இந்து சமய வழிபாட்டில் அடங்கியுள்ள அறிவியல் சிந்தனைகள்

'இளஞ்சைவப்புலவர்' .திரு.ஜீ.பால்ராஜ் B.A.(Hons) 25 April 2019 கட்டுரை Read Full PDF

'இளஞ்சைவப்புலவர் '.திரு.ஜீ.பால்ராஜ் B.A.(Hons)

விரிவுரையாளர்

இந்துநாகரிகத்துறை

கிழக்குப்பல்கலைக்கழகம், இலங்கை

தொலைபேசி இலக்கம்: 0754263201

 

ஆய்வுச்சுருக்கம்:

இந்துசமயம் என்பது வேதங்களைப் பிரமாணங்களாக ஏற்று இந்தியாவிலே புராதன காலத்தில் இருந்தே வழங்கி வரும் ஒரு சமயமாகும். சனாதன தர்மம்' அதாவது 'என்றும் வாழும் அறம், என்ற பெயரும் இந்துசமயத்திற்கு வழங்கப்படுகிறது. ஒரு மனிதன் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழியமைத்துக் கொடுக்கும் இந்துசமயமானது சில தனித்துவமான இந்துப்பண்பாட்ட்டு அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அவற்றுள் வழிபாடும் ஒன்றாகும். இந்து என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் சமூகம் தலைமுறை தலைமுறையாக பின்பற்றி வருகின்ற பண்பாட்டுக் கூறுகளுள் வழிபாடு பிரதானமானது. இந்துக்களிடம் அறிவியல் அறிவு இருந்துள்ளது என்பதனை அவர்கள் வகுத்து வைத்திருக்கும் ஒவ்வொரு வழிபாடும் உணர்த்துகிறது. கடவுளை பக்தியுடன் வழிபடுவதற்காக பல வழிபாட்டு முறைகள் இந்துசமயத்தில் காணப்படுகின்றன. அவற்றினை ஆன்மீகமாகப் பார்க்காமல் அறிவியலாகப் பார்க்கின்ற போது இந்துசமய வழிபாட்டிற்குள் விஞ்ஞானம் அடங்கியிருப்பது தெரியவருகிறது. எனவே இந்துசமய வழிபாட்டினுள் அடங்கியுள்ள அறிவியல் சிந்தனைகளை வெளிக்கொண்டு வருவதே இவ்வாய்வுக்கட்டுரையின் நோக்கமாகும்.

 

திறவுச் சொற்கள்:
இந்துசமயம், வழிபாடு, அறிவியல்

 

அறிமுகம்
இந்துப்பண்பாடு என்பது பல்வேறு சிந்தனைகளின் தொகுப்பாக இருப்பதால் பல் துறை அறிவியல் சிந்தனைகள் கூட இந்துப்பண்பாட்டுச் சிந்தனையின் ஓர் அங்கமாகவே கருதப்பட்டு வந்திருக்கின்றது. வானவியல், புவியியல், சோதிடவியல், மருத்துவவியல், உயிரியல் போன்ற அனைத்துத் துறைகளும் இந்துமத ஞானிகளால் தெளிவுபடுத்தப்பட்ட போது அவையும் இந்துசமயத்தின் பிரிவுகள் போலவே ஆகிவிட்டன. அறிவியல் என்பதற்குப் பகுத்தறிவினாலும், சோதனையினாலும் உண்மைகளைக் கண்டறிவது எனப் பொருள் கூறப்படுகின்றது. சமய நம்பிக்கைகள் உடையோர் அறிவியல் தங்களுக்கு அவசியமில்லை என ஒதுங்கி விடுவது வழக்கம். ஆனால் சமயத்தில் ஈடுபாடுள்ள விஞ்ஞானிகள் அறிவியலும் சமயமும் எதிரிகள் அல்ல நெருங்கிய நண்பர்கள் என்று கருதுகின்றனர். சென்ற நூற்றாண்டில் மிகப்பெரிய அறிவியலாளனான ஐன்ஸ்ரெயின் (Einstein), சமயம் இல்லாத அறிவியல் முடமானது, அறிவியல் இல்லாத சமயம் குருடானது,(science without religion is lamp: Religion without science is Blind) என்று கூறியுள்ளார். பௌதீகவியல் நோபல் பரிசு பெற்ற மில்லிகென் மனித நலனையும் மனித முன்னேற்றத்தையும் இரண்டு தூண்கள் தாங்கியுள்ளன. ஓன்று சமய நோக்கு மற்றையது விஞ்ஞான நோக்கு எனக் கூறுவார். சமயமும் விஞ்ஞானமும் வெவ்வேறு வழிகளில் மனிதனுக்குச் சேவை செய்வதாக அமைந்துள்ளன. 'அவனின்றி ஓர் அணுவும் அசையாது' என்பது முன்னோர் வாக்கு. அணுவின் அசைவுக்கும் செயற்பாட்டிற்கும் இறை சக்தியே காரணமாகின்றது. சக்தியை இறைவன் என்று ஏற்றுக்கொண்டால் அணுவுக்குள் இறைவன் இருப்பதாகக் கருதலாம். அனைத்துப் பொருள்களும் அணுக்களின் செயற்கையால் ஆனது என்பதால் எல்லாப் பொருள்களிலும் இறைவன் இருக்கின்றான் என்பதற்கு நியாயம் கிடைக்கின்றது. அணு என்பது எலக்ட்ரன், புரோட்ரன் என்ற இரு மின் அணுக்களை உள்ளடக்கிய அமைப்பாகும். இங்கு புரோட்ரனைப் பெண்ணாகவும் எலக்ட்ரனை ஆணாகவும் உவமித்துப்பார்த்தால் இரண்டின் சேர்க்கையுமே முழுமையான வடிவம் என்பது தெளிவாகும். இதனையே எம்முன்னோர்கள் அர்த்தநாரிஸ்வரர் என்ற வடிவமாகக் குறிப்பிட்டுள்ளனர். எனவேதான் அவர்கள் விஞ்ஞானம் கூறுகின்ற பேருண்மைகளைத் தெய்வீக விடயங்களாகவே உருவகித்துக் காட்டியுள்ளனர். இந்துசமயத்திலே பல வழிபாட்டு முறைகள் காணப்படுகின்றன. இறைவன் மீது கொண்ட பக்தியின் முகமாகச் செய்யும் ஒவ்வொரு இந்து வழிபாட்டிலும் அறிவியல்சார் அம்சங்கள் நிறைந்துள்ளன. அதனை வெளிக்கொணர்வதே இவ்வாய்வுக்கட்டுரையின் நோக்கமாகும். இவ்வாய்வுக்கட்டுரையானது வரலாற்று ஆய்வு, விபரணப்பகுப்பாய்வு, ஒப்பிட்டு ஆய்வு ஆகிய ஆய்வு முறைகளின் ஊடாக பார்க்கப்படுகின்றது.

 

ஆலய வழிபாடு
இந்துக்களின் வழிபாடுகளில் ஆலய வழிபாடு பிரதான வழிபாடாகும். கோயில்களின் மையப்பகுதியில் மூலவரின் சிலை காணப்படும். இந்த இடத்தை கருவறை அல்லது மூலஸ்தானம் என அழைப்பர். மூலஸ்தானத்தின் மூலையில் தான் காந்த அலைகள் அதிகபட்சமாக இருக்கும். மூலவருக்கு முன்னதாக தாமரைத் தட்டுக்கள் வைக்கப்பட்டிருக்கும். இந்த தட்டுக்கள் பூமியின் காந்த அலைகளை உறிஞ்சி அதனை சுற்று புறத்திலும் பரவச் செய்யும். இதனால் சிலைக்கு அருகில் நிற்கும் போது உடம்பு ஆற்றல் திறனை உள்வாங்கும். இதனால் உடம்புக்கு தேவையான நேர் மறையான ஆற்றல் திறன்கள் கிடைக்கும். எல்லா மூலஸ்தானமும் மூன்று பக்கமும் மூடி வாசல் மட்டும் தான் திறந்திருக்கும். அதன் கதவுகளும் சிறியதாக இருக்கும். இது அந்த positive energy வெளியே செல்லாமல் இருப்பதற்கு உதவும். இதனால் இந்த சக்தி இறைவனை வணங்கும் பக்தர்களுக்குச் சென்றடையும். இதனால்தான் எமது முன்னோர்கள் 'ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என ஆலய வழிபாட்டின் அவசியத்தை உணர்த்திப் பாடியுள்ளனர். 'கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்', எனவும் 'திருக்கோயில் இல்லா திருவிலூரும் ஊரல்ல அடவி காடே' என்றும் திருநாவுக்கரசர் ஆலய வழிபாட்டின் மகத்துவத்தை பாடியுள்ளார். 'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்' என திருமூலர் கோயிலும் உடலும் ஒன்று, இரண்டுமே ஆத்ம சக்தியின் உறைவிடமாகும் எனப் பாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

நவக்கிரக வழிபாடு
நவக்கிரகம் என்பது ஒன்பது ஆளுகைக்காரர் எனப்பொருள்படும். புவியிலுள்ள உயிர்க்கூறுகளை ஆளுகைக்கு உட்படுத்துகின்ற அண்ட வெளிக்கூறுகளாக இவை காணப்படுகின்றன. நவக்கிரகங்களை தமிழில் 9 கோள்கள் என அழைக்கின்றனர். அவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, இராகு, கேது என்பவையாகும். சோதிட நூலின்படி கோள்கள் 9 ஆகும். தற்கால அறிவியல் அடிப்படையில் இக்கோள்களில் நிகழும் மாற்றங்கள் மனித நடத்தையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது அறிவியல் ரீதியாக ஆராய்ந்து முன்வைக்கப்பட்டுள்ளது. ஏன் எனில் ஒருவர் பிறக்கும் போது வானில் வலம் வரும் கோள்கள் எந்த நிலையில் சஞ்சரிக்கின்றதோ அந்நிலையே அவருடைய வாழ்க்கையில் நிகழும் மாற்றங்களுக்கு காரணமாக அமைகிறது. இதனால்தான் ஆலயங்களில் நவக்கிரக சந்நிதி அமைக்கப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. கோயில் மணி அடித்து வழிபடுதல் கோயில் மணியானது சாதரணமான உலோகத்தால் செய்யப்படுவது அல்ல. கேட்னீயம், ஜின்க், ஈயம், தாமிரம், நிக்கல், குரோனியம் மற்றும் மக்னிசியம் போன்ற பல உலோகத்தின் கலவையால் செய்யப்படுவதே ஆகும். கோயில் மணி உருவாக்கப் பயன்படும் உலோகத்தின் விகிதத்திற்கு பின்னணியில் அறிவியல் அடங்கியுள்ளது. இந்த மணியோசையில் இருந்து வரும் எதிரொலி உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் (மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரம், அனாகதம், விசுத்தம், ஆக்கிணை, சகஸ்ராரம்) தொடும். மணி ஒலிக்கப்பட்ட பின் சில நேரம் மூளை அமைதியாக மாறி ஒருமுக நிலையை அடையும். ஒருமுக நிலையைப் பெறுவதால் மூளையின் அறிவாற்றல் தன்மையும் உணர்வு திறனும் தீவிரமடையும். வழிபாட்டின் போது ஒலிக்கப்படும் மணிகள் சாதாரணம் என நாம் நினைக்கிறோம். ஆனால் மணி அடிப்பதினால் அதனை நாம் கேட்பதனால் அதிலிருந்து அதிக பயன்களை பெற்றுக்கொள்கிறோம் என்பது அறிவியல் ரீதியான உண்மையாகும்.

 

அபிஷேக வழிபாடு
கோவில்களில் உள்ள சிலையினை ஒருவகை கலவையால் அபிஷேகம் செய்வர். அதன் பின் சரணம்ஹிதா எனப்படும் அந்த அபிஷேக நீர் பக்தர்களுக்கு தீர்த்தமாக கொடுக்கப்படும். அந்த அபிஷேக நீரானது தண்ணீருடன் துளசி, குங்குமப்பூ, கற்பூரம், ஏலக்காய், கிராம்பு சேர்க்கப்படும் கலவையாகும். இக்கலவை கலந்த நீரை சிலைகளுக்கு அபிஷேகம் செய்வதால் அபிஷேக நீரில் காந்த அலைகள் உள்ளேறும். இதனால் மருத்துவக்குணங்கள் மென்மேலும் அதிகரிக்கும். பக்தர்களுக்கு மூன்று தேக்கரண்டி தீர்த்தம் வழங்குவர். இதில் கிராம்பு பல் சொத்தை ஏற்படாமல் பாதுகாக்கும். துளசி, குங்குமப்பூ என்பன சளி மற்றும் இருமல் நோய்களைப் போக்ககூடியது. கற்பூரம், ஏலக்காய் என்பன இயற்கையாக வாயினை சுத்தப்படுத்துகின்றது. சங்கு ஊதி வழிபடுதல். பண்டைய காலத்தில் இருந்து காலம் காலமாக சங்கு ஊதுவது வழக்கமாகும். போர் தொடங்குவதற்கு முன்பும் முடியும் போது சங்கு ஊதுவார்கள். சங்கு அதர்மத்தின் அழிவையும் தர்மத்தின் வெற்றியையும் குறிப்பதாக சொல்வர். ஆலய வழிபாட்டில் சங்கு ஊதுவதன் மூலம் மூலாதார செயலகம் நன்றாக செயற்படும். சங்கு ஊதுவது மூச்சைச் சீராக்குவதோடு நுரையீரலின் செயற்பாட்டிற்கும் உதவுகிறது. அத்தோடு கிருமிகளை அழிக்கும் தன்மையுடையது. சங்குகளில் வெளியாகும் காற்று கிருமிகளை அழிக்கின்றது. அதேபோல் கோவில்களில் தீர்த்தத்தில் சங்கைப் போட்டு வைப்பர். இதனால் நீரிலுள்ள கிருமிகளையும் அழித்துவிடும். சங்கை ஊதுவதால் உடலிலிருக்கும் கிருமிகளும் அழியும். இதனால் நோய்கள் குறையும்.

 

கோயிலுக்குச் சென்று கைகூப்பி வணங்குதல்.
கோயிலுக்குச் சென்று வழிப்பாட்டின் போது அனைவரும் இறைவனை கைகூப்பி கும்பிடுதல் வழக்கமாகும். இவ்வாறு வணங்கும் முறையை யோகாசனத்தில் அஞ்சலி முத்ரா எனக் கூறுவர். பத்து விரல்களையும் ஒன்று சேர்த்து வணங்குவதால் புத்துணர்ச்சியும் மன அமைதியும் கிடைக்கின்து.

 

குங்குமம் வைத்தல். மஞ்சள், எலுமிச்சை, மெற்குறி என்ற வேதிப் பொருட்கள் உள்ளடக்கம் செய்தே குங்குமம் தயாரிக்கப்படுகிறது. இதில் மெற்குறி வேதிப் பொருள் இரத்த அழுத்தத்தை குறைக்கும் ஆற்றலுடையது. எனவே குங்குமத்தை நெற்றியில் வைப்பதனால் உடலின் இரத்த அழுத்தம் குறைகின்றது. அதேபோல் உடம்பின் நாடி நரம்புகள் சந்திக்கும் நெற்றிப்பொட்டில் குங்குமம் அணிவதால் மஞ்சளின் சக்தி உடம்பில் ஊடுருவி உடம்பில் விஷ பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பின் அதை நீக்குகிறது. தோப்புக்கரணம் போடுதல் பிள்ளையார் வழிபாட்டில் தோப்புக்கரணம் போடுதல், நெற்றியில் மூன்று முறை குட்டி வணங்குதல் என்பன முக்கியமான வழிபாட்டு முறைகளாகும். இவ்வழிபாட்டில் யோகாசன மருத்துவம் அடங்கியுள்ளது. அதாவது நெற்றிப்பொட்டின் இரு மருங்கிலும் குட்டி வணங்குவதால் அங்குள்ள நரம்பு மையங்கள் தூண்டப்பட்டு நினைவாற்றல் அதிகரிப்பதுடன் சுறுசுறுப்பும் ஏற்படுகிறது. அத்துடன் மூளையின் செல்களும் நியூரோண்களும் சக்தி பெறுகின்றது. காதுகளைப் பிடிப்பதனால் அக்குபஞ்சர் புள்ளிகளைக் தூண்டும். மூளையில் உள்ள நரம்பு மண்டல வழிகளில் சக்தி பாய்ந்து மாற்றம் ஏற்படும். அவ்வாறே இடது கையால் வலது காதையும் வலது கையால் இடது காதையும் பிடித்து உட்கார்ந்து எழும்புவதால் மூளையின் இரு பகுதிகளும் பலமடைகின்றன. அதேபோல் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்தியைப் பெற்றுக் கொள்கின்றன. மேலும் மூளைக்கு அதிகமான இரத்தம் எடுத்துச் செல்லப்படுகின்றது. இதனை அமெரிக்க விஞ்ஞானிகளும் எடுத்துக்கூறியுள்ளனர்.

 

துளசி மாட வழிபாடு
பொதுவாக இந்துக்களின் வீட்டில் துளசிச் செடியுடன் கூடிய துளசி மாடம் வைத்திருப்பது வழக்கமாகும். காலை எழுந்தவுடன் குளித்து விட்டு துளசி மாடத்தினை வழிபடுவார்கள். இது நமது முன்னோர்கள் பழக்கிச் சென்ற வழக்கங்களில் ஒன்றாக காணப்படுகின்றது. ஆனால் இதனை தாண்டி துளசி செடியில் அபூர்வமான மருத்துவ குணங்கள் உள்ளன. துளசி மாடத்தைச் சுற்றி வழிபடும் போது துளசி காற்று சுவாசிக்கப்படுகிறது. இதனால் பல்வேறு சுவாச நோய்கள் மற்றும் உடல் நோய்கள் இல்லாமல் போகும் என்பது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

அரசமர வழிபாடு
அரச மரத்தைச் சுற்றி வழிபடுவதால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது இந்துக்களின் வழிபாட்டின் ஓர் நம்பிக்கையாகும். ஆனால் இவ்வழிபாட்டிலும் அறிவியல் அடங்கியுள்ளது. அரசமரத்தை சுற்றி வழிபடும் போது அரசமரம் வெளியிடும் காற்றினால் பெண்களின் மாதச்சுழற்சி மற்றும் அது சம்பந்தமான சுரப்பிகள் சீரடைகின்றன என்பது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

அட்டாங்க, பஞ்சாங்க நமஸ்கார வழிபாடு
ஆலயங்களில் ஆண்கள் அட்டாங்க நமஸ்காரமும் பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்து இறைவனை வழிபடுவர். உடலின் எட்டு உறுப்புக்களும் நிலத்தில் படும்படியாக இறைவனை நிலத்தில் வீழ்ந்து வணங்குதல் அட்டாங்க நமஸ்காரமாகும். உடலின் ஐந்து உறுப்புக்கள் நிலத்தில் படும்படியாக இறைவனை வீழ்ந்து வணங்குதல் பஞ்சாங்க நமஸ்காரமாகும். இவ்வழிபாடுகளால் உடலின் தசைநார்கள், நரம்புகள், எலும்புகளில் உள்ள மூட்டுக்கள் என்பன பலம் அடைகின்றன. பெண்களின் கற்பப்பையில் இருக்கும் அடைப்பு காரணமாகவே பிள்ளைப்பேறு கிடைக்காமல் போகிறது. கர்ப்பப்பையில் அடைப்பு உள்ள பெண்கள் தொடர்ந்து இந்த பஞ்சாங்க நமஸ்கார வழிபாட்டைச் செய்து வந்தால் அடைப்பு நீங்கி பிள்ளைப்பேறு கிடைக்கப்பெறும் என்பது விஞ்ஞான ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

தலயாத்;திரை வழிபாடு
தலயாத்திரை என்பது தலங்களை நடந்து சென்று வழிபடுதலாகும். தலயாத்திரை செய்வதும் தெய்வங்கள் வீற்றிருக்கும் மலைகளுக்கு ஏறிச்செல்வதனாலும் ஒருவரிளன் உடலிலுள்ள நாடி இருப்பு, முழங்கால் தசைகள் நன்கு பலம் அடைகின்றன. இதனால் இரத்தச்சுரப்பிகளிலுள்ள அடைப்புக்கள் நீக்கப்பட்டு குருதிச்சுற்றோட்டம் ஒழுங்கு படுத்தப்படுகிறது.

 

விரத வழிபாடு
விரதமிருப்பதால் வயிறு சுத்தமாகிறது, ஜீரண உறுப்புக்கள் சீராகிறது என்கிறார்கள் சித்த மருத்துவர்கள். ஆலயத்;தில் விரதம் இருப்பவர்கள் தண்ணீர் அருந்தாமல் பாணக்கம் மட்டும் அருந்துவர். பாணக்கம் என்பது சர்க்கரை, தேசிக்காய், இளநீர் முதலியன கலந்து தயாரிக்கப்படும் ஒரு நீராகாரமாகும். பட்டினி கிடக்கும் வயிற்றுனுள் வெளிப்படும் அதிக சக்தி மிக்க வெப்பம், வாய்வு, பித்தம் இவற்றைத் தணித்து உடல் சமநிலையைப் பேணுவதற்கும் தாகத்தை தணிப்பதற்கும் உதவுகிறது. 'நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு கூற்றங் குதித்தலும் கை கூடும்' என்பது வள்ளுவர் கருத்தாகும். உடல் உறுப்புக்களில் மாத்திரம் அல்லாமல் உடற்செயற்பாடுகளிலும் இது நிகழ்கிறது. விரதம் இருக்கும் போது மட்டுமே நம் உடலில் இருக்கும் சக்தியை தினம் புரிந்து கொள்ள முடியும். இதனால் இந்துக்கள் கேதார கௌரி விரதம், சிவராத்திரி, வரலட்சுமி நோன்பு, கந்த சஷ்டிவிரதம், ஐயப்பனுக்கு 48 நாள் விரதம், நவராத்திரி விரதம் போன்ற பல்வேறு விரதங்களை நோற்று வருகின்றனர்.

 

கோபுர வழிபாடு
கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக்கட்டடமும் இருக்ககூடாது என்பதற்கான அறிவியல் உண்மை யாதெனில் கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செம்பு முதலிய ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்கு கொடுக்கின்றன. இடி, மின்னலையும் இத்தானியங்கள் தாங்கும் ஆற்றல் உடையனவாக விளங்குகின்றன. 12 வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறன. அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகின்றது. இதனால்தான் எமது முன்னோர்கள் 'கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்று கூறி வைத்துள்ளார்கள். அதேபோல் ஆலயங்களில் காணப்படும் கொடிமரத்தில் பொதிந்துள்ள அறிவியல் யாதெனில், இது கருவறைக்கு நேராகத்தான் நடப்பட்டிருக்கும். கொடிக்கம்பத்தில் ஐந்தில் ஒரு பாகம் பூமியில் இருக்கும்படி நடுவர். சந்தனம், தேவதாரு, செண்பகம், வில்வம், மகிழம் முதலிய மரங்களிலிருந்து கொடிமரம் செய்யப்படுகின்றது. விண்ணில் இருந்து வரும் மின்னூட்டம் பெற்ற பிரபஞ்ச கதிர்களை கருவறை விமானம் மீதுள்ள கலசங்கள் ஈர்த்து கருவறையில் இருக்கும் மூலவர் மீது பாய்ச்சும். இந்த சக்தியானது கருவறைக்கு இருபுறம் இருந்து கடவுளை வணங்கும் பக்தர்கள் மீது பாயும். இந்த பிரபஞ்ச சக்தியை உள்ளவாறு ஏற்றுக் கொள்ளும் தன்மை சாதாரண மானுடர்களுக்கு இல்லை. இந்த கொடிமரமானது பிரபஞ்ச சக்தியை ஈர்த்து பக்தர்களின் உடலில் ஏற்றுக் கொள்ளும் தன்மைக்கு இந்த சக்தியை மாற்றி இருபுறம் பாய்ச்சும். கொடிமரம் இல்லையென்றால் இந்த அதீத சக்தியின் தன்மையை மானிடர்கள் உணர்வது கடினம். இதற்காகவே இந்து ஆலயங்களில் கொடிமரம் காணப்படுகின்றது.

 

திருநீறு அணிதல்
திருநீறு தரிப்பதால் நோய்க்கிருமிகளை அழிக்கும் சக்தியும் (நனைக்காத திருநீறு), உடலில் மிகையாக இருக்கும் ஈரத்தை உறிஞ்சி அகற்றும் சக்தியும் (நனைத்த திருநீறு) கிடைக்கின்றன. இரவு ஒரு நபர் தூங்கும் போது அவர் படுக்கையில் இலட்சக்கணக்கான கிருமிகள் பரவியிருக்கும் என்று விஞ்ஞானம் கூறுகின்றது. அதேபோல் மாலையில் சுற்றுச் சூழலில் எண்ணற்ற நோயணுக்கள் உலவுகின்றன என்பது அறிவியலின் கண்டுபிடிப்பாகும். அதனால் காலையும் மாலையும் நோயணுக்களின் பாதிப்பு ஏற்படாமலிருக்க ஈரமில்லா திருநீறை அணிவர். குளிக்கும் நேரம் உடலின் மூட்டுக்களில் ஈரம் காரணமாக நீர்க்கட்டு உருவாகவும் காலப் போக்கில் அது வாயிலாக கொழுப்பு அதிகரிக்கவும் அது மூட்டு வாதமாகவும் மாறவும் வாய்ப்புண்டு. இப்படி உருவாகும் நீர்க்கட்டை தவிர்ப்பதற்காகத்தான் குளித்தவுடன் ஈரமான திருநீறு அணியப்படுகிறது. திருநீறு அணிவதனால் கிடைக்கும் நன்மை அதிகம். அதனைப் பின்பற்றாதவர்கள் அத்தகைய நன்மைகளைப் பெற முடியாது. இதனாலே எமது நாயன்மார்கள் 'நீறில்லா நெற்றி பாழ்' எனப்பாடியுள்ளனர்.

 

உருத்திராக்கம் அணிதல்
உருத்திராக்கம் அணிவதன் மூலம் பல மருத்துவங்களை உடலும், உள்ளமும் பெறுகின்றன. இந்தியாவில் உள்ள வாரணாசிப் பல்கலைக்கழகத்திலுள்ள டாக்டர் ககாஸ்ராய் உருத்திராக்கம் பற்றி அறிவியல் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதாவது உருத்திராக்கம் சக்தி மிக்க மின்காந்தப் பண்புகள், காந்த முனைகளால் ஈர்க்கப்படும் தன்மை, அணுக்க நிலை, மின்பாய்ப்புள்ள தன்மைகளைக் கொண்டுள்ளன என நிறுவினார். உருத்திராக்கம் அணிவதன் மூலம் மன அழுத்தம் ஒருவருக்கு ஏற்படும் போது மூளைக்கு இரத்த ஓட்டம் சீரான முறையில் சென்று மன அழுத்தத்தைப் போக்கும் எனவும் உருத்திராக்கத்தில் உடல் மருத்துவக் குணங்களும் காணப்படுகின்றன என குறிப்பிடுகின்றார்.

 

மார்கழி மாத வழிபாடு
மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஓசோன் படலம் வழி, ஆரோக்கியமான உடல் நலனைத் தரும் காற்று அதிகம் பூமியில் இறங்கும். இது நம் வியாதிகளைக் கட்டுப்படுத்தும் என்பதனால்தான் மார்கழியில் அதிகாலையில் பெண்கள் எழுந்து சாணம் தெளித்து கோலமிட வேண்டும் என முன்னோர்கள் கூறியுள்ளனர். நம் உடலில் 80% ஆக்சிஜனும் 20% கரியமில வாயுவும் இருக்க வேண்டும். தவறான பழக்க வழக்கங்களால் கூடுதலாகிவிட்ட விஷவாயுவான கார்பன்-டை-ஆக்ஷட்டை விரட்டி ஆக்சிஜனை நம் உடல் பெறுவதால் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் உருவாகிறது. இந்த நல்ல வாயுவை சுவாசிக்கும் பொருட்டே அதிகாலை மார்கழியில் எழுவது என்பதை தெய்வத்தின் பெயரால் கட்டாயப்படுத்தி வைத்துள்ளனர் நம் முன்னோர்கள். இதனை தற்காலத்தில் அறிவியல் ரீதியாக நிருபித்துள்ளனர்.

 

மார்கழி கோலத்தில் சாணம் வைத்தல்
பசு மாட்டின் சாணம் அற்புத பலன்களைத் தரும், ஒப்பற்ற கிருமிநாசினி என்பது உலகளவில் பல அறிவியல் வல்லுநர்களாலும் ஒப்புக்கொண்ட உண்மை ஆகும். நம் வீட்டைச் சுற்றி பரவியிருக்கும் பாக்டீரியாவை அழிக்கும் சக்தி கொண்டது சாணம். கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்களினால் நோய்த் தொற்றுக்கள் ஏற்படும். இதைத் தவிர்க்கவே சாணத்தில் மகாலட்சுமி உறைவதாலும், சாணப் பிள்ளையார் பிடித்து வைத்தால் நல்லது என்றும் கூறி வாசலில் சாணத்தைக் கரைத்துத் தெளிப்பதை பழக்கமாக்கினர் நம் முன்னோர்கள்.

 

சூரிய நமஸ்காரம்
முப்பத்து முக்கோடி தேவர்கள் இருப்பினும் அனைவரும் கண்ணார காண்பது சூரியன் சந்;திரனை மட்டுமே. நவக்கிரகங்களின் தலைவரான சூரியனே நம் வாழ்வில் ஆரோக்கியம் அளிப்பர். சூரியனை வழிப்படுவதால் கண்கள் பிரகாசமடையும். உடல் நலன் மேம்படும். தினசரி எட்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சூரிய நமஸ்காரம் செய்து ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம். சூரியனை காலையில் நமஸ்காரம் செய்து வழிப்படுவதனால் பார்வைக்குறைவு ஏற்படுவதே இல்லை. நுரையீரல் தூய்மையடைந்து சீரான பிராணவாயு செல்வதால் சுவாசம் மேன்மையடையும். அழகான உடலமைப்பு கிட்டும். தைராய்டு சுரப்பிகள் நன்கு வேலை செய்யும். ஜீரண சக்தி மேம்படும். மலச்சிக்கல் நீங்கும். மன உளைச்சல் சரும வியாதிகள் நீங்கிவிடும். ஞாபக சக்தி மேம்படும். சுறுசுறுப்பும் புத்துணர்ச்சியும் நாள் முழுவதும் நீடிக்கும். இவ்வாறு நாம் வழிபடும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒவ்வொரு அறிவியல் உண்மைகள் புதைந்துள்ளன.

 

நிறைவுரை
இந்துசமயத்திலே பல வழிபாட்டு முறைகள் காணப்படுகின்றன. இறைவன் மீது கொண்ட பக்தியின் முகமாகச் செய்யும் ஒவ்வொரு வழிபாட்டிலும் அறிவியல்சார் அம்சங்கள் நிறைந்துள்ளன என்பது இவ்வாய்வுக்கட்டுரையில் இருந்து புலனாகிறது. இந்துக்களின் வழிபாட்டில் அறிவியல் சிந்தனைகளும், மருத்துவ குணங்களும் அடங்கியிருப்பதனை இன்றைய விஞ்ஞானிகள் கூட உறுதிப்படுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. எனவே எமது வழிபாட்டை சமயமாகப் பார்க்காமல் விஞ்ஞானமாகப் பாhத்;தால் இந்துக்களே விஞ்ஞானத்தின் முன்னோடிகள் என்பதனை அறிந்து கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

உசாத்துணைகள்
 • பாலகிருஷ்ணன்.,' ஓலைச்சுவடி', அடோன் பப்ளிஷிங் க்ருப்.
 • ஸ்ரீதயாளன்.ஆ.ளு, (2009), அர்த்தமுள்ள சம்பிரதாயங்கள், காயத்ரி பப்ளிகேஷன்.
 • இந்து ஒளி, (2007), 'பொன் விழா சிறப்பு மலர்', அகில இலங்கை இந்துமாமன்றம், கொழும்பு.
 • பொன் குலேந்திரன்., (2005), 'கோபுர தரிசனமும் கோடி புண்ணியமும்', குவியம் வெளியீடு, கனடா.
 • தனபாக்கியம் குணபாலசிங்கம்., (1990), 'சைவசித்தாந்தமும் விஞ்ஞான உலகமும்', சென் ஜோசத் கத்தோலிக்க அச்சகம், மட்டகளப்பு.
 • லட்சும் இராஜரத்தினம்., (2006), 'பண்டிகைகளும் பலன்களும்', பூம்பகார் பதிப்பகம், சென்னை.
 • அகில்., (2003), 'நமது விரதங்களும் பலன்களும்', நர்மதா பதிப்பகம், சென்னை.
 • சாமி சிதம்பரநாதர்., (2003), 'சித்தர்கள் கண்ட விஞ்ஞான தத்துவம்', தாமரை பப்ளிகேஷன், சென்னை.
 •  

இணையத்தளங்கள்
 • 1. http://athavannews.com/?p=567145-
 • http://ishwaryadeiveegam.blogspot.com/2016/07/blog-post_9.html
 • https://tamil.boldsky.com/insync/pulse/2014/amazing-science-behind-hindu temples/articlecontent-pf36085-007105.html