ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சிறு தெய்வவழிபாட்டு முறைகளில் மக்களின் எண்ணங்கள்

முனைவர் தே. அசோக் 06 Oct 2019 Read Full PDF

முனைவர் தே. அசோக்

விரிவுரையாளர்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

குமுளூர், இலால்குடி - 621 712.

 

ஆய்வுச்சுருக்கம்

மனித இனம் இயற்கையின் செயல்பாடுகளைக் கூர்ந்து நோக்கி அதன் சீற்றங்களைப் புரிந்துகொள்ள இயலாத நிலையில் அச்ச உணர்வோடும், தனக்கு உதவியவற்றினை எண்ணி நன்றி உணர்வோடும் செயல்பட்டதால் வழிபாடுகள் தோன்றின. மக்களிடம் தோன்றிய இனக்கலப்பால் வழிபாட்டு முறைகளில் மாற்றங்கள் தோன்றி சிறுதெய்வங்கள், பெருந்தெய்வங்கள் தோன்றின. நாட்டுப்புறத் தெய்வ வழிபாடு மரபுவழியாகக் கடைபிடிக்கப்பட்டு வரும் செயற்பாடாகும். தெய்வ வழிபாடுகளில் சிறுதெய்வ வழிபாடே எல்லா வழிபாட்டு முறைகட்கும் முந்தியதாய் இருக்கக்கூடும். நாட்டுப்புறமக்களின் வழிபாடானது சிறுதெய்வ வழிபாடாகும். இச்சிறுதெய்வ வழிபாட்டு முறைகளில் நேர்த்திக்கடன் செலுத்தும் பொருட்டு தீச்சட்டி எடுத்தல், முளைப்பாரி எடுத்தல், காணிக்கையிடுதல், பலியிடுதல், சாமியாடுதல், திருவிழா எடுத்தல் இந்த வழிபாட்டு முறைகள் மக்களின் மனநிலை வெளிப்படையாய் காட்டுகின்றன. இவற்றில் மக்களின் அச்சம், அன்பு, நன்றிப்பெருக்கு, எதிர்ப்பு, மனநிறைவு, மகிழ்ச்சி, சிந்தனைத்திறன் எனப் பலஎண்ணங்களும் உணர்வு நிலைகளும் வெளிப்பட்டு நிற்கின்றன.

திறவுச்சொற்கள்

நாட்டுப்புறவழிபாடு, சிறுதெய்வ வழிபாடுகள், நேர்த்திக்கடன், தீச்சட்டி எடுத்தல், பலியிடுதல், சாமியாடுதல்

           

முன்னுரை

மனித சிந்தனையின் முதன்மையான விழைவாக நிகழ்வது தெய்வ வழிபாடாகும். விலங்குகளாகத் திரிந்த மனித இனம் இயற்கையின் செயல்பாடுகளைக் கூர்ந்து நோக்கி அதன் சீற்றங்களைப் புரிந்து கொள்ள இயலாத நிலையில் அச்ச உணர்வோடும், தனக்கு உதவியவற்றினை எண்ணி நன்றி உணர்வோடும் செயல்பட்டதால் தோன்றியதே இயற்கை வழிபாடாகும். பிறகு கால ஓட்டத்தில் மனித வாழ்க்கை நாகரிக வளர்ச்சியும், பண்பாட்டு வளர்ச்சியும், பெறத் தொடங்கியது. மனிதவாழ்வின் முதன்மையான செயல்பாடுகளில் இறை வழிபாடுகள் குறிப்பிடத்தக்கதாக அமைகின்றன. தெய்வ வழிபாட்டு முறைகள் மக்களுடைய தெய்வ நம்பிக்கைகளுக்கு கொடுக்கப்படும் செயல் வடிவமாகும். மக்களையும், தெய்வத்தையும் இணைக்கின்ற பணியினை வழிபாட்டு முறைகள் மேற்கொள்கின்றன. தெய்வ நம்பிக்கையின் மையமாய் விளங்குவது வழிபாட்டு முறைகள் ஆகும். தெய்வத்தை எண்ணி தெய்வத்திற்காக மேற்கொள்ளப்படும் செயல்முறைகள்யாவும் வழிபாட்டு முறைகளாகும். நாட்டுப்புறமக்களின் சிந்தனை வளத்திற்கேற்ப வழிபாட்டு முறைகள் அமைந்துள்ளன. மக்களின் வழிபாட்டு முறைகள் ஒவ்வொன்றும் நம்பிக்கை அடிப்படையிலான கருத்துக்களைக் கொண்டு அமைந்துள்ளன. மக்களிடம் தோன்றிய இனக்கலப்பால் வழிபாட்டு முறைகளில் மாற்றங்கள் தோன்றி சிறுதெய்வங்கள், பெருந்தெய்வங்கள் தோன்றின. நாட்டுப்புறத் தெய்வவழிபாடு மரபுவழியாகக் கடைபிடிக்கப்பட்டு வரும் செயற்பாடாகும். தெய்வவழிபாடுகளில் சிறுதெய்வ வழிபாடே எல்லா வழிபாட்டு முறைகட்கும் முந்தியதாய் இருக்கக்கூடும். நாட்டுப்புறமக்களின் வழிபாடானது சிறுதெய்வ வழிபாடாகும். இச்சிறுதெய்வ வழிபாட்டு முறைகளில் நேர்த்திக் கடன் செலுத்தும் பொருட்டுத் தீச்சட்டி எடுத்தல், முளைப்பாரி எடுத்தல், காணிக்கையிடுதல், பலியிடுதல், சாமியாடுதல், திருவிழா எடுத்தல் என அமைகின்றன. அவ்வழிபாட்டு முறைகளை ஆராய்வது இவண் நோக்கமாக அமைகிறது.

           

நேர்த்திக்கடன் செலுத்துதல்

மக்கள் தங்களின் தேவைகளைப் பெறுவதற்காகச் செயல்பட்டாலும், அவற்றிலும் தெய்வ நம்பிக்கைகளை மேற்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். மக்கள் தங்களின் தேவைகள் நிறைவேறினால் சிலவழிபாட்டு முறைகளை எண்ணி, அவற்றை நிறைவேற்றுவதாகத் தெய்வத்திடம் வேண்டிக்கொள்கின்றனர். “நன்றிஉணர்வை இறைவனிடம் காட்டுவது வழிபாடாகிறது என்பர்.”1 இவை ‘நேர்த்திக்கடன்’ எனும் பெயரில் அழைக்கப்படுகிறது. நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதாக இறைவனிடத்தில் வேண்டிக் கொண்டால் எண்ணியவை நிகழ்ந்தேறும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.2

           “செய்பொருள் வாய்க்கெனச் செவிசார்த்துவோரும்

            ஐயமரடுகெனவருச்சிப் போரும்

            பாடுவாபாணிச்சீருமாடுவாரரங்கத் தாளமும்”(பரி. 8:107-109)

என்ற பாடலில் மகளிர் கடவுளை நோக்கித் தம் கணவர் பொருள் வளமும், வெற்றிவாய்ப்பும் பெற்றிட வேண்டும் என எண்ணி வழிபடுதலைக் குறிப்பிடுகிறது. அவ்வாறே இன்றும் மக்கள் தங்களின் வாழ்க்கைத் தேவையினை இறை நம்பிக்கையுடன் வேண்டுதல் புரிகின்றனர். அவ்வாறு எண்ணிய செயல் நிறைவு பெற்றவுடன் நன்றிப் பெருக்கோடு இறைவனுக்கு வழிபாடுகள் நிகழ்த்தி வணங்குகின்றனர். அவ்வகையில் நாட்டுப்புறமக்களின் நேர்த்திக்கடனாகத் தீச்சட்டி எடுத்தல், காவடி எடுத்தல், விரதமிருத்தல், ஆன்மிக நடைபயணம் மேற்கொள்ளுதல், காணிக்கைச் செலுத்துதல், அலகு குத்துதல், மொட்டை அடித்தல், முளைப்பாரி வளர்த்தல், தீமித்தல் போன்றவற்றை நிறைவேற்றுகின்றனர். தெய்வத்தின் மனதைக் குளிர்ச்சியடையச் செய்ய எண்ணிய தன்விளைவே மேற்கண்ட வழிபாடுகளுக்குக் காரணமாகும். இவை இறைவன் மீது பற்றுதலையும், அன்பையும் கொண்டு, மக்கள் தங்கள் உள்ளத்தையும், பொருளையும் அர்ப்பணிக்கின்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. வலியவரை மெலியார் பற்றுக் கோடாகக் கொண்டு செயல்பட்டால் வலியவரால் மெலியார்காக்கப்படுவர் என்ற கருத்தின் அடிப்படையில், இயற்கைப் பேராற்றலுடைய தெய்வத்தைப் பற்றுக்கோடாகக் கொண்டு செயல்பட்டால் தான் காக்கப்படலாம் என்ற எண்ணத்தில் இவ்வழிபாட்டு முறைகள் மக்களிடத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. ஆதலால் மேற்கண்ட தெய்வ வழிபாடுகளில் தன்னை வருத்தியும், தாழ்த்தியும், அன்பினை வெளிப்படுத்தியும் செயல்பாடுகள் அமைகின்றன. இவ்வாறான கருத்தின் அடிப்படையில் மக்களின் நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றப்படுகின்றன. தெய்வத்திடம் வேண்டிக் கொண்ட நேர்த்திக் கடன்களை நிறைவேற்றாமல் நிறுத்தி வைத்தால் தெய்வக்குற்றத்திற்கு ஆளாக வேண்டிய நிலை வரும் என்ற கருத்தும் மக்களிடையே காணப்படுகிறது.3

           ‘யாருகடன் நின்றாலும், மாரிகடன் ஆகாது’

என்னும் பழமொழி இதனடிப்படையில் தோன்றியதாகும். எனவே இறைவனுக்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் என்ற கருத்து மக்களிடையே காணப்படுகிறது. இதனால் எவ்வாறேனும் துன்பத்தை விலக்கி நன்மையினை அடைதல் வேண்டும் என்ற எண்ணத்தையும், இறையாற்றல் மீது கொண்ட நம்பிக்கையையும் மக்களின் வழிபாடுகள் வெளிப்படுத்துகின்றன.

           

பலியிடுதல்

இயற்கை வழிபாட்டிலிருந்தே ஏனைய வழிபாடுகள் தோற்றம் பெற்றன. ஆதலால் இயற்கைச் சீற்றத்தைக் கண்டு அஞ்சிய மனிதன் அதனைச் சாந்தப்படுத்தும் முயற்சியில் இரத்தப் பலியினை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இயற்கையின் சீற்றம் மிகுதியாக விளங்குவது போல் இறைவனும் சிலவேளையில் கொடூரமான நிலையை அடையும் எனக் கருதி இயற்கையையும், இறைவனையும் தொடர்பு படுத்தியிருக்கலாம். இறையாற்றல் இயற்கையை ஒத்ததாக விளங்கும் எனக் கருதியதன் விளைவே, அதனைச் சாந்தப்படுத்தும் பொருட்டு இப்பலியிடும் வழிபாட்டு நிலையாகும். மேலும் உயிர்சக்திப் பொருளாக விளங்கும் இரத்தத்தைப் பலியாகக் கொடுத்து இறைவனைத் தன் கட்டுக்குள் கொணர்ந்து பயனடையலாம் என்றும் மக்கள் கருதியிருக்கலாம். இவ்வாறான சிந்தனைகளில் பலியிடும் வழக்கம் பழங்காலம் முதலே இருந்து வருகிறது.

           “மதவலிநிலைஇயமாத்தாட் கொழுவிடைக்

            குருதியொடுவிரைஇய தூயவெள் ளரிசி

            சில்பலிச் செய்துபல்பிரப் பிரீஇச்”(திருமுருகு. 232-234)

என்ற சங்க இலக்கியப்பாடல் இறைவழிபாட்டில் ஆடு புலியிட்டத்தைக் குறிப்பிடுகிறது. மனிதன் தன் வாழ்வில் செய்த தவறுகளைப் பாவங்களாகக் கருதி, அதனை வேறுபொருளுக்கு மாற்றுகின்ற நிலையிலும் உயிர்ப்பலிகள் தோன்றியிருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. சான்றாக, ‘மோசே என்னும் தீர்க்கதரிசியிடம் இஸ்ரேலியர்களின் பாவ நிவாரண பலியாக வெள்ளாட்டுக் கடாவினைப் பயன்படுத்தும்படி கர்த்தர் குறிப்பிட்டதைப் பழைய ஏற்பாடு (லேவியராகமம் 16:22-23) கூறுவதாக எடுத்துரைப்பர்’4 இவ்வாறான கருத்துக்களின் அடிப்படையில் தோன்றிய உயிர்பலியிடுதல் வழக்கம் இன்றும் நாட்டுப்புறதெய்வ வழிபாடுகளில் முதன்மையான நிலையை வகித்து வருகின்றது. தெய்வங்களுக்குப் பலியிடும் முறையில் சிலவரைமுறைகள் காணப்படுகின்றன. பலியிடப்படுபவை ஆணினைத்தைச் சார்ந்தே இருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. ‘சமூக ஒடுக்குதலின் ஆவேச நிலையில் தெய்வமடைந்த பெண்கள் தங்களின் ஒடுக்கப்பட்ட ஆழ்மனவெளிப்பாடாக ஆண் குறியீடுகளை உயிர்ப்பலிகளாகப் பெற்றனர் என்றும், இதனாலே ஆண்மகன், ஆண் எருமை, ஆண் ஆடு, ஆண் கோழி என்ற வரிசை ஆண் குறியீடாய்ப் பலி கொள்ளப்பட்டது என்றும் பக்தவத்சலபாரதி குறிப்பிடுவார்.’5 தெய்வத்தை மையமிட்டும் பலிபொருட்கள் அமைவதாகக் கருதப்படுகிறது.‘இரத்தப்பலி என்பது பொதுவாக ஆண் விலங்குகளையும், பறவைகளையுமே குறிக்கும். உயிர்ப்பெருக்கத்திற்குக் காரணமான பெண் உயிர்களைப் பலி கொடுத்தால் தெய்வம் தண்டிக்கும் என்ற தொன்மையான நம்பிக்கையே ஆணினத்தைப் பலியிடுவதற்குக் காரணம் என்பார் தொ.பரமசிவன்.’6 இக்கருத்துப் பலியிடப்படும் பொருளின் தன்மையினை அடிப்படையாகக் கொண்டு கூறப்பட்டுள்ளது. தாய் தெய்வ வழிபாட்டினை மேற்கொள்ளும் சமூகத்தில், படைப்பாற்றல் தன்மையினைக் கொண்டுள்ளதாகக் கருதப்படும் பெண்ணினத்தைப் பலியிடுப் பொருளாகப் பயன்படுத்திடக் கூடாதெனக் கருதும் நிலையே ஆண் இன உயிர்களைப் பலியிட வழிவகுத்திருக்கவேண்டும். நாட்டுப்புற மக்கள் தவிர ஏனையோரிடத்திலும் பலியிடும் எண்ணம் இருப்பதை அறியலாம். பலியிடுதல் நேரடியாக அமையாமல் தாவர பலியீடாக மாற்றம் பெற்றுள்ளது. சான்றாகத், தெய்வவழிபாட்டில் எலுமிச்சை பழத்தில் குங்குமத்தைத் தடவி பிழிதலையும், பூசணிக்காயில் குங்குமத்தைத் தடவி உடைத்தலையும் உயிர்பலியிடுதலின் எச்சமாகக் குறிப்பிடலாம். இவ்வாறாக நாட்டுப்புற சமூகத்திலும், பிறசமூகத்திலும் பலியிடுதல் எண்ணம் அமைந்துள்ளதை அறியலாம். உயிர்ப்பு ஆற்றலை அளிக்கும் இரத்தத்தைப் பலியிடுதல் இறைவழிபாட்டிற்கு ஏற்புடையது எனக் கருதுதலே இவ்வழிபாட்டு முறைக்கு காரணமாகும்.

           

சாமியாடுதல்

நாட்டுப்புற வழிபாட்டு நிலைகளில் ‘சாமியாடுதல்’ குறிப்பிடத்தக்க நிகழ்வதாகும். இறைவனை மனித குணங்களோடு ஒப்பிடுவதும், மனிதனை சிலவேளைகளில் தெய்வநிலைக்கு உயர்வாகக் கருதுவதும் நாட்டுப்புறமக்களிடையே காணப்படும் நிலைகளாகும். மனிதன் கட்டுப்பாடுகளுடனும், தெய்வ சிந்தனையோடும் வாழ்ந்து வரும் வேளையில் பண்பாலும், ஆற்றலாலும் உயர்ந்து விளங்கும் தெய்வமானது மனிதர்களின் மீது வந்திறங்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.7 இவ்வாறு தெய்வம் மனித உடலில் வந்திறங்குவதாகக் கருதும் வேளையில் இயல்புக்கு மாறான தோற்றமும், செயல்பாடுகளும் அமைகிறது. இதனை நாட்டுப்புறத்தில் ‘சாமியாடுதல் என்றழைக்கின்றனர். ‘வாழ்வியல் சிக்கலைத் தீர்க்கவியலாத மனிதசமூகமும், எல்லையில்லா ஆற்றல் வாய்ந்த தெய்வமும் தளமாற்றத்தின் வழியாகத் தங்களது இடத்திலிருந்து ஒரு நேர்கோட்டில் இணைகின்றன என்றும், இவ்வாறான தருக்கவியல் செயல்பாடே தெய்வம் -மனிதன் இடையுறவாகச் சமயச் சடங்கில் உட்பொதிந்துள்ளது என்பர்’.8 இறைத் தொடர்பான சிந்தனைகளுக்கு ஆட்படுத்தப்படும் போது உளரீதியாகவும், உடல் ரீதியாகவும் மனிதனிடம் மாற்றங்கள் ஏற்படுகின்றன. உளரீதியான மாற்றமே மற்றவற்றிற்கு காரணமாக அமைவதாகவும் கருதலாம். ‘வினைகளுக்கு மூல காரணமாக இருப்பவை மனத்தில் தோன்றும் பற்றுக்கள் என்றும், இவை உள்ளத்தில் தோன்றி ஆழமாக இடம் பிடிக்கின்ற நிலையில் அப்பற்றுதலே தம்மை ஆட்படுத்தும் எனறு குறிப்பிடுவர்.’9 அவ்வடிப்படையில் இறைத் தொடர்பான சிந்தனைகள் மனிதனை ஆட்படுத்தும் வேளையில் சாமியாடுதல் நிகழ்வு நாட்டுப்புறங்களில் நடைபெறுகின்றது. இவ்வாறான வழிபாட்டுமுறை தமிழ்ச் சமூகத்தில் மரபு வழியாக இருந்து வருபவையாகும்.

           “பொய்யாமரபி னூர்முது வேலன்

            கழங்குமெய்ப் படுத்துக் கன்னந் தூக்கி

            முருகெனமொழியுமாயிற்”(ஐங். 245:1-3)

என்ற பாடல் முருகனாகிய தெய்வம் வேலைக் கொண்டு ஆடுபவனிடம் வந்திறங்கிய நிலையினைக் குறிப்பிடுகிறது. இப்பண்புகள் வழிவழியாக வருவதாகும். ‘தன் பெற்றோர், முன்னோர் ஆகியவர்களிடமிருந்து பிறப்பிலேயே ஒருகுழந்தை பெறும் உடற்கூறுகளும், உள்ளக் கூறுகளும், மனவெழுச்சிக் கூறுகளும் கொண்ட பண்புக் கூறுகள் அதன் பரம்பரை அல்லது மரபு நிலையில் வந்தவை எனக் கூறலாம்.’10 நாட்டுப்புறமக்கள் சாமியாடுபவர்களை மிகுந்த ஆற்றலுடையவர்களாக நம்புகின்றனர். இவர்களின் செயல்கள் இயல்புக்கு மாறாக அமைவதே இதற்குரியகாரணமாகும். கொத்தமங்கலம் ஊரில் நடைபெறும் ‘குட்டி குடித்தல்’ வழிபாடு நடைபெறுகிறது. குட்டிகுடித்தல் என்பது ஆட்டின் இரத்தத்தைத் தெய்வ அருள் வந்து ஆடுபவர் குடிப்பதாகும். மாவுடி கருப்பு, மதுரைவீரன், சோலைக்கன்னியம்மன் ஆகிய மூவருக்கும் ஒரே இடத்தில் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் திருவிழாவில் மருளாளியே குட்டி குடிப்பர்.11 இதற்கு முழுமையும் கருப்பு நிறமுடைய ஆடுகளையே பயன்படுத்துகின்றனர். கருப்பாக வழிபடப்படும் தெய்வத்திற்கு கருப்பு ஆடே ஏற்றது என மக்கள் கருதுகின்றனர். குட்டி குடித்தல் மனித இயல்புக்கு மிஞ்சிய ஆற்றல் உடையவர்களாலேயே நிகழ்த்த முடியும் என மக்கள் நம்புகின்றனர். இதனால் சாமியாடுபவர் ஏனையவர்களைவிட ஆற்றல் மிக்கவராகக் கருதும் நிலை நாட்டுப்புறமக்களிடையே காணப்படுகிறது.

தாய் தெய்வவழிபாட்டுச் சமூகத்தில் சாமி வந்து ஆடுபவர்கள் மிகுதியாகப் பெண்களாகவே விளங்குகின்றனர். பெண்கள் சாமியாடும் வேளையில் அவர்களின் தோற்றம், உடல் அசைவுகள், வார்த்தைகள் ஆகியவை வழக்கத்திற்கு மாறாக அமைகின்றன. இதற்கு உளவியல் ரீதியாகப் பெண்ணின் அழுத்தி வைக்கப்பட்ட எண்ணங்களே காரணமாகக் கருதப்படுகிறது. ‘பெண்கள் தலைவிரி கோலத்துடன் ஆடுதல் என்பது அமுக்கப்பட்ட நிலையிலிருந்து விடுபட்டுத் தங்களின் ஆவேசத்தைக் காட்டுவதே சாமியாடுதலாகும் என்றும், சாமியாடும் போது‘வாடா,போடா’போன்ற நிஜ வாழ்வில் பயன்படுத்த முடியாத சொற்களைத் தளமாற்றம் பெற்ற நிலையில் பெண்கள் பயன்படுத்துவதென்பது தங்களின் நிஜ வாழ்வின் ஒடுக்குதல்களைத் தற்காலிகமாக உணர்த்தும் மனவியல் செயல்பாடாகும் என்பர்.’12 இவ்வாறு சாமியாடுதலிலும் மக்களின் நம்பிக்கைகள் வெளிப்படுகின்றன. வழிபடப்படும் தெய்வம் மனித உடலில் சிறிது நேரம் வந்து தங்கும் வேளையில் அவர்கள் அளிக்கும் திருநீரும், வாக்கும் அருள் நிறைந்ததாக மக்கள் கருதுகின்றனர். இதனால் நோய் நீங்கும், வாக்குப்பலிக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். பேராற்றல் மிக்க இறைவனின் வாக்கு உறுதியாக நிகழும் என்பது மக்களின் எண்ணமாக விளங்குகிறது. இதன் வழியாக மக்கள் தெய்வம் மீது கொண்டிருக்கும் பற்றுதலை அறியலாம்.

           

திருவிழா எடுத்தல்

நாட்டுப்புற மக்களின் வாழ்வில் தெய்வ நம்பிக்கைகள் முழுமையாக நிரம்பியுள்ளன. ஆதலால் தங்களை வாழ வைப்பதே தெய்வத்தின் செயலாக மக்கள் கருதுகின்றனர். இவ்வாறான நிலையில் தனக்கு வாழ்வளிக்கும் இறைவனுக்கு நன்றிப் பெருக்குடன் மக்களால் எடுக்கப்பெறுவதே விழாவாகும். ‘மனிதன் தெய்வத்திற்கு நன்றிக் கடனாற்ற முற்பட்டு நிகழ்த்தப்பெறும் செயலே விழாவாகும் என்பர்.’13 மேலும் ‘மக்கள் பலர் கூடித் தெய்வங்களின் பொருட்டுச் செய்யும் சிறப்பே விழாவாகும் என்றும் குறிப்பிடுவர்.14 எனவே நாட்டுப்புறமக்கள் தெய்வத்தின் மூலமாக இதுவரை பெற்ற பயனிற்கு நன்றிக்கடன் செலுத்தும் நிலையிலும், பெறவேண்டிய பயன்களை வேண்டுதல்களாகக் கொண்டும் விருப்பத்தோடு மேற்கொள்ளப்படும் நிகழ்வே விழாவாகும். இறைத் தொடர்புடையதால் ‘திரு’ என்னும் உயர் அடைமொழியுடன் விழாவும் இணைந்து ‘திருவிழா’ என்னும் பெயரில் நாட்டுப்புற மக்களால் அழைக்கப்படுகிறது. தெய்வத்தை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் திருவிழாவால் தெய்வத்தின் உள்ளம் கனிந்து மென்மேலும் நன்மைகள் சமூகத்திற்கு பெருகும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.15 திருவிழா சமூகத்தில் ஒற்றுமையையும், மனமகிழ்ச்சியையும் அளிப்பனவாக அமைகிறது. சமயத்தின் கூறாக மட்டுமின்றி கலைகளின் வளர்ப்புப் பண்ணையாகவும், பண்பாட்டு உறவையும், ஒருமைப் பாட்டுணர்வையும் வளர்க்கும் முகமாக அமைகின்றன என்பர்.’16 இவ்வாறு நாட்டுப்புறச் சமூகத்தில் சமூகநிகழ்வாகத் திருவிழாக்கள் அமைகின்றன. திருவிழாவின் தொடக்கம் முதலாக நிறைவு பெறுதல் வரையும் தெய்வ நம்பிக்கைகள் தொடர்ந்தமைந்து மக்களின் பண்பாட்டைப் புலப்படுத்துகின்றன.

திருவிழாவின் தொடக்க நிகழ்வாக இறைவனிடம் விழா எடுப்பதற்கு உத்தரவு கோரப்படுகிறது. இறைவனின் அனுமதியிருந்தால் மட்டுமே விழாக்கள் நடைபெறுகின்றன. பூசாரியின் வழியாகத் தெய்வவாக்கு பெறுதல், பல்லியிடம் உத்தரவு கேட்டல் போன்ற வழிகளில் தெய்வ உத்தரவு பெறப்படுகிறது.17 இதன் பிறகு திருவிழா குறிப்பிடப்பட்ட தினத்திற்கு மூன்று அல்லது ஐந்து நாட்களுக்கு முன்பாக முகூர்த்தக்கால் நடப்படுகிறது. இதைத் தொடர்ந்து தெய்வகாரியம் சிறப்புற செய்து முடிக்க தெய்வத்தையே காத்தருளும்படி வேண்டி ‘காப்பு கட்டுதல்’ நிகழ்வு நடைபெறுகிறது. காப்பு கட்டிய பிறகு ஊரைவிட்டு வெளியில் செல்லுதல் நன்மையளிக்காது என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.18 அனைவரும் ஒற்றுமையாக இருந்து தெய்வகாரியத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும், யாரும் விலகியிருத்தல் கூடாதெனக் கருதும் நோக்கத்தில் இந்நம்பிக்கை தோன்றியிருக்கலாம்.

திருவிழாவின் முதன்மையான செயற்பாடாகக் கருதப்படுவது ‘கரகம் பாலித்தல்’ நிகழ்வாகும். ஊர்மக்கள் அனைவரும் அருகில் உள்ள நீர்நிலைக்குச் சென்று பூரணகும்பத்தில் நீரைக் கொண்டு வந்து ஊர்க்கோயிலில் வைத்து வழிபடுவர். பிறகு அக்கரகத்தில் தெய்வம் வந்து நிறைந்திருப்பதாக மக்களின் நம்பிக்கை அமைகின்றது.19 இது ஆதிமனிதனின் இயற்கை வழிபாட்டை நினைவு கூறுவதாக அமைந்துள்ளது. இயற்கை முழுதும் உறையும் இறைவன் இந்நீரிலும் வந்து தங்குவதாக மக்கள் கருதுகின்றனர். அதன்பிறகு சாமியாடுபவரின் தலையில் பூரணகும்பம் மாலை மரியாதையுடன் ஏற்றப்பட்டு, வீதிஉலா வரும் சாமியாடுபவர்களைத் தெய்வத்திற்கு ஒப்பாகக் கருதி வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகிறது. தெய்வத்தின் மீது நம்பிக்கைக் கொண்ட மக்கள், தெய்வம் தொடர்புடையவர் மீதும் மிகுந்த நம்பிக்கைக் கொண்டு செயல்படுகின்றனர். பின்னர் வழிபாடுகள் அனைத்தும் நிறைவு பெற்றவுடன் கரகம் பாலித்த புனித நீரை மீண்டும் நீர்நிலைகளிலே கலந்து விடுகின்றனர். இச்செயல் இயற்கையையும், இறைவனையும் தொடர்புபடுத்தும் செயலாகும். மேலும் நீரானது உயிர்களின் வாழ்விற்கு ஆதாரமாய் விளங்குவதால், இதனை இறைவழிபாட்டோடு மக்கள் ஒன்றிணைத்துச் செயல்படுகின்றனர். இதில் இயற்கையினை மையப்படுத்தி அமையும் மக்களின் செயல்பாடு குறிப்பிடத்தக்கதாகும். ‘இயற்கை முழுவதிலும் நிறைந்திருக்கும் ஆற்றலை ஒருகணம் நிலைபெறச் செய்து மீண்டும் இயற்கையிடமே கலந்து விடும் போக்கு நாட்டார் சமயத்தின் தொல்படிவப் (Archetypal) பொருண்மையாகும் என்பர்.’20 நீர்நிறைந்த கரகம் மீண்டும் நீர்நிலைகளிலே கலக்கப்படும் நிகழ்வோடு திருவிழா நிறைவுப் பெறுகிறது. இதனை மக்கள் ‘விடையாத்தி’ என்று குறிப்பிடுகின்றனர். இவ்வாறாகத்திருவிழாவின் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் மக்களின் கவனங்கள் செலுத்தப்பட்டுச் செயல்பாடுகள் கட்டமைக்கப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட தெய்வவழிபாடுகளில் மக்களின் எண்ணங்கள் வெளிப்பட்டுச் சமூகத்தின் பண்பாடுநிலை பெறுகிறது.

           

நிறைவாக

தொடக்க மனிதனின் சிந்தனை விளைவாகத் தெய்வவழிபாடுகள் தோன்றின. மக்களிடம் தோன்றிய இனக்கலப்பால் வழிபாட்டு முறைகளில் மாற்றங்கள் தோன்றி சிறுதெய்வங்கள், பெருந்தெய்வங்கள் தோன்றின. நாட்டுப்புறமக்களின் வழிபாட்டு முறைகளாகச் சிறுதெய்வ வழிபாடுகள் விளங்குகின்றன. மக்களையும், தெய்வத்தையும் இணைக்கின்ற பணியினை வழிபாட்டு முறைகள் மேற்கொள்கின்றன. தெய்வநம்பிக்கையின் மையமாய் விளங்குவது வழிபாட்டு முறைகள் ஆகும். மக்களின் நன்றிப் பெருக்கும், நம்பிக்கையின் செயல்வடிவமும் வழிபாட்டு முறைகள் தோன்றுவதற்குக் காரணங்களாக அமைகின்றன. இதில் நேர்த்திக்கடன் செலுத்துதல், பலியிடுதல், சாமியாடுதல் ஆகியவை நிகழ்த்தப்படுகின்றன. இந்த வழிபாட்டு முறைகள் மக்களின் மனநிலை வெளிப்படையாய் காட்டுகின்றன. இவற்றில் மக்களின் அச்சம், அன்பு, நன்றிப்பெருக்கு, எதிர்ப்பு, மனநிறைவு, மகிழ்ச்சி, சிந்தனைத்திறன் எனபலஎண்ணங்களும் உணர்வு நிலைகளும் வெளிப்பட்டு நிற்கின்றன. இவற்றில் மக்கள் தங்களின் அன்பைச் செலுத்தியும் தங்களை வருத்தியும், தெய்வத்தைத் தன் பக்கம் ஈர்க்கும் வகையில் செயற்பாடுகளை அமைத்துக் கொள்கின்றனர்.

           

சான்றெண் விளக்கம்

1. அரு.மருததுரை, நாட்டுப்புறப்பண்பாட்டுக் கூறுகள், ப.8.

2. சுப்பாத்தாள், கொத்தமங்கலம், இலால்குடி.

3. சின்னாத்தாள், காட்டூர், இலால்குடி.

4. ஆ.சிவசுப்ரமணியன், மந்திரம் சடங்குகள், ப.34.

5. சீ.பக்தவத்சலபாரதி, தமிழர் மானிடவியல், ப.199.

6. தொ.பரமசிவன், தெய்வங்களும் சமூக மரபுகளும், ப.118.

7. திருநாவுக்கரசு, நடராஜபுரம், இலால்குடி.

8. ச.பிலவேந்திரன், நாட்டுப்புறச் சமயம் பற்றிய தமிழர்தம் கோட்பாடுகள், ப.166

9. கரு.நாகராசன், தமிழரின் மனம் பற்றிய கோட்பாடு, ப.158.

10. எஸ்.சந்தானம், கல்வியின் உளவியல் அடிப்படைகள்,ப.50.

11. சுகுமார், அன்பில், இலால்குடி.

12. சீ.பக்தவத்சலபாரதி, தமிழர் மானிடவியல்,பக்.223-224.

13. ச.கணபதிராமன், திருநெல்வேலிப்பகுதியில் சிறுதெய்வவழிபாடு, ப.106.

14. மு.சண்முகம்பிள்ளை, சங்கத் தமிழரின் வழிபாடும் சடங்குகளும், ப.220.

15. திருநாவுக்கரசு, மணக்கால், இலால்குடி.

16. சு.சக்திவேல் நாட்டுப்புற இயல் ஆய்வு, ப.235.

17. சுகுமார், அன்பில், இலால்குடி.

18. சரசுவதி கொத்தமங்கலம் இலால்குடி.

19. இராணி,வாளாடி, இலால்குடி.

20. சீ.பக்தவத்சலபாரதி,தமிழர்மானிடவியல், ப.247.

           

துணைநூற்பட்டியல்

1. கணபதிராமன், ச.,
திருநெல்வேலிப் பகுதியில் சிறுதெய்வவழிபாடு,
திருமகள் நூலகம்,
33,ஊசிவன் கோவில் தெரு,
தூத்துக்குடி - 628 002,
முதற்பதிப்புமார்ச் 1986

2. சக்திவேல், சு.,
நாட்டுப்புறஇயல் ஆய்வு,
மணிவாசகர்பதிப்பகம்,
8ஃ7சிங்கர்தெரு,பாரிமுனை,
சென்னை- 600 108.
மூன்றாம் பதிப்புநவம்பர் 1995.

3. சண்முகம்பிள்ளை, மு.,
சங்கத் தமிழரின் வழிபாடும் சடங்குகளும்,
உலகத் தமிழாராய்ச்சிநிறுவனம்,
டிடிடி ஐ - அஞ்சல்,தரமணி,
சென்னை - 600 113.
முதற்பதிப்புஅக்டோபர் 1996.

4. சந்தானம், எஸ்.,
கல்விஉளவியலும் கல்விச் சமூகவியலும்,
பழனியப்பாபிரதர்ஸ்,
சென்னை- 600 014.
நான்காவதுபதிப்பு 1976.

5. சிவசுப்ரமணியன், ஆ.,
மந்திரம் சடங்குகள்,
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்,
சென்னை.
முதற்பதிப்பு 1988.

6. நாகராசன்,கரு.,
தமிழரின் மனம் பற்றிகோட்பாடு,
அன்புப் பதிப்பகம்,
316 என்.ஜி.ஓ. காலனி,
செங்கற்பட்டு - 603 001.
முதற்பதிப்புமே 1988.

7. மருததுரை,அரு.,
நாட்டுப்புறப் பண்பாட்டுக்கூறுகள்,
அருணாவெளியீடு,
4ஃ4 கிரிஸ்டல் பிளாசா,
22,நந்திகோயில் தெரு,
திருச்சிராப்பள்ளி - 620 002.
முதற்பதிப்புஏப்ரல் 2003.

8. பக்தவத்சலபாரதி,சீ.,
தமிழர்மானிடவியல்,
மெய்யப்பன் தமிழாய்வகம்,
53,புதுத்தெரு
சிதம்பரம் - 608 001.
முதற்பதிப்பு 2002.

9. பரமசிவன்,தொ.,
தெய்வங்களும் சமூகமரபுகளும்,
நீயுசெஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிட்,
41 - பிசிட்கோ, இன்டஸ்டிரியல் எஸ்டேட்,
சென்னை - 600 098.
முதற்பதிப்பு ஜனவரி 1995.

10. பிலவேந்திரன், ச.,
நாட்டுப்புறச் சமயம் பற்றியதமிழர்தம் கோட்பாடுகள்,
நாட்டுப்புறவியல் துறை,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர் - 613 005.
நவம்பர் 2002.