தமிழ் இலக்கியங்கள் நவின்ற அறக்கருத்துகள்

மயிலம் இளமுருகு (வெ. பாலமுருகன்) 25 April 2019 கட்டுரை Read Full PDF

மயிலம் இளமுருகு (வெ. பாலமுருகன்)

தமிழாசிரியர்,

அரசு மேல்நிலைப்பள்ளி,

உதவிப் பேராசிரியர்

ஆரம்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம்.

 

ஆய்வுச் சுருக்கம்

சங்க இலக்கியங்களுக்கு அடுத்தபடியாகப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அமைகின்றன. பொருண்மை அடிப்படையிலும் யாப்பின் அடிப்படையிலும் இவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ளது.பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் நீதிநூல்கள் பெரும்பான்மையாக உள்ளன.இவ்விலக்கியத்திற்குள் திருக்குறளுக்கு அடுத்தபடியாக நாலடியார் திகழ்கிறது.திருக்குறள் போன்றே அதிகாரத்திற்கு 10 பாடலைக் கொண்டதாகவும் ஆக 40 அதிகாரங்கள், 400 பாடல்களைக் கொண்டதாக இருக்கின்றது.திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என அமைந்துள்ளது. நாலடியார் வெண்பாக்கள் தோன்றிய காலம் கிபி எட்டாம் நூற்றாண்டு. அதாவது பல்லவ வம்சம் ஆண்ட காலத்தில் வலுவான அதிகார அழுத்தம் தரும் இனமான முத்திரையர் சிறு பிரதேசங்களை ஆண்ட காலத்தில் தோன்றின.நாலடியார் வைப்புமுறை, சமயப்பொறை, வாழ்வியல் நெறிகள், எனப் பலத் தலைப்புகளினூடாகக் கருத்துகள் விளக்கப்பட்டுள்ளன. பொய் பேசாது இருத்தல் குறித்து பல்வேறு நீதிநூல்கள் எடுத்துரைத்துள்ளன. இதனை பொய்யாமை என்றும் நாம் அறிவோம். அந்த அடிப்படையில் நாலடியாரில் உள்ள செய்திகள் சொல்லப்பட்டுள்ளன. சினம் தவிர்த்தல், முயற்சியுடைமை, பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமை, நிலையாமை, கல்வி, பிறன்மனை விரும்பாமை, இவ்வாறாக கருத்துகள் சான்று பாடல்களின் அடிப்படையில் இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளன.

 

திறவுச் சொற்கள்

அறக்கருத்துகள், சினம் தவிர்த்தல், முயற்சியுடைமை ,நிலையாமை

சங்க இலக்கியங்களுக்கு அடுத்தபடியாகப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அமைகின்றன. பொருண்மை அடிப்படையிலும் யாப்பின் அடிப்படையிலும் இவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ளது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் நீதிநூல்கள் பெரும்பான்மையாக உள்ளன. இவ்விலக்கியத்திற்குள் திருக்குறளுக்கு அடுத்தபடியாக நாலடியார் திகழ்கிறது. இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் பாடப்பட்டுள்ளது. இதில் 400 பாடல்கள் உள்ளன.“ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்ற தொடர்கள் இப்பாடலின் பெருமையைப் பேசுகின்றன. இதனைத் தொகுத்தவர் பதுமனார் ஆவார். ஜி.யு.போப் நாலடியாரையும் திருக்குறளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இதற்கு நாலடி, நாலடி நானூறு, வேளாண் வேதம் என்ற வேறு பெயர்களும் உண்டு.

           நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
           பால்கடுகங் கோவை பழமொழி - மாமூலம்
           இன்னிலை காஞ்சியோடே னேலாதி யென்பவே
           கைந்நிலையு மாங்கீழ்க் கணக்கு

இதன் மூலம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை அறிந்துகொள்ள முடியும். இதில் முதலாவது நூலாக நாலடியார் என்னும் நூல் விளங்குகிறது.திருக்குறள் போன்றே அதிகாரத்திற்கு 10 பாடலைக் கொண்டதாகவும் ஆக 40 அதிகாரங்கள், 400 பாடல்களைக் கொண்டதாக இருக்கின்றது. திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என அமைந்துள்ளது. அதைப்போன்றே நம் முன்னோர்கள் இதனையும் வைத்துள்ளனர். தருமர் இவ்வாறு செய்ததாகச் சொல்லப்படுகிறது. முத்தரையர்கள் பற்றிய குறிப்புகள் இதனுள் உள்ளன. செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை என்ற அதிகாரத்திற்குப் பிறகு அறன் வலியுறுத்தல் அதிகாரம் வைக்கப்பட்டுள்ளது. இந்நூல் குறித்துப் பழைய கதை ஒன்றும் உள்ளது. பஞ்சம் பிழைக்க வந்த எண்ணாயிரம் சமண முனிவர்கள், பஞ்சம் நீங்கிய பின்னர் ஆளுக்கொருப் பாடலை எழுதிவைத்துவிட்டு அவ்விடத்தை விட்டு வெளியேறினார்கள். அவர்கள் சொல்லாமல் சென்றமைக்காக வெகுண்ட பாண்டிய மன்னன் அந்த ஏடுகளை வைகை ஆற்றில் விட்டதாகவும் அதில் நானூறு ஏடுகள் ஆற்றுநீரை எதிர்த்து வந்து தப்பித்ததாகவும் அப்படியாகவே நூல் ஆக்கப்பட்டது என்ற செய்தியைச் செவிவழிச் செய்தியாக நாம் அறிகின்றோம்.

நாலடியார் வெண்பாக்கள் தோன்றிய காலம் கிபி எட்டாம் நூற்றாண்டு. அதாவது பல்லவ வம்சம் ஆண்ட காலத்தில் வலுவான அதிகார அழுத்தம் தரும் இனமான முத்திரையர் சிறு பிரதேசங்களை ஆண்ட காலத்தில் தோன்றின. திருக்குறளை விட 500 ஆண்டுகள் கழித்து தோன்றின. பல்லவர் பாண்டியர் காலத்தில் முற்றி முடிந்த பக்திஇயக்கக் காலத்தில் தோன்றியவை. மாபெரும் பிற்காலச் சோழசாம்ராஜ்யம் தஞ்சாவூரைத் தலைமையகமாகக் கொண்டு உருவாவதற்கு அரைநூற்றாண்டு காலத்திற்கும் முந்தியவை. மங்கிக் கொண்டிருந்த சமண சமயத்தின் அறங்களைத் திருக்குறளின் வழியொற்றித் தொகுத்து மாணாக்கர்க்குப் போதிக்கும் நோக்கில் எழுதப்பட்டவை.

‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப’ என்று சொல்வதிற்கிணங்கச் சமுதாயத்தில் தீமைகள் ஏற்பட்டபோதும் வன்முறைகள் ஏற்பட்டபோதும், அல்லது போர் ஏற்பட்டபோதும் அத்தகைய செயல்கள் வேண்டாம் என்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அந்த அடிப்படையில் மக்களுக்கு நீதிகுறித்து சொல்கின்ற நீதிநூல்கள் தோன்றின. அதனுள் குறிப்பிடத்தக்க நூலாக நாலடியார் இருக்கின்றது.

நாலடியார்வைப்புமுறை

           எண்பெருங் குன்றத்து எணாஆயிரம் இருடி
           பண்பொருந்தப் பாடியபா நானூறும்
           வெள்ளாண் மரபுக்கு வேதம்எனச் சான்றோர்
           எல்லாரும் கூடி எடுத்துரைத்த சொல்லாரும்
           நாலடி நானூறும் நன்கு இனிதா என் மனத்தே
           சீலமுடன் நிற்க தெளிந்து

என்ற தனிப் பாடலின் வழி நாலடியார் தொகுப்பு நூல் என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். பால்பாகுபாடு செய்து இதற்கு உரை எழுதியவர் தருமர் ஆவார். உச்சிமேல் புலவர் நச்சினார்க்கினியர் தனது சீவகசிந்தாமணி உரையில் இது சமணர்களால் மட்டுமே இயற்றப்பட்டது என்பதை இன்றுவரை மறுப்பாரில்லை எனக் கூறியுள்ளார். இந்நூலின் சில அதிகாரங்களில் பொருத்தமில்லாப் பாக்களும் கூறிய கருத்தே மீண்டும் மீண்டும் வருவதைக் கொண்டும் ஒருவரால் எழுதப்படவில்லை என்பதை உறுதியாகக் கூறலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. சமணர்கள் துறவறத்தை முக்கிய குறிக்கோளாகக் கொண்டிருப்பதால், அறத்துப்பாலில் துறவற இயலை முன்வைத்து இல்லறவியலைப் பின்வைத்துப் பேசியுள்ளார். இது திருக்குறள் இயல் வரிசை அமைப்புக்கு வேறுபட்டதாக உள்ளது.

இந்நூலில் அறத்துப்பாலில் சொல்லப்பட்டுள்ள அறச்சிந்தனைகள் சிலவற்றைப் பதிவு செய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

சமயப்பொறை

பிற சமயத்தை மதிக்கும் பண்பு நம் முன்னோர்களுக்கு இருந்துள்ளன. காலவோட்டத்தில்பிறகு மாற்றங்கள் ஏற்பட்டன. சமயப்பொறையைப் பேசும் சூழல் நம் சமுதாயத்தில் இருந்துள்ளது. இதனைப் பல்வேறு இலக்கியங்கள் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன. இத்தகைய நிலையிலுள்ள பாடல்களைக் கொண்ட கருத்துகளும் நாலடியாரில் உள்ளன.பசுக்கள் வேறுவேறு நிறத்தை உடையனவாக இருந்தாலும் அந்தப் பசுக்கள் தரும் பால்கள் ஒரேநிறமாகவே இருக்கின்றன. அதைப் போன்ற தன்மையை உடையதாகவும் அவற்றை விளக்குவதாகவும் பாடல்கள் உள்ளன. சமயங்கள் பலவாக இருந்தாலும் சமயங்கள் போதிக்கின்ற அறம் என்ற ஒன்று பொதுவானதாக இருக்கின்றது என்ற கருத்தைப் மெய்மை என்னும் பகுதியில் பின்வரும்பாடல் அறிவுறுத்துகின்றன.

           ஆவேறு உருவின ஆயினும் ஆபயந்த
            பால் வேறு உருவின அல்லவாம்; பால்போல்
            ஒரு தன்மைத்து ஆகும் அறம்; நெறி; ஆபோல்
           உருவு பலகொளல் ஈங்கு’ (நாலடியார் - 180)

 

வாழ்வியல் நெறிகள்

கள்ளாமை என்னும் அறமும் வணிக சமூகப் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டே வலுவூட்டப்பட்டுள்ளது. சமூகத்தின் பொருள்கவர் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போட இவ்வறம் பெரிதும் பயன்பட்டது.அறஇலக்கியப் பரப்பெங்கும் விரவிக் கிடக்கும் இந்த அறநெறி நாலடியாரில் மேன்மக்கள் என்னும் அதிகாரத்தில் ஒர் இடத்தில் மட்டும் இடம்பெற்றுள்ளது.

கள்ளார்; கள் உண்ணார்; கடிவ கடிந்து ஓரீஇ - (நாலடி- 157)

என நாலடியார் வெளிப்படுத்தியுள்ளது.

பொய் பேசாது இருத்தல் குறித்து பல்வேறு நீதிநூல்கள் எடுத்துரைத்துள்ளன.இதனைப் பொய்யாமை என்றும் நாம் அறிவோம். அந்த அடிப்படையில் நாலடியாரில்

வாயின் பொய் கூறார்; வடுவறு காட்சியார் (நாலடியார் - 157)

என்ற பாடல் எடுத்துரைத்துள்ளது. துன்பங்களுக்கான காரணி பொருள் சார்ந்த ஆசைதான் என்பதைப் பல சமயங்கள் எடுத்துக் கூறியுள்ளன. இதனை நாலடியாரும் ஒரு வெண்பாவில் தெளிவாகப் பதிவு செய்துள்ளது.

           ஈட்டலும் துன்பம்; மற்று ஈட்டிய ஒண்பொருளைக்
           காத்தலும் ஆங்கே கடுந்துன்பம்; காத்த
            குறைபடின் துன்பம்; கெடின், துன்பம்; துன்பக்கு
            உறைபதி மற்றைப் பொருள் (நாலடியார் - 280)

இதன் மூலமாகப் பொருள் ஆசையே துன்பங்களுக்குக் காரணமாக இருக்கின்றது என்பதை நாம் அறிகின்றோம்.

 

சினம் தவிர்த்தல்

மனிதர்களுக்குக் கோபம் என்பது சீக்கிரம் வருவதாக உள்ளது. இந்தக் கோபம் வெறுப்பாகவும் மாறுகிறது. இது மனிதனின் அறிவை அழித்துவிடும் தன்மை கொண்டது. இது மனிதர்களுடைய பலவீனமாகவும் சொல்லப்படுகின்றது. கோபம் கொள்ளக் கூடாது என்ற கருத்தினை நாலடியார் முன் வைக்கின்றது.

           காவாது ஒருவன்றன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்
           ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே
           ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
           காய்ந்தமைந்த சொல்லார் கருத்து -நாலடியார் - 63

அறிவில்லாத ஒருவன் தன் வாயைக் காக்காமல் சொல்கின்ற தீஞ்சொல் அவனை ஒழியாமல் வருத்துதலால், அறிவு நூல்களை ஆராய்ந்து நிரம்பிய மெய்யறிவுடையார் எப்போதும் கோபமாகக் கடுஞ்சொற்களைச் சொல்ல மாட்டார்கள்.

 

முயற்சியுடைமை

வாழ்வில் தனி மனித முன்னேற்றத்திற்கும் குடும்ப முன்னேற்றத்திற்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் மனிதன் முயற்சி செய்ய வேண்டும். மனிதன் முயற்சியின்றி சோம்பி இருப்பின் வளர்ச்சி அடைய முடியாது. முயற்சியின் பயனே வெற்றி. ஆகவே மேலும் மேலும் முயற்சி செய்தல் வேண்டும். முயற்சியுடையாரின் முயற்சியின் மேன்மையினை நாலடியார்,

           ஆடுகோடு ஆகி அதர்இடை நின்றதூஉம்
           காழ்கொண்ட கண்ணே களிறு அனைத்து கற்று
           வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்தான்
           தாழ்வின்றி தன்னை செயின்

என்ற இப்பாடலில் ஒருவன் சோம்பலின்றி முயற்சி செய்து தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்பதைச் சிறிய மரம் வயிரம் பாய்ந்து பெரிய வலிமைமிக்க யானையைக் கட்டும் கட்டுத்தறியில் முளையாவது போலத் திண்மை உடையவனாக விளங்குவான் என்பதனை மிக அழகான உவமை மூலம் நாலடியார் விளக்குகின்றது.

 

பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமை

மனிதர்களுக்கு மட்டும் துன்பம் செய்யாமல் வாழ்வதைவிடப் பறவைகளுக்கும் அத்தகைய துன்பம் செய்யாமல் வாழ வேண்டுமென நீதிநூல்கள் எடுத்துரைக்கின்றன. இந்நூலின் ஒரு பாடல் பறவைகளுக்கும் வண்டுகளுக்கும் துன்பம் செய்யாமல் வாழ வேண்டும் என்று வற்புறுத்துகிறது. அதனை வேறுவிதமாகச் சொல்கிறது. இப்பாடல் சுதந்திரமாக இருக்கும் பறவைகளை மனிதர்கள் தாங்கள் வாழும் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு வந்து வளர்ப்பர். பறவைகளைச் சுதந்திரமாகவிடாமல் துன்புறுத்தி வீடுகளில் அடைத்து வளர்க்கும் மனிதர்களைப் பார்த்து நாலடியார் கேள்வி கேட்கிறது. அந்த அடிப்படையில் இந்தப்பாடல் அமைந்துள்ளது. பாடலில் வண்டுகள் ஒலிக்கின்ற வானத்திலிருந்து வாழ்கின்ற கவுதாரி, காடை போன்ற பறவைகளைக் கூட்டின் உள்ளே இருக்கும்படி கொண்டுபோய் வைப்பவர்கள் வரும் காலங்களில் அடிமைகளாய் இருப்பர் என்கிறது. அதாவது இயற்கையோடு இயைந்த வாழ்வு மேற்கொள்ள நமக்கு இப்பாடல் அறிவுரை செய்கின்றது.

           இரும்பார்க்கும் காலராய் ஏதிலார்க்கு ஆளாய்க்
           கரும்பார் கழனியுள் சேர்வர்- சுரும்பார்க்கும்
           காட்டுளாய் வாழும் சிவலும் குறும்பூழூம்
           கூட்டுளாய்க் கொண்டுவை பார் - நாலடியார் - 122

இப்பாடல் முக்கியமான ஒன்றாக இருக்கின்றது.

 

நிலையாமை

பொருள்கோள், பொருள்கவர் வேட்கை மிகுந்த என்ற சமூக அமைப்பில் தோன்றியது நாலடியார். பொருளாதார ஆதிக்கநிலை சமூகத்துக்கும், பொருளாதாரப் பாதிப்புநிலை சமூகத்திற்கும் இடையிலான துலக்கமான முரண் மேலோங்கிக் கொண்டிருந்த காலத்தில் இம்முரணைச் சமன்மை செய்ய உருவான தத்துவம்தான் நிலையாமைத் தத்துவம். எனவே நிலையாமைத் தத்துவம் நாலடியாரில் இடம்பெற்றுள்ளதில் ஆச்சரியம் ஏதுமில்லை. எப்போது சண்டையும் சச்சரவும் பகைமையும் வந்தனவோ அன்றே அந்தந்தப் பொருள்மீதும் நிலையாமைத் தத்துவம் கட்டமைக்கப்பட்டது. இளமை, யாக்கை, செல்வம் ஆகிய இவை எல்லாம் மாறும் தன்மையுடையது என்ற கருத்தியலை நிலையாமை என்ற சொல்லானது உணர்த்துகிறது.

பகைமை, சினம் இவற்றின் பொருட்டு சமூக அமைதிக்கு ஊறு தோன்றியது. எனவே இதனைச் செய்யக்கூடாது என்று புலவர்கள் பாடல் எழுதியுள்ளனர். இப்படிப்பட்ட பாடலைக் கொண்டதாகவும் நாலடியார் உள்ளது. உலகம் நிலையற்ற தன்மை கொண்டது என்ற பொருளிலான பாடல்கள் நாலடியாரில்உள்ளன.

           நரைவரும் என்றெண்ணி நல்லறிவாளர்
           குழுவி யிடத்தே துறந்தார்- புரைதீரா
           மன்னா இளமை மகிழ்ந்தாரே கோலூன்றி
           இன்னாங்கு எழுந்திரு பார் - நாலடியார் - 11

குற்றமற்ற அறிவுடையவர் முதுமைப்பருவம் வரும் என்று நினைத்து, இளமைப் பருவத்திலேயே நான் என்னும் அகப்பற்றையும், எனது என்னும் புறப்பற்றையும் விட்டார். குற்றங்கள் நீங்காத, நிலைபெறாத இளமைப் பருவத்தை மதித்துக் களித்தவர்களே நடப்பதற்கு ஆதரவாகக் கோலை ஊன்றிக்கொண்டு துன்பத்துடன் எழுவார்கள்.

           எனக்குத்தாய் ஆகியாள் என்னையீங் கிட்டுத்
           நாடியே சென்றாள்- தனக்குத்தாய்
           ஆகியவளும் அதுவானால் தாய்க்குத்தாய்க் கொண்டு
           ஏகும் அளித்திவ்வுலகு. -நாலடியார்-15

எனக்குத் தாயானவள், என்னை இவ்வுலகத்தில் வைத்துத் தனக்குத் தாயைத் தேடியே போயினாள். அவளுக்குத் தாயானவளும் அவ்வாறே செல்லுதல் ஆனால், இவ்வுலகத்துப் பிராணிகளெல்லாம், தாயைத் தேடிக்கொண்டுசெல்லுகின்ற எளிமையை உடையன எனப் பாடல் அறிவுறுத்துகின்றது. யாக்கை நிலையாமைகுறித்துப் பத்துப் பாடல் உள்ளன. இந்த உடம்பானது நிலையாமையை உடையது நிரந்தரமில்லை என்ற பொருளை உடையனவாக அமைகின்றன.

           மன்றம் கறங்க மணப்பறை யாயின
           அன்றவர்க்கு ஆங்கே பிணப்பறையாய்ப் – பின்றை
           ஒலித்தலும் உண்டாமென்று உய்ந்துபோம் ஆறே
           வலிக்குமாம் மாண்டார் மனம் - நாலடியார் 23

உறவினர் முதலிய பலர் கூடிய இடத்தில் ஒலியுண்டாகும்படி திருமணத்திற்கு அடிக்கும் வாத்தியங்கள், அந்த நாளிலேயே மணப்பந்தலிலே, மணக்கோலம் கொண்டவருக்கு, உடனே பிணத்துக்குக் கொட்டும் பறைகளாகி முழங்குதலும் உண்டாகும் என்று, மக்களது உடல் நிலையை எண்ணி மாட்சிமைப்பட்ட அறிவுடையாரது நெஞ்சம் இல்வாழ்க்கையிலிருந்து பிழைத்துப் போதற்குக் காரணமான துறவறத்தின் வழியிலேயே துணிந்து நிற்கும் என்கிறது.

           புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை யென்றெண்ணி
           இன்னினியே செய்க அறவினை- இன்னினியே
           நின்றான் இருந்தான் கிடந்தான்றன் கேளலறச்
           சென்றான் எனப்படுதலால் - நாலடியார்-29

இப்போழுதே ஒருவன் நின்றனன், உட்கார்ந்தான், படுத்தான், தன் சுற்றத்தார் அலறியழும்படி இறந்தான்என்று சொல்லப்படுவதால், புல்லினது நுனியிலுள்ள நீரைப்போல உடம்பு நிலையில்லாமையை உடையது என்று நினைத்து, உடலோடு கூடியிருக்கின்ற பொழுதே, ஒவ்வொருவரும் அறத் தொழிலைச் செய்க என்று பாடல் அறிவுறுத்துகின்றது.

அறுசுவை உணவு உண்டவனும் ஒருசமயம் வீடுதோறும் இரந்து வாழவேண்டும். செல்வமானது ஓரிடத்தில் நில்லாது செல்வோம் செல்வோம் எனச் சகடக்கால் போல் சென்று கொண்டே இருக்கும். அரசனாக இருந்தவனையும் ஆண்டிக்கோலமாக மாற்றும். நால்வகை சேனையை நடத்திச் செல்லும் செல்வச்செருக்கு உற்றவனின் மனையாளையும் மாற்றார் கைக்கொண்டு செல்ல நேரிடும். அதனால் செல்வம் உள்ளபோதே நல்வழியில் அறச்செயலுக்காக தானம் தர்மம் செய்ய வேண்டும் என்று இந்நூல் குறிப்பிடுகின்றது. இவ்வுடல் ஆனது பிறக்கும்போது எதைக்கொண்டு வந்தது? போகும்போது எதனை எடுத்துச் செல்லும் ஒன்றும் இல்லை தானே? பின்பு ஏன் இடையில் வந்த இந்த செல்வத்தை எனது எனது என்று வைத்துக்கொண்டு பிறருக்கும் பயன்படாமல் செய்கிறீர்கள். இது நிலையில்லாதது என உணர்த்தும் பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

கருமையான மேகங்கள் ஒன்றோடொன்று மோதி ஒளிக்கற்றையை (மின்னலை) ஏற்படுத்துவது போல, இந்தச் செல்வமானது வாழ்க்கையில் தோன்றி மறையக்கூடும். உற்றார் உறவினர்களின் துயர்களையும் நீக்காத இந்தச் செல்வம் இருந்துதான் என்ன பயன்? செல்வத்தை மேலும் மேலும் சேர்ப்பதால் இந்த ஊர் செல்வந்தன் என்றா புகழும்? தக்கார்க்குப் பயன்படாத இந்தச் செல்வம் இல்லாததே ஆகுமன்றோ? ஆகையால் பிறருக்குக் கொடுக்க வேண்டும் என்பதை இந்நூல் வலியுறுத்கிறது. செல்வம் நிலையாமையை

           கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
           போக்கும் அதுவிளிந் தற்று (குறள் 332)
           துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டு
           பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க
           அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
           சகடக்கால் போல வரும் (நாலடியார் 2)

என்ற பாடல்கள் மூலம் நாம் மேற்சொன்னவற்றை அறியலாம்.

திருவள்ளுவர் அறன்வலியுறுத்தல் என்ற அதிகாரத்தை நான்காவதாக அமைத்து இருப்பதுபோலவே நாலடிகளைத் தொகுத்த பதுமனாரும் அறன் வலியுறுத்தல் என்ற அதிகாரத்தை நான்காவதாக வைத்துள்ளார். எல்லா உயிர்களையும் விட மனிதப் பிறப்பே மேலானது. அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்றார் ஒளவையார். இல்வாழ்க்கையில் தீவினை புரிந்து துன்பத்தில் உழன்றுகொண்டு இல்லாமல் நன்மை செய்து அறத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் நாலடியார் கூறுகின்றது.

ஒவ்வொரு நாளும் கழிவது சான்றோர்க்குத் தன் ஆயுளின் நாள் குறைவதாகக் கணக்குச் செய்து மகிழ்வர். மூடர்களே களிப்புறுவர். ஒவ்வொரு நாளும் பிறப்பதுபோல் இறப்பும் நிகழும். எனவே தர்மங்கள் செய்தல் நலம் என்று பின்வரும் பாடல் வலியுறுத்துகிறது.

           வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
           வைகலும் வைகலை வைகுமென்று இன்புறுவர்
           வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
           வைகலை வைத்துணரா தார் - நாலடியார் 39

அகப்பற்றும் புறப்பற்றும் நீங்குவதே துறவு ஆகும். தான் செய்யும் நல்ல செயல்களும் பாவம் இல்லாத செயல்களைச் செய்வதே துறவு ஆகும். விளக்கின் ஒளியில் இருள் மறைவது போல தவத்தின் முன் பாவம் கெடும் என்பதையும் உணர்ந்த சான்றோர்கள் தவம் மேற்கொள்வர்.

அறிவில்லாதவனிடம் எதையும் சொல்லாது விடுத்தும் கீழோன் ஒருவன் சொன்னதைப் பொறுத்துக் கொள்ளுதலும் அன்புடையார் கடிந்து கூறும் சொல், தீயோர் சிரித்துக் கொண்டு சொல்கின்ற சொல்லைவிடத் தீங்கானது என்பதைப் பொறையுடைமை என்ற அதிகாரம் உணர்த்துகின்றது.

           காதலார் சொல்லும் கடுஞ்சொல் உவந்துரைக்கும்
           ஏதிலார் இன்சொலின் தீதாமோ – போதெலாம்
           மாதர்வண் டார்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப
           ஆவது அறிவார்ப் பெறின் (நாலடியார் -73)

 

கல்வி

கல்வியால் ஒருவன் எல்லாச் சிறப்புகளையும் பெறுவான். அவன் வேறு குலத்தில் பிறந்தவன் எனினும் கல்வி அறிவு பெற்று இருப்பானாயின் உயர்ந்த குலத்தில் பிறந்தவன் ஆக கருதப்படுவான். அவன் கல்வியால் செயற்கரிய செய்தும் பிறர் குற்றம்கூறாமையாலும் செருக்கின்மையாலும் மேன்மக்கள் போல் கருதப்படுவான். பெரியோர்களை ஒருபோதும் அவமதித்து நடக்க மாட்டான். நல்லவர்களோடு சேர்ந்திருப்பான். பெருமை எய்துவான். தன் நிலையிலிருந்து ஒருபோதும் தாழான். ஒருபோதும் சுற்றும் தன்னைவிட்டு நீங்காதவாறு பார்த்துக்கொள்வான். உள்ளொன்று வைத்து புறமொன்று கூறுவாரோடும், முகநக நட்போடும் இணங்காமல் நல்ல நட்புகளை ஆய்ந்து தேர்ந்தெடுப்பான். குணம், குடி, குறைவற்ற சுற்றம் இவற்றை ஆராய்ந்து நட்பு கொள்வான் என்று குறள் 793 குறிப்பிடுகின்றது. திருக்குறளைப் போலவே நாலடியாரும் நட்பாராய்தல், நட்பில் பிழைபொறுத்தல், கூடாநட்பு, மணற்கேணியில் தோண்டத் தோண்ட நீர் இடைவிடாது வருவதுபோல் கற்க கற்க அறிவு பெருகும் என்பது வள்ளுவரின் கருத்து. அதுபோல நாலடியார் எல்லா அழகையும்விட கல்வி அழகே அழகு என்று குறிப்பிடுகின்றது.

           குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்ட ழகும்
           மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
           நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
           கல்வி யழகே அழகு - நாலடியார் -137

இக்கல்வியானது உலக நலத்தையும் கொடுக்கும். பிறருக்குக் கொடுக்கக் கொடுக்க குறையாது பெருகும். புகழ்பெறச் செய்யும். கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு என்பதை உணர்ந்த சான்றோர்கள் சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுத்துக் கற்பர். சான்றோரிடத்துப் பேசி அனுபவிக்கும் மகிழ்வை விரும்புவர்.

 

பிறன்மனை விரும்பாமை

காமமின்மை என்பது முற்றுமுழுதான துறவியர்க்கு உரியதாகஉள்ளது. எனவே காமக் கட்டுப்பாட்டு நெறியை இல்லறத்தார்க்கும் வலியுறுத்த வேண்டி ‘பிறன்மனைநயவாமை’ என்னும் அதிகாரம் வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பின்பற்றாதவர்களை நோக்கும்போது அவர்கள் துன்பம் அடைவார்கள் என்ற கருத்தினை நமக்கு இந்நூல் காட்டுகின்றது.

           புக்கவிடத்து அச்சம்;போதரும் போது அச்சம்
           துய்க்கும் இடத்து அச்சம், தோன்றாமை காப்பு அச்சம்;
           எக்காலும் அச்சம் தருமால், எவன்கொலோ,
           உட்கான் பிறன்இல் புகல் - நாலடியார்- 83

பிறன் மனையாளை விரும்பிப் புகுந்த இடத்தில் அச்சம் உள்ளது. மீண்டு வரும்போதும் அச்சம் உள்ளது. அனுபவிக்கும்போதும் அச்சம் உள்ளது. அத்தீயொழுக்கம் வெளிப்படாதபடி காக்கும்போதும் அச்சம் உள்ளது.இவ்வாறு அவ்வொழுக்கம்எப்போதும் அச்சத்தையே தருகின்றது.

இப்படியிருக்க ஒருவன் அஞ்சாதவனாய்ப் பிறன்மனையாளிடம் விரும்பிச் செல்லுதல் எத்தன்மையது என்று வினா எழுகின்றது.

           காணின் குடிப்பழியாம் கையுறின் கால்குறையும்
           ஆண்இன்மை செய்யுங்கால் - அச்சமாம்
           துன்பம் பயக்குமால் துச்சாரி நீகண்ட
           இன்பம் எனக்கெனைத்தால் கூறு - நாலடியார் -84

பிறன்மனையாளை விரும்பிச் செல்லுதலைப் பிறர் கண்டால் நின் குடிக்குப் பழி உண்டாகும். கொண்டான் முதலியோர் கையில்அகப்பட்டால் கால் வெட்டப்படும். ஆண்மையிலாமையாகிய தீயொழுக்கத்தைச் செய்யும்பொழுது அச்சம் தோன்றும். அதனால் தீயொழுக்கம் உடையவனே நீ அனுபவித்த இன்பம் எந்த அளவை உடையது என எனக்குச் சொல்லு. இப்பாடல் பிறன்மனையை விரும்பினால் எத்தகைய துன்பத்தை அடைவார்கள் என்ற கருத்தை வெளிப்படுத்துகிறது.

ஒருவன் தன் நாவைக் கட்டுப்படுத்த வேண்டும். அதே போலக் கட்டுப்பாடற்ற பிறர் நா பேசும் தீய சொற்களைப் பொறுக்கவும் வேண்டும். அத்தகையவனே உயர்குடியில் பிறந்தவன் ஆவான். பேச்சில் கவனம் வேண்டும். இவை உயர்ந்த குடியில் பிறந்தவர்களிடம் நிரந்தரமாக இருக்கும் என நாலடி வெண்பாக்கள் 66, 72, 145 தெரிவிக்கின்றன. அறம் என்பது உயர்ந்த குடியைச் சேர்ந்த ஆண்களுக்கே என்பது சங்கப் பாடல்கள் முதல் தொல்காப்பிய இலக்கண நூல் திருக்குறள் நூல் வழியாக நாலடியார் வழியாகத் தெளிவாகத் தெரிகிறது. உடைமையாளராக முனைவருக்கும் உரிய நெறிகாட்டும் நூல்களே நீதிநூல்கள் எனலாம்.

நீதி நூல்கள் கண், காது, நா, ஆகிய புலன் இடங்களை அவற்றின் உடற்கூற்றுச் செயல்பாடுகளுக்காக அல்லாமல் ,அவற்றின் மீது கற்பிக்கப்பட்ட அறச் செயல்பாடுகளுக்காகப் போற்றின. நா உணவைச் சுவைப்பதற்காக அல்ல; அது புறங்கூறாது இருப்பதற்கே. கண் என்பது உலகைப் பார்ப்பதற்காக அல்ல. அது பிறன் மனைவியைக் காணாது இருப்பதற்கே; பிறன் மனைவியைக் காண்பதை விட அது குருடாகவே இருக்கலாம். காது கேட்பதற்காக அன்றி பிறர் மறைக்கு (ரகசியம்) காது கொடாதிருப்பதற்கே; பிறர் மறையைக் கேட்பதைவிட அது செவிடாக இருக்கலாம். இதற்குரிய பாடலாக

           பிறர்மறையின் கண் செவிடாஆய், திறனறிந்து
           ஏதிலார் இற்கண் குருடனாஆய், தீய
           புறங்கூற்றின் மூங்கையாஆய், நிற்பானேல்யாதும்
           அறம்கூற வேண்டா அவற்கு (நாலடியார் -158)

 

அறன் வலியுறுத்தல்

நீதி நூல்களில் மனிதர்கள் தர்மம் செய்ய வேண்டும், என்று கூறுகின்ற பாடல்கள் அதிகமாக உள்ளன. அறன் வலியுறுத்தல்என்ற ஒரு அதிகாரமே இதனுள் உள்ளது.

           அகத்தாரே வாழ்வாரென்று அண்ணாந்து நோக்கிப்
           புகத்தாம் பெறாஅர் புறங்கடை - பற்றி
           மிகத்தாம் வருந்தி யிருப்பாரே மேலைத்
           தவத்தால் தவஞ்செய்யாத்தார் - நாலடியார் - 31
           மக்களால் ஆயப் பெரும்பயனும் ஆயுங்கால்
           எத்துணையும் ஆற்றப் பலவானால்-தொக்க
           உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகாது உம்பர்க்
           கிடந்துண்ணப் பண்ணப் படும். - நாலடியார் - 37

மக்கட் பிறப்பினால் அதற்குரிய சிறந்த பயன்களை ஆராயுமிடத்து, எவ்வளவிலும் மிகவும் அநேகம் ஆதலினால், ஏழு தாதுக்களால் கூடிய உடலுக்கே ஒத்த நன்மைகளைச் செய்து கொண்டிராமல்,உயிர்க்குரிய நன்மையாகிய அறங்களைச் செய்ய வேண்டும் என்று கருத்துகளை இப்பாடல் நமக்கு அறிவுறுத்துகின்றன.

தன்னைப் பிறர் அளந்து அறியாதபடி பார்த்துக் கொள்வதும், பிறரை அளந்து அறிவதும் அதிகாரத்தின் தொழில் நுட்பமாகும். இத்தகு தொழில்நுட்பம் பற்றி நாலடி வெண்பா ஒன்று கூறியுள்ளது.

           ஆற்றும் துணையும் அறிவினை உள்ளடக்கி
           ஊற்றம் உரையார் உணர்வு உடையார்; ஊற்றம்
           உறுப்பினால் ஆராயும் ஒண்மை உடையார்
           குறிப்பின்கீழ்ப் பட்டது உலகு (நாலடியார் -196)

அறிவுடையோர் ஒரு செயலை முடிக்கும்வரை அதுபற்றி எதுவும் பேசமாட்டார்கள். பிறருடைய எண்ணங்களை அவர்களுடைய உடல் உறுப்புகளைக் கொண்டே அறிந்துகொள்வார்கள். இவர்களே பிறரை ஆள்வார்கள் என்பது பொருள். பிறரை ஆள்வோர் முதலில் தன்னைப் பிறர் அளந்து அறியமுடியாதபடி பார்த்துக்கொண்டு அதேவேளையில் பிறர் பேசாவிடினும் அவர்களது உட்கிடைகளை அவர்களுடைய உடல் உறுப்புகள் (முகம், கண்) வழியாகக் குறிப்பறிய முடிபவர்களாக இருக்க வேண்டும். சுருங்கச் சொன்னால் பிறரை அறிக. தன்னை பிறர் அறியவிடாது காக்க என்பதை நாலடியார் வழியில் நாம் அறிந்துகொள்ள முடியும்.

 

நம்பிக்கைகள்

நிலத்தைத் தாயாகவும் மனைவியாகவும் பார்க்கின்ற வழக்கம் தமிழகத்தில் இருந்துள்ளது, இருந்து வருகின்றது. பல்வேறு நம்பிக்கைகளை நம் முன்னோர்கள் கொண்டிருந்தனர். அது குறித்தான தரவுகளும் நூல்களின் வழி நமக்குக் கிடைத்துள்ளன. அந்த வகையில் நாலடியாரிலும் நம்பிக்கைகள் அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

           அக்கேபோல் அங்கை யொழிய விரலழுகித்
           துக்கத் தொழுநோய் எழுபவே - அக்கால்
           அலவனைக் காதலித்துக் கால்முரித்துக் தின்ற
           பழவினை வந்தடைந்த கால் நாலடியார் - 123

என்ற பாடல் தீவினையைச் செய்யக்கூடாது என்ற கருத்தை முன்வைக்கின்றது. நாலடியாரில் இத்தன்மை கொண்ட பாடல்கள் மிகுந்து காணப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் இந்நூல் அக்காலச் சமுதாயத்தை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றது. நீதிநூல்களில் சிறந்த நூலாக இந்நூல் திகழ்கிறது. சிறந்த கருத்துகளால் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள இந்நூல் குறித்து ஆய்வு செய்வது முக்கியமானது.அந்த வகையில் நாலடியாரில் பல்வேறு பொருண்மைகள் மிகுந்து காணப்படுகின்றன. தமிழ் இலக்கியத்தில் முக்கியமான இடத்தை வகிக்கும் இந்நூல் நம் தமிழ்ச் சமூகத்தின் காலக் கண்ணாடி என்று சொன்னால் அது மிகையாகாது.

 

பயன்பட்ட நூல்கள்

  • நாலடியார், அ. மதுரை முதலியார் உரை, முல்லை நிலையம், மறுபதிப்பு, 2006, சென்னை- 17.
  • நாட்டுப்புற இயல் ஆய்வு, சு. சக்திவேல், மணிவாசகர் பதிப்பகம் , மூன்றாம் பதிப்பு, 1995, சென்னை.
  • நீதிநூற் கொத்து, ஆ. மாரிமுத்து, திருமுருக நிலையம், முதல் பதிப்பு, 1999, சென்னை- 7.
  • தமிழ் நீதி இலக்கிய வரலாறு, மு. பொன்னுசாமி, இந்து பதிப்பகம், கோவை , முதல் பதிப்பு, 2003, கோவை.
  • இலக்கியஇலக்கணம், வெ. பாலமுருகன், இரா. மோகனா, டிசம்பர் - 2008, மெய்யப்பன்,சிதம்பரம், 214.
  • தமிழ் இலக்கியங்களில் மனித விழுமியங்கள், பதிப்புக்குழு, இந்தோ அமெரிக்கன் கல்லூரி, செய்யாறு, முதல் பதிப்பு, பிப்ரவரி- 2012
  • தமிழ்இலக்கியவரலாறு, மு.வ, சாகித்தியஅகாடமி , 22ஆம்பதிப்பு , 2006
  • தமிழ் அற இலக்கியங்களும் பெளத்த சமண அறங்களும், சு. மாதவன், செம்மொழி பதிப்பகம், முதல் பதிப்பு, 2008, தஞ்சாவூர்.
  • தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும், ராஜ் கெளதமன், விடியல் பதிப்பகம், முதல் பதிப்பு, 2008, கோவை.
  • பழந்தமிழிலக்கியங்களில் அறக் கூறுகள், ஆ. கந்தசாமி, ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு கருத்தரங்கு ஆய்வுக் கட்டுரைகள், சென்னை. 1981.