாழியடக்க முறைகள் பற்றியும் அதன் தொன்மை பற்றியும் சங்கஇலக்கியங்களில் அதற்கு சற்றுப் பிந்தியதான மணிமேகலையிலும் குறிப்புகள் காணப்படுகின்றன (புறநானூறு : 228, 256, 364, நற்றிணை 271, மணிமேகலை 6.111.11. 66 – 67). அவை முதுமக்கட் தாழி;, ஈமத்தாழி எனவும் அழைக்கப்பட்டன.

இந்தவகையில் கட்டுக்கரைத் தொல்லியல் மையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தாழியடக்கமும் இலங்கையின் ஆதியிரும்புக்காலப் பண்பாட்டாய்வில் முக்கியத்துவம் பெற்றதாகும். இத்தாழியானது ஒரு அடி உயரமும், அதன் வாய்ப்பகுதி ஆறு அங்குல விட்டமும் உடையது. இத்தாழியடக்கத்தினுள் இறந்தவரின் எலும்புகளுடன், மட்பாண்ட எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இவை தாழிக்குள்ளே மட்பாண்டங்களில் படையல் பொருட்கள் வைக்கப்பட்டதற்கான சான்றாகவும் இருக்கலாம். தாழியினைச் சுற்றி பல வடிவங்களிலான பல நிற மட்பாண்டங்கள் காணப்பட்டன. அவற்றுள் பெருங்கற்கால பண்பாட்டிற்குரியதான கறுப்பு சிவப்புநிற மட்பாண்டங்களும் உள்ளடங்கும். தாழியுடன் இனங்காணப்பட்ட பொருட்கள் பெரிதும் ஈமப்பேழையுடன் காணப்பட்ட பொருட்களுடன் ஒத்ததன்மை கொண்டு காணப்படுவதானது இவ்விரு ஈமச்சின்னங்களும் ஒரே காலத்துக்குரியதாக இருக்கலாம் என்பதைப் புலப்படுத்துகின்றது. எனினும் இவ்வீமச்சின்னத்துடன் இடைக்கற்காலத்திற்குரியதான சேட் வகைகல்லாயுதங்களும் கிடைக்கப்பெற்றிருந்தன. இவ்வம்சமானது  கட்டுக்கரை பிரதேசத்தில் நிலவிய இடைக்கற்காலப் பண்பாட்டின் தொடர்ச்சியாகவே பெருங்கற்காலப் பண்பாடு விளங்கியிருந்தது என்பதை உறுதிப்படுத்துவதாகவுள்ளது (புஸ்பரட்ணம்.ப, 2018).

கல்வட்டம் (Stone Circle) : தமிழக, இலங்கைப் பெருங்கற்கால மையங்களில் இனங்காணப்பட்ட ஈமச்சின்ன வடிவங்களில் கல்வட்டங்களும் ஒன்றாகும். பெருங்கற்கால மையங்களில் அதிலும் குறிப்பாக வைரமான கற்கள் கிடைக்கப்பெற்ற பிராந்தியங்களில் அமைக்கப்பட்ட ஈமச்சின்னங்களில் கல்வட்டங்கள் முக்கியம் பெற்றதாகும். இவை தமிழக பெருங்கற்கால மையங்களில் நிலத்தில் குழி அமைத்து அதனுள் இறந்தவரை நீளக்கிடத்தியோ அல்லது இறந்தவரின் உடலின் பிரதான பாகங்களையே இட்டு குழியினை மூடிய பின்னர் ஞாபகச் சின்னமாக மண்மேடுகளையும் (Barrows), கற்குவியல்களையும் (Cairn circles), கல்வட்டங்களையும் (Stone circles) அமைக்கும் மரபு பொது வழக்காக இருந்தது. குறிப்பாக நிலத்தில் அமைக்கப்பட்ட குழியடக்க முறைகளின் (Pit Burials) பாதுகாப்பிற்காக வட்ட வடிவில் அமைக்கப்பட்ட கல்லால் அமைக்கப்பட்ட ஈமச்சின்ன முறையே கல்வட்டங்களாகும். இவ்வகைச் சேர்ந்த ஈமச்சின்னமாகவே குத்துக்கற்கள் (Menhir) அமைகின்றதெனலாம். இவை ஈமக்குழியின் நடுவில் நிறுத்தப்பட்ட உயரிய பெரிய கல்லாகும். அதைச் சுற்றி கல்லான வட்டமும் காணப்படும். இவ்வகையான கல்வட்ட ஈமச்சின்ன அமைப்பு அமைப்பதற்கு முன்னர் நிலத்தில் குழியமைத்து இறந்தவரது உடலினையோ அல்லது உடலின் பாகங்களையும் நேரடியாக இடுகின்ற முறை பொதுவாக இருப்பினும் தாழிகளிலும், ஈமப்பேழைகளிலும் வைத்து பின்னர் குழியினை மூடி அதன்மேல் கல்வட்டம் அமைக்கும் மரபும் காணப்பட்டது. இவ்வாறான சவஅடக்கங்களோடு படையல் பொருட்களும் சேர்த்து அடக்கம் செய்யப்பட்டன.  இந்தியாவில் அமைக்கப்பட்ட கல்வட்டங்களின் விட்டம் பொதுவாக ஐந்து அல்லது ஆறடி தொடக்கம் ஐம்பதடி வரை காணப்படுகின்றன (சிற்றம்பலம்.சி.க.1991). இவ்கல்வட்ட ஈமச்சின்ன முறையானது சங்கஇலக்கியங்களில் பதுக்கையுடன் கூடிய கல்வட்டமாகவும் (Cairn circle entombing cist), பதுக்கையுடன் கூடிய நடுநிலை நடுகலாகவும் (Cist with menhir), தொறு பூசலில் இறந்தவர்களுக்கான நடுகல்லுடன் இணைந்த வகையில் அமைக்கப்பட்ட பதுக்கையுடன் கூடிய பரல் உயர் இட்ட கல்வட்டமாகவும் (Cairn circle with cist and having a menhir for a cattle retriever) பல இடங்களில் கூறப்பட்டுள்ளன (அகநானூறு பாடல் : 109, 7-8, 157:5, 215:10, 231:10, 231:6, 151:2,91:10, 289:2-3, 35:8-9, 67:9-15, 269:6-7, 53:10-11, 297:7-8, புறநானூறு – 3:21, 264:8-13, 261:15, 232:3, 221:13, 223:3, 306:4, 314:3, 329:2, நற்றிணை 352:8, குறுந்தொகை 372:5, 77:3-4, ஐங்குநுறூறு – 362:1, 352:1-2, மலைபடுகடாம் - 388:2).

இலங்கையில் இவ்வாறான கல்வட்ட ஈமச்சின்ன அமைப்பு முறையானது முதன்முதலில் வடஇலங்கையில் உள்ள மாமடு என்ற இடத்தில் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. இவ்கல்வட்ட அமைப்பினுள் தாழிகள் புதைக்கப்பட்டமைக்கான சான்றுகளையும் மற்றும் கறுப்பு, சிவப்பு நிற மட்பாண்ட துண்டுகளினையும் அடையாளப்படுத்திய பேராசிரியர் செனெவிரத்னா இவை இதுவரை இலங்கையில் வேறெங்கும் கண்டறியப்படாத தனித்துவமுள்ள கவ்வட்டங்கள் எனச் சுட்டிக்காட்டினார் (Seneviratne.S. 1984). எனினும் முறையான ஆய்வுகள் எதுவும் இதுவரை இங்கு இடம்பெறவில்லை. அடுத்ததான கல்வட்ட அமைப்பானது அண்மையில் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்கள் மேற்கொண்ட ஆய்வின் போது வவுனியா மாவட்டத்தில் செட்டிக்குள பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கொங்குராயன்மலை என்ற இடத்தில் அடையாளப்படுத்தப்பட்டது. மேலும் இவ்வாய்வின் போது கல்வட்டம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் பத்திற்கு மேற்பட்ட பிராமிக் கல்வெட்டுக்களும், புராதன குடியிருப்புக்களுக்குரிய சான்றுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இவை கி.மு 2ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி 4ஆம் நூற்றாண்டிற்குரியதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன (புஸ்பரட்ணம்.ப.2017). இவ்கல்வட்ட ஈமச்சின்னம் பற்றி நோக்கும் போது அவை ஈமஅடக்கம் ஒன்றினைச் சுற்றி வட்டவடிவாக ஆறிற்கு மேற்பட்ட ஓரளவு பெரிய கற்களினால் அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலியாகவே தோன்றுகின்றது. எனினும் இங்கு முறையான தொல்லியல் ஆய்வொன்று இடம்பெறும் நிலையில்தான் இக்கல்வட்டத்தின் கீழிருக்கும் ஈமஅடக்கம் பற்றிய மேலதிக தகவல்களை உறுதிப்படுத்த முடியும். எனினும் இப்பிரதேசம் அடர்ந்த காட்டுப் பிரதேசமாகவும், யானைகளின் அதிகரித்த நடமாட்டம் காணப்படுவதாலும் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ள முடியாத சூழ்நிலையினை உருவாக்கியுள்ளதென்பது வருதத்திற்குரிய விடயமாகும். இவ்கல்வட்ட ஈமச்சின்ன அமைப்பு பற்றி விரிவான ஆய்வுகள் இதுவரை இடம்பெறவில்லையெனினும் இப்பிரதேசத்தில் கிடைக்கப்பெற்ற ஏனைய தொல்லியல் சான்றுகள் இங்கு தொன்மையான குடியிருப்பு மையமாக இருந்திருக்கும் என்பதை பறைசாற்றுகின்றதெனலாம்.

முடிவுரை

இலங்கையின் வரலாற்று உதயகாலமாக பெருங்கற்காலப்பண்பாடு விளங்குவதால், இப்பண்பாட்டுடனேயே இலங்கையின் நாகரிக உருவாக்கத்திற்கான பல அம்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்தவகையில் வடஇலங்கையின் தொன்மையான வரலாற்றினை வெளிப்படுத்தியிருப்பதில் இப்பெருங்கற்கால ஆய்வுகளுக்கு முக்கிய பங்குண்டு. இவ்பெருங்கற்கால ஆய்வுகளில் பலவகையான ஈமச்சின்னங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்த போதும் 2016ஆம் ஆண்டு தொடக்கம் 2017 வரையிலான காலப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஈமச்சின்ன வடிவங்களான ஈமப்பேழை, தாழி, கல்வட்டம் என்பன முக்கியம் பெற்றவையாகும். ஆகவே எதிர்வரும் காலங்களில் இவ்விடங்களில் விரிவான ஆய்வுகள் இடம்பெறுமானால் வடஇலங்கையின் தொன்மையான வரலாறு பொறுத்து இவ்விருமையங்களும் முக்கியப்படுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை.

 

உசாத்துணை நூல்கள்

  1. இந்திரபாலா.கா.,2001, இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு, சென்னை.
  2. சிற்றம்பலம்.சி.க, 1993, யாழ்ப்பாணத் தொன்மை வரலாறு, யாழ்ப்பாண பல்கலைக்கழக வெளியீடு,திருநெல்வேலி.
  3. சிற்றம்பலம்.சி.க.,2002, ஈழத்திற் காணப்படும் சங்க கால முது மக்கள் தாழிகள் – (சங்க இலக்கிய ஆய்வுகள் - கைலாசபதி நினைவுக் கருத்தரங்குக் கட்டுரை), தேசிய கலை இலக்கிய பேரவை.
  4. புஸ்பரட்ணம், ப., 1993, பூநகரித் தொல்பொருளாய்வு, யாழ்ப்பாண பல்கலைக்கழக வெளியீடு, திருநெல்வேலி.
  5. புஸ்பரட்ணம்,ப., 2014, கிளிநொச்சி மாவட்டத்தின் பூர்விக மக்களும், பண்பாடும் தொல்லியல் வரலாற்று நோக்கு, (கிளிநொச்சி மாவட்ட தொன்மையின் மூலங்கள்), மாவட்ட செயலகமும், பண்பாட்டுப் பேரவையும், கிளிநொச்சி.
  6. புஸ்பரட்ணம். ப, 2017, இலங்கைத் தமிழர் ஒர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு, தமிழ்க் கல்விச் சேவை, சுவிஸ்லாந்து.
  7. சிற்றம்பலம்.சி.க, 1991, பண்டைய தமிழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி.
  8. சண்முகம்.ப, 2009, தமிழக மண் உருவங்கள், சென்னை.
  9. Codrington, K.De.B, 1930, Indian Cairn and urn burials, Man, Vol.XXX No.139.
  10. Krishnaswamy.V.D.1949, Megalithic types of South India, in Ancient India No.5.
  11. Sundara.A, 1979, Megalithic Distributional pattern in India, in Chakrabarti D.K and Agrawal D.P (ed), Essays in Indian Proto – History (New Delhi).
  12.  Seneviratne.S. 1984,The Archaeology of the Megalithic – Black and Red Ware Complx in Sri Lanka.
  13. Ragupathi.P. 1987, Early Settlements in Jaffna: An Archaeological Survey. Madras.