ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

தமிழியல் வரலாறு எழுதியலில் செந்தமிழ் இதழின் பங்களிப்பு.

பி.ஜீவா 13 Oct 2020 Read Full PDF

கட்டுரையாளர்: பி.ஜீவா.

முனைவர் பட்ட ஆய்வாளர் (முழுநேரம்)

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

தரமணி, சென்னை – 600113.

நெறியாளர்: அ.சதீஷ்

இணைப்பேராசிரியர்

தமிழ் இலக்கியம் (ம) சுவடியியல் புலம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

தரமணி, சென்னை – 600113.

ஆய்வுச்சுருக்கம்:

தமிழியல் வரலாற்றில் இதழ்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகுக்கின்றன. அந்த வகையில் தமிழ் இதழியல் வரலாற்றில் தமிழாய்வினை மட்டும் நோக்கமாக கொண்டுத் தொடங்கப்பட்ட முதல் இலக்கிய இதழ் செந்தமிழ் ஆகும். இவ்விதழ் இலக்கியம், இலக்கணம், வரலாறு, மொழிபெயர்ப்பு, பதிப்பு என்னும் பல தன்மைகளில் செயல்பட்டுள்ளது. இவ்விதழ் வழி வந்த கட்டுரைகள் தமிழியல் வரலாற்றில் அதுவரை இல்லாத புதியதான ஆய்வு அணுகுமுறைகளை உண்டு பண்ணியது. இதன் வழி தமிழியல் வரலாற்றில் ஆய்வு அறிஞர்கள் பலர் அடையாளப்படுத்தப்பட்டனர். இவ்விதழில் வந்த கட்டுரைகளே பின்னர் ஆய்வு நிகழ்த்துவற்கானக் களனை ஏற்படுத்திக் கொடுத்தது. இப்படி இவ்விதழில் பல்வேறு தன்மைகளில் எண்ணிறைந்த கட்டுரைகள் வெளிவந்துள்ளன. அவை அனைத்தும் வரலாறு எழுதுகையில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை இக்கட்டுரை ஆராய்ந்து விளக்கியுள்ளது.

திறவுச் சொற்கள்

        செந்தமிழ் இதழ், வரலாறு, இதழியல் வரலாறு, இருபதாம் நூற்றாண்டு ஆய்வுப்போக்கு.

தமிழ் மொழி வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டு அயல்மொழி பாதிப்பிற்கும் ஆங்கிலக் கல்வியின் ஆதிக்கத்திற்கும் ஆட்பட்ட காலக்கட்டம். இக்காலத்தில் தமிழ், தமிழிலக்கியம் பற்றிய சிந்தனை, ஆய்வுக்போக்கு ஆகியவற்றைப் பிரதிபலிப்பதில் பத்திரிகைகள் முக்கிய பங்கு ஆற்றியுள்ளன. இப்பத்திரிக்கைகளில் உள்ள தகவல்களை ஆவணப்படுத்துதல், ஆய்வு செய்தல் மூலம் அன்றைய தமிழ் ஆய்வுப்போக்கை அறிந்துக் கொள்ள பெரும் துணையாக இருக்கும். இதழ்கள் தமிழ் மொழி பற்றியும் தமிழ் இலக்கியம் பற்றியும் ஒரு பெரிய சிந்தனைப் போக்கை ஏற்படுத்தியதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சில இதழ்கள் தமிழுக்காகவும் தமிழ் இலக்கியத்திற்காகவும் தம்மையே அர்ப்பணித்திருக்கின்றன. தமிழ் உரைநடையை வளர்த்தெடுத்ததில் பத்திரிகைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. அந்த வகையில் 20ஆம் நூற்றாண்டில் எண்ணற்ற இதழ்கள் தோன்றியிருந்தாலும் தமிழ் ஆய்வுக்காக தொடங்கப்பட்ட முதல் இலக்கிய இதழ் செந்தமிழ் ஆகும். இவ்விதழ் தொடங்கப்பட்ட அக்கால சூழலானது ஆங்கிலேய ஆட்சிக்கு உட்பட்டு இருந்த நம்நாட்டு மக்கள் மொழி, இன உணர்வுக்காகவும் போராடிக் கொண்டிருந்த காலச்சூழல். அதே சமயம் அரசியல், சமயம், மொழி, இன உணர்வு என புதிய புதிய போக்குகள் உருவாகி மக்களிடத்தில் கிளர்ச்சியை உண்டு பண்ணின. ஆனால் தமிழ் மொழியை பொறுத்தவரை இக்காலக்கட்டம் தமிழுக்கே உரிய பழைய இலக்கியங்களும் தமிழுலகம் அறியாத மேனாட்டு புதிய இலக்கிய வடிவங்களும் ஒரு சேர வெளிப்படுத்தப்பெற்ற காலமாகும். மற்றொருபுறம் நவீன வரலாற்று எழுத்து முறையும் வளர்ந்து வந்தது. இத்தகைய போக்குகள் கொண்ட காலச்சூழலில் 1902-1925 ஆகிய காலவரையறைக்குள் வெளிவந்த செந்தமிழ் இதழின்  செயல்பாடுகள் குறித்து ஆராய்ந்து மதிப்பிடுவதாக இக்கட்டுரை அமைகிறது.

மதுரைத் தமிழ்ச் சங்கம்

மதுரைத் தமிழ்ச் சங்கம் 1901இல் பாண்டித்துரைத்தேவர் தலைமையில் உருவாக்கப்பட்டது. இச்சங்கத்தின் நோக்கம், தமிழ்க் கலாசாலை உருவாக்குதல், தமிழ் ஏடுகள் மற்றும் அச்சிட்ட தமிழ் நூல்கள் அனைத்தையும் தேடிப்பெற்று பிறருக்குப் பயன்படுமாறுத் தொகுத்து வைத்தல், வெளிவராத தமிழ் நூல்களைப் பதிப்பித்து வெளிப்படுத்துதல், வடமொழி, ஆங்கிலம் முதலிய மொழிகளில் உள்ள அரிய நூல்களை மொழிபெயர்த்து வெளியிடல், தமிழ் கல்வியைப் பற்றியப் பத்திரிக்கை வெளியிடல், தமிழில் தேர்வு வைத்து உயர் தரத்தில் தேரியோர்க்குப் பட்டம் பரிசு முதலியன அளித்தல், தமிழறிஞரைக் கொண்டுச் சொற்பொழிவு நிகழ்த்துதல், அக்காலத் தமிழறிஞர்கள் யாவரையும் ஒன்றுக் கூட்டி தமிழாராய்தல், தேவையான நூல் உரை முதலியன செய்வித்தல், பிறர் செய்த நூல் உரை முதலியனவற்றை அரங்கேற்றல் முதலியனவே இச்சங்கத்தின் நோக்கம் ஆகும். இச்சங்கம் தொடங்கப்பட்ட அக்கால சூழலானது உரிமைக்காகவும், மொழிக்காகவும் போராடிக்கொண்டிருந்த நம் நாட்டு மக்களிடையே தமிழ் ஆராய்ச்சியை முன்னிலை படுத்த வேண்டும் என்பதற்காகவும் மேற்சொன்ன விஷயங்களை நிறைவேற்றும் விதமாகவும் இச்சங்கத்தாரால் 7 அமைப்புகள் நிறுவப்பட்டன. அவை, 1.சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை (கல்லூரி), 2.பாண்டியன் புத்தகச்சாலை (நூல்நிலையம்), 3.தமிழ்ச் சங்க முத்திராசாலை (நூல், பத்திரிகை வெளியிடுவதற்கான அச்சகம்), 4.கல்விக் கழகம் (வித்துவான் கூட்டம்), 5.தமிழில் தேர்வுகள் நடத்துதல், 6.நூலாராய்ச்சிச் சாலை, 7.செந்தமிழ் இதழ் ஆகியன தோற்றுவிக்கப்பட்டன. இந்த ஏழு அமைப்புகளில் செந்தமிழ் இதழின் செயல்பாட்டை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

செந்தமிழ் இதழ்

          செந்தமிழ் இதழ் சுபகிருது வருடம்-கார்த்திகை மாதம் (1902 டிசம்பர் 7) மதுரைத் தமிழ் சங்கத்தின் மாத இதழாக தோற்றுவிக்கப்பட்டது. இவ்விதழின் நோக்கம்,

“இதுகாறும் அச்சிடப்படாத செந்தமிழ் நூல்களும், தமிழ் நாட்டுப் புராதன சரிதங்களும் சாஸனங்களும், வடமொழியினும் ஆங்கிலத்தினும் தமிழிற்கு வேண்டுவனவாகக் கருதப்படும் நூன் மொழிபெயர்ப்புக்களும், தமிழின் அருமை பெருமை அடங்கிய விஷயங்களும், தமிழாராய்ச்சியைப் பற்றியனவும், தமிழ் வளர்ச்சிக்கு வேண்டுவன பிறவும் இதன் வாயிலாக வெளிவரும்” (பக்:10).

என்பதாகும். இதழின் பத்திராசிரியராக  தொகுதி 1 முதல் தொகுதி 2 வரை ரா.ராகவையங்காரும், தொகுதி 3 முதல் தொகுதி 9 வரை மு.ராகவையங்காரும், தொகுதி 10 முதல் தொகுதி 46 வரை நாராயணையங்காரும் இருந்துள்ளனர். இவர்கள் மூவரும் இதழின் ஆசிரியராக இருந்த காலத்தில் இவ்விதழின் செயல்பாடுகள் ஒரே மாதிரியாக இல்லை. ரா.ராகவையங்கார் ஆசிரியராக இருந்த காலத்தில் இவ்விதழ் எக்காரணத்திற்காக தொடங்கப்பட்டதோ அதனை நிறைவேற்றும் வகையில், பதிப்பு, ஆராய்ச்சி, நூல் மதிப்பீடு, கல்வெட்டு, சாசனம், மொழிபெயர்ப்பு, சரித்திரம் ஆகியன குறித்து இதழில்  வெளிவந்த கட்டுரைகளின் வழி அறிய முடிகிறது. இவர் ஆசிரியராக இருந்த காலத்து நல்லிசைப் புலவர் மெல்லியலாளர்கள் குறித்தும், பரிபாடலுக்கு பரிமேழலர் உரை எழுதியதையும், சி.வை.தா 1885இல் பதிப்பித்து வெளியிட்ட தொல்காப்பிய பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரையின் பின்னான்கு இயல்கள் பேராசிரியர் உரை என்பதையும், புறநானூறு ‘மீனுன் கொக்கின்’ என்னும்  செய்யுளையும் ஆராய்ந்து முதன் முதலில் செந்தமிழில் வெளியிடுகிறார். 1902-1904 ஆகிய இவ்விடைப்பட்ட காலப்பகுதிக்குள் ஐந்தினை ஐம்பது (1902), கனாநூல் (1902), நேமிநாதம் மூலமும் உரையும் (1903), திருநூற்றந்தாதி மூலமும் உரையும் (1904), திணைமாலை நூற்றைம்பது மூலமும் உரையும் (1904), முத்தொள்ளாயிரச் செய்யுட்கள் (1905), இனியவை நாற்பது மூலமும் உரையும் (1903), பன்னிரு பாட்டியல் (1904), நான்மணிக்கடிகை (1904), வளையாபதி செய்யுட்கள் (1903) முதலிய நூல்களைப் பதிப்பித்தும் உள்ளார்.

ஆனால், மு.இராகவையங்கார் ஆசிரியராக இருந்தக் காலத்தில் தமிழ் ஆய்வுக்காகத் தொடங்கப்பட்ட இதழ் என்பதிலிருந்து விலகி பயிர்தொழில், விவசாயம், தொழில், வர்த்தகம், இந்து மதம், ஈயம், அறிவு, நித்திரை, ஒற்றுமை, கரிவாயு, மதுவிலக்கு, ஈகை, யானையாராய்ச்சி, குதிரையாராய்ச்சி, பக்தி என பிற தன்மையிலான கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. அதுமட்டும் இல்லாமல் ஜனவிநோதினி, சுதேசமித்திரன் ஆகிய இதழ்களில் வெளியானவற்றையும் இவ்விதழில் வெளியிட்டுள்ளனர். இவை இவ்விதழின் நோக்கத்தில் இருந்து மாறுபட்ட செயல்பாட்டை வெளிப்படுத்துகின்றன.  இவர் ஆசிரியராக இருந்தக் காலத்தில் இதழின் வழி பதிப்பித்து வெளியிட்ட நூல்கள் நரிவிருத்தம், சிதம்பரப் பாட்டியல், திருக்கலம்பகம் மூலமும் உரையும், விக்கிரம சோழனுலா, சந்திராலோகம், கேசவபெருமாள் இரட்டை மணிமலை, பெருந்தொகை, நூற்பொருட் குறிப்பு, நிகண்டகராதி, திருக்குறள் பரிமேலழகருரை முதலியன ஆகும். இவரே ‘ஐயன் ஆரிதன்’ என்னும் புனைப்பெயரிலும் எழுதியுள்ளார். இவர் தமிழர் நேசன், கலைமகள், வித்யாபாநு, ஹரிசமய திவாகரன், ஸ்ரீ வாணிவிலாஸினி முதலிய  இதழ்களிலும் எழுதியுள்ளார்.   

மு.ராகவையங்காரை அடுத்து இதழின் ஆசிரியராக நாராயணையங்கார் நியமிக்கப்படுகிறார். மு.இராகவையங்காரை ஆசிரியர் பதவியில் இருந்து நீக்கி நாராயணையங்கார் ஆசிரியர் பொறுப்பில் நியமிக்கக்   காரணம் இதழ் தன்னுடைய நோக்கத்தில் இருண்டு விலகி செயல்பட்டிருகிறது என்பதை உணர்ந்து பாண்டித்துரைத் தேவர் இச்செயலைச் செய்கிறார். அதுபற்றி சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவருக்கு பாண்டித்துரைத்தேவர் எழுதிய கடிதம் வழி இதனை உணர்ந்துக் கொள்ள முடிகிறது. அவை,

“மதுரைத் தமிழ்ச் சங்கம், செந்தமிழ்ப் பத்திராதிபராய் இருந்த மு.இராகவையங்காரை நீக்கித் திரு.நாராயணையங்காரவர்களை எடிற்றராக நியமித்திருக்கிறேன். இனி, செந்தமிழ் நல்ல  கட்டுரைகளோடு உரிய காலங்களில் தவறாது வெளிவருவதற்கு வேண்டுவன செய்திருக்கிறேன். தங்கள் என்மீது தயைகூர்ந்து நம் செந்தமிழ் தம் விஷயங்களைக் கொண்டு முன்னிலுஞ் சிறந்து விளங்குமாறு செய்தற்குக் கேட்டுக்கொள்ளுகிறேன். தங்களன்பன் பாண்டித்துரை அக்கிராசனாதிபதி (1970:108)”.

ஆனால், நாராயணையங்கார் ஆசிரியர் பொறுப்பு ஏற்ற சில நாட்களிலே பாண்டித்துரைத்தேவர் இறந்து விடுகிறார். இதனால், புதியதாய் ஆசிரியர் பொறுப்பில் ஏற்பட்ட மாற்றமும் பாண்டித்துரைத் தேவரின் இறப்பும், அதனைத் தொடர்ந்து சங்க அங்கத்தினர் சிலரின் இறப்பும் இதழைத் தொடர்ந்து வெளியிடுவது என்பதே நாராயணையங்காருக்குச் சவாலாக இருக்கிறது. இவர் ஆசிரியராக இருந்தக் காலத்தில் மேற்சொன்ன விஷயங்கள் தவிர்க்கப் பட்டதா என்றால் இல்லை.  இவை தவிர்த்துப் பார்த்தால் சங்க அறிக்கைகள், வரவு செலவு கணக்கு குறித்தும், பிற சங்கங்கள் பற்றிய விஷயங்களும் தொடர்ந்து இதழில் வெளியிடப்பட்டுள்ளன. போக போக இவ்விதழின் தரம் குறைந்து ஆய்வு இதழாக மட்டும் செயல்படும் இதழ் போல் அல்லாமல் பன்முக தன்மை பொருந்திய இதழாக உருமாறியுள்ளதை இதழில் வெளியான கட்டுரைகளின் வழி அறிய முடிகிறது. மதுரைத் தமிழ்ச் சங்கமும் செந்தமிழ் இதழும் தன்னுடைய நோக்கத்திலிருந்து விலகி மாறுபட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டே செந்தமிழ் செல்வி இதழ் தோற்றுவிக்கப்பட்டதாக பெரியார் அன்றைய குடியரசு இதழின் (10.10.1926) நூல் மதிப்புரைப் பகுதியில்1 குறிப்பிட்டிருப்பதும் இங்கு இதனோடு இணைத்துப் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.

இதழின் ஆய்வுப்போக்கு

        இவ்விதழின் ஆய்வுப்போக்குப் பின்வருமாறு அமைந்துள்ளது. அவை,

  1. பதிப்பாகாத நூல்களைக் கண்டறிந்து இதழ் வழி பதிப்பித்தல் என்ற முறையை உருவாக்கியது.
  2. பதிப்பான நூல்களுக்கான ஏட்டுப் பிரதிகளைக் கண்டறிந்து விடுபட்டப் பாடல்கள், பிரதிபேதம் ஆகியவற்றை ஆராய்ந்து வெளிப்படுத்தியது.
  3. பதிப்பான நூல்களுக்கான உரைத் தன்மையை ஆராய்ந்து வெளிப்படுத்தியது.
  4. பதிப்பான, பதிப்பாகாத உரையாசிரியர்களின் உரையைக் கண்டறிந்து வெளிப்படுத்தியது.
  5. தன் கருத்தை நிலைநாட்டப் பதிப்பான, பதிப்பாகாத நூல்களில் இருந்துச் சான்றுக் காட்டி நிறுவியது.
  6. இலக்கியம், இலக்கணம், கல்வெட்டு, சரித்திரம், சாஸ்திரம், புராணம் முதலிய பல்துறைச் சார்ந்த அறிவு பின்புலத்தோடு ஆய்வு அணுகுமுறையை உருவாக்கியது.
  7.  நூல்களின் வழி மறுப்பு தெரிவித்தல் என்பதிலிருந்து இதழ்களின் வழி மறுப்புத் தெரிவித்தல் என்ற முறையை உருவாக்கியது.
  8. வெளிப்படுத்தப்படாத கல்வெட்டு, சாசனம், சரித்திரம் ஆகியனவற்றை ஆராய்ந்து வெளிப்படுத்தியது.
  9. அன்றைய ஆய்வாளர்களை வளர்த்தெடுத்தப் பெருமை இவ்விதழுக்கே உறியதாகும். இதன் வழி பலர் அடையாளப்படுத்தப்பட்டனர்.

10. பிறமொழி கருத்துக்களை மொழிப்பெயர்த்து வெளியிட்டதன் மூலம் தமிழ் மக்களிடத்தில் பிறமொழி அறிவையும், தமிழ் அறிவையும் உண்டு பண்ணி அவர்களைப் பன்மொழி சார்ந்த அறிவுப் பின்புலத்தோடு இயங்க செய்தது.

11. இதழின் வழி உரைநடைத் தன்மையை வளரச்செய்தது.

12. தமிழ்ச் சூழலில் தமிழியல் ஆய்வுகள் அனைத்தும் ஆங்கிலத்தில் எழுதுவதே சிறந்தது என்ற எண்ணப்போக்கு அப்போது உருப்பெற்றிருந்தது. இத்தன்மையில் இருந்து மாறி தமிழியல் ஆய்வை தமிழில் எழுதுதல் என்ற தன்மையைக் கட்டமைத்தது இவ்விதழே ஆகும்.

13. இவ்விதழின் கட்டுரையாசிரியர்கள் ஒரு சிலர் கட்டுரைக்குரிய ஆய்வுப்பொருளை தாமே அரிதின் தேடிக் கொண்டனர் என்றே சொல்லவேண்டும். அதோடு பின்வந்த ஆய்வுகளுக்கு இவ்வாய்வுகள் வழிவகை செய்துக்கொடுத்தன.

14. இலக்கிய ஆராய்ச்சி என்பது இலக்கியத்தோடு நின்று விடுவதன்று. அவை, வரலாறு, கல்வெட்டியல், தொல்லியல் இன்னும் பிற துறைகளோடு தொடர்புடையது என்பதை இவ்விதழ் வழி வந்த கட்டுரைகள் கட்டமைத்தன. அதோடு இவைகள் ஒன்றோடொன்று தொடர்பு உண்டு என்பதையும் நிறுவின.

மேற்கண்ட ஆய்வுப் பின்புலத்தோடு இவ்விதழில் வெளிவந்த தமிழியற் கட்டுரைகளை 12 வகையாகப் பகுக்கலாம். அவை, 1.இலக்கியம், 2.இலக்கணம் 3.வரலாறு, 4.பதிப்புகள், 5.கல்வெட்டு மற்றும் சாஸனம், 7.சரித்திரம், 8.மொழிப்பெயர்ப்பு, 9.புராணம், 10.காப்பியம், 11.இதிகாசம், 12.பொதுவானக் கட்டுரைகள் என பகுத்து இனங்காணலாம்.

இலக்கியம் சார்ந்த கட்டுரைகளில் சங்க இலக்கியம் தொடர்பாக 138 கட்டுரைகளும், பக்தி இலக்கியம் தொடர்பாக 33 கட்டுரைகளும், நீதிநூல்கள் தொடர்பாக 68 கட்டுரைகளும், சிற்றிலக்கியம் தொடர்பாக 120 கட்டுரைகளும் ஆகும். இலக்கணம்தொடர்பாக 175 கட்டுரைகளும், புராணம் தொடர்பாக 85 கட்டுரைகளும், இராமாயணம் தொடர்பாக 87 கட்டுரைகளும், பாரதம் தொடர்பாக 15 கட்டுரைகளும், காப்பியம் தொடர்பாக 38 கட்டுரைகளும், வரலாற்று தொடர்பாக 68 கட்டுரைகளும், சாசனம் தொடர்பாக 51 கட்டுரைகளும், கல்வெட்டு, செப்பேடு தொடர்பாக 8, சரித்திரம் தொடர்பாக 63 கட்டுரைகள் ஆகியன ஆகும்.

        இவ்விதழில் வெளிவந்த கட்டுரைகள் வரலாறு எழுதுகையில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எடுத்துக்காட்டும் விதமாக இதழில் வந்த ஒரு சில கட்டுரைகள் மட்டும் சான்று கருதி எடுத்துக்காட்டப்படுகிறது.

        வேளிர் பற்றி குறிப்பிடுகையில் கன்னட ஒய்சள பேலாலரையும் தமிழக வேளிரையும் ஒரு குலத்தில் உதித்த யாதவ மரபினர் என்றார் வி.கனகசபைப்பிள்ளை. இதனைக் கொண்டு மு.இராகவையங்கார் வேளிர் வரலாற்றை செந்தமிழில் 1905இல் (தொகுதி3, பகுதி 7) எழுதியுள்ளார். இதில் வேளிர்கள் துவாரகையில் இருந்து வந்து குடியேறிய வந்தேறிகள் என குறிப்பிட்டுள்ளார். இதனை மறுத்து ப.தி.கார்த்திகேய முதலியார் ‘வேளிர் வரலாற்று மறுப்பு’ (தொகுதி4,பகுதி5) என்ற தலைப்பில் எழுதியுள்ளார். இதில் வேளிர் வரலாற்றை எழுதுவதற்கு காரணமாய் அமைந்த புறம் 201வது பாடலில் இடம்பெற்றிருக்கும் ‘துவராபதி’ என்ற சொல்லுக்கு மு.இராகவையங்கார் கூற்றிலிருந்து மாறுபட்டு ‘பாசறை’ என பொருள்கொள்கிறார். அதோடு பாண்டியநாட்டில் மிழலைக் கூற்றத்தின் பிரிவாகிய துவாராபதி நாடு இன்றுமுளதென்பர். அது ஈதென்பதற்கும் யூகமுளது என்பதாக குறிபிட்டுள்ளார். இதன் பிறகு குறிப்பிட்ட சில வேளிர் தலைவர்கள், மன்னர்கள் குறித்த கட்டுரைகள் வெளிவந்துள்ளன. பின்னர் மு.இராகவையங்காருக்கு மறுப்பாக ந.மு.வேங்கடசாமிநாட்டார் ‘வேளிர் வரலாற்று ஆராய்ச்சி’ (1915) என்ற நூலை எழுதியுள்ளார். அதில் மு.இராகவையங்கார் வேளிர்களின் பூர்விகம் மகாராஸ்டிர கூர்ச்சர துவாரகை என்று குறிப்பிட ந.மு.வேங்கடசாமிநாட்டார் துவரை என்பது புதுக்கோட்டை பகுதியில் இருந்ததொரு நகரம் என்றும், புதுக்கோட்டையில் உள்ள கொடும்பாளூர் வேளிர்களின் இடமாக விளங்கியது. இருங்கோவேளிர் என்பாரும் இருக்குவேளிர் என்பாரும் ஒரு பிரிவினரே. புதுக்கோட்டைக்கு அண்மையில் உள்ள பிரான்மலையே பறம்பு மலை என்பர். கபிலர் பாரியின் பெண்களை அழைத்துக்கொண்டு கன்னட நாடு சென்றார் என்பதினும், அண்மையில் உள்ள துவாரையில் (புதுக்கோட்டை) இருந்து ஆண்ட இருங்கோவேளிடமும், பச்சைமலையை ஆண்ட குறுநில மன்னனிடமும் போனான் என்பது நடைமுறைக்கு ஒத்ததாகும் எனக் கூறி மு.ராகவையங்கார் கருத்தை மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து வேளிர் வரலாற்றைப் பற்றி இன்றுவரைப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் மொ.அ.துரையரங்கசாமி, ர.பூங்குன்றன், வே.மகாதேவன், நெல்லை நெடுமாறன், க.சண்முகசுந்தரம் போன்றோரின் நூல்கள் குறிப்பிடத்தக்கதாகும்.

        சேரரர்களின் தலைநகர்   எது என்பதைக் குறித்தும் பல்வேறு ஆய்வுகள் வெளிவந்துள்ளன. வஞ்சி பற்றி வி.கனகசபைப்பிள்ளை குறிப்பிடுகையில் மேற்கு மலைத் தொடரின் அடிவாரத்தில் பேரியாற்றங்கரையில் ஒரு பாழுருக்குத் திருக்கரூர் என்னும் பெயர் வழங்குவதுக் கொண்டு அப்பாழுரையே வஞ்சி என்று குறிப்பிட்டார். இதன் பின் மு.இராகவையங்கார் சேரன் செங்குட்டுவன் என்ற நூலில் (1915 செந்தமிழ் பிரசுரம்) சேரரின் தலைநகர் திருச்சிக்கு மேற்கே அம்பிகாவதி ஆற்றின் மேலதாக அமைந்திருக்கும் கருவூரே வஞ்சி என குறிப்பிட்டுள்ளார். இதனை மறுத்தும் ஆதரித்தும் பின் செந்தமிழ் இதழில் கட்டுரைகள் ஒரு சில வெளிவந்துள்ளன. மு.இராகவையங்காரின் கருத்தை மறுத்து சோமசுந்தர பாரதியார் சேரர் பேரூர் என்னும் தலைப்பில் (தொகுதி15, பகுதி6,7) எழுதியுள்ளார். அதில் வஞ்சி எனப்படும் சேரர் தலைநகர் மலைநாட்டில் மேற்குக் கடற்கரையில் ஆற்றின் சூழிமுகத்தில் அமைந்த பழம்பட்டினமேயன்றிப் பிறிது உள்நாட்டு ஊரேதுமாகாது என்று ஆராய்ந்து தம் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், பூர்வ பீடிகை (தொ -5, ப-12), நாராயணையங்கார் (தொ-15,ப11,தொ-16,ப-1), சி.எஸ்.செலுவையர் (தொ-21,ப-4) ஆகியோரும் கொடுங்கோளூரே வஞ்சிமாநகர் என ஆராய்ந்து எழுதியுள்ளனர். ரா.ராகவையங்கார் வஞ்சி மாநகர் என்ற தலைப்பில் (தொகுதி15, பகுதி7) எழுதியுள்ளார். அதில் கரூர் வஞ்சியே சேரரின் தலைநகர் என குறிப்பிட்டுள்ளார். பின்னர் இவை நூலாக 1932இல் வெளிவந்துள்ளது. எஸ்.வையாபுரிப்பிள்ளை வஞ்சி மாநகர் பற்றி எழுதுவதற்கு காரணமாய் அமைந்த புறநானூற்றின் ‘விழுநீர் வேலி நாடு கிழவோனே’ என்னும் 13ஆம் பாடலுக்கு விரிவான விளக்கம் தந்து அது தொடர்பாக (தொகுதி 17,18,19) 6 கட்டுரைகள் எழுதியுள்ளார். ‘வஞ்சி’ என்ற தலைப்பில் கே.எஸ்.ஸ்ரீநிவாசபிள்ளையும் (தொகுதி 15, பகுதி2), ‘வஞ்சி மாநகர் பெயர் காரணம்’ என்ற தலைப்பில் சு.ஸ்ரீநிவாசையங்காரும் (தொகுதி 16, பகுதி2) எழுதியுள்ளனர். இதன் பின்னார் நூலாக சேரர் தலைநகர் குறித்து s.கிருஷ்ணசாமி ஐயங்கார் (சேரன் வஞ்சி – 1946), சி.கோவிந்தராசனார் (கண்ணகியார் அடிச்சுவட்டில் புகார் முதல் வஞ்சி வரையில் – 1991), வே.இராமலிங்கம் (கரூரே வஞ்சி- 1977) ஆகியோரும் இன்னும் பிற அறிஞர்களும் எழுதியுள்ளனர்.

சோழர்கள் பற்றி வெளிவந்த முதல் கட்டுரை ‘சோழசக்கரவர்த்திகள்’ (தொ-2) என்ற தலைப்பில் வி.கனகசபைப்பிள்ளையால் எழுதப்பட்ட கட்டுரையாகும். அதில் கலிக்கத்துப் பரணியில் இடம்பெற்றிருக்கும் செய்திகளைக் கொண்டு சோழ அரசர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். அதிலும் சோழ அரசர்களில் சக்கரவர்த்திகள் என பெயர் பெற்ற அரசர்கள் யாவர் என்பதை பற்றி எழுதியுள்ளார். இதன் பிறகு சோழர்கள் பற்றி து.அ.கோபிநாதராவ் அவர்கள் ‘சோழவமிச சரித்திரம்’ (தொ-5, ப-7) என்னும் தலைப்பில் எழுதியுள்ளார். அதில் சோழர்களின் பழமை, சோழ மன்னர்களின் ஆட்சி, சோழ ராஜ்யத்தின் இறுதிக்காலம் என சோழர் சரித்திரத்தை மிக சுருக்கமாக முதலில் எழுதியவர் இவரே ஆவார். இதன் பிறகு சோழ வரலாற்றை பற்றி சதாசிவப்பண்டாரத்தார் சோழநாட்டின் தமிழபிமானம் (தொ-9), சோழன் செங்கணான் (தொ-12), சோழர்குடி (தொ-13) சோழன் கரிகாலன் காலம் (தொ-5) என்னும் தலைப்பில் எழுதியுள்ளார். இதில், ‘சோழன் கரிகாலன் காலம்’ என்னும் கட்டுரையே சோழர் வரலாற்றைப் பற்றி முதன் முதலில் வெளிவந்த கட்டுரையாகும். அதில், கரிகால் வளவன் என்றும், கரிகால பெருவளத்தான் என்றும் கூறப்படுபவன் ஒருவனே ஆவன். இவனுக்கு பின்னர் சோழர் பரம்பரையில் கரிகாலன் என பெயர் தரித்தவர்கள் பலர் இருந்தனர். ஆகையால் இவனை முதல் கரிகாலன் என அழைக்கலாம் என்கிறார். கரிகாலன் காலம் கி.பி.55 முதல் கி.பி 95 வரை என்று வி.கனகசபைப்பிள்ளை குறிப்பிட்டிருக்கிறார். இவன் முதற்கயவாகுவின் தகப்பன் காலத்தில் இலங்கையின் மீது படையெடுத்துச்சென்று 1200 சிங்களவர்களைச் சிறைபிடித்துச் சோழதேசத்துக்குக் கொண்டுவந்து காவிரியின் இருமருங்குங் கரை எடுத்தான் என்பதை கலிங்கத்துப்பரணி கொண்டு வெளிபடுத்தியுள்ளார். இமயமலையில் புலிக்கொடி பொறித்தான் என்று சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி, பெரியபுராணம் ஆகிய நூல்கள் குறிப்பிடுகின்றன. கடியலூர் உருத்திரக்கண்ணனார் பட்டினப்பாலைப் பாடி 16 லட்சம் பொன் பெற்றான் என்று கலிங்கத்துப்பரணி குறிப்பிடுகின்றது. இவனுடைய மனைவி நாங்கூர் வேள்குமாரத்தி. இவர்களுடைய புதல்வர்கள் சேரன் செங்குட்டுவன், இளங்கோவடிகள், ஆதிமந்தி மூவர் ஆவர். இவன் காலத்திய அரசர்கள் பாண்டிய நாட்டில் வெள்ளியம்பலத்துஞ்சிய பெருவழுதி, நெடுஞ்செழியன், சேரலாதன், செங்குட்டுவன், முதற்கயவாகுவின் தகப்பன் ஆகியோர் ஆவர் என்பதை எல்லாம் சான்றுக் காட்டி நிறுவியுள்ளார். இவரே, பின்னர் மிக விரிவாக சோழர் வரலாற்றை எழுதி நூலாக வெளியிட்டுள்ளார். இவர்களுக்கு பின்னர், நீலகண்ட சாஸ்திரி, மா.இராமாணிக்கனார் ஆகியோர் சோழர் வரலாற்றை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

          ‘மாறஞ்சடையன்’ (தொ-4, ப-7) என்ற கட்டுரை து.அ.கோபிநாதராவ் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. அதில், கல்வெட்டுகள் மற்றும் சாசனங்களின் அடிப்படையில் கிரந்த எழுத்துக்களையும் அதற்கான தமிழ் பெயர்ப்புகளையும் வெளியிட்டு பாண்டியன் மன்னன் குறித்த பல குறிப்புக்களை இக்கட்டுரைத் தருகிறது.

‘புறப்பாட்டுத் தலைவரும் மத்திய காலவரசரும்’ என்ற கட்டுரை புறநானூற்றில் இடம்பெற்றுள்ள பாண்டியர்களின் பெயர் ஒற்றுமையைக் கொண்டு இவர்கள் தனித்தனியே ஆண்ட பல அரசர்களா? அல்லது பல பெயர்களைக் கொண்ட ஒரே அரசர்களா என்பதை ஆராய்ந்து சோமசுந்தர தேசிகன் (தொகுதி 17) எழுதியுள்ளார்.

‘வேத்துணையோர் பரிபாடல்’ என்பதைப் பற்றி மூவர் எழுதியுள்ளனர். அது, இறையனார் அகப்பொருள் உரை சி.வை.தாவால் 1882ல் பதிப்பிக்கப்படுகிறது. அந்நூலில் தலைச்சங்கப் புலவர் பாடியருளிய நூல்களை எடுத்தியம்பும் போது ‘வேத்துணையோர் பரிபாடலும், முதுநாரையும், முதுகுறுகும்,....என்கிறது. வேறு சிலரும் அவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு  வழிவழியாய் வந்த இச்சொல்  யாது யாவரை குறிக்கிறது என கேள்வி எழுப்பி, அதனை ஆராய்ந்து எத்துணையோ பரிபாடல் என்பதே சரி என அ.குமாரசாமி பிள்ளை  (தொகுதி13) எழுதியுள்ளார். இதற்கு ஆதாரமாக அடியார்க்கு நல்லார் உரை, சிலப்பதிகார உ.வே.சாவின் உரையையும் எடுத்துக்காட்டி நிறுவியுள்ளார். அவை, அடியார்க்கு நல்லார் தலைச்சங்கப்புலவர் பாடல் கூறுங்கால் ‘எண்ணிறந்த பரிபாடலும் முதுநாரையும்...., என்கிறார். உ.வே.சாமிநாதையரும் சிலப்பதிகார உரையில் உதாரண விவரணத்தில் தலைச்சங்கப் புலவர்களால் எண்ணிறந்த பரிபாடல்களும் என்கிறார். ஆகையார் இது எத்துணையோ பரிபாடல் என்பதே பொருத்தமாக இருக்கும் என்கிறார். மேலும், எத்துணை என்பது வகரவுடம்படு மெய்யோடு வெத்துணை என எழுதப்படுத்தலும், குறினெடிற் பேதமின்மையும், பிழைபட ரகரமெய்போல பலகூட்டியெழுதலும் உண்டு. இதனை ஆராய்ந்து பத்திராசிரியர் அபிப்ராயம் தெரிவிக்கவேண்டும் என முடித்துள்ளார். இதனைக் கொண்டு பத்திராதிபர் அபிப்ராய பகுதியில் நாராயணையங்கார் தமிழ்ச் சங்கத்தில் உள்ள களவியல் உரையில் தலைசங்க நூல்களைக் குறிப்பிடும் இடத்தில் பரிபாடை என்றே தெளிவாய் எழுதியுள்ளனர். கடைச்சங்க நூல்களை கூறுமிடத்து நெடுந்தொகை முதலியவற்றை முற்படவெண்ணி இடையே ‘எழுபது பரிபாடல்’ என்று தெளிவாய் எழுதப்பட்டிருக்கிறது. இவற்றால் இவ்விரு நூல்களும் வேறு என்பது தெரிகிறது. உ.வே.சா சிலப்பதிகாரத்தில் முதற்சங்க நூல்கள் எண்னுமிடத்தில் பெரும் பரிபாடல் என்றே குறிப்பிட்டுள்ளார். இதனால் பெரும் என்னும் சொற்பிரயோகம் எத்தனையோ என்பதைக் குறிப்பதாக உள்ளது எனக் கூறி ஆ.குமாரசாமிப்பிள்ளையின் கருத்துக்கு வழு சேர்க்கிறார் (தொகுதி13). இவர்கள் இருவரும் சொன்ன கருத்துக்கள் சரியானவைதான் என்று வே.முத்துஸாமி ஐயன் (தொகுதி14, பகுதி2) சேஷகிரி சாஸ்திரியார் ஆங்கிலத்தில் எழுதிய நூலில் (1897) எத்தனையோ பரிபாடல் என்றே எழுதியுள்ளார் என்பதையும், பரிபாடை என்னும் நூல் யாப்பருங்கல விருத்தியில் முதல் சூத்திர உரையின் ‘இறுதியில் பரிபாடைச் சூத்திரமென்பனவும் உள’ என குறிப்பிட்டுள்ளதை எடுத்துக்காட்டி ஆராய்ந்து வெளிப்படுத்தியுள்ளார். இவற்றை நோக்குகையில் இதன் பின் வந்த பதிப்புக்களில் எத்துணையோ பரிபாடல் எனவே குறிப்பிடப்பட்டுள்ளன.

‘ஐங்குறுநூற்றுத் திணைவைப்பு’ (தொ-17) என்ற கட்டுரை ஐங்குறுநூற்று பாடல்கள் திணை வைப்பு முறையில் கோக்கப்பட்ட நூலாகும். இதில் மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்ற அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது. இந்நூலை தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார். கூடலூர் கிழார் அவ்வாறு தொகுத்தற்குரிய காரண காரியத்தை இலக்கண இலக்கியச் சான்றுகள் கொண்டு திணைவைப்பு முறையை s.ரங்கன் விளக்கியுள்ளார்.

‘புறநானூறு வைப்புமுறை’ (தொ-16, ப-1) என்ற கட்டுரை புறநானூற்றுப் பாடல்கள் சேரன், பாண்டியன், சோழன் என்ற வைப்பு முறையில் கோக்கப்பட்டுள்ளது. அதிலும் தலைச்சங்க புலவர்கள் பாடல்கள் முன்பும் கடைச்சங்கப் புலவர்கள் பாடல்கள் பின்பும் தொகுக்கப்பட்டிருக்கின்றன என்பதை சோமசுந்தரபாரதியார் (தொகுதி 16, பகுதி 1) ஆராய்ந்து எழுதியுள்ளார்.

‘இவன்யா என்னும் புறப்பாட்டாராய்ச்சி’ (தொ-16, ப-5) என்ற கட்டுரை புறம் 13வது பாடல் சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளியைக் குறித்ததென்று சிலரும், சேரமானந்துவஞ் சேரலிரும் பொறையைக் குறித்தென்று சிலரும் கூறுகின்றனர். இப்பாட்டின் பொருளை விளக்கி, பாடலின் சொல்லப்படும் கருத்தைக் கொண்டும், இலக்கண புணர்ச்சி விதியைக் கொண்டு விளக்கியும் இப்பாட்டு வேண்மாடத்து மீது சேரலிரும்பொறையுடன் அண்மைக்கணிருந்து கூறிய முடமோசியார் நாடுகிழவோன் எனச் சேரனை அண்மை விளியால் அழைத்தார் என்பதாகவே கொள்ளப்படும். நாடு கிழவோயென்னாது நாடு கிழவோனென்றமையாற் சேரனை உணர்த்தாது சோழனையே உணர்த்துமென்று கொள்ளுதல் பொருந்தாதாயிற்று. இதுபோன்று இப்பாட்டு முழுவதையும் விளக்கி இவை சேரனையே உணர்த்தும் சோழனை உணர்த்தாது என்பதை தெளிவுபட விளக்கியுள்ளார் ஒரு மாணவன்.

          சங்க இலக்கிய பெண்பால் புலவர்கள் குறித்து முதன் முதலில் எழுதியவர் ரா.ராகவையங்கார். சங்க இலக்கிய பெண்பாற் புலவர்களாக 31 பேரை இனம் காட்டியுள்ளார் (தொகுதி 1). ‘செந்தமிழ் சான்றோர் திருபெயர்’ என்னும் கட்டுரையில் எட்டுத்தொகை நூல்களின் பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் ஊர், குலம், நிலை, தொழில் முதலியனவற்றால் வழங்கப்பட்டது என்பது அவர்களின் பாடல்கள் வழி புலப்படுகிறது. இப்பெயர்கள் இன்றைக்கு எத்தன்மையில் மக்களால் கையாளப்படுகிறது என்பதனை ரா.ராகவையங்கார் (தொ-1, ப-9) எழுதியுள்ளார். அவரே ‘ஒளவையார்’ என்ற கட்டுரையில் (தொ2, ப-6,7) ஒளவையார் ஒருவரே என்பதை ஆராய்ந்து வெளிப்படுத்தியுள்ளார். இக்கட்டுரைகள் சங்க இலக்கியம் முழுமையாகப் பதிப்பாகாத காலச்சூழலில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கதாகும். வி.கனகசபைப்பிள்ளையும் ஒளவையார் ஒருவரே என குறிப்பிட்டுள்ளார். பின், இதனைக் கொண்டு அனவரத விநாயகம் பிள்ளை 1906இல் நீதிநூல் திரட்டு என்ற நூலில் ஒளவையார் சரித்திரத்தை வரன்முறைபடுத்தி சங்க கால ஒளவை, பிற்கால ஒளவை என இருவரை அடையாளப்படுத்தியுள்ளார். இவையே பின்னர் தனிநூலாக 1919இல் வெளிவந்துள்ளது. மு.அருணாசலம்பிள்ளை தமிழ் இலக்கிய வரலாறு என்ற தம் நூலில் ஒளவையாரை உட்படுத்திய கதைகள், நூல்கள் ஆகியவற்றை எல்லாம் எடுத்தூக்காட்டி 6 பேரைக் குறிப்பிட்டுள்ளார்.

          பொய்கையார் என்னும் பெயரில் மூவர் இருந்துள்ளனர். அவர்கள், திருமால் அடியாராகிய முதற்றிருவந்தாதி பாடிய பொய்கையாழ்வார், களவழி நாற்பது பாடிய பொய்கையார், புறநானூறு மற்றும் பிற சங்க நூல்களில் வருகின்ற பொய்கையார். இவர்கள் மூவரும் ஒருவரே என மு.இராகவையங்கார் (தொகுதி1, பகுதி6) எழுதியுள்ளார். இதுவே தமிழ்ப் புலவர்கள் பற்றி எழுதப்பட்ட முதல் ஆராய்ச்சி கட்டுரை ஆகும். இக்கட்டுரையே பின்னர் பிறப் புலவர்களைப் பற்றி ஆராய்ந்து எழுதுவதற்கான களனை ஏற்படுத்திக் கொடுத்தது.  

          ‘நக்கீரர்’ என்ற கட்டுரையில் நக்கீரரின் குலம், தொழில், இயற்றிய நூல்கள், நக்கீரரால் பாடப்பட்ட அரசர்கள், நக்கீரர் பற்றிய செய்திகளை குறிப்பிடும் நூல்கள், கதைகள் ஆகியனவற்றை ஆராய்ந்து மு.இராகவையங்கார் (தொகுதி6,பகுதி12) எழுதியுள்ளார். பின்னர், ‘அப்பர் தேவாரத்தால் கொள்ளக்கிடக்கும் கீரனார் யார்?’என்ற கட்டுரையில் அப்பர் தேவாரத்தில் குறிப்பிடப்படும் கீரனார் வேறு. சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் நற்கீரனார் வேறு என்பதை ஆராய்ந்து ஆ.முத்துத் தம்பிப் பிள்ளை  (தொகுதி13,பகுதி 6) எழுதியுள்ளார். இதனை மறுத்து ‘கீரன் நற்கீரன்’ என்ற கட்டுரையில் சோமசுந்தர தேசிகர் இருவரும் ஒருவரே என (தொகுதி13, பகுதி 7) எழுதியுள்ளார்.  

          சேற்றூர் ரா.சுப்பிரமணிய கவிராயர் திருமந்திர நூறுபாட்டுக்கு உரையெழுதி (தொகுதி 11) வெளியிட்டுள்ளார். இவை, 1913ஆம் ஆண்டு தமிழ்ச் சங்க முத்திராசாலை வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. அவரே, மகாபாரத செய்யுட்களின் பாடவேறுபாட்டை குறித்து ‘மகாபாரதம் செய்யுட் பாடாந்தரம்’ (தொகுதி 4,5) என்னும் தலைப்பில் எழுதியுமுள்ளார்.

 ‘திருத்தக்கதேவரும் கம்பரும்’ (தொகுதி 4) என்ற கட்டுரையில் கம்பர் தமக்கு முந்தைய திருத்தக்கதேவரின் சீவகசிந்தாமணியிலிருந்து வடிவம், கருத்து ஆகியவற்றை எவ்வாறு பெருகிறார் என்பதை ரா.ராகவையங்காரும், கம்பராமாயணம் பாடந்தரம் குறித்து ‘இராமாவதாரச் செய்யுள் பாடாந்தரம்’ (தொகுதி-2) என்னும் தலைப்பில் சி.கணேசையரும் தொடர்ந்து எழுதியுள்ளனர்.

‘சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரு காப்பியங்களின் பிறப்பிடம் யாது?’ என்னும் கட்டுரையில் இரு காப்பியங்களின் பிறப்பிடம் ‘திருவஞ்சைக்களமே’ என்பதைத் தகுந்த சான்றுகள் காட்டி நிறுவியுள்ளார் தா.பொன்னம்பலம்பிள்ளை (தொகுதி 2). ‘செவ்வைச் சூடுவாரும் அந்தாரியும்’ (தொ-4, ப-8) என்ற கட்டுரையில் பாகவத புராணம் பாடியவர் வெம்பற்றூர் செவ்வைச் சூடுவார் என்பதை ஆராய்ந்து முதலில் வெளிப்படுத்தியவர் ரா.ராகவையங்கார்.

‘ஆவிநன்குடி’ என்ற கட்டுரை சங்க இலக்கியங்களில் ஆவிநன்குடி என குறிப்பிடப்பட்டிருக்கும் இப்பகுதி யாருக்குரியது, இக்காலத்து இப்பெயர் என்னவாக வழங்கப்படுகிறது என்பதை ஆராய்ந்து வெளிப்படுத்துவதாக ரா.ராகவையங்காரால் (தொகுதி2, பகுதி1) எழுதப்பட்டுள்ளது.

 ‘அமிதசாகரர்’ என்ற கட்டுரையில் மு.இராகவையங்கார் அமிதசாகரர், அமுதசாகரர் என்ற வழக்கு இரண்டும் ஒருவரையே குறிக்கும். இவர் 10ம் நூற்றாண்டிற்கு முற்பட்டவர் என்பதை சூடாமனி நிகண்டில் ‘காரிகையழகு பெண்ணே கலித்துறை’ என்று இடம்பெற்றுள்ளதை எடுத்துக்காட்டி சூடாமனிக்கு முற்பட்டது காரிகை என்பதை நிறுவியுள்ளார்.

இப்படி இவ்விதழில் பல்வேறு தலைப்புகளில் எண்ணிறைந்த கட்டுரைகள் வெளிவந்துள்ளன.   அவை அனைத்தும் வரலாறு எழுதுகையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதோடு இக்கால வரையறைக்குள் சுமார் 150 பேர் கட்டுரை எழுதியுள்ளனர். இதில் ஒருவரே பல கட்டுரைகளைத் தொடர்ந்தும் வேறு வேறு தலைப்புகளில் எழுதியும் உள்ளனர். இலங்கை, பாரிஸ் என பிற நாட்டவர்கள் கட்டுரையும் இதழில் வெளிவந்துள்ளன. இவ்வாறு பலர் தொடர்ந்து இதில் வெளியிடுவதற்கு காரணம் இச்சங்கம்  அக்கால தமிழ் அறிவுமிக்கார்  பலரை ஒன்று கூட்டி தமிழ் ஆராய்தல் வேண்டி இலங்கை முதலிய பல நாடுகளில் உள்ள தமிழறிஞர்கள் யாவரையும் ஒன்று கூட்டி வித்துவான் கழகம் ஏற்படுத்தி அதன் வழி தமிழ் ஆராய்ச்சியை வெளிக்கொண்டு வருதல் என்னும் நோக்கத்துடன் இச்சங்கம் தொடங்கப்பட்டு அந்நோக்கத்தையும் திறம்பட நிறைவேற்றி உள்ளதே இதன் தனிச் சிறப்பு ஆகும்.

        இவர்களுள் ரா.ராகவையங்கார் 31 தலைப்புகளில் 56 கட்டுரைகள் எழுதியுள்ளார். அதில் இதழின் ஆசிரியராக இருந்தக் காலத்தில் எழுதியவை 20 தலைப்புகளில் 37 கட்டுரைகள் ஆகும். மு.இராகவையங்கார் 65 தலைப்புகளில் 85 கட்டுரைகள் எழுதியுள்ளார். அதில் ஆசிரியராக இருந்தக் காலத்தில் எழுதியவை 59 தலைப்புகளில் 78 கட்டுரைகள். நாராயணையங்கார் 34 தலைப்புகளில் 48 கட்டுரைகளும், து.அ.கோபிநாதராவ் 31 தலைப்புகளில் 43 கட்டுரைகளும், சி.கணேசையர் 22 தலைப்புகளில் 54 கட்டுரைகளும், சே.ரா.சுப்பிரமணியக் கவிராயர் 23 தலைப்புகளில் 32 கட்டுரைகளும், பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் கல்வெட்டு, சாசனம் தொடர்பான 4 கட்டுரைகளும், அ.கோபாலையன் 2 தலைப்புகளில் 8 கட்டுரைகளும், சி.கு.நாராயணசாமி முதலியார் 6 தலைப்புகளில் 10 கட்டுரைகளும், சுன்னாகம் அ.குமாரசாமிப்பிள்ளை 92 கட்டுரைகளும் எழுதியுள்ளனர். இப்படி ஒவ்வொரு ஆசிரியர்கள் எழுதிய கட்டுரைகளையும் தனியே தொகுத்து அக்கட்டுரைகளை ஆராய்வதன் மூலம் அவ்வாசிரியர் பற்றிய முமுமையான செயல்பாட்டை இனம் கான முடியும்.

முடிவுரை:

        இவ்விதழில் வெளியான கட்டுரைகள் வரலாறு எழுதுகையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் வரலாற்றை நிர்ணயிப்பதில் இவ்விதழ் வழி வந்த கட்டுரைகள் முக்கியத்துவம் படுத்தப்பெறுகின்றன. இதில் வெளிவந்த கட்டுரைகள் பல பின்னர் ஆய்வுகள் நிகழ்த்துவதற்கான தேவையை உண்டு பண்ணின. இதனைத் தொடர்ந்து பின்னர் பல நூல்கள் வெளிவந்துள்ளன. அக்கால தமிழியல் ஆய்வுப் போக்கினையும், ஆய்வு அறிஞர்களையும் இவ்விதழ் வழி வந்த ஆய்வுக் கட்டுரைகள் இனம் காட்டுகின்றன. இத்தகைய சிறப்புப் பொருந்திய இவ்விதழ் வரலாற்றில் முக்கியத்துவம் படுத்தப்பெறுவதுடன் ஆவணப்படுத்தப்பட வேண்டிய ஒன்றுமாகும்.

குறிப்பு:

  1. “தமிழ்நாட்டில் திங்கள் வெளியீடுகளில் சிறந்தது செந்தமிழ்ச் செல்வி. இதில் பெரும்பாலும் ஆங்கிலத்திலும், தமிழிலும் வல்லவர்களான பேரறிஞர்களின் ஆராய்ச்சி உரைகளே வெளிவருகின்றன. தமிழர் நாகரிகம் தெள்ளத்தெரிய விளக்கப்படுகிறது. பண்டைய இலக்கிய இலக்கண ஆராய்ச்சிகளும் புதிய மேனாட்டு சாஸ்திர முறைகளும் ஆராய்ச்சி வல்லுநரால் எழுதப்படுகின்றன. மதுரைத் தமிழ்ச் சங்கத்தினின்றும் மாதம் தோறும் வெளியாகும் ‘செந்தமிழ்’ வெளியீடு பார்ப்பன கோஸ்டியில் அகப்பட்டுப் பார்ப்பனமயமாகிக் கொண்டிருக்கிறது. அதைத் தோற்றுவித்த ஸ்ரீமான் பாண்டித்துரைத் தேவரவர்களின் உத்தேசம் அடியோடு புறக்கணிக்கப்படுகிறது....இக்குறையைக் கண்டே பல தமிழபிமானிகள் தென் இந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் என்னும் பெயரால் மற்றொரு உண்மைத் தமிழ்க் கழகம் கண்டனர்…அது தோன்றிய குறுகிய காலத்துள் நாவலர் பதிப்பு, சங்க பதிப்பு ஆகியவைகளையும் தோற்கடிக்கத்தக்க நிலைமையில் பல பழைய புதிய நூல்களை அது வெளியேற்றிருக்கிறது ஒரு சில பிழையும் காணமுடியாது. செந்தமிழ்ச் செல்வியும் இக்கழகத்திலிருந்து வெளிவருவதுதான். இத்தகைய சிறப்புப் பொருந்திய செந்தமிழ்ச் செல்வியின் மாட்சியை விரிக்கவும் வேண்டுமோ?”(10.10.1926).

பார்வை நூல்கள்:

  1. கு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை - குமாரசுவாமிப்புலவர் வரலாறு, மயிலணி சுன்னாகம் இலங்கை - 1970.
  2. வி.கனகசபை – 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம், இராமையா பதிப்பகம் - 2012.
  3.  ந.மு.வேங்கடசாமி நாட்டார் – வேளிர் வரலாற்று ஆராய்ச்சி, 1915.
  4. S.அனவரதவிநாயகம் பிள்ளை – அவ்வையார், ஸி.குமாரசமி நாயுடு ஸன்ஸ் – 1932.
  5. மு.அருணாசலம் – தமிழ் இலக்கிய வரலாறு (12ஆம் நூற்றாண்டு முதல் பாகம்).
  6. செந்தமிழ் இதழ் 1902 முதல் 1925 வரை வெளிவந்த இதழ்கள்.