ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

குதிரைக்கல் இட்டேரி நடுகல்

முனைவர். போ.கந்தசாமி, உதவிப்பேராசிரியர், முதுகலை மற்றும் வரலாற்று ஆய்வுத்துறை, இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி, இராஜபாளையம். 31 Oct 2019 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்:
நடுகல் என்பது வீரமரணம் அடைந்தவர்களின் நினைவாக எழுப்பப்படுவது ஆகும்.  வீரத்தின் அடையாளமாக “வீரனுக்கு அமைக்கப்பட்ட கல்”; என்பதால் வீரக்கல் என்றும் இது அழைக்கப்படுகிறது. போரில் வீரமரணம் அடைந்தவரின் நினைவாகவும் ஆநிரைப் போர்களில் மடிந்துபட்ட வீரர்களின் நினைவாகவும், காட்டு விலங்குகளான புலி, யானை, காட்டுப்பன்றி போன்றவற்றிடம் இருந்து ஊரைக் காப்பாற்றி, தனது உயிரை விட்ட வீரர்களுக்காகவும் பெரும்பாலும் நடுகற்கள் எடுக்கப்பட்டுள்ளன. குதிரைவீரன் நடுகல்1 என்பது போரில் பகைவர்களிடம் சண்டையிட்டு உயிர்நீத்த குதிரை வீரர்களுக்காக எடுக்கப்பட்ட நடுகல்லே இக்கட்டுரையில் “குதிரைக்கல் இட்டேரி நடுகல்”; 2 என விவரிக்கப்படுகிறது.

திறவுச் சொற்கள்
நடுகல், குதிரைக்கல், வீரக்கல், இட்டேரிக்கல், கவுந்தம்பாடி

குதிரைக்கல் இட்டேரி ஓர் அறிமுகம்:-
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுப்பாளையம் என்ற ஊரில் குதிரைக்கல் இட்டேரி என்னுமிடத்தில் அமைந்துள்ள நடுகல்லே “குதிரைக்கல் இட்டேரி சாமி” என்று அழைக்கப்படுகிறது. இந்நடுகல் ஒரே பட்டைக்கல்லில் இரண்டு அடுக்கு நிலைகளில் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்நடுகல்லின் கீழ்(முதல்) அடுக்கில் இரண்டு வீரர்கள், இரண்டு குதிரைகள் மீதமர்ந்த நிலையில், வலது கையில் ஒரு வாளை உயர்த்தியவாறும், இடதுகையால் குதிரையின் கடிவாளக்கயிற்றைப் பிடித்தவாறும் உருவங்கள் காட்டப்பட்டுள்ளன. இதன் கீழ்ப்பகுதி சற்று மண்ணில் புதைந்துள்ளது. மேல்(இரண்டாவது) அடுக்கிலும்-கீழ் அடுக்கைப் போன்று- இரண்டு வீரர்கள் இரண்டு குதிரைகள் மீது அமர்ந்த நிலையில் வலது கையில் உள்ள வாளை உயர்த்திப் பிடித்தவாறும்;, இடது கையை குதிரையின் கடிவாளக் கயிற்றில் வைத்துள்ளவாறும் காட்டப்பட்டுள்ளன. பழங்காலத்தில், குதிரைகள் நன்கு பழக்கப்படுத்தப்பட்டுப் பெரும் போர்களிலும், சிறு சண்டைகளிலும் பயன்படுத்தப்பட்டு, வெற்றி, தோல்வியை நிர்ணயித்தன. போரில் குதிரைக்குரிய இன்றியமையாமையைப் பற்றித் திருக்குறள்(குறள் 814) கூறுகிறது.3 குதிரை காட்டும் வீரத்தைக் “குதிரை மறம்” எனப் புறத்திணையில் (புறம்:299) கூறப்பட்டுள்ளது.4 அதோடு மட்டுமல்லாமல் குதிரைச் சவாரியை மேற்கொள்ளும் வீரனும் வெற்றிக்குக் காரணமாக அமைவதை மறுக்க இயலாது. இது போன்று, ஒன்று தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், கோட்டேறியிலுள்ள ஒரு வீரக்கல்லில் வீரர்கள் குதிரைகளின் மீதமர்ந்து சண்டையிடும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது.5 குதிரைவீரன் நடுகல்6 என்று வழங்கப்படும் நிலையில், இந்நடுகல் அமைந்துள்ள இப்பகுதியைக் “குதிரைக்கல் இட்டேரி” என்று சுற்றுவட்டார மக்களால் அழைக்கப்படுகிறது.7 பொதுவாக, ஊருக்கு ஒதுக்குப் புறமான பகுதி செடி மற்றும் புதர்களால் சூழப்பட்டிருக்கும். பின்பு, மக்கள் அவ்விடத்திற்குச் செல்லச் செல்ல இயற்கையாக அங்குப் பாதை ஏற்பட்டு நடைபாதையாகவே அமைவதை “இட்டேரி” என்று கொங்கு நாட்டு மக்கள் குறிப்பிடுவர். குதிரை வீரர்க்கு எடுக்கப்பட்ட நடுகல் (அதாவது ‘குதிரைக்கல்’) அமைந்துள்ள பகுதியின் இட்டேரி என்பதால் இப்பகுதி “குதிரைக்கல் இட்டேரி” என்று ஊராரால் அழைக்கப்படுகிறது. தற்போது இப்பாதை விரிவடைந்து தார்ச் சாலை ஓரப் பள்ளத்தில் இந்நடுகல் அமைந்திருந்தும் இதனோடு ‘இட்டேரி’ என்ற பெயர் தொடர்ந்து குறிப்பிடப்படுகிறது.

தொடர்புடைய செவிவழிக் கதை:-
இந்நடுகல் தொடர்பாக பூசையுடன் “முன்னோர் வழிபாடு” செய்து வரும் கணேசன் என்பவர் ஒரு செவிவழிக் கதையைப்8 பின்வருமாறு கூறுகிறார்: பல நூறு ஆண்டுகளுக்கு முன், குதிரை வீரர்கள் சவாரி செய்யும் போது இங்கு (பி.மேட்டுப்பாளையம்) வந்தவுடன் எதிர்பாராத விதமாக குதிரை மீதமர்ந்திருந்த வீரர்கள் (குதிரையுடன்) விழுந்து விட்டதாகவும், விழுந்த இடத்திலிருந்து எழ முடியாதவாறு இருந்து விட்டதாகவும் பின்பு, அந்த இடத்திலேயே விழுந்த வீரர்கள் குதிரைமீதமர்ந்த நிலையில் கல்லாகிப் போனார்கள் என்று அச்செவிவழிக் கதை விவரிக்கப்படுகிறது. அந்த வேளையில், கடுமையாக மழை பொழிந்து சிறப்பு செய்ததாகவும் அவ்வாறு கல்லாகிப்போன அவ்வீரர்களே முன்னோர்கள் என்றும் கணேசன் கூறுகிறார்.

குதிரைக்கல் நடுகல் வழிபாட்டு முறை:-
கணேசன் குடும்பத்தினரும் அவருடைய சகோதரர்கள் மற்றும் படையாட்சி சமூகத்தைச் சேர்ந்த ஒரு சில குடும்பங்களும், இக்குதிரைக்கல் நடுகல்லை முன்னோர் வழிபாடாக9 வழிபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் ‘மாட்டுப்பொங்கல்’ அன்று இந்நடுகல்லை நீரால் கழுவி எண்ணெய்க்காப்பு இட்டு, சந்தனம், குங்குமப்பொட்டு வைத்து மாலை அணிவித்து புனுகு, சவ்வாது, கோரோசனம் மற்றும் பொங்கல் வைத்து, பூசை செய்து இந்நடுகல்லை மேற்படியார் வழிபட்டு வருகின்றனர். இது தவிர, இந்நடுகல்லை (“குதிரைக்கல் இட்டேரி”) வறட்சியான காலங்களில் ஊர் மக்கள் ஒன்று கூடி மழை வேண்டி வழிபாடு நடத்துவர். இவ்வழிபாட்டின் போது புனுகு, சவ்வாது, கோரோசனம் உள்ளிட்ட மூன்றையும் இந்நடுகல் மேல் பூசி வழிபட்டால் வீடு திரும்புவதற்கு முன்னரே மழை பெய்யும் என்று இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.10 மழைக் கடவுளான வருண பகவானை அழைக்க புனுகு, சவ்வாது, கோரோசனம் வைத்து வழிபடுவது போல இப்பகுதி மக்களால் இந்நடுகல் மழைக்கடவுளாகக் கருதி வழிபாடு செய்யப்படுவதை இதன் வாயிலாக அறியலாம். 
“பெருங்களிற் றடியில் தோன்றும் ஒரு கண்
இரும்பறை இரவல சேறி யாயின்
தொழாதனை கழிதல் ஒம்புமதி வழாது
வண்டு மேம்படு உம் இவ் அறநில யாறே
பல்லாத் திரள்நிறை பெயர்தரப் பெயர்தந்து
கல்லா இளையர் நீங்க நீங்கான்
வில் உமிழ் கடும் கணை முழ்கக்
கொல் புனற் சிறையின் விலங்கியோன் கல் லே”

                     - என்பது புறநானூற்றுப் பாடல் வரிகளாகும் (புறம்: 263) 
மேற்படிப் புறநானுற்றுப் பாடல் வரிகளும்11 அதன் பழைய குறிப்புரையும் அரிய செய்தியொன்றைத் தருகின்றன.  இதில் நடுக்கல்லைத் தொழுவதால், வழியில் ‘வண்டு மேம்படுதல்’என்பது காரிய நிகழ்ச்சி, “தொழுது போகவே கொடும் கானம் மழை பெய்தலான் குளிரும் என்பான்.” வண்டு மேம்படுதலாகிய காரியம் கூறினான் என்பது பழம் குறிப்புரை. இப்பாடலில் நடுகல்லைத் தொழுவதால், மழை பொழியும் என்னும் சங்ககாலச் சான்றோரின் உள்ளக் கருத்து உறுதியாகிறது. 

குதிரைப்போர் நடுகல்:-
ஈரோடு கலைமகள் கல்வி நிலைய தொல்லியல் அருங்காட்சியகத்தில்12 உள்ள நடுகற்களுள் ஒன்றான “குதிரைப்போர் நடுகல்லும்” இக்கட்டுரையில் இடம்பெறும் குதிரைக்கல் இட்டேரி நடுகல்லும் ஒத்த அமைப்பைப் பெற்றுள்ளன. கலைமகள் கல்வி நிலையத் தொல்லியல் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நடுக்கல்லானது கவுந்தப்பாடிக்கு அருகில் உள்ள பெருந்தலையூர்-மேட்டுப்பாளையத்தில் (பி.மேட்டுப்பாளையம்) இருந்து கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.13 இந்நடுக்கல்லில் குதிரை மீது அமர்ந்துள்ள நிலையில் நான்கு வீரர்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கீழ் அடுக்கில் வலது ஓரத்தில் ஒரு வீரன் தன் கையில் உள்ள வாளை ஓங்கிய நிலையில் காட்டப்பட்டுள்ளது.14 இதில் நான்கு குதிரைகளும் பாய்ந்து செல்லும் நிலையில் உள்ள இந்நடுகல் இக்கட்டுரை விளக்கும் நடுகல்லைப் போலவே அமைந்துள்ளது சிறப்புக்குரியது.

முடிவுரை:-
இக்கட்டுரையில் “குதிரைக்கல் இட்டேரி” நடுகல்லோடு தொடர்புடைய முன்னோர் வழிபாடும் மழைக் கடவுளாக இதனை ஊர் மக்கள் கொண்டாடும் நம்பிக்கை வழிபாடும், இந்நடுகல் அமைந்துள்ள இருப்பிடப் பெயரும் (இட்டேரி) கலைமகள் கல்வி நிலையத் தொல்லியல் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள, இதனை ஒத்த நடுகல்லையும் இணைத்து இக் கட்டுரை உரிய கள ஆய்வின் மூலம் வெளிப்படுத்துகிறது.

FOOT NOTES

  1. For further details Cf. Thennindhiya Nadukarkal (264).
  2. “Hero-stone becomes object of devotion” Indian express (dated 04.06.2010).
  3. For details on ‘Kudhiraikuthikkal’ Cf. Nadukal Vazhibaadu(140).
  4. Cf. Thennindhiya Nadukarkal (66-67).
  5. Cf. op.cited (264).
  6. Cf. News Item on Hero-stone in the Daily Thanthi (dated 10.04.2011)
  7. Cf. “Hero-stone becomes object of Devotion”. Indian Express (dated 04.06.2010).
  8. Personal discussion with the informant one Thiru M.S.Ganesan on 12.06.2010.
  9. Also Cf. “Hero-stone becomes object of Devotion”. Indian Express(dated 04.06.2010).
  10. Also Cf. Personal discussion with the informant one Thiru M.S.Ganesan on 12.06.2010.
  11. Cf. Seminar on Hero-stones (6).
  12. Cf. Acc.No.42 at the Kalaimagal Kalai Nilayam Archaeological Museum, Erode.
  13. Cf. Kalaimagal Kalaikkoodam(122).
  14. Cf. Kalaimagal Kalai Nilayam Archaeological Museum, Erode.

SELECT BIBLIOGRAPHY

  1. Kandasamy,B.             2006     HERO-STONES IN ERODE DISTRICT

M.Phil Dissertation (Unpublished)

Erode: Sri Vasavi College.

 

  1. Kasinathan, Natana.      1978    HERO-STONES IN TAMILNADU

Chennai: Arun Publications.

 

  1. Krishnamurthi,S.          2004    HERO-STONES (IN TAMIL)

Chidambaram: Meyyappan Pathipagam.

 

  1. Kesavaraj,V.                1978    HERO-STONES WORSHIP (IN TAMIL)

Madurai: Sarvodhaya Illakkiyapannai.

 

  1. Kesavaraj,V.                2008    SOUTH INDIAN HERO-STONES (IN TAMIL)

Chennai: Kaavya Pathipagam.

 

  1. Nagasuamy,R .           1974       SEMINAR ON HERO-STONES

Chennai: Department of Archaeology.

 

  1. Maheswaran,C.            1997      “A UNIQUE HERO-STONES IDENTIFIED FROM                  &                                ANAIKKATTI OF THE NILGIRIS”. IN THE

     Kumaravelu, M.                      DOWNSTOWN CHRONICLE,      

                                              Udhagamandalam.

 

Raju, S.                       2010      KALAIMAGAL KALAIKOODAM (IN TAMIL)                                                          Kalaimagal Kalvi Nilayam                                                                                          Erode