ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

வாணியம்பாடி அதிதீஸ்வரர் திருக்கோயில் கல்வெட்டுகள் ஓர் ஆய்வு

முனைவர் மு.முஜிபுர்ரகுமான் உதவிப் பேராசிரியர் இசுலாமியக் கல்லூரி (தன்னாட்சி) வாணியம்பாடி-635 752 31 Oct 2019 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம் 

      ‘வாணியம்பாடி அதிதீசுவரர் திருக்கோயில்; கல்வெட்டுகள ஓர் ஆய்வு;’ என்ற தலைப்பிலான இக்கட்டுரையில் அதிதீசுவரர் திருக்கோயில் வரலாறு ஆய்ந்து தரப்பெற்றுள்ளது. இலக்கியத்தில் வாணியம்பாடி மற்றும் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ள செய்திகளையும், அதிதீசுவரருக்கு இருக்கும் வேறு பெயர்களையும் எடுத்தாளப் பெற்றுள்ளது. மேலும், இக்கோயிலுக்கு பேரரசர்கள் சில தானங்களையும் வழங்கிய வரலாறு ஆய்வுலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இக்கட்டுரை அமைக்கப்பெற்றுள்ளது.

திறவுச் சொற்கள்

      கோயில், ஆலங்காயம், கல்வெட்டுகள், வானகோப்பாடி, சிந்தகப்பாடி, வாணியம்பாடி, தைலிக், முக்கிபுரி, சிவஸ்தலம், பூலோக கைலாயம், ஞானபுரி, சதுர்வேதி மங்கலம், சோறுடையான் கழனி, விருந்தின் நானயனார், குழி, கழஞ்சு, மஞ்சாடி, சந்நதி

முன்னுரை

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டத்தில் ஆலங்காயம் அமைந்துள்ளது. இவ்வூர் பழமையான வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். இவ்வூரியுள்ள அருள்மிகு அதிதீசுவரர் திருக்கோயில் 60 சென்ட்டு நிலப்பரப்பில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. அத்தகைய சீறும் சிறப்புமாகிய அதிதீசுவரர் திருக்கோயில் கல்வெட்டுகள் குறித்து ஆய்வதே இக்கட்டுரையின் இலக்கு.

தலவரலாறு

      இக்கோயிலின் தலவரலாறு திருப்பத்தூர் புராணங்கள் என்ற நூலில் வாணிப்புரப்படலம் என்ற அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளது. அதன் படி சத்தியலோகத்தில் பிரம்மனுக்கும், கலைவாணிக்குமிடையே ஏற்;பட்ட வாக்குவாதத்தின் போது பிரம்மன் சற்று கர்வமாகவும் மூர்த்திகளில் நான் தான் உயர்ந்தவன் என்று கூறினார். நான் படைத்தல் தொழில் செய்யாவிடில் ஏனைய இரண்டு மூர்த்திகளான விஷ்ணுவிற்கு காத்தல் தொழிலும், சிவனுக்கு அழித்தல் தொழிலும் இல்லை. எனவே நானே சிறந்தவன் என்றார். அதனைக்கேட்ட கலைவாணி பிரம்மனுடைய தவறான எண்ணத்தைக் கண்டு ஏளனமாக நகைத்தாள். அதைக் கண்ட பிரம்மாவிற்கு கலைவாணி மீது கோபம் ஏற்பட்டு ‘ஊமையாக போகக் கடவாய்’ என்று சபித்தார்.

      குலைவாணி பூலோகம் வந்து பல இடங்களுக்குச் சென்று கடைசியாக சிறுங்கேரி என்ற இடத்தில் ஆரம்பித்து அவ்வழியே வந்து தற்போதுள்ள வாணியம்பாடியில் பாலாற்றங்கரையின் ஓரமாக அமர்ந்து அறச்சாலை அமைத்து சிவனை நோக்கி தவம் செய்ய ஆரம்பித்தாள்.

      இதற்கிடையே ஒரு தவறும் செய்யாத வாணியை தண்டித்ததால் பிரம்மாவிற்கு பாவம் சூழ்ந்தது. அதனைப் போக்க அவர் காஞ்சிபுரம் சென்று ஒரு யாகம் நடத்த முனிவர்களை வேண்டினர். ஆனால் அம்முனிவர்களோ மனைவியின்றி செய்யும் யாகம் பூர்த்தியடையாது என்றனர். எனவே பிரம்மன் விஷ்னுவிடம் சென்று வாணியை சமாதானப்படுத்த வேண்டினார். வுpஷ்ணுவும் கலைவாணியை சமாதானப்படுத்த இவ்விடத்திற்கு வந்தார். ஆனால் வாணியோ ஒரு தவறும் செய்யாத தனக்கு ஏற்பட்ட நிலைக்காக வருந்தி பிரம்மாவின் யாகத்திற்கு வர மறுத்து விட்டாள். எனவே பிரம்மா சிவனிடம் சென்று வாணியை சமாதானப்படுத்தும்படி வேண்டினார். சிவன், விஷ்ணுவைப் போல் அல்லாமல்; வேதியராக (விருந்தினர் வடிவில்) சிவணும், பார்வதியும் வாணியின் அறச்சாலைக்கு வந்தனர். அவர்களுக்கு தக்க மரியாதை செய்து வணங்கிய வாணி, குறுத்துப் பிரியாத வாழையிலையில் அறுஞ்சுவை உணவைப் படைத்து தன் நிலையை எண்ணி வருந்தினாள். அப்பொழுது, சிவன் வாணியைப் பார்த்து ‘வாணி என்னை நோக்கிப் பாடு’ என்றார். உடனே வாணியின் ஊமைத்தன்மை நீங்கி சிவனை நோக்கிப் பாட ஆரம்பித்தாள் எனவே இவ்வூருக்கு ‘வாணி பாடி’ என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே பின்பு திரிந்து வாணியம்பாடி என்றாயிற்று. இவ்வூருக்கு பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன.

      இக்கோயில் பல அரசர்கள் காலத்தில் வளர்ச்சிப் பெற்று விஜயநகர அரசர்கள் காலத்தில் புதுப்பிக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இக்கோயிலில் பதினைந்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கோயிலின் மதில் சுவர்களில் பொதுவாக இக்கோயிலுக்கு தானமாக விடப்பட்ட நிலங்கள் (வடக்குப்பட்டு, திருமாஞ்சோலை) மற்றும் அபராதமாக பெறப்பட்ட பொருட்கள் ( பசு, எண்ணெய், பால் போன்றவை) பற்றிய குறிப்புகள் உள்ளன. இக்கோயில் விஜயநகர அரசர் சதாசிவராயர் (கி.பி.1464) காலத்தில் புதுப்பிக்கப்பட்டதற்கான பட்டயங்கள் காணப்படுகின்றது. இக்கோயில் மிகவும் பழமை வாய்ந்த ஒன்றாகும். கோயிலின் சுற்றுச் சுவரில் காணப்படும் கல்வெட்டுகளில் மதுராந்தக சோழ மன்னனின் (கி.பி. 970-985) கல்வெட்டு உள்ளது. அந்த கல்வெட்டுகளில் இவ்வூர் ‘மதுராந்தக  சதுர்வேதிமங்கலம்’ என்றப் பெயரில் உள்ளது.

பூஜைகளும், விழாக்களும்

      இக்கோயில் ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது. அது மட்டுமின்றி மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் மற்றும் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் சிறப்பு புஜைகளும் சிறப்பு மிக்கதாகும். அச்சமயம வாணியம்பாடியும்; அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதியிலிருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசிக்க வருகின்றனர்.

இக்கோயிலுக்கு தானமாக கொடுக்கப்பட்ட நிலங்கள்

      திருமாஞ்சோலை, ஈச்சங்கால், கொன்னாம்பட்டி மற்றும் பெரிய பேட்டை போன்ற இடங்களில்; இக்கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் உள்ளன.

      இக்கோயில் வாணியம்பாடி நகரில் உள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பல்வேறு வம்ச மன்னர்களின் காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சோழர்களின் கல்வெட்டுகளும், விஜயநகர மன்னர் சதாசிவராயர் காலத்தில் இக்கோயில் புதுப்பிக்கப்பட்டதற்கான கல்வெட்டுகளும் வரலாற்று சான்றுகளாக திகழ்கின்றன. இக்கோயில் வாணியம்பாடி மக்களின் முயற்சியால் ஆகஸ்டு 2015ல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. இந்நகர மக்களின் முக்கிய தலமாக இக்கோயில் உள்ளது.

வாணியம்பாடி ஊர்ப்பெயர்

பாடி என்ற ஊர்ப்பெயர்ச் சொல் திராவிட மொழிகளில் மட்டுமின்றி மற்ற இந்திய மொழிகளிலும் வழக்கத்திலிருக்கின்றது. இம்மொழிகளில் “பாடி” என்ற சொல் முல்லை;  நிலத்திலுள்ள ஊரினையும் சிற்றூர்களையும் குறித்து வந்தது. முல்லை நிலம் மிகுந்த பகுதியில் நாட்டினைக் குறிப்பதற்குப் பாடி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. வாணகோப்பாடி சிந்தகப்பாடி வாணியம்பாடி போன்ற பெயர்களைச் சான்றாகக்கூறலாம். இப்பெயர்கள் அனைத்தும் முல்லை நிலம் மிகுதியாக இருந்த பகுதியல் பயின்று வருகின்றன.  

வாணியம்பாடி

நிலக்கடலை, ஆமணக்கு, எள் போன்றவற்றைச் செக்கிலிட்டு ஆட்டி எண்ணெய் எடுக்கும் பிரிவினருக்கு வாணியர் என்று பெயர். நாடாட்டில் இவர்களைத் “தைலித்” என அழைக்கின்றனர். வாணியர்கள் பெரும் பகுதி வாழ்;ந்த பாடி என்பது முல்லை நிலத்து ஊர்களுக்கான பெயரே வாணியம்பாடியாகும்.

இலக்கியத்தில் வாணியம்பாடி

பழங்காலத்தில் வாணியம்பாடிக்கு பல புராணப்பெயர்கள் இருந்துள்ளன. அவை பூலோக கைலாயம், சிவஸ்தலம், முக்கிபுரி, குருபகவானூர், ஞானபுரி, சரஸ்வதிபுரம், வாணியம்பாடி சதுர்வேதிமங்கலம் போன்ற பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளன.

கல்வெட்டில் வாணியம்பாடி

வாணியம்பாடிக்குப் பெயர் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துப் பெரும்பாணப்பாடி ஐம்புழுகூர் நாட்டு மதுராந்தக சதுர்வேதிமங்கலமான  வாணியன்பாடி என்று கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. வாணியம்பாடியில் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள் பல உள்ளன. வாணியம்பாடி அதிதீசுவரன் கோயில் கட்டிடம் திராவிடக் கலைப்பாணியில் அமைந்துள்ளது. வாணியம்பாடியில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள் ஆகியோர் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

கல்வெட்டில் காணப்படுபவர்கள்

மன்றாடிச்சி, சேரநாராயண கிரமவித்தன், அம்மொழிதேவன், பள்ளிகொண்டான், சூத்தன், பூமிதேவன், அபலத்தரையன் செம்பியன் சோறுடையான் கழனி, கடமுழான்வாழ ஜெயங்கொண்டான், வீரசாணி அம்மயப்பன் நுளம்பராயன் கங்காணன், வாணியன் நம்பி, மாபோதியராயன் ஆகியோராகும்.

கல்வெட்டில் காணப்படும் ஊர்கள்

வாணியம்பாடி, ஐம்புழுசூர், ஏற்றூர், நர்சிங்க, சதுரவேதிமங்கலமான வாணியம்பாடி, சிற்றாமூர், செம்பாடு, அரும்பாக்கம், அத்திப்பாக்கம், நெற்குன்றம் என்பன.

அதிதீசுவரரின் வேறு பெயர்கள்

விருந்தின் தேவர், விருந்தின் பெருமான் அடிகள், விடுகாதிகிய ஈஸ்வரர், விருந்தின நாயனார்.

கல்வெட்டில் பொன் நாணயங்கள் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

கல்வெட்டுக்கள் கூறும் அளவை முறைகள்

500 குழி, 1000 குழி நில அளவுகள், 6 கழஞ்சு, மஞ்சாடி போன்றன.

கல்வெட்டுச் செய்திகள்

அதிதீசுவரர் கோயிலின் அர்த்த மண்டப வாயில் நிலைக்கால்களில் உள்ள கல்வெட்டில் வீரபாண்டியன் தலை கொண்ட பார்த்திவேந்தராதிவர்மனின் 8-வது ஆட்சியாண்டு என்று எழுதப்பட்டுள்ளது. படுவூர்க் கோட்டத்து அடையாறு நாட்டு நரசிங்க சதுர்வேதிமங்கலமான வாணியம்பாடி சபையார் ஓதிதரையன் என்பருக்கு வரிவிலக்கு அளித்து நில விற்பனை செய்து குறிப்பிட்ட தொகையை வாணியம்பாடி சபையார் பெற்று கொண்டதாகச் செய்திகள் காணப்படுகின்றன.

இலங்கை நாட்டு காமுண்டன் ஆன அருமொழித்தேவன் புளியன் என்பவன் வாணியம்பாடி விருந்தின தேவருக்கு நந்தா விளக்கு எரிக்க 96 ஆடுகளைத் தானமாக வழங்கியுள்ளதையும் தை சிவ பிராமணர்கள் பராமரிக்கவும் ஆணையிட்டுள்ளார்.

இக்கோயிலில் ஒரு நந்தா விளக்கு எரிப்பதற்காகச் சூரியன் பெற்றான் தனது துணைவன் சோறுடையான் கழனி என்பவன் 96 ஆடுகள் தானமாக வழங்கியுள்ளார்.

இக்கோயிலின் உள் மண்டபத்தில் உள்ள தூண் ஒன்றை தூணைக் கருமாணிக்கிழவன் ஆகிய வாணியநம்பி என்பவனின் மனைவி தானமாகச் செய்துள்ளார். மற்றொரு தூணை அத்திப்பாக்கம் ஊரைச் சேர்ந்த இரண்டு பேர்கள் தானமாக அளித்துள்ளனர்.

ஒரு தூணை நெற்குன்றத்தைச் சேர்ந்த வாணியன் சீறாளன் மகன் மூன்று கழஞ்சு பொன் கொடுத்து இத்தூணைக் கொடையாக அளித்துள்ளார்.

நரசிங்க சதுர்வேதிமங்கலமான வாணியம்பாடி சபையார் ஓதித்தரையன் என்பவருக்கு நிலம் விற்பனை செய்து அதனைப் பதிவு செய்துள்ளனர். மேலும், அந்நிலத்தை விலைக்கு வாங்கி குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொண்டு வரிவிலக்கு அளிக்கப்பட்டு அதனையும் பதிவு செய்துள்ளனர்.

விருந்தின தேவருக்கு நிகழ்த்துவதற்கும் இரண்டு நந்தா விளக்குகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. வீராசானி அம்மையப்பன் என்பவன் அழகிய சோழ நல்லூரை வரிவிலக்குச் செய்து தானமாகக் கொடுத்துள்ளார்.

      சிற்றாமூர் என்ற ஊரைச் சேர்ந்த நந்திராயன் ஆன பள்ளி கொண்டான் கூத்தன் என்பவன் வாணியம்பாடி சபையாரிடம் பாலாற்றின் தென் கரையின் நிலங்கள் வாங்கி கொடை கொடுத்து அந்நில வருவாயைக் கொண்டு தர்மங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளான். ஆவை, “விண்ணாளத்திருவோலக்கம்” என்ற நிகழ்ச்சியின் போது இறைவனுக்கு மலர்களால் பந்தல் அமைத்ததை இச்செய்தியும் விளக்குகளுக்கு எண்ணெய் வழங்கியதைப் பற்றியும் மேலும், இறைவனுக்குத் திருவமுது படைத்தல் பற்றியும் குறிப்பிடுகின்றது.

      இக்கோயிலுக்கு ஒரு நந்தா விளக்கு எரிப்பதற்கு வாழைப்பந்தலைச் சேர்ந்த கண்ணந்தன் விருந்தினதேவர் மகன் பூமி தேவன் என்பவன் 96 ஆடுகளைத்தானமாக வழங்கியுள்ளான். இதனைப் பெற்றுக்கொண்ட சிவ பிராமணர்கள் விளக்கு எரிக்க ஒப்புக் கொண்டுள்ளனர்.

      நுளம்பராயன் என்பவன் அடி முதல் ஸ்தூபி மடிய கோயில் எழுப்பியுள்ளான். அவன் 10 பசுக்களும் ஒரு எருதும் கொடுத்து சிவ பிராமணர்களுக்கு விடுகாதழகிய ஈஸ்வரம் உடையார்க்கு மூன்று நந்தா விளக்குகள் எரிக்கவும் செய்துள்ளார். மேலும், சிவ பிராமணர்கள் ஊராண்டை மகன் கூத்தாடும் பிள்ளையாரிடம் 1.5 பொன் பெற்றுக்கொண்டு விருந்தின தேவருக்கு நந்தா விளக்கு எரிக்க ஒப்புக் கொண்டதாகச் செய்தி கூறுகின்றது.

      இராம தென்னாயக்கன் என்பவன் விருந்தின் நாயனார் கோயிலுக்குத் திருநாமத்துக் காணி நிலங்களும் தேவதான நிலங்களும் சர்வ மானியமாக வரிவிலக்கு செய்யப்பட்டு பல்வேறு வழிபாடுகளுக்கத் தானமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், இக்கல்வெட்டில் வாணியம்பாடி படுவூர்க் கோட்டத்து ஐம்புழுகூர் நாட்டு மதுராந்தக சதுர்வேதிமங்கலமான வாணியம்பாடி என்று அழைக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டிலுள்ள பேரரசுகளின் வரலாறும் அவர்கள் காலத்திய செய்திகளும்

பார்த்திவேந்திவர்மன்

இவர் சிறந்த நிர்வாகியாகவும் போர் வீரராகவும் திகழ்ந்தார். போர் மூலம் தன் ஆட்சி எல்லையை விரிவுபடுத்தி மக்களுக்குச் சிறந்த சீர்திருத்தங்களச் செய்தார். இவரது எட்டாவது ஆட்சியாண்டில் நிலத்திற்கு வரிவிலக்குச் செய்து அதனை விற்பனை செய்து அந்தத் தொகையை வாணியம்பாடி சபையாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வீரராசேந்திர சோழன் (கி.பி 1064 – 1070) இவர் தனது ஆட்சி காலத்தில் இவர் வீர சோழியம் என்ற நூல் இயற்றப்பட்டது. பாண்டிய நாடு, சோழ நாடு, கங்கை நாடு, தொண்டை நாடு பொன்ற நாடுகளில் உள்ள நிலங்களை சுமார் 4000 பிராமணர்களுக்குப் பகிர்ந்தளித்து விவசாய வளத்தை பெருக்கினர். இவர் காலத்தில் கோயிலிலுள்ள நடராசருக்கு நந்தா விளக்கு எரிக்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.

விக்கரம சோழன் (கி.பி. 1120-1136) ஆட்சி காலத்தில் சிதம்பரம் நடராசர் கோயிலுக்குப் பல தானங்கள் வழங்கப்பட்டுள்ளன. விருந்தின தேவர் கோயிலுக்குப் பல கொடைகளை அளித்துள்ளனர். போசள அரசர் விஸ்வநாதர் ஆட்சி காலத்தில் தொண்ட நாயக்கன் என்பவன் விருந்தின நாயனார்க் கோயிலுக்குத் திருநாமத்துக் காணியாக நிலங்களும் தேவதான நிலங்களும் சர்வ  மானியமாக வரிவிலக்கு அளித்து கொடையாக அளித்தச் செய்தி தெரிவிக்கின்றது.

வாணியம்பாடியில் உள்ள பிற கோயில்கள்

அருள்மிகு பெருமாள் கோயில்

வாணியம்பாடி இரயில் நிலையத்திலிருந்து மேற்கே 3 கி.மீட்டர் தொலைவில் பெரியப்பேட்டை என்ற இடத்தில் மேற்கு நோக்கியவாறு பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இது பாலாற்றாங்கரையின் கிழக்குப் பகுதியில் உள்ளது. இக்கோயிலின் நுழைவு வாயில் விசாலமாகவும் நீண்டும் காணப்படுகிறது. அலமன், அழகுப் பெருமாளை நோக்கியுள்ளார். கருவறையில் அழகுப் பெருமாள் சுமார் 8 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கின்றார்.

அருமிகு சுந்தரவல்லி தாயார் சந்நிதி

பெருமாளை நோக்கியபடி கிழக்கு முகமாக சுந்தரவல்லி தாயார் காட்சி தருகிறார். மேல் கைகளில் மலர்கள் இருக்க கீழ்க் கைகளில் அபய வரத முத்திரைகள் காணப்படுகின்றன.

அருள்மிகு இலட்சுமி நாராயணன் சந்ததி

வைணவத் திருத்தலங்களில் 108-வது திருத்தலமாக விளங்குகிறது. கருவறையில் ஆதிசேஷன் கடை விரிக்க இலட்சுமி மடியின் மீது தலை வைத்துக் கொண்டு பாம்பின் மேல் அமர்ந்து சங்குச் சக்கரம் ஏந்திய நான்கு கைகளுடன் காட்சியளிக்கிறார்.

      இக்கோயிலின் இராச கோபுரம் முதல் நிலையிலேயே நின்று விட்டது. இக்கோயில் உட்பிரகாரமும் வெளிப்பிரகாரமும் உள்ளன. இக்கோயிலின் கட்டிடக் கலையமைப்பு விசயநகர் காலத்தியது. இங்குள்ள தூண்கள், கல்வெட்டுகள், சிற்பங்கள் ஆகியவை விசயநகர ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தவை. ஆனைத்து தூண்களிலும் விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் வைகாசன ஆகம முறைகளில் பூசைகள் இரண்டு காலங்களில் நடைபெறுகின்றன. இக்கோயில் வடகலைப் பிரிவினரைச் சார்ந்தது.

பொன்னியம்மன் கோயில்

பொன்னியம்மன் திருக்கோயில் வாணியம்பாடி இரயில் நிலையத்திலிருந்து வடமேற்கில் சுமார் 2. கிலோ மீட்டர் தொலைவில் நகரின் நடுவில் அமைந்திருக்கிறது. 5. செண்டு நிலப்பரப்பில் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இவ்வூர் பாலாற்றங்கரையில் கீழ்ப் பக்கத்தில் இருக்கிறது. வெளி மண்டபத்தின் முன்புறம் மாரியம்மன் சந்நதியும்,  விநாயகர் சந்நதியும் உள்ளன. நாள்தோறும் ஒரு கால பூசை நடைபெறுகிறது. இக்கோயில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.

முடிவுரை

      இவ்வளவு சிறப்புகளையும் பெருமைகளையும் கொண்ட வாணியம்பாடி அதிதீசுவரர் கோயில் தற்பொது கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் வாணியம்பாடி நகர மக்களால் பின்பற்றப்பட்டு திராவிட மற்றும் ஆரிய பண்பாட்டை ஒருங்கிணைந்தவாறு சமயப் பண்பாடுகளுடன் சிறந்து விளங்குகிறது. இக்கோயில் தமிழக அரசின் இந்து சமய அறநிலை ஆட்சித்துறையின் கீழ் உள்ளது. கோயில் விழாக் காலச் சிறப்பு பூஜைகள் மற்றம் கோயில் பராமரிப்பு தமிழக அரசின் மானியத்தாலும் பொது மக்களாலும் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருவது பாராட்டிற்குரியது.

துணை நூல்கள்

1.     கலைவாணன் மா. வேலூர் மாவட்ட தொல்லியல் கையேடு, கல்;;;;வெட்டுக்கள் தொல்லியல் துறை, வேலூh (;.2011)

2.     அப்பாதுரை கா. தென்னாட்டு போர்க்களங்கள், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம.;(1961)