ஏப்ரல் 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

கம்பராமாயணத்தில் நாய் இழிபொருளில் உவமை

முனைவர் க. மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, சென்னை 15 Aug 2022 Read Full PDF

Abstract :

Dog or Hound is considered as the Shebang or Vehicle for Lord Bhairava which has got more sniffing power. Though it is endured as an example for its faithfulness, it is in the habit of mating its partner in any place as it likes. It used to vomit the human waste which has been consumed already and will go for licking and eating the same with much craze.  With the Omnipresence of the Creator of the Universe, it is considered to be the epitome of devotion to humiliate the devotees by portraying themselves to the status of a filthy dog.  In order to make a comparison, one has to opt for quoting   the best example.  At any particular point, if  one  wants to compare anything with any other inferior item, then it is  to be conveyed with an individual’ stating  proper reasons. It is a tool that exposes the   knowledge and depth of  experience vested with the author of an Epic.

Keywords: Dog, Filthy comparison, Devotees, Good qualities, Bad qualities.

கம்பராமாயணத்தில் நாய் இழிபொருளில் உவமை

முனைவர் . மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, சென்னை.

ஆய்வுச் சுருக்கம்:

பைரவரின் வாகனமாகக் கருதப்படுவது நாய். மோப்பசக்தி அதிகம் உடையது நாய் . நன்றிக்கு உதாரணமாகக் காட்டப்படுவது நாய் என்றாலும் இழிபிறப்பாகக் கருதப்படுவதும் நாய் தான். நாயானது, நினைத்த இடத்திலேயே தன் துணையைச் சேரும். மனிதக் கழிவுகளை உண்ணும். தான் சாப்பிட்டதைத் தானே வாந்தியெடுத்துப் பின் தானே நாவால் ருசித்துத் தின்னும் இயல்புடையது. பக்தர்கள், இந்த உலகத்தைப் படைத்த இறைவன் முன், தன்னை நாயைப் போன்ற இழிபிறப்பாகத் தாழ்த்திக் கொள்வதுபக்தியின் நிலையாகவேக் கருதப்படுகிறது. ஒப்புமைக் கூற வேண்டுமானால் உயர்ந்த பொருளையேக் கூறவேண்டும். ஓரிடத்தில் உவமைக் கூற வேண்டுமானால் தாழ்ந்த பொருளை உவமைக் கூறினால் அதற்கு ஒரு தனிக் கருத்து இருத்தல் வேண்டும். இது காப்பியத்தைப் படைப்பவரின் அறிவுத் திறத்தையும், அனுபவத்தின் ஆழத்தையும் வெளியிடும் கருவியாகவே கொள்ளப்படுகிறது.

முக்கியச் சொற்கள்: நாய், இழிவான உவமை, பக்தர்கள், நல்ல குணங்கள், தீயகுணங்கள்.

 முன்னுரை:               

         விலங்கு  இனத்திலே நன்றிக்கு  இலக்கணமாகக் கொள்ளப்படுவது நாய். அதுபோல இழிபிறப்பாகக் கொள்ளப்படுவதும் நாய் தான்.படித்தவர்கள்முதல் பாமரர் வரை நாய்களை நன்றிக்குஉதாரணம்காட்டுவதைவிட,இகழ்ச்சிக்கே அதிகமாக எடுத்துக்காட்டில் பேசியிருக்கிறார்கள். பைரவரின் வாகனமாகக் கருதப்படுவது நாய். மனிதனைவிட 3000 மடங்கு மோப்பசக்தி அதிகம். பூகம்பம், சுனாமி, எரிமலைசீற்றம் ஆகியவற்றை பல நாட்களுக்கு முன்னரே அறிந்து கொண்டு ஊளையிடத் துவங்கிவிடும். மிகக் குறைந்த அதிர்வெண்கள் கொண்ட ஒலிகளையும், (60-20HZ) மிக அதிக அதிர்வெண் ஒலிகளையும் (70KHZ-100 KHZ) கேட்க வல்லவை. சீனா போன்ற நாடுகளில் நாய் இறைச்சி உணவாக உட்கொள்ளப்படுகிறது. நாயை யாராவது கல்லால் அடித்தால், அது கல்லைக் கடிக்காமல் கல்லால் அடித்தவனை நோக்கியே பாயும் இயல்புடையது. நாய் வாலாட்டுவதிலும் ஒரு சிறப்பு உள்ளது. வலதுபுறம் ஆட்டினால் நட்புடன் ஆட்டுகிறது என்றும், இடதுபுறம் ஆட்டினால் வெறுப்புடன் ஆட்டுகிறது என்பதனையும் கண்டுபிடித்துள்ளனர். தமிழ் இலக்கியங்களில் பல பாடல்கள் நாயை இழிபிறவியாகவே  தான் காண்பிக்கின்றன. ஆனால் வள்ளுவரும், ஔவையாரும் நாயை இழிபிறவியாகத் தம் பாடல்களில் குறிப்பிடவில்லை.. கம்பர் தம் கம்பராமாயணத்தில்  இழிபொருளில் குறிப்பிட்டுள்ளார் என்பதை ஆராய்வோம்.   

நாய்

                  ரிக் வேதம் இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்குமுன் உலகில் எழுந்த முதல் மதநூல். இதில் 'சரமா' என்ற நாய் இந்திரன் வளர்த்த நாய். இதற்கு 'சரமேயஸ்' என்ற இரண்டு குட்டிகள் உள்ளன.

                  உலகின் முதல் விண்வெளிப் பயணி 'லைக்கா' என்கிற நாய் தான் 1957 ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி ரஷ்யாவில் 'ஸ்புட்னிக்' விண்கலத்தில் லைக்கா நாய் பறந்தது.புவி சுற்றுப் பாதையில் 4 நாட்கள் லைக்கா உயிரோடு இருந்ததாக அப்போது விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மேலே செல்ல செல்ல அது இறந்து விட்டது. இராஜபாளையம் நாய்களை கௌரவிக்கும் விதமாக இந்தியஅரசு அஞ்சல்தலை ஒன்றையும் வெளியிட்டது.போரில் இறந்த வீரர்களுக்கு நடுகல் வைப்பது போல நாய்க்கும் நடுகல் அமைத்திருந்தனர்.

  நாயின் ஈனத்தனம்:

               சில ஈனத்தனங்கள் நாயிடம் உண்டு. நாய் என்ற ஒரு பிறவிமட்டுமே, தான் சாப்பிட்டதை வாந்தி எடுத்தப், பிறகு அதை ருசித்துநாக்கில் நக்கி சாப்பிடுமாம். நாய் மட்டுமே நினைத்த இடத்திலேயே தன் துணையோடு சேரும். நாய்கள் ஈரம் சிறிதும் இல்லாத எலும்பையும், பல்லசையும் வரை விடாமல் கௌவிக் கடித்துத் தின்னும். நாய் ஈனத்தனமாகத் தன் வயிற்றை ஒடுக்கி,வாலைக் குழைத்துக்குழைத்து முகத்தைப்பார்த்துக் கெஞ்சி எச்சிலை வாங்கி உண்ணும்.  மனிதக் கழிவுகளையும் உண்ணும். நாய் தான் தேவையில்லாமல் தனமூச்சை செலவு செய்யக்கூடிய விலங்கு.

மாணிக்கவாசகர் பாடல்களில் நாய்:

           இறைவனையேக் குருவாகக் கொண்ட மாணிக்கவாசகர், பாடல்களில் மிக அதிகமாகப் பேசப்படுவது நாய்.திருவாசகத்தில் 67 இடங்களில் 'நாயேன்' என்று தன்னை இகழ்ந்து பாடியுள்ளார். " நாயிற் கடையாய் கிடந்த அடியேற்கு" நம்மையும் ஒரு பொருளாக்கி நாய் சிவகை ஏற்றுவித்து அம்மை எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே" என்று குறிப்பிடுகிறார்..

நாய்  போன்ற இழிந்த என்னையும், ஒரு பொருளாக மதித்துப் பல்லக்கில் ஏற்றி வைத்தத் தயாபரன் சிவன் என்னைப் போலப் புண்ணியத்தை யார் பெறுவார் என்கிறார். ஒரு பெரிய அருளாளர்த் தன்னை நாய்க்கு ஒப்பிட்டது அனைவருக்கும்  வேண்டும் என்பதைக்   குறிக்கிறது.  

திருப்போரூர் சிதம்பரசுவாமிகள்:

திருப்போரூர் சிதம்பரசுவாமிகள் முருகப்பெருமான் மேல் மிகுந்த பக்தி உடையவர். அவர் முருகனை நினைத்துப்,  பாடியுள்ளார்.

                  " ஏதுபிழை செய்தாலும் ஏழையேனுக்கு இரங்கித்

                    தீது புரியாத தெய்வமே - நீதி

                    தழைக்கின்ற போரூர்த் தனிமுதலே நாயேன்

                    பிழைக்கின்ற வாறு நீ பேசு"             

                                                                                                                                 (சிதம்பர சுவாமிகள்) 

                  

                    " இல்லறத்தான் அல்லேன் இயற்கைத் துறவி அல்லேன்
                     நல்லறத்து ஞானி யல்லேன் நாயினேன்-சொல்லறத்துள்                           

                     ஒன்றேனும் இல்லேன் உயர்த்ததிருப் போரூரா
                     என்றேதான் ஈடேறு வேன்".

                                                                                                                                      (சிதம்பர சுவாமிகள்)                                                      

மகாபாரதக்கதையில் நாய்:

        மகாபாரதக்கதையில் முடிவில் தருமனோடுக்   கடைசிவரை அவன் நாய் மட்டுமே கூடவே இருந்து கைலாயத்தின் முழு யாத்திரையில் பங்கு பெற்றது.

சிறுபஞ்சமூலத்தில் நாய்:

      சிறுபஞ்சமூலத்திலும் நாய்க் குறித்துக் கூறப்பட்டுள்ளது.                

                        "நாண் இலன் நாய் நன்கு நள்றாதான் நாய் பெரியோர்ப்       

                          பேண்இலன் நாய் பிறர் சேவகன் நாய் ஏண்இல்

                          பொருந்திய பூண்முலையார் சேரிகைத்து இல்லான்

                          பருத்தி பகர்வுழி நாய்"

                                                                                                                               (சிறுபஞ்சமூலம்   93 )      

             நாணம் இல்லாதவன் நாயைப் போன்றவன். நன்கு பிறருடன் நட்பு கொள்ளாதவன் நாயைப் போன்றவன் தந்தை,தாய் முதலிய பெரியோரைப் பாதுகாவாதவன் நாயைப் போன்றவன். பிறர் பணியாளனாய் உள்ளவன் நாயைப் போன்றவன். பெருமையில்லாத நகையை அணிந்த கொங்கைகளையுடையப் பரத்தையரின் தெருவில் அப்பரத்தையர்மீது கொண்ட ஆசையால் திரியும் கைப்பொருள் இல்லாதவன் பரத்திவிலை கூறுமிடத்துப் போய் நிற்கும் நாய் போன்றவன் என்று விளக்கப்பட்டுள்ளது.

நாலடியாரில் நாயானது நன்றியுள்ள மிருகமாகவும், நல்லவர்களின் நட்பிற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.

  "ஊற்றுநீர்க் கடலை நாய் நக்குவது போல நக்குகிறேன்" என்று சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறியுள்ளார்.

 நாய்ப் பால் முழுவதும் நாய்க்கு உதவும் அன்றி வேறுபரிசுத்தமானவர்க்கு உதவாது

                        " நாயின்பா ல த்தனையு நாய் தனக்கா மன்றியே

                          தூயவருக் காகுமோ சொல்"

                                                                                                  (நீதிவெண்பா 63)

என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.

 விலைமாதரும், நாய்களும், ஆயுர்வேத வைத்தியர்களும், பிராமணர்களும், கோழிகளும் கண்டபோதே காரணம்இன்றி பகையாகும் என்றும் கூறுகிறது.

 பசுவின் வாலைப் பிடித்துக் கொண்டு ஆற்றைத் தாண்டலாம், ஆனால் நாய் வாலைப் பிடித்துக் கொண்டு ஆற்றைத் தாண்டுதல் என்பது இயலாது என்றும் கூறுகிறது.

விவேகசிந்தாமணியில் நாய்

                  காமம் வலியது என்பதைப் பற்றி விவேகசிந்தாமணியில் கூறப்பட்டுள்ளது.

                  உணங்கி யொருகால் முடமாகி ஒருகண் ணிழந்து செவியின்றி, வணங்கு நெடுவால் அறுப்புண்டு வயிறும் பசியால் முதுகொட்டி, அணங்கு நலிய மூப்பெய்தி அகல்வாயோடு கழுத்தேந்திச், சுணங்கன் முடுவல் பின் சென்றால் யாரைக் காமன் துயர் செய்யான்.

ஒரு கால் ஊனம், ஒரு கண்ணில் பார்வையில்லை, ஒரு காது இல்லை, வளைந்த வாலும் அறுபட்டுள்ளது, வயிறு உணவின்றி முதுகோடு ஒட்டி உள்ளது, முதுமை அடைந்த நிலையில் அதன் கழுத்தில் ஒரு ஓடும் வலயமாக மாட்டியுள்ளது, அதை வெளியே தள்ளுவதற்கும் சக்தி இல்லை, இப்படிப்பட்ட ஒரு ஆண் நாய், ஒரு பெண் நாயைக் கண்டதும் காமவயப்பட்டு அதனைச் சுற்றி வர தலைப்பட்டால் யாரைத்தான் காமன்(ம்) துன்புறுத்த மாட்டான்.

(ஆகவே எச்சரிக்கையாயிரு.)

அறிவிலார் செய்கை

                  குரங்கு நின்று கூத்தாடிய கோலத்தைக் கண்டே, அரங்கு முன்பு நாய் பாடி கொண்டாடுவது போல், கரங்கள் நீட்டியே பேசிய கசடரைக் கண்டு, சிரங்கள் ஆட்டியே மெச்சிடும் அறிவிலார் செய்கை.

குரங்குகள் கூடி நின்று ஆடிய ஆட்டத்தைக் கண்டு, நாய் ஊளை இட்டுக் கொண்டாடுவது போன்றது, (வஞ்சகம் போன்ற) கீழான குணங்கள் உள்ள மனிதர், கைகளை நீட்டிக் குரலை உயர்த்திப் பேசுவதைக் கண்டு தலைகள் ஆட்டியே பாராட்டுவது, விவேகம் இல்லாதவர்கள் செய்கையாகும்.

நாய்  உவமை:  

     “அறிந்தமைக் கொண்டு அறியாததை விளக்கல்” என்பது உவமைக்குச் சொல்லப்படும் இலக்கணம். பற்பல சமயங்களில் அறிந்ததையே நன்கு விளக்கக்கூட உவமை பயன்படுத்தப்படுகின்றன. அறிவுத் திறத்தையும், அனுபவத்தின் ஆழத்தையும் வெளியிடும் கருவியாக உவமை அமைந்து விட்டது. வினை, பயன், மெய், உரு என்ற நான்கும் பற்றி உவமை தோன்றும் என்று தொல்காப்பியர் கூறுகிறார். நாம் கண்டும் காணாத பொருட்களை விளக்க , அடிக்கடி காணும் பொருளின் தனிச் சிறப்பை விளங்கிக் கொள்ளவும் உவமை பயன்படுகிறது. புலவனின் தனிச் சிறப்பும் இதன்மூலம்வெளிப்படுகிறது.

                          " உயர்ந்ததன் மேற்றே உள்ளும் காலை”

 (உவமையியல்3)

என்பர்தொல்காப்பியர். அதாவது ஒப்புமை சொல்லவேண்டிய காலத்தில் உயர்ந்த பொருள்களோடு ஒன்றை உவமிக்க வேண்டுமே தவிரத் தாழ்ந்த பொருள்களோடு உவமித்தல் ஆகாது.

ஓரிடத்தில் கவிஞன் தாழ்ந்த உவமையைக் கையாள்கிறான் என்றால் அதற்கு ஒரு தனிக் கருத்து இருத்தல் வேண்டும். கம்பர் தாழ்ந்த உவமையைப் பயன்படுத்துவாரேயானால் நிச்சயமாக அதில் ஓர் உட்கருத்து அடங்கியிருக்கும்.

               இராமனுக்கு முடி சூட்டப்படும் என்று முதல் நாள் கூறிவிட்டுப் பின் அடுத்தநாளே இல்லை என்று கூறும் போது இலட்சுமணனுக்குக் கோபம் வருகிறது.கோபம் காரணமாக எவ்வளவு தாழ்ந்தநிலைக்கு  சென்று விட்டது.

இத்தகைய சீற்றத்துடன் இத்தகைய ஒரு பண்பிழந்த மனநிலையில்  இலட்சுமணன் உவமைக் கூற நேர்ந்தால் அவன், கல்வி ,அறிவு, பண்பாடு ஆகியவற்றை எண்ணிப்  பேசமுடியாது. அதனால் தான் பரதனுக்கே முடிசூட்ட கைகேயி கூறினாள்  என்பதைக்கேட்ட இலட்சுமணன்” சிங்கக் குட்டிக்கு என தயாரித்து வைத்த இன்சுவையோடு கூடிய புலாலை அற்பத்தனம் பொருந்திய சொறிநாய் ஒன்றிற்கு இடுவது போலாகும்” என்கிறான். இதைத் தவிர வேறு எதனை      உவமையை  இலட்சுமணன் கையாண்டிருப்பினும் அவனின் தாழ்ந்துவிட்ட மனநிலையை அவ்வுவமை எடுத்துக்காட்டாது.ஆழ்ந்து சிந்தித்தால்  இலட்சுமணனின் மனநிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார். உவமை ஒன்றால் மட்டுமே புலமையை அளந்துவிடமுடியும்.( கம்பன் கலை .  அ.ச.ஞானசம்பந்தம்)

               எனவே இந்த அற்புதமான உவமையைக் கையாள்வதன் மூலம் கவிச்சக்கரவர்த்தி தன்னுடையக் கவித்திறத்தையும் காட்டிவிடுகின்றார்.           

பரதன் தன்னை நாய் எனல்:

 பரதன் தான் குற்றமில்லாதவன் என்பதை கோசலைக்குச் சொல்லும்போது, சிறந்த உணவில்லாதவற்றை உண்ணாமல் நீக்குவதற்குப் பதில்,  உண்பதை மேற்கொண்ட போது நாயைப் போல உண்பவன் அடையும் நரகத்தை நான் அடைவேனாக என்று கூறியதை,

                   "ஊண் அல உண் வழி நாயின் உண்டவன்" (பள்ளியடைப்படலம் 894)

என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.

தன் அன்னையோடு சேர்த்து தன்னையும் தவறாக எண்ணிவிட்டனரே என்பதை நினைக்கும்போதே பரதனின் உள்ளம் பதைபதைக்கிறது. தன்மேல் தவறில்லை என்பதை எப்படியாவது நிரூபிக்கவேண்டிய நிலையில் அவன் தன்னை நாய் என்ற இழிபொருளில்  குறிப்பிடுகிறான் என்பதை அறியமுடிகிறது.

 நாய்க்குகன்:

              கங்கைக்காண்படலத்தில் குகன் வீரவுரை பேசும் போது," இராமனை நாடாளாமல் செய்து வஞ்சனையால் அரசைப் பெற்ற அரசரும் வந்தாரே, நெருப்பைக் கக்கும். எனது சிவந்தஅம்புகள் இவர் மேல்  செல்லாவோ? எனது அம்புக்குத் தப்பிப் பிழைத்து இவர் போய்விட்டால் ' நாய்க்குகன் ' என்று என்னை மக்கள் கூறமாட்டார்களா? என்று கூறும் போது

               " செஞ்சரம் என்பன தீ உமிழ்கின்றன செல்லாவோ

                  உஞ்சு இவர் போய்விடின் நாய்க்குகன் என்று எனை ஓதாரோ”

                                                                                               (கங்கைக்காண்படலம்998) என்பதன் மூலம் அறியமுடிகிறது.

குகனுக்கு, இராமன்மேல் ஏற்பட்டப் பாசமும், கண்ணால் இன்னும் பரதனைக் காணாத நிலையிலும், அவன்மேல் கொண்டக் கோபமும் வெளிப்படத், தன்னையே மக்கள் நாய் என்று ஏசுவர் என்ற கோபமும் வெளிப்படுவதை அறிந்து கொள்ளமுடிகிறது.

நாயேன அலைந்து திரிவது நல்லது:

               பரதன் காட்டுக்குவந்து இராமனை நாட்டுக்கு வா  வந்து பதவியேற்றுக் கொள் என்று வேண்டியபோது, இராமன், தாய் கட்டளையிட்டுக் கூறியவற்றையும், தந்தை செய்க என்று ஏவிய எந்த வேலைகளையும் தலை வணங்கி மேற்கொள்ளாத புலையனைவிட, செய்யும் செயல்களைப் பற்றித்   தெரிந்து கொள்ளாத நாயென அலைந்து திரிவது நல்லது என்கிறான் என்பதை,

                               " தீய அப் புலையனின் செய்கை தேர்கிலா

                                 நாய் எனத் திரிவது நல்லது அல்லதோ”

                                                                                              ( திருவடி சூட்டுப்படலம் 1183)

என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.

தாய், தந்தை ஏவலின்படி நடக்காமல் போனால் நாயைப் போன்றவன் ஆவேன் என்று கூறியபோது, பெரியவர்கள் சொற்படி நடக்காதத் தன்னை நாயாக இழிவாகக் கொள்கிறான் என்பதை உணர்ந்து கொள்ளமுடிகிறது.

நாய் அவியுணவை விரும்பியது போல:

             இராவணன், சீதையைக் கண்டு மாறாக் காதல் கொண்டுத் தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு மன்றாடியபோது," சீதை இராமனுக்குக் கற்புக்கடமை கொண்டுள்ள என்னை வளர்த்து எரியும் வேள்வித் தீயில் புனிதரான முனிவர்கள் கடவுளுக்காக வழங்கும் அவி உணவை ஒரு நாய் விரும்பியதைப் போல நீ விரும்பி. எத்தகைய இழிவான சொற்களைச் சொல்லிவிட்டாய்" என்று கூறியதை,,

                   " புவியிடை ஒழுக்கம் நோக்காய் பொங்குஎரி புனிதர் ஈயும்

                      அவியை நாய் வேட்டதென்ன என் சொனாய் அரக்க என்னா"

                                                                                                                   ( சடாயு உயிர் நீத்த படம் 869) 

என்பதன் மூலம் அறியமுடிகிறது.

இராவணன், தன்னிடம் ஏற்றுக் கொள்ளும்படி மன்றாடியபோது, சீதைத் தன்னை அவியுணவாகவும், இராவணனை அதைத் தின்ன விரும்பும் கேவலமான நாயாக இழிவாகவும், தைரியமாகவும் ஏசினாள்  என்பதை அறிந்து கொள்ளமுடிகிறது.

நாயைப் போன்ற எளியன்:

வாலி, இராமனிடம் ,தாயைப் போல் உயிர்களிடம்  அன்பு காட்டி அறமும், நடுவு நிலைமையும் நற்குண நிறைவும் நீயே எனக் கூறுமாறு விளங்கும் மேலானவனே நல்ல வழியின்படி நீ நோக்கும் நன்முறையை நாயைப் போன்ற எளியவரான எங்களால் குற்றம் இல்லாமல் அறியமுடியுமோ? என் தீவினையைப் பொறுத்துக் கொள்வாயாக என்று உரைத்ததை வாலி வதைப்படலத்தில்

                      " நீ என நின்ற நம்பி நெறியின் நோக்கும் நேர்மை

                         நாய் என் நின்ற எம்பால் நவை அற உணரலாமே"

                                                                                                                  ( வாலி வதைப்படலம்353)

என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.

 நாயைப் போன்ற அடியேன்:

வில்லில் தொடுத்துச் செலுத்திய கூர்மையான அம்பால் என்னை அடித்து நாயைப் போன்ற அடியேன் உயிர்ப் போகும்போது எனக்குமெய்யறிவு உண்டாகுமாறு செய்தாய். நான்முகன், திருமால், உருத்திரன் ஆகிய மூவரும் நீயே. முதல்வன் நீயே என்று பலவாறு வாழ்த்தியதை,

                             " ஏவு கூர் வாளியில் எய்து நாய் அடியனேன்

                                ஆவிபோம் வேலைவாய் அறிவு தந்து அருளினாய்”

                                                                                                ( வாலிவதைப்படலம்.    355 )

வாலிவதைப்படலம்  பாடல் கூறுகிறது

            நாயேன் உன்னிடம் வேண்டிப் பெறக்கூடியது ஒன்றுண்டு. அது யாது என்றால் என்தம்பி சுக்ரீவன் மதுவைக் குடித்து அறிவு மாறுபடும் போது, தீமை செய்வானேயானால் அவன் மீது சினம் கொண்டு, இப்போது என் மீது செலுத்திய அம்பாகிய இயமனைச் செலுத்தாதிருக்கவேண்டும் என்று வாலி இராமனிடம்  வேண்டினான்.

தன் தவறை முற்றிலும் உணர்ந்து கொண்ட வாலி,    பிறவித்துன்பம் நீங்கப் பெற்ற வாலி, இராமனிடம் தன் தவறை உணர்ந்து, ஒப்புக்கொண்டு,தன் தம்பி தவறு செய்தவிடத்தும் அவனை மன்னிக்கும்படி வேண்டியபோதும் தன்னைத்தான் நாயென மிகவும் இழிவாகக் கூறிக்கொள்கிறான் என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது.

நாய் உண்ட எச்சில்:

கிட்கிந்தைப் படலத்தில் சுக்ரீவன் இலட்சுமணனிடம்,விருந்து உண்டு செல்லக் கேட்ட போது இலட்சுமணன் ," கீரைகளும், கிழங்குகளும், காய்களும் ஆகிய இவற்றில்  இராமன் உண்டு மிகுந்ததையே நான் உண்பேன் அன்றி வேறொன்றையும் விரும்பி உண்ணமாட்டேன்.ஒருவேளை நான் இதை விரும்பினேன் என்றால், இராமன் உண்ட எச்சில் அல்லாது, அதுநாய் உண்ட எச்சில் ஆகும் என்றான் என்பதை,

                        " நச்சிலேன் நச்சினேனாயின் நாய்உண்ட

                           எச்சிலேயது இதற்கையம்.இல்லையால்”

                                                                                                                           ( கிட்கிந்தைப்படலம் 674)

என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.

            இலட்சுமணன், சுக்ரீவனிடம் கூறும்போது,இராமன் உண்டுவிட்டு மீதியான உணவைத் தவிர வேறு உணவு நாய் உண்ட எச்சில்தான் என்று எண்ணியதை உணர்ந்து கொள்ளமுடிகிறது.

அரக்க நாய்கள்

அனுமன், சீதையிடம் தங்களை நான் என் தோளில் சுமந்துகொண்டு சென்று இராமனிடம் சேர்ப்பேன் என்று கூறும்போது, சீதை மறுப்புடன் சில கருத்துக்களைக் கூறும் போது, கடல் நடுவே அரக்கர் வந்து மறிக்கின்றபோது நீ அவர்களைக் கவனிப்பாயா அல்லது என்னைக் காப்பாயா என்றும், மற்றும் உன்னுடன்வரின் இராமனின் வில்வலி குறைபாடு உடையதாகும். என்னை வஞ்சித்த அரக்க நாய்களைப் போல நீயும் என்னை எடுத்துச் செல்லலாமா என்று சீதை கூறினாள்.

                                  " நன்றி என்பது என் வஞ்சித்த நாய்களின்

                                     நின்ற வஞ்சனை நீயும் நினைத்தியோ”

                                                                                                                            (சூளாமணிப்படலம் 618)

தன்னை வஞ்சகமாக தூக்கி வந்த இராவணனை, சீதை நாய் என்றே கேவலமாக எண்ணினாள் என்பதை அவள் அனுமனிடம் கூறுவதிலிருந்து பெறப்படுகிறது.

நாயைப் போன்ற அரக்கர்கள்:

அனுமனின் வாலில் நெருப்பைப் பற்ற வைத்தனர் என்பதை அறிந்த சீதை, அக்கினி தேவனே எவ்வுயிருக்கும் தாயைப் போலக் கருணை உடைய வாயு தேவனின் துணைவனே, பெருமை குணம் எதுவும் பெறாத நாயைப் போன்றவரான அரக்கர்கள் அனுமனை வருத்துவதை நீ பார்த்தால், அவனுக்கு அருள் புரிய மாட்டாயா? உலகம் அனைத்துக்கும் ஒரு சான்றாக இருப்பவன் நீயே. அனைத்தும் உனக்குத் தெரியும். நான் கற்புடைமையினால் தூயவளாக இருந்தால் அனுமனைச் சுடாதே, உன்னைத் தொழுது வேண்டுகிறேன் என்று சீதை கூறினாள்.

               " தாயே அனைய கருணையான் துணையை ஏதும் தகைவு இல்லா

                  நாயே அனையவல் அரக்கர் நலியக் கண்டால் நல்காயோ?"                                                                                                                                            

      (பிணிவீட்டுப்படலம் 1171)

என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.

தன்னுடையத் துயரைத் தீர்க்க வந்தவனுக்கு ஒரு துயரம் என்றபோது, அதைச் செய்த அரக்கர்களை நாய் என்றே கூறினாள்.

  அனுமான்  தன்னை நாய்எனல்:

                  வாலி வதைக்கு பின்னர், அனுமன் சுக்ரீவன் இருப்பிடம் போகாமல் இராமனுடனே இருக்க அனுமதிக்குமாறு இராமனிடம் "நான் இங்கேயே உன்னுடன் இருந்து, ஒரு நாய் போல உனக்கு, நீ ஏவிய எல்லா பணிகளையும் செய்வேன் "என்று வேண்டுகிறான்.

              " இத்தலை இருந்து, நாயேன், ஏவின எனக்குத் தக்க

                கைத்தொழில் செய்வேன்என்று, கழல் இணை வணங்கும் காலை"

                                                                                (அரசியற்படலம்- கிட்கிந்தா காண்டம் 4142)

            அசோகவனத்தில் இருந்த சீதையைச் சந்தித்து விட்டு சூளாமணியையும் பெற்றுக் கொண்டு வந்த அனுமான் அனைத்து விபரங்களையும் இராமனிடம் கூறுகிறான்.இராவணன் ஆணைப்படியே அரக்கியர்கள் சீதையைத் தெருட்டினார்கள். அந்த நேரத்தில் சீதை தனது அரிய உயிரைவிட்டுவிட நினைத்தாள். ஒரு கொடியை எடுத்து, அதைஒரு மரக்கிளையில் உறுதியாகக் கட்டி, தனது அழகியக் கழுத்தில் அதன் மறுமுனையைச் சுருக்கிட்டுக் கொள்ளும் நேரத்தில் நாய் போன்ற நான் அச்செயலைத் தடுத்து, அவளுடைய திருவடிகளை வணங்கி உன் திருப்பெயரைக் கூறினேன் என்பதை,

        "தன் மணிக் கழுத்தில் சார்த்தும் அளவையில் தடுத்து நாயேன்

         பொன்அடி வணங்கி நின்று நின் பெயர் புகன்ற போழ்தில்"

                                                                                                             ( திருவடி தொழுத படலம் 1285)

என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.

மாதா சீதை தன்னுடைய உயிரைவிட முயன்றபோது, தன்னால் அவளைக் காப்பாற்ற முடிந்ததை, பாக்கியமாகவே எண்ணியவன்,,தன்னை  நாய் என்று தாழ்த்திக் கொள்ளும் மனத்தை உடையவனாக இருப்பதை அறியமுடிகிறது.

இராம, இராவண யுத்தம் முடிந்த பிறகு இராம, இலட்சுமணர், சீதையுடன் அயோத்திக்கு வருகின்றனர். இருப்பினும் பரதன் எதிர்பார்த்த அந்த காலத்திற்குள் அவர்கள் வந்து சேராததால், பரதன் தீக்குளித்து இறக்க தயாராகின்றான். அனுமனை, பரதனிடம் தூதாக இராமன் அனுப்புகிறான். அனுமன், பரதனிடம் சென்று," ஐயனே இராமபிரான் 14 ஆண்டு வனவாசம் முடிந்து, உன்னிடம் வந்து சேர்வேன் என்று முன்னர் சொன்ன அந்த குறிப்பிட்ட காலக்கெடு முடிவதற்கு இன்னும் 40 நாழிகை (எண் ஐந்து நாழிகை 8×5=40) இருக்கிறது. இந்த கணக்கானது பொய்யானது என்றால், நாய் போன்ற அடியவனான நான் இந்த தீக்குண்டத்திலேயே விழுந்து இறந்து போவேன் என்று கூறுகிறார்.

                       "இன்னம் நாழிகை எண் ஐந்து உளது ஐய

                    உன்னை முன்னம் வந்து எய்த உரைத்த நான்

                    இன்னது இல்லை எனின் அடி நாயினேன்

                   முன்னம் வீழ்ந்து இவ் எரியில் முடிவெனால்"

                                                                                                                                  (மீட்சிப்படலம் 4132)

அனுமன் தன்னுடைய பேருருவை பரதனுக்குக் காட்டுகிறான். தன்னுடைய உடம்பு பற்றி அனுமன், 'அருப்ப யாக்கை' என்றும், தன்னை பற்றி 'அடித்தொழில் நாயினேன்' என்றும் குறிப்பிடுகிறான்.

                    "அடித்தொழில் நாயினேன், அரும்ப யாக்கையை"                                                                                                      

(மீட்சிப்படலம் 4147)

அனுமன் தன்னை அடியேன் என்றும், நாயினேன் என்றும் குறிப்பிடுகிறார் என்பது பெறப்படுகிறது.

வீடணன் தன்னை நாய் என்று கூறுதல்:

வீடணன், இராமன் தன்னை அடைக்கலமாக ஏற்றுக் கொண்டான்         என்பதை சுக்ரீவன் கூறும் போது சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனின் தம்பியான என்னையும் வருவாயாக என்று அருள் செய்தவனே,அடைக்கலப் பொருளாக என்னையும் எண்ணினானே, இராமன் அருள் செய்தான் ஆயின் நாய்ப்போலக் கடைப்பட்டவனான நான் சடையுடைய சிவபெருமான் உண்ட ஆலகால விடம்போலச் சிறப்பினைப் பெற்றுவிட்டேன் என்பதை,

                     " தஞ்சு எனக் கருதினானோ தாழ்சடைக் கடவுள் உண்ட

                        நஞ்சு எனச் சிறந்தேன் அன்றோ நாயகன் அருளின் நாயேன்”

                                                                                                     ( வீடணன் அடைக்கலப்படலம் 428)

என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.

இராமனிடம், அடைக்கலம் பெற்றதை, எதிரியின் தம்பிக்கும் ஆதரவு அளித்த இராமனை எண்ணிய வீடணனுக்கு, தன்னை  நாய்ப்போலக் கடைபட்டவன் என்கிறான்.

 வீடணன் திருவடி நிலைகளைச்சூடல்:

இராமன், வீடணனை அடைக்கலமாக ஏற்று, இலங்கை அரசையும் உனக்குத் தந்தேன் என்றபோது, அதைக் கேட்ட வீடணன், இராமனைப் பார்த்து இறைவனே, நாயைப் போன்றக் கடையனான என்னையும் உன் உடன்பிறந்தவர்களுள் ஒருவன் என்றாய்.இடையில் நான்கூறுவதற்குயாது உளது, உனக்கு அடிமைத் தொழில் செய்வதில்    சிறப்புடையவன் ஆனேன் என்று சொல்லிக்கொண்டே  முன் தனக்கு இருந்த பயமும், அச்சமும் நீங்கப் பெற்றவனாய் இராமனின் கால்களில் அணிந்திருந்தப் பாதுகைகளாகிய செம்பொன் முடியைத் தன் தலையில் தானே சூட்டிக்கொண்டான் என்பதை,

                  " நடுஇனிப் பகர்வது என்னே நாயக நாயினேனை

                                                                               (வீடணன் அடைக்கலப்படலம் 449) என்ற அடி மூலம் அறியமுடிகிறது.

வருணன் தன்னைநாய் எனல்:

இராமன் வருணனை வழி வேண்டியபோது,  வருணன் வராததால் கோபம் கொண்ட இராமன் வில்லை வளைத்து அம்பினைச் செலுத்தப் பயந்துபோன வருணன், இராமனிடம் அடைக்கலம் வேண்டினான்.உலகங்களை எல்லாம் படைப்பவனே , படைத்துக் காத்து நடுவில் தீயுண்ணுமாறுச் செய்வாய். இல்லையேல் அவற்றை நீயே உண்பாய். உனக்கு முடியாத செயலும் உண்டோ? நீ நினைத்தால் தீட்டப்பட்ட கூர்மையான அம்பு ஒன்றால் உலகங்கள் எல்லாம் தீய்ந்து போகுமாறு அழிப்பாய்.நாய்ப் போன்ற எளியவனான என்னைத் தண்டிப்பதற்கு இத்தனை அம்புகளும் வேண்டுமோ? என்றான்.

                 " தீட்டுவான் பகழி ஒன்றால் உலகங்கள் எவையும் தீய

                   வீட்டுவாய் நினையின் நாயேற்கு இத்தனை வேண்டுமோதான்"

                                                                            ( வருணனை வழி வேண்டு படலம் 598)

என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.

இராமன் அழைத்தும் வருணன் வராததால் கோபத்துடன் இராமன் இருப்பதை அறிந்து அவன் கோபத்தைக் குறைக்கும் முயற்சியாகவும்,தன் தவறை உணர்ந்தவனாகவும், மன்னிப்பு வேண்டும்படியாகவும், தன்னை நாயாகக் கூறினான்.

நாய்க்கூட்டம் சிங்கத்தைக் கண்டாற் போன்று:

மன்னர் ஆயிரம் வெள்ளம் என்னும் எண்ணையுடைய அரக்கரின் படைகள் அழிய நேர்ந்தாலும், அங்ஙனம் அழிவதற்கு நூறு யுகங்கள் தேவை. ஆதலால் பகைவர் படையால் நமக்கு உண்டாகக்கூடிய சிறுமை யாதுளது? நீ சினந்து போர் மேல் சென்றால் , பகைவர் படையாகியக் குரங்குக் கூட்டங்கள் உன்னைக் கண்டமாத்திரத்தில், எளிய நாய்க்கூட்டம் வலிய சிங்கத்தைக் கண்டாற் போன்று அஞ்சி ஓடுவதன்றி நினக்கு முன்பு எதிர்த்து நிற்பதும் உண்டோ என்று ஒற்றர்கள் கூறியதை,

                      " நாய் இனம் சீயம் கண்டதாம் என நடப்பது அல்லால்

                         நீ உருத்து எழுந்தபோது குரங்கு எதிர் நிற்பது உண்டோ?”

                                                                                           (ஒற்றுக் கேள்விப்படலம் 756)

என்ற பாடலடி மூலம் அறிய முடிகிறது.

இராவணனை உயர்த்திப் பேசுவதற்கும், அவன் மனம் சந்தோசப்படவேண்டும் என்பதற்காகவே எதிரிகளை நாய் என இழிவாகவும் கூறினான் என்பதை அறியமுடிகிறது.

நாய் தர சிங்கம் பெறுவது போல:

இராமன் சார்பாக இராவணனிடம் தூது சென்ற அங்கதனைத் தன்னுடன் சேருமாறு இராவணன் கேட்கிறான். அதற்கு அங்கதன் வாயில் வருபவைகளைஎல்லாம் கூறிஎன்னை உன் வசம் செய்து கொள்ள எண்ணுவாயானால் ஒருவனுக்குத் தூதனாக வந்து அதைநெகிழவிட்டு, மாற்றான் தந்த அரசப்பதவியை ஏற்று அரசு ஆளுதல் அரசியல் அறிஞரால் ஆராய்ந்து விலக்கத்தக்கதன்றோ நீ வானரத் தலைமைத் தர அதை நானாக் கொள்வேன், கொள்ளேன் ஒருவேளை அங்ஙனம்கொள்வேனாயின் நாயானதுதரச் சிங்கமானது பெற்றுக் கொள்கின்ற சிறந்த விலங்குத்தன்மைக்கு ஒப்பாகும் என்று கூறியதை,

                       " நீ தரக் கொள்வென் யானே இதற்கு இனி நிகர் வேறுஎண்ணின்

                         நாய்தரக் கொள்ளும் சீயம் நல்அரசு என்று நக்கான்"

                                                                                           ( அங்கதன் தூதுப் படலம் 943)

என்பதன் மூலம்  அறியமுடிகிறது.

நான் இராமனின் தூதன். நீ யார்  எனக்குப் பதவியைத் தர, நீ நாய் போன்ற இழியன். நான் சிங்கம் போன்று உயர்ந்தவன். என்று இராவணனை அசிங்கப்படுத்தும் எண்ணத்தோடு அங்கதன் கூறியதை அறியமுடிகிறது..

காமனும் நாமும் நாய் :

இராவணன், இராமனுடன் போர்ப் புரிந்து இராமனின் அளப்பரிய  வில்லாற்றலை கண்டு வியந்தான்.இனி நாம் போர்க்களத்துக்குப் போய் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது? பொறுமையில் பூமிதேவியைப் போன்றவளுமான சீதை இராமனது உடம்பைப் பார்த்து நெருப்புப் போலக் கொடுமைவாய்ந்த அவனது வீரச் செய்கையையும் பார்த்திருந்தால்  அவளுக்குக் காமனும், நாமும் ஆகிய அனைவரும் நாய் என்று   சொல்வதற்குத் தகுதியுடையவர்கள் ஆவோம் என்கிறான் என்பதை,

"                              “தீ எனக் கொடிய வீரச் சேவகச் செய்கை கண்டால்

                                 நாய் எனத் தகுதும் அன்றே காமனும் நாமும் எல்லாம்"

                                                                                (கும்பகர்ணன் வதைப்படலம் 1242)

என்ற   பாடல் மூலம் அறியமுடிகிறது.

தன்னை சீதை ஏற்றுக் கொள்ளாததற்குக் காரணம் இராமனின் பேரழகும், வில்திறமையும் தான். அவன் முன்னால் தான் மட்டுமல்ல மன்மதனும் நாய் தான் என்று உண்மையை உணர்ந்த இராவணன்  தன்னையும்,காமனையும் தாழ்த்திக் கூறியதை தெரிந்து கொள்ள முடிகிறது.

நாய் போன்றவன் இராவணன்:

            மாயா சனகனிடம் சீதை, நீயும் நின் உறவினர்களும் மற்றும் இந்த நீண்ட உலகத்தில் உள்ளவரும் என் கண் எதிரே இறந்து போனாலும், ஒழுக்கநெறியிலிருந்து வழுவும்படி வாழ விரும்புவேனோ? வயிரம் போன்ற வன்மையான தோள்களையுடையவனும், ஆயிரம் பெயர்களைக் கொண்டவனும்  திருமாலின் அம்சமுமான இராமனுக்கு ஏவல் புரியும்நான்,உயிரினை விரும்பி,வெட்கத்தைவிட்டு நாயினைப் போன்ற இராவணனை ஏறெடுத்தும் பார்ப்பேனோ?என்றதை

                               " ஆயிர நாமத்து ஆழி அரியினுக்கு இடம் செய்வேன்

                                 நாயினை நோக்குவேனோ நாண் துறந்து ஆவி நச்சி."                                                                                                                    

(மாயாசனகப்படலம்  1640)                             

நாயைக் காட்டிலும் இழிந்தவனே, கட்டமைந்த வில்லினை உடைய இராமனைத் தவிர என் அருகே வந்த ஆடவர்கள் தீயிலே வீழ்ந்த விட்டில் பூச்சிகள் அல்லரோ விலங்குகளுக்கு வேந்தனான ஆண் சிங்கத்தோடு கூடி வாழ்ந்த பெண்சிங்கம், சாக்கடையில் உள்ள அழுக்குப்பொருளைத் தின்னும் நரியுடன் வாழ்வது எங்கேனும்  நடக்குமோ என்றதை

                         “அரியொடும் வாழ்ந்த பேடை அங்கணத்து அழுக்குத்தின்னும்.   .                                            

                           நரியொடும்வாழ்வது உண்டோ , நாயினும் கடைப்பட்டேனோ?"                  

                                                                                                  ( மாயாசனகப்படலம் 1641)

என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.

            சீதைத் தன்னை பெண் சிங்கம், எனவும், இராவணனை அழுக்குப்பொருளைத் தின்னும் நரி எனவும்  நாயைவிடக் கேவலமானதாகும் என்று கூறினாள்.

நாய் தனது நாவினால் நக்குதல் :

           மாயா ஜனகப்படலத்தில் இராவணனிடம் கோபமாக சீதை பேசும் போது, இந்திரஜித் உயிரை இலட்சுமணனது அம்புத் தீண்டி அழிக்க, உயிர் இழந்த அவனது உடலை நாய்த் தனது நாவினால் நக்கும்போது, என் மகன் இறந்து விட்டான் என்று நீ குரல் உயர்த்திக் கதறும் கதறல்களே ஆகும் என்று சினத்தோடு செப்பினாள் என்பதை,

                                   " நன் மகன் வாளி நோக்கி நாய் அவன் உடலை நக்க,                

                                     என்மகன் இறந்தான் என்ன நீ எடுத்து அரற்றல் என்றாள்"

                                                                                               (மாயா சனகப்படலம் 1632)

என்பதன் மூலம்  அறியமுடிகிறது.

தன்னை வஞ்சித்துச் சிறைப்பிடித்த இராவணனைச், சீதைக் கேவலமாகக், கீழ்த்தரமாகக் கூறி அவனை அசிங்கப்படுத்தவும், தன் கோவத்தைக் காட்டவுமே ஒரு நாயாகவேக் கூறினாள்.

நாய் உண்ணும் எச்சில் உணவே மேலனது:

இந்திரஜித் இறந்து அவன் தலையைக் காணாமல்  பதறிய இராவணன் , அளகாபுரி என்னும் பழமையான ஊரையும், இந்திரனின் நகரமான அழகாபுரியையும்  மூன்றுஉலகத்தையும் எனக்கே உரிமைப் பெற்றவனாய் அன்று காத்தேன். ஆனால் இன்றோ, தலையினை இழந்த என் மகனின் உடலை நரி உண்ணக் கண்டேன். நான் உண்ணும் உணவினும் நாய் உண்ணும் எச்சில் உணவே மேலனது என்றான் என்பதை,

                "அரி உணும்  அலங்கல் மௌலி இழந்த என்மதலையாக்கை

                   நரி உணக் கண்டேன் ஊனின் நாய் உணும் உணவு நன்றால்”

                                                                                   ( இராவணன் சோகப்படலம் 3161)

என்பதன் மூலம் அறியமுடிகிறது.

மகன் இறந்த சோகத்திலும், தலையைக் காணாதக் கோபத்திலும், இராவணன் தான் பெற்ற மகனின் உடலைக் காட்டு நரி தன் கண் முன்னேத் தின்பதைக் கண்டவுடன் எதுவும் செய்ய இயலாத நிலையில் ஆற்றாமையுடனும்,கோபத்துடனும் நான் உண்ணும் உணவினும் நாய் உண்ணும் எச்சில் உணவே மேலனது என்றான்.

முடிவுரை:

நன்றிக்கு உதாரணமாகக் கூறப்படும் நாய் இழிபிறப்பாகவும் கொள்ளப்படுகிறது. இறைவன் முன் தன்னை இழிபிறப்பாகக் கூறிக் கொள்வதும் பக்தியின் நிலையாகவேக் கொள்ளப்படுகிறது. அறிவுத் திறத்தையும், அனுபவத்தின் ஆழத்தையும் வெளியிடும் கருவியாக உவமையைக் கம்பர் தம் பாடல்களில் அமைத்துள்ளார். ஓரிடத்தில் ஒப்புமை சொல்ல வேண்டிய இடத்தில் உயர்ந்த பொருட்களோடு ஒன்றை உவமிக்கவேண்டும்.ஓரிடத்தில் கவிஞன் தாழ்ந்த உவமையைக் கையாள்கிறான் என்றால் அதற்கு ஒருத் தனிக் கருத்து இருத்தல் வேண்டும் என்பதையும் அறியமுடிகிறது

துணை நூற்பட்டியல்:

1.இளம்பூரணர் உரை, தொல்காப்பியம்-பொருளதிகாரம், திருநெல்வேலி  

    தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் சென்னை,   

     1953.

2. இளம்பிறை மணிமாறன் கம்பனில் வாழ்வியல் நெறிகள், ,இராஜபாளையம்  

    கம்பன் கழக வெளியீடு, இராஜபாளையம்,2002.

3.சிவராமன்.என். திருவாசகம், சாமி வெளியீடு,சென்னை,2012

4. ஞானசந்தரத்தரசு அ.அ., கம்பன் புதிய தேடல், தமிழ்ச்சோலைப் பதிப்பகம்,  

     புதுக்கோட்டை, 2012.

5.ஞானசம்பந்தன் அ.ச இராமன் பன்முகநோக்கில், ,சாரு பதிப்பகம்,  

    சென்னை,2016.

6. பழ. பழனியப்பன் பழ.  சுந்தர காண்டம் புதிய பார்வை, பழ. பழனியப்பன், 

    வானதி பதிப்பகம், சென்னை 2008.

7.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1, 2, 3, 4, 5, 6,

    7, 8 வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011

8.ஸ்ரீசந்திரன்.ஜெ. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் தொகுதி 1,2,3,  தமிழ்  

    நிலையம், சென்னை,2007.