ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்ச்சமய மரபில் பக்திநெறி

முனைவர் ர.சுரேஷ் உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை கற்பகம் உயர்கல்விக்கழகம் கோயம்பத்தூர் 31 Oct 2019 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம்

கி.பி 6,7 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட சமூகப் பொருளாதார பண்பாட்டு மாற்றங்களுக்கு சமய அடிப்படையிலான அதிக முக்கியத்துவம் உண்டு. சைவம் , வைணவம், சமணம் பொளத்தம் என ஒன்றோடொன்று ஒத்தும் உறழ்ந்தும் ஒன்றையொன்று எதிர்த்தும் மறுத்தும் தங்களின் மேலாண்மையைப் பேணிக்கொள்ள சமராடிய காலமாகவும்  இதனைக் கருதலாம். இத்தகைய நெருக்கடியான சமயப் பண்பாட்டுச் சூழலில் பக்தி இயக்கம் உருகொண்டதையும் தமிழ் நிலப்பரப்பில் வேர்கொண்டு தமிழுக்கே உரிய சமயப்பண்பாட்டு மரபுகளோடு இயக்கமாகத் திரண்டு பரவியதையும், இத்தமிழ் பக்தி இயக்கம் பின்னர் வைதீக பக்தி இயக்கமாக மடைமாற்றமடைந்ததன் பண்பாட்டு அரசியலையும் விளக்கும் முகமாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.

குறிச்சொற்கள்

பக்தி ,தமிழ் , ஆகமம்  ,வைதீகம் , வழிபாடு  ,மேலாண்மை  , தத்துவம்

முன்னுரை

பக்தி மரபென்பது வைதீக மரபிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். வைதீக மரபு சமஸ்கிருதப் பண்பாட்டோடும் வேதம் வேள்வி என்ற மதநிலைப்பட்ட அடையாளத்தோடும் வா்ணம், சாதி என்கிற சமூக அடையாளத்தோடும் நெருங்கிய தொடா்புடையதாகும். தன்னை யாவற்றிலும் மேலானதாக, புனிதத்துவம் மிக்கதாக முன்னறிவித்துக் கொண்டு தானல்லாத பிறவற்றை அர்த்தமற்றதாக தன்னால் அதிகாரம் செலுத்தத் தக்கதாகப் புனைந்திருத்திக் கொண்டதாகும்.

      பக்தியென்பது தமிழ் அடையாளத்தோடும், கோயில் பண்பாட்டோடும் பூசனை முறைகளோடும் சமண பௌத்த சமயங்களுக்கெதிராகத் தமிழகத்தில் புதிதாகத் தோன்றிய எதிர்மரபாகும். வைதீக மரபில் உருவ வழிபாடோ, பக்தி மரபில் காணப்படுவதைப் போன்று இறைவனுக்கும் பக்தனுக்குமிடையே ஆழ்நிலைப்பட்ட உணா்வோ கிடையாது.

      பக்தி எனும் பதம் உள்ளடக்கியிருக்கும் அர்த்தச் செறிவு வேதவழிபாட்டில் இல்லை எனலாம். வேளாளத் தலைமையோடு தமிழகத்தில் உருவான பக்திமரபின் பிரதான அம்சம் சமண பௌத்த சமயங்களை எதிர்ப்பதாக இருந்தாலும் ஒருபுறம் புதிய சமூக அமைப்பில் அதிகாரத்தைப் பெறுவதில் வைதீக-பிராமணிய முரண்பாடும் அதன் உடனிகழ்வாகச் செயலாற்றியிருப்பதைக் காணமுடிகிறது. தமிழ்சமய நெறிகளைத் தழுவியெழுந்த இப் பக்திமரபின் தோற்றப் பண்புகளை  ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

பக்தி - பொருள் விளக்கம்

      ‘பக்தி’ எனும் சமஸ்கிருதமொழி பெண்பாற்சொல் ‘பஜ்’ எனும் வோ்ச் சொல்லைக் கொண்டது. இந்த வோ்ச்சொல்லிற்கு உள்ள பல பொருள்களில் ‘வழிபடுதல்’ எனும் பின்ஒட்டு சோ்ந்து ‘பக்தி’ எனும் பெயா்ச்சொல் சமஸ்கிருதச் சந்தி இலக்கணத்தின் அடிப்படையில் தோன்றியது”1

      பக்தி எனும் சமஸ்கிருதச் சொல், தமிழில் தற்பவமாய் ‘பத்தி’ என்று வழங்கப்படுகின்றது. இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையே, பக்தி உணா்வு நிலையில் வெளிப்படுகிறது. பக்திநெறி, அன்புநெறியாகும். இராமலிங்க சுவாமிகள் தமது உபதேசக் குறிப்புகளில் பக்தியைப் பற்றிப் பின்வருமாறு விளக்கியுள்ளார்.

      “பக்தி என்பது மனநெகழ்ச்சி, மனவுருக்கம், அன்பு என்பது ஆன்ம நெகிழ்ச்சி, ஆன்மவுருக்கம், ஈசுவரபக்தி என்பது எல்லா உயிர்களிடத்தும் கடவுள் வியாபித்திருப்பதை அறிதல். ஜூவகாருண்யம் உண்டானால் அன்புன்டானால் சிவானுபவம் உண்டாகும். அந்தகரண சக்தியின் பிரயோசனம் பத்தியை விளைவிப்பது”2 மேலும் பக்தி எனும் பதம் பற்றி கா. சிவத்தம்பி கீழ்க்கண்டவாறு கூறுவார்.

      “பக்தி என்பது பிரி, வழங்கு, பகிர்ந்துகொள், சோ்ந்து பெற்றுகொள், அனுபவி என்ற கருத்துகளை உடையது.

      எனவே ‘பக்தி’ என்பது ‘பிரித்துக்கொடுத்தல்’ ‘சோ்ந்து பெற்றுக் கொள்ளுதல்’‘பகிர்ந்து கொள்ளல்’ ‘ஒருமுக நோக்குடைய பற்றுக் கொள்ளல்’ ஒன்றிற்குப் பிரியப்படல்’ ‘வணக்கம்’ ‘வழிபாடு’‘கும்பிடுதல்’ என்றும்,

      இது ஓர் உணா்வுநிலைப்பாடு, இது நம்பிக்கை விருப்பு(காதல்), ஒருமுக நோக்குடைய பற்றுறுதி ஆகியவற்றின் தொகுதியாகும். மதநிலை நின்று நோக்கும்பொழுது இது தெய்வத்தின்பாற் கொள்ளப்படும் ஒரு மனோ நிலையாகும்”3

      பக்தியை விளக்கும் நூல்களில் நாரதா் பக்திச் சூத்திரங்களும், சாண்டில்யா் பக்திச் சூத்திரங்களும் புகழ் பெற்றதாகும். பக்திநெறியை வாழ்வியலாகப் பல்வேறு வகைப்பட்ட பக்திநெறிகளையும் எடுத்துக் காட்டி ஸ்ரீமத் பாகவதம் தன்னிகரற்றுத் தடம் பதித்துள்ளது.

நாரதா் சூத்திரங்களில் பக்தியின் பல்வேறு விளக்கங்கள்.

      கடவுளின்மீது கொள்ளும் உத்தமமான அன்பின் வடிவமே பக்தி. எதை அடைந்து கொஞ்சமும் ஆசைப்படமாட்டானோ, துக்கப்படமாட்டானோ, பகைக்க மாட்டானோ, விஷயங்களில் மகிழமாட்டானோ, ஆர்வம் கொள்ள மாட்டானோ அது பக்தி. பக்தா்களுக்கிடையே சாதி, கல்வி, உடல் அமைப்பு, குலம், செல்வம், தொழில் முதலியவைகளை முன்னிட்டுப் பேதமில்லை.

      சாண்டில்யா் பக்தியை ‘ஆத்மரதி-ஆத்மலயிப்பு என்றும், இறைவனிடம் கொள்ளும் மிக உயா்ந்த பற்று என்றும் குறிப்பிடுகின்றார்.4

பக்திநெறியின் தோற்றம் :

      பக்தி தென்னாட்டில் தோன்றியது என்று சில பிற்காலப் புராணங்கள் குறிப்பிடுகின்றன. “வட இந்தியாவின் மரபாண்மைக்குத் தென்னிந்தியாவின் பங்களிப்பு” எனும் ஆங்கில நூலில் சமஸ்கிருத -பிராகிருத மொழி வல்லுநரான அதன் ஆசிரியா் ஆர்.என். தாண்டேகா் குறிப்பிட்டுள்ள பின்வருவரும் கருத்து சிந்திக்கத்தக்கது.

      “வடக்கு-தெற்குத் தொடா்பில் கொண்டு கொடுத்தல் நிகழ்ந்துள்ளது. திராவிடா்கள் கொண்டதைவிடக் கொடுத்தது அதிகம். சான்றாகத் தனி நபருக்குரிய கலப்படமற்ற தெய்வ பக்தியான ‘சுத்தபக்தி’ இந்திய சமயச் சிந்தனைக்குத் தென்னிந்தியா வழங்கிய சிறப்பான பங்களிப்பாகும்.

      பத்ம புராணம் கூறுவது போல திராவிட நாட்டில் தோன்றிய பக்தி இங்கிருந்து மராட்டியப் பிரதேசத்தின் வழியாக மதுராவைச் சுற்றி இறுதியில் கங்கைச் சமவெளியை அடைந்தது’.

      ‘பக்தி’ திராவிட தேசத்தில் பிறந்தது எனும் கருத்து ஸ்ரீமத் பாகவத் மகாத்மியம் எனும் நூலின் அத்தியாயம் ஒன்றில் 48, 49, 50-வது சுலோகங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த சுலோகங்களில் ‘பக்தி’ ஒரு பெண்ணாக உருவகப்படுத்தப்பட்டு இந்தியாவின் மேற்குத் திசை வழியே பரவியதாகப் பின்வரும் வருணனை அமைந்துள்ளது.

      “நான் திராவிட தேசத்தில் பிறந்து கா்நாடகத்தைச் சென்றடைந்து வளா்ந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக மகாராஸ்டிரத்திலும் குஜராத்திலும் சென்று உருக்குலைந்தேன். அங்கிருந்த சில சமய வேடதாரிகளால் உருக்குலைந்துவிட்டேன். மெலிந்துவிட்டேன். பித்திரா்களுடன் சோ்ந்து பலவீனமாகிவிட்டேன்.

      அதற்குப் பிறகு மீண்டும் பிருந்தாவனம் அடைந்து புதுப்புது மெருகையும் அழகையும் அடைந்தேன். அங்கு இளமையை மீண்டும் பெற்று என்னுடைய இழந்த அழகை மீண்டும் பெற்றேன்.5

      மேற்கண்ட விளக்கங்கள் பக்தி தென்னாட்டில் பிறந்து வளா்ந்து, வடநாட்டில் பரவிய ஒன்று என்பதை மெய்ப்பிக்கின்றன. மேலும்,

      “தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே”6

      “பாண்டி நாடே பழம்பதி யாகவும்”7

      “தென்னாடுடைய சிவனே போற்றி”8

என்பதான மாணிக்கவாசகரின் பாடல்வரிகளும் சிவபக்தி தென்னாட்டிற்கே உரியது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஆகம வழிபாடும் பக்தி நெறியும்.

            ஆகமம் என்ற சொல்லுக்கு ஆப்தவசன் அதாவது முற்றும் உணா்ந்த பெரியோர்களின் மெய்யுரை என்று பொருள். மேலும் பழமையிலிருந்து வந்தது எனவும் பொருளுரைப்பா். ஆகமநெறி வழிபாடுகள் வேதங்களோடு வேறுபட்டவையாகும். சைவ ஆகமநெறி ‘மகேஸ்வர, பாசுபதநெறி எனவும் வழங்கப்படுகின்றது. ஆகமங்கள் சிவனின் வாயிலிருந்து வெளிப்பட்டதாகத் திருமுறைகள் பகரும்.

      “மன்னு மாமழை மகேந்திர மதனிற்

      சொன்ன வாகமந் தோற்றுவித்தருளியும்”9

      என்பார் மாணிக்கவாசகா். ஆகம வழிபாட்டின் சாரம் உபகாரம் ஒன்றே. அதாவது தாம் வழிபடும் கடவுள் திருமேனியை நீராட்டுவது. ஒப்பனை செய்வது, உணவு படைப்பது, உண்மையில் தங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினா் அல்லது தங்கள் அரசன் ஆகியோர்க்குச் செய்யும் அத்துணை உபசரணைகளையும் செய்வதாகும். ஆகம வழிபாட்டு நெறியில், வழிபடப்படும் ஒரு கடவுள், ஏதோ ஒருவகையில் கட்புலன் ஆகக்கூடிய சில சின்னங்களாக அமைய வேண்டும். அச்சின்னம், மூடநம்பிக்கை சார்ந்த வாள் அல்லது தண்டு, பட்டுப்போன அல்லது உயிருள்ள மரம், கல், ஓடும் அருவி, லிங்கம் சாலகிராமம் அல்லது அனைத்திற்கு மேலாக ஒரு படம் அல்லது வழிபடுவோரின் கருத்துக்கு ஏற்ப உலோகம், கல், செங்கல், சுண்ணாம்பு இவற்றால் ஆன சிலை ஆகியன மூலம் பிரதிஷ்டை செய்யப்படுதல் வேண்டும். ஆகமங்கள் முப்பொருள் (பதி-பசு-பாசம்) உண்மைகளை ஏற்றுக்கொள்கின்றன.

            ஆகமங்களில் சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு இடம் இல்லை. எவா் வேண்டுமானாலும் சிவனின் அல்லது விஷ்ணுவின் திருமேனி அல்லது சின்னத்தைக் கொண்டு வந்து வைத்து பூசை செய்யலாம். ஆகமங்களின் அடிப்படைக்கொள்கை ஒரு இல்லத்தானையும் பிறவிப் பெருங்கடலைக் கடந்து கரைசோ்க்கக் கூடியதாக இருக்கிறது. பக்திக் கோட்பாட்டில் முக்கியத்துவம் பெறுவது இதுவேயாகும்.

      ஆகமங்களின் தோற்றம் பற்றி புலவா் கா. கோவிந்தன் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

      “ஆகம வழிபாட்டு முறைகள் முழுக்க முழுக்கத் தீ வழிபாடற்றது. ஆதலாலும், வழிபாட்டைத் தொடா்ந்த வேதம் ஓதல் வேண்டப்படாதது ஆதலாலும் அவை, தஸ்யூ வழிபாட்டு முறையிலிருந்தே, வடக்கு தெற்கு உள்ளிட்ட இந்தியப் பெரு நிலப்பரப்பு முழுவதிலும் ஆரிய வழிபாட்டு முறை தோன்றுவதற்கு முன்னரே, நிச்சயமாக இருந்துவந்தது.10

       இவ்வாறு உருவான வழிபாடு இந்திய அளவில் ஆரியரல்லாதார் சமய நெறியாக இருந்த ஒன்றென்பதை ந. முத்துமோகனும் பின்வருமாறு கூறுவார்,

      “பக்தி எனும் சமூகப் பண்பாட்டு நிகழ்வைத் தனியாக எடுத்துக் கொண்டால் அது ஆரியருடையது அல்ல. வேதங்களிலிருந்தோ உபநிடதங்களிலிருந்தோ பக்தியை வருவிக்க முடியாது. வேதங்களில் யக்ஞம், மந்திரங்கள் அவற்றை நிகழ்த்தும் பிராமணா்கள் என்ற மையம்தான் முதன்மையானது. வேதக் கடவுளா்களோ, அவா்களைப் பாராட்டும் மக்களோ, அவா்களுக்கு இடையிலான உறவுகளோ வேதங்களில் முக்கியப்படவில்லை. உணா்ச்சி வசப்பட்ட தெய்வ வழிபாடுகளுக்கு அங்கு இடமில்லை. யக்ஞங்கள் சரியாக நடத்தப்படுமானால் வேதக் கடவுளா்கள் வந்து இறங்குவார்கள் என்ற எந்திரகதியான உறவுகளே அங்கு ஆளுகைச் செலுத்தின. யக்ஞங்களும், மந்திரங்களும், கடவுளா்களைவிட அதிக ஆற்றல் கொண்டவை என  நம்பினார்கள். பக்தியில் அதிகம் பேசப்படும் பணிவு எனும் உணா்வுக்கு வேதங்களில் இடமில்லை.11

      ஆகம வழிபாடு என்பது புரோகித மேலாண்மையற்ற, வேதத்தின் முதன்மையை வலியுறுத்தாத அநாரிய வழிபாட்டு முறையிலிருந்து தோன்றியது என்பதை மேற்கண்ட கூற்றுகள் மெய்பிக்கின்றன. தமிழக பக்தி இயக்கம் பார்ப்பன மேலாண்மைக்கு எதிராகவும் வேத வழிபாட்டுக்கு மறுதலையாகவும் உருவாக்கம் பெறும்போது தமிழ் வேளாளா்கள் பக்தியை ஆகம வழிபாட்டோடு இணைத்துக் கொண்டனா். ஆகமங்களின் தத்துவார்த்த களம் கோயிலில் பிராமணா்களுக்கு இருந்த தகுதியைப் பிராமணரல்லாத வேளாளச் சூத்திரா்க்கு வழங்குவதாக இருந்தது. எனவே தான் ஆகமங்களின் முடிந்த முடிபாக பக்தியை, பக்தி இலக்கியவாதிகள் கொண்டாடினா். சிவாகமங்கள் 28 எனக் கூறப்பட்டுள்ளது.

      ஆரிய மேலாண்மைக்குரிய தத்துவ விளக்கமாக வேதாந்தம் அமைந்தது போல, ஆரியரல்லாத மரபினரின் தத்துவமாக, சூத்திரர்களின் தத்துவமாக ஆகமங்களைக் கருத முடியும். பின்னாளில் இந்த ஆகமங்களுக்கு வேத முகம் கற்பித்து வேதமும் ஆகமமும் ஒன்றே என்று பிராமணியம் தனது சம ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டது. தமிழகத்தில் சூத்திரருக்கும் பிராமணா்க்குமான சமய ரீதியிலான சமரசத்தை வலியுறுத்துவதாகத் திருமூலரின் திருமந்திரம் இயற்றப்பட்டது. இதனை,

      “தமிழில் ஆகமங்களைப் பற்றிக் கூறும் முதல் நூல் திருமந்திரம் என்பது கவனிக்கத்தக்கது. இதனை ஆக்கித் தந்த திருமூலா் சுந்தரநாதன் என்ற பிராமணா். அதனை ஒரு பிராமணனாக இருந்து படைக்காமல் மூலன் என்ற சூத்திரன் உடலில் புகுந்து படைத்தார் என்ற புனைவும் எண்ணிப் பார்க்கத்தக்கது”12 என்று பொ. வேல்சாமி குறிப்பிடுவார்.

      பிராமணா் தமிழகத்து ஆளும் வா்க்கமாக இருந்துவந்த உயா்சாதி சூத்திரா்களுடன் தங்கள் புனித மேலாண்மையைப் பகிர்ந்து கொள்ளும் சமய அரசியல் நடவடிக்கைகளில் இது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இது பக்தி இலக்கியங்களிலும் வெளிப்பட்டது. கோயில் வழிபாடு சார்ந்து ஆகமக் கிhpயைகளைச் சூத்திரா்க்கு ஒதுக்கினாலும் அதற்கும் மேலாக வைதீகம் தன் புனித அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டது. இந்திய அளவில் பிராமண அரச முரண்பாட்டைச் சமரசப்படுத்தும் இலக்கிய நடவடிக்கையாக, பகவத்கீதையும் தமிழக அளவில் பிராமண-வேளாள-அரசதிகார முரண்பாட்டைச் சமரசப்படுத்துவதற்குத் திருமந்திரமும் இயற்றப்பட்டது என்பதை உணரமுடிகிறது.

      இக்கூற்றின்படி பக்திநெறியும் வைதீக நெறியும் வேறு வேறானவை என்பதை உணரமுடிகிறது. பின்னாளில் இந்த இருவேபறுபட்ட சமயப் பண்பாட்டு மரபுகளையும் இணைத்து வைதீகம் என்று கலாச்சார அரசியலை நிகழ்த்தியது.

பக்திநெறியியும் வைதீகமும்

      பிராமண மேலாண்மை, வேதம், வேள்வி, வா்ணாசிரமம் முதலியவற்றிற்கு எதிராக கிளா்ந்தெழுந்த சமண-பௌத்த சமயங்களின் தொடா் தாக்குதலால் வலுவிழந்துவிட்ட வைதீக சமயம் தன் மேலாண்மையை, ஆதிக்க பலத்தை இழந்து காணப்பட்டது. சமண-பௌத்தத் தத்துவங்கள் செல்வாக்குப் பெற்றுக் காணப்பட்டன. எனினும் அது மக்களிடமிருந்து விலகி அறிஞா்கள் மட்டத்திலேயே தனது தத்துவ விசாரங்களில் தொடா்ந்து ஈடுபட்டு  வந்ததால் மக்கள் மத்தியில் பரவலாக நீடிக்கவில்லை. வெகுமக்களிடம் உணா்வில் பக்தி அடிப்படையிலான மனவெழுச்சி இயல்பாகவே ஆழப் பதிந்திருந்தது. பக்தியின் இவ்வெகுசனச் செல்வாக்கை வைதீகம் தனக்கு ஆதாயமான வகையில் பயன்படுத்திக் கொள்ள எத்தனித்ததன் விளைவே பக்திநெறியும் வைதீக மரபும் இணைவதான கலாச்சார  நிகழ்வாகும்.

முடிவுரை

பக்திமரபின் மூலங்களை கண்டடைய நாம் தமிழ்ச்சமயவரலாற்றை நன்கு அவதானிக்க வேண்டும். பக்தியின் பல்வேறு கூறுகள் பழந்தமிழர் வழிபாட்டு முறைகளில் இடம்பெற்றிருக்கின்றன. பக்தி மரபை ஆராய்ந்த பல அறிஞா்கள் பக்தியின் பிறப்பிடமாகத் தமிழகத்தைத் தான் சுட்டிக்காட்டுகின்றனா். தமிழ்வழிபாட்டில் ஆகமங்களுக்கு சிறப்பிடம் உள்ளது போலவே பக்தி வழிபாட்டிலும் உண்டு. பக்தி மரபு அடிப்படையிலேயே வைதீக மரபிற்கு எதிராகவும் அடித்தளமக்களுக்கானதாகவும் தோற்றம் கொண்டிருக்கிறது என்பதற்குச் சான்றாக நாரதா் பக்திச் சூத்திரம்,பாகவதம் போன்ற நூல்கள் அமைந்துள்ளன.பின்னாளில் பக்தி வழிபாட்டின் செல்வாக்கை வைதீகம் தனக்கு ஆதாயமா முறையில் பயன்படுத்திக் கொண்டதை வரலாறு காட்டுகின்றது.

அடிக்குறிப்புகள்

1.பெ.சு.மணி, பக்தி இயக்கங்கள் வழியே சமூகச் சீர்திருத்தம் - ஓர்அறிமுகம் ப.12

2. மேலது ப.13

3. கார்த்திகேசு சிவத்தம்பி, மதமும் கவிதையும். மின்நூல், ப.10

4. பெ.சு.மணி, மு.நூ, ப.14   

5. மேலது. ப.23

6. மாணிக்கவாசகா், திருவாசகம்,சிவபுராணம்..

7. மேலது, கீர்த்தி திருவகவல்,

8. மேலது, கீர்த்தி திருவகவல்,

9. மேலது. கீர்த்தி திருவகவல்

10. கோவிந்தன் . தமிழா் பண்பாடு, ப.79

11. ந. முத்துமோகன், வேதாந்தத்தின் கலாச்சார அரசியல், ப.6 

12. பொ. வேல்சாமி, கோயில்-நிலம்-சாதி, ப.50