ஏப்ரல் 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

தூப்புக்காரி நாவலும் கதைமாந்தர்களும்

வினோ ராஜ். லா முனைவர்பட்ட ஆய்வாளர் இலக்குமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நெய்யூர் 27 Jul 2021 Read Full PDF

கட்டுரையாளர்:-

வினோ ராஜ். லா

முனைவர்பட்ட ஆய்வாளர்

இலக்குமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

நெய்யூர் - 629802.

நெறியாளர்:

முனைவர். ஆ.ஸ்ரீகண்டன்

துறைத்தலைவர்

இலக்குமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

நெய்யூர் - 629802.

ஆய்வுச்சுருக்கம்:-

எத்தனையோ எழுத்தாளர்கள் தங்களின் படைப்பிலக்கியத்தை உலகிற்கு தந்தாலும் குமரிமாவட்டத்தில் பிறந்து குமரிமாவட்ட மக்களின் வாழ்வியலைச் சுமந்து அவர்கள் பேசும் வட்டார வழக்குச் சொல்லை எளிமையாக்கி எழுத்தாக்கி தனது தூப்புக்காரி நாவலுக்கு அழகுச் செய்கிறார்கள். அது மட்டும் அல்லாது தனது நாவலின் கதாபாத்திரங்களை அவர்களின் குணங்களை மனநிலைதனை வலிகளோடு ரசித்து வருத்தங்களையும் சமூக அவலங்களையும் “கல்லும் கனிந்துருகும்” வகையில் கதைமாந்தருக்குள் தான் சென்று தானே கதைமாந்தராகி சமூகத்திற்கு வௌ;வேறு தரப்பில் வெளிப்படையாக இலைமறைகாயாக சமூககேடுகளையும் ஜாதியக்கொடுமைகளையும் பெண்ணீய வலிகளையும் தத்துரூபமாக கதைமாந்தர் வழியாக சலவைச் செய்து வெளிச்சம் காட்டுகின்றார்கள் நாவலாசிரியர் மலர்வதி. மனிதனின் குணங்கள் பல இடங்களில் மையப்படுத்தப்படுகிறதை மரணவலிகளோடு பதியம் போட்டிருக்கின்றார். அன்பின் ஏக்கங்களை அது தரும் வலிகளையும் இயலாமைகளையும் காகிதத்தில் மொழிநடையாக்கி தந்துள்ளார்கள். கதைமாந்தரின் கதைக்களம் கற்பனைதனை மிஞ்சும் வண்ணமாக அழகுற காணப்படுகிறது. இயற்கையின் அழகியலை கதைமாந்தரோடு ஒப்புமைச் செய்து இலக்கிய பங்களிப்புச் செய்துள்ளார்கள். அவ்வகையில் தூப்புக்காரி நாவலின் கதைமாந்தர்களின் இயல்பை அவர்களின் குணங்களை. அவர்தம் வாழ்வியலோடு ஆய்வுச் செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

திறவுச் சொற்கள்:-

நாவல் காட்டும் கதைமாந்தர்கள் - கனகத்தின் கண்ணீர் வலிகள் - சுகந்தி மேடத்தின் அதிகாரம் - ரோஸிலியும் அவளது அக்கறையும் - பூவரசியும் அவளின் புதிர்காதலும் - மனோவும் அவனது மாறிய வாழ்வும் - மாரியும் அவன் தியாகமும் - முத்தம்மா பாட்டி.

 

முன்னுரை:-

“இலக்கியம் என்பது ஒரு குறிப்பிட்ட மக்கட்

கூட்டத்தினருடைய செயல்களின் வெளிப்

பாடுமட்டுமல்ல அது ஒரு கால கட்ட

உணர்ச்சிகளின் வெளிப்பாடுங் கூட”.

மனித வாழ்வினை எடுத்தியம்பும் காலக்கண்ணாடி தான் இலக்கியம். இலக்கியம் மனித வாழ்வை மட்டும் படம்பிடிப்பது அல்ல. அவர்தம் பண்புகளையும் சேர்தே வெளிப்படுத்தும். மனிதனின் குணங்கள் நகமும்சதையும் போல பாலும்நீரும்போல பிரிக்க முடியாத தன்மையைக் கொண்டது. அவ்வகையில் தூப்புக்காரி நாவலில் கதைமாந்தர்கள் நாவலுக்கு அழகு சேர்கின்றனர். நாவலின் களங்கள் அனைத்தும் கதைமாந்தரின் ஒட்டுமொத்த பங்களிப்புடன் காணப்படுவது மிகச் சிறப்பு கொண்டதாக கருதப்படுகிறது. நாவலாசிரியரும் கதாப்பாத்திரங்களைப் பயன்படுத்தும் களங்கள் நம் இதயத்திரையில் காட்சிப்படமாக மாற்றப்படுவதும் பல இடங்களில் நம் இதயங்களை உடையச்செய்து விழிநீர்தனை கசியச் செய்வதும் கதாப்பாத்திரங்களின் பாத்திரப்படைப்பின் உச்சமாகத் திகழ்கிறது. அந்த வகையில் தூப்புக்காரி நாவலின் கதைமாந்தரின் இயல்புதனை அவர்களின் பண்புதனை விளக்குவதாக இக்கட்டுரை அமைந்தள்ளது.

 

 

நாவல் காட்டும் கதைமாந்தர்கள்:-

இயலாமையில் வாழும் கனகமும் வறுமையால் உணர்வுகளைத் தனக்குள் முடக்கி வாழும் பூவரசியும் அதிகார தொனியில் அனைவரையும் ஆட்டிபடைக்கும் சுகந்தி மேடமும் ஆறுதலாய் தன்னோடு தோள் சாய்ந்து வார்த்தை அன்பால் அரவணைக்கும் ரோஸிலியும் உடல் சுகத்தை மட்டும் நம்பி வாழும் மனோவும் தலித்திய வலிகளோடு சாக்கடையில் மலம் அள்ளும் மாரியும் இடை இடையே வந்து போகும் முத்தம்மாள் பாட்டியும் மின்னல் போல வந்து போகும் வேலப்பனும் ஆக மொத்த கதைமாந்தர்களைக் கொண்டு தூப்புக்காரி நாவலை ஆடையாக நெய்துள்ளார் நாவலாசிரியர் மலர்வதி.

கனகத்தின் கண்ணீர் வலிகள்:-

“பிறப்பால் மனிதன் சமம்

பிறந்தவன் வாழ்வதற்கு

பிறப்பு ஒரு வரம்”.

ஆனால் நாடார் பிரிவில் பிறந்து கணவனை இழந்து தனது மகளைப் பாதுகாக்க தாழ்தப்பட்டவர்கள் செய்யும் வேலைதனைத் தான் செய்யும் அவலம் நாவலில் எவ்வாறு படம் பிடித்து காட்டப்படுகிறது என்றால்

“தோட்டிகள் தாங்கள் செய்யும்

மாடுபிடிக்கும் தொழிலால் - தலித்திய 

வலியை உணர்வதாக காட்சிபடுத்தபடுகிறது”

- தோட்டியின் மகன்.

(தகழி சிவசங்கரப்பிள்ளை).

ஜாதி என்பது மனிதன் செய்யும் தொழில் அடிப்படையில் என்பதை கனகத்தின் தொழிலால் படம்பிடித்து காட்டப்படுகிறது. ஐஞ்சுக்கும் பத்துக்கும் கனகம் படும் பாடு மருத்துவமனையில் படும் அவலம் திருமண வீடுகளில் எச்சியிலைதனை எடுக்கும் போது கனகம் படும் வேதனைகள் பசிமயக்கம் தன் மகளின் திருமண கனவு என அனைத்து வலிகளையும் தனக்குள் சுமந்து நடைபிணமான வாழ்க்கையில் கண்ணீரைத் துடைத்து கிழிந்து போன ஆடைக்குள் மானம் மறைத்து வாழும் கனகத்தின் வாழ்வினை கண்ணீரின் வலிகளாக நாவலில் காட்சிப்படுத்தப்படுகிறது.

சுகந்தி மேடத்தின் அதிகாரம்:-

“நாம் பெறும் சுபாவமான அனுபவப்

பெருவெளி பிரமிப்பூட்டக் கூடியது”

- வாழ்ந்தவர் கெட்டால்

(க.நா.சுப்ரமணியம்)

அதிகாரத் தொனியில் அனைவரையும் அதட்டி அடிபணியச் செய்து தனக்கென ஒரு இடத்தைக் கொண்டவர் தான் சுகந்திமேடம். நிர்வாகப் பொறுப்பைத் தான் கொண்டு உழைப்பவர்களை இயந்திரமாக உழைக்கச் செய்து அவர்களின் உழைப்பில் குளிர்காய்வது இவர்களின் வேலை. தனக்கு கீழ் உழைப்பவர்களை நாயாக அடிமைப்படுத்தும் கல்நெஞ்சம் கொண்ட படைப்பாளியாகவும் பெண்ணுக்கு பெண் எதிரியான குணம் கொண்ட பாத்திரப்படைப்பாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ரோஸிலியும் அவளது அக்கறையும்:-

கனகம் சோர்ந்த போதெல்லாம் அவளுக்கு தோள் கொடுக்கும் நட்பின் படைப்பாளியாக நாவலில் படம் பிடித்து காட்டப்படுகிறது. ஏழைக்கு துணை ஏழை. தான் கொண்டுவரும் தேயிலை நீரையும் சிறு உணவினையும் பகிர்ந்து உண்டு ஆறதலின் வடிவமாய் அமைதியின் மறுபிறப்பாய் கனகத்திற்கு அறிவுரைச் சொல்லி வழிநடத்தும் தனித்தன்மையும் ரோஸிலியிடம் மிகுந்து இருப்பதை அதிகம் பார்க்க முடிகிறது. இலக்கிய நட்பு இங்கு அதிகம் காட்சிப்படுத்தப்படுகிறது.

பூவரசியும் அவளின் புதிர்காதலும்:-

காதல் இல்லா வாழ்வு

அது கண்ணில்லாத வாழ்வு

காதல் அது வேண்டும்

கானல் நீராய் அல்ல.

வறுமையில் பிறந்தாலும் காதலில் ஒன்றிப்போன பாத்திரப்படைப்பு பூவரசி. குடும்ப நிலை இயலாமை வறுமை இவைகள் தன்னை அமிழ்த்திய போதும் காதலில் ஊறிப்போனாள். மௌனக்காதலில் தொடங்கிய அவளின் ஒருதலையான காதல் அதை மனோவிடம் வெளிப்படுத்தும் இடங்கள் மனோவுக்காக தான் காத்திருந்த இடங்கள் மருத்துவமனையில் அவளின் காதல் தவிப்பு அபலையாக அநாதையாக தனிமைப்படுத்தும் இடங்கள் நம்மையும் கண்ணீர் மல்கச் செய்கிறது. மனோவை நம்பி தன் கற்பினை இழந்து முகவரி தெரியாத குழந்தையோடு பெண்ணிய வலிகளைச் சுமந்து தனது வாழ்வுதனை குழந்தையோடு மீட்டெடுக்கும் வலிநிறைந்த படைப்பாகவும் தனது குழந்தையின் வாழ்வினை மீட்டெடுக்கும் பொறுப்புள்ள தாயாகவும் ஆசிரியர் காட்சிப்படுத்துவதைக் கண்கூடாக காண முடிகிறது.

மனோவும் அவனது மாறிய வாழ்வும்:-

“வெளியே மனிதன் உள்ளே மிருகம்”

- மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்!

(மதன்)

இவ் உணர்வின் அடிப்படையில் பசுதோல் போர்த்திய புலியென வாழ்பவனாக மனோவின் பண்பானது நாவலில் சுட்டிக்காட்டப்படுகிறது.

உழைப்பை மட்டும் நம்பி வாழ்ந்த மனோ வசதியான வாழ்வில் வாழ்கிறவன். வசதியும் ஆடம்பரமும் வாழ்வில் வந்தால் வேறு என்ன வேண்டும் என்ற உணர்வு அவனுக்குள். இளமை துடிப்பு அவனில் அதிகம். எதிர்பாராத அவன் கழுகு பார்வையில் இரையாகும் அப்பாவி பெண் பூவரசி. திருமணம் செய்யும் ஆசையில் அவளை வஞ்சிக்கின்றான். ஏமாற்றும் குணம் கொண்ட இவன் பூவரசியை ஏமாற்றுகின்றான். ஜாதீய கட்டமைப்புக்குள் தன்னை தக்கவைக்கின்றான். தன்னால் வாழ்விழந்து போன பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்காத குணம் கொண்ட படைப்பாளி. உடல் சுகம் மட்டும் தான் அவனுக்கு உள்ளத்தின் அன்பைப் புரியாத ஒரு அரக்க குணம் கொண்டவனாக இங்கு காட்சிப்படுத்தப்படுகிறது.

 

 

 

மாரியும் அவன் தியாகமும்:-

சாக்கடையில் மலர்ந்த 

இந்த தலித்திய மனிதன் 

மனித நேய மலராக 

தூப்புக்காரி நாவலில்.

தியாகம் கொண்ட படைப்பாளியாக உண்மை அன்பை கொண்டவனாக திட்டு திட்டான பீதனைச் சுமக்கும் ஒரு தியாகத்தின் உச்சமாக காணப்படும் மாரி “தோட்டியின் மகன்” நாவல் கதாப்பாத்திரத்தை நினைவு படுத்துவதாக அமைந்துள்ளது. தன் கண்முன்னே கயமைதனைக் கண்டும் கலங்காமல் உனக்கு மனைவியாக உன் குழந்தைக்கு நல்ல அப்பாவாகவும் இருக்கிறேன் என்று பூவரசியிடம் சொல்லும் அளவிற்கு பக்குவமான அன்பில் அடுத்தவர் துயரில் தன்னை இணைத்துக் கொள்ளும் தியாகம் கொண்ட அன்பு மகனாக மாரியின் தியாகங்கள் மனித நேயத்தில் தோய்ந்து நாவலில் சிறப்புச் செய்கிறது.

“ஒரு பீத்துணியக் கூட

விட்டுட்டுப் போகாம இப்புடி புள்ளயத்

தூக்கிட்டு போய்ட்டாளே”

(பீக்கதைகள் பெருமாள் முருகன்)

இத்தகைய தாய்மை உணர்வு மாரியின் மலம் அள்ளும் தொழிலில் வெளிப்படுவதை நாவலில் காணமுடிகிறது.

முத்தம்மா பாட்டி:-

வயதில் முதிர்ந்தவர்கள் வாழ்க்கைப்பாடம் நிரம்ப கற்றவர்கள். மாரியின் பழக்கப்பட்ட முத்தம்மா பாட்டி கதையின் இடையே சில இடங்களில் வந்தாலும் அவர் வந்த போகும் சில இடங்கள் வாழ்க்கையின் பல பயன்கொண்ட வாழ்வியல் கருத்துதனை நமக்கு திட்டவட்டமாக வெளிக்காட்டுவதை நம்மால் காணமுடிகிறது.

 

“மனவலிமை மிக்க தாய்மை உணர்வில்

மனபோராட்டம் விலகும்”.

அம்மா வந்தாள் (தி. ஜானகி ராமன்)

இந்த தாய்மை உணர்வும் முத்தம்மா பாட்டியின் கதாபாத்திரத்தில் புலப்படுவதைக் காணலாம்.

முடிவுரை:-

இவ்வாறு தூப்புக்காரி நாவலின் கதைமாந்தரின் தனிப்பட்ட பண்புகளும் நாவலில் அவர்களின் தனிப்பட்ட ஆளுமைகளும் நம்மால் உணர முடிகிறது. மனிதன் தனது முழு ஆளுமைப்பண்பையும் அவனுடைய உடலுழைப்பையும் சமூகத்திற்கு தந்தாலும் அவனின் நல்ல பண்புகளே சிறப்பான பண்பாக கருதப்படுகிறது.

எண்பத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்

பண்புடைமை என்னும் வழக்கு.

- குறள் 991.

ஆக நல்ல கதாப்பாத்திரங்கள் தான் நல்ல ஒரு நாவலைத் தர முடியும் என்ற நம்பகத் தன்மையில் நாவலாசிரியர் கதைமாந்தர்களைளயும் அவர்களின் பண்புநலன்களையும் ஆழமாகப் புலப்படுத்தும் சிறப்பினை இந்த கட்டுரை வழியாக உணரமுடிகிறது.

பயன்பட்ட நூற்கள்:

1. தூப்புக்காரி மதிவெளியீடு ஜனவரி 2012.

2. அம்மா வந்தாள் காலச்சுவடு பதிப்பகம் பிப்ரவரி 1966.

3. வாழ்ந்தவர் கெட்டால் நற்றிணை பதிப்பகம் டிசம்பர் 2011.

4. மனிதனுக்குள் ஒரு மிருகம் அனல் வெளியீடு.

5. பீக்கதைகள் அடையாளம் டிசம்பர் 2004.

6. தோட்டியின் மகன் காலச்சுவடு பதிப்பகம் ஆகஸ்ட் 2000.