ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

பழந்தமிழர் பண்பாட்டில் தோல் ஓவியத்தின் பயன்பாடு

ஓவியர். கு. கவிமணி 06 Oct 2019 Read Full PDF

பழந்தமிழர் பண்பாட்டில் தோல் ஓவியத்தின் பயன்பாடு

ஓவியர். கு. கவிமணி  25 July 2019  கட்டுரை Read Full PDF

ஓவியர். கு. கவிமணி

உதவிப் பேராசிரியர்,

அரசு கவின்கலைக் கல்லூரி,

சென்னை- 3.

 

ஆய்வுச் சுருக்கம்:

தோல் ஓவியங்கள் வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் தற்காலம் வரை தமிழகத்தில் இருந்து வருகின்றன. தோல் மற்றும் தோல் சார்ந்த அறிவியல் தமிழ் சமூக வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு செய்துள்ளது. இக்கட்டுரையில் தோல், தோல் கைவினைப் பொருட்கள், தோல் ஓவியங்கள், தோல் பதனிடும் தொழில் நுட்பம், தோலில் வண்ணங்கள் தீட்டும் மரபு, தோல் ஓவியர்கள், தோல் ஓவியத்தின் பயன்பாடு, தோல் சார்ந்த தமிழ் சமூகத்தின் பண்பாடு ஆகியவை பற்றிய செய்திகளை இலக்கியத் தரவுகள், ஓவியத்தரவுகள், நூல்கள், களப்பணித் தரவுகளைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தோல் ஓவியம் மட்டுமல்லாமல் தோல் சார்ந்த கம்மியப் பொருட்களின் உற்பத்தி தமிழர் நாகரீகத்தின் அடையாளமாக விளங்கியதை இக்கட்டுரை மெய்ப்பிக்க விரும்புகிறது.

 

திறவுச் சொற்கள்:

தோல் ,ஓவியங்கள்,தமிழர்,தோல் கருவிகள்,போர்க்கருவிகள்

 

தமுன்னுரை

தோலின் பயன்பாடு என்பது தமிழகம் மட்டும் அல்லாது உலகளவில் மனித இன அறிவு வளர்ச்சியின் துவக்கத்திலேயே இருந்துள்ளது எனலாம். அதாவது விலங்கினங்களின் பச்சை மாமிசங்களை உண்ட ஆதிமனிதர்கள், பின்னாளில் மாமிசங்களை நெருப்பில் சுட்டு உண்ணத் துவங்கினர். அதேசமயம் விலங்கின் தோலில் இருந்த மாமிசங்களை நீக்கி தோலினை உலரவைத்து பயன்படுத்த துவங்கியதே மனித நாகரீக வளர்ச்சியின் துவக்கமாக இருந்துள்ளது. மனிதனின் முதல் நாகரீக கண்டுபிடிப்பே தோலின் பயன்பாடுதான், அதிலும் தோல் ஆடைதான் என்கிறது உலக வரலாறுகள்.1 ஏனெனில், கடுங்குளிரில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள குகைகளில் தங்கிய மனிதன் தோலை தன் உடலின் மீது போர்த்திக் கொண்டான். தோல் ஆடைகள் ஆதிமனிதர்களுக்கு போதிய உடல் வெப்பத்தைக் கொடுத்ததால் அவர்களுக்கு அதிக வலிமை கிடைத்தது. தனக்கு கிடைத்த அந்த வலிமை விலங்குகளின் தோலின் மூலம் கிடைப்பதாக நம்பிக்கைக் கொள்ளத் துவங்கினர்.

மரப் பொந்துகளில் வாழ்ந்த ஆதி மனிதர்கள் வெளியே வாழ ஆரம்பித்தனர். வெளிப்பரப்பில் தனக்கு தாம் வேட்டையாடிய விலங்குகளின் தோல்களே சக்தி தருவதாக உணர்ந்த ஆதிமனிதர்கள், விலங்குகளின் தோலினை சேகரித்து மரங்களின் மேலேயே தாங்கள் தங்கிட கொட்டகை (மேற்கூரை) கட்டி வசிக்க ஆரம்பித்தனர். மரப்பொந்துகள் கற்பதுக்கைகளை காட்டிலும், தோலினால் வேயப்பட்ட வீடுகளில் கிடைத்த ஆழ்ந்த உறக்கம் விலங்குகளின் சக்தி மீதான நம்பிக்கையை அவர்களுக்கு மேலும் அதிகரித்துள்ளது. ஆகவே அவ்விலங்குகளை தம் இனக்குழுவினை காக்கும் சக்தியாக வழிபட துவங்கினார்கள். அத்தகைய வழிபாட்டில் தங்களை காக்கும் விலங்குகளைப் போன்று வேடமிட்டு நடனமாடுவது, அவ்விலங்குகளின் வடிவங்களை வரைவுகளாக பாறைகளில் வரைந்து வழிபடுவது என காக்கும் விலங்கினங்களை போற்றவும் துவங்கினார்கள் பழந்தமிழர்கள். வழிபாட்டின் சடங்குகளுக்காக பாறைகளில் வரைந்த விலங்கின ஓவியங்கள் உலகம் முழுவதும் தற்பொழுது கண்டறியப்பட்டுள்ளதே இதற்குச் சான்று எனலாம்.2

தோல் பற்றிய ஆதிமனிதனின் நம்பிக்கை பின்னாளில், அதிகமாகி அனைத்துப் பயன்பாட்டிலும் தோலினை பயன்படுத்த துவங்கினார்கள். காலப்போக்கில் விரிவடைந்த துவக்க கால மனித நாகரீகமானது, தோலினைக் கொண்டு நீர் சேகரிக்கவும், காலில் கட்டி முட்களிடமும், கொடிய ஒட்டுண்ணிகளிடமிருந்தும் தன்னைக் காத்துக் கொள்ளவும் பயன்படுத்தியுள்ளனர். இவ்வாறாக உருவான தோலின் பயன்பாடு விரிவடைந்து, இரண்டாம் கட்ட நாகரீக வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றத் துவங்கியதை,வரலாற்றுக் காலங்களில் பழந்தமிழர் நாகரீக வளர்ச்சியாக தோல் சீலைகள், மெத்தைகள், பணப்பைகள், குதிரை சேனங்கள், போரில் வீரர்கள் பாதுகாப்புக்காக அணியும் மார்புக் கவசங்கள், விவசாயத்திற்குப் பயன்படும் நீர் இறைப்புக் கருவியான சால் அல்லது பரி, இசைக் கருவிகள், காலில் அணியும் செருப்பு எனப் பலப் பொருட்கள் தோலில் தயாரிக்கப்பட்டதிலிருந்து உறுதி செய்யமுடிகின்றது.3 இதற்குச் சான்றுகளாக நம்மிடையே நேரடியான தோல் பொருட்களும், சான்றுகளும் காணக் கிடைப்பதோடு, இன்றைக்கும் மேற்கண்ட பொருட்கள் தோலில் தயாரிக்கப்பட்டு நாம் பயன்படுத்துவதன் மூலம் அறிய முடிகின்றது.

தோல் ஓவியம்

பழந்தமிழர்கள், பாறைகளில் ஓவியங்கள் வரையத்துவங்கியதன் தொடர்ச்சியாக மரப்பட்டைகளில் ஓவியங்களை வரைந்துள்ளனர். பின்னர், தோலில் ஓவியம் வரையத்துவங்கினர். துவக்கத்தில் தனக்கு சக்தியை தரும் விலங்கினங்களை தோலில் ஓவியங்களாக வரைந்துள்ளார்கள். பழங்காலத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் ஏதும் கிடைக்கப் பெறாததால் அக்கால பாணியில் தோலில் ஓவியம் வரையப்பட்டுள்ளது. (ஓவியம்- 1) விலங்கின தோல்களை ஆடையாகவும், தங்கி வாழும் வீடுகள் கட்டவும் பயன்படுத்திய தமிழர்கள், தோலில் படம் வரையும் முறையை பல நூற்றாண்டுகள் வரை பயன்படுத்தியுள்ளனர்.4 குறிப்பாக துணியின் பயன்பாடு வருவதற்கு முன்பு வரை தோல்தான் தமிழர்கள் மத்தியில் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளது. துணியின் தயாரிப்புகள் அதிகமான பின்னர் தோலின் பயன்பாடு குறையத் துவங்கின எனலாம். தொன்மையான தோல் கலைப்படைப்புக்களை உருவாக்கிய போது அவற்றின் மீது அழகுக்காக அழகிய ஓவியங்களை வரைந்துள்ளனர். இவ்வாறு உருவான தோல் ஓவியத்தில் பின்னாட்களில் மனித உருவங்களையும் வரையத்துவங்கினர். ஆகவே நாம் தோல் ஓவியம் எனும் போது வெறுமனே மனித வரைவுகள் உள்ள ஓவியங்களை மட்டும் எடுத்துக்கொள்ளாமல் மேற்கண்ட தோலில் செய்யப்பட்ட கலைப் படைப்புக்கள் மீது வரையப்பட்ட ஓவியங்களையும் இங்கே நாம் தோல் ஓவியங்களாக கருத வேண்டியுள்ளது.

அ. தமிழ் இலக்கியங்களில் தோல் ஓவிய சான்றுகள்

தமிழ் இலக்கியங்களில் பரவலாக தோல் ஓவியங்கள் குறித்த செய்திகளைக் காணமுடிகிறது. சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, நெடுநல்வாடை, நற்றிணை உள்ளிட்ட பல இலக்கிய நூல்களில் தோல் ஓவியம் பற்றிய சான்றுகள் காணப்படுகின்றன. பழந்தமிழர் பயன்பாட்டுப் பொருட்களில் உதாரணமாக தோலினால் ஆன இசைக்கருவிகள், ஆடைகள், கைவினைப் பொருட்கள் ஆகியவற்றில் ஓவியங்கள் வரையப்பட்டும், அழகுபடுத்தப்பட்ட செய்திகள் காணக்கிடைக்கின்றன. அத்தகைய இலக்கியச் சான்றுகளைக் கொண்டு தோல்ஓவியங்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

 

அ.1. தோல் கருவிகளில் ஓவியம்

 

நற்றிணையில் சிறார்கள் விளையாட்டாக கொட்டி விளையாடுவதில் சிறிய பறையும் ஒன்று. இப்பறையை அவர்கள் தமது சிறிய தோல்களில் மாட்டியிருப்பர், பறையின் நடுவில் குருவியின் படம் வரையப்பட்டிருக்கும். சிறிய கோலினால், குருவியின் கண்ணின் பகுதியை அடிக்கும் போது இக்குருவியும் சேர்ந்து அடிபடுவது போன்று தோன்றும். இவ்வாறு செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள் விளையாடியதாக உவமையாக்குகிறார் முதுகூற்றனார்.

 

            " பெறுமுது செல்வர் பொன்னுடைப் புதல்வர்             சிறு தோட் கோத்த செவ்வரிப் பறையின்             கண்ணகத் தெழுதிய குரீஇ" (நற்.58:2;3)

 

அதேப் போல், தோலில் கடவுளர்களின் ஓவியங்களை வரையும் தொழில்நுட்ப ஓவியர்களும் இருந்த செய்தியை

 

            " வரம் அருளும் தெய்வ வடிவங்களைத் தீட்டும் தோல் ஓவிய வனைஞரும்""
(மணிமேகலை :28: 29- 61) இருந்துள்ளனர் என்பதை மணிமேகலை கூறுகிறது.

 

 

அ.2. யாழ் (வீணை)

 

யாழ் (வீணை) தயாரிப்பதற்கு பொன்னிறமான விலங்கின தோல்களை பயன்படுத்தியுள்ளனர். அளவில் பெரிய விலங்குகளின் தோலைப் பதப்படுத்தி, தோல் போர்வையாக உருவாக்கிப் பின்னர் வீணையின் மேற்பகுதியில் (பத்தலின்) வாயில் போர்த்தி பசைத் தடவி ஒட்டுவர், ஒட்டிய தோலின் மேல் அப்படியே சுள்ளாணிகளைத் தைத்தால் நாளடைவில் ஆணிகள் தளர்ச்சியுற்றுப் போர்வை கழன்று விடும். இதனைத் தவிர்க்க வெண்மையான யானைத் தந்தத்தை (ஓவியம் - 2) மெல்லிய பலகையாகச் செய்து, பசை இட்டு தோலிற்கு மேல் ஒழுங்குபட அமைத்தப் பிறகு துளையிட்டு சுற்றாணிகளை வைத்துப் மேல்புற பத்தல் வாயினைத் தோல் போர்வைக் கொண்டு நன்றாகத் தைத்துள்ளனர். இத்தகைய தோல் போர்வையை பச்சை என்றும் அழைத்துள்ளனர். யானைக் கொம்பு கிடைக்காத காலங்களில் மான் கொம்பையும் இம்முறையில் பயன்படுத்தி வீணைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.5

 

அ.3. யாழின் ஆணிகள் அழகுப்படுத்துதல் :

 

யாழின் மேல் தோலிலான போர்வையைப் போர்த்தியபின் அதன் மீது ஆணிகளை அடிக்க வேண்டும். அவ்வாறு அடிக்கும் போது திறந்த நிலையில் இருக்கும் துளையினுள் ஆணியை முடுக்கி மூடும் நிலையில், நண்டுகள் எப்படி வளைக்குள் நுழையும் பொழுது உடலைச் சுருக்கி கொண்டு கண்களை மட்டும் நிமிர்த்தி உருண்டை வடிவமாக பார்க்கிறதோ, அதே வடிவமைப்பில் யாழின் மீது தோல் போர்வையை வைத்து அடிக்கும் போது ஆணி அவ்வாறு தோல் கலைஞனால் வடிவமைக்கப்பட்டது. (ஓவியம்-3) இதனை,

 

            "அளைவாழ் அலவன் கண் கண் டன்ன             துளைவாய் தூர்ந்த துரப்பமை ஆணி"- பொருநராற்றுப்படை (9-10)

 

என்று பொருநராற்றுப்படை கூறுகின்றது. இத்தகைய கடினமான வடிவமைப்புப் பணியை தோல் தொழிலில் நன்கு கற்றறிந்த தோல் கலைஞர்களை கொண்டே செய்துள்ளனர் நம் முன்னோர்கள். மேலும் தோல் கலையில் சிறந்து விளங்கிய கலைஞர்களை ‘‘வல்லோன்”என்றப் பெயரில் அதாவது வல்லவன் என அழைத்துள்ளனர். இந்த செய்தியை, பதிற்றுப்பத்து பாடலில்

 

"எஃகுடை யிரும்பின் உள்ளமைத்து வல்லோன்சூடு நிலையுற்றுச் சுடர்விட்டு தோற்றம்" என்ற பாடல் மூலம் அறிய முடிகிறது.

 

ஆ. தோல் ஆடைகளில் ஓவியம்

 

தமிழ் சமூகத்தின் தொழில் நுட்ப அறிவையும் அழகியல் உணர்வையும் வெளிப்படுத்தும் விதமாக தோலில் பலவகைத் தன்மைகளோடு கூடிய உடைகளை உற்பத்தி செய்வதையும், வண்ணம் ஏற்றுதல், உடைகளில் பூ வேலைப்பாடு செய்தல் முதலியப் பல்வேறு நுட்பங்களை கையாண்டுள்ளதை குறிஞ்சி பாடல் தெரிவிக்கின்றது.

 

"நுண்வினைக் கச்சைத் தயக்கறக் கட்டி" (குறிஞ்சி- 125)

 

போர்வை தமிழர்களது உடை வகைகளில் ஒன்றாகும் என்பதை தொல்குடி மக்கள் பயன்பாட்டிலிருந்து இன்றுவரை அறியமுடிகிறது. குறிப்பாக, பழந்தமிழர்கள் குளிருக்கு இரவில் போர்த்திக் கொள்ளும் போர்வையாகவும், தரைகளில் அமரும்போது தரைவிரிப்பாகவும், தோலினால் ஆக்கப்பட்ட தடிமனான போர்வையைப் பெண்கள் பயன்படுத்திய செய்தியை பதிற்றுப்பத்து பாடல்- 74ல் காணமுடிகிறது. மேலும், பழந்தமிழர்கள் அப்போர்வைகளை உருவாக்கிய தொழில்நுட்பம் பற்றிய செய்திகளை நெடுநல்வாடை கீழ்க்கண்டவாறு விளக்குகிறது.

 

            "ஊட்டுறு பல் மயிர் விரை இ வய மான்             வேட்டம் பொறித்து வியன் கட் கானத்து            முல்லைப் பல் போது உறழ பூ நிரைத்து            மெல்லிதின் விரித்த சேக்கை" (நெடுநல். 128:131)

 

குறிப்பாக இப்பாடல் பல வண்ணங்கள் தீட்டப்பட்ட மயிர்களை உள்ளே வைத்துத் தைத்து அரிமா வேட்டை ஆடுதல் போன்ற ஓவியம் தீட்டி, அகன்ற இடத்தையுடைய காட்டில் முல்லை முதலானப் பல வகையான மலர்களின் ஓவியங்கள் நிரம்ப வரைந்தப் போர்வையை மென்மையாகப் போர்த்தப்பட்டதாக கூறுகிறது. இப்பாடல் மூலம் தோல் போர்வைகளில் ஓவியம் வரையும் முறை இருந்துள்ளதையும், முன்னரே குறிப்பிட்டது போல தோல் ஓவியம் குறித்த தொழில்நுட்ப அறிவை பழந்தமிழர்கள் பெற்றிருந்ததும் அறியமுடிகிறது.

 

ஆ.1. தோல் ஆடைகளில் -அலங்கார ஓவியம்

 

மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் மன்னர், மற்றும் அரசியருக்கு மெய்க்காவல் இருப்போர் சீருடை அணிந்திருக்க வேண்டும் என்பது விதி. அத்தகைய உடைகள் அணியும் போது மன்னரது உடையும் மெய்க்காப்பாளர்களின் உடையும் வேறுபட்டு இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதில் மெய்க்காப்பாளர்கள் உடல்முழுவதும் மூடியவாறு அணிந்திருந்த உடை "மெய்ப்பை சீருடை” என அழைக்கப்படிருக்கிறது.

 

இந்த"மெய்ப்பை"தோலினால் தயாரிக்கப்பட்டுள்ளதையும் அதில் அழகிய ஓவிய வரைவுகள் வரைவிக்கப்பட்டதையும் முல்லைப்பாட்டு எனும் நூல்

 

            மத்திகை வளை இய மறிந்துவீங்கு செறியுடை            மெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து (முல்லை. 59-60) என்றப் பாடலடியில் கூறுகிறது.

மேற்கண்டவாறு தோல் ஆடைகள் தயாரிக்கும் போது அதில் அழகை கூட்ட, ஓவியங்கள் வரைவதோடு மட்டுமல்லாமல், அவ்வாடைகளில் நவமணிகளைக் கோர்த்து அழகுபடுத்தும் மரபை பழந்தமிழ் தோல் தொழில்நுட்பக் கலைஞர்கள் பெற்றிருந்தனர் என்பதை பதிற்றுப்பத்து நூல்

 

            "புள்ளி இரலைத் தோல் ஊன் உதிர்த்துத்             தீதுகளைந்து எஞ்சிய திகழ்விடு பாண்டில்            பருதி போகிய புடைகிளை கட்டி            எஃகுடை இரும்பின் உள்ளமைத்து வல்லோன்            சூடுநிலை உற்றுச் சுடர்விடு தோற்றம்" (பதி.74:10:14 )

 

என்றப் பாடல் கூறுகிறது. மேலும் அப்பாடலில், புள்ளியினையுடைய மான்தோலைக் கொண்டு, அதன் உட்புறத்தே உள்ள தசையைக் களைந்து, அழுக்குகளையும் போக்கி, எஞ்சி நின்ற வட்டமாக அறுத்த தோலின் முனையை இணக்கமாகச் சேர்த்துக்கட்டி, பிறகு தோல் தொழிலில் வல்லவனால் ஊசியின் கூர்முனையைக் கொண்டு உட்புறத்தே அழகான மணிகளைப் பதித்து கலைநயமூட்டி உடல் மீது அணியக் கூடிய தோல் ஆடை உருவாக்குவது பழந்தமிழர் தொழில்நுட்ப மரபாக இருந்துள்ளதை நம்மால் அறியமுடிகின்றது.

 

ஆ.2. துறவிகள் போர்த்திய அலங்கரிக்கப்பட்ட மான் தோல்

 

சங்க காலத்தில் மன்னர், மக்கள் மட்டுமின்றி முனிவர்கள் போன்ற அனைவருக்குமான உடையாக தோல் ஆடைகள் பயன்பாட்டில் இருந்துள்ளன. இத்தகவலை பதிற்றுப்பத்துப் பாடலில் வேள்வி செய்யும் முனிவர்கள் மான் தோலைத் தூய்மை செய்து போர்த்திக் கொள்வதற்காக, மான் தோலின் சுற்றிலும், உள்புறமும் முத்தாலும், மணியாலும் அலங்கரிப்பட்டதோடு மட்டுமல்லாமல், தோலில் அழகுமிளிரச் சித்திரங்களை வரைந்துத் தோல் ஆடையாகச் செய்து அணிவார்கள் என பதிற்றுப்பத்து நூல் பாடல் வரிகள் 74 :10 - 16 கூறுகின்றன.

 

இ. குழந்தைப்பேறு பெற்றவர்களுக்கான தோல் மெத்தை

 

சங்க காலத்தில் பிள்ளையைப் பெற்ற எயிற்றி, (குழந்தைப் பெற்ற பெண்) மான் தோலாகிய படுக்கையிலே அப்பிள்ளையோடே முடங்கிக் கிடந்தாள் (குழந்தையோடு தாயும் படுத்து இருந்தாள்) என்று பெரும்பாணாற்றுப்படை பாடல் வரிகள் (89,90) விவரிக்கின்றன. அப்பாடலில், பிறந்த குழந்தையின் மெல்லியத் தோல் மென்மையாக இருப்பதற்கும், உடல் நலிந்த தாயிற்கு உடல் சூடு தணிக்கும் வகையில் மூலிகை வண்ணங்கள், தைலங்களைப் பயன்படுத்தி தோல் படுக்கையை மென்மையாகவும் அழகுடனும், மருத்துவ குணத்துடனும் உருவாக்கும் தொழில் நுட்பத்தை பழந்தமிழர் கொண்டிருந்ததை கூறுகிறது. இத்தகைய பழந்தமிழர் தோல் படுக்கை பயன்படுத்தும் மரபு தமிழகத்தில் ஆட்சிபுரிந்த தஞ்சை மராட்டியர்களும் பின்பற்றியதை பதினேழாம் நுhற்றாண்டைச் சேர்ந்த மராட்டியர்கால தாயுடன்சேய் என்ற ஓவியம் நமக்குத் தெளிவுப்படுத்துகிறது. (ஓவியம் -4)

 

இ.1. பல வண்ணங்களில் தயாரிக்கப்பட்ட சகலாத்து பஞ்சணை

 

பல வண்ண மயிர்களால் ஆன பஞ்சணை "சகலாத்து" பஞ்சணை என அழைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சகலாத்து பஞ்சணை என்பது அதிக வெப்பமுடையவை, குளிர், பனிக்கு வெது வெதுப்பைக்கொடுக்கும் பல நிறங்களிலும் தயாரிக்கக்கூடியவை. குறிப்பாக, வெண்மை, பசுமை (பச்சை), நீலம் ஆகிய நிற சகலாத்து பஞ்சணைகள் கண்ணிற்கு குளிர்ச்சியைத் தரும் (Cool colours) வண்ணங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பஞ்சணை என்று நெடுநல்வாடை பாடல் வரிகள் 125 முதல் 134 வரையில் தெரிவிக்கின்றன.

 

"புணர்ச்சியால் தூவிக்கு மென்மை பிறக்கும்" (பாடல் 189)என சீவகசிந்தாமணி பாடல் பஞ்சணைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. மேலும், தோல் பஞ்சணை குறித்து

 

           "தன் சேவலோடு புணர்ந்த அன்னப்பேடை            அப்புணர்ச்சியால் உருகி உதிர்ந்த            வயிற்றின் மயிர் - எஃகிப் பெய்த பல்வகை அணை" சிலப்பதிகாரம் (4:58)

 

என சிலப்பதிகாரம் தோலில் செய்யப்பட்ட பஞ்சணை தயாரிப்புப் பற்றி கூறுகிறது. மேற்கண்டப் பாடலின் விளக்கம் என்னவெனில், அரசமாதேவியின் கட்டிலைச் சுற்றிலும் முத்துக்கள் கோர்த்து தொங்கவிடப்பட்டிருந்தன. படுக்கையின் நடுவிலே சிங்கம் முதலிய விலங்குகளை வேட்டையாடுவது போன்றக் காட்சிகள் வரையப்பட்ட தோல் பதிக்கப்பட்டிருந்ததோடு, முல்லை முதலான மலர்கள் படுக்கையில் பரப்பப்பட்டிருந்தன. அன்னத்தின் இறகு (மயிர்கள்)களால் தைக்கப்பட்ட பஞ்சணை அமைக்கப்பட்டிருந்தது எனவாகும். சிலப்பதிகார பாடல் விளக்கத்தின் மூலம், அரசமாதேவியின் பஞ்சணையைச் சுற்றி இருந்தப் பொருட்கள் அனைத்தும் அரசியின் உடல் நலத்துடன் உளவியல் வளமைக்கும் உகந்ததாக உருவாக்கப்பட்டிருந்ததை அறியமுடிகிறது.

 

பஞ்சணையில் தொங்கவிடப்பட்ட முத்துமாலைகள், பஞ்சணையின் சூட்டைத் தனித்து குளிர்ச்சியைத் தர வல்லன. மேலும், வீரமும், தமது குலக்குறியும் வெளிப்படும் வகையில் புலிப்படம் வரைந்த தோல்கள் தைக்கப்பட்டிருந்தது எனவும், மனம் மகிழ்வுக்காக மலர்மாலைகள் தொங்கவிடப்பட்டதோடு, அன்னப்பறவையின் இறகுகள் மென்மையையும், இன்பத்தையும் தருவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பழந்தமிழர் மரபில் தோல் ஓவியங்கள் படுக்கை அறைகளிலும் பஞ்சணை கட்டில்களிலும் பொறிக்கப்பட்டிருந்ததையும் மேற்கண்ட பாடல்கள் மூலம் அறிய முடிகின்றது.

 

ஈ. போர்க் கருவிகளில் தோல் ஓவியம்

 

தூவியால் செய்யப்பட்ட அணையை மேம்பட விரித்து அதன் மேல் அணைகளையும் இட்டு, கஞ்சியிட்டு மணம் ஊட்டப்பட்ட தூய "கடகு" என்னும் போர்க் கருவியில் யானை, சிங்கம் முதலிய சித்திரங்கள் வரையப்பட்டிருந்ததை

 

            "காடெழுதினகடகு;             யானை, சிங்கம் முதலிய சித்திரமெழுதின கடகுமாம்"" சிலப்பதிகாரம் ஊர் காண்காதை (172-173)

 

என்றப் பாடல் வரிகளின் மூலம் வெளிப்படுவதை அடையாளம் காட்டியுள்ளார் உ.வே.சா. (ப.ஆ). அவர்கள் இங்கே கடகு பற்றிக்கூறும் சிலப்பதிகாரம் ஊர் காண்காதையில் கடகு என்பது தோலினால் செய்யப்பட்ட ஒருவகையான தாக்குதல் கருவி எனக் கூறுகிறார். அநேக வீரர்களின் தோல் கருவிகளில் ஓவியம் வரையும் முறை இருந்துள்ளதை இவ்விலக்கியக் குறிப்பு உணர்த்துகின்றது.

 

தோலைப் பயன்படுத்தி, வாள் செருகி வைக்கும் உறை வடிவமைக்கப்பட்டதை தோலின் கண் (உறையின் கண்) செறித்தல் இல்லாது வேலை உடையவன் அதியமான் என்கிறது புறநானூறு (98-10). இப்படி பல தரவுகளில் தோல் ஓவியம் வரைதல், தோல் வடிவமைப்பு பற்றி இப்பாடல்கள் தெரிவிக்கின்றன. சங்ககாலம் முதலே தோல் ஓவியங்கள் தமிழரின் நாகரீக அடையாளமாக இருந்துள்ளதை மேற்கண்ட இலக்கிய குறிப்புகள் மூலம் அறிய முடியும்.

 

உ.பெருங்கற்காலத்தில் தோலின் பயன்பாடு:

 

தோலின் பயன்பாடானது தமிழர்கள் மத்தியில் மட்டுமின்றி உலகம் முழுமைக்கும் இருந்து வருவதை நாம் அறிவோம். இதேபோன்று பெருங்கற்காலத்திலும், அதாவது மனித நாகரிக துவக்க காலத்தில் பெரும்பகுதி தோல் பயன்பட்டுள்ளதைப் பாறை ஓவியங்கள் வெளிப்படுத்துகின்றன. தமிழகத்தில் அதிகப் பாறை ஓவியங்கள் காணப்படும் தென்னார்க்காடு மாவட்டத்தில் திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள பாடியந்தலில் ஒரு குன்றின் மீது பல ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இங்குள்ள ஓவியங்களில் தோல் விரிப்புகள் பற்றிய ஓவியம் கிடைக்கப் பெற்றுள்ளது. தமிழகத்தில் கிடைக்கப் பெற்ற வேறெந்த பாறை ஓவியங்களிலும் இதுபோன்ற ஓவியம் கிடைக்கப்பெறவில்லை. இங்கு உள்ள ஓவியம் மான்தோல் போன்ற வடிவமுடைய ஒரு விரிப்பாக வரையப்பட்டுள்ளது. (ஓவியம் - 5) தற்காலத்திலும் துறவிகள், தோல் விரிப்பாக மான்தோல், புலித்தோலை பயன்படுத்துவதை நாம் அறிவோம். ஆனால் சமயம், நவீன சமூக கட்டமைப்புகள் ஏதும் கண்டறியாத பெருங்கற்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் தோல் விரிப்பாகவும், ஆடையாகவும் தோலை பயன்படுத்தியதையே இந்தப் பாறை ஓவியம் தெரிவிக்கின்றது. அவ்வாறு தோலை பயன்படுத்திய மனிதன், தோலில் பல வண்ணங்கள் தீட்டியும், புள்ளிகள், கோடுகள் வரைந்து அழகுப்படுத்தியும் ஆடையாகவோ அல்லது தரை விரிப்பாகவோ பயன்படுத்தியுள்ளதை இந்த தோல் ஓவிய வரைவுகள் நமக்குப் புலப்படுத்துகின்றன. தமிழர்கள் சமகால நாகரீகத்தின் தொடர்ச்சி என்பது பல ஆயிரம் ஆண்டுகளை கடந்து வந்தவை என்பதை இந்த தோல் விரிப்பு ஓவியம் மூலம் நாம் அறிய முடியும்.6

 

அதே போன்று கற்கால மனிதன் ஆடையாக, தரைவிரிப்பாக மட்டுமின்றி வீட்டின் மேற்கூரையாகவும் தோலைப் பயன்படுத்தியுள்ளதை மயிலாடும்பாறையில் கிடைக்கப் பெற்ற ஓவியம் (ஓவியம்-6) தெரிவிக்கின்றது.7 முக்கோண வடிவில் குச்சிகளை கொண்டு கட்டியபிறகு அதன்மீது மான் தோல் அல்லது பிற விலங்கினத் தோலைக் கொண்டு போர்த்தி கூடாரம் அமைக்கும் போது தோலின் மீது அலங்காரப் புள்ளிகள், வரைவுகளை வரைந்து கூடாரம் அமைத்து அதனுள் மனிதன் தங்கியிருந்ததை மயிலாடும்பாறை ஓவியத்தின் மூலம் உறுதி செய்ய முடிகின்றது. மேலும், தோலில் ஓவியம் வரைந்து அலங்காரம் செய்து ஆடையாக அணிவதோடு, தோலை அறுத்து வடிவமைத்து சால் (நீர் இறைக்கும் கருவி)ஆகவும் பெருங்கற்காலத்தில் பயன்படுத்தியுள்ளதை திருப்பத்தூர் வட்டம், பச்சூர் கிராமத்தில் தேன்கல்லு மலையில் கிடைக்கப்பெற்ற பாறை ஓவியத்தில் இத்தகைய நீர் இறைக்கும் சால் வரையப்பட்டுள்ள ஓவியம் தெரிவிக்கின்றது. (ஓவியம்-7) இவ்வாறாக பல்வேறு நிலைகளில் மக்களின் பயன்பாட்டுப் பொருளாக பெருங்கற்காலம் முதலே தோலின் பயன்பாடு இருந்துள்ளதை மேற்கண்ட பாறை ஓவியங்கள் சான்றளிக்கின்றன.8

 

 

ஊ. வரலாற்று காலங்களில் தோல் ஓவியம்

 

மரபு ஓவியங்களில் தோல் ஓவியச் சான்றுகளை முன்வைத்து இப்பகுதியில் தோல் ஓவியத்தின் பயன்பாட்டையும், அழகியல் சார்ந்த தோல் பொருட்களையும் வகைமைப்படுத்தப்பட்டுள்ளது. கி.பி. 7-ம் நூற்றாண்டில் சமண துறவியர்களால் வரையப்பட்ட சித்தன்னவாசல் (புதுக்கோட்டை அருகில்) குடைவரை மண்டபத்தின் மேல் விதான ஓவியத்தில் ஒரு தாமரை தடாகம் காட்சி வரையப்பட்டிருக்கும். (ஓவியம்-8) அதில் இடதுபுற மேல் பகுதியில் இரண்டு இளைஞர்கள் குளத்தில் உள்ள தாமரை மலர்களைப் பறித்து அழகிய வேலைப்பாடமைந்த ஒரு கூடையில் நிரப்புவது போன்ற காட்சி வரையப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மலர்களைப் பறித்து இடும் கூடை என்பது நன்கு பெரியதான நீர் இரைக்கும் பறி (சால்) போன்றதொரு வடிவமைப்பில் காணப்படுகிறது. அவர்கள் தோலினாலான பைகளைக் கொண்டே மலர்களை கொய்து நிரப்பியுள்ளனர் என கருதலாம். ஏனெனில் கி.பி. 10 ஆம் நுhற்றாண்டு வரை கடவுளர்களின் வழிபாட்டு பூக்கூடைகள் தோலினைக் கொண்டு தயாரிக்கப்பட்டதாக பல இலக்கியத் தரவுகளில் கூறப்படுவதால் இந்த கூடை ஓவியமும் தோல் கூடை என்றே கருதலாம். அக்கூடை மீது பல அழகிய தோரண வடிவங்கள் வரைந்து அழகுபடுத்தி பயன்படுத்தப்பட்டுள்ளதோடு 7-ம் நூற்றாண்டிலேயே இத்தகைய தோல் ஓவிய மரபு இருந்துள்ளதையும் இவ்வோவியம் இனம் காட்டுகிறது.

 

தோல் ஓவியக்கலை-ஓவியர்கள் :

 

தோல் ஓவியர்கள் பற்றியக் குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றன. சங்க காலங்களில் தொழிலின் அடிப்படையில் அவர்களது குடியிருப்புகள் இருந்ததை சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.             "சித்திரங்கள் வரைவாரும்            தையல் வேலை செய்வாரும்            தோலைத் தைத்து வலைசெய்யும் செம்மாரும்" (சிவப்பு 5:28-34) எனக் கூறுகிறது.

 

அதேபோல் சிற்பக்கலை வல்லுநரும் தையல் தொழில் செய்யும் செம்மாரும் என மணிமேகலை (28:29-61) பாடல் வரிகள் தெரிவிக்கின்றன. தோலின் துன்னர் என்பவர்களே "செம்மார்" என சூடாமணி கூறுகிறது. இச்செம்மான்களே விலங்கினின்று எடுக்கப்பட்ட தோலினைப் பதப்படுத்தவும், அத்தோலினைக் கொண்டு பல்வகைத் தோல் பொருள்களைத் தயாரிக்கவும் உரிய தொழில்நுட்பத்தினைக் கைவரப் பெற்றிருந்தார்கள் என்பதோடு, இவர்களை தோலின் துன்னரும் என அழைக்கப்பட்டதாக சிலப்பதிகாரம் (5:28-34) கூறுகிறது. மேலும் காவிரிப் பூம்பட்டினத்தினுள்ள மருவூர்ப் பாக்கத்திற்கு தோல்பொருள் கலைஞர்களான துன்னரும் அழைத்துச் செல்லப்பட்டதை

 

            "துன்ன காரரும் தோலின் துன்னரும்            கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப்            பழுதில் செய்வினைப் பால்கெழு மாக்களும்" - சிலம்பு - (16-34) எனக் கூறுகிறது.

 

மேலும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வரைகலை தொழிலை செய்தவர்கள் செம்மார்களே எனவும் இன்றைக்கும் செம்மான் என்ற இனப்பிரிவினர் செஞ்சியில் வாழ்ந்து வருவதாகவும் செம்மார் அல்லது செம்மான், செம்மீன் என்பது நட்சத்திர வகையின் பெயர்கள் என்றும் இந்தப் பெயரை கொண்டவர்கள் தற்பொழுதுள்ள அருந்தியர் (நட்சத்திரம்) இனத்தில் உள்ள ஓர் உட்பிரிவினர் என தம் செம்மான் நூலில் குறிப்புத்தருகிறார் ஆசிரியர் ராஜேந்திரன்.21

 

தமிழகத்திலிருந்து திருவிதாங்கூருக்குச் சென்று தம் தோல் சார்ந்த கலைப் பணியை அதாவது தோலில் ஓவியம் வரைதல், மணிகள் கோர்த்தல், வண்ணம் தீட்டி அழகுபடுத்துதல் உள்ளிட்டப் பணிகளை செம்மார்கள் செய்து வந்துள்ளனர். சங்ககாலத்திய இலக்கியங்களில் தோல் தொழிலில் ஈடுபட்டவர்கள் பற்றிய குறிப்பு காண கிடைக்கிறது. கட்டில்களை தோலால் பின்னும் தொழிலை செய்பவர்களை இழிசினன் என புறநானூறு (82 : 3) குறிப்பிடுகிறது. அதேபோல் பாவாணர் கூறும்போதும் ‘பரம்பர்’ என்னும் தாழ்ந்தப் பிரிவினரே தோல் தொடர்புடைய பணிகளைச் செய்தனர் எனக் கூறுகிறார். ஆனால் பரம்பர் என்பவர்கள் தாழ்ந்த பிரிவினர் அல்லர் என்பதும் கம்மாளர்களில் ஒரு பிரிவினரே என்பதை சேலம் மாவட்டம் அம்மன் கோவில் பட்டி என்னும் ஊரில் காணப்படும் கி.பி. நான்காம் நூற்றாண்டு கல்வெட்டு பின்வருமாறு தெரிவிப்பதிலிருந்து அறிய முடிகிறது.

 

            ‘பரம்பன் கோகூர் கிழார் மகன் வியக்            கன் கோபன் கணதேவன் தொட சுனை’

 

அதே சமயம் கம்மாளப் பிரிவில் தோல் தொழில் செய்யக் கூடியவர்களை ‘தோற்கொல்லன்" என அழைத்துள்ளதால் கம்மாளர்களும் தோல் ஓவியர்களாக இருந்ததை அறிய முடிகிறது.மேலும், தோல் தொழிலில் "உறைகாரர்" என்பவர்களும் இயவர் என்பவர்களும் ஈடுபட்டதாக சூடாமணி, பிங்கலம் மற்றும் திவாகாரம் நிகண்டுகள் கூறுகின்றன. இந்நிலையில் பிற்கால தமிழ் அகராதி நூலான ‘அபிதான கோசம்’ நூலில் சக்கிலியர்களைத் தோல்வினை மாக்கள் எனக் குறிப்பிடப்படுகிறது. (சக்கிலியர்கள் தற்பொழுது தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தவரில் ஒரு பிரிவினர் என்பது குறிப்பிடத்தக்கது.) தோல் தொழிலை பலதரப்பட்ட சமூகத்தினரும் செய்துள்ளது இச்செய்திகள் மூலம் தெரியவருகிறது.

 

சங்க காலங்கள் தொட்டே ஓவியர்களை "கண்ணுள் வினைஞர்" வித்தகர், தச்சன் என்றப் பொதுமைப் பெயரில் அழைக்கப்பட்டதாக இலக்கியக் குறிப்புக்கள் கூறுகின்றன. தோல் கைவினை கலையில் சிறந்து விளங்கியவனை "வல்லோன்"அல்லது வல்லவன் என்றும், தோல் ஓவியத்தில் சிறப்புற்று விளங்கியவர்களை தோல் தச்சன் என்றோ அல்லது தோல் வித்தகன் என்றோ அல்லது பச்சை வித்தகன் என்றப் பெயரிலோ அழைக்கப்பட்டிருக்க வேண்டும். 22

 

தோல் ஓவியர்கள் பிற கலைஞர்களிடமிருந்து தனித்து வாழ்ந்து இக்கலையை வளர்த்ததால் அவர்களை தனிப் பெயரிலும், செம்மான், துன்னர், சக்கிலியர், மன்புகர் பெயர்களை பயன்படுத்தி அழைத்திருக்க வேண்டும். துவக்கத்தில் தோல் ஓவிய கலைஞர்களை மட்டும் குறித்த இப்பெயர்கள், பின்னாளில் அவர்கள் சமூகப் பெயராகவும் மாறியுள்ளதை அறியமுடிகிறது.

 

முடிவுரை

 

தோல் பழங்காலத்தில் மனித சமூகத்தின் பாதுகாப்பு பெட்டகமாகவும், நம்பிக்கை, வழிபாடு, சடங்குகளின் மூலமாகவும் இருந்துள்ளது. வரலாற்று காலங்களில் தோல் கைவினைகள், தோல் பயன்பாடுகள் மனித நாகரீக வளர்ச்சியின் வேராகவும், பண்பாட்டு தரவுகளாகவும் இருந்துள்ளது. சமகாலத்தில் நவீனத்தின் கருப்பொருளாகவும், அடிப்படை பொருட்கள் தயாரிப்பிலும் புதுவடிவம் பெற்று இன்றும் தமிழர் பயன்பாட்டில் இருந்து வருவதுதான் தனிச்சிறப்பு. மராட்டிய தோல் பாவை கலைஞர்கள் பாவை கூத்திற்காக வரையப்படும் தோல் ஓவியங்களே நிகழ்கால தோல் ஓவியங்களின் சான்றாக கருதமுடிகின்றது. மறுபுறம், தோல் பொருட்களை தயாரிக்கும் ஆலையகங்கள் தமிழகத்தில் சென்னை, திருச்சி கோவை போன்ற பெருநகரங்களில் இயங்கி வருகின்றன என்றாலும், அவை நாம் குறிப்பிடும் தோல் ஓவியம் அல்லது தோல் கைவினைகள் பொருண்மைக்குள் அடங்காதவை. மனித ஆற்றலால் உருவாக்கப்படும் தோல் கைவினைகளில் வரையப்படும் ஓவியங்கள், அலங்கார வடிவங்களையே இங்கே நாம் ஆய்வு செய்துள்ளோம். தமிழகத்தில் தமிழரின் தோல் கைவினை, ஓவியங்கள் செழிக்க தொடர் முயற்சிகளும், தனிக்கவனமும் வேதவைப்படுகின்றது என்பதே இக்கட்டுரையின் மைய வேண்டுகோளாகும்.

 

அடிக்குறிப்பு

 

  • william Charlton, Leather currency, Page.328
  • நா.வானமாமலை, கலை வரலாறும் கதைப்பாடல் ஆய்வும், பல்கலைப் பதிப்பகம், சென்னை, 2013, பக்.43.
  • சக்தி சுப்ரமணியன், மனித இனம் தோன்றிய விதம், பாவை பப்ளிகேசன்ஸ், சென்னை, பக்.56.
  • முனைவர்.ஆ.மணவகழன், பழந்தமிழர் தொழில்நுட்பம், அய்யனார் பதிப்பகம், சென்னை, 2010,பக்.25
  • டாக்டர். புரட்சிதாசன், இன்பத்தமிழ் இசைக்கருவிகள், மணிமேகலை பதிப்பகம், சென்னை,1997. பக்.36
  • முனைவர். இராசு.பவுன் துரை, தமிழகப் பாறை ஓவியங்கள்,மணிமேகலைப் பதிப்பகம்: சிதம்பரம்; 2001, பக் : 94.
  • மேலது.பக்.
  • கே. ரமேஷ், ஆய்வுக் கட்டுரை, ஆவணம் 2010. பக் : 148.
  • South Indian inscriptions Vol – 8, g¡: 3.
  • மதிவண்ணன், ஆய்வுக் கட்டுரை, வெள்ளைக் குதிரை இதழ்.
  • அனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு, பகுதி-2,
  • William Charilton, Leather Currency. Page.319.
  • சு.இராசவேலு, கட்டுரைத் தொகுப்பு, தஞ்சைப் பெரிய கோயில் சோழர்கால ஓவியங்கள், தமிழ் பல்கலைக் கழகம் தஞ்சை.2010
  • மேலது
  • மதிவண்ணன், ஆய்வுக் கட்டுரை, வெள்ளைக் குதிரை இதழ்.2010.
  • தோல்பாவை (கட்டுரை), காவ்யா காலாண்டு ஆய்விதழ், சென்னை. 2015.
  • திரு.முத்து, தோல்பாவை கலைஞர் 14.03.2018 அன்றைய நேர்காணல்,சென்னை.
  • முதுமுனைவர், அறிவுடைநம்பி, தஞ்சை மராட்டியர் வளர்த்த நுண்கலைகள், கிரிஜா பதிப்பகம், புதுச்சேரி. பக் : 125-126.
  • சென்னை அருங்காட்சியக தகவல் கையேடு (இணையம்), 2013.
  • சென்னை அருங்காட்சியக சேகரிப்பு (தமிழக மரபு ஓவியங்கள் வகை), 2013.
  • ராஜேந்திரன்,செம்மான்,செஞ்சி, 2009. (கட்டுரை)
  • லீலாகணபதி, தமிழ்நாட்டு ஓவியங்கள் (கட்டுரை),தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்,2009.பக்.69.
  • க.ஜெயவீரதேவன். செருப்பு, பாவை பப்ளிகேசன். சென்னை. பக்: 9
  • முனைவர். பவுன்துரை, தமிழக ஓவியக்கலை மரபும் பண்பாடும், மெய்யப்பன்பதிப்பகம், பக் : 380
  • ஐ.ஜோப்தாமஸ், தமிழக ஓவியங்கள் ஓர் பார்வை, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 2014, பக்.172.
  • முத்துலட்சுமணராவ், தோல்பாவை கலைஞர் 22.05.2018 அன்றைய நேர்காணல், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.2018.
  • முனைவர். பவுன்துரை, தமிழக ஓவியக்கலை மரபும் பண்பாடும், மெய்யப்பன்பதிப்பகம், பக் : 382
  • தமிழ் நாட்டுப்புறக் கலைகள், தமிழ்ப் பண்பாட்டுத்துறை.சென்னை. 1923,பக் :334.
  • தங்கான் (80), (தோல் கலைஞர், சக்கிலியர் சமூகத்தை சேர்ந்தவர்). திருச்சி, த.முருங்கப்பட்டி. நேர்காணல்.
  • Mildred Archer, Company paintings P.40,Indian Museum (im) 355 to 484.
  • மேலது
  • மேலது
  • புத்தமித்ரன், கட்டுரை குறிப்பு, வெள்ளைக்குதிரை, நேர்காணல், மும்பை,2010.
  • South Indian Inscriptions Vol - 8 : 68

 

 

                                               (ஓவியம்-1, தோலில் வரையப்பட்ட விலங்கின ஓவியம்)

 

 

 

                                                (ஓவியம்- 2, தோல் போர்த்திய யாழ்கருவி)

 

 

                                                (ஓவியம்-3, நண்டின் கண்ணைப்போன்று (ஓவியம்- 4, தோல் மெத்தையில் குழந்தையுடன் தாய்) வடிவமைக்கப்பட்ட ஆணி)

 

 

                                                (ஓவியம்- 4, தோல் மெத்தையில் குழந்தையுடன் தாய்)

 

 

                                                (ஓவியம்-24 , தோல் ஊரல் போடும் பானை - சங்ககாலம் )

 

 

                                                (ஓவியம்-24 , தோல் ஊரல் போடும் பானை - சங்ககாலம் )

 

 

                                                (ஓவியம்-5 மான்தோல் விரிப்பு வேயப்பட்ட பாறைஓவியம்- பாடியேந்தல்)

 

 

                                                (ஓவியம்- 6, தோலில் வீடு பாறை ஓவியம்- மயிலாடும்பாறை)

 

 

                                                (ஓவியம்-7 நீர் இறைக்கும் சால் அல்லது பறி, பாறை ஓவியம்- பச்சூர் (திருப்பத்தூர்)

 

 

                                                (ஓவியம்- 8, தாமரைக்குளத்தில் பூத்த தாமரை மலர்களை                                                                                              தோல் பைகளில் சேகரிக்கும் சிறார்கள்- சித்தன்னவாசல்)