ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

தமிழகப்பழங்குடிகளின் தெருக்கூத்து அமைப்புமுறை Life CellOfBrahmi Numerals

முனைவர் ரே.கோவிந்தராஜ் 06 Oct 2019 Read Full PDF

முனைவர் ரே.கோவிந்தராஜ்

உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,

தியாகராசர் கல்லூரி, மதுரை -09

           

ஆய்வுச்சுருக்கம்

சங்க இலக்கியமான மலைபடுகடாம் இலக்கியம் கூத்தராற்றுப்படை என்று அழைக்கப்படுகிறது. கூத்து தமிழ்மக்களிடம் நீண்ட நாட்களாக வழங்கபட்டு வருகின்ற ஒரு கலை அம்சம். ஜவ்வாது மலைப்பகுதியில் வழங்கப்படும் கூத்தின் முறைகள் ஆய்வின் அடிப்படையில் தகவல்கள் தொகுக்கப்பட்டு அதன் அமைப்பினை விளக்குவது இந்த ஆய்வின் நோக்கமாகும். ஜவ்வாதுமலை வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பரந்து விரிந்துள்ள கிழக்குத்தொடர்ச்சி மலைபகுதியாகும். இம்மலைத்தொடர் கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையிலிருந்து தொடங்கி வடக்கே அமிர்தி வரை நீண்டுள்ளது. இம்மலைப்பகுதியில் பதினெட்டு நாடுகள் காணப்படுகின்றன. (இங்கு நாடு என்பது கிராம ஊராட்சியைக் குறிக்கிறது). அவற்றில் புதூர் நாடு, நெல்லிவாசல் நாடு, புங்கப்பட்டு நாடு, தென்மலை நாடு, முட்ட நாடு, முதலிய பகுதிகளில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கூத்துக்கலைஞர்கள் தெருக்கூத்தைச் சிறப்பாக நடத்திவருகின்றனர். இந்தத் தெருக்கூத்து முறையினை ஆராய்ந்து வெளிக்கொண்டு வரவேண்டியது காலத்தின் தேவையாகும்.

           

திறவுச்சொல்

பழங்குடி, மலையாளி, தெருக்கூத்து, ஜவ்வாதுமலை, கிழக்குத்தொடர்ச்சிமலை, கிருஷ்ணன்பிறப்பு, அர்ஜுணன்தபசு. இராவணன், வள்ளித்திருமணம்

           

பழங்குடி மக்களின் தெருக்கூத்து

தமிழகம் மேற்குத்தொடர்ச்சிமலை கிழக்குத்தொடர்ச்சிமலையென இரண்டுமலைத்தொடர்களைக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து குஜராத்மாநிலம் வரை சங்கிலித்தொடர் அமைப்பையொத்த நீண்டமலைத்தொடராக மேற்குத்தொடர்ச்சிமலை விளங்குகிறது. கிழக்குத்தொடர்ச்சிமலை அவ்வாறில்லாமல் தனித்தனி மலைகளாகக் (சேர்வராயன்மலை, கொல்லிமலை, பச்சமலை, ஜவ்வாதுமலை, ஏலகிரிமலை) காணப்படுகின்றன. அவ்வகையில் கிழக்குத்தொடர்ச்சிமலைகளில் வாழும் மக்கள் மலையாளி பழங்குடியினரென்று அழைக்கப்படுகின்றனர். மலையாளி என்ற சொல் மலையை ஆளுதல் (ஆளுபவர்) என்னும் பொருளைத்தருகிறது.

கொல்லிமலையில் செவ்விலக்கிய குறிப்புகள் காணப்படுகிறது. “செவ்வேல், முள்ளூர் மன்னன் கழறொடிக்காரி, செல்லா நல்லிசை நிறுத்த வல்வில், ஓரிக்கொன்று சேரர்க்கீத்த செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி- (அகம்.209) என்று அகநானூறும், “ஓங்கிருங்கொல்லிப் பொருநன், ஓம்பா வீகை விறல் வெய்யோனே”என்று (புறம்.152) புறநானூறும் கொல்லிமலை பற்றிய பதிவுகளைத் தருகின்றன.

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான மலைபடுகடாம் என்னும் நூலில் ஜவ்வாதுமலைப் பற்றிய பதிவுகள் காணப்படுகின்றன. வேலூர் மாவட்ட வனத்துறை கெஜட்டில் ஜவ்வாது என்பது சமஸ்கிருதச்சொல் அதற்கு யானைக்கூட்டம் (அ) மிருகக்கூட்டம் நிறைந்த மலை என்றபொருளுள்ளதை ஓய்வு பெற்ற அஞ்சல்துறை அதிகாரி அ.அண்ணாமலை என்பவரை நேர்காணல் கண்டபோது குறிப்பிட்டார்.

யானையென்றச் சொல்லும் கடாம் என்ற சொல்லும் (மலைபடுகடாம்) ஒரு பொருளைத் தருகின்றது. மேலும் மலைபடுகடாம் நன்னன் சேய்நன்னன் என்கிற குறுநில மன்னன் செங்கன் மாநகரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தான். அவன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக ‘நவிரமலை’ விளங்கியது என்றும் கூறப்படுகிறது. இவற்றை உறுதி செய்வதற்கு ஜவ்வாதுமலையில் புதூர், சேம்பறை, கீழூர், மேல்பட்டு நெல்லிவாசல் முதலான கிராமத்தில் கிடைத்த எழுத்துடைய நடுகற்களில் நவிரமலை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. எனவே ஜவ்வாதுமலை என்பது மலைபடுகடாம் குறிப்பிடும் நவிரமலையே என்பதனை உறுதிசெய்ய முடிகின்றது.

தொல்காப்பியத்தில் கூத்தர் (5), கூத்தர் (1) ஆகிய சொற்கள் பதிவாகியுள்ளன. மலைபடுகடாம் இலக்கியத்தை கூத்தராற்றுப்படை என்று அழைக்கப்படுகிறது. கூத்தின் பின்புலத்தில் இம்மலைப்பகுதியில் கூத்தனூர், கூத்தனேரி முதலான ஊர்பெயர்களும் இடம் பெற்றிருக்கின்றன. இத்தகைய ஜவ்வாதுமலை வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பரந்து விரிந்துள்ளது. இம்மலைத்தொடர் கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையிலிருந்து தொடங்கி வடக்கே அமிர்தி வரை நீண்டுள்ளது. இம்மலைப்பகுதியில் பதினெட்டு நாடுகள் காணப்படுகின்றன. (இங்கு நாடு என்பது கிராம ஊராட்சியைக் குறிக்கிறது). அவற்றில் புதூர்நாடு, நெல்லிவாசல் நாடு, புங்கப்பட்டுநாடு, தென்மலைநாடு, முட்டநாடு, முதலிய பகுதிகளில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கூத்துக்கலைஞர்கள் தெருக்கூத்தைச் சிறப்பாக நடத்தி வருகின்றனர். இந்தத்தெருக்கூத்து முறையினை இக்கட்டுரை விளக்குகிறது.

           

1. தெருக்கூத்துநிகழ்த்தும் இடம்

ஜவ்வாது மலையிலுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஊர்மந்தை என்னும் பொது இடம் அமைந்திருக்கின்றது. ஊரில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் அவ்வூர்மந்தையிலேயே நிகழ்கின்றன. “மலைக்கிராமங்களில் மந்தை என்னும் பொது இடம் உண்டு. அவ்விடம் இருநூற்று ஐம்பதுபேர்கள் அமரும் அளவு இடஅளவைக் கொண்டது. அவ்விடத்தில் வலிமையான மரங்களைக் கொண்டு பந்தல் அமைக்கப்படுகிறது. பந்தலின் மேற்புறம் மூங்கில்கள் பரப்பப்பட்டு வெம்மைத்தன்மை மிக்க பஞ்சீட்டை எனும் இலை கொண்டு மூடப்படுகிறது”. அவ்வாறு மூடப்பட்ட அமைப்பை பந்தல் என்று அழைக்கப்படுகிறது. இப்பந்தலில் கீழ்தெருக்கூத்து நிகழ்த்தப்படுகிறது.

           

2. நடிக்கும்இடம்

தெருக்கூத்துக்காக அமைக்கப்பட்ட பந்தலில் தெருக்கூத்து நிகழ்த்துவதற்கான இடம் பதினாறுக்குப் பதினாறு என்னும் அடியளவைக் கொண்டதாக அமைக்கப்படுகிறது. நடிக்கும் இடத்திற்குப் பின்புறம் திரைச்சேலை கட்டப்படுகிறது. கலைஞர்கள் திரைக்குப் பின்புறம் இருந்து வந்து நடிக்கின்றனர்.

           

3. இசைக்கருவிகள்

தெருக்கூத்து நிகழ்த்துவதற்கு மிருதங்கம், ஆர்மோனியம், தாளம், குழல் முதலான இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. மலைக்கிராமங்களில் உள்ளவர்கள்நீண்டகாலமாகக் கலையை நிகழ்த்தி வருவதனால் இசைக்கருவிகளை வடிவமைப்பிலும் இசைப்பதிலும் தேர்ந்தவர்களாக இருக்கின்றனர். தெருக்கூத்து நிகழ்வதற்கு மிருதங்கம் எனும் இசைக்கருவி மிக முக்கியமானது. பலாமரம் குமுளாமரத்தில் மிருதங்கம் செய்யப்படுகிறது. இது பற்றி தகவலாளர் தமிழரசன் கூறுகையில் மலையிலுள்ள பலவகையான மரங்களில் மிருதங்கம் செய்யப்படுகிறது. ஆனால் பலாமரம் அல்லது குமுளாமரத்தில் செய்யும் மிருதங்கம் நீண்டநாள் இருப்பதோடு இசையையும் நிறைவாகத் தருகின்றது என்று குறிப்பிடுகிறார். ஹார்மோனியம் என்னும் இசைக்கருவியும் தெருக்கூத்தில் இன்றியமையாததாகும். இவ்விசைக்கருவியும் மரத்தில் செய்து பின்னர் இசைக்கட்டைகள் பொருத்தப்படுகிறது. வேடம் புனைந்து கூத்து நிகழ்த்துபவர் பாடல் பாடுவர். அவரைத் தொடர்ந்து மற்றக்கலைஞர்களும் பின்பாட்டுப்பாடுவார்கள். அவ்வாறு பாடும் பின்பாட்டுக்கேற்ப குழல் எனும் இசையும் இசைக்கப்படுகிறது. இவ்வாறு இசைக்கப்படும் குழல் மூங்கிளால் செய்யப்படுகிறது. தாளம் எனும் இசையும் இசைக்கப்படுகிறது. இது இரும்பால் செய்யப்படுகிறது. மேற்கண்ட இசைக்கருவிகளை இசைப்பதில் ஜவ்வாதமலை கிராமங்களில் பெரும்பாலான நபர்கள் தேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள் என்று குறிப்பிடுகிறார்.

           

4. திரைஅமைப்பு

தெருக்கூத்து எளிமையான இட அமைப்பினையும் திரை அமைப்பினையும் கொண்டதாகும். தெருக்கூத்தாடும் இடத்தில் ஏழுக்குபத்தடி என்னும் அளவில் திரைச்சீலை கட்டப்பட்டிருக்கும். திரைக்கு முன்பு கட்டில் போடப்பட்டு அதில் இசைக்கலைஞர்கள் அமர்ந்து இசைக்கருவிகளை இசைப்பார்கள். பத்துக்குப்பத்து அளவு கொண்ட இடம் கூத்தாட ஒதுக்கப்படுகிறது.

மேடையில் இடப்பட்டுள்ள திரைக்குப் பின்பு ஒப்பனை நடைபெறும். தமிழகத்தின் பிறமாவட்டங்களில் குறிப்பாகத் தென்மாவட்டங்களில் நடைபெறும் மேடை நாடகங்களில் பயன்படுத்தப்படும் திரைவகைகள் தெருக்கூத்தில் பயன்படுத்தப்படுவது இல்லை. வெண்மை நிறத்திரை பின்னணியாக அமையத் தெருக்கூத்து நடைபெறுகிறது.

           

5. தெருக்கூத்துவிளக்கம்

புதூர் நாட்டை அடுத்த வழுதலம்பட்டு கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. இக்கோயிலில் இரவு நிகழ்ச்சியாகத் தெருக்கூத்து நிகழ்த்தப்படுகிறது. மாதந்தோறும் தெருக்கூத்தாடும் மலைகிராமங்கள் மாதத்திற்கு ஒரு கிராமம் வீதம் இக்கோயிலில் தெருக்கூத்து நடத்துகின்றனர். அந்நாளில் அனைத்து ஊர்மக்களும் கோயிலில் நடக்கும் தெருக்கூத்தில் பங்கு கொள்கின்றனர். (களஆய்வு நாள் 15.07.2015) மாதந்தோறும் தெருக்கூத்து நடத்தப்படுவதற்குப் புராணத்தொன்மம் தொடர்பான கதை ஜவ்வாது மலை மக்களின் வாழ்வியலில் நிலவி வருகிறது.

தெருக்கூத்திற்கான விளக்கம் குறித்துத் தகவலை நடுமொட்டையக்காளி அவர்களிடம் பேட்டி கண்டபோது “தில்லையில் ஒருநாள் சிவனுக்கும் பர்வதிக்கும் கூத்தாடுவதில் சிறந்தவர் யார் என்பதற்கான போட்டிவந்தது. தேவர்கள் சூழ்ந்த மேடையில் சிவனும் பார்வதியும் கூத்தாடினார்கள். இவ்விருவரும் கூத்தாடுவதற்கு, கிருட்டிணர் மிருதங்கம் இசைத்தார். இக்கூத்தாட்டத்தில் பார்வதி வெற்றி பெறுவதற்கான அறிகுறி தோன்ற, இதனைக்கண்ட கிருட்டிணர் பார்வதி வெற்றி பெற்றால் சிவனுக்கு இழுக்காகுமே என்று தான் அணிந்திருந்த குண்டிலத்தைக் கீழே தவறவிட்டார். மிருதங்கம் இசைத்துக் கொண்டே குண்டிலத்ததை நாவால் எடுக்கமு யற்சிக்கிறார். தாளம் மாறுகிறது, தாளம் மாறியதும் சிவன் கிருட்டிணரைக் கவனிக்க, சிவபெருமானிடம் ஒரு காலை மேலே தூக்கி ஆடுமாறு சைகை செய்கிறார். அவ்வாறே சிவனும் ஆட, தேவர்கள் சூழ்ந்த மேடையில் பார்வதி அவ்வாறு ஆட இயலாமல் போகவே, சிவன் வெற்றி பெறுகிறார். கோபம் கொண்ட பார்வதி, இனிவரும் காலத்தில் கூத்தாடுபவர்கள் தெருவில் நின்று ஆடட்டும் என்றும் அவ்வாறு ஆடுபவர்களுக்கு அருள் கிடைக்கும் என்றும் கூற, இதனைத் தேவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்”இப்புராணக்கதையே தெருக்கூத்துக்கான காரணம் என்று கூறினார். ஆயினும் களஆய்வில் தெருக்கூத்தின் தோற்றத்திற்கான சரியான வரையறை கிடைக்கப்பெறவில்லை.

           

6. தெருக்கூத்தின்தொடக்கம்

தெருக்கூத்து இரவு ஒன்பது மணியளவில் தொடங்குகிறது. தெருக்கூத்தின் தொடக்கததில் இசைக்கருவிகள் மட்டும் இசைக்கப்படுகிறது. நாடக ஆசிரியர் மலைக்கிராமத்தில் இருக்கும் தெய்வங்களை வாழ்த்திப்பாடிய பின்பு நாடக ஆசிரியர், இன்று நாங்கள் கூத்து நிகழ்த்துகிறோம். இதில் சொல்குற்றம், பொருள்குற்றம், தாளக்குற்றம், மிருதங்கக்குற்றம் எனக் குற்றங்கள் இருப்பின் தங்கள் வீட்டில் சிறுபிள்ளைகள் தவறு செய்தால் எவ்வாறு பொறுத்துக்கொள்வீர்களோ அதுபோல் ஏதேனும் குற்றம் இருப்பின் அதனைப் பொறுத்துக்கொள்ளவேண்டும் என நாடகக் (கூத்துக்) குழுவின் சார்பாக உங்களை வணங்கிக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியபின் முறைப்படி கூத்துத்தொடங்கும். கூத்தின் தொடக்கமாக நகைச்சுவை நடிகரான பபூன் மேடைக்கு வந்து கூத்து தொடரும் என்று அறிவிக்கக் கூத்து நிகழும்.

தெருக்கூத்தில் நகைச்சுவைக் கலைஞரான பபூனின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். தெருக்கூத்துக் கதையைச் சரியான தொடர்ச்சியுடன் நடத்திச் செல்பவராக, பபூன் அறியப்படுகிறார். பபூனுக்கு “சேவகன், கட்டியங்காரன், அலங்காரம்செய்பவன், அகடன், விகடன் உள்ளிட்ட நூற்று எட்டுப்பெயர்கள் உள்ளதாக, மலையில் உள்ள கலைஞர்கள் குறிப்பிடுகின்றனர்” முக்கியக் கதாபாத்திரங்களுடன் அவர்களுக்கு நிகரான பேச்சுத்திறனும், தர்க்கத்திறனும் உடையவராக, பபூன்திகழ்கிறார். பபூன் பாடும் பாடல்கள் பேசும் வசனங்கள் ஆகியவற்றில் இரட்டைப்பொருள் அமைந்திருக்கும். இதனால் பெண்கள் அதிகம் விரும்புவதில்லை. ஆயினும் ஜவ்வாது மலையில் ஆண் பெண் பாகுபாடு இன்றித் தெருக்கூத்தைக் கண்டுகளிக்கும் வழக்கம் நிலவுகிறது. பபூன் சில வேளைகளில் சமுதாயச்சிக்கல் களைத்தம் பாடல்களில் பாடுவது உண்டு,

           

           தாடியாம் தாடியாம்

            இராமனுக்குத் தாடியாம்

            ஜோப்பில் இரண்டு பீடியாம்

           அதை பிடிச்சாலும் பீடையாம்,

பபூன் நகைச்சுவை நடிகன் எனினும் தெருக்கூத்தைத் தொய்வு இன்றி நடத்திச் செல்லும் திறன் இருப்பதாக ஜவ்வாது மலை மக்கள் கருதுகின்றனர்.

           

7.வேடம்புனையும் முறை

தெருக்கூத்துக் கலைஞர்கள் தெருக்கூத்து நடைபெறும் மேடைக்குப் பின்புறம் தங்களுக்கான ஒப்பனையைச் செய்து கொள்கின்றனர். தெருக்கூத்தில் ஆண் கலைஞர்கள் மட்டுமே நடிகர்களாக இருக்கின்ற காரணத்தால் ஒப்பனை முறைகளைத் தங்களுக்குத் தாங்களே மேற்கொள்கின்றனர்.

வேடம் புனைவதற்கு எளிமையான பொருட்களைப் பயன்படுத்தப்படுகின்றனர். தாங்கள் வாழ்கின்ற சூழலில் பொருளாதாரத்தில் நலிந்த மக்கள் வாழ்கின்ற காரணத்தால் அதிகமான பொருளைக் கலைநிகழ்ச்சிக்காகப் பெறுவதில்லை. தங்கள் வாழ்வியல் சூழலில் மக்களை மகிழ்விப்பதைக் கலைஞர்கள் நோக்கமாகக் கொண்டு செயலாற்றுகின்றனர்.

ஆண்கள் தம்முகத்திற்கு நிறமூட்டிக் கொள்வதற்காகச் செயற்கை வண்ணங்களைப் பயன்படுத்துகின்றனர். கண்ணுக்கு இடும் கண்மை, ஒளிரும் வண்ணங்கள், குண்டலம், கழுத்தில் அணியும் பல வண்ணமணிகள், தலைக்கு வைக்கும் சவுரிமுடி, கிரீடம், தலைக்கு வைக்கும் கிரீடம் காகிதங்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதனைக் கூத்துக்கலைஞர்களே வடிவமைத்துக் கொள்கின்றனர். சேலைகள் கொண்டு உடம்பில் சுற்றிக்கொண்டு பருத்த உருவமாகக் காட்டுகின்றனர். பளபளப்பான மேல் உடையை அணிந்து மேடையில் நடித்தல் தெருக்கூத்துக் கலைஞர்களின் வழக்கமாக உள்ளது.

ஆண்கள் முழுக்கால் சட்டை (பேண்ட்) அணிந்து கொள்வதற்குப் பதிலாகத் தம்கால்களில் சேலைகளைச் சுற்றிக்கொள்ளும் வழக்கத்தை ஒப்பனையில் காணமுடிகிறது. மகாபாரதம் தொடர்பான கதைக்களமுடைய தெருக்கூத்துக்களுக்குக் கதாயுதம் பயன்படுத்தப்படுகிறது. இதனைத் தெருக்கூத்துக் கலைஞர்கள் மூங்கில் மற்றும் காகிதக்கூழ் கொண்டு உருவாக்குகின்றனர்.

தெருக்கூத்தில் பயன்படுத்தப்படும் சாட்டை ஆச்சாநார் கொண்டு தயாரிக்கப்படுகிறது. தருமர், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய வேடங்கள் புனையும் போது அவ்வேடங்களுக்குத் தேவையானவில் அம்பு ஆகியவை சிறுவரை மூங்கில் கொண்டு செய்யப்படுவது வழக்கில் உள்ளது. அம்புகள் வைக்கப்படும் அம்பறாத்தூணி மூங்கிலில் செய்யப்படுகிறது. தெருக்கூத்தில் புகழ்பெற்ற வேடங்களான துரியோதனன், இராவணன், அனுமன் ஆகிய வேடங்களுக்கான ஒப்பனை கலைஞர்களால் சிரத்தை எடுத்துச் செய்யப்படுகிறது.

காப்பிய, இதிகாச, புராணக் கதாபாத்திரங்களுக்கான ஒப்பனைக்கான பொருட்கள் மரம், துணி, மூங்கில் வண்ணக்காகிதங்கள் முதலான பொருட்களைக் கொண்டு ஒப்பனைக்கான பொருள்களைச் செய்து கொள்கின்றனர். “ஜவ்வாது மலையில் உள்ள தெருக்கூத்துக் கலைஞர்கள் ஒப்பனைக்கான பொருள்களைத் தாங்களே பெரும்பாலும் செய்து கொள்கின்றனர். ஒப்பனைக்கென்று பெரும் பொருள் செலவு செய்யப்படுவதில்லை. எளிமையான பொருள்களைக் கொண்டே கலைக்கு உயிரோட்டம் தரத்தக்க பொருள்களைச் செய்து தெருக்கூத்தில் பயன்படுத்துகின்றனர்” எனும் கூற்றுக் கருதத்தக்கது. அர்ச்சுனன் தபசு தெருக்கூத்து மலைக்கிராமங்களில் புகழ் பெற்று விளங்குகிறது. அர்ச்சுனன் தபசில் அர்ச்சுனன் தவம் செய்யும் கம்பம் வயிரம் பாய்ந்த வலிமையான மரத்தால் செய்யப்பட்டதாகும். இக்கம்பத்தை நம்மமரம் என்னும் மரத்தைக் கொண்டு செய்கின்றனர். அர்ச்சுனன் தபசுக்கான மரம் பதினைந்து அடி உயரமும் ஒரு மீட்டர் சுற்றளவும் கொண்டதாக அமைகிறது. மரத்தின் உச்சியில் மூங்கில் வளைவினை அமைத்து அதில் மணிகளைக் கட்டி அழகு படுத்துகின்றனர். அத்துடன் வாழைமரமும் கட்டுவதுண்டு.

அர்ச்சுனன் தெருக்கூத்துக்கான தபக்கம்பம் நாட்டப்பட்ட பின்பு அதற்குப் பூசை செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது. கம்பத்திற்கு, மஞ்சள், குங்குமம், சந்தனம் பூசப்பட்டுப் படையல் இடப்படுகிறது. “மக்கள் அர்ச்சுனன் தபசுக் கம்பத்தைத் தெய்வத்தன்மைவாய்ந்ததாகக் கருதுகின்றனர். எனவே அர்ச்சுனன் தபசு தெருக்கூத்தைப் பயபக்தியுடன் கண்டு களிக்கின்றனர். அர்ச்சுனன் தபசு ஒருக்கூத்தைக் காண்பதால் தீமைகள் விலகிச் செல்லும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது”. அர்சுனன் தபசு ஒருகூத்தை நடத்துவதால் நன்மைகள் பலவும் நடைபெறும் என்று மக்கள் நம்புகின்றனர்

           

8. பெண்வேடம்புனையும் முறை

ஆண்களே பெண்களாக வேடம் புனைந்து தெருக்கூத்தில் நடிக்கின்றனர் என்பதால் பெண்ணுக்குரிய ஒப்பனை ஆண்களுக்குக் கவனமாக இடப்படுகிறது. பெண்களுக்கான ஒப்பனைப் பொருள்கள் முழுவதும் கடைகளில் விலை கொடுத்து வாங்கப்படுகின்றன. தெருக்கூத்தில் பயன்படுத்தும் ஒப்பனைப் பொருள்களில் “வண்ணப்பொடி, கண்மை, உதட்டுப்பூச்சு, மூக்குத்தி, ஜிகினா, காதணிகள், கழுத்தணிகள், செயற்கைமுடி, ஊசி, சடைத்துணி, பாவாடை, சேலை, வளையல், கால் சிலம்பு” ஆகியன முக்கியமானவை என்று தகவலாளர் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.

அரச பரம்பரைத் தெருக்கூத்தாக இருப்பின் அரசியாக வேடம்புனையும் மரபு உண்டு. ஆடை அலங்காரங்களுடன் தலையில் கிரீடம் வைத்துக்கொள்வது, சூலம் முதலான பொருட்களைச் செய்து பயன்படுத்துவதும் வழக்கில் உள்ளது.

           

9. முன்னாளில்வேடம் புனையும் முறை

ஜவ்வாது மலையில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இயற்கையான சூழல்களில் கிடைக்கின்ற பொருள்களைக் கொண்டு வேடம் புனைந்த மையைக்கள ஆய்வில் அறிய முடிந்தது. ஜவ்வாது மலையில் தலையில் அணியும் கிரீடம், பலாமரத்தின் இலை, பட்டைகளைக் கொண்டு வேடம் புனைந்துள்ளனர், முன்னாளில், “சாம்பல், அடுப்புக்கரி, கற்களின்தூள், சுண்ணாம்பு, செம்மண்” ஆகியவற்றைக் கொண்டு ஒப்பனை செய்து கொண்டமையை அறிய முடிகிறது. ஜவ்வாது மலையில் நீண்ட காலமாக வழக்கில் இருந்து வரும் தெருக்கூத்தின் குழுக்களில் ஒப்பனைமுறை மாற்றங்களைச் சந்தித்துக் கொண்டு வந்திருப்பதை இன்றைய ஒப்பனை முறை எடுத்துக்காட்டுகிறது.

           

10. ஜவ்வாது மலையில்நிகழ்த்தப்படும் தெருக்கூத்துகள்

ஜவ்வாது மலை மக்களின் முக்கியமான பொழுது போக்கு நிகழ்வுகளுள் ஒன்று தெருக்கூத்து. விழாக்காலங்களிலும் பிற நாட்களிலும் இங்கு நிகழ்த்தப்படும் தெருக்கூத்துகளில் பெரும்பாலானவை புராணம் தொடர்பாகவும், சமுதாயம் தொடர்பாகவும் அமைகின்றன. “ஜவ்வாது மலைமக்கள் அதிகமான இறை நம்பிக்கை கொண்டவர்கள். குறிப்பாக, வழிபாடு விழாக்கள் ஆகியவற்றில் மரபு வழுவாமல் முன்னோர் கூறிய நெறிமுறைகளைக் கடைப்பிடித்து வருபவர்கள் என்பதால் விழாக்காலங்களில் இறைவனின் அருஞ்செயல்களை விளக்கும் தெருக்கூத்துகளைக் கண்டு களிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர்” ஜவ்வாது மலையிலும் கிழக்குத்தொடர்ச்சி மலைகள் பலவற்றிலும் மகாபாரதம் குறித்த தொன்மக்கதைகள் பரவலாக வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஜவ்வாது மலையில் நிகழ்த்தப்படும் தெருக்கூத்துகளில் மகாபாரதக்கதைகள் செல்வாக்குச் செலுத்தி வருவதை இங்கு நடைபெறும் மகாபாரதத் தெருக்கூத்துகளைக் கொண்டு அறியலாம். ஜவ்வாது மலையில் மகாபாரதக் கதைகளை அடியொற்றி,

1. கிருஷ்ணன் பிறப்பு

2. அரவான் கடபலி என்னும் அமாவாசை பிறட்டல்

3. கிருஷ்ணன் தூது

4. பாஞ்சாலி சபதம் (துரோபதை துயில்)

5. சித்தரஜன் சண்டை

6. எட்டாம் நாள் சண்டை

7. அர்சுனன் தபசு

8. 13ம் நாள் சண்டை (அபிமன்யு சண்டை)

9. கர்ணன் மோட்சம்

10. துரியோதரன் படுகளம்

என்னும்தெருக்கூத்துகள்நிகழ்த்தப்டுகின்றன. இராமாயணக்கதையில் ஈடுபாடு கொண்ட ஜவ்வாது மலைமக்கள் திருமாலையும் அவரின் அவதாரமான இராமனையும் வழிபட்டு வருபவர்களாவர். அவ்வடிப்படையில் பின்வரும் இராமாயணத் தெருக்கூத்துகள் ஜவ்வாது மலையில் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

1. தாடகி வதை என்னும் இராமர் பிறப்பு (தாடகி சம்பாரம்)

2. இராவணன் திக்விஜயம்

3. மயில் ராவணன் அயல் ராவணன் சண்டை

4. வாலி மோட்சம்

5. இந்திரஜித்து சுலோச்சனா கலியாணம்

6. இராவண சம்பாரம்

7. இராமர் பட்டாபிசேகம்

மேற்கண்ட தெருக்கூத்துகள் தவிர விழாக்காலங்களிலும், பிறகாலங்களிலும்.

1. அரிச்சந்திரன் நாடகம்

2. பண்டாசூரன் பராசக்தி சண்டை

3. வள்ளி திருமணம்

4. தார்க்காசூரன் என்னும் முருகன் சண்டை

5. மார்க்கண்டேயர் பிறப்பு எமன் சிறை பிடிப்பு

6. வெங்கடேசப்பெருமாள் நாடகம்

7. பவளக்கொடி திருமணம்

8. ஆரவல்லி சூரவல்லி

9. குறவஞ்சி நாடகம்

10. கீசகன் சம்பாரம்

11. சுந்தரி மாலை

முதலான தெருக்கூத்துகள் நிகழ்த்தப்படுகின்றன.

           

11. கூத்துப்பயிற்சி

ஜவ்வாது மலையில் உள்ள கிராமங்களில் பெரும்பான்மையான நிலையில் எல்லா ஊர்களிலும் நாடகக்குழுக்கள் இருப்பதை அறிய முடிகிறது. கூத்துக்கலையைக் கற்றுக்கொள்வதற்கு, கலைஞர்கள் பிற இடங்களை நாடிச்செல்வது கிடையாது. தங்கள் பகுதியில் உள்ள திறமை வாய்ந்த நாடக ஆசிரியரிடமே கூத்துக்கலையைக் கற்றுக்கொள்கின்றனர். இயல்பாகவே இங்கு வாழ்கின்ற கூத்துக்கலைஞர்கள் இளமைக்காலம் முதலே சிறந்த பயிற்சி பெற்ற காரணத்தாலும் தெருக்கூத்துகளைப் பார்த்துப் பழகிய காரணத்தாலும் சிறந்த கலைஞர்களாகத் திகழ்கின்றனர். தெருக்கூத்துக்கான பயிற்சிக்காலம் அறுவடை முடிந்த பின்பு தொடங்குகிறது. நாடக ஆசிரியர் ஆர்வம் உள்ள இளைஞர்களுக்குக் கூத்துக்கலையைக் கற்றுக்கொடுக்கிறார். கற்றுக்கொள்ள வருபவர்களின் திறனை அறிந்து அவர்களுக்கான பாடம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. பாத்திரங்களில் குணம் முதலான அனைத்தையும் ஆராய்ந்து மனத்தில் கொண்டு இன்னார்க்கு இன்ன வேடம் பொருந்தும் என முடிவு செய்து ஆண், பெண், கட்டியங்காரன் முதலான வேடங்கள் இடப்படுகின்றன. ஜவ்வாது மலை முழுவதும் கூத்துக்குழுக்கள் காணப்பட்டாலும் எவ்வூரில் கூத்து நடந்தாலும் சென்று காணும் மனப்பான்மை எல்லா ஊர்மக்களிடமும் உள்ளமையை அறியமுடிகிறது.

           

12 .தொழில்முறைத் தெருக்கூத்து

ஜவ்வாது மலையில் நடைபெறும் கூத்துகள் இம்மலைமக்களின் கலை, பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் சாரமாக விளங்குகின்றன. பண்டைய பொழுதுபோக்கு முறையே தெருக்கூத்துக்கலையின் மையப்பொருளாக இருப்பினும் காலச்சூழல் மாற்றத்தின் காரணமாகத் தெருக்கூத்துக்கலை தொழில்முறை சார்ந்ததாக மாற்றம் பெற்றுள்ளது. தெருக்கூத்துக் கலைஞர்கள் தங்கள் ஊர்களில் நடிக்கும் கூத்துக்களுக்குப் பொருள் பெறுவதில்லை. ஆனால் பிற ஊர்களில் நடைபெறும் தெருக்கூத்து நிகழ்ச்சிகளுக்குப் பொருள் பெற்று நடிக்கின்றனர். கதையின் செல்வாக்கு, மக்களிடம் வழக்கில் உள்ள முறை ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு தெருக்கூத்துக்கான சம்பளம் நிர்ணயம் செய்யப்படுகிறது. “கூத்துக் கலைஞர்களுக்கான சம்பளம் ஓர் இரவுக்கு ரூபாய் ஐந்நூறு முதல் ஆயிரம் வரை கொடுக்கப்படுகிறது. தொழில் முறையில் தெருக்கூத்தாடும் கலைஞர்கள் ஆண்டில் பல நாட்கள் கூத்தாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அவ்வப்போது தெருக்கூத்தில் பங்குபெறும் கலைஞர்கள் தெருக்கூத்துடன் பிறதொழில்களையும் செய்து வருகின்றனர். இரவு நேரத்தில் கூத்துக்கலையை மேற்கொண்டு பகல் வேளையில் விவசாய பணிகளை மேற்கொள்கின்றனர். தெருக்கூத்துக் கலைஞர்களுக்கு நிலையான தொழில்வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் அவர்கள் கூத்தாடுவதுடன் பிறபணிகளையும் மேற்கொள்கின்றனர். குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் கூத்துக்கலைஞர்களின் வாழ்வைப் பொருளாதாரம் சார்ந்த நிலையில் உயர்த்துவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைக்கு நலம் பயப்பதுடன் கலையை மேம்படுத்தவும் உதவும்” என்று தகவலாளர் கூறும் கருத்து சிந்திக்கத்தக்கது.

தெருக்கூத்துக் கலைஞர்கள் தம்வாழ்வாதாரத்திற்குக் கூத்துக்கலையை முழுடையாக நம்பி இருக்க இயலாது எனும் காரணத்தால் பிறதொழில்களையும் மேற்கொண்டுவருகின்றனர்.

           

சான்றாதாரங்கள்

ஆசிரியர்குழு, 1958, அகநானூறுமூலம், சென்னை, மர்ரேஎஸ்.ராஜம்பதிப்பு.

சாமிநாதையர்உ.வே., 1935, புறநானூறு, சென்னை,லாஜர்னல்அச்சுக்கூடம்.

சாமிநாதையர்உ.வே., 1931, பத்துப்பாட்டுமூலம் ,சென்னை, கேசரிஅச்சுக்கூடம்.

பாலசுப்பிரமணியன் க. 2016, தொல்காப்பியச் சொற்ப் பொருளடைவு, தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகம்.

           

தகவலாளிகள்

1. அ.அண்ணாமலைவயது 72, ஆண்

2. ரேணுகோபால், வயது 57, ஆண்

3. வேந்தன் வயது 68, ஆண்

4. சின்னம்மாள் வயது 37, பெண்

5. திக்கியம்மாள் வயது 40, பெண்

           

களஆய்வு செய்த நாள்கள்

1. 15.07.2015

2. 22.10.2015

3. 15.01.2016

4. 27.04.2016

5. 12.05.2017