ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

பெளர்ணமியின் சிறப்பு

முனைவர் தி. கல்பனாதவி, MA, B.ed, Mhil, PhD, D.A, BA, MA, Tamil, ஜோதிடவியல் துறை, கௌரவ விரிவுரையாளர், சுழற்சி 1, தமிழ்த்துறை,  ஆ.கோ.அ.கலைக்கல்லூரி,  திண்டிவனம் 604 002 31 Oct 2019 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம்

பன்னிரு தமிழ் மாதங்கள், சில சிறப்பான பௌர்ணமி, அதன் விளைவுகள் அந்நாளில் ஏற்படும் கிரகணம், பரிவேடம், அதனால் நன்மையா? தீமையா? மழை நிலையினையும் அதன் தொடர்பான வானியல் நிமித்தங்களையும் குறிப்பிடுகின்றது. இதனால் மக்களுக்கு விளையும் நன்மை, தீமை, பொருட்கள் விலை ஏற்றம், இறக்கம் முதலானவற்றையும், தமிழ், வானியல் தொடர்ந்த தமிழில் எழுதப்பெற்ற இலக்கியங்கள், அகராதிகள் நமக்கு சான்று பகர்கின்றன. தமிழன் வானியலில் தேர்ச்சி பெற்றிருந்ததையும், அதன் வழியில் வாழ்க்கை நடத்தினான் என்பதையும் நாம் அறியலாம். தமிழனே தலை சிறந்த வானியல் விஞ்ஞானி! அதற்கான சான்றாதாரப்பதிவுகள் தமிழில் சங்க இலக்கியத்தில் இருப்பதை பரிபாடல் ஆவணி மாதப் பௌர்ணமி சந்திர கிரகணம் பகர்கின்றது. மக்கள் கோள் நிலை அறிந்து அதன் வழி பயன் பெற வேண்டும் எனும் உயரிய நோக்கினில் இக்கட்டுரை அமைக்கப் பெற்றுள்ளது.

திறவுச்சொற்கள்

ஆடிப்பூரணை , பரிவேடம், ஆவணிப்பௌர்ணமி ,சந்திர கிரகணம் ,கார்த்திகை

முன்னுரை

          பௌர்ணமி, இவற்றின் விளைவுகள், பன்னிரு மாத பௌர்ணமி, சித்திரைப்பௌர்ணமி, சித்திரை மாதம் சுக்கில பட்சப் பஞ்சமி, சப்தமி, நவமி, திரயோதசி, பௌரணை ஆகிய திதிகள், ஆடி பௌரணை அல்லது ஆடி அமாவாசை அன்று சாம்பிராணி புகை கொண்டு மழை நிலை கூறல், புகை செல்லும் திசையின் பலன்கள், ஆடிப்பூரணை, சந்திரப் பரிவேடம்: பௌரணை: ஆடி, ஐப்பசி, கார்த்திகை மாதப் பௌரணையில் அதிக மழை அடைமழை பெய்தல், பரிவேடம் சேர்ந்து அமைதல், ஆடி சோதி, நவமி, பௌரணை பலன், சங்க இலக்கியம் சான்று, ஆவணிப்பௌர்ணமி - கார்காலம் ஆவணி சந்திர கிரகணம் பெருமழை பெய்தல், கார்த்திகை மாதப் பௌர்ணமி வரும் நட்சத்திரங்கள், அசுவினி, பரணி, கார்த்திகை, கரும்பு, நெல் சமமாக விளைவு உண்டாதல், ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்களில் சனி, ஞாயிறு ஆகிய வாரங்களில் சூரியனை மேகம் மறைத்தல், தை மாதப்பௌரணை அதிக மழையைக் கண்டறிதல், பங்குனி மாதச் சுக்கில பட்ச சப்தமித்திதி, பௌரணை – மேகங்கூடல், காற்றடித்தல் அமாவசை, பௌர்ணமி, ஆனி, மார்கழி, கார்த்திகை, உவா, ஆடி மாதங்களின் தலை உவா பலன், பங்குனி, மாசி, தை மாதங்களின் தலை உவா பலன், அஃகம் ஆகியவற்றின் உட்தலைப்புகளின் கீழ் தமிழ், வானியல் இலக்கியம், சங்க இலக்கியம், தமிழ் அகராதி, கலைக்களஞ்சியம் முதலானவைத் தரும் வானியல் செய்திகளை கட்டுரை வடிவினில் காண்போம்.

  அமாவாசை கழிந்து பிரதமை, துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அட்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி ஆக இந்த திதிகள் முடிந்து பௌர்ணமி ஆனது அமையும். இந்த நாளில் சந்திரன் முழு வளர்ச்சியுடனும், ஒளியுடனும் காணப்பெறும். பன்னிரண்டு மாதங்களிலும் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையாகத் தோன்றும்.

இவற்றின் விளைவுகள்

இந்த பௌர்ணமி நாளில் கடல் அலைகளில் ஆர்ப்பரிப்பு, அதிக சக்தியுடன் காணப்படும். மாந்தீரீக வேலைகளில் ஈடுபடுவோர், சித்த மருத்துவத் துறையில் மணிமந்த்ர ஔடதம் செய்பவர்கள், ஆன்மீகவாதிகள், மக்கள் ஆக அனைவரும் இந்த நாளின் இறைவனின் இறை சக்தியைப் பெற விரும்புவர். ஏன் எனில் அந்நாளில் உரிய முறைப்படி பூசை செய்து மூலிகை எடுத்ததற்கான ஆதாரப்பதிவுகளை சித்தர் இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. பக்தி இலக்கியங்கள் ஆன்மீகவாதிகள், சமயம் தொடர்ந்த பல பதிவுகளைப் பற்றிய செய்தியினையும், மேலும் பலவற்றையும் நம் தமிழ் இலக்கியங்கள் பறை சாற்றுகின்றன.

      இந்த பௌர்ணமி நாளில் இடி, மின்னல், காற்று, புயல், மேகம், வானவில், கிரகணம், அமாவசை, பௌர்ணமி, கிரக வெற்றி தோல்வி, மழை முதலான பல வானியல் நிகழ்வுகள் ஏற்படின் என்னென்ன விளைவுகள் அமையும் என்பதை தமிழில் அழகாய் எடுத்துரைக்கின்றது. இந்நுால் கணிதக்கலையிலும் தமிழன் வல்லவன் என்பதை பறைசாற்றும் வகையில் தமிழில் எழுதப் பெற்றுள்ளது. பரமசிவன் பார்வதிக்கு அருளிய மழைக்குறி சாஸ்திரம் மூலமும் உரையும் எனும் இந்நுால் சிறப்பான சான்றாதாரப் பதிவுகளைத் தெரிவிக்கின்றது. இந்நுால் முழுவதுமான வானியல் பதிவுகளை உடைய ஓர் அழகிய பயன் கொள்ளத் தகுந்த சிறந்த நுால். அதை மெய்ப்பிக்கும் வகையில் நம் சங்க இலக்கியத்திலும் அவற்றிற்கானப் பதிவுகள் உள்ளன.

பன்னிரு மாத பௌர்ணமி

சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி ஆக வருகின்ற தமிழ் மாதங்களின் பெயர்களிலேயே அந்ந அந்த மாதப் பௌர்ணமியும் அழைக்கப் பெறுகின்றது. இந்த நாட்களில் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு, மலை சுற்றுதல் முதலான சிறப்பான செயல்கள் நடைபெறும்.

சித்திரைப்பௌர்ணமி

இம்மாதத்தில் தோன்றுவதால் இவ்விதம் அழைப்பர்.

       சித்திரை மாதத்தில் வரும் சுக்கில பட்சப் பஞ்சமி, சப்தமி, நவமி, திரயோதசி, பௌரணை ஆகிய திதிகளில் இடி, மின்னல், தூற்றல் முதலான வானியல் நிமித்தங்கள் இருப்பின் அதிக மழை என மழை நுால் பலன்கள் குறிப்பிடப் பெற்றுள்ளது. 

சித்திரை மாதம் சுக்கில பட்சப் பஞ்சமி, சப்தமி, நவமி, திரயோதசி, பௌரணை ஆகிய திதிகள்

      மழை நுால் சித்திரை மாதத்தில் வரும் சுக்கில பட்சப் பஞ்சமி, சப்தமி, நவமி, திரயோதசி, பௌரணை ஆகிய இத்திதிகள் வரும் நாட்களில் இடி, மின்னல், தூற்றல் முதலானவை தோன்றுமாகில் பின்வரும் காலத்தில் மழை அதிகமாகப் பெய்யும்.

            “  இலங்க மேட மதிபூர்வத் தேற்குமைந்தே ழொன்பதுடன்

             மலங்கப் பன்மூன் றதையொட்டி வளர்பூ ரணையா மிந்நாளில்

             துலங்கவே யிடியு மின்னற் றூற்றலுந் தூற்றுமாகிற்

             பலங்கொளு மாரிகாலம் பண்புறப் பெய்யுந் தானே. *1

என்றும் குறிப்பிடுகின்றது.

ஆடி பௌரணை அல்லது ஆடி அமாவாசை - சாம்பிராணி புகை கொண்டு மழை நிலை கூறல்

மழைக்குறி சாஸ்திரம் நுால் இங்கே சோதிடர்கள் கொண்டு புகை நிலை ஆடி அமாவாசை அல்லது ஆடி பௌரணை அன்று சாம்பிராணி ஏற்றி வைத்து அதன் புகை செல்லும் திசையினை வைத்துப் பலன் குறிப்பிடுகின்றது.

     த.மொ.அகராதி புகை - துாமம், இது தென் கீழ்த்திசைப்பாலன் குறி, நீராவி, பனிப்படலம், புகை என்னேவல், யோசனை துாரம் என்றும்,*2 இது தீக்கு அறிகுறியாய் அது கொண்ட பொருளிடம் உண்டாகும் பொருள் என்றும் அ.சி குறிப்பிடுகின்றது. *3

        மழை நுால் ஆடி மாதத்தில் வரும் அமாவாசையிலாகிலும், பௌரணையாகிலும் சோதிடனானவன் ஊருக்கு வெளியிற் பரிசுத்தமாகிய நிலத்தில் இருந்து கொண்டு நெருப்பில் விருப்பமாகச் சாம்பிராணியைப் போட்டுப் பார்க்கவும். அவ்விதம் போட்டுப் பார்க்குங் காலத்தில் அப்புகையானது கிழக்குத் திசையை நோக்கிச் செல்லுமாகில் அவ்வருடத்தில் உற்பத்தியாகும் பயிர்கள் எல்லாம் ஓங்கி வளர்ந்து (ஒட்டிக்கிரட்டி) ஒன்றுக்கு இரண்டாக விளையும் படிக்கு அதிக மழை பெய்யும்.

              “ அற்பங் கடக மதியம்மா வாசை யதிலும் பூரணையிற்

             பொற்பா நகர்க்குப் புறம்பேகிப் பொருந்த வனலிற் றூபமிடில்

             நற்பல மறியத் தூம நாடிடச் சுரேசன் றிக்கி

             லுற்பவப் பயிர்க ளெல்லா மோங்கியே விளையு மென்னே.

என்றும் குறிப்பிடுகின்றது.

புகை செல்லும் திசையின் பலன்கள்

       அவ்விதமாக இட்டப் புகையானது தென் கிழக்குத் திசையை நோக்கிச் செல்லுமாகில் பூமியில் அதிக நன்மை உண்டாகும். தெற்குத் திசையில் போகுமாகில் மழையில்லை. தென் மேற்குத் திசையில் போகுமாகில் சுகமும், மழையும் குறைவாகும். மேற்குப் பக்கத் திசையில் போகுமாகில் நஞ்சை புஞ்சைகளில் இட்ட பயிர்கள் நல்ல விளைவு உண்டாகும்.

            “என்னவக் கினியின் றிக்கி

                              லேகிடிற் புவியிற் சேமம்

            நன்னய வியமன் றிக்கில் நாடிடி

                              லுதக மில்லை

            சொன்னதோர் நிருதி திக்கிற் சுகமிலை

                            யாலி யற்பம்

            இன்னமும் வருணன்றிக்கி லியங்கிடில்

                              விளைவுண்டாமே.

என்றும் குறிப்பிடுகின்றது.

      வடமேற்குத் திசையிற் செல்லுமாகில் அவ்வருடத்தில் விட்டில், கிளி, கொசுக்களால் விளையும் பயிர்கள் சேதத்தை அடையும். வடக்குத் திசையில் செல்லும் எனில் புவியில் நன்மை பொருந்தி வாழ்வார். ஈசானியத் திசையில் செல்லுமாகில் வண்டுகள் மொய்க்கும் மலர்கள் நிறைந்த கூந்தலையுடைய பெண்ணே! நல்ல மழை பெய்து செந்நெல் மிக்கச் செழிப்பாக விளையும்.

            உண்டாம் வாயு திக்கதனி லோங்கும்

                            விட்டிற் கிளிகொசுவாற்

            பண்டாம் பயிர்கள் சேதமுறும்

                            பகரு மளகைப் பதிதிக்கிற்

            கண்டாங் கெய்திற் சுபிட்சமுறுங்

                            கருதி யீசா னியத் திசையில்

            வண்டார் குழலே சென்றாக்கால்

                            மழைபெய்தோங்குஞ் செந்நெல்லே. *4

என்றும் மழை நூல் சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

        இவ்விதம் அக்காலத்தில் சோதிடர்கள் பலன்கள் பார்த்துக் குறிப்பிட்டதை இந்நுால் ஆதாரம் தெரிவிக்கின்றது.

ஆடிப்பூரணை

சந்திரப் பரிவேடம்: பௌரணை: ஆடி, ஐப்பசி, கார்த்திகை மாதப் பௌரணையில் அதிக மழை அடைமழை பெய்தல் பரிவேடம் சேர்ந்து அமைதல்

மழைக்குறி மூலங்கள் மழை பெய்வதை அறியும் குறிக்கு ஆதாரங்கள், அது அதி வெப்பம், இடி, காற்று, குளிர், மழைக்கால், மின்னல், மேகம், பரிவேடம், வானவில் என்பனவாகும் என்றும்  அகராதி தெரிவிக்கின்றது.

அகராதிகள் தரும் விளக்கம்

        வெ.வி.அகராதி, பஞ்சார்க்கம் என்பது ஐந்தருக்கம், அவை இந்திர வில், கேது, தூமம், பரிவேடம், விதி பாதம் என்றும், த.மொ.அகராதி, மழைக்குறி மூலங்கள் குறித்து,  மழை பெய்வதை  அறியும் குறிக்கு ஆதாரங்கள், அது அதிவெப்பம், இடி, காற்று, குளிர், மழைக்கால், மின்னல், மேகம், பரிவேடம், வானவில் என்பனவாகும். பரசுகரியன் - பரிவேடம்.*3 பரிதி - சூரியன், பரிவேடம். பரிவேசம், பரிவேஷம் - சந்திர, சூரியரைச் சூழத் தோன்றும் வட்டம். பரிவேடணம் - சூழுதல். பரிவேடம் - பரிவேசம்.* கோட்டை - பரிவேடம். த.மொ.அகராதி  பரிவேசம், பரிவேடம் - சந்திர சூரியரைச் சூழத்தோன்றும் வட்டம். ஜோ.க. பொ.வி.அகராதி கரந்துறை கோள் - காணாக் கிரகம். தூமாதி கிரகங்கள் - உபக்கிரகங்கள் ஐந்து அவை தூமன், விதிபாதன், பரிவேடம், இந்திர தனுசு, தூம கேது. குளிகன் - கரந்துறை கோட்களில் ஒன்று. 1.தூமன் - உபக்கிரகங்கள் ஐந்தினில் ஒன்று. 2.தூம கேது - அக்கினி, கேது, கொடுமை, வால் நட்சத்திரம், விண் வீழ் வௌ்ளி. 3.பரிவேசம், பரிவேடம் - சந்திர சூரியரைச் சூழத் தோன்றும் வட்டம். ஊர், ஊர்கோள், ஊர் கோள்வட்டம் - பரிவேடம். சூரியப் பிரபை - பரிவேடம். வட்டம் - பரிவேடம். 

        மழை  நுால் ஆடி மாதம் பௌரணை அன்று இரவில் பத்து நாழிகைக்குள் சந்திரனைச் சுற்றி பரிவேடமிட்டாலும், ஐப்பசி மாதம் மேற்படி தினத்தன்றிரவில் இருபது நாழிகைக்குள் சந்திரனைச் சுற்றிப் பரிவேடமிட்டாலும், கார்த்திகை மாதம் முன் சொல்லிய தினத்தன்று இரவில் முப்பது நாழிகைக்குள் சந்திரனைச் சுற்றிப் பரிவேடமிட்டாலும், தை மாதத்தில் அதிகமாக மழை பெய்யும். அன்றியும் மேற் சொல்லிய மூன்று மாதங்களுக்குள்ளோர் மாதப் பௌரணையன்றிரவு முப்பது நாழிகையும் சந்திரனைச் சுற்றிப் பரிவேடமிடுமாகில் அம்மாதந் தொடங்கி அடை மழை பெய்யும்.

            “அதனி லாடிப் பூரணையன் றிரவி லலவன் றனைவேடம்

            இதமாய்ப்பத்து நாழிகைக்கு ளிடுகக்கோலுக்கிருபதுக்குள்

            பதமாங் கடிகை முப்பதுக்குட் பகரு மாதந் தேளாகில்

            நிதமுந் தனுவிற் சொரிபெய்யு நிசிமுற் றுறமுத் திங்களதே. *5  

  என்றும் மழை நூல் தெரிவிக்கின்றது.

ஆடி சோதி, நவமி, பௌரணை பலன்

ஆடிக்கரு, ஆடிக்காற்று - ஆடி. உத்திராடக் காற்று:- காற்றின் திசைகள்; - பெருங்காற்று

காற்றுண்டாதல்         

மழைநுால் மேற்குறிப்பிட்ட இந்நாளில் வட மேற்குத் திசையிலிருந்து காற்று உண்டாகுமாகில் அவ்வருடத்தில் மிருகங்களாலும் புழுக்களாலும் வெட்டுக்கிளிகளாலும் பயிர்களுக்குச் (சேதம்) அழிவு உண்டாகும். வடகிழக்குத் திசையில் இருந்து காற்று உண்டாகுமாகில் முன் மழை பெய்யும். இத்துடன் பவரணையுஞ் சேர்ந்து வருமாகில் மழை அதிகமாகப் பெய்யும்.

            இடுமே வாயுகாற்றடிக்கி லெழிலாம் விலங்கு புழு விட்டிற்

            கொடுமை யதிக முண்டாகுங் குலவு மீசா னியத்திசையிற்

            கடுமைக் காற்று வீசுமெனிற் கனத்த மழையு முன்பெய்யும்

            அடுமே பவ்வஞ் சேருமெனி லடுக்கு முதக மிகத்தானே. *6

என்று தெரிவிப்பதால் அறியலாம்.

ஆடி சோதி, நவமி, பௌரணை பலன்

      வி.மா எனும் நுால் ஆடி மாதத்துச் சோதியும், நவமியும், உத்திராடமும், பவுரணையும், சதுர்த்தியும், ஞாயிற்றுக்கிழமை கூடினும் அன்றித் தனித்துறினும் ஆகிய இந்நாளிலே மந்தாரம், மழை, பரிவேடம், இந்திரதனு, முழக்கம் ஆகிய இவை உண்டாகில் அவ்வாண்டு சுபிட்ச காலமாகும் என்பதனை,

            நந்தா விளக்க நவமி கடைக்குளத்துப் பூரணை

           யந்தாரபதினான்கின்னுடைவாரத் தெழிலாடியின்

           மந்தாரமாதன் மழையாதலுண்டேல் வளமிகுத்துச்

           செந்தாமரை மங்கை நோக்குடைத்தாநாடுதே மொழியே.” *7

எனும் செய்யுள் சான்று பகர்கின்றது.

உத்திராடத்தோடே உவா கூடல்  

      சூ.உ எனும் நுால் மேற்குறிப்பிட்ட காற்றெல்லாம் வலமாகி வீசில் உத்தமம். இடமாக வீசில் பொல்லாது. உத்திராடத்தோடே உவாவும் கூடில் உத்தமம். ஆடி மாதத்தில் இடை உவா நன்று. உதய காலத்தில் ஆதித்தனை மேகம் மறைக்குமாகில் மிகவும் வர்ஷிக்கும். (மழை பொழியும்) இல்லையானால் வர்ஷம் (மழை) இல்லை என்றும் குறிப்பிடுகின்றது.

            “எங்குள வளியும் ஈண்டி எறிவது வலமே நன்றாம்

           அங்கவை இடமே தீதாம் ஆடியுத் திராட மான

            திங்களில் உவாவும் கூடி எழில்மிகும் இடைஉ வாவில்

            செங்கதி ரவனை மேகம் மறைக்குமேல் சிறக்கும் மேகம். *8

என்றும் குறிப்பிடுகின்றது.  

         மழைக்குறி குறித்து 1.விதானமாலை எனும் நுால் ஆடி மாதத்துச் சோதியும், நவமியும், உத்திராடமும், பௌரணையும், சதுர்த்தசியும், ஞாயிற்றுக்கிழமை கூடினும், அன்றித் தனித்துறினும் ஆகிய இந்த நாட்களில் மந்தாரம், மழை, பரிவேடம், இந்திரதனு, முழக்கம் ஆகிய இவை உண்டாகில் அவ்வாண்டு சுபிட்ச காலம். (நல்ல காலம்.) சுக்கிரன், இராகு, கேது, புதன் ஆகிய இவர்களுடன் சந்திரன் கூடில் மழை உண்டாம். சந்திரனை ஒழிந்து புதனுக்கும், சுக்கிரனுக்கும் யுத்தம் உண்டாய்ப் புதன் வெற்றி பெறின் காற்று உண்டாகும். சுக்கிரன் வெற்றி பெறின் மழை உண்டாகும். மாசி முதல் ஆடி இறுதியாக மாதந்தோறும் மூடுபனி பெய்யில் கார்த்திகை, ஐப்பசி, புரட்டாசி, ஆவணி, ஆடி, ஆனி ஆகிய இம்மாதங்களில் மழை மிக உண்டாகும். ஆவணி முதலாக முன் சொல்லாத மாதங்களில் மூடுபனி உண்டாகில் அம்மாதங்களில் மழை உண்டாகும் என்பதனை,

              மழைக்கோளரவம் புதனிடைபான் மதிமன் னுகாலந்

            தழைக்கு மழைபெரி தாங்கவர் தம்மொடு போரகத்தி

            லழைக்கும் புதன்புகர் கான மழையா மாசியா தியனி

            யிழைக்கின் மழைதேன் முதலாறு திங்களெ திருமே. *9

எனும் செய்யுள் மெய்ப்பிக்கின்றது.

சங்க இலக்கியம் சான்று

ஆவணிப்பௌர்ணமி - கார்காலம் ஆவணி சந்திர கிரகணம் பெருமழை பெய்தல்

பரிபாடல் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆக உண்மைக்கோள்கள் ஏழும், நிழல்கோள்கள் இராகு, கேது ஆக இரண்டும் உட்பட ஒன்பதும் கோள்கள் என்று அழைக்கப் பெறுகின்றன. நாள்களும் கோள்களும் பெருமழை பெய்ததற்கேற்ற நிலையில் நின்று, மழை பொழிந்து வையை ஆற்றினில் வௌ்ளம் வந்ததைப் பரிபாடல் அடிகள் சான்று பகர்கின்றன.

   எரியும், சடையும் வேழ முதலாக அவற்றின் கீழிருந்து வீதியால் வேறுபடுத்தப்பட்ட ஓரொன்று ஒன்பது நாளாகிய மூவகை இராசிகளுள், அங்கியைத் தெய்வமாக உடைய கார்த்திகையும், முக்காலை உடைய இடபமும், சடையை உடைய ஈசனைத் தெய்வமாக உடைய திருவாதிரையும், திருவாதிரை அதனால் மிதுனமும், வேழத்திற்கு யோனியாகிய பரணி மேடமும் குறிக்கப் பெற்றன.

இடபவீதி    : கன்னி, துலாம், மீனம், மேடம்

மிதுனவீதி    : தேள், வில்லு, மகரம், கும்பம்

மேடவீதி    : இடபம், மிதுனம், கற்கடகம், சிங்கம்.

            “விரிகதிர் மதியமொடு வியல்விசும்பு புணர்ப்ப

            எரிசடை எழில்வேழம் தலையெனக் கீழிருந்து

            தெருவிடைப் படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்

            உருகெழ வௌ்ளிவந் தேற்றியல் சேர

            வருடையைப் படிமகன் வாய்ப்பப் பொருடெரி

            புந்தி மிதுனம் பொருந்தப் புலர்விடியல்

            அங்கி உயர்நிற்ப அந்தணன் பங்குவின்

            இல்லத் துணைக்குப் பால் எய்த இறையமன்

            வில்லிற் கடைமகர மேவப்பாம் பொல்லை

            மதிய மறைய வருநாளில் வாய்ந்த

            பொதியில் முனிவன் புரைவரைக் கீறி

            மிதுனமடைய விரிகதிர்வேனில்

            எதிர்வரவு மாரி இயைகென இவ் வாற்றால்

            புரைகெழு சையம் பொழிமழை தாழ

            நெறிதரூஉம் வையைப்புனல். *10 

       என்ற பாடல் அடிகள் ஒன்பது கோள்கள் சுக்கிரன் இடபராசியிலும், செவ்வாய் மேடராசியிலும், புதன் மிதுன ராசியிலும் பொருந்தி வந்த, ஆவணிப்பௌர்ணமி நாளில் பெருமழை பெய்ததாகப் பரிமேலழகர் தம் உரையுள் குறிப்பிட்டுள்ளார்.

 ஏற்றியல் - இடபம். வருடை - மேடம். படிமகன் - செவ்வாய். புந்தி - புதன். அங்கி - கார்த்திகை. பங்கு - சனி. மாரி - கார்ப்பருவம். சீயம் - சிங்கம். மதி நிறைந்த நாளாகிய அவிட்டத்தை மதியும், இராகுவும் மகரத்து நிற்க, அதற்கு ஏழாமிடமாகிய கற்கடகத்து கேது நிற்றல் என்பது பெறப்பட்டது. சோமனை அரவு தீண்டல் கிரகணச் செய்தி பதிவாகி உள்ளது.

குரு

செவ்வாய்

வௌ்ளி

புதன் அகத்தியன்

 

 பரிமேலழகர் உரையை        

    வெளிப்படுத்தும்    

    இராசிக்கட்டம்

 

 சனி இராகு

சந்திரன்

சூரியன்    

       

மெய்ப்பித்தல் காரணங்கள்

1. சல ராசியில் கிரகங்கள் வலிமை, கிரகணம் அடைதல்.

2. நெருப்பு இராசியில் வெப்பக் கோள்களான செவ்வாய், சூரியன் வலிமை பெறுதல்.

3. சந்திர கிரகணம். மூன்று கோள்களுடன் இணைவு.

4. மழைக்கோள் சுக்கிரன் ஆட்சி வீட்டில் பலமாய் நிற்றல்.

5. நவ கோள்களும் வலிமையான முறையில் ஆட்சி வீட்டில் பலமாய் நிற்றல். எனவே பெருமழை பொழிந்தது.

         இவ்வாறு நிகழ்ந்தது கி.மு 161 ஆன 2941 பிரமாதி ஆண்டு ஆவணித்திங்கள் பன்னிரண்டாம் நாள் வியாழக்கிழமை சதுர்த்தசி 15 - 4, அவிட்டம் 45 - 53 ஆகுமென அறிஞர்கள் ஆராய்ந்து அறுதியிட்டுக் கூறியுள்ள செய்தி.

கார்த்திகை மாதப் பௌர்ணமி வரும் நட்சத்திரங்கள் 

அசுவினி, பரணி, கார்த்திகை

     மழை நுால் கார்த்திகை மாதப்பௌரணையன்று அசுவினி நட்சத்திரஞ் சேர்ந்து வருமாகில் உலகத்தில் கலகம் உண்டாகும். இந்தப் பௌரணையுடன் பரணி நட்சத்திரங் கூடுமானால் ஆங்காங்குப் பாங்கின்றி ஓரிடம் விட்டு ஓரிடத்தில் மழை பெய்யும். இந்தப் பௌரணையுடன் கார்த்திகை நட்சத்திரங்கள் கலந்து வருமாகில் முன் மழையின்றி பின் மழை உண்டாகும்.

            சொரியுந்தேளின் மதியதனிற் றோன்றும் நல்ல பூரணையிற்

            பரியுங் கூடி வருமாகிற் பாரிற் கலகம் பெரிதாகும்

            விரியுங் கங்கு லாமாகில் மேவுங் கண்ட வருடமதாம்

            அரிய வாணன் றானுதிக்கி லாலி பின்னா லுண்டாமே *

என்றும் குறிப்பிடுகின்றது.

    கார்த்திகை மாதப் பௌரணையானது எந்தத் தினத்தில் வருகின்றதோ அத்தனைப் படி அகவிலை விற்கும். மார்கழி மாதம் பூராட நட்சத்திரத்தில் சூரியன் பிரவேசிக்குங் தினம் முதலாக அந்தந்த மாதங்கட்குரிய ஈவு ஓடுமாகில் அந்தந்தக் காலத்தில் அதிகமாக மழை பெய்யும்.

           உண்டாங் கீடமதிபவ்வ முறுகுந் திகதி யகவிலையும்

            கண்டாங் கந்தப் படிநிலவுங் காணுந் தனுவின் மதிவருகும்

            பண்டாம் பொய்கை தனிற்கதிரோன் பற்றுங் கால முதற்கொண்டு

            துண்டா யம்மம் மதிக்குற்ற சூலிற் கிரம மோங்கிடுமே. *11

என்றும் குறிப்பிடுகின்றது.

   மழை நூல் கார்த்திகை மாதப் பவரணையன்று பரணியுங், கார்த்திகையும் ஆகிய நட்சத்திரங்கள் சேர்ந்து வருமாகில் உலகினில் ஒவ்வோர் இடத்திற்கு கண்ட வருடமாக மழை பெய்யும். அதனால் சிற்சில இடங்களில் வளமை இராது. அன்றியும் பற்பல இடங்களில் அதிக வெப்பத்தினால் கட்டம் உண்டாகும்.

            உத்ததேள் மதியிற் பவ்வ மோங்குநா ளடுப்போ டாரல்

            பத்தியே கூடு மாகிற் பாரினி லாங்காங் காலி

            தொத்திடு மனாவி ருட்டித் தோடமோ டதிக வெப்பம்

            நத்திடு மதனாற் கட்டம் நாட்டினி லுண்டா மென்னே. *

என்றும் மழைநூல் தெரிவிக்கின்றது.

கரும்பு, நெல் சமமாக விளைவு உண்டாதல்.

       கார்த்திகை மாதப் பவரணையன்று அசுபதி, பரணி, கார்த்திகை ஆகிய இந்த நட்சத்திரங்கள் மூன்றும் சேர்ந்து வருமாகில், ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய இந்த நான்கு மாதங்களிலும் சமரசமாக மழை பெய்து பூமியில் புஞ்சை, நஞ்சைகளில் இட்டிருக்கும் தானியங்களும் கரும்பும் சமமாக விளைவு உண்டாகும்.

            “ என்னக் கீட மதிபவ்வத் திவுளிபா கெரியுஞ் சேரில்

            மின்னிடைச் சிம்மந் தொட்டு விருட்சிக மதிவ ரைக்கும்

            நன்னய நாட்டிற் புஞ்சை நஞ்சையி லிட்டி ருக்குங்

            கன்னலுஞ் செந்நெற் பாதி கண்டிடும் விளைவென் றோதே. *

என்றும் மழைநூல் தெரிவிக்கின்றது. 

      கார்த்திகை மாதப் பௌரணையன்று உரோகிணி நட்சத்திரம் வரில் ஆண்கள், பெண்கள் மற்றும் ஆவினங்களுக்கும் உலகினில் அதிகம் பயம் உண்டாகும். அன்றியும் மேற் சொல்லிய பௌரணையில் கார்த்திகை, உரோகிணி நட்சத்திரங் கூடி வரில் குற்றமில்லாமல் குவலயத்தினில் சமமாக மழை பெய்து நல்ல விளைவு உண்டாகும். குவலயம் - உலகம்.

            “ ஓதுந் துடரின் மணிமதியி லுறும்பூ ரணையி லுருளைவரில்

            மாது மாந்தர் காலிகட்கு மண்ணி லதிகப் பயமுண்டாம்

            மீது மேற்சொல் லுந்திதியில் மேவுமாரற் சகடமுறக்

            கோது மின்றிச் சமமாகக் குலவு மாலி விளைவாமே. *

என்றும் மழைநூல் தெரிவிக்கின்றது. 

      கார்த்திகை மாதத்தில் பரணியுங், கார்த்திகை நட்சத்திரமும் ஒரு நாளில் வந்தாலும், அல்லது கார்த்திகையும், உரோகிணி நட்சத்திரமும் ஒரு தினத்தில் சேர்ந்தாலும், பூமியையாளும் தெய்வங்களாகிய அரசர்கள் ஒருவருக்கு ஒருவர் (யுத்தம்) போர்க்களத்தில் மெத்தவுஞ் சண்டையிட்டுக் கொள்வார்கள். மக்கள் அமைதி இல்லாமல் ஏந்தலைப் போல கலகமும், நோயும் அடையப் பெறுவார்கள்.

            ஆமே கங்கு லுடனார லதுவு மொருநாள் வந்திடினும்

            காமே வாண னுருளையதுஞ் சார்ந்தோர் தினத்தி லுற்றாலும்

            பூமே லரசர்க் கரசரெதிர் பொருதிப் போரும் புரிவார்கள்

           போமே பீடையுண்டாகிப் புவியோர் கலகஞ் செய்வாரே. *

என்றும் மழைநூல் தெரிவிக்கின்றது.

    கார்த்திகை மாதத்தில் வருகின்ற பௌரணைத் திதியானது அன்றைய தினம் பகலிரவு அறுபது நாழிகையும், மேற்படி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரம் அறுபது நாழிகையும் பூர்த்தியாய் இருக்குமாகில் அதற்கடுத்த வருடத்தில் வருகின்ற ஆடி, ஆவணி, புரட்டாசி, (அற்பசி) ஐப்பசி ஆகிய இந்த நான்கு மாதங்களிலும் மழை பெய்து அனைத்து விதத் தானியங்களும் செழிப்பாய் விளையும்.

            செய்யுந் தெருக்கால் மதிப்பவ்வத் திதியு மறுபா னாழிகையாய்

             உய்யு மார லவ்வீத முற்றே யிருக்க வடுத்துவருந்

            துய்யக் கடக முதற்கொண்டு துலாத்தின் வரைக்கு முள்ளமதி

            வய்யம் பயிர்கள் விளைவதற்கு வளமாயுதகம் பெய்திடுமே. *12

என்றும் மழைநூல் தெரிவிக்கின்றது.

ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்களில் சனி, ஞாயிறு ஆகிய வாரங்களில் சூரியனை மேகம் மறைத்தல்.

      மேலும் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய இந்த மூன்று மாதங்களில் வருகின்ற ஆதி வாரங்கள் தோறும் காலையிலும் மேற்படி மாதங்களில் வரும் சனிக்கிழமைகள் தோறும் மாலையிலும், சூரியனை மேகமானது மறைக்குமானால் எட்டு நாளைக்கு இடை விடாமல் மழை பெய்யும்.

            சொல்லக் கோலின் மதிமுதலாய்த் துலங்கும் வில்லின் மதிவரைக்கும்

             மெல்ல வருகுஞ் செங்கதிர்நாள் மேவு முதய காலமெலாம்

             வல்லச் சண்டன் றனைமேக மறைக்கக் காரி தினந்தோறும்

             புல்ல வந்தி தனிற்சூழப் பொழியு மாலி தினமெட்டே. *13

என்று தெரிவிப்பதால் அறியலாம்.

தை மாதப்பௌரணை அதிக மழையைக் கண்டறிதல்

      தை மாதம் பௌரணையன்று சாயந்திரம் ஒரு பலம் பஞ்செடுத்து வெளியில் வைத்து இருந்து மறுநாட்காலையில் அப்பஞ்சைப் பிழிந்து பார்க்கையில் நெல்லிடை சுத்தமாகிய பனி நீர் இருந்தால் அவ்வருடத்தில் உலகத்தில் அதிகமாக மழை பெய்யும்.

            ஆமே மகர மதிபவ்வத் தன்று சந்தி காலமதிற்

             றாமே பஞ்சதொருபலத்தைத் தனியேவைத்து மறுநாளில்

             நாமே பிழிய நெல்லிடைதா னல்ல சலம திருக்குமெனிற்

             பூமே லந்த வருடமதிற் பொழியு முதக மதிகமதே. *14

என்றும் குறிப்பிடுகின்றது. ஆலம், ஆலி என்பன மழையைக் குறிக்கும்.

பங்குனி மாதச் சுக்கில பட்ச சப்தமித்திதி, பௌரணை – மேகங்கூடல், காற்றடித்தல்

       பங்குனி மாதச் சுக்கில பட்ச சப்தமித்திதியிலாவது பௌரணையிலாவது ஆகாயத்தில் மேகங் கூடினாலும் அல்லது காற்றடித்தாலும் பயிர்கள் விளையும் படியான மழை பெய்து மக்கள் சுகம் அடைவார்கள்.

             “ பய்யச் சேலின் மதிபூர்வ மேழாந் திதிபவ்வத்

              துய்ய மேகங் கூடவன்றித் துடர்காற் றடிக்க மிகநன்றே. *15

என்றும் குறிப்பிடுகின்றது.

சூரியகிரகணம் அமாவாசையிலும், சந்திர கிரகணம் பௌர்ணமியிலும் நிகழ்கின்றன.

அமாவசை, பௌர்ணமி

             சூரியன் எனும் நுால் சந்திரன் பூமியைச் சுற்றி வர முப்பது நாட்கள் ஆகின்றன. சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும், இடையே வருவதை அமாவாசை என்றும், பூமி சந்திரனுக்கும், சூரியனுக்கும் இடையே வருவதைப் பௌர்ணமி என்றும் கூறுகின்றோம். இக்காலங்களில், சாதாரணமாய் இம்மூன்று கோளங்களும், ஒரே பரப்பில் வந்து நிற்பதில்லை. அவ்வாறு அவை ஒரே பரப்பில் நிற்குமானால், சூரியகிரகணம் அமாவாசையிலும், சந்திர கிரகணம் பௌர்ணமியிலும் நிகழ்கின்றன. எனவே, ஒரு மாதத்தில் பதினைந்து நாளில், சூரியகிரகணமும் சந்திரகிரகணமும், முறையே அடுத்தடுத்து நேரலாம். அவ்வாறு நேர்ந்தால் உலகத்திற்குத் தீமை விளையும் என்பது முற்காலத்தாருடைய நம்பிக்கை. இந்தப் போரின் போது 1944 ஆம் ஆண்டில் இவ்வாறு நிகழ்ந்தது.

            அருக்கனையும், சோமனையும், ஐம்மூன்று நாளில்

            பொருக்கில் அரவங்கள் தீண்டின் - செருக்களத்து

            மன்னர் மடிவார் மடியாரே யாமாயின்,

            அன்னம் அரிதாய் விடும். *16  -  தனிப்பாடல்.                         

இதன் உண்மையை ஆராய்வோம்.

உவா

உவா – பௌர்ணமி, அமாவாசை. இரண்டையும் குறிக்கும். இங்கு தலை உவாவின் பலன்கள் குறிப்பிடப் பெற்றுள்ளது.

வானியல் கலைக்களஞ்சியம் - டாக்டர் தி. கல்பனாதேவி, முதல்பதிப்பு, பதிப்பாண்டு 2019.

நுால் தெரிவிக்கும் செய்தி

உவர் - அமாவாசி, பூரணை.

உவராகம் - கிராணகாலம், கிரகண காலம்.

உவாந்தம் - அமாவாசை, பூரணை.

உவாமதி - பூரணச்சந்திரன், பூரணைச்சந்திரன்.

உவாவநுதி - அமாவாசி பூரணையின் முடிவு.

உவா - அமாவாசி, பூரணை.

உவா, உவாந்தம் - அமாவாசை, பூரணை.

உவாவறுதி - அமாவாசை, பூரணை இவைகளின் முடிவு. அமாவாசி, பூரணையின் முடிவு.

இச்சொல்லாட்சி நம் தமிழ் இலக்கியங்களில் மிகையாய்க் காணப்பெறுகின்றது.

ஆனி, மார்கழி, கார்த்திகை, ஆடி மாதங்களின் தலை உவா பலன்

            சூ.உ எனும் நுால் ஆனி, மார்கழி, கார்த்திகை, ஆடி இம்மாதங்களில் தலை உவாவினன்று இடித்தல், உதிரமாக வர்ஷித்தல் (பொழிதல்) பூகம்பம், கிராணம் (கிரஹணம்), பரிவேடம், நட்சத்திரம் வீழ்தல், ஆலங்கட்டி விழுதல் செய்யில் இம்மாதங்களுக்கு ஐந்தாம் மாதங்களிலே அஃகம் தாழும் என்றும்,

             ஆனிமார் கழியின் தேளாம் ஆடியில் தலைஉ வாவில்

            வானிடி உதிரம் கூடல் மண்கம்பம் கிராணம் வட்டம்

            மீன்விழுந் திடுதல் ஆலங் கட்டிகள் விழுதல் செய்யில்

            தானியம் இவற்றுக் கஞ்சாம் திங்களில் சாயு மன்றே *

என்றும் குறிப்பிடுகின்றது.   

பங்குனி, மாசி, தை மாதங்களின் தலை உவா பலன் – அஃகம்

      மேலும் இந்நுால் பங்குனி, மாசி, தை மாதங்களிலே தலையுவாவின் முன்னே சொன்ன குறிகள் உண்டாகில் இவற்றுக்கு ஏழு மாதங்களுக்குள்ளே சந்தனம், பட்டு, பொன் இவை குறையும். ஐப்பசி, புரட்டாசி இவற்றில் முன் சொன்ன குறிகள் உண்டாகில் ஐந்தாம் மாதத்துக்குள்ளே குதிரை, யானை நசிக்கும் என்றும்,

            சாய்ந்தபங் குனியின் மாசி தையில்இக் குறிகள் உண்டேல்

           ஏய்ந்தசந் தனம்பொன் பட்டுக் குறையுமேழ் திங்கள் திங்கள் தன்னில்

          ஊர்ந்தஐப் பசிபுரட்டை உளவெனில் குதிரையானை

           மாய்ந்திடும் இவற்றிற் கைந்தாம் திங்களில் மயிலே அன்னாய்! *17      

என்றும் குறிப்பிடுகின்றது.

       குறிப்பிட்ட ஆடிப்பௌரணை அல்லது ஆடி அமாவாசை புகை சோதிடம் குறிப்பிடப் பயன்படுத்தி உள்ளனர். சந்தனம், பட்டு, பொன் விலை குறைவு, ஏற்றம், விலங்குகளுக்குத் துன்பம் முதலான பலவற்றை வானியல் உள்ளடக்கியுள்ளது. மனிதர்கட்கு மட்டும் அல்ல. கோள் நிலை அனைத்திற்குமே பொதுவானது என்பதை இதன் வழி நாம் அறியலாம்.

இவ்விதம் மழைக்குறி நுால் தெரிவிக்கின்றது. தமிழன் ஒரு சிறந்த வானியல் நிபுணன் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அக்காலத்திலேயே வானியலில் மக்கள் பெரு விருப்பமுடனும், ஈடுபாட்டுடனும் இருந்தனர் என்பதை மேற்கண்ட சான்றாதாரங்கள் நமக்குப் பறைசாற்றுகின்றன.

சுருக்கெழுத்துகள் தரும் நுால் விவரம்

அ.சி – அபிதான சிந்தாமணி.

த.த.அ – தமிழ் தமிழ் அகராதி.

மழை – மழைக்குறி சாஸ்திரம்.

சூ.உ – சூடாமணி உள்ளமுடையான்.

வி.மா – விதானமாலை மூலமும் உரையும்.

சான்றெண் விளக்கம்

1. மழை, செ.எ.65, ப. 23.

2. த. மொ. அ. ப.1040.

3. அ. சி, ப. 1407.

4. மழை, செ. எண். 79 - 81, ப. 27-28.

5. மழை, செ.எ.108, ப.37.

6. மழை, செ.எண்.104, ப. 36.

7. கடுவன் நாராயண சுவாமிகள், வி.மா, செ.எ. 23, ப.170.

8. சத்தியபாமா காமேஸ்வரன், சூ.உ, செ.எ. 253, ப108.

9. கடுவன் நாராயணசுவாமிகள், வி.மா.மூ.உ, செ.எ.24, ப.171.

10. பரிபாடல், வையை, பா.எ. 11.

11. மழை, செ.எண். 90 - 91, ப.31.

12. மழை, செ.எண்.112 116, பக். 39 - 40.

13. மே, செ.எ.85, பக்.29 - 30.

14. மே, செ.எ.94, ப.32.

15. மே, செ.எண். 98: 3 - 4, ப.34.

16. ஈ.த.இராஜேஸ்வரி, சூரியன் சூரிய குடும்பம், ப.136.

17. சத்தியபாமா காமேஸ்வரன், சூ. உ, செ.எண். 248 - 249, பக். 106 – 107.

மூல நுால்

குப்புசாமி நாயுடு, த., (உ.ஆ).,,,  

பரமசிவன் பார்வதிக்கு உபதேசித்த                       

மழைக்குறிசாஸ்திரம் மூலமும் உரையும்,

விவேகானந்தாபிரஸ்,

மதுரை தளவாய் அக்கிரகாரம்,       

மதுரை, பதிப்பாண்டு - 1935.

துணைநின்ற நுால்

சூடாமணி உள்ளமுடையான் மூலமும் உரையும்,

மாறன் அச்சுக்கூடம்,

சென்னை - 1927.

இராஜேசுவரி அம்மையார், ஈ. த.,

பதிப்பாளர் திருமதி தணிகாம்பாள்,      

சூரியன், சூரிய குடும்பம்,

சென்னை முதல் பதிப்பு 1935, இரண்டாம் பதிப்பு 1941,

மூன்றாம் பதிப்பு 1946.

நாராயண சுவாமிகள், (உ.ஆ).,     

விதானமாலை மூலமும், உரையும்,

சரஸ்வதி புத்தக சாலை,

175, செட்டியார் தெரு,

கொழும்பு, ஜீலை 1958, சுத்தபதிப்பு.

பரிமேலழகர், (உ.ஆ).,

பரிபாடல், பரிமேலழகருரை,

டா.உ.வே.சா.நூல் நிலைய வெளியீடு,

சென்னை 90, ஆறாம் பதிப்பு 1995.

அகராதிகள்

சிங்காரவேலு முதலியார், ஆ.,

அபிதானசிந்தாமணி, தமிழ்க்கலைக்களஞ்சியம்  

எஸ்.கௌமாரீஸ்வரி, (ப.ஆ).,   

தமிழ்க்கலைக்களஞ்சியம் செம்பதிப்பு,

சீதை பதிப்பகம்,

6ஃ16 தோப்பு வெங்கடாசலம் தெரு,

திருவல்லிக்கேணி, சென்னை 600005.

முதல்பதிப்பு (செம்பதிப்பு) டிசம்பர் 2004.

கதிரைவேற்பிள்ளை. நா.,

தமிழ் மொழி அகராதி,

தமிழ் தமிழ் அகராதி,

திருத்தியது காஞ்சி நாகலிங்க முதலியார்,

ஆறாம் பதிப்பு, ஏஷியன் கல்வி நிலைய பதிப்பகத்தார்,

புதுதில்லி, ஆறாம்பதிப்பு 1981. புதுடில்லி 1998.

கிருஷ்ணன்., பி.ஆர்,

ஜோதிட கலைச்சொல் பொருள் விளக்க அகராதி,

மனை இயல் வல்லுநர்,

ஸ்ரீ ஜகதாம்பா சேரிட்டபிள் ட்ரஸ்ட்,

20. லிங்கிச் செட்டித்தெரு, சென்னை 600 001.

முதல் பதிப்பு, செப்டம்பர் 1993.

டாக்டர் தி.கல்பனாதேவி,

வானியல் கலைக்களஞ்சியம்.

ஸ்ரீவாலாம்பிகை பதிப்பகம்,

மேற்கு மாட வீதி,

அச்சிறுபாக்கம். முதல் பதிப்பு 2019