ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

நான்மணிக்கடிகையில் சொற்கூறுகள்

கட்டுரையாளர்: மா.ஆதிமூலம் முனைவர்பட்டஆய்வாளர்(முழுநேரம்) தமிழ்மொழி (ம) மொழியியற் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை – 113 நெறியாளர்:முனைவர் .நா.சுலோசனா இணைப்பேராசிரியர் தமிழ்மொழி (ம) மொழியியற் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை – 113 23 Jan 2020 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்

                                       

ஒலிக்கூறுகள், சொற்கூறுகள், தொடர்க்கூறுகள் என மூன்று நிலைகளில் நடையியல் கூறுகள் அமைகிறது. சொல்லின் பல்வேறு கூறுகளின் துணையுடன் கவிதையை படைக்கும் கவிஞன் தன் கருத்தினை படிப்பவனுக்கு உணர்த்த சொல் நிலையில் வரும் ஒருபொருட் பன்மொழி, அடைகள், திருப்புரை உள்ளிட்ட சொற்கூறுகள் பாலமாக உள்ளன. அவ்வாறாக ஒரு படைப்பாளிக்கும் படிப்பவனுக்கும் பாலமாக உள்ள சொற்கூறுகளானது நான்மணிக்கடிகையின் பாடல்களில் எவ்வாறு அமைந்துள்ளது என்பது, ‘நான்மணிக்கடிகையில் சொற்கூறுகள்’ எனும் இந்த கட்டுரையின் ஆய்வுச் சுருக்கமாக அமைகிறது.

 

திறவுச்சொற்கள்:

 

    அயன்மொழிச் சொற்கள், கூட்டுச் சொற்கள், ஒருபொருட் பன்மொழிகள், திருப்புரைச் சொற்கள், அடைச்சொற்கள்

 

முன்னுரை

 

மொழியானது இரண்டு கூறுகளின் அடிப்படையில் செயல்படக் கூடியது. ஒன்று சொன்மை அடிப்படை; மற்றொன்று பொருண்மை அடிப்படை. இந்த சொன்மையானது ஒலிக்கூறுகள், சொற்கூறுகள், தொடரமைப்புகள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு வெளிப்படும். இந்த சொற்களும், தொடர்களும் பொருளை உணர்த்த அதனடிப்படையில் பொருண்மை வெளிப்படும். சொற்கூறுகள் நன்கு அமையும் போது இலக்கியம் சிறக்க உதவுகிறது. படைப்பாளன் சொற்கூறுகளை எவ்வளவுக்கு எவ்வளவு நேர்த்தியாக கையாள்கிறானோ அந்த அளவிற்கு படைப்பாகிய இலக்கியம் சிறப்பாக அமைவதுடன் அது படிப்போரை ஈர்க்கவும் பெருந்துணை புரிகிறது. ஒரு சொல் சொல்லாகிய தன்மையும் குறிக்கும், தான் குறிப்பிடும் பொருளையும் குறிக்கும். சொற்கள் அனைத்தும் பொருள் குறிக்கும் தன்மை வாய்ந்தன என்பதை,

எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே           (தொல்.சொல்.152)

என்னும் நூற்பாவினால் தொல்காப்பியர் சுட்டிச் செல்வதை அறியலாம்.

சொற்களானது இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை, “தனிநிலை, சேர்க்கை நிலை (semantic structure of individual words and semantic relations between words) எனப்படும்”1 என ஸ்டீபன் உல்மன் இரு பெரும் பிரிவுகளுக்கு உட்படுத்துவார். தனிநிலையில் சொற்களின் பொருண்மை அமைப்பு மட்டும் இங்கு கொள்ளத்தக்கது; மற்றது பொருண்மையின் அடிப்படையில் சொற்களுக்கு இடையே இருக்கும் உறவைச் சார்ந்தது என்று கூறும் ஸ்டீபன், “தனிநிலையில் ஒலிக்குறிப்புச் சொற்கள், உருவகங்கள், அயன்மொழிச் சொற்கள், புதுச் சொற்கள், ஒரு காலத்தைச் சார்ந்த பண்பாட்டுச் சொற்கள் (keywords of a particular period), கூட்டுச் சொற்கள்  (compound words), ஒருபொருட் பன்மொழிகள் (homonymy), பல பொருள் ஒரு மொழிகள் (polysemy)”2 ஆகியவற்றை அடக்கிக் காட்டுகிறார்.

மேற்கூறியவற்றைத் தொகுத்துப் பார்க்கையில் பல்வேறு பகுப்புகளாக வரும் சொற்கூறுகள் கவிதையில் இனியஒலி, பொருளாழம், உணர்வுக்கூறுகள் கொண்டனவாக அமைதல் வேண்டும் என்பது நன்கு புலனாகிறது.

நோக்கம்

மொழியியல் அறிஞர்கள் வகைப்படுத்தி உள்ள சொற்கூறுகளான அயன்மொழிச் சொற்கள், கூட்டுச் சொற்கள், ஒருபொருட் பன்மொழிகள், திருப்புரைச் சொற்கள், அடைச் சொற்கள் என்னும் ஐந்து பகுப்புகளின் அடிப்படையில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான நான்மணிக்கடிகையின் சொற்கூறுகள் குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக உள்ளது.

அயன்மொழிச் சொற்கள்

பல நூற்றாண்டு கடந்து வாழும் மொழிகளில் கொள்வினை, கொடுப்புவினை என்பது தவிர்க்கவியலாத ஒன்று. அந்த வகையில் தமிழிலும் பிறமொழிச் சொற்கலப்பு நிகழ்ந்துள்ளது மறுப்பதற்கில்லை. இது குறித்து, “திராவிட மொழிகளில் முதன்மை பெறும் தமிழ் மொழியானது 2,500 ஆண்டுகளாக மக்களின் பேச்சு மொழியாக வழங்கியும் அதன் அடிப்படைகள் பெரும்பாலும் மாறாமல் தொடரும் ஒரே உலகச் செம்மொழியாக விளங்குகின்றது”3 என பிரிட்டானிகா என்சைக்ளோ பீடியா கூறுகிறது.

நான்மணிக்கடிகையில் கலப்புற்றுள்ள அயன்மொழிச் சொற்கள் குறித்து பா.அருளியின், ‘இவை தமிழல்ல என்னும் அயற்சொல் அகராதி’4 வழி ஆராய்ந்ததில் சமஸ்கிருதச் சொற்கள் கலப்புற்றுள்ளதைக் கண்டறிய முடிகிறது.

 1.வனத்து – காடு   

குறைபட வாழார் உரவோர் – நிறைவனத்து            (நான்மணி.4:2)

2.அரிதாரம் – ஒளியுள்ள பூச்சுப் பொன்துகள்

ஒள்ளரி தாரம் பிறக்கும் பெருங்கடலுள்                 (நான்மணி.6:2)

3.உவாத்தி – ஆசிரியன்

தந்தை யெனப்படுவான் தன்னுவனுவாத்தி தாயென்பாள்        (நான்மணி.45:3)

4.சேனை – படை

     தன்னடைந்த சேனை சுடும்                         (நான்மணி.52:4)

5.வேதம் – மறை

வேதம் உறுவன பாட்டுள வேளாண்மை                (நான்மணி.54:3)

6.சேனாபதி – படைத்தலைவன்

செறிவுடையான் சேனா பதி                     (நான்மணி.55:4)

7.அசனம் ­– உணவு

கொடுப்பின் அசனங் கொடுக்க – விடுப்பின்            (நான்மணி.82:1)

8.பாவம் – தீவினைச்செயல்

    கயம்பெருகிற் பாவம் பெரிது                   (நான்மணி.93:4)

9.ஆசாரம் – நல்லொழுக்கம்

     ஆசாரம் என்பது கல்வி அறஞ்சேர்ந்து             (நான்மணி.96:1)

இந்நூலில் உவாத்தி, வேதம், அசனம் போன்ற ஒன்பது வடசொற்கள் கலப்புற்றுள்ளன. இதில் ஆசிரியரைக் குறிக்கும் உவாத்தி என்ற சொல் உவாத்தியான் என ஆசாரக்கோவையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கூட்டுச் சொற்கள்                                            கவிதையில் கூட்டுச் சொற்கள் எளிமையுடையனவன்றி பெரும்பாலும் தவிர்க்கப்படுதல் வேண்டும் என்பது வடமொழியாளர்களின் கருத்தாக உள்ளது. ஆனால் கா.அப்பாத்துரையார், “குறியீடுகள் பல தனிச்சொற்களாக அமைவதை விட அவற்றின் அடிப்படையில் அமைந்த திரிபுச் சொற்குடும்பங்களாய் அமைவது மொழிக்கு வளமும் சிக்கனமும் ஒருங்கே பயக்கும்”5 என்று கூறியுள்ளார். நான்மணிக்கடிகையில், ‘களி’ என்னும் உருபன் மற்ற சொற்களுடன் சேர்ந்து கீழ்க்காணும் வகைகளில் கூட்டுச்சொற்களாக உருப் பெற்றுள்ளதைக் காணலாம். சான்றாக,

     மறக்களி மன்னர்முன் தோன்றுஞ் சிறந்த                            அறக்களி இல்லாதார்க் கீயுமுன் தோன்றும்                        வியக்களி நல்கூர்ந்தார் மேற்றாங் கயக்களி                        ஊரில் பிளிற்றி விடும்                            (நான்மணி.35)

இந்த பாடல் வீரம், ஈகை, வியப்பு, கீழ்மை குணம் போன்றவற்றால் ஏற்படும் இன்பத்தை விளக்கும் வகையில் எழுதப்  பெற்றுள்ளது. இதில், ‘மறக்களி, அறக்களி’ ஆகிய சொற்கள் அடி எதுகையாகவும், ‘வியக்களி கயக்களி’ ஆகிய சொற்கள் ஒரூஉ எதுகையாக அமைந்துள்ளதைக் காணலாம். இது போன்ற கூட்டுச்சொற்கள் மொழிக்கு வளம் சேர்ப்பதுடன் பாடலில் சொற்சிக்கனத்திற்கு பெருந்துணை புரிவதுடன் பொருள் புலப்பாட்டிற்கு உதவுவதையும் அறியலாம்.

     ஒன்றூக்கல் பெண்டிர் தொழில்நலம் - என்றும்                       நன்றூக்கல் அந்தணர் உள்ளம் பிறனாளும்                          நாடூக்கல் மன்னர் தொழில்நலம் கேடூக்கல்                         கேளிர் ஒரீஇ விடல்                                 (நான்மணி.85)

இதில், ‘ஊக்கல்’ என்பது, ‘முயறல், ஒருமைப்படுதல்’ என்று பொருள்படுகிறது. கணவரோடு ஒருமைப்பட்டு நிற்க முயலுதலே பெண்டிர்க்கு நற்செய்கையாகும் என்பதை விளக்கும் வகையில், ‘ஒன்றூக்கல்’ என்ற கூட்டுச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. இதேபோல் அற நினைவுகளை எழுப்பிக் கொண்டிருக்க முயலுதலே அந்தணர் உள்ளத்துக்குச் சிறப்பு என்பதை, ‘நன்றூக்கல்’ என்றும், பிறனாளும் நாட்டை பெற முயலுதல் மன்னர்க்குரிய செய்கை என்பதை, ‘நாடூக்கல்’ என்றும், சுற்றத்தாரை நீக்கி வாழ்தல் கேட்டுக்கு முயலுதலாகும் என்பதை, ‘கேடூக்கல்’ என்ற கூட்டுச்சொற்கள் பயன்படுத்தி, சொற்சிக்கனத்துடன் சுருங்கக் கூறி விளக்கப்பட்டுள்ள தன்மையை அறிய முடிகிறது. இந்த கூட்டுச்சொற்கள் சொற்சிக்கனத்திற்காக மட்டுமல்லாது பொருளாழம் தருவதற்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

ஒருபொருட் பன்மொழிகள்

     ஒரு பொருளைத் தரும் பல சொற்கள் தொடர்வது ஒருபொருட் பன்மொழியாகும். இதனை மீமிசை என்றும் குறிப்பிடுவர். இதை ஒரு பொருள் இரு சொல் என்று தொல்காப்பியமும், ஒரு பொருள் பல பெயர் என்று நன்னூலும் குறிப்பிடுகின்றன.

     யானை    (நான்மணி.56)

    களிறு     (நான்மணி.12)

வாரணம்        (நான்மணி.25)

பாய்மா   (நான்மணி.18)                    

பரிமா     (நான்மணி.56)                        

மா       (நான்மணி.73)

இடம்பெற்றுள்ள ஒருபொருட் பன்மொழிகளை நோக்கும் போது ஒரு பொருளுக்கு பல சொற்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டிருப்பதும், அவை ஒரே சொல் பயன்படுத்தும் போது ஏற்படும் சலிப்பு நீக்க உத்தியாக புலவர் விளம்பிநாகனார் கையாண்டுள்ளதைக் காணலாம்.

திருப்புரைச் சொற்கள்

     ஒரு பாடலில் திரும்ப திரும்ப உரைக்கும் சொற்கள் திருப்புரைச் சொற்களாகும். இத்திருப்புரைச் சொற்கள் கவிதையிலும் உரைநடையிலும் சிறந்த விளைவுகளைத் தருகின்றன. இந்த திருப்புரை சொற்களானது ஒரே அடியில் வருவன, அடித்தடுத்த அடியில் வருவன, அடுக்குச் சொற்கள், ஒரு பாடலில் பரவி வருவன என நான்கு வகைகளில் நான்மணிக்கடிகையில் எவ்வாறு பயின்று வந்துள்ளன என்பதை இனி காணலாம்.

ஒரு அடியில் வரும் திருப்புரைச் சொற்கள்

    ஒரு அடியில் ஒரு சொல்லே மீண்டும் பயின்று வந்து திருப்புரைச் சொற்களாக அமைகின்றன.

தேவ ரனையர் புலவருந் தேவர்                        (நான்மணி.76:1) 

என்ற பாடலடியில், ‘தேவர்’ என்ற சொல் முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் பயன்படுத்தப்பட்டு திருப்புரைச் சொல்லாக அமைந்துள்ளது. இவ்வாறாக நான்மணிக்கடிகையில் 23 இடங்களில் ஒரு வரியில் வரும் திருப்புரைச் சொற்கள் பயின்று வந்துள்ளன.

அடுத்தடுத்த அடியில் வரும் திருப்புரை

அடுத்தடுத்த அடியில்  வரும் திருப்புரைச் சொற்கள் என்னும் உத்தியை ஆங்கிலத்தில் Anaphora என்பர். இதற்கு, “ANAPHORA (GK ‘carrying up or back’) A rhetorical device involving the repetition of word or group of words in successive clauses. It is often used in ballad and song, in oratory and serman (qq.v) but it s common in many literary forms”6 என ஆங்கில இலக்கியச் சொல்லகராதி விளக்கம் தருகிறது.

பதிநன்று பல்லார் உறையின் ஒருவன்                              மதிநன்று மாசறக் கற்பின் – நுதிமருப்பின்              (நான்மணி.72:1-2)

என்ற பாடலில் இரண்டு அடியின் முதற்சீரில் நன்று என்ற சொல் பயின்று வந்து அடுத்தடுத்த அடியில் வரும் திருப்புரைச் சொல்லாக உள்ளது. நான்மணிக்கடிகையின் 19 பாடல்களில் அடுத்தடுத்த அடியில் வரும் திருப்புரைச் சொற்கள் பயின்று வந்துள்ளன.   

அடுக்குச் சொற்கள்   

     ஒரு அடியில் தொடர்ந்து ஒரே சொல்லே மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுவது அடுக்குச் சொற்களாகும்.

     அடுக்குத்தொடர் என்பதற்கு, “Reptition of a word for emphasis or emotion என்றும்,  இந்த அடுக்குச் சொற்களானது பல பல, பாம்பு பாம்பு என்பன போன்று ஒரு அடியில் தொடர்ந்து அடுக்கி வரும் போது பாடலில் நல்ல அழுத்த உணர்வை வெளிக் கொணர முடிகிறது”7 என்றும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி  விளக்கம் தருகிறது.

பிறப்பர் பிறப்பர் அறனின் புறுவர்                   (நான்மணி.59:3)

என்ற பாடலில், ‘பிறப்பார்’ என்ற சொல் அடுக்குச்சொல்லாக அமைந்துள்ளது. அதே போல்,

யார்யார்க்கும் காதலா ரென்பார் தகவுடையார்              (நான்மணி.45:2) 

இனிய னெனப்படுவான் யார்யார்க்கே யானும்         (நான்மணி.61:4)

மனைக்கு விளக்கம் மடவார் மடவார்               (நான்மணி.105:1)

என, நான்மணிக்கடிகையின் 4 பாடல்களில் அடுக்குச்சொற்கள் பயின்று வந்துள்ளன. இதில் இரண்டு பாடல்களில், ‘யார்’ என்ற சொல்லும், மற்ற இரண்டு பாடல்களில், ‘பிறப்பர்’ மற்றும் பெண்மையைக் குறிக்கும், ‘மடவார்’ என இரு சொற்கள் அடுக்கி வந்துள்ளன.

ஒரு பாடலில் பரவி வரும் திருப்புரைச் சொற்கள்

     ஒரு பாடலில் ஒரு சொல் பலமுறை பயன்படுத்தப்படுவது உண்டு. இவ்வாறு ஒரே சொல், ஒரு பாடலில் பலமுறை பயன்படுத்தப்படுவதை பாடல் முழுவதும் பரவி வரும் திருப்புரைச் சொல் எனலாம்.

     கள்வமென் பார்க்குந் துயிலில்லை காதலிமாட்டு

     உள்ளம்வைப் பார்க்குந் துயிலில்லை ஒண்பொருள்

     செய்வமென் பார்க்குந் துயிலில்லை அப்பொருள்

     காப்பார்க்கும் இல்லை துயில்                   (நான்மணி.9)

இப்பாடலில் திருடர்க்கும், பெண்ணின் மீது விருப்புற்றவருக்கும், பொருள் தேடுவோருக்கும், அப்பொருளைப் பாதுகாப்பார்க்கும் தூக்கம் என்பது இராது என்று வலியுறுத்திக் கூறுவதற்காக பாடலின் மூன்றடிகளிலும், ‘பார்க்குந் துயிலில்லை’ என்ற சொற்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டு பாடலில் பரவி வரும் திருப்புரைச் சொற்களாக அமைந்துள்ளன. இதே போல் நான்மணிக்கடிகையில், ‘ஒக்கும், நலம், பிறக்கும், வேண்டும்’ என்பன உள்ளிட்ட பல்வேறு சொற்கள், பாடல் முழுவதும் பரவி வரும் திருப்புரைச் சொல்லாக உள்ளன. இந்நூலில் மொத்தம் 71 பாடல்களில் பரவி வரும் திருப்புரைச் சொற்கள் அமைந்துள்ளன.

மேற்கண்டவாறாக திருப்புரைச் சொற்களைப் பார்க்கும் போது அவை அழுத்த உணர்வினையும், ஓசை இனிமையையும் தரும் வகையில் அமைந்துள்ளதை அறிய முடிகிறது.

அடைகள் (Epithets)

     அடை என்பதற்கு, “ஒரு பொருளின் அல்லது ஒரு மனிதனின் தன்மையை விளக்கும் வகையில் பெயரடையாகவோ தொடரடையாகவோ வருவதனை அடை”8 என ஆங்கில இலக்கியச் சொல்லகராதி விளக்குகிறது. அடைகளானது ஒருசீருள் இடம்பெறுவன, ஓரடிக்குள் இடம் பெறுவன, ஓரடி முழுவதும் இடம் பெறுவன, ஓரடிக்கும் அதிகமான சீர்களில் இடம்பெறுவன என நான்கு வகைகளாக அடக்கலாம்.

ஒரு சீருள் இடம்பெறும் அடைகள் 

     ஓரசைச் சொற்கள் வரும் போது ஒரு சீரினை ஆக்குவதற்கு மற்றோர் ஓரசைச் சொல் தேவைப்படுகிறது. இத்தேவையினை அழகூட்டும் ஓர் அடையினைக் கையாளுவதன் மூலம் நிறைவு செய்ய முடியும். இவ்வாறு ஒரு பெயரை ஒரு அடையுடன் சேர்த்துச் சீராக்கி விடுவதால் கவிதை ஓட்டத்தில் அது எவ்விதத் தடையையும் ஏற்படுத்துவதில்லை.

    கடும்பரிமாக் காதலித் தூர்வர் – கொடுங்குழை                   நல்லாரை நல்வர் நாணுவப்பர் அல்லாரை              (நான்மணி.56:2-3)

என்ற பாடலடியில் குதிரையைக் குறிக்குமிடத்து, ‘கடும்’ என்னும் சீரடை பயின்று வந்து வேகமாக ஓடும் குதிரையையும், காதணியை குறிக்குமிடத்து, ‘கொடு’ என்னும் சீர் நிரப்பு அடை பயின்று வந்து வளைந்த காதணியை உடைய பெண் என்று பொருள் சிறக்க செய்கிறது.

ஓரடிக்குள் இடம் பெறும் அடைகள்

     சீர் நிரப்பு அடைகளாக வரும் சொற்கள் ஒரு சீரிலோ இரு சீரிலோ அடைகளைப் பெற்று வருகின்றன.

     வீறுசால் மன்னர்                            (நான்மணி.54:1)

இந்த பாடலடியில் வந்துள்ள, ‘வீறுசால்’ எனும் அடையானது, ‘சிறப்பு அமைந்த’ மன்னர் என்னும் பொருளில் பயின்று வந்துள்ளது. இவ்வாறு வருகின்ற சொற்கள் ஓரடையாகவும் ஈரடையாகவும் வருவதுடன் அடைக்கு அடையாகவும் அமைகின்றன.

ஓரடி முழுவதும் இடம் பெறும் அடைகள்

     அடையானது ஓரடி முழுவதும் பயின்று வந்து ஒரே பொருளுக்கு அடையாவது உண்டு. இவ்வாறு ஓரடி முழுவதும் இடம்பெறும் அடைகளானது தொடை நிலையில் தேர்ந்தெடுக்கப்படுவனவாக உள்ளன.

ஓரடிக்கும் அதிகமான சீர்களில் இடம்பெறும் அடைகள்

ஒரு பொருளுக்கு பல குணங்களை அடுக்கிப் பேசும் போது பல அடைகள் பயின்று வருவதுண்டு. மேலும் அந்த அடைகளுக்கு பல்வேறு அடைகள் சேர்ந்து ஓரடிக்கும் அதிகமாக சீர்களில் அடைகள் தொடர்ந்து இடம் பெறுகின்றன.

மையால் தளிர்க்கும் மலர்க்கண்கள் மாலிருள்

நெய்யால் தளிர்க்கும் நிமிர்சுடர் – பெய்யல்

முழங்கத் தளிர்க்குங் குறுகிலை நட்டர்

வழங்கத் தளிர்க்குமாம் மேல்                   (நான்மணி.38)

இப்பாடலின் குவளை மலரைப் போன்ற கண்கள், மிக்க இருட்டில் நிமிர்ந்தெரியும் நெருப்பு, மேகம் முழங்க குருக்கத்தி தளிர்க்கும் மர இலைகள் என ஒவ்வொரு வரியிலும் ஒரு அடைகள் பயின்று வந்துள்ளன.

இந்த அடைகளானது பாடலின் பொருள் செறிவினைக் கூட்டுவதற்கு துணை புரிகின்றன. இதில் ஓரடி முழுவதும் இடம்பெறும் அடை, ஓரடிக்கும் அதிகமான சீர்களில் இடம்பெறும் அடைகளானது பாடலின் நீட்சிக்கும் காரணமாக உள்ளன.

முடிவுரை     

நான்மணிக்கடிகையில் இடம்பெற்றுள்ள அயன்மொழிச்சொற்கள் எனப் பார்க்கையில் உவாத்தி, வேதம், அசனம் போன்ற ஆறு சொற்கள் கலப்புற்றுள்ளதை அறிய முடிகிறது. கலப்புற்றுள்ள அத்துணைச் சொற்களும் வடமொழிச் சமயத்தைச் சார்ந்த சொற்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டுச் சொற்களானது செய்யுளில் ஓர் இசைமையை உருவாக்கவும், சொற் சிக்கனத்திற்கும், கருத்துச் செறிவிற்கும் பெருந்துணை புரிவதையும் அறிய முடிகிறது. ஒரு பொருளைக் குறிக்கும் ஒருபொருட் பன்மொழிகள், பாடலைப் படிப்பவருக்கு ஏற்படும் சலிப்பு நீக்கும் உத்தியாக உள்ளன. திருப்புரைச்சொற்கள் பாடலின் பொருள் விளக்கத்திற்கும், பாடலின் நீட்சிக்கும் துணை புரிவனவாக உள்ளன.

அடைகளானது சீர் நிரப்பனவாக வருவதுடன் பொருளாழம் தருவதாக அமைந்துள்ளன. இதனைக் கொண்டு பார்க்கையில் சொல்நிலை, பொருள்நிலையில் பாடலின் கருத்து மற்றும் பொருள் செறிவினைக் கூட்டவும் அடைகள் பெருந்துணைப் புரிவதை அறிய முடிகிறது. மேற்கண்டவாறாக நான்மணிக்கடிகை பாடல்களின் சொற்கூறுகளானது பாடலுக்கு ஓசை நயத்தையும் பொருளாழத்தையும் தரும் வகையில் அமைந்துள்ளதைக் காண முடிகிறது.

அடிக்குறிப்புகள்              

  1. Stephen Ullman, Meaning and style, (Oxford 1973), pp.42-45
  2. Stephen Ullman, Meaning and style, (Oxford 1973), pp.42-45
  3. பிரித்தானிய கலைக்களஞ்சியம், Vol.21:647
  4. பா.அருளி, இவை தமிழல்ல என்னும் அயற்சொல் அகராதி, வேரியம் பதிப்பகம், புதுச்சேரி.
  5. கா.அப்பாத்துரை, தென்மொழி, (சென்னை 1956), ப.166
  6. J.A.Cuddon, A Dictionary of Litereary Terms (London 1977), p.39-40
  7. Tamil Lexicon, Madras university, Vol.1, p.53
  8. J.A.Cuddon, A Dictionary of Litereary Terms (London 1977), p.236